உயர்மட்ட அமெரிக்க பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட குழுவொன்று மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று  இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

குறித்த குழுவினரை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

இலங்கையில் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தங்கியிருக்கும் அவர்கள் பல்வேறு அரசியல் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் சர்வதேச அமைப்பு பிரதிநிதிகளை சந்திப்பார்கள் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இவ்வனைத்து சந்திப்புகளிலும், இலங்கையர்களுக்கு உதவுவதற்கான மிகவும் பயனுள்ள வழிகளை அவர்கள் ஆராய்வார்கள், தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இலங்கையர்கள் உழைக்கிறார்கள் மற்றும் எதிர்காலத்திற்கான நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதாரத்திற்கு இலங்கையர்கள் திட்டமிடுகிறார்கள் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை-70% எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடல்

தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் 70% எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

30 நாட்களுக்கு முன்னரே முற்பதிவு செய்த போதிலும், போதியளவு எரிபொருள் இன்னும் கிடைக்கவில்லை என சங்கத்தின் தலைவர் W.S.S. பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இயக்கங்களின் அன்றைய இயலுமையும் இன்றைய இயலாமையும் ?

யதீந்திரா?
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் (ஈ.பி.ஆர்.எல்.எப்) அவர்களது, தலைவர் பத்மநாபா கொலைசெய்யப்பட்ட தினத்தை, தியாகிகள் தினமாக நினைவு கூர்ந்துவருகின்றனர். அண்மையில் 31வது தியாகிகள் தினம் நினைவு கூரப்பட்டது. நிகழ்வில் பேசுமாறு, பம்பநாபா அபிவிருத்தி ஒன்றியம் என்னும் பெயரில் இயங்கிவரும் ஒரு பிரிவினர், என்னை அழைத்திருந்தனர். இதன் போது நான் பகிர்ந்துகொண்ட சில விடயங்களையே – இங்கு கட்டுரையாக்கியிருக்கின்றேன்.

இதிலுள்ள கவலைக்குரிய விடயம் என்னவென்றால், தங்களின் தலைவருக்கான நினைவு தினத்தைக் கூட, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினரால், கருத்தொருமித்து, ஒருங்கிணைந்து முன்னெடுக்க முடியவில்லை. ஈழ அரசியலில், ஒற்றுமையின்மை என்னும் நோய், எவ்வாறு தமிழனத்தை பாதித்தது, பாதித்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கு, ஈ.பி.ஆர்.எல்.எப் ஒரு வாழும் சாட்சியாகும். ஒரு இயக்கத்தை பிரதிநிதித்துவம் செய்தவர்களாலேயே, தங்களுக்குள் ஒன்றுபட முடியவில்லையாயின், மற்றவர்கள் அனைவரையும் எவ்வாறு ஒரணியாக கொண்டுவர முடியும்? ஒற்றுமையின்மை என்னும் நோயிலிருந்து அவர்களை எவ்வாறு விடுவிக்க முடியும்? இந்தக் கேள்வியுடன்தான், தமிழ் தேசிய அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து செல்கின்றது. வரலாற்றோடு எவ்வித தொடர்புமில்லாத வியாபாரிகளின் ஆதிக்கத்திற்குள் சென்று கொண்டிருக்கின்றது. விரைவில் அது வியாபாரிகள் உகச்சரிக்கும் தமிழ் தேசியமாக உருமாறலாம்.

இனவிடுதலையை வென்றெடுப்பதற்கு ஆயுதப் போராட்டங்களே, ஒரேயொரு வழிமுறையாகும் என்னும் புறச்சூழலில்தான், தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தோற்றம் பெற்றன. உலகின் பல பாகங்களிலும் ஆயுதப் போராட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலமது. நான் இந்த காலகட்டத்தை சேர்ந்தவன் இல்லையென்றாலும், வரலாற்றை உற்று நோக்கும் மாணவன் என்னும் வகையில் விடயங்களை தேடியும், சம்பந்தப்பட்டவர்களோடு உரையாடியும் அறிந்துகொண்டதன் மூலம், இந்த வரலாற்று காலகட்டத்திற்குள் செல்ல முடிந்தது. இன்று முன்னாள் இயக்கங்கள் என்னும் அiமொழியுடன், எதைச் சாதிப்பதற்காக சென்றோம் – இப்போது எந்த நிலையில் இருக்கின்றோம் – இனி எங்களால் என்ன செய்ய முடியும்? என்னும் கேள்விகளுடன், வெறும் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், அன்றைய சூழலில், மாபெரும் கனவுகளுடன்தான் இயங்கங்களில் இணைந்து கொண்டவர்கள்.

உண்மையில், அன்றைய சூழலில் இயக்கங்களில் இணைந்து கொண்டவர்கள் பலர், எந்த இயக்கமென்று ஆராய்ந்து இணைந்தவர்களல்லர். அப்படி ஆராய்வதற்கான தேவையும் அப்போது இருந்திருக்கவில்லை. ஏனெனில், இயக்கங்களில் சிறந்தது எது என்னும் கேள்விகளில்லாத காலமது. அனைவருமே விடுதலைக்காக போராடுபவர்கள் என்னும் பெருமை மட்டுமே மேலோங்கியிருந்த காலமது. இயக்கங்களின் தலைமைகளுக்கிடையில் மோதல்களும், பேதங்களும் ஏற்பட்ட போது, அனைத்துமே நிர்மூலமாகியது. சமூதாயத்தை தலைகீழாக புரட்டிப் போடும் கனவுகளோடு சென்றவர்கள், துரோகி, ஒட்டுக்குழுக்கள், மண்டையன் குழுக்கள், காட்டிக்கொடுப்பவர்கள், கூலிப்படைகள் இப்படியான அடைமொழிகளிலிருந்து தப்பிப்பிதற்காக, சமூதாயத்தையேவிட்டே ஓடவேண்டிய துர்பாக்கிய நிலையுருவாகியது. இறுதியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கின்றது.

2015இல், ஒரு சில முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள், தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் தருமாறு சம்பந்தனிடம் கோரினர். அப்போது சம்பந்தன் அவர்களுக்கு வழங்கிய பதில் – உங்களிலிருந்துதான், கே.பி வந்தார். உங்களிலிருந்துதான் கருணா வந்தார். நீங்கள் அரச புலனாய்வு பிரிவோடு சேர்ந்து செயற்படுதாக சந்தேகங்கள் இருக்கின்றன – உங்களுக்கு எவ்வாறு, இடம்தரமுடியுமென்று கேட்டிருந்தார். இதிலுள்ள துர்பாக்கியம் என்னவென்றால், சம்பந்தன் அவ்வாறு கூறுகின்ற போது, முன்னாள் இயக்கங்களான கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், சம்பந்தனை மறுதலிக்கவோ கண்டிக்கவோ இல்லை. ஒரு கட்சியில் ஆசனங்கள் வழங்குவது – வழங்காமல் விடுவது அந்த கட்சியின் முடிவு. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு கட்டாயம் ஆசனங்கள் வழங்கத்தான் வேண்டுமென்பதல்ல.

ஆனால் அவர்களை நிராகரிப்பதற்கு சொல்லப்படும் காரணத்தில்தான், இந்த சமூதாயத்தின் மோசமான சிந்தனைப் போக்கு வெளிப்படுகின்றது. முன்னர் ஏனைய இயக்கங்களை அரச ஒட்டுக் குழுக்களென்று கூறி, அவமானப்படுத்திய போது, அமைதியாக இருந்த தமிழ் சமூகம், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அவமானப்படுத்தப்பட்ட போதும், அமைதியாகவே இருந்தது. மொத்தத்தில் இயங்கங்களின் இன்றைய நிலை பூச்சியமாகும். ஏனைய இயக்கங்களுக்கு எது நடந்ததோ, அதுவே இப்போது, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் நடந்திருக்கின்றது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, பல பிரிவுகளாக இருப்பது போன்றுதான், விடுதலைப் புலியாதரவு புலம்பெயர் தரப்புக்களும் இருக்கின்றன.

இன்று இயக்கங்களின் நிலைமையை ஒரு வரியில் கூறுவதனால், கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைமை எனலாம். எந்த மிதவாத அரசியல் கட்சிகளை புறம்தள்ளி இயக்கங்கள் தோற்றம்பெற்றனவோ – இன்று அதே மிதவாதிகளின் தயவில் – அவர்கள் போடும் ஆசனங்களை எண்ணிக்கொண்டிருக்கும் இழிநிலையில்தான் இயக்கங்களின் கதையிருக்கின்றது. தமிழரசு கட்சியின் தயவில் அல்லது விக்கினேஸ்வரன் போன்றவர்களின் தயவில், தங்களின் எதிர்காலத்தை தேடும் நிலையில்தான் இன்று முன்னாள் இயக்கங்களின் நிலையிருக்கின்றது. இந்த நிலைமைக்கு யார் காரணம்? ஒரு காலத்தின் அரசியலை தீர்மானித்தவர்களால், ஏன் இன்றைய ஜனநாயக அரசியலில் சொல்வாக்கு செலுத்தமுடியவில்லை? மிதவாதிகளிடமிருந்த அரசியல் பார்வைகளைவிடவும் செழுமையான அரசியல் பார்வைகள் இயக்கங்களின் தலைமைகளிடம் இருந்தது. அன்றைய சூழலில் மிகவும் ஆழுமைமிக்க தலைவராக கருதப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் கூட, 1988இல், இடம்பெற்ற, மாகாண சபை தேர்தலில் போட்டியிட முன்வரவில்லை. இத்தனைக்கும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அமிர்தலிங்கம் ஆதரித்திருந்தார். அந்த ஒப்பந்தத்திற்கு பின்னர்தான், தமிழ் மக்கள் நிம்மதியாக நித்திரைகொள்ள முடிந்ததென்று, உரையாற்றிய, அமிர்தலிங்கம், மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு, ஒரு வலுவான தலைமைத்துவத்தை வழங்க முன்வரவில்லை.

விடுதலைப் புலிகளின் எதிர்ப்பை கருத்தில் கொண்டே அமிர்தலிங்கம், அவ்வாறனதொரு முடிவை எடுத்ததாக சிலர் கூறுகின்றனர். ஆனாலும் ஒரு ஆளுமைமிக்க தலைவர் தனக்கு சரியென்று படும் ஒன்றில் பின்நிற்கக் கூடாது. இந்தப் பி;ன்புலத்தில்தான், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டது. இன்று பின்நோக்கி பார்த்தால், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முடிவை வரலாறு, நியாயப்படுத்தியிருக்கின்றது. இந்தியாவை புறம்தள்ளி, ஈழத்தமிழர்கள் எந்தவொரு அரசியல் தீர்வையும், எக்காலத்திலும் பெற முடியாதென்னும் வரலாற்று உண்மை நிருபிக்கப்பட்டிருக்கின்றது. பத்மநாபா கூறிய ஓரு கருத்தை சில வருடங்களுக்கு முன்னர் எனது கட்டுரையொன்றில், பயன்படுத்தியிருக்கின்றேன். அதாவது, இந்தியா என்பது ஒரு கருங்கல் பாறை. அதனோடு முட்டினால் நமது தலைதான் உடையும். ஈழத் தமிழர் அரசியலை பொறுத்தவரையில் அன்றும் இந்தியா கருங்கற்பாறைதான், இன்றும் கருங்கற்பாறை – என்றுமே பாறைதான். பாறை என்பது பலத்தின் அடைமொழி. அன்று எவருமே முன்வராத நிலையில்தான், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டது. இன்று அந்த மாகாணசபையை பாதுகாப்பது தொடர்பில்தான் உரையாடல்கள் இடம்பெறுகின்றன. இந்த இடத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அன்றைய முடிவு, வரலாற்றால் நியாயப்படுத்தப்பட்டுவிட்டது. இந்தியாவை எதிர்;த்து போராட்டத்தை தொடர முடியாதென்னும் நிலையில்தான், விடுதலைப் புலிகள் தவிர்ந்த அனைத்து இயக்கங்களும் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு, ஜனநாயக நீரோட்டத்திற்கு திரும்பின. இன்று மீளவும் தமிழ் தேசிய அரசியல் இந்தியாவின் தயவிற்காகவே காத்திருக்கின்றது. ஆகக் குறைந்தது 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினாலே இப்போதைக்கு போதுமானதென்னும் நிலைமை உருவாக்கியிருக்கின்றது. ஆனால் இப்போது கூட, முன்னாள் இயக்கங்கள் அனைத்தும் ஓரணியில் பயணிக்க முடியவில்லை. ஒன்றாக இணைந்து மக்களை எதிர்கொள்ள முடியவில்லை. இதற்கு யார் காரணமென்றால் அனைத்து இயங்களின் மீதும்தான் விரல் நீள வேண்டும். இத்தனை அனுபவங்களுக்கு பின்னரும் தங்களுக்குள் உடன்பட முடியவில்லையாயின், பின்னர் எதற்காக முன்னாள் இயக்கங்கள் என்னும் அடைமொழி? தியாகங்களால் உருப்பெற்ற வரலாற்றை சுமந்து கொண்டிருக்கும் முன்னாள் இயக்கங்கள், மிதவாதிகள் போடும் ஆசனங்களை எண்ணிக் கொண்டிருப்பதைவிடவும், தங்களின் இயக்க அடையாள கட்சிகளை கலைத்துவிட்டு செல்லவது பெருமையானது.

இன்றும் இயக்கங்களை பிரதிநித்துவம் செய்பவர்களுக்கு முதன்மையான பொறுப்புண்டு. ஏனெனில் தமிழ் சமூகம் அரசியல்ரீதியில் இன்று வந்திருக்கும் இடத்திற்கு அனைவருக்குமே பொறுப்புண்டு. விடுதலைப் புலிகளுக்கு முதன்மையான பொறுப்புண்டு. உண்மையில் 2009இல் பேரழிவு ஒன்றை சந்தித்த போது, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்போர், சார்பற்ற சுயவிமர்சனமொற்றிற்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கு யாருமே தயாராக இருந்திருக்கவில்லை. இல்லாதவர் இருக்கின்றார் என்று கூறி, அரசியல் மாயைகளை கட்டமைப்பதிலேயே சிலர் கவனம் செலுத்தினர். இதன் விளைவைத்தான் இன்று தமிழர் அரசியல் எதிர்கொண்டிருக்கின்றது. இன்று அனைத்து இயங்கங்களும் ஒரு புள்ளியில்தான் வந்து சேர்ந்திருக்கின்றன அதாவது, தியாகங்கள் பெறுமதியற்றுப் போனமைக்கு, இருப்பவர்கள் வெறும் சாட்சியாகியிருக்கின்றனர். இப்போது ஒரு வழிமட்டுமே இருக்கின்றது. அதாவது, முன்னாள் இயக்கங்களின் இப்போதைய தலைமைகள், தங்களது ஒவ்வொரு இயக்கங்களினதும், முடிவுகளுக்காக மாண்டு போனவர்களது தியாகங்களை மதிப்பது உண்மையாயின், அனைவரும் ஓரணியில் சங்கமிக்க வேண்டும். ஆளுமைமிக்க ஜனநாயக அரசியல் பாதையொன்றை வகுக்க வேண்டும். முயன்றால், இது முடியாத காரியமல்ல.

ஒரு வரலாற்றியலாளன் என்பவன், வரலாற்றை அதன் போக்கில் சென்று நோக்க வேண்டும் என்பார் வரலாற்றியல் அறிஞர் ஈ.எச்.கார். ஒரு அரசியல் வரலாற்று மாணவன் என்னும்வகையில், கடந்தகால வரலாற்றை அதன் போக்கில் நோக்கினால், இயக்கவழிப் பாதையில் எவருமே புனிதர்களல்லர். அனைவரது பக்கத்திலும் தவறுகள் உண்டு. அந்த தவறுகள் என்னவென்பது அந்த இயக்கங்களில் எஞ்சியிருப்போர்களுக்கு தெரியும். ஆனால் அனைத்து தவறுகளிலிருந்தும் பாடங்களை படிக்க வேண்டிய நிர்பந்தத்தை வரலாறு அவர்கள் மீது சுமத்தியிருக்கின்றது. வரலாற்று சுமையை இறக்கி வைப்பது தொடர்பில்தான் அவர்கள் இப்போது சிந்திக்க வேண்டும். வரலாறு மனிதர்களால்தான் உருவாக்கப்படுகின்றது. மனிதர்கள் உருவாக்கிய வரலாற்றின் திசைவழியை, மனிதர்களால் மாற்றியமைக்கவும் முடியும். தமிழ் இயக்கங்களின் வரலாறென்பது, ஒரு புறம் தியாகங்களால் உருப்பெற்ற வரலாறாக இருக்கும் போது, மறுபுறம், அது ஒரு இரத்தக்கறை படிந்த வரலாறு, கொலைகளை ஆராதித்த வரலாறு, மனித உரிமைகளை போற்றாத வரலாறு, அரசியல் தீண்டாமைகளை போற்றிய வரலாறு, குற்றவுணர்விற்கு அச்சம்கொள்ளாத வரலாறு. தமிழ் அரசியல் வரலாற்றின் இந்தப் பக்கமே, மறுபுறம், இயக்கங்களின் தியாகங்களை பெறுமதியற்றதாக்கியிருக்கின்றது. முன்னாள் இயக்கங்கள் அனைத்தும், ஜனநாயக நீரோட்டத்தில் ஒன்றுபட்டால், இந்த வரலாற்று கறைகளை சீர்செய்ய முடியும் .

“குரங்கு அம்மை நோய்” சமூக பரவலாக மாறியதா? உலக சுகாதார மையம் விளக்கம்

உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதுவரை 58 நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது. உலகளவில், 3,417க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இது தொடா்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெளியிட்ட அறிக்கையில், குரங்கு அம்மை நோய் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

சுமாா் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் பாதிக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. குரங்கு அம்மை நோய் பாதித்தவா்களை கண்காணித்தல், அவர்களை தனிமைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கை மூலம் குரங்கு அம்மை பரவுவதை தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசி ஆகியவை கிடைப்பதை உறுதிப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படுகிறது.

குரங்கு அம்மை நோய் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பரவும் அபாயம் உள்ளது. மேலும்,குரங்கு அம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை அடையவில்லை. ஆனால் வளா்ந்து வரும் சுகாதார அச்சுறுத்தலாக உள்ளது என தொிவித்து உள்ளாா். குரங்கு அம்மை நோய் தொடா்பான அவசர ஆலோசனையில் பங்கேற்ற விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களுக்கு நன்றி தொிவித்தாா். தொடா்ந்து விழிப்புடன் இருப்பதற்கு அவா்களின் ஆலோசனையை பின்பற்றுவோம் என அவா் தொிவித்து உள்ளாா்.

இலங்கையின் பொருளாதார நிலைமை மனித உரிமை நிலவரத்தின் முன்னேற்றத்தை திசைத்திருப்பக்கூடாது- பிரித்தானியா

இலங்கையின் மனித உரிமை நிலவரத்தின் முன்னேற்றத்தை சவாலான பொருளாதார நிலைமை திசைத்திருப்பக்கூடாது என்று பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் விக்கிபோர்ட் பிரிட்டிஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சர்வதேச நாணயநிதியத்தின் பிரிவுகள் பொருளாதார கொள்கைகள் தொடர்பாக நிபந்தனைகளை விதிப்பதற்கு அனுமதிக்கின்ற போதிலும் அரசியல் அல்லது மனித உரிமை தொடர்பான நிபந்தனைகளை விதிப்பதற்கான ஏற்பாடுகள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச கடன் மன்றங்களின் ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையின் கடன் பிரச்சினைக்கு தீர்வொன்றை காணமுயல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இலங்கை அரசாங்கத்துடனும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுடனும் பேச்சுக்களை நடத்துவோம் என்றும் யுத்தத்திற்கு பிந்திய பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பாக பிரித்தானியா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, ஐ.நா. மனித உரிமை பேரவையின் தீர்மானம் குறித்து இலங்கை ஆக்கபூர்வமான ஈடுபாட்டை காண்பிக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Posted in Uncategorized

நாட்டைச் சீரழித்த முட்டாள்களிடமிருந்து அதிகாரத்தை உடன் மீளப்பெறவேண்டும்; பேராயர் கர்தினால்!

“நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமான முட்டாள்களிடமிருந்து அதிகாரத்தை உடனடியாக மீளப்பெற வேண்டும்.”

– இவ்வாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தற்போதைய சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு சகோதரத்துவமும், ஒத்துழைப்பும் அவசியமாகும்.

நாடு என்பது அரசியல் தலைவர்கள் அல்லர், மக்களாவர். மக்களுக்குத்தான் உதவி செய்ய வேண்டும். அரசியல்வாதிகளுக்கு உதவி செய்வது பொய் வேலையாகும்.

ஏனெனில், பல ஆண்டுகளாக இந்த நாட்டின் வளங்களை வீணடிக்கும் செயல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. ஒரு தரப்பு அல்ல, பல தரப்பினர் இதில் தொடர்புபட்டுள்ளனர்.

7, 8 பில்லியன் என்ற பாரிய கையிருப்பு எவ்வாறு பூச்சியமானது? மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது?

ஏன் இவை பொறுப்பற்ற முறையில் வீணாக்கப்பட்டன என்பது குறித்து எப்போதேனும் ஒரு நாளில் விசாரிக்கப்பட வேண்டும்.

அதுதான், மக்களுக்குத் தற்போது ஏற்பட்டுள்ள துன்பத்துக்கு ஒரு தீர்வாகும்.

இந்தப் பணத்தை வீணடித்தவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

இந்த முட்டாள்தனமான தீர்மானத்தை எடுத்தவர்கள் யாவர்? மக்களை சௌபாக்கியத்தை நோக்கி கொண்டுசெல்லத்தான், தலைவர் ஒருவருக்கு அதிகாரம் வழங்கப்படுகின்றது. அந்த வாக்குறுதிதான் வழங்கப்பட்டது.

எனவே, 2, 3 ஆண்டுகளில் நாட்டை முழுமையாகக் கையேந்தும் நிலைக்குக் கொண்டு சென்றவர் யார் என்பது குறித்து முழுமையாக விசாரித்து, அவர்களிடமிருந்து அதிகாரத்தை மீளப்பெற்றுக்கொள்ள முடியுமாயின் உடனடியாக மீளப்பெற வேண்டும்” – என்றார்.

Posted in Uncategorized

ஒருவர் தன்வசம் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவு தொடர்பாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் வசிக்கும் ஒருவர் தன்வசம் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவை 15,000 அமெரிக்க டொலர்களிலிருந்து 10,000 அமெரிக்க டொலர்களாகக் குறைப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பொதுமக்களின் கைகளிலுள்ள வெளிநாட்டு நாணயத்தை முறைசார் வங்கி முறைமைக்குள் கொண்டுவரும் நோக்கில் 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச்சட்டத்தின் 8 ஆவது பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள கட்டளைக்கு அமைவாக இத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கையில் வசிக்கும் ஒருவர் தன்வசம் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவு 15,000 அமெரிக்க டொலர்களிலிருந்து 10,000 அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்படவுள்ளது. அதுமாத்திரமன்றி ஏனைய வெளிநாட்டு நாணயங்களும் இதற்குச் சமனான அளவில் குறைக்கப்படவுள்ளது.

அதேவேளை மேற்குறிப்பிட்ட தொiகையை விடவும் அதிகளவிலான வெளிநாட்டு நாணயத்தை கைகளில் வைத்திருப்பவர்கள் கடந்த 16 ஆம் திகதியிலிருந்து 14 வேலைநாட்களுக்குள் தம்வசமுள்ள வெளிநாட்டு நாணயத்தை தனிநபர் வெளிநாட்டு நாணயக்கணக்கில் அல்லது வர்த்தக வெளிநாட்டு நாணயக்கணக்கில் வைப்பிலிடவேண்டும். இல்லாவிட்டால் உரிமம்பெற்ற வர்த்தக வங்கி அல்லது தேசிய சேமிப்பு வங்கி போன்ற அதிகாரமளிக்கப்பட்ட வர்த்தகருக்கு விற்பனை செய்யவேண்டும்.

மேற்குறிப்பட்ட காலப்பகுதியின் பின்னர் எவரேனும் 10,000 டொலர்களுக்கு மேற்பட்ட வெளிநாட்டு நாணயத்தைத் தம்வசம் வைத்திருந்தால் வெளிநாட்டு நாணயச்சட்டத்தின் பிரகாரம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்த மேலதிக தகவல்களை ஏதேனுமொரு உரிமம்பெற்ற வர்த்தக வங்கி மூலமோ, தேசிய சேமிப்பு வங்கி மூலமோ அறிந்துகொள்ளமுடியும். இல்லாவிட்டால் வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.dfe.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் ஊடாகவோ அல்லது 011-2477255/011-2398511 ஆகிய இலக்கங்களின் மூலம் வெளிநாட்டுச்செலாவணித்திணைக்களத்தைத் தொடர்புகொள்வதன் ஊடாகவோ அறிந்துகொள்ளமுடியும்.

சீனத் தூதுவரை சந்தித்து மஹிந்த நன்றி தெரிவிப்பு

முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ சீனத் தூதுவரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சீனத் தூதுவருக்குமிடைியலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்றது.

இலங்கையின் கடிமனமான இந்த கால கட்டத்தில் இலங்கைக்கு உதவுவதற்காக சீனாவுக்கு மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை மக்கள் மிகவும் பொறுமையாக இருப்பதாகவும், அதற்கு தனது பாராட்டுகளை தெரிவிப்பதாகவும், இலங்கையின் நிலை மிக விரைவில் வழமைக்கு திரும்பும் எனவும் சீன தூதுவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பல கொலைகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்த தகவல்களை ஐ.நா.விடம் வெளிப்படுத்திய TMVP இன் உறுப்பினர் வெளிநாட்டில் தஞ்சம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பல கொலைகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார் என்று ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்கள், பல கொலைகள் மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முக்கிய தகவல்களை அவர் வெளிப்படுத்தியதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பிலும் வெளிநாட்டிலும் உள்ள சில முக்கிய இராஜதந்திர தூதரகங்களுக்கு தம்மிடம் உள்ள தகவல்களின் சுருக்கமான விபரங்களைக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்பின்னர் அவர் உயிருக்கு பயந்து, சமீபத்தில் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அவர், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் ஏனையவர்களும் செய்த குற்றங்கள் தொடர்பான வாக்குமூலங்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா. அதிகாரிகள் சுமார் 5 நாட்கள் அவரிடம் இருந்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோரின் கொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல்போன சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை அந்த நபர் வெளிப்படுத்தியுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்த கொலைகள் பற்றிய விவரங்களையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார் எனக் கூறப்படுகிறது.

ஐ.நா. மற்றும் இராஜதந்திர வட்டாரங்களிற்கு வழங்கப்பட்ட தகவல்கள் முன்னைய அரசாங்கத்துடன் தொடர்புடைய சிலர் மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை சுமத்தும் வகையில் அமைந்துள்ளன என்றும் இந்த தகவல்களை அடிப்படையாகக்கொண்டு, ஐ.நா.வும் தூதரங்களும் என்ன நடவடிக்கையை எடுக்கப்போகின்றன என்பது தெரியவில்லை என ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அறிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் ஐ.நா.விடம் இருந்து இந்த விடயம் குறித்து அறிய முயற்சித்தப்போதிலும் பயனளிக்கவில்லையென அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழு நாளை (26) இலங்கை வருகை

அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் இராஜாங்க திணைக்களம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட தூதுக்குழு நாளை (26) நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

இவர்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆசியாவிற்கான பிரதி உதவி திறைசேரி செயலாளர் Robert Kaproth, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதி உதவி இராஜாங்க செயலாளரான தூதுவர் Kelly Keiderling ஆகியோரே நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.

இந்த குழு, அரசியல் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளை சந்திக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மக்களின் பாதுகாப்பு மற்றும் செழிப்பிற்கான தமது தொடர்ச்சியான உறுதிப்பாட்டினை இந்த விஜயம் அடிக்கோடிட்டு காட்டுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் தமது வரலாற்றில் மிகப்பெரும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் போது, பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்வதற்காகவும் ஜனநாயக நிறுவனங்களை பலப்படுத்துவதற்காகவும் தாம் மேற்கொள்ளும் முயற்சிகள் முன்னரை விட தற்போது மிகவும் முக்கியமானதாக உள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்கள் தமது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காகவும் உணவு பாதுகாப்பின்மையை எதிர்த்து போராடுவதற்காகவும் பொது சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்காகவும் முயற்சி செய்யும் இவ்வேளையில், எதிர்வரும் மாதங்களில் அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்கும் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized