Category: பிரதான செய்திகள்
உள்ளகப் பொறிமுறையினூடான பிரச்சினைத் தீர்வுக்கு பேச்சுக்கு வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை, மிகவும் நேர்மறையான முறையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்குமென்று, அதன் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் (Antonio Guterres), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.
நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைத் தலைமையகத்தில், நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஜனாதிபதிக்கும் ஐ.நா பொதுச் செயலாளருக்கும் இடையிலான விசேட சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐ.நா தலைமையகத்துக்குப் பிரவேசித்த ஜனாதிபதியை அன்புடன் வரவேற்ற குட்டரெஸ், 1978ஆம் ஆண்டில், சர்வதேச நாடாளுமன்றச் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்குத் தான் விஜயம் செய்திருந்ததையும் கண்டி, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களுக்குச் சுற்றுலா சென்றதையும், அதன்போதான அழகான நினைவுகளையும் ஞாபகப்படுத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையாளராக, இலங்கை தொடர்பில் தான் பணியாற்றியமை மற்றும் 2006ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவினை சந்தித்தமை குறித்தும், குட்டரெஸ் நினைவுபடுத்தினார்.
சுமார் 30 ஆண்டுகள் நிலவிய யுத்தம் காரணமாக, மிகவும் சிக்கலான நிலைமைக்கு விழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், இந்து சமுத்திர வலயத்தில், மாபெரும் சமூக மற்றும் பொருளாதாரப் பணிகளை நிறைவேற்றும் இலங்கையிடமிருந்து, தொடர்ந்தும் அப்பணியை எதிர்பார்ப்பதாக, பொதுச் செயலாளர் எடுத்துரைத்தார்.
ஐ.நா பொதுச் செயலாளருடன் கலந்துரையாடக் கிடைத்தமையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சிறிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இலங்கை போன்ற நாடொன்று, கொரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தியில் முகங்கொடுத்துள்ள சவால்கள் தொடர்பில், ஜனாதிபதி ராஜபக்ஷ, ஐ.நா பொதுச் செயலாளருக்கு எடுத்துரைத்தார்.
கொரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தியில், இலங்கையின் கல்வி மற்றும் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் தீர்க்கமான முறையில் எடுத்துரைத்த ஜனாதிபதி, தொற்றுப்பரவலை வெற்றிகரமாக எதிர்கொள்ள, உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கி வரும் ஒத்துழைப்புக்கும், பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இதுவரையில், இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நவம்பர் மாத இறுதிக்குள், 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள என, தரவுகளுடன் எடுத்துரைத்தார்.
இதன்போது, தடுப்பூசி ஏற்றலில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்துக்கு, பொதுச் செயலாளர், தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகத் தெரிவான தான், பொதுமக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை அவ்வாறே நிறைவேற்றுவதில், கொரோனா தொற்றுப் பரவலானது பெரும் தடையாக இருக்கின்றதெனத் தெரிவித்த ஜனாதிபதி, இருப்பினும், 30 வருட காலமாக நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததன் பின்னர் ஏற்பட்ட இடைநிலைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாகத் தெளிவுபடுத்தினார்.
பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்கல், காணிகளை மீளக் கையளித்தல் மற்றும் 2009ஆம் ஆண்டில், மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட பாரிய அபிவிருத்திகள் மற்றும் வடக்கு மாகாண சபைக்கான உறுப்பினர்களை, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுப்பதற்காக ஏற்படுத்திக்கொடுத்த வாய்ப்பு தொடர்பிலும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
காணாமற்போனோர் தொடர்பில், அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதாகவும் மரணச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும், பொதுச் செயலாளரிளிடம், ஜனாதிபதி தெரிவித்தார்.
பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்களில் பலரை, தான் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் விடுவித்துள்ளதாக எடுத்துரைத்த ஜனாதிபதி, அவ்வாறு விடுவிக்க முடியாத ஏனையோர் தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் நீண்ட காலமாகத் தடுப்பிலுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான சட்டச் செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர், நீண்ட காலம் தடுப்பில் இருந்ததைக் கருத்திற்கொண்டு, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் அவர்களை விடுவிப்பதற்குத் தான் தயங்கப் போவதில்லை என்றும், பொதுச் செயலாளரிடம் தெரிவித்தார்.
இலங்கைக்குள் மிகவும் பலமான முறையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே தன்னுடைய இலக்கு என்றும் அதன்படி, போராட்டக்காரர்கள் மீது முன்னரைப் போன்று தடியடி, நீர்த்தாரைத் தாக்குதல் போன்றவற்றை நடத்த, தன்னுடைய ஆட்சியின் கீழ் ஒருபோதும் அனுமதியில்லை என்றும் போராட்டக்காரர்களுக்கென்றே, தன்னுடைய அலுவலகத்துக்கு முன்னால் தனி இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளதென்றும், ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டுக்குள் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, சிவில் அமைப்புகளுடன் இணைந்து தான் செயற்படும் விதம் தொடர்பிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவுபடுத்தினார்.
இலங்கையின் உள்ளகப் பிரச்சினைகள், நாட்டுக்குள்ளேயே உள்ளகப் பொறிமுறையினூடாகத் தீர்க்கப்பட வேண்டுமென்றும் அதற்காக, புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தைக்குத் தான் அழைப்பு விடுப்பதாகவும், ஜனாதிபதி தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையுடன், எப்போதும் மிக நெருக்கமாகப் பணியாற்றத் தயாரென மீண்டுமொருமுறை எடுத்துரைத்த ஜனாதிபதி, நாட்டுக்குள் மீண்டும் பிரிவினைவாதம் ஏற்படப்போவதில்லை என்பதைத் தன்னால் உறுதிப்படத் தெரிவிக்க முடியுமென்ற போதிலும், மதவாதத் தீவிரவாதம் தொடர்பில், அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கை போன்று ஏனைய நாடுகளும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.
கொழும்பு நகரின் முக்கிய 03 காணிகளை 99 வருட குத்தகைக்கு வழங்கத் திட்டம்
கொழும்பு நகரிலுள்ள மேலும் பெறுமதிமிக்க 03 காணிகளை 99 வருட குத்தகை அடிப்படையில் முதலீட்டு திட்டங்களுக்கு வழங்குவதற்கான விளம்பரங்கள் பத்திரிகைகளில் வௌியிடப்பட்டிருந்தன.
நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் இந்த விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
கலப்பு அபிவிருத்தி திட்டத்திற்காக கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள 03 காணிகளை வழங்குவதற்கு இதன்மூலம் விலைமனு கோரப்பட்டுள்ளது.
விளம்பரத்தின் படி,
கொழும்பு – 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தையின் இலக்கம் 12 இலுள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மத்திய நிலையம்
இலக்கம் 38 இலுள்ள மக்கள் வங்கி கிளை
இலக்கம் 40 இலுள்ள சதொச கட்டடத் தொகுதி என்பன இந்த திட்டத்திற்காக முன்மொழியப்பட்டுள்ளன.
இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மத்திய நிலையம் அமைந்துள்ள காணியின் பெறுமதி 3.7 பில்லியன் ரூபாவாகும்.
மக்கள் வங்கியின் கிளை அமைந்துள்ள காணியின் பெறுமதி 1.3 பில்லியன் ரூபா எனவும் சதொச கட்டடத் தொகுதி அமைந்துள்ள காணியின் பெறுமதி 1.6 பில்லியன் ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காணிகளில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களுக்கான யோசனைகளை முன்வைப்பதற்கு ஒரு மாதம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, செலந்திவ முதலீட்டு திட்டத்தினூடாகவும் வௌிவிவகார அமைச்சு அமைந்துள்ள கட்டடத் தொகுதி, ஹில்டன் மற்றும் க்றேண்ட் ஒரியன்ட் ஹோட்டல்கள் உள்ளிட்ட கொழும்பு நகரின் பெறுமதியான பல சொத்துக்களை முதலீட்டு திட்டங்களுக்கு வழங்குவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி செய்தி ; பால் மா, கோதுமை மா, சீமெந்து விலைகள் அதிகரிக்கலாம்!
பால் மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை எதிர்வரும் தினங்களில் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் விலை குழுவினால் நடத்தப்பட்ட கண்காணிப்பின் பிரகாரம், வாழ்க்கைச் செலவுக் குழுவின் அனுமதியுடன் இந்த பொருட்களுக்கான விலையை அதிகரிக்க நேரிடும் என அவர் கூறியுள்ளார். இந்த பொருட்களுக்கான விலை, சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ள பின்னணியில், குறித்த பொருட்களுக்கான விலையை அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கடந்த 6 மாத காலமாக கோரியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தாம் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில், வாழ்க்கை செலவுக் குழுவின் இறுதி அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், குறித்த பொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். இலங்கையில் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 940 ரூபாவாக இருக்கும் போது, சர்வதேச சந்தையில் ஒரு மெற்றிக் தொன் பால் மாவின் விலை 3070 டொலராக காணப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அதே பால் மா ஒரு மெற்றிக் தொன்னின் தற்போதைய விலை 3700 டொலர் என அவர் குறிப்பிட்டார். இதனால், எதிர்வரும் தினங்களில் குறித்த மூன்று பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படுவதற்கான சாத்தியம் எழுந்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை அண்மையில் பிறிமா நிறுவனம் ஒரு கிலோ கோதுமை மாவுககான விலையயை 12 ரூபாவால் அதிகரித்தமையும் சிமெந்து பைக்கற் ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ளது – முருந்தெட்டுவே ஆனந்த தேரர்
அரசியல் அழுத்தம் எல்லையை மீறியுள்ளதால் சுயாதீன நிறுவனங்களிலும், கூட்டுத்தாபனங்களிலும் நிறுவன பிரதானிகள் பதவி விலகுகின்றனர் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்தின் செயற்பாடு சிறுபிள்ளைத் தனமாக உள்ளது. 2024 ஆம் ஆண்டு வரை அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நாடு மீள வேண்டும் என்பதற்காகவே 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முன்னின்று செயற்பட்டோம்.
மக்களும் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் இன்று அனைவரின் எதிர்பார்ப்பும் பொய்யாக்கப்பட்டுள்ளது. தவறை திருத்திக் கொண்டு அரசாங்கம் சிறந்த முறையில் செயற்பட வேண்டும் என ஆலோசனை வழங்கினோம்.
எமது ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை. தற்போது கடுமையாக விமர்சிக்கிறோம் அதனையும் அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. ஆகவே இனி செய்வதற்கு ஒன்றுமில்லை. 2024 ஆம் ஆண்டு வரை அனைத்தையும் சகித்துக் கொண்டிருக்கத் தீர்மானித்துள்ளோம்.
ஆட்சி மாற்றத்திற்கு முன்னின்று செயற்படுவதால் மக்கள் வினவும் கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிறுவ முயற்சிக்கப்படும் தற்காலிக பொறிமுறைகளை ஏற்க முடியாது: மைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் நிறுவ முயற்சிக்கப்படும் தற்காலிகமான பொறிமுறைகளை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தப் பொறிமுறையானது ஐநா.சாசனத்தின் ஆவணங்களுக்கு ஏற்ப அமையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் பட்ரிசியா ஸ்கொட்லேன்ட்டுடன் வீடியோ ஊடாக நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றிலேயே ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் நகரில் இருந்து வெளிவிவகார அமைச்சர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தார்.
பொதுநலவாய அமைப்பின் ஸ்தாபக உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை முன்னெச்சரிக்கையாகவும், அமைப்பின் மதிப்புக்கள், கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களுக்கு இணங்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அமைச்சர் பீரிஸ் இதன்போது தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளுடன் வணிகம், கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல துறைகளிலான ஒத்துழைப்பை இலங்கை மேலும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உள்ளூர் நிறுவனங்கள் தமது ஆணைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமான அமைப்புக்கள் தேவைப்படுகின்றன. இந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை வெளிப்புற அமைப்புக்களால் மாற்றவோ அல்லது கையகப்படுத்தவோ முடியாது என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் வர்த்தகம், விளையாட்டு, இளைஞர்கள் மற்றும் வன்முறைத் தீவிரவாதத்தை எதிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலான இலங்கையின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை பொதுநலவாய அமைப்பு பாராட்டுவதாக பொதுச்செயலாளர் ஸ்கொட்லேன்ட் இதன்போது தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
6 மாதங்களுக்கான பொருளாதார அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது – அஜித் நிவாட் கப்ரால்
இலங்கையில் எதிர்வரும் 6 மாதங்களுக்கென பொருளாதார அபிவிருத்தித் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித் நிவாட் கப்ரால் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர், ”எதிர்வரும் 6 மாதங்களை இலக்காகக் கொண்டு பொருளாதாரத்திற்கான திட்டப் பாதையொன்றை ஒக்டோபர் முதலாம் திகதி வெளியிட தயாராகியுள்ளோம். அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கியதாக அது இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த அஜித் நிவாட் கப்ரால், கடந்த 15 ஆம் திகதி மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்றார்.
அவர் மத்திய வங்கிய ஆளுநராக பதவியேற்ற பின்னர் 2021 வருட இறுதியில் இலங்கையின் பொருளாதாரத்தில் 5 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்று ஊடங்களுக்கு கூறியிருந்தார்.
இதேவேளை, இவரின் கையொப்பத்துடன் கடந்த 17 ஆம் திகதி புதிதாக 45.95 பில்லியன் ரூபா நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கூட்டமைப்பு உறுப்பினர்களிடத்தில் சம்பந்தன் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை
தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் இலக்கு நோக்கி கூட்டமைப்பாக பயணிக்கும் அனைவரும் பொதுவெளியில் கருத்துக்களை பகிர்ந்து சாதாரண மக்களை குழப்பாதீர்கள் என்று அனைத்து உறுப்பினர்களிடத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனநாயக கட்டமைப்பில் அனைவருக்கும் கருத்துவெளியிடும் உரித்துண்டு. அதனை கட்டுப்படுத்தவும் முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா நெருக்கடியால் ஒன்றுகூடிக் கலந்துரையாட முடியாத நிலைமைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழரசுக்கட்சியின் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, மற்றும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான சித்தார்த்தன் எம்.பி, செல்வம் அடைக்கலநாதன் எம்.பி ஆகியோர் ஊடகவியலாளர்கள் சந்திப்புக்களில் பரஸ்பர கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அதேபோன்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலும் மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
பகிரங்கமான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமைகளை கருத்திற்கொண்ட சம்பந்தன் வீரகேசரியிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர்மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஒரே கொள்கையில் ஒரே இலக்கு நோக்கி பயணிக்கின்ற அமைப்பாகும். தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற விடயத்தில் எமக்குள் எவ்விதமான மாறுபட்ட நிலைப்பாடுகளும் கிடையாது. இதற்காகவே அனைவரும் செயற்பட்டு வந்துகொண்டிருக்கின்றோம்.
அவ்விதமானதொரு சூழலில் அண்மைய நாட்களில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பொதுவெளியில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். கூட்டமைப்பு ஒரு ஜனநாயக கட்டமைப்பு என்ற அடிப்படையில் அனைவருக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு தாரளமான உரித்துள்ளது. அவ்விதமாக வெளிப்படும் கருத்துக்கள் கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைக்காத வகையில் அமைய வேண்டும்.
அதுமட்டுமன்றி சாதாரண மக்களையும் குழப்புவதாக அமைந்து விடக்கூடாது. ஆகவே இந்த விடயத்தில் அனைத்து தரப்பினரும் தமது பொறுப்புணர்ந்து கருமங்களை ஆற்ற வேண்டும். தற்போதைய சூழலில் கொரோனா நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக கூட்டமைப்பாக ஒன்று கூடி கலந்துரையாட முடியாத நிலையில் இருக்கின்றோம்.
விசேடமாக மருத்துவர்களின் ஆலோசனையின் பிரகாரம் நான் சந்திப்புக்களை தவிர்த்துள்ளேன். ஆகவே தான் பொதுவெளியில் பேசப்படுகின்ற விடயங்கள் பற்றிய கலந்துரையாடல்கள் உள்ளிட்ட ஏனைய கருமங்களை முன்னெடுக்க முடியாத நிலைமைகள் காணப்பட்டு வருகின்றன.
எனினும், இந்த விடயங்களுக்கு எல்லாம் அப்பால், கூட்டமைப்பாக நாம் எமது மக்களின் நீதிக்கோரிக்கை, பொறுப்புக்கூறல், நிரந்தர அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை ஒன்றுபட்டு முன்னெடுக்க வேண்டும் என்றார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் விடயங்கள்
உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கத்துடன், அடுத்த ஆண்டுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடரும். அத்துடன் முன்மொழியப்பட்ட 2022 வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்களில் தனியார் துறை திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று இலங்கை நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“உற்பத்தி பொருளாதாரம்” என்பது எதிர்வரும் நவம்பர் மாத வரவு செலவுத் திட்டத்தின் கருப்பொருளாக இருப்பதால், விவசாயம், சாலை மேம்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் அமைச்சகங்களுக்கு அதிக ஒதுக்கீடுகள் செய்யப்படவுள்ளன.
2022ஆம் ஆண்டு முழுவதும் வாகன இறக்குமதி உள்ளிட்ட இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்படும்.எனினும் மின்சார கார்களின் இறக்குமதி ஊக்குவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுத்துறையில் கூடுதல் செலவுகள் குறைக்கப்படும். மூன்று ஆண்டு பின்னடைவுக்குப் பின்னர் சுற்றுலாத்துறையை புத்துயிர் பெற வைக்கும் வகையில், வருடாந்த வருவாயை ஐந்து பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்தும் நோக்கத்துடன் ஹோட்டல் துறைக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கும் நோக்கில் மீன் இறக்குமதி திட்டங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதேவேளை ஆசிரியர்களின் சம்பள ஒழுங்கின்மை பிரச்சனைக்கு தீர்வு கண்டால், சம்பளத்தை படிப்படியாக உயர்த்துவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒரு தொகுதி ஸ்புட்னிக் தடுப்பூசி நாட்டை வந்தடைந்தது
2 வது தடுப்பு மருந்துக்குத் தேவையான 1 இலட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று (19) காலை இலங்கையை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதலாவது டோசை பெற்றுக்கொண்ட அனைவருக்கும் வழங்குவதற்கு இது போதுமானது எனவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் மொத்த சனத்தொகையான 2 கோடியே 19 இலட்சத்து 19 ஆயிரத்து 413 பேரில், 50 வீதமானோருக்கு இதுவரையில் கொவிட் வைரஸுக்கு எதிரான இரண்டு தடுப்பூசி டோஸ்களும் ஏற்றப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.