இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி தொடர்பில் தமது பிரஜைகளுக்கு கனடா எச்சரிக்கை

இலங்கையில் வீழ்ச்சி கண்டுவரும் பொருளாதார நிலைமை தொடர்பில் கனடா அந்நாட்டு பிரஜைகளை எச்சரித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அடிப்படை தேவைகளின் பற்றாக்குறையை நோக்கி நகர்வதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மருந்துப்பொருட்கள், எரிபொருள் மற்றும் உணவு என்பன இதில் உள்ளடங்குகின்றன.

பொருளாதார ஸ்திரத்தன்மை, சுகாதாரம் உள்ளிட்ட பொதுச்சேவைகளையும் இது பாதிக்கும் என இலங்கையிலுள்ள கனேடிய பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் எச்சரித்துள்ளது.

எனவே, உணவு, நீர் மற்றும் எரிபொருளை கையிருப்பில் வைத்துக்கொள்ளுமாறு அவர்களை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் பலசரக்கு கடைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களிலும் நீண்ட வரிசைகளில் நிற்கும் நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை தொடர்பிலான தகவல்களை உள்நாட்டு ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொள்ளுமாறும் இலங்கையிலுள்ள கனேடிய பிரஜைகளை அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் தமது வாழ்க்கைத் துணையை இழந்த நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து. முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விசாரணைகளை தாமதிக்காமல் முன்னெடுக்குமாறும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார்.

தாக்குதலை தவிர்ப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, தீவிரவாதிகளுக்கு எதிராக கனிவான நிலைப்பாட்டை பிரதமர் கொண்டிருந்தார் என அந்த ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சில பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எனவே தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழியேற்படுத்த வேண்டும் என நாம் கோருகின்றோம்.

தற்கொலை செய்து கொண்ட நபர், தமக்கு நீதி கிடைக்காததன் காரணமாக கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகி, தமது பிள்ளைகளையும் தனித்துவிட்டு அவ்வாறானதொரு முடிவை மேற்கொண்டுள்ளதாக பேராயர் மேலும் குறிப்பிட்டார்.

சிங்கள வாக்குமூலத்தில் கையெழுத்திட மனோ கணேசன் மறுப்பு – விசாரணை இடை நிறுத்தம்

சிங்கள வாக்குமூலத்தில் கையெழுத்திட மனோ கணேசன் மறுப்பு: விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சென்ற தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தனது சாட்சியம் வாக்குமூலம், தமிழில் இருந்து சிங்கள மொழிக்கும், சிங்களத்தில் இருந்து தமிழ் மொழிக்கும் உரை பெயர்ப்பு செய்யப்பட்டாலும், இறுதியில் தான் கையெழுத்திடுவதாயின், அந்த ஆவணம் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என ஆணைக்குழு விசாரணையாளர்களுக்கு அறிவித்ததால், விசாரணை இடை நடுவில் நிறுத்தப்பட்டு, பிறிதொரு தினத்தில் நடத்த முடிவாகியுள்ளது.

“கடந்த அரசுக்கு முந்தைய அரசின் அமைச்சர்களின் மீது எப்படி ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுத்தீர்கள்” என்று விசாரிக்கும் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மனோ அழைக்கப்பட்டார். கடந்த வருட இறுதியில், மனோ கணேசனின் வசிப்பிட வலய காவல் நிலையம் மூலமாக அவருக்கு சிங்கள மொழியில் அழைப்பாணை அனுப்பட்ட போது, தமிழில் அனுப்பும்படி அந்த அழைப்பாணையை அவர் திருப்பி அனுப்பி இருந்தார். தற்போது தமிழ் மொழிபெயர்ப்புடன் அழைப்பாணை அனுப்பபட்டபோது, அதை ஏற்றுக்கொண்டு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு நேற்று காலை சென்ற போது மீண்டும் ஒரு சட்டசிக்கலை அவர் சுட்டிக்காட்டி கையெழுத்திட மனோ கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மனோ கணேசன் ஊடகங்களுக்கு கூறியதாவது,

“நாட்டின் மொழிச்சட்டம், மொழிக்கொள்கை ஆகியவற்றுக்கும் பொறுப்பு கூறும் அமைச்சரவை அமைச்சராக நான் இருந்தேன். என்னிடமே மொழிச்சட்ட மீறலா? விசாரணை இடைநடுவில் நிறுத்தப்பட்டு, பிறிதொரு உசிதமான தினத்தில் நடத்த முடிவான போது, “நாங்கள் மீண்டும் மிகப்பலமாக வெகு சீக்கிரம் வரப்போகிறோம். ஆகவே இந்த விசாரணை கோமாளித்தனங்களை எல்லாம் சீக்கிரம் நடத்தி முடியுங்கள்”, என்றும் கூறிவிட்டு வந்தேன்.

இலங்கை அரசியலமைப்பில் 4ம் அத்தியாயம் 22 ம் பிரிவில், ஒவ்வொரு பிரஜைக்கும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய ஏதாவது ஒரு தேசிய மொழிகளில் தாம் விரும்பியவாறு வாய்மொழி மூலமாகவும், எழுத்து மூலமாகவும் பதில்களை பெற உரிமை இருக்கிறது. நான் இன்று விசாரணைகளுக்கு சென்ற போது, பாராளுமன்ற வாய்மொழி உரை பெயர்ப்பாளரை அங்கே அழைத்து வைத்திருந்தார்கள்.

நான் சிங்கள அழைப்பாணையை திருப்பி அனுப்பி இருந்தமையால் அதை செய்து இருந்தார்கள். அவர் எனக்கும், விசாரணையாளர்களுக்கும் இடையில் உரை பெயர்ப்பு செய்தார். எனது வாக்குமூலம் சிங்கள மொழியில் தட்டச்சு செய்யப்பட்டது.

ஆனால், விசாரணையின் இடையில், “எனது வாக்குமூலத்தில் நான் கையெழுத்திட வேண்டுமா?” எனக்கேட்டேன். “ஆம்” என்றார்கள். “அப்படியானால், தமிழில் ஆவணத்தை தயார் செய்யுங்கள்” என்றேன். அந்த இடத்தில் தமிழில் கணிப்பொறி தட்டச்சு செய்ய அலுவலர் அங்கே இல்லை என்பதால், விசாரணையை இடை நிறுத்துவிட்டு வெளியேறினேன்.

“குற்றவியல் கோவையின் படி, சிங்களத்தில் ஆவணம் தயார் செய்ய முடியும், அதை உரை பெயர்ப்பாளர் எனக்கு எடுத்து சொன்னால் போதும்” என எனக்கு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் வகுப்பு எடுக்க முற்பட்டார். அவரிடம் குற்றவியல் சட்டம் உட்பட எந்தவொரு சட்டமும், நாட்டின் அரசமைப்புக்கு கீழேயே கணிக்கப்பட வேண்டும். உரைபெயர்ப்பு வேறு, மொழிபெயர்ப்பு வேறு. இரண்டையும் எனது தாய்மொழியில் பெற எனக்கு நாட்டின் அரசமைப்பின் 4ம் அத்தியாயம் 22 ம் பிரிவின்படி உரிமை உள்ளது என்றும் நான் கூறியவுடன் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைதியானது.

மேலும் இந்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவே, இதை நியமித்தவரை போன்று நகைச்சுவையாக இருக்கிறது. உலகில் எங்கும் ஊழல் திருட்டைதான் விசாரிப்பார்கள். அதில் ஒரு தர்க்க நியாயம் உண்டு. இங்கே “ஊழல் திருட்டை ஏன் எப்படி விசாரித்தீர்கள்” என கேட்டு இவர்கள் விசாரிக்கிறார்கள். இது இந்நாட்டிற்கே சிறுமை.

கடந்த அரசுக்கு முந்தைய அரசின் அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகளை இந்த நாட்டு பொலிஸ் திணைக்களம்தான் முன்னெடுத்து, வழக்குகளை இந்த நாட்டின் சட்டமாதிபர்தான் தொடர்ந்தது. இன்று இதுபோன்ற இன்னொரு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்து, அவற்றை அரசியல் பழிவாங்கல் என சொல்லி, அதே சட்டமாதிபருக்கு வழக்குகளை வாபஸ் வாங்க அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு, அதன் வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வெளியே வந்து விட்டார்கள்.

இப்போது, அது போதாது என்று, “உங்கள் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து எப்படி ஊழல் திருட்டை விசாரித்தீர்கள்” என இவர்கள் என்னை கேட்கிறார்கள். “நாம் சீக்கிரம் மீண்டும் மிகப்பலமாக வரப்போகிறோம். ஆகவே இந்த விசாரணை கோமாளித்தனங்களை எல்லாம் சீக்கிரம் நடத்தி முடியுங்கள்”, என்று இவர்களுக்கு நான் கூறிவிட்டு வந்தேன்” என்றார்

Posted in Uncategorized

சிறிலங்காவின் ஜெனரல்களை பிரித்தானியாவின் உலகளாவிய மக்னிஸ்கி சட்டத்தின் கீழ் தடைசெய்ய வேண்டிய நேரம்

“ஜொகானஸ்பேர்க்- 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப்போரின் இறுதிப்பகுதியில் நடந்ததாகச் சொல்லப்படும் போர்க் குற்றங்களுக்குப்  பொறுப்பான கட்டளை வழங்கும் அதிகாரத்திலிருந்த சிறிலங்காவின் ஜெனரல்களை உலகளாவிய மக்னிஸ்கி சட்டத்தைப் பயன்படுத்தி ஜக்கிய இராச்சிய அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என பிரித்தானிய தமிழ் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தி வருகின்றன.” என ITJP தெரிவித்துள்ளது.

ITJP  வெளியிட்டுள்ள அறிக்கையை முழுமையாக காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்,

Human-Rights-2018-Tamil

Posted in Uncategorized

இலங்கைக்கு இந்தியா 900 மில்லியன் டொலர்களை வழங்கியது!

இலங்கைக்கு இந்தியா 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்த இந்தியா 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது.

அந்த தொகையுடன் மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

வடக்கு கிழக்கு இணைவதை அனுமதிக்க முடியாது – முஸ்லிம் தரப்பில் இருந்து எதிர்ப்பு

முஸ்லிம்கள் தனியான இனம் என்பதை அடையாளப்படுத்தும் வரை வடக்கு கிழக்கு மாகாணம் இணைவதை அனுமதிக்க முடியாது என்று ஐக்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மௌலவி. முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் இன்றைய தினம் (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே  அவர் இவ்வாறு கூறியிருந்தார்

“ எமது கட்சியின் நிலைப்பாடானது வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து வாழ வேண்டும் என்பதாகும். அதே வேளை சிங்கள மக்களையும் நாங்கள் ஓரங்கட்டிவிட முடியாது என தெரிவித்திருந்தார்.

முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் வாழும் தமிழ் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம். ஆனால் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் கட்சிகள் இனவாத முறையில் செயற்பட்டும், பின்னர் தமிழ் முஸ்லிம் உறவுகளை சந்தர்ப்பத்திற்கேற்ப பயன்படுத்தி வருகின்றது.

இதற்குத் தான் படிப்பது இராமாயணம் இடிப்பது சிவன்கோவில் என்பதை உதாரணமாகக் கூறுவார்கள். அவர்கள் ஒற்றுமையை இந்தச் சமூகத்தில் வலியுறுத்தி பின்னர் குழப்புவார்கள். இதில் தமிழர் முதலமைச்சரா அல்லது முஸ்லிம் முதலமைச்சரா என தமிழ் பேசும் மக்களிடையே உசுப்பேத்தி அரசியல் செய்வதையே நாம் காண்கின்றோம்.

எனவே இவ்வாறான கட்சிகளை மக்கள் நிராகரித்து உண்மைகளை பேசுகின்ற கட்சிகளை ஆதரிக்க முன்வர வேண்டும்.

கல்முனையில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழ முடியாது வேறு வேறு பிரதேச செயலகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் வடக்கு – கிழக்கை இணையுங்கள் எனக் கூறுவது கீழ்த்தனமான அரசியல் செயற்பாடு ஆகும்

ஆகவே வடக்கு கிழக்கில் உள்ள இவ்விரு இனங்களும் பேச வேண்டும். பிரச்சினைகளை அடையாம் கண்டு அவற்றை தீர்ப்பதற்கு முன்வர வேண்டும்” என்றார்.

Posted in Uncategorized

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கை நியாயமானது – சுகாதார அமைச்சருக்கு ரெலோவின் தலைவர் செல்வம் கடிதம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கை நியாயமானது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இவ் விடையம் தொடர்பாக   பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிற்கு  இன்றைய(14)தினம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த  கடிதத்தில்  மேலும் குறிப்பிடுகையில்,
21.12.2021 அன்று ஆரம்பமான அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக குழு
மற்றும் பொதுச் சபையின் அனுசரணையுடன் நாடளாவிய ரீதியில் மருத்துவ தொழிலைப் பாதிக்கும், தீர்க்கப்படாத பிரச்சினைகளை முன்வைத்து மேற்கொள்ளப்படுகின்ற தொழிற்சங்க நடவடிக்கையானது நியாயமானதும் உண்மையானதுமாகும்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன் வைத்துள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகள் வன்னி மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளிலும் காணப்படுகின்ற பிரச்சனையுமாகும்.
 எனவே சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அரச வைத்திய அதிகாரிகள் சங்க பிரதி நிதிகளுடன்
கலந்துரையாடி முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் தீர்க்கமான முடிவை எடுப்பது உகந்தது.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Posted in Uncategorized

இலங்கை விரைவில் தற்காலிக சிரமங்களை சமாளித்து அபிவிருத்தியை முன்னெடுக்கும் -சீனா

இலங்கையானது நிச்சயமாக கூடிய விரைவில் தற்காலிக சிரமங்களை சமாளித்து, புதுப்பிக்கப்பட்ட மற்றும் சிறந்த அபிவிருத்தியை முன்னெடுக்கும் என சீனா தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் நாடு நிச்சயமாக தற்காலிக சிரமங்களை விரைவில் சமாளித்து, பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் என சீன வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அரச சபை உறுப்பினரும் சீன வெளிவிவகார அமைச்சருமான வாங் யீ அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கைத் தலைவர்களுடன் கலந்துரையாடினார் என்றும் அவர் தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் இலங்கைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அரச விஜயமானது இருதரப்பு நட்புறவு ஒத்துழைப்பில் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்ததுடன், தேசிய இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இலங்கைக்கு சீனா உறுதியாக ஆதரவளிக்கிறது எனவும் தெரிவித்தார்.

மேலும் கடன் விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த செய்தித் தொடர்பாளர் வென்பின், இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததில் இருந்து, சீனாவும் இலங்கையும் பரஸ்பரம் புரிந்துணர்வையும் ஆதரவையும் வெளிப்படுத்தி வருகின்றன எனவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு சீனா தனது சக்திக்கு ஏற்றவாறு உதவிகளை வழங்கி வருகின்றது என்றும் மேலும் எதிர்காலத்திலும் அதனைத் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

சிறிலங்காவின் ஜெனரல்களை பிரித்தானியாவின் உலகளாவிய மக்னிஸ்கி சட்டத்தின் கீழ் தடைசெய்ய வேண்டிய நேரம்

“ஜொகானஸ்பேர்க்- 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப்போரின் இறுதிப்பகுதியில் நடந்ததாகச் சொல்லப்படும் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பான கட்டளை வழங்கும் அதிகாரத்திலிருந்த சிறிலங்காவின் ஜெனரல்களை உலகளாவிய மக்னிஸ்கி சட்டத்தைப் பயன்படுத்தி ஜக்கிய இராச்சிய அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என பிரித்தானிய தமிழ் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தி வருகின்றன.” என ITJP தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்களே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் – திஸ்ஸ விதாரண

நாட்டின் பொருளாதார பிரச்சினையின் உண்மை தன்மையை அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். அதன் மூலம் மக்களின் உதவியுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். அத்துடன் பொருளாதார நெருக்கடிக்கு கொவிட் தொற்றுடன் அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்களுமே காரணமாகும்.

அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் என்றவகையில் தீர்மானங்களை மேற்கொள்ளும்போது எம்முடன் எந்த கலந்துரையாடலையும் மேற்கொள்வதில்லை என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் சோசலிச மக்கள் முன்னணியின் புதிய செயலாளருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்துவருகின்றது. அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலை தொடருமானால் எதிர்காலத்தில் உணவு பிரச்சினைக்கும் முகம்கொடுக்க நேரிடும் அபாயம் இருக்கின்றது.

இந்த நிலை ஏற்படுவதற்கு கொவிட் தொற்று பிரதான காரணமாக இருந்தாலும் அரசாங்கம் மேற்கொண்ட திடீர் தீர்மானங்களும் இதற்கு பாரியளவில் தாக்கம் செலுத்தி இருக்கின்றது. குறிப்பாக எமது ஏற்றுமதி 30வீதம் குறைவடைந்துள்ளது.

அதேபோன்று கடந்த மூன்று மாதங்களில் இறக்குமதி செலவு பாரியளவில் அதிகரித்திருக்கின்றது. ஏற்றுமதி குறைவதென்பது எமது வருமானம் குறைவடைவதாகும்.

அத்துடன் நாட்டில் இருக்கும் மொத்த வெளிநாட்டு செலாவனி 1.3பில்லியனாகும். இந்த தொகை எமக்கு ஒரு மாதகாலத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளவே போதுமானது.

அதேபோன்று சர்வதேச தரப்படுத்தல் நிறுவனமான பிட்ச் ரேடிங் நிறுவனம் எமது பொருளாதாரத்தை மூன்று சீ தரத்தில் இருந்து 2 சீ தரத்துக்கு தரமிறக்கி இருக்கின்றது. இன்னும் ஒரு தரம் குறைந்தால் எமது நாடு பங்குராேத்து நிலைக்கு செல்லும்.

அதன் காரணமாக தற்போது பொருட்களை இறக்குமதி செய்ய வங்கிகளில் நாணய கடிதம் திறக்கும் வசதிகளும் இல்லாமல் போயிருக்கின்றது. அதனால் எதிர்காலத்தில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் நிலையே ஏற்படும்.

அத்துடன் இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு நாங்களும் பாரிய அர்ப்பணிப்பை செய்தோம். ஆனால் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்கு பெரும்பான்மை அதிகாரம் கிடைத்த பின்னர் அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கும்போது எம்முடன் எந்த கலந்துரையாடல்களையும் மேற்கொள்வதில்லை.

அரசாங்கம் அமைக்கப்பட்டு இன்றுவரைக்கும் எம்முடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தியதில்லை. நாட்டின் அரசியல் நிலை தொடர்பாக அரண்டுவாரங்களுக்கு ஒருமுறை ஜனாதிபதியுடன் கலந்துரையாட நாங்கள் நேரம் கேட்டிருந்தோம்.

அதற்கு, அரசியல் தொடர்பில் கைப்பதாக இருந்தால் பிரமத் மஹிந்த ராஜபக்ஷ்வுடன் கலந்துரையாடுமாறும் நிதி தொடர்பாக கதைப்பதாக இருந்தால் நிதி அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளுன் கலந்துரையாடுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

மஹிந்த ராஜபக்ஷ் ஜனாதிபதியாக இருந்தபோதும் நாங்கள் அந்த அரசாங்கத்தில் அமைச்சு பொறுப்புக்களை வகித்திருந்தோம். அப்போது அரசியல் நிலைமை தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அவருடன் நாங்கள் கலந்துரையாடி இருக்கின்றோம். அந்த நிலைமை தற்போது இல்லை.

அதனாலே நாங்கள் நாடு எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினைக்கு தீர்வுகாண எமது கருத்துக்கள் மற்றும் ஆலாேசைகளை நாங்கள் ஊடகங்கள் ஊடாக அரசாங்கத்துக்கு அறிவிக்கின்றோம்.

எனவே நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினையின் உண்மை தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. அப்போதுதான் மக்கள் நிலைமையை உணர்ந்து தேவையற்ற செலவுகளை குறைத்துக்கொள்ள முயற்சிப்பார்கள். ஆனால் அவ்வாறான நடவடிக்கையை அரசாங்கத்திடம் காணமுடியாமல் இருக்கின்றது என்றார்.