13ஐ அமுல்படுத்த கோருவது சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை ஒருபோதும் பாதிக்காது: விக்னேஸ்வரன்

I13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்த கோருவது ஒருபோதும் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை பாதிக்காது என்றும் மாறாக உரிமைக்கான போராட்டத்தை பலப்படுத்தும் என்றும் பாராளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் உங்கள் கட்சி முன்வைத்த விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சர்வதேச சமூகத்தினால் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் ஊடாகவே பெறப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால், தற்போது 13 ஆவது திருத்த சட்டத்தின் அடிப்படையில் தீர்வினைப் பெறும் முயற்சிகளை நீங்கள் முன்னெடுத்திருப்பது ஏன்? என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளித்துள்ள பதிலிலேயே விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மிகவும் சுருக்கமாக இந்த கேள்விக்கு நான் பதில் அளிக்கின்றேன். 13 ஆவது திருத்த சட்டத்தை ஒரு தீர்வாக நாம் ஏற்றுக்கொண்டுவிட்டதாக விஷமத்தனமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இது தொடர்பில் நான் முன்னரும் மிகவும் தெளிவாக எனது நிலைப்பாட்டை கூறியிருக்கின்றேன். எங்களுடன் சேர்ந்து பல தமிழ்க் கட்சிகள் அண்மையில் கூடி 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியாவை வலியுறுத்துவதற்கு எடுத்த தீர்மானத்துக்கும் எமது அரசியல் தீர்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏற்கனவே இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இருக்கும் ஒருசில சாதகமான விடயங்களை எமது தற்பாதுகாப்புக்காக பயன்படுத்துவதற்கு முயலும் ஒரு நடவடிக்கையே இது. இதனை நான் தற்போது மட்டும் கூறவில்லை. நான் முதலமைச்சராக இருந்தேபோதே, 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் பொலிஸ் மற்றும் காணி அதிகாரம், முதலமைச்சர் நிதியம் ஆகியவை தரப்படவேண்டும் என்று பல தடவைகள் வலியுறுத்தி இருந்தேன். நில அபகரிப்பு, போரின் பின்னைய வறுமை, சமூக சீர்கேடு, இராணுவ மயமாக்கல் ஆகியன காரணமாக ஆபத்தின் விளிம்பில் இருக்கும் எமது தேசத்தைப் பாதுகாப்பதற்கு சில நடவடிக்கைகளை நாம் அவசரமாக முன்னெடுக்க வேண்டியுள்ளது. “தீர்வு வரும், தீர்வு வரும்” என்று நாம் காலத்தை இழந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் நாம் எமது தேசத்தை இழந்துகொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை. ஆகவே தான் நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வினை நாம் பெற்றுக்கொள்ளும்வரையில் இருப்பவற்றைப் பாதுகாப்பதற்கு ஏற்கனவே சட்டத்தில் இருக்கும் அதிகாரங்களை நாம் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று முயற்சிக்க வேண்டியுள்ளது.

தற்போது எமக்கு நாம் விரும்பும் ஒரு தீர்வினை பெற்றுக்கொள்ளும் காலம் கனிந்துவிட்டதாகவும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் 13 ஆவது திருத்த சட்டத்தை இதனால்த்தான் வலியுறுத்துகின்றோம் என்பதுபோலவும் உண்மைக்கு மாறான கருத்துக்கள் கூறப்பட்டுவருகின்றன. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான கடந்த 12 வருடங்களில் ஒவ்வொரு வருடமும் எமக்குத் தீர்வு வரும் என்ற நம்பிக்கையுடனேயே நாம் வாழ்ந்துவந்திருக்கின்றோம். யுத்தம் முடிவடைந்து மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டபோது அதில் நாம் போட்டியிட்டபோது கடும் எதிர்ப்புக்கள் எமக்கெதிராக முன்வைக்கப்பட்டன. மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது என்பது 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒரு தீர்வாக நாம் ஏற்றுக்கொண்டுவிட்டதாக அர்த்தப்படுத்தப்பட்டுவிடும் என்று சில கட்சிகள் எதிர்ப்புத்தெரிவித்தன. தேர்தலையும் புறக்கணித்தன. ஆனால், உண்மையான நிலைமை அப்படி இருக்கவில்லை. அன்றே, நாம் 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஒற்றுமையுடன் நடவடிக்கை எடுத்து இருந்தால், இன்று மிகவும் பலமான ஒரு நிலையில் இருந்திருப்போம். அந்த நிலையில் நின்று கொண்டு எமது நிரந்தரத் தீர்வுக்காகப் போராடியிருப்போம். இன்று எமது நிலை மிகவும் வருத்தத்திற்குரியதாக மாறியுள்ளது. இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் மாகாண சபைத் தேர்தலைப் புறக்கணித்து வந்துள்ளார்கள். எந்தவகையிலும், 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக் கோருவது எமது சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வுக்கான கோரிக்கையை பாதிக்க முடியாது. ஆகவே, தவறுகளில் இருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

ர்வுக்கான எமது நடவடிக்கைகளும் ஒற்றையாட்சியின் கீழ் 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கான எமது முயற்சிகளும் வெவ்வேறானவை. அவை சாமாந்திரமானவை, ஒருபோதும் ஒன்றுடன் ஒன்று சந்திக்க முடியாதவை. 13 ஆவது திருத்த சட்டத்தின் கீழ் நான் முதலமைச்சராக இருந்திருக்கின்றேன். எமக்கு அமைச்சர்கள் இருந்தார்கள். பல நிறுவனங்கள் இருந்தன. ஆனால், இதற்காக எமது சுய நிர்ணயத்துக்கான கோரிக்கை ஒருபோதும் பாதிக்கப்படவில்லை. மாறாக, எனது பதவியைப் பயன்படுத்தி சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை நான் வலுப்படுத்தி இருக்கின்றேன். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு யாழ்ப்பாணத்தில் பொதுமேடையில் வைத்து நேருக்கு நேராகவே 13 ஆவது திருத்தம் ஒருபோதும் எமக்கு ஒரு தீர்வு அல்ல என்று கூறியிருக்கின்றேன். மாகாண சபை ஆட்சி அமைந்துவிட்டது என்பதற்காக தாயகத்திலும் சரி, புலம்பெயர் நாடுகளிலும் சரி எமது மக்கள் சுயநிர்ணயத்துக்கான கோரிக்கையையோ நடவடிக்கைகளையோ கைவிடவில்லை. 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டாலும் நிலைமை அதுதான்.

நாம் சட்டப் புத்தகத்தில் இருக்கும் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக் கோருவது நாளுக்கு நாள் எமது நிலைமை மோசமாகிக் கொண்டு வருவதைத் தடுக்கவே.

தமிழ் மக்களுக்கான நிறைந்த இறுதித் தீர்வு சர்வதேச சமூகத்தினால் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் ஊடாகவே நடைபெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. தமிழ் கட்சிகள் காலம் காலமாக சமஷ்டியை ஒரு தீர்வாக வலியுறுத்தி வருகின்றன. கூட்டு சமஷ்டியே நிரந்த தீர்வாக அமைய முடியும் என்பது எமது கூட்டணியின் நிலைப்பாடு. இதனை நாம் தீர்மானிக்க முடியாது. எமது மக்களே தீர்மானிக்க வேண்டும். அதனால்த்தான் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு நாம் கோரிக்கை முன்வைத்திருக்கின்றோம். இதனை இந்தியாவிடமும் நாம் வலியுறுத்தி உள்ளோம். மீண்டும் வலியுறுத்துவோம். ஆனால், சர்வஜன வாக்கெடுப்பு இன்று நடக்கும் , நாளை நடக்கும் என்று எதிர்பார்த்திருந்து எமது நிலத்தையும் மக்களையும் நாம் இழந்துவிடக்கூடாது. ஒவ்வொருநாளும் எமது நிலம் பறிபோகின்றது. பெருமளவில் எமது மக்கள் வெளியேறுகின்றார்கள். ஆகவேதான் ஏற்கனவே இருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி சில வலுவூட்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளோம்.

இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில், தமிழ்த் தேசத்தை இல்லாமல் செய்வதற்கான பாரிய திட்டங்களை அவர்கள் பல காலத்திற்கு முன்பிருந்தே வகுத்திருக்கின்றார்கள். தமது திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அவர்களின் மிக சிறந்த உத்தி, காலத்தைக் கடத்துவதுதான். காலங் கடத்தி சிறிது சிறிதாக வடகிழக்கை ஆக்கிரமிப்பதே அவர்களின் குறிக்கோள். கடந்த 12 வருடங்களில் சிறிய அதிகாரத்தைக் கூட எமக்கு வழங்காமல் காலத்தை இழுத்தடிப்பு செய்ததன் மூலமே எம்மை அவர்கள் பலவீனப்படுத்தி இருக்கின்றார்கள். வடக்கையும் கிழக்கினையும் புவியியல் ரீதியாகப் பிரிப்பதற்கும், முல்லைத்தீவை ஒரு அம்பாறை ஆக்குவதற்கும் அவர்களுக்கு இன்னமும் சிறிது காலம் மட்டுமே தேவைப்படுகின்றது. தமிழ் மக்கள் தம்மை தாமே பாதுகாப்பதற்கான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள விடாமல் எவ்வளவுக்கு எவ்வளவு காலத்தை இழுத்தடிக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு தமிழ்த் தேசத்தை நிர்மூலம் செய்ய முடியும் என்பது அவர்களின் கணிப்பு. அதுதான் உண்மையும் கூட. புள்ளிவிபரங்கள் அதைத் தான் எடுத்துக் காட்டுகின்றன.
நாம் கோரிக்கை விடுவதால் இலங்கை அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கு இலகுவில் உடன்படப்போவதில்லை. ஆனால், இதனை அமுல்ப்படுத்துவதற்கு இலங்கையை நிர்ப்பந்திப்பதற்கான தகுதியும், உரிமையும், கடமையும் இந்தியாவுக்கு இருக்கின்றது. இந்தியாவிடம் நாம் இந்தக் கோரிக்கையை எந்தவிதமான கால வரையறையும் இன்றி திறந்ததாக (ழிநn) விடுக்கவில்லை. தமிழ்ப் பேசும் மக்களுக்கு இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமையினை தீவிரமாக கவனத்தில் எடுத்து, மிக விரைவாக 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
இந்த இடத்தில் எமது முஸ்லிம் சகோதரர்கள் பற்றியும் மலையகச் சகோதரர்கள் பற்றியும் ஒரு சில வாசகங்களை உள்ளடக்குவது உசிதம் என்று எனக்குப்படுகிறது. வடகிழக்கு முஸ்லிம் தலைவர்கள் சிலர் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் அது முஸ்லிம் மக்களுக்கு பாதகம் விளைவிக்கக் கூடும் என்று எண்ணுகின்றார்கள். இது தவறு. வடகிழக்கு முஸ்லிம் மக்கள் சிந்திக்க வேண்டிய ஒரேயொரு விடயம் தமது முஸ்லிம் அலகு தமிழ்ப் பேசும் பிரதேசமாக வடகிழக்கினுள் இருக்க வேண்டுமா அல்லது சிங்கள பெரும்பான்மையினர் வசம் இருக்க வேண்டுமா என்பது. சிங்களப் பெரும்பான்மையினர் வசம் சென்றால் தமக்கு என்ன நடக்கும் என்பதை முஸ்லிம் சகோதரர்கள் கடந்த சில வருடங்களுக்குள் உணர்ந்திருப்பார்கள். வடகிழக்கில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களை ஒன்று சேர்த்து சமஷ்டி முறையிலான முஸ்லீம் அலகின் கீழ்க் கொண்டு வருவது சிரமமல்ல. அதே போன்று மலையகத் தமிழ் மக்களும் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களை ஒன்று சேர்த்து சமஷ்டி முறையிலான மலையக தமிழர் அலகை ஸ்தாபிப்பது சிரமமல்ல. ஆனால் கிழக்கு மாகாண முஸ்லிம் சகோதரர்கள் சிங்கள அலகினுள் சென்றால் காலக்கிரமத்தில் தமிழ் மொழியானது அவர்களிடையே அழிந்து போகும். இஸ்லாம் மதமும் வெகுவாகப் பாதிக்கப்படும். இவற்றையெல்லாம் முஸ்லீம் தலைவர்களும் விடுதலைப் புலிகளும் கருத்துப் பரிமாறிய பின்னரே அவர்களுக்குள் ஒரு உடன்பாடு முன்னர் ஏற்பட்டது. எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு இஸ்லாமிய மக்கட் தலைவர்களும் மலையக மக்கட் தலைவர்களும் எம்முடன் சேர்ந்து ஒருவர்க்கொருவர் பலமாக இருப்பதே தற்போதைய அவசரமான தேவையாகும்.

தமிழ்க் கட்சிகளின் நகர்வும் கோட்டபாயவின் நிலைப்பாடும் – அகிலன்

தமிழ்க் கட்சிகளின் நகர்வு: உடன்பாடு எட்டப்படுமா என்ற கேள்வி இறுதிவரையில் தொடர்ந்த நிலையில் தமிழ், முஸ்லிம் கட்சிகளிடையிலான சந்திப்பில் முக்கியமான திருப்பம் ஏற்பட்டிருக்கின்றது. கொழும்பில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற 11 கட்சிகளின் தலைவர்களுடைய சந்திப்பில் எட்டப்பட்ட உடன்படிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என வர்ணிக்கப் பட்டிருக்கின்றது.

எதிர்பார்க்கப்பட்டதைப் போல கடுமையான வாக்குவாதம் தொடர்ந்தது. இருந்த போதிலும், இறுதியில் தமிழரசுக் கட்சியால் கொண்டுவரப்பட்ட சில திருத்தங்களையும் உள்ளடக்கியதாக புதிய ஆவணம் ஒன்றைத் தயாரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருக்கின்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிஇதில் பெரும்பாலும் எதிர்வரும் 29 ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கைச்சாத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 11 கட்சித் தலைவர்களினதும் சம்மதத்துடன், வரைவு தற்போது இறுதியாக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. எதிர்வரும் புதன்கிழமை இது கைச்சாத்திடப்பட்ட பின்னர் வார இறுதியில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் மூலமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இது அனுப்பி வைக்கப்படும்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது, மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைந்து நடத்துவது என்பவற்றை உள்ளடக்கிய கோரிக்கைகளுடனான ஆவணத்தை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு கூட்டாக அனுப்பி வைப்பதை நோக்கமாகக் கொண்டே ரெலோ அமைப்பினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் நவம்பர் முதல்வாரத்தில் இடம்பெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாக இரண்டாவது சந்திப்பு இம்மாத முற்பகுதியில் கொழும்பில் இடம்பெற்றது. செவ்வாய்கிழமை மூன்றாவது சந்திப்பு இடம்பெற்றது. ரெலோ அமைப்பின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட ஆவணம் இதில் இறுதியாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தமிழரசுக் கட்சி தனியாக மற்றொரு ஆவணத்தை முன்வைத்ததையடுத்து முரண்பாடுகள் உருவாகியது.

இறுதியில் இரண்டு ஆவணங்களையும் பரிசீலித்து இரண்டில் உள்ளவைகளையும் உள்ளடக்கியதாக புதிய ஆவணம் ஒன்றைத் தயாரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. ‘ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தை 30 வருடங்களின் பின்னர் மீண்டும் கேட்பதா?’ என முன்வைக்கப்பட்ட கேள்விகளையடுத்தே இந்த மாற்றம் செய்யப்படுகின்றது. இவ்வாறான மாற்றம் ஒன்று செய்யப்பட வேண்டும் என்பதை தமிழரசுக் கட்சியே வலியுறுத்தியது.

தமிழ்க் கட்சிகளின் நகர்வு’13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கோருதல்’ என்பதே ஆவணத்தின் தலைப்பாக முன்னர் இருந்தது. தற்போது அது, ‘தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதும் இலங்கை – இந்திய ஒப்பந்தமும்’ என மாற்றப்பட்டுள்ளது. புதிய வரைவு தயாரிக்கப்படும் போது அதன் நோக்கம் உள்ளடக்கம் என்பன மாற்றப்பட்டே புதிய ஆவணம் தயார்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆவணமும் தற்போது ஒரு வரைவாகவே இருக்கின்றது. இந்த வரைவை கட்சிகள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அது கைச்சாத்திடப்படும் என இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

செவ்வாய்கிழமை சந்திப்பில் உருவான முரண்பாடுகளையடுத்து புதிய ஆவணம் ஒன்றைத் தயாரிப்பதற்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. சிறிகாந்தா, சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகிய மூவரும் இன்றைய தினம் இரவே வரைவை இறுதியாக்கி, கட்சிகளின தலைவர்களுடைய பரிசீலனைக்காக இதனை அனுப்பிவைத்தார்கள்.

அந்தக் குழுவினால் தயாரிக்கப்பட்ட வரைவு தற்போது கட்சித் தலைவர்களின் இறுதிக்கட்ட பரிசீலனையில் உள்ளது. மேலும் திருத்தங்கள் இல்லையெனில வரும் புதன்கிழமை கட்சித் தலைவர்கள் இதில் கைச்சாத்திடுவார்கள் எனவும், அடுத்த ஒரு – இரு தினங்களில் இது இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

‘தமிழ்க் கட்சிகள் தமது கோரிக்கை என்ன என்பதை திட்டவட்டமாகத் தெரியப்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறு தெரியப்படுத்தினால் மட்டுமே இவ்விடயத்தில் தம்மால் தலையிட்டு, கொழும்புக்கு அழுத்தத்தைக் கொடுக்க முடியும்’ எனவும் இந்தியத் தரப்பினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்தே பொதுவான கோரிக்கை ஒன்றை முன்வைப்பதற்காக தமிழ், முஸ்லிம் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை ரெலோ முன்னெடுத்திருந்தது. ரெலோவின் முன்னெடுப்பில் தாமும் பின்னால் செல்வதா என்ற கௌரவப் பிரச்சினை தமிழரசுக்கு. அதனால், முன்னைய கூட்டங்களில் கலந்து கொள்ளாவிட்டாலும், சில திருத்தங்களுடன் தமிழரசுக் கட்சி நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றது.

புதிய அரசியலமைப்பு ஒன்றைக்கொண்டுவருவதன் மூலம் அதிகாரப் பரவலாக்கலையும், மாகாண சபைகளையும் இல்லாதொழிப்பதற்கான திட்டத்துடன் கோட்டாபய ராஜபக்ச அரசு செயற்பட்டுவரும் நிலையில், இந்தியாவை அவசரமாக தலையிடச் செய்வதற்கான முயற்சிதான் இது.

13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் ஏற்கனவே இருக்கின்றது என்ற நிலையிலும், அது இலங்கை – இந்திய உடன்படிக்கை மூலமாகக் கொண்டுவரப்பட்டது என்ற முறையிலும், இவ்விடயத்தில் தலையிடுவதற்கான உரிமை இந்தியாவுக்கு இருக்கின்றது என்ற நிலையில்தான் இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கை – இந்திய உடன்படிக்கைஇந்தியாவைப் பொறுத்தவரையிலும், இலங்கை விவகாரத்தில் தலையிடுவதற்கான சந்தர்ப்பம் ஒன்றை அது எதிர்பார்த்திருந்தது. இலங்கை – இந்திய உடன்படிக்கையைப் பயன்படுத்தி இவ்விடயத்தில் தலையிடுவது, சட்டரீதியான ஒன்றாக அமையும் என புதுடில்லியும் கருதுவதாகத் தெரிகின்றது.

தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரையில் இந்த முயற்சியில் பல தடைகளை அவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குறிப்பாக தமிழரசுக் கட்சியின் மேலாதிக்க மனப்பான்மையால் ஏற்படுத்தப்பட்ட தடைகளைத் தாண்டிச் செல்லவேண்டியிருந்தது. அதேபோல, 13 க்குள் தீர்வை முடக்கும் சதி எனவும், இந்தியாவிடம் மண்டியிடும் நிலை எனவும் இந்த முயற்சி விமர்சிக்கப்பட்டது. ஆனால், தமிழ்க் கட்சிகளின் சார்பில் அதற்குத் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டது.

11 தமிழ் முஸ்லிம் மலையக கட்சிகள் இணைந்திருப்பது வரலாற்றில் இதுதான் முதல்முறை என்பதால் இது முக்கியத்துவம் பெறுகின்றது. இவர்கள் அனுப்பிவைக்கப் போகும் கடிதம் இந்தியாவின் அணுகுமுறையை மாற்றியமைக்குமா?

பொருளாதார நெருக்கடி- கிளர்ச்சிவெடிக்கலாம்- ரணில் எச்சரிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் கிளர்ந்தெழக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் தெரிவித்து்ள்ளார்.

இந்நிலையில் நாட்டில் ஏற்படக்கூடிய நிலைமைகளை தவிர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் உடனடியாக சென்று உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஏற்றுக்கொள்ளக் கூடிய மாற்றுவழியை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் டொலர் பற்றாக்குறை கடுமையான நெருக்கடி நிலைமைக்கு வந்துள்ளது. இதன் சுமை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு உள்ளது. குறிப்பாக வியாபாரங்கள் வீழ்ச்சி அடைகின்றன. வேலைவாய்ப்புக்கள் இழக்கப்படுகின்றன. விவசாயிகள் கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இவற்றுக்கு உடனடித் தீர்வு அவசியமாகும். கோவிட் தொற்று நெருக்கடி இருந்தாலும் 2021ம் ஆண்டில் சில நாடுகள் பொருளாதார முன்நேற்றத்தை காண்பித்துள்ளன. இதன்படி, இலங்கையும் இந்த பிரச்சினையை நீக்க வேண்டும். இதனால் சர்வதேச நாணய நிதியத்திற்கு உடனடியாக சென்று நிதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையின் மொத்தக் கடனையும் நான் அடைக்கிறேன்! ஏற்றுக்கொள்ளுமா ஐக்கிய நாடுகள் சபை? போராட்டத்தில் இறங்கிய தனிநபர்

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்ளுமா? எனத் தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

வவுனியா நகர மணிக்கோபுர சந்தியில் நின்று குறித்த நபர் இன்று (29.12) போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். இதன்போது, இலங்கை தேசியக் கொடியை ஏந்தியிருந்ததுடன் ‘இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார்.

இதை ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா?, எங்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுமா? இதற்கு மக்கள் நாம் ஒன்றுபடுவோம் ‘ என எழுதப்பட்ட சுலோக அட்டையையும் ஏந்தியிருந்தார்.

குறித்த தனிநபரின் கவனயீர்ப்பு போராட்டத்தால் மணிக்கூட்டு கோபுர சந்தியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பொலிஸார் அறிவுறுத்தியதையடுத்து, பழைய பேருந்து நிலையம் முன்பாக சென்று சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அதன் பின் அங்கிருந்து குறித்த நபர் சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வர்த்தமானியை இரத்துச் செய்க! நீதி அமைச்சர் பிறப்பித்த உத்தரவு

ஆபாசமான வகையில் கருத்துக்களை வெளியிடுவதை தடை செய்வது தொடர்பில் தயாரிக்கப்பட்ட சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி பணிப்புரை விடுத்துள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே.மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அந்த அறிக்கையில்,

சிறு வயது பிள்ளைகளின் நலன்கள் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் பெண்கள் உள்ளிட்டோரின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டே இந்த சட்டம் அறிமுக்கப்படுத்தப்பட்டதே தவிர கருத்து சுதந்திரத்தை முடக்குவதற்காக அல்ல.

இந் விடயம் குறித்து சிவில் அமைப்புக்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், குற்றவியல் சட்டங்கள் மறுசீரமைப்பு தொடர்பான உப குழு மற்றும் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்படுவோரது நிலைப்பாடுகள் கோரப்பட்டுள்ளது.

அவற்றை உள்ளடக்கிய திருத்தங்களுடன் குறித்த சட்ட மூலத்தை மீள சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அண்மையில் வௌவேறு தரப்பினரால் மாறுபட்ட நிலைப்பாடுகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே மேற்கூறப்பட்டவாறு திருத்தங்களை உள்ளடக்கிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் வரை, ஏற்கனவே இது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு நீதி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பசில் பிரதமரானாலும் அதனை செய்ய முடியாது – திகா

தற்போதைய உள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்டாலும் நாட்டை பாதாள குழியில் இருந்து மீட்டெடுப்பது என்பது கடினமான விடயமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து கெண்டு செல்லுகிறது. எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள், பெற்றோல், டிசல் போன்றவற்றுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் நாட்டு மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றனர்.

வாக்களித்த பெரும்பான்மை மக்கள் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு தயாராக இருக்கிறார்கள்.

இந்த அரசாங்கம் மலையகத்திற்கும் மலையக மக்களுக்கும் எவ்வித அபிவிருத்திகளையும் செய்யவில்லை. கடந்த அரசாங்கத்தில் எங்களால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் மாத்திரம் உள்ளது. எம்மால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தினை தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் திறப்பு விழா செய்து வருகிறார்கள். பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் என்பது ஒன்று தேவையில்லை. காலி, மாத்தறை போன்ற பகுதியில் உள்ள பெரும்பான்மை மக்கள் எவ்வாறு சிறுந்தோட்ட உரிமையாளர்களாக இருக்கின்றார்களோ அதேபோல் மலையகத்தில் உள்ளவர்களும் சிறுதோட்ட உரிமையாளர்களாக ஆக்கப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம்.

தொழிலாளர்களுடைய பிரச்சினைக்கு இதுதான் தீர்வு இதனை விட்டு நாம் கம்பனிகாரர்களிடம் சென்று மண்டியிட தேவையில்லை.

வருகின்ற ஆட்சி என்பது சஜித் பிரேமதாச தலைமையிலான் ஆட்சியே இடம்பெறும். அதன் போது எமது மலையக மக்களுக்கு சிறந்த அபிவிருத்தி திட்டங்களை எம்மால் முன்னெடுத்து செல்ல முடியும். நாட்டில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்தால் மாத்திரமே அரசாங்கத்தை கவிழ்க்க முடியும். அதேபோல் இம் முறையும் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றாக இணைந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்வோம்.

13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவதென்றால் தமிழ் கட்சிகளின் கூட்டணியின் உடன்படிக்கையில் என்னால் கைச்சாத்திட முடியும். அதனை மீறி செயற்பட்டால் நாம் கைச்சாத்திட மாட்டோம். சேதன பசளை என்பது கட்டம் கட்டமாக செய்யப்படவேண்டிய ஒரு விடயம். இன்று நாட்டில் விவசாய துறை தேயிலை துறை, போன்ற துறைகள் பசளை இன்மையால் பாரிய பிரச்சினையினை எதிர்நோக்கியுள்ளார்கள் அதேபோல் உரத்தினை வழங்கினால் மாத்திரமே தேயிலை தோட்டங்களை பராமரிக்க முடியும் எமது அரசாங்கத்தில் இருந்த இராஜாங்க அமைச்சர் ஊடாகவே உதவி ஆசிரியர்கள் நியமனத்தை பெற்று கொடுத்தோம். இதனை வைத்து கொண்டு எவரும் அரசியல் செய்ய முடியாது என குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதி

அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுல்தான் அப்துல்ரஹ்மான் அல்-மர்ஷாட் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இன்று (29) முற்பகல் அலரி மாளிகையில் சந்தித்தார்.

இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்துவதற்கு சவுதி அராபிய அரசாங்கம் மற்றும் அபிவிருத்திக்கான சவுதி நிதியம் வழங்கிவரும் நெருக்கமான ஒத்துழைப்பை நினைவுகூர்ந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , இருநாட்டு அரசாங்கங்களுக்கும் இடையே தொடர்ச்சியாக காணப்படும் ஒத்துழைப்பிற்கும், நட்பிற்கும் தனது நன்றியையும் தெரிவித்தார்.

அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் ஆதரவுடன் இந்நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகள் 1981ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. அன்று முதல் கடந்த நான்கு தசாப்த காலங்களாக இந்நாட்டின் பல அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்நிதியம் பங்களிப்பு செய்துள்ளது.

குளியாபிடிய வயம்ப பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டமும் அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் கடனுதவியின் கீழ் கடந்த 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமர் இணைய தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டிருந்தார்.

நேற்றைய தினம் திறந்துவைக்கப்பட்ட பிபில முதல் செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி திட்டமும் அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் நிதியுதவியின் கீழ் செயற்படுத்தப்பட்ட திட்டமாகும்.

குளியாபிடிய மற்றும் செங்கலடியில் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகளிலும் அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்கால முன்னுரிமை குறித்து கவனம் செலுத்துகையில் குறிப்பாக கிராமிய பிரதேசங்களின் சிறு நீர்ப்பாசனம், கிராமிய நீர் வழங்கல் மற்றும் எதிர்கால வீதி அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் பிரதிநிதிகளிடம் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

Posted in Uncategorized

திருமண சுதந்திரத்தில் தலையிடுவது முட்டாள்தனம்

இலங்கைப் பிரஜை ஒருவர் வெளிநாட்டவரைத் திருமணம் செய்வதற்குப் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் எனப் பதிவாளர் நாயகம் விடுத்துள்ள சுற்றறிக்கை, நாட்டுப் பிரஜைகளின் சுதந்திரத்தைப் பாதிக்கும் அரசின் முட்டாள்தனமான நடவடிக்கை என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டினார்.

நாகரிகமான அரசிடம் இருந்து இப்படி ஒரு விடயத்தை எதிர்பார்க்கவே முடியாது. இத்தகைய ஒழுக்கக்கேடான கட்டுப்பாடுகள் சர்வாதிகார ஆட்சிகளில் மட்டுமே காண முடியும். இது அரசமைப்பின் மூலம் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை அப்பட்டமாக மீறும் நடவடிக்கையாகும்.

வெளிநாட்டினரை அரசில் சேர்ப்பதற்காக நாட்டின் அரசமைப்பைக் கூட திருத்தியமைக்கும் வகையில் தமது அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்திய ஆட்சியாளர்களின் இந்த முடிவு நெறிமுறையற்றதாகும். எனவே, வெளியுலகில் இலங்கை யைக் கேலிக்கூத்தாக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகை ஆசிரியர்களை புறக்கணித்த கோட்டாபய

அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு அரசதலைவர் கோட்டாபய ராஜபக்சவால்  அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளிவந்துள்ளன.

அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச நேற்று பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்கு, சில பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

குறிப்பாக அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகைகளின் ஆசிரியர்களே இவ்வாறு அழைக்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அரசதலைவரின் ஊடகப் பிரிவில் இருக்கும் சிலர், திட்டமிட்டே இவ்வாறு அழைக்காமல் புறக்கணித்துள்ளனர்.

யாழ். பல்கலை மாணவர்களுக்கெதிரான குற்றப்பத்திரிகை தாக்கல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் 2019 மே 03ஆம் திகதி இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் உள்ள சான்றுப்பொருள்களை பாரப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு மே 3ஆம் திகதி இராணுவத்தினர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திலும், விடுதிகளிலும் பெருமெடுப்பில் சோதனைகளை முன்னெடுத்தனர். நூற்றுக்கணக்கான படையினர் இந்த தேடுதலில் ஈடுபட்டனர்.

இந்த தேடுதலின் போது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறையில் இருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படம் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பான சில பதாதைகள், உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இராணுவ அதிகாரியால் எழுத்து மூல ஆவணம் ஒன்று பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அன்றைய தினம் முன்னிரவு யாழ்ப்பாணம் நீதிவானின் இல்லத்தில் மாணவர்கள் இருவரும் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

மாணவர்கள் இருவர் மீதும் பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் உப விதிகளின் கீழான ஏற்பாடு மற்றும் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பட்டயம் ஆகிய நான்கு ஏற்பாடுகளின் கீழ் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதனால் மாணவர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யும் விண்ணப்பத்தை நிராகரித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய கட்டளை மீது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

நான்கு குற்றச்சாட்டுகளில் மேன்முறையீட்டு நீதிமன்றால் மட்டும் பிணை வழங்கக் கூடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டை மீளப்பெறுமாறு கோப்பாய் பொலிஸாருக்கு சட்ட மா அதிபரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் 13 நாள்களின் பின்னர் மே 16ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சுமார் 30 மாதங்களின் பின்னர் யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் 2019 மே 3ஆம் திகதி நடத்திய தேடுதலில் மருத்துவபீட சிற்றுண்டிச்சாலையில் திலீபனின் ஒளிப்படம் ஒட்டப்பட்டிருந்தமையை அடுத்து சிற்றுண்டிச்சாலை நடத்துனர் கைது செய்யப்பட்டார். அவர் 12 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் மீதான வழக்கு பொலிஸாரினால் மீளப்பெறப்பட்டது.

Posted in Uncategorized