கொரோனா மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் நாட்டில் 2,212 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 142,683 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,102 பேர் இன்று (16) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 118,322 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

பொது முடக்கத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு பத்தாயிரம் ரூபா வீதம் அரசு வழங்க வேண்டும் ரெலோ தலைவர் செல்வம்

பொது முடக்கத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு பத்தாயிரம் ரூபா வீதம் இந்த அரசு வழங்க வேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொது முடக்கத்தால் பாதிக்கப்படும் அன்றாடம் வேலை செய்து வாழ்க்கை நடத்திவரும் மக்களுக்கு பத்தாயிரம் ரூபா இந்த அரசு வழங்க வேண்டும்.

கொரோனா தொற்று காரணமாக இந்த அரசு 3 நாள் பொது முடக்க பயணத் தடையை அறிவித்துள்ளது.

ஆனால் இந்த மூன்று நாட்களிலும் அன்றாடம் வேலை செய்து வாழ்க்கை நடத்திவரும் கடற் தொழிலாளர்கள் சிறு வியாபாரிகள் கூலித் தொழிலாளர்கள் என்று பெருவாரியான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களை அடையாளம் கண்டு இந்த மூன்று நாட்களுக்கும் 10,000 ரூபா வீதம் வழங்குவதற்கு இந்த அரசு முன் வர வேண்டும்.

அதேவேளை இந்த பொது முடக்க பயணத் தடை நீடிக்குமாக இருந்தால் நாட்டில் உள்ள அனைத்து விதமான மக்களும் பட்டினிச் சாவை எதிர்கொள்ள நேரிடும் என்பதனை அரசு புரிந்து அதற்கேற்ற வகையில் விரைவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

ரெலோவின் முக்கியஸ்தர்களான குகன் மற்றும் தாஸ் ஆகியோரின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல்

தமிழ் ஈழ விடுலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் வவுனியா மாவட்ட அமைப்பாளருமான குகன் மற்றும் நிதிச் செயலாளர் தாஸ் அவர்களினதும் 22ம் ஆண்டு நினைவஞ்சலி தினம் இன்றாகும். தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் உயிர் நீத்த இவர்களை இந்நாளில் அஞ்சலிக்கிறோம்.

ரெலோ வவுனியா மாவட்ட முன்னாள் அமைப்பாளர் குகன் மற்றும் ரெலோ நிதிச்செயலாளர் தாஸ் ஆகியோரின் 22 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 15/05/2021 மன்னாரில் கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது அன்னாரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இதன் போது கட்சியின் முக்கியஸ்தர்கள், பிரதேசசபை, நகரசபை உறுப்பினர்கள், இளைஞர் அணியினர், ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.

நாட்டின் கோவிட் சூழ்நிலை காரணமாக மாவட்ட செயலகங்களில் 15-05-2021 அன்று எளிமையான முறையில் இடம் பெற்றது.

Posted in Uncategorized

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி: பொறுப்பாளர்களை சட்டத்தின் முன்நிறுத்துங்கள் – சர்வதேச மன்னிப்புச்சபை

அண்மையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழிருந்த இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான சம்பவம் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, இச்சம்பவத்திற்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்களை சட்டத்தின் முன்நிறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

பொலிஸ் பாதுகாப்பிலிருந்த பாதாள உலகக்குழுவைச்சேர்ந்த ‘உரு ஜுவா’ என்றழைக்கப்படும் மெலோன் மாபுல மற்றும் ‘கொஸ்கொட தாரக’ என்றழைக்கப்படும் தாரக பெரேரா விஜேசேகர ஆகியோர் அண்மையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிப் பலியாகினர்.

இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சர்வதேச மன்னிப்புச்சபையினால் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தற்போது சட்டத்திற்கு முரணாகத் தண்டனை வழங்கும் போக்கு அதிகரிக்கலாம் என்ற விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவிடயத்தில் உரிய அதிகாரிகள் நியாயமானதும் சுதந்திரமானதுமான விசாரணைகளை முன்னெடுப்பதுடன், இச்சம்பவத்திற்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்களை சட்டத்தின் முன்நிறுத்தவேண்டும்.

இவ்விடயம் தொடர்பில் கடுமையான கண்டத்தை வெளியிட்டிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், உரியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

பொலிஸ் காவலின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை முறையாகக் கவனிப்பதுடன் அவர்களை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. எனினும் இவ்வாறான சம்பவங்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படாமல் இருப்பது, அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் செயற்படுவதை மறுதலிப்பதாக அமைகின்றது என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பசில் மருத்துவ சிகிச்சை பெறும் அளவிற்கு சுவீனமடையவில்லை -நாமல்

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெறும் அளவிற்கு பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்‌ஷ சுவீனமடையவில்லை.

தனிப்பட்ட காரணிகளுக்காகவே அவர் அமெரிக்கா சென்றுள்ளார் என இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

மினுவாங்கொட வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படும் தற்காலிக சிகிச்சை நிலையத்தை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்‌ஷ தனிப்பட்ட காரணிகளுக்காகவே அமெரிக்கா சென்றுள்ளார் .

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைகளை பெறும் அளவிற்கு அவர் சுகயீனமாக காணப்படவில்லை.

கடந்த 11 ஆம் திகதி அவரை சந்தித்த போதும் அவர் நலமுடன் இருந்தார். அமெரிக்க பயணத்தை நிறைவு செய்து ஒரிரு வாரங்களில் அவர் நாடு திரும்புவார் என்றார்.

Posted in Uncategorized

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும்..!

இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதுடன், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும் என்று அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் பாராளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் பாராளுமன்றத்தின் கீழ்சபையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்து உறுப்பினர் ஹக் மெக்டெமொற் உரையொன்றை நிகழ்த்தியிருக்கிறார்.

இதன்போது இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதற்கான தலைமையை அவுஸ்திரேலியா வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் அவர், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்நிறுத்துவதற்கு ஏனைய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.

முள்ளிவாய்க்கால் நினைவுகூரலைத் தடுக்க முல்லைத்தீவின் ஏழு பொலிஸ் நிலையங்கள் தடையுத்தரவைப் பெற்றன!

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்குமாறு, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, 27 பேருக்கு எதிராக இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மாங்குளம், ஒட்டுசுட்டான், மல்லாவி, ஐயன்கன்குளம், முள்ளியவளை ஆகிய ஏழு பொலிஸ் நிலையங்களால் தடையுத்தரவு கோபரப்பட்டது.

அந்தவகையில், முல்லைத்தீவு பொலிஸாரால் .வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி, தமிழரசுக் கட்சி உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான பீற்றர் இளஞ்செழியன், கரைத்துறைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் கமலநாதன் விஜிந்தன், சமூக செயற்பாட்டாளர் ச.விமலேஸ்வரன் ஆகிய ஐவருக்கு எதிராக தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

அத்துடன், புதுக்குடியிருப்பு பொலிஸாரால் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்ரும் ஆன ஆண்டிஐயா புவனேஸ்வரன், புதுக்குடியிருப்பு ரெலோ பிரதேச சபை உப தவிசாளர் கனகசுந்தரசுவாமி ஜெனமேஜெயந்த், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான ஆறுமுகம் ஜோன்சன், கணபதிப்பிள்ளை விஜயகுமார் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான தவராசா கணேஸ்வரம், சபாரத்னம் ஜெகநாதன், தம்பையா யோகேஸ்வரன், ஜேசுதாஸ் பீற்றர்யூட், வேலு தியாகராசா ஆகிய ஒன்பது பேருக்கு எதிராக தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது

அதேபோல், மாங்குளம் பொலிஸாரால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமூக செயற்பாட்டாளர்களான திலகநாதன் கிந்துஜன், ரகுநாதன் துஷ்யந்தன், குஞ்சுதநாதன் ரவிந்திரன், ராசமணி சிவராசா ஆகிய ஆறு பேருக்கு எதிராக நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது

அத்துடன், ஒட்டுசுட்டான் பொலிஸாரால் சின்னத்துரை வேதவனம், தர்மலிங்கம் ஜீவரத்னம், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன் ஆகிய மூவருக்கு எதிராக நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது

மேலும், ஐயன்கன்குளம் பொலிஸாரால் துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் ரகுநாதன் சுயன்சன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமூக செயற்பாட்டாளர்களான தங்கராசா நிரஞ்சன், திலகநாதன் கிந்துஜன் ஆகிய ஐவருக்கு எதிராக முள்ளிவாய்க்கால் நினைகூரல் நிகழ்வு செய்ய நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது

மல்லாவி பொலிஸாரால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமூக செயற்பாட்டாளர்களான தங்கராசா நிரஞ்சன், ராசகுலசிங்கம் மாலுராசன், லிங்கேஸ்வரன் வைலஜா ஆகிய ஐவருக்கு எதிராக நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது

இதேவேளை, முள்ளியவளை பொலிஸார் பெயர் குறிப்பிடாமல் தமது பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வு செய்வதங்குத் தடையுத்தரவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 31 பேர் பலி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 892 ஆக அதிகரித்துள்ளது

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 892 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பூசிகளுக்காக 80.5 மில்லியன் டொலர் நிதியுதவி: உலக வங்கியும் நிதி அமைச்சும் ஒப்பந்தம்

நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காகவும் விநியோகிப்பதற்காகவும் 80.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்க உலக வங்கியும் நிதி அமைச்சும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்

இலங்கை சார்பில் நிதி அமைச்சின் செயலாளரும் உலக வங்கி சார்பில் இலங்கைக்கான வதிவிட பணிப்பாளரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இலங்கையின் அவசரத் தேவை மற்றும் சுகாதாரத்துறைக்கு முன்னுரிமை வழங்க உலக வங்கி உதவி புரியும் என உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிட பணிப்பாளர் இதன்போது கூறியுள்ளார்.

பெரும்பான்மை இனத்தின் மேலாதிக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பொதுபலசேனா – அமெரிக்கா அறிக்கை

சிங்கள பௌத்த பெரும்பான்மை இனத்தின் மேலாதிக்கத்தை ஊக்குவித்து, வலுப்படுத்தும் வகையில் பொதுபலசேனா அமைப்பு செயற்பட்டு வருவதாக ஐக்கிய அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களத்தினால் 2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மதச்சுதந்திரம் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் செயற்பட்டுவரும் சிவில் சமூகக்குழுக்களால் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்களின்படி, சமூகவலைத்தளங்களில் மதரீதியான சிறுபான்மையினரை இலக்குவைத்து வெறுப்புணர்வுப் பிரசாரங்களும் கருத்துக்களும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அதேவேளை பொதுபலசேனா போன்ற பௌத்த தேசியவாத அமைப்புக்கள், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வலுப்படுத்தும் வகையில் தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டுவருவதுடன் ஏனைய சிறுபான்மை இனங்களை இழிவுபடுத்தும் விதத்திலும் செயற்பட்டு வருவதனை ஊடக அறிக்கைகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கருத்துக்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. எனினும் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்வைப் பரப்புவோருக்கு எதிராக உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் அவ்வமைப்புக்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டின் மார்ச் – ஜுன் மாதத்திற்கு இடையிலான காலப்பகுதியில் சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்ட வெறுப்புணர்வுக்கருத்துக்கள் தொடர்பில் அரச சார்பற்ற அமைப்பொன்றினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையின் தேசியமொழிகள் மூன்றிலும் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் வெறுப்புணர்வுப் பதிவுகளில் 58 சதவீதமானவை முஸ்லிம் சமூகத்தை அல்லது இஸ்லாமிய மதத்தைத் தாக்குவதாகவே அமைந்துள்ளன. அதேபோன்று 30 சதவீதமானவை கிறிஸ்தவ மதத்தையும் 5 சதவீதத்திற்கும் குறைவானவை தமிழ் இனம் அல்லது இந்து மதத்தைத் தாக்கும் வகையில் அமைந்துள்ளன.

அதேபோன்று சிங்களமொழியில் மாத்திரம் செய்யப்பட்டுள்ள பதிவுகளை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 79 சதவீதமான பதிவுகள் முஸ்லிம் இனத்தையோ அல்லது இஸ்லாமிய மதத்தையோ தாக்கும் வகையில் அமைந்துள்ளன. தமிழ்மொழியில் செய்யப்பட்டுள்ள பதிவுகளில் 46 சதவீதமானவை தமிழ்ச்சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களையும் 35 சதவீதமானவை இஸ்லாமியர்களையும் தாக்கும் விதமாக அமைந்துள்ளன.

முஸ்லிம் வைத்தியரான ஷாபி சிகாப்தீன் என்பவரால் சிங்களப்பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற விசாரணையில் 76 மருத்துவப் பணியாளர்கள் குறிப்பிட்டனர். அவ்வாறு கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் தொடர்பில் மருத்துவ நிபுணர்களால் ஆராயப்பட்டதுடன், இந்த வழக்கு இன்னமும் நிலுவையிலேயே உள்ளது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதுடன் முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட மேலும் சில சம்பவங்கள் தொடர்பிலும் கூறப்பட்டிருக்கிறது.