தமிழ் கட்சிகள் அவரச சந்திப்பு!

தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் நில அடையாளங்களை சிதைத்து, வாழ்வுரிமையை பறிக்க இந்த அரசு மேற்கொண்டு வரும் அசுர வேக நடவடிக்கைகளிற்கு எதிராக தமிழ் தேசிய கட்சிகளைளும், அரச சாராத தமிழ் கட்சிகளையும், மத பெரியார்களையும், சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைகழக மாணவர்களையும் உள்ளடக்கிய விரிவான கலந்துரையாடலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் (24) காலை 10.00 மணிக்கு நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறும்.

அரசின் இந்த நடவடிக்கைகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆராயவே இந்த கூட்டம் இடம்பெறும்.

இன்று யாழிலுள்ள தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடலை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ் அரசு கட்சி சார்பில் கலையமுதன், புளொட் சார்பில் ப.கஜதீபன், ரெலோ சார்பில் தி.நிரோஷ், தமிழ் தேசிய கட்சி சார்பில் பேராசிரியர் சிவநாதன், ஈ.பி.ஆர்.எல் சார்பில் குகன், அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்களும் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். கூட்டத்திற்கு வருபவர்கள் உரிய சுகாதார நடைமுறையை பின்பற்ற அறிவறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிப் பொறிமுறையை இம்முறை நிறுவ வேண்டும் ஐ.நா! மன்னிப்புச்சபை வலியுறுத்து

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களை சேகரிப்பதற்கும் சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை எதிர்வரும் 46ஆவது கூட்டத்தொடரின் போது அறிமுகப்படுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் மாதம் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும், அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும் சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும்.

இலங்கையில் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஊடகங்கள் மீதான அடக்குமுறையில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் மீதான தாக்குதல்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 30/1 தீர்மானத்தில் உள்ளவற்றில் மிகவும் வரையறுக்கப்பட்ட தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டு உள்ளமை மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளடங்கலாக 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதாக இலங்கை அறிவித்தமை ஆகியவற்றின் பின்னணியில் இத்தகையதொரு சர்வதேச நீதிப் பொறிமுறை அவசியமாகும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒருமுறையான பொறிமுறையின் கீழ் இலங்கை அரசு செயற்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

கடந்த சில வருடங்களில், குறிப்பாகக் கடந்த வருடம் இலங்கையின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக சிவில் சமூகக் குழுக்களுக்கான இடைவெளி பாதகமான முறையில் மட்டுப்படுத்தப்பட்டமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஊடகவியலாளர் தரிஷா பாஸ்டியன்ஸ் மீதான அடக்குமுறை, சமூகவலைத்தள செயற்பாட்டாளர் ரம்ஸி ரஸீக் மற்றும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோரின் கட்டாய தடுத்துவைப்பு, எழுத்தாளர் ஷக்திகசத்குமாரவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஆகியவை தொடர்பில் நாம் ஏற்கனவே விசேடமாகச் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இத்தகைய அடக்குமுறைகளின் விளைவாகப் பல செயற்பாட்டாளர்கள் நாட்டைவிட்டுத் தப்பி சென்றிருக்கின்றார்கள்.

அதுமாத்திரமன்றி இலங்கையில் தொடர்ந்தும் சிறுபான்மையினத்தவர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் பெரிதும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

weddingman
எளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்

நல்லூர் பிரதேச சபை தவிசாளரின் செயற்பாட்டிற்கு மதுசுதன் கடும் கண்டனம்

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் பராமரிப்பற்ற காணிகள் சபை உடைமையாக்கப்படும் என்ற அறிவித்தலை சபையின் தவிசாளர் ப.மயூரன் 22.01.2021 அன்று அறிவித்தல் விடுத்துள்ளதாக ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. உண்மையில் சபை கூட்டப்பட்டு பிரதேசத்தில் பராமரிப்பற்ற காணிகள் தொடர்பாக எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் எந்தவித தீர்மானங்களும் எட்டாமல் எமது மக்களின் காணிகள் அரசுடமையாக்கப்படும் என்ற அறிவித்தலை விடுத்தலானது ஏற்றுக்கொள்ள முடியாதது என நல்லூர் பிரதேச சபையின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் குமாரசாமி மதுசுதன் தெரிவித்துள்ளதுடன் குறித்த செயற்பாட்டிற்கு எதிராகத் தனது கடும் கண்டனங்களையும் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பில் இன்று(23) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த அறிவித்தலினால் மக்கள் அதிக சினம் கொண்டு எம்மிடம் தெரிவிக்கிறார்கள். கொரோனா காரணமாகவும், அடைமழை காரணமாகவும் வருமானமற்ற நிலையிலேயே துப்பரவுப் பணிகள் இடம்பெறவில்லை எனவும் சபை ஊழியர்களால் தங்களுக்கு உரிய அறிவித்தல் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கிறார்கள்.

எனினும்,பிரதேசத்தில் பராமரிப்பற்ற காணிகளினால் பார்த்தீனியம்,மற்றும் டெங்கு அபாயங்கள் ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

அதனைத் தடுப்பதற்கும், உரிய முறையில் பராமரிப்பதற்கும் பிரதேச சபை சட்ட ஏற்பாட்டுகளின் படி பல முறைகள் உள்ளன . எம்மிடம் அதிகாராங்கள் உள்ளன. எமது சபை மூலம் சிவப்பு எச்சரிக்கை விடுதல்,தண்டம் அறவிடல் போன்ற செயற்பாடுகள் அல்லது நீதிமன்றத்தினூடான நடவடிக்கைகள் போன்றன காணப்படுகின்றன. அத்துடன் உள்ளூராட்சி மன்றக் காணி கையாளல் சம்பந்தமான அதிகாரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

காணி உடமையாளர்களின் காணிகளை உரிய முறையில் பராமரிக்கச் செய்வதற்கு எமது சபையிடம் போதிய வரம்புகளும், சக்திகளும், ஏதுக்களும் இருக்கும் போது அதனைத் தவிசாளருக்குரிய அதிகாரத்தினைப் பயன்படுத்தி அமுல்படுத்தாமல் எமது தமிழ்மக்களின் காணிகளினை அரச உடைமையாக்கப்படும் என அறிவித்தமையானது எமது நிலங்களை அரசுக்குத் தாரைவார்க்கும் செயற்பாடாகும்.

ஏற்கனவே, பல திணைக்களங்கள் மூலம் எமது தமிழர் நிலங்கள் கபளீகரம் செய்யப்படும் தறுவாயில் அதற்கான எதிர்ப்புக்களும் கோசங்களும் எம்மிடையே வலுப்பெற்று வரும் இந்நாட்களில் எமது தமிழர் காணிகள் அரசுடமையாக்கப்படும் என விடுத்த அறிவிப்பானது இன்னும் பேரினவாதத்திற்கு தூபம் போடும், அவர்களை ஊக்குவிக்கும் செயலாகும். இதனை அரசே இனிச் செயற்படுத்த வழி வகை செய்வதாக அமைந்துவிடும். இதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

பிரதேசத்தில் காணி விற்றல் ,வாங்கல் மூலம் சபைக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. அந்த வருமானங்களைக் கொண்டு பராமரிப்பற்ற காணிகளினை பராமரிக்க சில முன்மாதிரியான நடவடிக்கைகளினை நாம் எடுக்க வேண்டும்.

இருக்கும் அதிகாரங்களை சிறப்பாக பயன்படுத்தி மக்கள் சேவையாற்ற வேண்டுமே ஒழிய மக்கள் வரிப் பணத்தில் சபை நடாத்திக் கொண்டு அவர்களுக்கு எதிராக நாம் செயற்படுவது சிறப்பான ஒன்றல்ல.

எனவே, மக்கள் விரோத நிலைப்பாடுகளை எடுக்காமல் இனிச் சபையில் கூடி கலந்துரையாடி ஆக்கபூர்வமான, இனத்திற்கு நலன் சேர்க்கும் பிரதேசத்தின் வளர்ச்சிக்குமுரிய நடவடிக்கைகளினை மேற்கொள்ளாமல் இப்படிச் செயற்படுவதனை வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்களம் அகழ்வாராச்சியால் பதற்றம்

யாழ்ப்பாணம் – நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது.

இன்று முற்பகல் நிலாவரைக் கிணறு பகுதிக்கு வருகை தந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிகையை முன்னெடுத்து ஆய்வுப் பணிகளை முன்னெடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த இடயில் கட்டடம் ஒன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது எனவும், அதுதொடர்பில் ஆய்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வுப் பணிக்கான செலவு மதிப்பீட்டை தயாரிப்பதற்கான பணி இன்று முன்னெடுக்கப்பட்டதாகவும், செலவீட்டுக்கு அனுமதி கிடைத்ததும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Posted in Uncategorized