மூன்று மாத கை குழந்தை உட்பட 10 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து மூன்று மாத கைக்குழந்தையுடன் மூன்று குடும்பத்தை சேர்ந்த  மேலும் 10 பேர் அகதிகள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜஸ்டின் அவரது மனைவி அவுஸ்யா அவரது மூன்று மாத குழந்தை, மன்னார்  மாவட்டத்தை சேர்ந்த  ஜெயக்குமார், அவரது மனைவி யோகேஸ்வரி அவரது இரு மகள்கள் மற்றும்  முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த புஷ்பம் மற்றும் அவரது மகன் பிரபாகரன் மற்றும் உட்பட  மூன்று குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் நேற்று இரவு மன்னாரில் இருந்து  ஒரு படகில் புறப்பட்டு இன்று (05) அதிகாலை 1 மணியளவில்  அடுத்த நடுதிட்டு பகுதியில்  சென்று இறங்கியுள்ளனர்.

பின்னர் தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கைத் தமிழர்களை மீட்டு ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்க படுவார்கள் என மரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 198 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

தேசிய எல்லை நிர்ணய குழு நியமனம் : வர்த்தமானி வெளியீடு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டார எல்லை நிர்ணயத்திற்காக தேசிய எல்லை நிர்ணய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமையிலான குறித்த குழுவிற்கு நான்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் ஏனைய உறுப்பினர்களாக ஜயலத் திஸாநாயக்க, டபிள்யூ.எம்.எம்.ஆர்.அதிகாரி, கே. தவலிங்கம் மற்றும் ஐ.ஏ.ஹமீட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோப், கோபா குழுக்கள் அடுத்தவாரம் கூடும்

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) உள்ளிட்ட பாராளுமன்றக் குழுக்கள் பல,  அடுத்தவாரம் கூடவுள்ளன.

அதற்கமைய, வரையறுக்கப்பட்ட நிலக்கரி தனியார் நிறுவனம் எதிர்வரும் 09 ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 08 ஆம் திகதி அரசங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) கூடவுள்ளதுடன் இதில் மரக்கறி விதைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வது தொடர்பான முன்னேற்றம் குறித்த விசேட கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விசாரணை செய்யப்படவுள்ளது. மேலும், மருத்துவக் கழிவுகளை அகற்றுவதை முகாமைத்துவம் செய்வது தொடர்பான விசாரணைகளுக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் குழு முன்னிலையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் சில அடுத்தவராம் கூடவுள்ளன. அதற்கமைய எதிர்வரும் 08 ஆம் திகதி நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழு, கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழு மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழு என்பன கூடவுள்ளன.

மேலும், எதிர்வரும் 10 ஆம் திகதி மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுவும், வெளிநாட்டலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுவும் கூடவுள்ளன. இதேவேளை, சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழு என்பனவும் எதிர்வரும் 08 ஆம் திகதி கூடவுள்ளன.

Posted in Uncategorized

இலங்கையில் முதலீடுகள் : பிரதமர் கோரிக்கை

பிரேரிக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களை உடனடியாக அங்கீகரிப்பதற்குத் தேவையான புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்துவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ் அவர்களது தலைமையிலான முன்னணி தொழிலதிபர்கள் குழுவொன்று, நேற்று (3) பிரதமர் அலுவலகத்தில் அவரைச் சந்தித்தபோதே பிரதமர் இது தொடர்பில் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு முதலீடுகளுக்காக சமர்ப்பிக்கப்படுகின்ற பிரேரணைகளை துரிதமாக அங்கீகரிப்பதற்குத் தேவையான திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, அரசு ஏலவே திட்டங்களை வடிவமைத்துள்ளதென பிரதமர் தினேஷ் குணவர்தன, இதன்போது கனேடிய தொழிலதிபர்களுக்கு எடுத்துக் கூறினார். பொருளாதாரத்தை நிலைநாட்டுவதற்கு இதுவரை அரசு எடுத்துள்ள படிமுறைகள் தொடர்பில் அவர்களுக்கு தெளிவுபடுத்திய பிரதமர், இலங்கையில் அதிகமான முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு தொழிலதிபர்களிடம் கேட்டுக்கொண்டார். பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும்பொருட்டு கனடாவின் முன்னணி தொழிலதிபர்களின் ஒத்துழைப்புக்கள் அவசியமென்றும் தகவல் தொழிநுட்பம், விவசாயம், மீன்பிடிக் கைத்தொழில் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி போன்ற துறைகளில் முதலீடு செய்வதற்கு அதிக கேள்விகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

தற்போதைய நெருக்கடிகளை வெற்றிகொண்டு பொருளாதார அபிவிருத்திக்காக இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்கு தமது ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அப்பிரதிநிதிகள் குழுவிலிருந்த சிங்கள மற்றும் தமிழ் தொழிலதிபர்கள், பிரதமரிடம் உறுதியளித்தனர். இலங்கையுடன் காணப்படும் உறவுகளை வலுப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த கனேடிய தொழிலதிபர்கள் சமூகம், இலங்கையில் இளைய தொழில் முயற்சியாளர்களுக்கு அவர்களது வர்த்தகங்களை கட்டியெழுப்புவதற்கு தாம் உதவுவதாகவும் விருப்பம் தெரிவித்தனர். வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களை அங்கீகரிப்பதில் ஏற்படும் அநாவசியமான தாமதங்களை அகற்றுமாறும் அவர்கள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டதுடன், பல ஆசிய நாடுகள், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் விதத்தில் தமது வெளிநாட்டு முதலீட்டு நடைமுறைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் எடுத்துக் காட்டினர்.

இக்குழுவில், கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹென் டொங், ரேச்சல் தோமஸ், கணேசன் சுகுமார், ஆதர் கிறவுஸ், குலா செல்லதுரை, மொஹான் பெரேரா, ஜுட் பிரான்சிஸ், சிவா சிவநாதன், இளங்கோ ரத்னசபாபதி, பிரேம் யசமனய், ரியாஸ் ரவூப், மகேஷ் அபேவர்தன, டேவிட் ஸ்டாஓ, சுதர்ஷன் ஸ்ரீயோகநாதன் மற்றும் அருண் கிருபா உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

வெளிநாட்டவருடான திருமண பதிவு கட்டுபாடுகளை நீக்க நடவடிக்கை

வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள தடைகளை நீக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பதிவாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதுபோன்ற தடைகளுக்கு வழிவகுத்த சுற்றறிக்கையை உடனடியாக இரத்து செய்யவும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க சுற்றறிக்கையின் மூலம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய போர்க் கப்பல்கள்

இரண்டு ரஷ்ய போர்க்கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய ‘வர்யாக்’ ஏவுகணை கப்பல், அட்மிரல் டிரிபுட்ஸ் நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் மற்றும் ‘போரிஸ் புடோமா’ டேங்கர் தலைமையிலான பசிபிக் கடற்படையின் ஒரு பிரிவு பசிபிக் கடற்படையின் தெற்கே இலங்கைக்கான பொறுப்பு வலயத்திற்குள் நுழைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

இந்த பிரிவினர் மத்தியதரைக் கடலில் இருந்து விளாடிவோஸ்டோக்கில் அமைந்துள்ள தங்கள் தளத்திற்கு கடலுக்கு அப்பாற்பட்ட கடல் வலயத்தில் செயற்பட்ட பின்னர் மீண்டும் நிலைநிறுத்தப்படுவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பல்கள் தற்போது இந்தியப் பெருங்கடலைக் கடந்து கிழக்கு ரஷ்யாவை நோக்கிச் செல்கின்றன. டிசம்பரில் 2021 இல் இந்த பிரிவு அதன் தளத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

இலங்கையின் திரவ கையிருப்பு வீழ்ச்சியில் : மத்திய வங்கி அறிவிப்பு

22 செப்டெம்பர் மாத இறுதியில் இலங்கையின் திரவ கையிருப்பு தொடர்ந்து கணிசமான அளவில் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று தெரிவித்துள்ளது.

வங்கித் துறையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு மற்றும் மொத்த வெளிநாட்டு சொத்துக்கள் அடங்கிய மொத்த வெளிநாட்டு சொத்துக்கள் செப்டம்பர் 2022 இன் இறுதியில் 6.0 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தன.

2022 செப்டெம்பர் இறுதியில் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதில் சீன மக்கள் வங்கியின் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்குச் சமமான இடமாற்று வசதியும் அடங்கும், அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காக மத்திய வங்கி அந்நிய செலாவணியை தொடர்ந்தும் வழங்கி வந்தது.

இதன் விளைவாக, திரவ இருப்பு அளவு செப்டம்பர் 2022 இறுதிக்குள் குறிப்பிடத்தக்க குறைந்த மட்டத்தில் இருந்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு நவம்பர் 04 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 44.9 வீத வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்தது.

இதற்கிடையில், 2022 நவம்பர் 04 வரையிலான காலப்பகுதியில் யூரோ, பவுண்ட் ஸ்டெர்லிங், ஜப்பானிய யென், அவுஸ்திரேலிய டொலர் மற்றும் இந்திய ரூபா ஆகியவற்றிற்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்திருந்தது.

இறுதி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் தங்களிடம் சரணடையவில்லை என்கிறது இராணுவம்!

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தகவலறியும் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ் பத்திரிகையொன்றின் ஊடகவியலாளர் பா.நிரோஸ் தகவலரியும் ஆணைக் குழுவிடம் முன்வைத்திருந்த மேன்முறையீடு நேற்று (வியாழக்கிழமை) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இலங்கை இராணுவம் இவ்வாறு சாட்சியம் வழங்கியுள்ளது.

2019ஆம் ஆண்டும் “எங்களிடம் புலிகள் சரணடையவில்லை” என ஊடகவியலாளரின் தகவலறியும் விண்ணப்பத்தை இராணுவம் மறுத்திருந்ததது.

இது தொடர்பான மேன்முறையீடு மூன்று வருடங்களுக்குப் பின்னர் நேற்று பரிசீலிக்கப்பட்டது.

“யுத்த பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அவர்கள் புலிகளா? பொதுமக்களா? என்பது எமக்கு தெரியாது. நாம் பொறுப்பேற்று கொண்டபோது பதிவுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

எம்மிடம் வந்தவர்களை பஸ்களில் ஏற்றி புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் கட்டுப்பாடுகளில் இருந்த முகாம்களில் சேர்த்தோம்.

அதன் பின்னர் புனர்வாழ்வு பணியகமே அவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.” எனவும் இராணுவம் சாட்சியம் வழங்கியது.

ஆனால், ஊடகவியலாளர் நிரோஸ் சார்பாக ஆணைக்குழுவில் முன்னிலையான சட்டத்தரணி ஸ்வஸ்திக்கா இதனை மறுத்ததோடு இராணுவத்திடம் புலிகள் சரணடைந்தமைக்கான ஆதாரங்களை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்தார்.

மேலும், புனர்வாழ்வு பணியகத்திடம் இராணுவத்தினம் கூறும் தகவல்கள் இல்லை என, புனர்வாழ்வு பணியகம் வழங்கியுள்ள தகவல்களையும் சட்டத்தரணி ஸ்வஸ்திக்கா ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஆணைக்குழு, “அரசாங்கமே இந்த விடயங்களை சர்வதேச அமைப்புகளுக்கு பல்வேறு முறை வழங்கி இருக்கிறது.

எனவே, 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இப்போது மறைப்பதற்கு ஒன்றுமில்லை.” என இராணுவத்துக்கு அறிவித்தது.

புலிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தமைக்கான எழுத்துமூல சமர்ப்பணங்களை 10 நாட்களுக்கு இராணுவத்துக்கு ஊடகவியலாளர் நிரோஸ் வழங்க வேண்டும்.

அதுபோல இராணுவமும் எழுத்துமூல சமர்ப்பணங்களை விண்ணப்பதாரருக்கு வழங்கவும் ஆணைக்குழு உத்தரவிட்டது.

ஜனவரி 4ஆம் திகதி மனு மீள ஆணைக்குழு முன்பாக விசாரிக்கப்பட விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

வடபகுதியில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிப்பு

யாழ். போதனா  வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை பிரிவில் கடந்த வருடத்தோடு  ஒப்பிடும்போது இந்த வருடம் சுமார்  3,000க்கும் மேற்பட்ட நீரிழிவு  நோயாளர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்படுவதாக யாழ். போதனா  வைத்தியசாலை நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி விசேட வைத்திய நிபுணர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் நீரிழிவு நோயின் தாக்கம் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

நீரிழிவு நோயின்  தாக்கம் தொடர்பில் மிக அண்மைய  தரவுகளின் படி கொழும்பு மாகாணத்தில் குறிப்பாக மேல் மாகாணத்தில்  30% மானோருக்கு நீரிழிவு நோயின்  தாக்கம் காணப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 15% சதவீதமானவர்களுக்கு நீரிழிவு நோயின்  தாக்கம் காணப்படுகின்றது.

நீரிழிவு நோய் தொடர்பிலான ஆய்வுகளை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்.

யாழ்.  போதனா  வைத்தியசாலையில் நீரிழிவு சிகிச்சை பிரிவை எடுத்துக் கொண்டால் கடந்த வருடத்தோடு  ஒப்பிடும் போது இந்த வருடம் சுமார்  3,000-க்கும் மேற்பட்ட நோயாளர்கள் புதிதாக பதிந்திருக்கின்றார்கள்.

அதாவது நீரிழிவு நோயின் தாக்கமானது சிறிது சிறிதாக அதிகரித்துச் செல்வதனை   காணக்கூடியதாக உள்ளது.

உலகளாவிய ரீதியில் அதிகரிப்பது போல  வளர்முக நாடுகளில் குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளில்  எமது வடபகுதியில் இந்த நீரழிவு நோயின் தாக்கமானது அதிகரித்து காணப்படுகின்றது

நவம்பர் மாதம் உலகளாவிய ரீதியில் நீரிழிவு விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக இந்த உலக நீரிழிவு விழிப்புணர்வு வாரத்தில்  யாழ். மாவட்டத்தில் பல செயற்திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளது.

மிக முக்கியமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் நீரழிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமானது.

கடந்த இரண்டு மூன்று வருடங்களாக நீரிழிவு தாக்கமானது வடபகுதியில் அதிகரித்து செல்வதனை காணக்கூடியதாகவுள்ளது.

வடமாகாணத்தில் இளைஞர், யுவதிகள் மத்தியில் நீரிழிவின் தாக்கமானது அதிகரித்து செல்வதை காணக் கூடியதாக உள்ளது. இவ்வாறு நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்துச் செல்வதற்கு மிக முக்கியமான காரணமாக அமைவது எமது வாழ்க்கை நடைமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள்.

குறிப்பாக சொல்லப் போனால் தவறான உணவு பழக்க வழக்கங்கள் அப்பியாசம் அற்ற வாழ்க்கை முறை என்பன மிக முக்கியமான காரணங்களாக உள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் இந்த மேலைத்தேய உணவுகள் துரித உணவுகளில்  நாட்டம் அதிகரித்து செல்வதனால் நீரிழிவின் தாக்கமானது அதிகரித்துச் செல்வதை நாங்கள் காணக்கூடியதாக உள்ளது. அதேபோல உடல் அப்பியாசம் உடற்பயிற்சி செய்வது குறைவடைவது ஒரு மிக முக்கியமான காரணமாகும்.

அதேபோல்  மன அழுத்தம், நித்திரை குறைவு போன்ற பல காரணங்களும் இதற்கு ஏதுவாக  அமைகின்றன.

ஆகவே, நீரிழிவு விழிப்புணர்வு மாதத்தில் மக்களுக்கு நீரிழிவு நோய் என்றால் என்ன என்பது  தொடர்பான விழிப்புணர்வு அவசியமாகும்.

நீரிழிவு நோய்  ஏற்படும்போது சில அறிகுறிகள் ஏற்படும். அந்த அறிகுறிகளை நாங்கள் அடையாளம் கண்டு உரிய முறையில் சிகிச்சை மேற்கொள்ளும்போது குறித்த நோயிலிருந்து  தப்பித்துக் கொள்ள முடியும்.

இல்லாவிட்டால் அந்த நீரழிவு நோயானது ஒரு பாரிய நோயாகும் உலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நோயாகும்

எனவே வட பகுதியில் உள்ள மக்கள் இந்த நீரிழிவு நோய் தொடர்பில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்றார்.

புதிய அரசியலமைப்பினால் எம்மை மெளனிக்க செய்ய முயல்கின்றனர் – பேராயர்

சுதந்திரத்தின் பின்னர் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் நாட்டை வெளிநாடுகளின் அடிமையாக்கியுள்ளனர். இதன் காரணமாகவே இன்று கையேந்தி உண்ண வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை கொள்ளாத இந்த ஆட்சியாளர்களுக்கு மீண்டும் வாக்களித்து விட வேண்டாம் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

மேலும் , இலங்கை அரசாங்கம் அல்லது அரச நிறுவனங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடம் குறைகளை முன்வைப்பவர்களின் குடியுரிமையை 20 ஆண்டுகளுக்கு குறையாத காலப்பகுதிக்கு நீகுவதற்கான ஏற்பாது புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பேராயர் , இதனால் தாம் முழுமையான மௌனிக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு பிரதேசத்தில் வியாழக்கிழமை (03) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

எம்மை ஆட்சி செய்கின்ற, எமது வாக்குகளால் தெரிவு செய்யப்படும் தலைவர்கள் ஏன் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை காண்பிக்காமலுள்ளனர்? இதற்கான காரணம் என்பது தொடர்பில் எம்மால் புரிந்து கொள்ள முடியாமலுள்ளது. தாம் தெரிவு செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்த வாக்குகளை வழங்கிய மக்களின் தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமல்லவா?

தற்போது தேர்தல் முறைமையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்கு முன்னர் காணப்பட்ட தேர்தல் முறைமையில் தொகுதி முறைமை காணப்பட்டது. இந்த முறைமையின் கீழ் நாம் தெரிவு செய்யும் எந்தவொரு உறுப்பினரானாலும் , அவர் அவரது தொகுதியிலுள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்துவார். ஆனால் தற்போது அவ்வாறொன்று இல்லை. வாக்குகளைப் பெறுவதற்காக முழு மாவட்டத்திற்கும் செல்ல வேண்டியுள்ளது.

இவ்வாறு வாக்குகளைப் பெறுவதற்கு கோடிக்கணக்கான பணத்தை செலவிட வேண்டும் என்பதால் , அவர்கள் மோசடியாளர்களுடன் இணைந்து அதற்காக வேலைத்திட்டங்களை முன்னெடுப்பார்கள். இறுதியில் வாக்களித்த மக்கள் தமது உரிமைகள் தொடர்பில் குரலெழுப்பும் போது அவர்களை துரத்தியடிப்பார்கள். 1978 ஆம் ஆண்டின் பின்னர் நாட்டுக்கு ஏற்பட்ட பாரிய அழிவு இதுவேயாகும்.

எமது நாட்டின் தலைவர்கள் எனக் கூறப்படுபவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளனர். பல வருடங்களாக எமது நாட்டை வெளிநாடுகளின் அடிமையாக்கியுள்ளனர். இதன் காரணமாகவே தற்போது ஏனைய நாடுகளிடம் கையேந்தி உண்ண வேண்டிய நிலைமை எமக்கு ஏற்பட்டுள்ளது.

இன்று எமது நாட்டில் வீடுகள் இன்றி எத்தனை குடும்பங்கள் உள்ளன? கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரே தற்போது இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சாகவும் உள்ளார். டொலரைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட அதிசொகுசு அடுக்குமாடி குடியிருப்புக்கள் மூன்றை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவா நகர அபிவிருத்தி அமைச்சு என்ற ஒன்று காணப்படுகிறது? சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து , அவர்கள் முன் தலை குனிந்து இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலைமை என்ன? மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க முடியாத ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும். மீண்டும் இவர்களுக்கு வாக்களித்து விட வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

மாறாக இவர்களுக்கு வாக்களித்து விட்டு , பின்னர் என்னிடம் வந்து வீடமைத்து தருமாறு கோர வேண்டாம். ஜனாதிபதியினால் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. எனினும் அந்தக் குழு அரசியலமைப்பின் உள்ளடக்கம் தொடர்பில் யாரிடமும் சென்று எந்தவொரு நிலைப்பாட்டையும் பெறவில்லை. மாறாக அவர்களுக்குள்ளேயே கலந்துரையாடி பிரதியொன்றை தயாரித்து அதனை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

அதன் பிரதியொன்று எனக்கும் கிடைக்கப் பெற்றது. அதிலுள்ளவற்றை நடைமுறைப்படுத்தினால் அது நாட்டுக்கு சாபக்கேடாகும். ஒழுக்கமற்றவொரு அரசியமைப்பினையே தயாரித்துள்ளனர்.

எவரேனும் அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது அரச நிறுவனத்திற்கு எதிராகவோ , ஐக்கிய நாடுகள் சபை , வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு தலைவர்களிடம் குறைகளைக் கூறினால், குறித்த நபரின் குடியுரிமையை 20 ஆண்டுகளுக்கு குறையாத காலப்பகுதிக்கு தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசியலமைப்பில் உள்ளடக்கியுள்ளனர். கல்வி கற்றவர்கள் என்று கூறப்படுபவர்கள் இதனையே செய்துள்ளனர். எம்மை முழுமையாக மௌனிக்கச் செய்துள்ளனர். இதுவே எமது நாட்டுக்கு இடம்பெற்றுள்ள நிலைமையாகும் என்றார்.