இந்திய – இலங்கை ஒப்பந்தம் – 35 வருடங்கள்- எங்கிருந்து எங்கு செல்வது?

யதீந்திரா
கடந்த பத்தியில் நமது அரசியல் சூழலிலுள்ள சில பலவீனங்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தேன். அதாவது, எதிர்பார்ப்புக்களை முன்னிறுத்துபவர்கள் எவரிடடும், அதனை அடையும் வழிமுறைகள் இல்லை. ஏனெனில் அது அவர்களுக்கு தெரியாதென்று குறித்த கட்டுரை சுட்டிக்காட்டியிருந்தது. இது தொடர்பில் சில நண்பர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். அந்த பதில் உங்களிடம் இருக்கின்றதா – என்று ஒரு புலம்பெயர் நண்பர் கேட்டிருந்தார். கேள்வி சரியானது. மற்றவர்களை நோக்கி தொடுக்கும் விமர்சனங்கள் என்பவை பூமறாங் போன்றது. பூமறாங் என்பது – அதனை வீசியவரையே நோக்கி தாக்கும் திறன் கொண்டது. எறிந்தவருக்கு அதனை மீளவும் சரியாக பிடிக்கத் தெரியாது போனால், இறுதியில் எறிந்தவரையே அது தாக்கிவிடும்.
ஆனால் இவ்வாறான கேள்விகளுக்கு எனது முன்னைய பத்திகளிலும் பதிலளித்திருக்கின்றேன். மீண்டும் அந்த பதிலை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் சில விடயங்களை இந்த பத்தியில் காண்போம். இந்த கட்டுரை எழுதப்படும் காலத்திற்கும் தமிழர் அரசியலுக்கும் ஒரு வரலாற்று தொடர்புண்டு. 1987,யூலை (29) மாதத்தில்தான், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஆண்டுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 35 வருடங்கள் ஆகின்றன.

கடந்த 35 வருடங்களில், தமிழர் அரசியலில் பல்வேறு விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. எனினும் தமிழ் மக்களின் அரசியல் பயணத்தில் முன்நோக்கி சென்றிருப்பதற்கான சான்றுகள் இல்லை. பின்னடைவுகளே இடம்பெற்றிருக்கின்றன. பத்து லட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்-தமிழ் மக்கள், பல ஜரோப்பிய நாடுகளில் சிதறி வாழ்கின்றனர், அவர்கள் தாயக அரசியல் தொடர்பில் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதற்கு அப்பால், குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இல்லை. யுத்தத்திற்கு பின்னரான, கடந்த 13 வருடங்களில் பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, அவைகள் எவற்றிலும் தமிழர்கள் வெற்றிபெறவில்லை. ஆகக் குறைந்தது நம்பிக்கைக்குரிய முன்னேற்றங்கள் கூட ஏற்படவில்லை. சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில் அதிகம் பேசிக் கொண்டாலும் கூட, கொழும்பின் ஆட்சியாளர்களின் அணுமுறைகளுக்கு ஏற்ப, அழுத்தங்கள் மாறிக் கொண்டிருந்தன. ராஜபக்சக்கள் இருக்கின்ற போது ஒரு மாதிரியும், ரணில் போன்றவர்கள் ஆட்சிக்கு வருகின்றபோது, வேறு மாதிரியுமே, மேற்குலக நாடுகள் நடந்துகொண்டன. அவர்கள் அப்படி நடந்து கொள்வதிலும் ஆச்சரியங்கள் ஏதுமில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில், இசையமைப்பிற்கு சொற்களை தேடுபவர்கள் போன்றே தமிழர்களின் வாழ்வு கழிந்திருக்கின்றது.

ஆனால், தமிழர் அரசியலில் தீர்மானகரமான சக்தியாக இருக்கும், பிராந்திய சக்தியான, இந்திய பேரசானது – முன்னரும், இப்போதும் ஒரு விடயத்தை மட்டுமே வலியுறுத்திவருகின்றது. அதாவது, 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான, 13வது திருத்தச்சட்டம் தொடர்பிலேயே, இந்தியா தொடர்ந்தும் அழுத்திவந்திருக்கின்றது. இதனை ஆழமாக நோக்கினால், ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு, 13வது திருத்தச்சட்டம்தான். அதிலிருந்து முன்னோக்கி செல்வதென்பது வேறு விடயம். ஆனால் எந்தவொரு பயணமும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருக்க வேண்டும் என்பதே, புது டில்லியின் நிலைப்பாடாக இருந்திருக்கின்றது. கடந்த 35 வருடங்களில், பல சிங்கள-அரசாங்கங்கள் வந்து போயிருக்கின்றன. அவர்கள் பல்;வேறு விடயங்கள் தொடர்பில் விவாதித்திருக்கின்றனர். எனினும் 13வது திருத்தச்சட்டத்தை எவராலும் தாண்டிச் செல்ல முடியவில்லை. தாண்டிச் செல்லும் முயற்சிகள் ஒன்றில் தோல்வியடைந்திருக்கின்றன அல்லது தோற்கடிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 13 வருடகால அரசியல் முன்னெடுப்புக்கள் இதற்கு தெளிவான சான்றாகும்.

ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில், புதியதொரு அரசியல் யாப்பு தொடர்பில் ஆடம்பரமாக விவாதிக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ரணில்-மைத்திரி அரசாங்கமும் தேனிலவில் இருந்தது. ஆனால் என்ன நடந்தது? புதிய அரசியல் யாப்பு விடயத்தில் வெற்றிபெற முடிந்ததா? ரணில்-மைத்திரி காலத்தில், 13வது திருத்தச்சட்டத்தை தாண்டி அதிக தூரம் சென்றுவிட்டதாகவே இரா.சம்பந்தன், கூறிக்கொண்டிருந்தார். ஆனால் இறுதியில் என்ன நடந்தது?

ஆனால் இங்கு பிறிதொரு விடயத்தை ஆழமாக கவனிக்க வேண்டும். இவ்வாறான முயற்சிகள் தோல்வியடைக்கின்ற போது, சிங்கள ஆட்சியாளர்கள் சிறிதும் சலனத்தை வெளிப்படுத்துவதில்லை. ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்து முயற்சிகள் தோல்விடைந்தமை தொடர்பில், ரணிலோ அல்லது மைத்திரியோ கவலைப்படவில்லை. ஏனெனில் அவர்களை பொறுத்தவரையில் புதிய அரசியல் யாப்பு ஒரு முதன்மையான தேவையாக இருந்திருக்கவில்லை. அந்த நேரத்தில், கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஒரு விடயத்தை என்னிடம் கூறினார். ரணில்-மைத்திரி அரசாங்கத்தில் அங்கம் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்குமே, புதிய அரசியல் யாப்பு விடயத்தில் அக்கறையிருக்கவில்லை. அவர்களை பொறுத்தவரையில் இது ஒரு ‘வெட நத்தி வெட’ (வேலை இல்லாதவர்களின் வேலை). ஓப்பீட்டடிப்படையில் ரணில், மங்கள சமரவீர போன்ற ஒரு சிலருக்குத்தான், இந்த விடயங்களில் ஆர்வம் இருந்தது எனலாம். இந்த பின்னணியில்தான், புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

இந்த அனுபவங்களிலிருந்து சிந்தித்தால், என்ன செய்யலாம் என்னும் கேள்விக்கான பதிலை காண்பது சிக்கலான காரியமல்ல. தமிழர்களுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் இருக்கின்றன. ஒன்று, இருப்பதை கையாளுவதன் மூலம் முன்நோக்கி பயணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது. அதாவது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஒரு அஸ்திபாரமாகக் கொண்டு பயணிப்பது. இதில் உண்மையாகவும் உறுதியாகவும் தமிழ் தரப்புக்கள் இருக்க வேண்டும். ஒரு கட்சி 13 பற்றி பேசியவுடன், இன்னொரு கட்சி, 13 எதிர்ப்பு ஊர்வலம் செய்து கொண்டிருந்தால் இதிலும் முன்நோக்கி பயணிக்க முடியாது. இரண்டாவது, முழுமையான புரட்சிகர மாற்றத்திற்காக போராடுவது. போராட்டம் என்பது, நல்லூர் கோவிலடியில் கூடும் போராட்டம் அல்லது பொலிகண்டியில் எந்த இடத்தில் கல்வைப்பதென்று சண்டைபோடும் போராட்டம் அல்ல. ஆனால் நம் அனைவருக்கும் தெரியும். நிச்சயமாக விடுதலை போராட்டமொன்றை முன்னெடுக்கக் கூடிய நிலையில் இன்றுள்ள தலைமைகள் எவரும் இல்லை. அப்படியொரு தலைமையிருந்தால், அவரை அறிந்துகொள்வதில் இந்தக் கட்டுரையாளர் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கின்றார்.

அப்படியாயின் என்ன வழிதான் உண்டு? இப்போது, எஞ்சியிருப்பது என்ன? அது ஒன்றுதான் – அதவாது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை பயன்படுத்திக் கொண்டு, மெதுவாக முன்னோக்கி நகர்வது மட்டுமே ஒரேயொரு தெரிவாக இருக்க முடியும். அப்படிப் பார்த்தால், மாகாண சபை முறைமையை திறம்பட முன்னெடுப்பதற்கான முயற்சிகளைத்தான் தமிழர் தரப்புக்கள் மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் மட்டும்தான், புதுடில்லியின் ஆதரவை ஈழத் தமிழர்கள் கோர முடியும். இதை தவிர்த்து எந்த விடயங்களை பற்றிப் பேசினாலும் அவற்றால் தாயகத்திலுள்ள மக்களுக்கு எந்தவொரு நன்மையும் ஏற்படப் போவதில்லை. ஈழத் தமிழர்களிடம் புவிசார் பலமிருக்கின்றது, பிராந்திய பலமிருக்கின்றது என்பதெல்லாம் அரசியல் அறியாமை. நாங்கள் தேவையானதொரு மக்கள் கூட்டமென்று உலகம் கருதியிருந்தால், முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்திருக்காது. ஏழு கோடிக்கு மேற்பட்ட தமிழ் நாட்டு தமிழர்கள், பத்துலட்சம் ஈழத்து புலம்பெயர் சமூகம், இவர்களை சாட்சியாகக் கொண்டுதானே அனைத்தும் நடந்துமுடிந்தது. அப்போது புவிசார் பலத்திற்கும், பிராந்திய பலத்திற்கும் என்ன நடந்தது? பதில் இலகுவானது. இவ்வாறான விடயங்கள் அனைத்தும் சிலரது கற்பனை. இவ்வாறான கற்பனைகள் நல்ல திரைப்படமொன்றிற்கு பயன்படலாம் ஆனால் பாதிக்கப்பட்டு, நிலை குலைந்து போயிருக்கும் ஈழத் தமிழினத்திற்கு ஒரு போதும் பயன்படாது.

மாகாண சபை முறைமையை உச்சளவில் பயன்படுத்திக் கொண்டு, முன்நோக்கி நகர்வது தொடர்பில் சிந்திப்பது, செயற்படுவது மட்டும்தான், இப்போதுள்ள ஒரேயொரு தெரிவாகும். ஏதிர்காலத்தில் ஒரு சமஸ்டித் தீர்வை நோக்கி பயணிப்பதாக இருந்தாலும் கூட, அதற்கான அடிப்படையும் இங்குதான் இருக்கின்றது. இந்த இடத்தில் பிறிதொரு சங்கடமும் குறுக்கிடலாம். அதாவது, சிலர் அன்று இதனை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லையென்று வாதிட முயற்சிக்கலாம். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது, ஏற்றுக்கொள்ளாத விடுதலைப் புலிகள் இப்போது இல்லை. அவர்கள் ஏன் இல்லாமல் போனார்கள் என்பது ஒரு வரலாற்று படிப்பினை. எதிர்காலத்தை சிறந்ததாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்று எண்ணினால், கடந்தகாலத்தை படிப்பது மிகவும் கட்டாயமானது.

ரணிலா ? அரகலயவா ? – நிலாந்தன்.

ரணில் ஜனாதிபதியாக வந்தபின் நடந்த ஒரு பெரிய மாற்றம் என்று சொன்னால் அரகலயவை அடக்கத் தொடங்கியதுதான். எந்த அரகலயவின் விளைவாக அவர் ஆட்சிக்கு வந்தாரோ, அதே அரகலயவை அவர் இப்பொழுது அடக்கப் பார்க்கிறார். எந்த ஒரு முறைமை மாற்றத்தைக் கேட்டு அரகலய போராடியதோ, அந்த முறைமை மாற்றம் நடக்கவில்லை.மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் அதே பழைய முறைமையினூடாக நிறைவேற்று அதிகாரம் பெற்ற ஜனாதிபதியாக எழுச்சி பெற்றிருக்கிறார்.

காலிமுகத்திடல் சோர்ந்துபோய் விட்டதாக அவதானிக்கப்படுகிறது. அங்கு முன்னணியில் நின்ற அரசியல் பின்னணியை கொண்ட பலரும் தலைமறைவாகிவிட்டதாகவும் கருதப்படுகிறது. தொடர்ச்சியான கைதுகள் காரணமாக முன்னணி ஏற்பாட்டாளர்கள் பலர் பின் மறைவிற்கு செல்வதாக நம்பப்படுகிறது. ஊடகவியலாளர்களின் கைபேசி அழைப்புகளுக்கு அவர்கள் பதில் கூறுவதில்லை என்றும் தெரிகிறது. ருவிற்றரில் அரகலய தொடர்பான செய்திகளை, படங்களை தொடர்ச்சியாக ஒளிபரப்பி வந்த ஒருவர் பின்வருமாறு பதிவிட்டு இருந்தார்…”நாங்கள் இந்த நாட்டுக்காக போராடியதற்காக மனம் வருந்துகிறோம்..”.

அரகலயவின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்காக நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் இலவசமாக வழக்காட முன்வந்தார்கள். இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் அவ்வாறு போராட்டக்காரர்களை விடுவிப்பதற்காக சட்டத்தரணிகள் நூற்றுக்கணக்கில் திரண்டமை என்பது அரிதான ஒன்று.அதுமட்டுமல்ல அரகலய மீது தாக்குதல்கள் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் பொழுதெல்லாம் சட்டத்தரணிகள், மதகுருக்கள் போன்றோர் கைகளை கோர்த்தபடி மனித வேலி ஒன்றை உருவாக்கி அரசாங்கத்துக்கு சவால் விட்ட தருணங்களும் உண்டு. குறிப்பாக கோத்தா பதவி விலக முன்பு ஒருநாள் காலி வீதியில் அரகலய பகுதிக்கு அருகே போலீஸ் வாகனத் தொடரணி ஒன்று காணப்பட்டது. அது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த வாகனப் பேரணி பின்வாங்கப்பட்டது.

கோத்தா பதவி விலகும் வரையிலும் அரகலியவுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள், கொழும்பில் உள்ள ஐநா தூதரகம் போன்றன ருவிட்டரில் பதிவுகளையிட்டு வந்தன. ஆனால் இப்பொழுது நிலைமை அவ்வாறு இல்லை. ரணில் அரகலயவை முறியடிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கிய பின்,மேற்கத்திய தூதரகங்கள் ருவிட்டரில் பதிவிடும் கருத்துக்களில் சுட்டிப்பான வார்த்தைகளால் கைது நடவடிக்கைகளை கண்டிக்கும் குறிப்புகளைப் பெருமளவுக்கு காண முடியவில்லை. இங்கே ஒரு வித்தியாசத்தை சுட்டிக்காட்ட வேண்டும். மே ஒன்பதாம் தேதி மஹிந்தவின் ஆதரவாளர்கள் அரகலயவை தாக்கியபொழுது அமெரிக்கத் தூதுவர் கண்டனம் தெரிவித்திருந்தார்.ஆனால் ரணில் பதவியேற்ற அதேநாளில் அரகலயவை தாக்கியபொழுது அமெரிக்க தூதுவர் கவலை கலந்த கரிசனைதான் தெரிவித்திருந்தார்.அதாவது ராஜபக்சக்களை அகற்றும் வரையிலும் மேற்கு நாடுகள் அரகலியவை ஆர்வத்தோடு ரசித்தன. ஆனால் இப்பொழுது கைது நடவடிக்கைகளை சுட்டிப்பான வார்த்தைகளால் கண்டிக்கும் ஒரு நிலைமையைக் காண முடியவில்லை.

இப்படி ஒரு ஆபத்தை முன்கூட்டியே எதிர்பார்த்த காரணத்தால்தான் முன்னிலை சோசலிசக் கட்சி, ஜேவிபி போன்றவற்றின் நிழல் அமைப்புகளும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் போராட்டத்தில் முன்னணிக்கு வந்து தலைமை தாங்கத் தயங்கின. இலங்கைத் தீவு ஏற்கனவே இரண்டு ஜேவிபி போராட்டங்களையும் தமிழ்மக்களின் போராட்டத்தையும் நசுக்கிய ஒரு நாடு.ஒரு நூற்றாண்டுக்குள் மூன்றுதடவைகள் தன் சொந்த மக்களின் குருதியில் குளித்த ஒரு நாடு. அந்த அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில்தான் அரகலய திட்டமிடப்பட்டது. எனினும் இப்பொழுது ரணில் அரகலியவை மேற்கிடமிருந்தும் சிங்கள நடுத்தர வர்க்கத்திடம் இருந்தும் சாதாரண சிங்கள மக்களிடமிருந்தும் தனிமைப்படுத்தும் வேலைகளை படிப்படியாக முடுக்கி விட்டுள்ளார்.

அரகலிய வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை. பொருளாதார நெருக்கடிகளின் நேரடி விளைவு அது. பொருளாதார நெருக்கடிகளை தணிப்பதுதான் அரகலயவை எதிர்கொள்வதற்கான ஒப்பிட்டுளவில் சிறந்த வழி. ஆனால் பொருளாதார நெருக்கடிகளை போதிசத்துவரே வந்தாலும் எடுத்த எடுப்பில் தீர்த்துவிட முடியாது.ரணில் விக்கிரமசிங்க வந்த பின்னரும் நிலைமை அப்படித்தான் காணப்படுகிறது.ஒப்பீட்டளவில் மின்வெட்டு நேரம் குறைந்திருக்கிறது.கொழும்பில் பெருநகரப் பகுதியில் எரிவாயு விநியோகம் ஒப்பீட்டளவில் சீராக உள்ளது..எரிபொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமாக மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்.

அரசாங்கமும் நேரத்துக்கு நேரம் ஏதோ ஒரு முறமையை அறிமுகப்படுத்துகிறது.கடைசியாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது “கியூஆர் கோட்”.ஆனால் அதற்குப் பின்னரும் எரிபொருள் சீராக கிடைக்கவில்லை. முறைமைகளை மாற்றுவதன்மூலம் மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தலாம் என்ற உத்தியை அரசாங்கம் முன்னெடுக்கிறது.ஆனால் எரிபொருள் வழமைபோல கிடைக்காது என்பதனால்தான் இப்படியெல்லாம் முறைமைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இயல்பாக எரிபொருளைப் பெற முடியாது என்ற நிலை இப்போதைக்கு மாறப்போவதில்லை என்று தெரிகிறது.ரணில் பதவி ஏற்க முன்பு காணப்பட்ட நீண்ட வரிசைகளுக்கும் இப்பொழுது காணப்படும் நீண்ட வரிசைகளுக்கும் இடையே ஒரு துலக்கமான வேறுபாடு உண்டு.என்னவெனில், மக்கள் எரிபொருள் வருவதற்கு சில நாட்களுக்கு முன்னரே வாகனங்களை தெருவோரங்களில் அடுக்கி வைத்து விட்டு செல்கிறார்கள் என்பதுதான்.அதாவது நிலைமை இப்பொழுதும் மாறவில்லை என்று பொருள். அப்படிப் பார்த்தால் அரகலயவுக்கான காரணங்கள் அப்படியே காணப்படுகின்றன.

எனவே மக்கள் மீண்டும் தெருவுக்கு வர மாட்டார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது.அரகலயவுக்கு ஆதரவாக கடந்தவாரம் கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒப்பீட்டளவில் எழுச்சியானது அல்ல.அது போல கடந்த 29ஆம் தேதி நாடு முழுவதும் பரவலாக ஒழுங்கு செய்யப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளும் பேரெழுச்சிகரமானவை அல்ல.எனினும் அரகலிய புதிய வடிவம் எடுக்கும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். மஹிந்தவை அகற்றியஅரகலயவை 1.0என்றும்.பசிலை அகற்றியது 2.0 என்றும், கோத்தாவை அகற்றியது 3.0என்றும், இனி ரணிலையும் அகற்றி சிஸ்டத்தை மாற்றுவது என்பது 4.0என்றும் அவர்கள் கூறுகிறார்கள். எனினும் இப்போதுள்ள நிலவரங்களின்படி அரகலய ஒப்பீட்டளவில் தணிந்து போய் இருக்கிறது என்பதே மெய்நிலை.

ரணில் விக்கிரமசிங்கவின் முறியடிப்பு நடவடிக்கைகளின் விளைவாக தாமரை மொட்டு கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் ஒப்பீட்டளவில் துணிச்சல் அடைந்திருப்பதாகத் தெரிகிறது.ஜேவிபியை விடுதலைப் புலிகளை கையாண்டது போல அரகலயவையும் கையாள வேண்டும் என்று அவர்களின் பலர் நம்புவதாக தெரிகிறது. அவர்கள் அப்படித்தான் நம்புவார்கள். ஏனென்றால் மேமாதம் ஒன்பதாம் திகதி கிடைத்த அனுபவம் அத்தகையது.இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் ஒரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வளவு தொகையாக சொத்துக்களை இழந்தமை,நஷ்டப்பட்டமை என்பது இதுதான் முதல்தடவை.கிட்டத்தட்ட நாடாளுமன்றத்தின் மூன்றில் ஒரு பகுதியினர் அதாவது தாமரை மொட்டுக் கட்சியின் ஏறக்குறைய 40 உறுப்பினர்களின் சொத்துக்கள் அவ்வாறு எரித்தழிக்கப்பட்டன.ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் ஒரு பிரதேச சபைத் தலைவரையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்தே கொலை செய்துவிட்டார்கள்.

இது அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அச்சுறுத்தலான ஒரு விடயம்.இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் அரசியல்வாதிகள் அந்தளவுக்கு அச்சப்பட்டவில்லை.முன்பு ஜெவிபியின் ஆயுதப் போராட்டத்தின்போது அரசியல்வாதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தது.தமிழ்மக்களின் ஆயுதப் போராட்டம் காரணமாகவும் தென்னிலங்கையில் அவ்வாறான ஒரு நிலைமை இருந்தது.ஆனால் ஒரு இரவுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் எரித்து அழிக்கப்பட்டமை என்பது இதற்கு முன்னபொழுதும் நடந்ததில்லை.எனவே தமக்கு ஏற்பட்ட நட்டத்துக்கு எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்றுதான் தாமரைமொட்டுக் கட்சியை சேர்ந்தவர்கள் சிந்திப்பார்கள்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதிலிருந்து அவர்களுக்கு படிப்படியாக துணிச்சல் அதிகரித்து வருகிறது. ரணில் விக்கிரமசிங்க முதலில் ராஜபக்சக்களை பாதுகாத்தார். உள்நாட்டிலும் பாதுகாக்கிறார்,வெளிநாட்டிலும் பாதுகாக்கிறார்.இரண்டாவதாக மே9 தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கானவர்களை கைது செய்தார். இப்பொழுது அடுத்தகட்டமாக ஜூலை ஒன்பதாம்திகதி அரச கட்டிடங்களை ஆக்கிரமித்தவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் பலர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.ரணில் ஜனாதிபதியாக வந்ததும் ராஜபக்சங்களுக்கும் தாமரை மொட்டு கட்சிக்கும் துணிச்சல் கூடியிருக்கிறது. கோட்டா நாடு திரும்புவார் என்று பகிரங்கமாகக் கூறும் ஒரு நிலைமை வந்திருக்கிறது. மஹிந்த ராஜபக்ச இப்பொழுது கூறுகிறார் “நான் எப்போதும் மக்களுடன்தான் இருக்கின்றேன். நாட்டை விட்டு ஓடும் எண்ணம் எனக்குக் கிடையாது. பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த நான், நாட்டைவிட்டு ஏன் ஓட வேண்டும்?” என்று. சுசில் பிரேம் ஜயந்த கூறுகிறார்…அரகலயவின் பின்னணியில் புலிகள் இயக்கத்தின் நிழல் இருக்கின்றது, ஈஸ்டர் குண்டு வெடிப்பின் நிழல் இருக்கின்றது வெளி நாட்டுச் சக்திகளின் பண உதவி இருக்கின்றது என்று.

அதாவது அரகலயவை தோற்கடிப்பதற்கு இனவாதத்தை கையில் எடுக்கிறார்கள்.ரணில் தாமரை மொட்டின் கைதியாக காணப்படும் யானை. தனிப்பட்ட முறையில் அவருடைய வீடு எரிக்கப்பட்டிருக்கிறது.அவருடைய செல்லப்பிராணியான நாய் கொல்லப்பட்டிருக்கிறது.இவற்றின் தாக்கம் அவருடைய முடிவுகளைத் தீர்மானிக்கும்.பிரதமராக தெரிவு செய்யப்பட்டதும் அவர் அரகலயவின் நண்பர் போலத் தோன்றினார். அரகலயவை கவனிப்பதற்கு என்று தனது மருமகனை நியமித்தார்.ஆனால் இப்பொழுது அவர் முழுக்க முழுக்க அரகலயவின் எதிரியாகக் காணப்படுகிறார்.

எந்த மக்கள்எழுச்சி அவருக்கு,அவருடைய அரசியல் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் புது வாழ்வைக் கொடுத்ததோ,அதே மக்கள் எழுச்சியை அவர் நசுக்க முற்படுகிறார்.இது ஏறக்குறைய பிரெஞ்சுப் புரட்சியை நினைவுபடுத்துகிறது.பிரெஞ்சுப் புரட்சியோடு அரகலயவை ஒப்பிட முடியாது என்பதை கட்டுரை ஏற்றுக்கொள்கிறது.எனினும், இப்போதுள்ள நிலைமைகளின்படி அரகலயவை சில விடயங்களில் பிரஞ்சு புரட்சியோடு ஒப்பிடலாம்.பிரெஞ்சு புரட்சியானது மன்னர்களுக்கு எதிராக தோற்றம் பெற்றது. ஆனால் அதன் வெற்றிக்கனிகள் அனைத்தையும் நெப்போலியன் சுவிகரித்துக் கொண்டார்.அது மட்டுமல்ல,அவர் தன்னை பேரரசனாகவும் பிரகடனப் படுத்திக்கொண்டார்.எந்த மன்னர் ஆட்சிக்கு எதிராக பிரெஞ்சுப்புரட்சி தோற்றம் பெற்றதோ,அதே புரட்சியின் விளைவானது ஒரு பேரரசனை உருவாக்கியது.

அப்படித்தான் இலங்கைதீவிலும். எந்த ராஜபக்ச குடும்பத்தை அகற்ற வேண்டும் என்று கேட்டு மக்கள் தெருவில் இறங்கினார்களோ,அதே ராஜபக்ச குடும்பம் ரணிலை ஒரு முன்தடுப்பாக முன்நிறுத்தி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தன்னை பாதுகாத்துக் கொண்டு விட்டது. அந்தக் குடும்பத்தின் கட்சியான தாமரை மொட்டுக்கட்சி நாடாளுமன்றத்தில் தன்னை மறுபடியும் நிலைநிறுத்திக் கொண்டு விட்டது.கடந்தகிழமை நடந்த அவசரகால சட்டத்துக்கான வாக்கெடுப்பிலும் அது தெரிந்தது. தாமரை மொட்டுக்கட்சி இப்பொழுதும் நாடாளுமன்றத்தில் பலமாகக் காணப்படுகிறது.

அரகலயக்கார்கள் சிஸ்டத்தில் மாற்றத்தை கேட்டார்கள்.ஆனால் எந்த சிஸ்டமும் மாறவில்லை. மாறாக,போராடிய செயற்பாட்டாளர்கள்தான் தலைமறைவாக வேண்டிய நிலைமை வந்திருக்கிறது.இதைப் பிழிவாகச் சொன்னால் 69 லட்சம் வாக்குகளை பெற்ற யுத்த வெற்றி நாயகர்களை துரத்திய ஒரு போராட்டத்தை,சுமார் முப்பதாயிரம் வாக்குகளைப் பெற்ற ஒருவர் தோற்கடிக்கப் பார்க்கிறார்.

Posted in Uncategorized

பாராளுமன்ற கூட்டத்தொடர் எவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்படும்? – சரியாகாத் தெரிந்துகொள்வோம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 ஜூலை 28 ஆம் திகதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகும்.

பாராளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடப்புப் பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய கூட்டத்தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டமையைக் காணமுடியும். இவ்வாறு பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரொன்றை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டரீதியான ஏற்பாடுகள் தொடர்பில் வரலாற்றுரீதியான மற்றும் பிரயோகரீதியான பின்னணி பற்றிக் கண்டறிவது முக்கியமானதாகும்.

கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் அதிகாரம் யாருக்குக் காணப்படுகின்றது?

அரசியலமைப்பின் 70(1) உறுப்புரைக்கு அமைய பாராளுமன்றத்தை கூடுமாறு அழைக்கும், கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் மற்றும் கலைக்கும் பூரண அதிகாரம் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது.

புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் தினம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது?

அரசியலமைப்பின் 70(3) உறுப்புரைக்கு அமைய பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் பிரகடனத்திலேயே (வர்த்தமானி அறிவித்தல்) புதிய கூட்டத்தொடருக்கான திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும். அந்தத் திகதி கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் பிரகடனத் திகதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு மேற்படாத ஒரு தினமாக இருக்க வேண்டும்.

எனினும், பாராளுமன்றக் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவந்து மீண்டும் ஆரம்பிக்கும் திகதியை பிரகடனப்படுத்தியிருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் குறித்த திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூடுமாறு அழைப்பதற்கு அரசிலமைப்பின் 70(3)(i) உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, மீண்டும் பிரகடனம் (வர்த்தமானி அறிவித்தல்) ஒன்றின் மூலம் அவ்வாறு பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு எதிர்பார்க்கும் தினத்தைப் பிரகடனப்படுத்தப்படுவதுடன், குறித்த பிரகடனத்தின் திகதியிலிருந்து மூன்று நாட்களுக்குப் பிந்திய ஒரு தினத்தில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாபதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவருவதனால் பாராளுமன்றத்தின் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்படுகின்றனவா?

பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரும் போது, அதன் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்படுவதாக பலர் கருதுகின்றனர். எனினும் அது அவ்வாறு இடம்பெறுவதில்லை.

கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் போது, சபாநாயகர் தொடர்ந்தும் தனது பணிகளை மேற்கொள்வார். அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்கள் அமர்வுகளில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அவர்களது உறுப்பினர் பதவிகள் அவ்வாறே காணப்படுகின்றது. எனினும், கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் போது அதுவரை பாராளுமன்றத்தில் காணப்பட்ட அனைத்து அலுவல்களும் இடைநிறுத்தப்படுவதுடன் குற்றப்பிரேரணை (Impeachment) தவிர்ந்த அதுவரை சபையில் இடம்பெற்றுவந்த அனைத்து செயற்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

எனினும், குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பாக சட்ட மூலமொன்று, பிரேரணையொன்றோ அல்லது கேள்வியொன்றோ ஒரே கூட்டத்தொடரில் இரண்டாவது முறையாக முன்வைக்க முடியாது. ஆனால், கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவந்ததன் பின்னர் எதிர்வரும் கூட்டத்தொடருக்கு கொண்டுசெல்ல வாய்ப்பு உள்ளது.

“பாராளுமன்றத்தின் முன்னர் உரிய முறையில் கொணரப்பட்டுள்ளவையும் பாராளுமன்றத்தின் அமர்வு நிறுத்தப்பட்ட நேரத்தில் முடிவுசெய்யப்படாதிருந்தவையுமான எல்லாக் கருமங்களும், அடுத்த அமர்வின்போது, விட்ட நிலையிலிருந்து தொடர்ந்து கையாளப்படலாம்.” என அரசியலமைப்பின் 70(4) ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் இந்த ஏற்பாடுகளின் கீழ் பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அலுவல்கள் இரத்துச் செய்யப்படுவதில்லை. இதன்போது, பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டவுடனேயே எதிர்வரும் அலுவல்களை அவ்வாறே முன்னெடுத்துச் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கின்றது.  இங்கு முன்னெடுக்கப்பட வேண்டிய அரசாங்கத்தின் அலுவல்களை சபை முதல்வர் தீர்மானிப்பதுடன், தனியார் உறுப்பினர் சட்டமூலம் அல்லது பிரேரணை என்பவற்றை மீண்டும் புதிதாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போது ஒழுங்குப் பத்திரத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சபை அலுவல்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டுமானால் அவற்றை மீண்டும் பட்டியலிடுவது அவசியமாகும்.

பாராளுமன்றக் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் போது அனைத்துக் குழுக்களும் இரத்தாகின்றனவா

பாராளுமன்றக் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் போது பாராளுமன்ற குழுக்களுக்கு என்ன நடக்கின்றது என்பது அனைவருக்கும் எழும் கேள்வியாகும். இதில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கம் 109, 111(2), 124(5), 125(1) என்பவற்றுக்கு அமைய முறையே பாராளுமன்ற விசேட குழுக்கள், துறைசார் மேற்பார்வைக் குழுக்கள், உயர் பதவிகள் பற்றிய குழு மற்றும் இணைப்புக் குழு தவிர்ந்த ஏனைய அனைத்துக் குழுக்களும் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கும் போது மீண்டும் நியமிக்கப்படுகின்றன. இங்கு நிலையியற் கட்டளை 125(1) க்கு அமைய இணைப்புக் குழுவுக்கு உறுப்பினர்கள் பதவியடிப்படையில் (சபாநாயகர், பிரதி சபாநாயகர் போன்ற பதவிகளின் அடிப்படையில்) நியமிக்கப்படுவதனால் அதில் மாற்றம் ஏற்படுவதில்லை.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கம் 114 க்கு அமைய ஒவ்வோர் புதிய கூட்டத்தொடரின் போதும் தெரிவுக்குழு புதிதாக நியமிக்கப்படுகின்றது. இதில் சிறப்பு நோக்கங்களுக்கான கீழே குறிப்பிட்டுள்ள அனைத்துக் குழுக்களும் பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் போது இரத்தாகின்றன.

  • அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்
  • சட்டவாக்க நிலையியற் குழு
  • பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு
  • நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு
  • சபைக் குழு
  • ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு
  • அரசாங்க கணக்குகள் பற்றிய குழு
  • அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு
  • அரசாங்க நிதி பற்றிய குழு
  • பொது மனுக்கள் பற்றிய குழு
  • பின்வரிசை குழு

பாராளுமன்றத்தில் புதிய கூட்டத்தொடரொன்று எவ்வாறு ஆரம்பிக்கப்படுகின்றது?

பாராளுமன்றத்தில் புதிய கூட்டத்தொடரொன்று எவ்வாறு ஆரம்பிக்கப்படுகின்றது?

பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படும் போது வைபவரீதியாக திறந்துவைத்தல் அத்தியாவசியமானதொன்றல்ல. எனினும் புதிய கூட்டத்தொடர் வைபவரீதியாக ஆரம்பிக்கப்பட வேண்டுமானால், அது கட்டாயம் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறும்.

பாராளுமன்றத்தின் ஒவ்வோர் கூட்டத்தொடரின் ஆரம்பத்திலும் அரசாங்கத்தின் கொள்கைப்பிரகடனம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது. அதற்கமைய ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்கவினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் எதிர்வரும் ஆகஸ்ட் 03 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

அரசியலமைப்பின் 33(அ) உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும், அரசியலமைப்பின் 33(ஆ) உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்தின் சடங்குமுறையான அமர்வுகளில் தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகின்றது.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் என்றால் என்ன?

பாராளுமன்றத்தின் ஒவ்வோர் கூட்டத்தொடரினதும் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் காணப்படுகின்றது. இதன்போது ஜனாதிபதியினால் அவரது அரசங்கத்தின் எதிர்கால நோக்கு தொடர்பிலான விளக்கமான பகுப்பாய்வு கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக பாராளுமன்றத்துக்கும் மக்களுக்கும் முன்வைக்கப்படும்.

கடந்த காலத்தில் இது மகா தேசாதிபதியால் வழங்கப்படும் அக்கிராசன உரை என்று அறியப்பட்டது.

1978 முதல் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியால் முன்வைக்கப்படும் கொள்கைப் பிரகடனம் இதுவரை விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டோ, வாக்கெடுப்புக்கு விடப்பட்டோ இல்லை.

இலங்கைப் பாராளுமன்றத்தில் ஒவ்வோர் பாராளுமன்றத்திலும் ஆரம்பிக்கப்பட்ட புதிய கூட்டத்தொடர்களின் எண்ணிக்கை

1947 ஆம் ஆண்டு முதல் இற்றை வரை சுமார் 50 தடவைகள் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாக பாராளுமன்ற பதிவுகள் குறிப்பிடுகின்றன. 1978 ஆம் ஆண்டு முதல் இதுவரை 25க்கும் மேற்பட்ட பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள் இடம்பெற்றுள்ளன. அவை வருமாறு;

  • 09.07 ஆம் திகதி ஆரம்பமான முதலாவது பாராளுமன்றம் 1988.12.20 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் ஏழு கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
  • 03.09 ஆம் திகதி ஆரம்பமான இரண்டாவது பாராளுமன்றம் 1994.06.24 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் ஐந்து கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
  • 08.25 ஆம் திகதி ஆரம்பமான மூன்றாவது பாராளுமன்றம் 2000.08.18 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் மூன்று கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
  • 10.18 ஆம் திகதி ஆரம்பமான நான்காவது பாராளுமன்றம் 2001.10.10 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் மூன்று கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
  • 12.19 ஆம் திகதி ஆரம்பமான ஐந்தாவது பாராளுமன்றம் 2004.02.09 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் இரண்டு கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
  • 04.22 ஆம் திகதி ஆரம்பமான ஆறாவது பாராளுமன்றம் 2010.02.09 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் நான்கு கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.

(அவசரகால ஒழுங்குவிதிகளை நிறைவேற்றுவதற்காக கலைக்கப்பட்ட பாராளுமன்றம் 2010.03.09 மற்றும் 2010.04.06 ஆம் திகதிகளில் மீளக் கூட்டப்பட்டது)

  • 04.22 ஆம் திகதி ஆரம்பமான ஏழாவது பாராளுமன்றம் 2015.06.26 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் ஒரு கூட்டத்தொடரை மாத்திரம் கொண்டிருந்தது.
  • 09.01 ஆம் திகதி ஆரம்பமான எட்டாவது பாராளுமன்றம் 2020.03.02 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் நான்கு கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
  • 08.20 ஆம் திகதி ஆரம்பமான ஒன்பதாவது பாராளுமன்றம் இற்றை வரை இரண்டு கூட்டத்தொடர்களை கொண்டுள்ளது.

ஈழத்-தமிழர் அரசியலின் தந்திரோபாய வறுமை மீண்டுமொரு முறை நிரூபணமானது

யதீந்திரா
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பெரும்பாண்மை வாக்குகளால் தெரிவாகியிருக்கின்றார். அந்த வகையில் ‘ஒப்பிரேசன் ரணில்’ வெற்றிபெற்றுவிட்டது. இதனை சிலர் ராஜபக்சக்களின் வெற்றியென்று கூறலாம் ஆனால் இந்தக் கட்டுரையாளர் அப்படிக் கருதவில்லை. ஏனெனில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாவதற்கான திட்டங்கள் மிகவும் கச்சிதமாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. கோட்டபாய ராஜபக்சவிற்கு எதிராக, கிளர்சிகள் அதிகரித்த போது, நிலைமைகளை சமாளிக்கும் ஒரு உக்தியாகவே ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால் ரணில் பிரதமராக நியமிக்கப்பட்ட போதே, ரணில் ஜனாதிபதியாவதற்கான திட்டம் ரணிலிடம் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இது சாத்தியப்பட்டிருக்காது. ரணில் பிரதமரான போதே, கோட்டபாயவினால் அதிக காலம் பதவியில் நீடிக்க முடியாதென்னும் விடயத்தை ரணில் கணித்திருக்க வேண்டும். கோட்;டபாய விலகியதை தொடர்ந்து, ரணில் பதில் ஜனாதிபதியானார். 69 லட்சம் வாக்குகளால் வெற்றிபெற்ற ஜனாதிபதி ஒருவரின் வீழ்ச்சியை தொடர்ந்து, அதற்கு சமதையான வாக்குகளை பெற்றிருக்கும் 134 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் ஜனாதிபதியாகியிருக்கின்றார். இப்போது ரணில் கேள்விகளுக்கு அப்பாற்றபட்டவர்.

இந்த விடயத்தை எவ்வாறு கையாளுவது என்பதில்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டுமொரு முறை சறுக்கியிருக்கின்றது. யுத்தத்திற்கு பின்னரான கடந்த 13வருடங்களில், அரசியலை தந்திரோபாய ரீதியில் கையாளும் விடயத்தில் சம்பந்தன் தொடர்ந்தும் தோல்விகளையே சந்தித்திருக்கின்றார். தொடர் தோல்வியில் இப்போது புதிதாக சேர்ந்திருப்பதுதான் டளஸ் அழகப்பெருமவை ஆதரித்த பிரச்சினையாகும். புதிய ஜனாதிபதிக்கான விடயம் விவாதத்திற்கு வந்த நாளிலிருந்தே, தமிழரசு கட்சியை தீர்மானிக்கவல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பொது வெளிகளில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நிலைப்பாடுகளையே முன்வைத்துவந்தார். சுமந்திரனின், தெரிவு சஜித்பிரேமதாசவாகவே இருந்தது. ஆனால் சஜித்பிரேமதாச திடிரென்று போட்டியிலிருந்து விலகியதை தொடர்ந்து, ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுனவின் பொருளாளர் டளஸ் அழகப்பெருமவை ஆதரிக்கும் விவகாரம் சூடுபிடித்தது.

ஆனால் இதில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே மாறுபட்ட அப்பிராயங்கள் இருந்ததை தனிப்பட்டரீதியில் இந்தக் கட்டுரையாளர் அறிவார். இவ்வாறானதொரு சூழலில்தான், இதில் கூட்டமைப்பு எடுக்கக் கூடிய ஆகச் சிறந்த முடிவு தொடர்பில், இந்தக் கட்டுரையாளர் சில விடயங்களை வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு கடிதமொன்றையும் அனுப்பியிருந்தேன். அதாவது, ஜனாதிபதி போட்டியிலிருந்து கூட்டமைப்பு விலகியிருப்பதுதான், சரியானதென்று சுட்டிக்காட்டியிருந்தேன். இதன் மூலம் ஜனாதிபதியாக எவர் தெரிவு செய்யப்பட்டாலும் அவருடன் பணியாற்றுவதற்கு, புதிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு இலகுவாக இருக்குமென்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால் வழமைபோலவே, சம்பந்தனும் சுமந்திரனும் பழைய பாணியில் சிந்தித்து, விடயங்களை குழப்பினர்.
தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் சிவில் சமூகம் மற்றும் புத்திஜீவிகள் என்போர் – ஒரு விடயத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, நாம் என்னவகையான அரசியலை மேற்கொள்கின்றோம்? இந்தக் கேள்வியிலிருந்துதான் ஒவ்வொரு விடயங்களை பறறியும் சிந்திக்க வேண்டும். இன்று நாம் முன்னெடுக்கும் அரசியலானது, பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியலாகும். அதன் ஆற்றலுக்கு ஒரு எல்லையுண்டு. அதாவது, தேர்தல்கள் மூலம் கிடைக்கப்பெறும் பிரதிநித்துவ பலத்தின் அடிப்படையில், பேரம்பேசி விடயங்களை வெற்றிகொள்வதை பற்றித்தான், நாம், இங்கு சிந்திக்க முடியும். இது ஒன்றுதான், தற்போது தமிழர்களிடமுள்ள அரசியல் வறிமுறையாகும்.

இந்த வழிமுறையில் முன்னெடுக்கப்படும் அரசியலின் மூலம் வெற்றிகளை அடைய வேண்டுமாயின், தந்திரோபாயங்கள் மட்டுமே கைகொடுக்கும். அதே வேளை இங்கு வெற்றியென்பது முழுமையானதல்ல என்னும் புரிதலும் நம்மிடமிருக்க வேண்டும். எனவே பெறக் கூடியவைகளை பெறுவதென்பததான் வெற்றியாகும். ஏனெனில், விடயங்கள் தோhல்விடையும் போது, தமிழர் தரப்பில் அரசை, கீறங்கிவரச் செய்வதற்கான மாற்று வழிகள் இல்லை. எனவே முழுமையான அரசியல் வெற்றியென்பது தமிழர் அரசியலின் இலக்காக இருக்கவே முடியாது. உதாரணமாக பேச்சுவார்த்தைகள் தோல்வியடைகின்ற போது, விடுதலைப் புலிகள் அந்தத் தோல்வியை இராணுவ வெற்றிகள் மூலமே சரிசெய்துகொண்டனர். இதன் மூலம் மீளவும் அரசாங்கத்தை தங்களை நோக்கி வரவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தினர். இவ்வாறான அணுகுமுறை ஆயுதப் போராட்ட அரசியலில் மட்டுமே சாத்தியப்படும். ஜனநாயக அரசியலில் தந்திரோபாயங்கள் மூலம் மட்டுமே நலன்களை வெற்றிகொள்ள முடியும்.

யுத்தம் நிறைவுற்ற காலத்திலிருந்து, கூட்டமைப்பு, ஏனைய தமிழ் தேசிய சிறுகட்சிகள், தமிழ் சிவில் சமூகம், புலம்பெயர் அமைப்புக்கள் என, அனைவரும் பல்வேறு தளங்களில் இயங்கியிருகின்றனர். ஜ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி, இந்தியாவை நோக்கி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கி;ன்றனர். இவைகள் எவையும் தந்திரோபாயங்கள் அல்ல. மாறாக, சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கான செயற்பாடுகள் மட்டுமே. ஒரு குறிப்பிட்டளவு அழுத்தங்களும் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இவ்வாறான அழுத்தங்களின் ஊடாக, ஏதாவது வாய்ப்புக்கள் கிடைக்கும் போது, அதனை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்வதுதான் அரசியல் தந்திரோபாயமாகும். ஏனெனில் சர்வதேச அழுத்தங்கள் என்பவை நிரந்தரமானதல்ல. அவை மாற்றமடையக் கூடியவை. கொழும்பின் ஆட்சியாளர்களின் அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்ற போது, சிறிலங்காவின் மீதான அழுத்தங்களும் மாற்றமடைந்துவிடும். இந்த இடைப்பட்ட காலத்தில் கிடைப்பதுதான் வாய்ப்புக்கள், அந்த வாய்ப்புக்களை திறம்பட கையாளுவதில்தான் தமிழர் அரசியலின் வெற்றி தங்கியிருக்கின்றது. இந்த விடயங்களை தமிழர் தரப்புக்களால் புரிந்து கொள்ள முடியாமல் போகும் ஒவ்வொரு சந்தர்பங்களிலும், தமிழ் மக்களுக்கு வெறும் சுலோகங்கள் மட்டுமே மிஞ்சும்.

இப்போது மீண்டும் ஜனாதிபதி தெரிவு விவகாரத்திற்கு வருவோம். நான் முன்னர் குறிப்பிட்டது போன்று, ரணிலை எதிர்க்கும் நோக்கில் சிந்திக்காமல், வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதன் மூலம் ரணிலை எதிர்நிலைக்கு கொண்டுபோகாமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த ஜனாதிபதி தெரிவின் போது, ஒரு வேளை ரணிலை ஆதரிக்கும் முடிவெடுத்திருந்தாலும் கூட, அது பிரச்சினைக்குரிய ஒன்றல்ல. ஏனெனில், இரண்டு பக்கத்திலுமே மொட்டு அணியினரின் ஆதிக்கம்தான் மேலோங்கியிருந்தது. ஒரு புறம் மொட்டு உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்கவும் மறுபுறும் மொட்டு கட்சியின் சார்பில் டளஸ் அளகப்பெருமவும் போட்டியிட்டிருந்த நிலையில், கூட்டமைப்பிற்கு இதில் தலையீடு செய்ய வேண்டிய தேவையிருந்திருக்கவில்லை. ஒரளவு பொருத்தமானவர் என்னுமடிப்படையில் கூட்டமைப்பினர் வாக்களிக்க விரும்பியிருந்தால், ரணில் விக்கிரமசிங்கதான் கூட்டமைப்பினரின் தெரிவாக இருந்திருக்க முடியும். ஏனெனில், ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டமைப்பினர் முன்னர் இணைந்து பணியாற்றியிருந்தனர். இந்த பின்புலத்தில் ரணிலை ஆதிரிப்பதில் பெரிய அரசியல் சிக்கல்கள் இருந்திருக்கவில்லை. எனினும் கொள்கையடிப்படையில் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டிய தேவையிருந்திருப்பின் நடுநிலை வகிப்பதே ஒரேயொரு சிறந்த தெரிவாக இருந்தது. ஆனால் சம்பந்தனால் தந்திரோபாய ரீதியில் செயற்பட்டிருக்க முடியவில்லை. ஏனெனில் அவ்வாறான அரசியல் ஆளுமை அவரிடம் இல்லை, அவரிடம் மட்டுமல்ல, தமிழ் சூழலிலேயே தந்திரோபாயம் தொடர்பான புரிதல் மிகவும் பலவீனமாகவே இருக்கின்றது. அரசியலை வெறும் உணர்வுரீதியில் புரிந்துகொள்வதற்கே பெரும்பாலான தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் பழக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை நெறிப்படுத்த வேண்டிய, புத்திஜீவிகள்; மற்றும் கருத்துருவாக்கிகள் மத்தியிலும் தந்திரோபாய அரசியல் சார்ந்து ஆழமான புரிதல்கள் இல்லை. அவர்களில் அனேகரும் உணர்வுரீதியாகவே விடயங்களை அணுக முற்படுகின்றனர். தாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை சிறிலங்கா ஏற்றுக்கொள்ளாவிட்டால், அரசை இறங்கிவரச் செய்வதற்கான மாற்றுவழிகள் தொடர்பில் எவரும் பேசுவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு அது தெரியாது.

உதாரணமாக சிலர் இடைக்கால அரசாங்கம் பற்றி கற்பனைகளை முன்வைக்கின்றனர். அதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தமிழர் தரப்புக்கள் என்ன செய்யும்? விடுதலைப் புலிகள் பாணியில் தாக்குதலை தொடுப்பீர்களா? பொத்துவில் தொடங்கி பொலிகண்டி போன்ற நடவடிக்கைகளால் கொழும்மை இறங்கிவரச் செய்ய முடியாது. ஏனெனில் வடக்கு கிழக்கில் இடம்பெறும் இது போன்ற நடவடிக்கைகளால் கொழும்பின் நிர்வாகம் முடங்கப்போவதில்லை. அண்மையில் இடம்பெற்ற சிங்கள இளைஞர்களின் பொருளாதார நெருக்கடி கோபம், எவ்வாறு கொழும்மை இறங்கிவரச் செய்தது என்;பது ஒரு நல்ல உதாரணமாகும். அவ்வாறான ஒரு நடவடிக்கையை வடக்கு கிழக்கில் மேற்கொண்டிருந்தால், அது கொழும்பிலுள்ளவர்களுக்கு ஒரு புதினமாகவே இருந்திருக்கும்.

எனவே விடயங்களை தொகுத்து நோக்கினால் தந்திரோபாயரீதியில் தீர்மானங்களை எடுக்க வேண்டிய ஒவ்வொரு சந்தர்பங்களிலும், சம்பந்தன் இடறிவிழுபராகவே இருந்திருக்கின்றார். இதற்கு என்ன காரணம்? சம்பந்தன் அரசியலில் காலாவதியாகிவிட்டார். சம்பந்தன் மட்டுமல்ல இன்னும் பலரும் அவ்வாறான நிலையில்தான் இருக்கின்றனர். ஆனால் தமிழ் வாக்காளர்களின் அறியாமையும், ஞாபக மறதியும் அவ்வாறானவர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது. தந்திரோபாய அரசியலுக்கு முன்னுரிமையளிக்கின்ற, வெறும் உண்ர்ச்சிகர அரசியலுக்கு மயங்காத ஒரு புதிய தலைமுறை தமிழ் தேசிய அரசியலை கைப்பற்றாதவரையில், இவ்வாறான பழம் அரசியலில் எந்தவொரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை. சில தினங்களுக்கு முன்னர் ஒரு சிங்கள சட்டத்தரணியோடு பேசிக் கொண்டிருந்த போது, அவர் ஒரு விடயத்தை குறிப்பிட்டார். அடுத்த தேர்தலில் குறைந்தது எழுபதிற்கு மேற்பட்ட புதியவர்கள், இளைஞர்கள், தெற்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வரக்கூடும் என்றார். கூடவே, தமிழ் பகுதியில் நிலைமையென்ன என்று கேட்டார். தமிழ் வாக்காளர்களை நம்பி எவ்வாறு பதிலளிக்க முடியும்?

Posted in Uncategorized

இந்தியாவிற்கு அருகில் ஒரு கிளர்ச்சியா?

யதீந்திரா?
ராஜபக்சக்களை அதிகாரத்திலிருந்து அகற்றுதல் என்னும் இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட தென்னிலங்கை கிளர்ச்சியானது, சற்றும் எதிர்பாராத வகையில் உத்வேகத்துடன் தொடர்கின்றது. கிளர்சியாளர்களின் முதலாவது இலக்கு நிறைவேறிவிட்டது. ராஜபக்சக்களின் ராம்ராஜ்யத்தை சரித்துவிட்டனர். கோட்டபாயவின் வெளியேற்றத்துடன் ராஜபக்சக்களின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனாலும் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்தும் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். முதலில் கோட்டபாய ராஜபக்சவை இலக்கு வைத்து கிளர்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் தற்போது, ரணில் விக்கிரமசிங்கவை இலக்கு வைத்து கிளர்ச்சியை தீவிரப்படுத்திவருகின்றனர். இதன் ஆரம்பக்கட்டமாகவே பிரதமர் அலுவலகத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். தற்போது அவற்றிலிருந்து வெளியேறியிருந்தாலும் கூட, தங்களால் எவ்வேiளையிலும் அரசாங்கத்தை முடக்க முடியுமென்பதே அவர்கள் கூறமுற்படும் செய்தியாகும். அவர்களின் அடுத்த இலக்கு நாடாளுமன்றமாகும்.

விடயங்களை தொகுத்து நோக்கினால், கிளர்சியாளர்களின் இலக்கு ராஜபக்ச ஆட்சியாளர்களை அகற்றுவது மட்டும்தானா அல்லது இலங்கைத் தீவின் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றுவதா – என்னும் கேள்வி எழுகின்றது? ஏனெனில் கிளர்சியாளர்களால் முன்வைக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள் பல நடைமுறைக்கு சாத்தியமானவைகள் அல்ல. மாறாக, தற்போதுள்ள அரசியல் கட்டமைப்புக்கள் மூலம் நடைமுறைப்படுத்த முடியாதவை. இதனை தெரியாமல் முன்வைக்கின்றனரா அல்லது அரசியல் கிளர்ச்சியை தொடர்வதற்கான ஒரு உபாயமாக முன்வைக்கின்றனரா?

சிறிலங்காவின் அரசியல் வரலாற்றில் தென்னிலங்கை இரண்டு ஆயுத கிளர்ச்சிகளை கண்டிருக்கின்றது. 1971 மற்றும் 1989இல் ஜே.பி.வி இரண்டு முறை அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தது. 1971 கிளர்ச்சியை அடக்குவதற்கு அப்போதைய சிறிலங்காவின் தலைவர், சிறிமாவோ பண்டாரநாயக்க, இந்தியாவின் உதவியை நாடியிருந்தார். இந்தியாவின் உதவி இல்லாவிட்டால் ஜே.வி.பி கிளர்சியாளர்களை இராணுவ ரீதியில் அடக்க முடியாமல் போயிருக்கும். தோல்வியடைந்த ஜே.வி.பியினர் மீளவும் 1989இல், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான கிளர்ச்சியை முன்னெடுத்திருந்தனர். இதன் போது, இந்திய எதிர்ப்பே ஜே.வி.பியின் பிரதான இலக்காக இருந்தது. இரண்டு கிளர்ச்சிகளின் போதும் மோசமான தோல்வியை சந்தித்த, ஜே.வி.பி, பின்னர் தங்களை ஜனநாயகரீதியானதொரு கட்சியாக உருமாற்றிக்கொண்டது. ஜே.வி.பியினர், தென்னிலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் தங்களுக்கான செல்வாக்கை தக்கவைத்துக் கொள்வதில் ஆரம்பத்திலிருந்தே பிரதான கவனம் செலுத்திவந்திருக்கின்றனர்.

இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட தலைமுறையைச் சேர்ந்தவர்களின் வழிகாட்டுதலில்தான் தற்போதைய கிளர்ச்சியும் திட்டமிடப்பட்டிருக்கின்றது. ஜே.வி.பி தலைவர் ருகுணு விஜயவீர தலைமையிலான சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட ஒரு தலைமுறையினரும் இதில் பிரதான பங்கு வகிக்கின்றனர். கோல்பேஸ், கோட்டா கோ கோம் எதிர்ப்பு அணியில் பல தரப்பினரும் இருந்ததாக சொல்லப்பட்டாலும் கூட, தற்போது இடம்பெற்றுவரும் கிளர்ச்சியில், முற்றிலும் இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர்களே பெருபாண்மையாக இருக்கின்றனர். ஒரு வேளை கொழும்பு மைய சிவில் சமூகக் குழுக்களோ அல்லது அரசுசாரா நிறுவனங்களை சேர்ந்தவர்களோ இதில் முன்னணியில் இருந்திருந்தால், ரணிலால் அவர்களை இலகுவாக கையாண்டிருக்க முடியும். அத்துடன் அவ்வாறானவர்கள் இந்தளவிற்கு துனிகரமாக இதனை முன்னெடுக்கவும் மாட்டார்கள். கிடைக்கும் தகவல்களின்படி, இந்த கிளர்ச்சியின் பின்னாலிருப்பவர்களில், முதன்மையானவர்களாக, குமார் குணரட்ணம் தலைமையிலான முன்னணி சோசலிச கட்சியை சேர்ந்தவர்களே இருக்கின்றனர். இதனை குமார் குணரட்ணமும் மறுக்கவில்லை அத்துடன், இடதுசாரி சிந்தனைகளை வரித்துக் கொண்டிருக்கும், அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியமும் பிரதான பங்குவகிக்கின்றது. பல தொழிற்சங்கங்களும் இதில் பங்கு வகிக்கின்றன. தென்னிலங்கை தொழிற்சங்கள் அனைத்துமே பெருமளவிற்கு இடதுசாரித்துவ அதே வேளை இந்திய எதிர்ப்பு சிந்தனைப் போக்குடையவையாகும். அதே வேளை ஜே.வி.பியின் ஆதரவைப் பெற்றிருக்கும் ஒரு அணியினரும் இதன் பின்னாலிருக்கின்றனர். ஆனால் புரட்சிகர அரசியல் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுதல் என்னுமடிப்படையில் செயற்படக்கூடிய, அனுபமுள்ளவராக குமார் குணரட்ணமே இருக்கின்றார்.

தற்போது இடம்பெற்று வரும் கிளச்சியை எவ்வாறு புரிந்து கொள்வது என்பது முக்கியமானது. ஆரம்பத்தில் ராஜபக்சக்களை அகற்றுதல் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. இப்போது அவர்கள் முன்வைத்திருக்கும் நிபந்தனைகள் எவையுமே ஆரம்பத்தில், அவர்களிடம் இருந்திருக்கவில்லை. ஆனால் இம்மாதம் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய பின்னர்தான், அவர்களில் சில மாற்றங்கள் தெரிந்தன. தங்களை தவிர்த்து அரசியல்வாதிகள் எவரும் இயங்க முடியாதென்னும் நிலைப்பாட்டிற்கு தாவினர். ஜனாதிபதி மாளிகை கிளர்சியாளர்களின் கைகளில் விழுந்ததை தொடர்ந்தே, கோட்டபாய ராஜபக்ச பதவி விலகும் முடிவை எடுத்திருந்தார். அதுவரையில், தனது பதவிக் காலம் முடியும் வரையில், தான் வெளியேறப் போவதில்லையென்னும் முடிவிலேயே இருந்தார். ஆனால் கிளர்ச்சியாளர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றியை தொடர்ந்து, கோட்டபாயவின் அனைத்து கனவும் கலைந்தது.

இந்த இடம்தான் கிளர்சியாளர்களுக்கு உற்சாகத்தை வழங்கியிருக்க வேண்டும். கோட்டபாயவை வெளியேற்றும் அவர்களின் முயற்சியின் போது இராணுவம் குறுக்கிடவில்லை. இத்தனைக்கும் விடுதலைப் புலிகளை போரில் தோற்கடித்த ஒரு இராணுவ வீரன் என்னும் தகுதியே கோட்டபாயவின் பலமாக இருந்தது. ஆனால் அவ்வாறான ஒருவருக்கு எதிராக, கிளர்ச்சியாளர்கள் ஒன்றுதிரண்ட போது, இராணுவம் அவரை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. தப்பியோடச் செய்வதன் மூலமே கோட்டபாய பாதுகாக்கப்பட்டார். கோட்டபாய தப்பியோடிமையானது, அதுவரையான கிளர்ச்சி நடவடிக்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இடதுசாரிச் சிந்தனைகளின் வழியாக அதிகாரத்தை கைப்பற்றுதல் என்பது சோவியத் கால, உலக ஒழுங்கிற்குட்பட்ட ஒன்று. இலங்கைத் தீவில் இடம்பெற்ற சிங்கள மற்றும் தமிழ் ஆயுத கிளர்சிகளில் இடதுசாரி சிந்தனைகள் பெரியளவில் செல்வாக்குச் செலுத்தியிருந்தன. சோவியத் பாணி சோசலிச சிந்தனைகளின் வழியாகவே, ஜே.வி.பியானது, தென்னிலங்கையின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஆயுத கிளர்சியை முன்னெடுத்திருந்தது.

இதே போன்று, தமிழ் மக்களுக்கான தனிநாட்டுக் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய ஆயுத விடுதலை இயக்கங்களில், விடுதலைப் புலிகள் மற்றும் டெலோ தவிர்ந்த இயக்கங்கள், தங்களை இடதுசாரிகளாகவே அடையாளப்படுத்திக் கொண்டனர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் மற்றும் ஈரோஸ் ஆகியவை தங்களை இடதுசாரிகளாகவே அடையாளப்படுத்திக் கொண்டனர். விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் டெலோ ஆகியவை தங்களை கருத்தியல் அடிப்படையில் அடையாளப்படுத்தவில்லை. ஆனால், இங்கு குறிப்பிடப்பட்ட பிரதான இயக்கங்கள் அனைத்துமே, பிற்காலத்தில், இந்தியாவிடம் ஆயுதப் பயிற்சியை பெற்றுக்கொண்டன. இதற்கு பின்னர் இயக்கங்களின் மத்தியில் இடதுசாரி வலதுசாரி என்னும் பிளவுகள் கரைந்துபோயின.
தென்னிலங்கையை பொறுத்தவரையில் இடதுசாரித்துவ செல்வாக்கு என்பது தொடர்ந்தும் இருந்துவருகின்றது. குறிப்பாக சிங்கள பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இடதுசாரித்துவ ஈர்ப்பு கணிசமான செல்வாக்கை பெற்றிருக்கின்றது. ஆனாலும் சிங்கள இடதுசாரித்துவத்தை சிங்கள பௌத்த தேசியவாதத்திலிருந்து பிரித்துப் பார்ப்பது கடினம். குறிப்பாக விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியை தொடர்ந்து ராஜபக்சக்களால் தலைமை தாங்கப்பட்ட சிங்கள பௌத்த தேசியவாதம் தென்னிலங்கையை முற்றிலுமாகவே ஆக்கிரமித்திருந்தது. பொருளாதார நெருக்கடியின் காரணமாக தற்போது சிங்கள பௌத்த தேசியவாதம் நெருக்கடியை சந்தித்திருக்கின்றது. இந்தப் பின்னணியில்தான், இடதுசாரித்துவ செல்வாக்கிற்குட்பட்ட மாணவர்கள் மற்றும் இடதுசாரி அமைப்புக்கள் மீளவும் முன்னணிக்கு வந்திருக்கின்றனர். இந்த பின்புலத்தில்தான் ஒரு கேள்வி எழுகின்றது – அதாவது, தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் கிளர்சியின் இலக்கு என்ன? 1971 மற்றும் 1989இல் ஜே.வி.பியால் முடியாமல் போனதை இவர்கள் மீளவும் புதியதொரு வழிமுறையால் சாதிக்க முற்படுகின்றனரா? இந்தியாவின் கொல்லைப்புறத்தில் இடம்பெறும் இவ்வாறானதொரு கிளர்ச்சி தொடர்பில் இந்தியா எதுவரையில் அமைதியாக இருக்க முடியும்?

இந்தியாவின் உடனடி அயல்நாடொன்றில் ஏற்பட்டிருக்கும் அரசியல் கொந்தளிப்புக்கள், இந்தியாவின் உள்ளக அரசியலிலும் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சி எதுவரையில் செல்லும்? கிளர்ச்சியாளர்கள் அனைத்தையும் தங்கள் வசப்படுத்தினால், அது தெற்காசிய அரசியலில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும்? அதே வேளை, இலங்கையின் ஆட்சியாளர்கள் அகற்றப்பட்டிருக்கும் முறைமையானது, தெற்காசியாவின் ஏனைய நாடுகளிலும் தொற்றலாம். இந்த நிலையில், இந்தியாவின் எதிர்வினை என்னவாக இருக்கப் போகின்றது? இலங்கையின் தென்பகுதியின் கிளர்ச்சியில் ஈழத் தமிழர்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கின்றனர். இது பிறிதொரு செய்தியாகும்.

தமிழ் அரச நிர்வாகிகளின் கவனத்திற்கு

நிலாந்தன்

பள்ளிஹகார முன்பு வட மாகாண ஆளுநராக இருந்தவர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் களில் ஒருவர்.இவர் தமிழ்ப் பகுதிகளில் உள்ள நிர்வாகக் கட்டமைப்பின் வினைத்திறனை குறித்து உயர்வான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்ததாகத் தெரியவருகிறது. போர்காலத்தில் மிக நெருக்கடியான ஒரு சூழலில் நிர்வாகம் செய்து பழகிய தமிழ் அதிகாரிகளிடமிருந்து முழு நாடும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுவாராம்.

அதில் உண்மையும் உண்டு.நெருக்கடியான காலகட்டத்தில் இரண்டு நிர்வாகங்களுக்கு இடையே செயல்படுவது என்பது கயிற்றில் நடப்பது போன்றது. மூத்த தமிழ் நிர்வாகிகள் பலரிடம் அந்த ஆற்றல் இருந்தது. ஆனால் அண்மை நாட்களாக தமிழ்ப் பகுதிகளில் காணப்படும் எரிபொருள் வரிசைகளை வைத்துப் பார்த்தால் அப்படியான நிர்வாகத்திறமை எங்கே போனது என்று கேட்கத் தோன்றுகிறது.

இது நாடு முழுவதற்குமான ஒரு தோற்றப்பாடு, இதில் தமிழ்ப் பகுதியை தனித்துப் பார்க்க முடியாது என்று ஒரு விவாதம் முன்வைக்கப்படலாம்.ஆனால் டெல்டா திரிபு வைரஸ் நாடு முழுவதையும் தாக்கியபோது தமிழ்ப் பகுதிகள் ஒப்பீட்டளவில் ஸ்திரமாக காணப்பட்டன. இறப்பு விகிதமும் ஒப்பீட்டளவில் தமிழ் பகுதிகளில் குறைவு என்று கூறப்படுகிறது. யுத்தமும் வைரசும் ஒன்று அல்ல என்பதனை ராஜபக்ஷக்களுக்கு உணர்த்திய ஒரு நெருக்கடி அது. டெல்டா திரிபு வைரஸின் தாக்கத்தின்போது தமிழ்ப் பகுதிகளில் மருத்துவ சுகாதார கட்டமைப்புக்கள் இயங்கிய விதம் முன்பு யுத்த காலகட்டத்தில் கிடைத்த அனுபவத்தின் விளைவு என்றும் எடுத்துக் கொள்ளலாமா?

இவ்வாறாக அனர்த்த காலங்களின்பொழுது தமிழ் மக்களின் கூட்டு உளவியலும் சரி தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய நிர்வாக கட்டமைப்புகளும் சரி முன்னைய யுத்த கால அனுபவத்தை அடியொட்டி சிறப்பாக செயல்பட முடியும். ஏனென்றால் இந்த பூமியிலே யாருக்கும் கிடைக்காத நூதனமான அனுபவங்கள் தமிழ் மக்களுக்கு கிடைத்தன. இந்தப்பூமியிலேயே யாரும் அனுபவித்திராத துன்பங்களை தமிழ்மக்கள் அனுபவித்திருக்கிறார்கள்.நவீன வரலாற்றில் மரணத்தின் ருசி மிகத்தெரிந்த மக்கள் கூட்டங்களுக்குள் தமிழ் மக்களும் அடங்குவர்.மரணத்தோடு நீண்டகாலம் உரையாடிய மக்கள் அவர்கள். மரணத்துள் வாழ்ந்து தப்பிப் பிழைத்த மக்கள் அவர்கள். அதாவது சாவினால் சப்பித் துப்பப்பட்ட மக்கள். ஒரு இனப் படுகொலையில் தப்பிப் பிழைத்தவர்கள். தமிழ் அதிகாரிகள் போரிலீடுபட்ட இரண்டு தரப்புக்களுக்கும் இடையே சான்ற்விச் ஆக்கப்பட்டவர்கள்.இக்கூட்டு அனுபவங்களின் ஊடாகவே தமிழ் மக்கள் எந்த ஒரு நெருக்கடியையும் எதிர்கொள்வார்கள்.

யூதர்களின் வரலாற்றைக் கூறும் எக்சோடஸ் என்றழைக்கப்படுகின்ற நாவலில் அதன் ஆசிரியர் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும்போது இவர் இந்த பெயருடைய நாசி வதைமுகாமின் பட்டதாரி என்று அறிமுகப்படுத்துவார். அதாவது நாசி வதை முகாம்களில் இருந்து தப்பிய ஒவ்வொரு யூதரும் பட்டப்படிப்புக்கு நிகரான அனுபவங்களை கொண்டிருந்தார் என்று பொருள். இது தமிழ் மக்களுக்கும் பொருந்தும்.தமிழ் மக்களைப் பொருத்தவரை எல்லா இடப்பெயர்வுகளும் புலப்பெயர்ச்சிகளும் அவர்களுக்குப் பட்டப்படிப்புகள்தான். எல்லாக் கூட்டுக் காயங்களும்,கூட்டு மனவடுக்களும் சித்திரவதைகளும், அகதிமுகாம்களும் நலன்புரி நிலையங்களும் அவர்களைச் செதுக்கின. இப்படிப் பார்த்தால் இந்தப் பூமியிலேயே மிகக்கொழுத்த அனுபவங்களைக் கொண்ட மக்கள். இப்படியான அனுபவத்தைக் கொண்ட ஒரு சமூகம் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையின்போது எப்படிச் செயல்பட வேண்டும்?

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இவ்வளவுதான் எரிபொருள் உண்டு என்றால் அந்த அடிப்படையில் வாகனங்களை முதலில் பதிவு செய்து டோக்கன் கொடுத்து ஏதோ ஒரு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகத்தை கொண்டு வரலாம் தானே? ஏன் இப்படி நாட்கணக்காக வாகனங்களையும் சாதிகளையும் தெருவோரங்களில் நிறுத்தி வைக்க வேண்டும்?

எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்களில் ஒரு பகுதியினரைப் பார்த்தால், ஒரு இனப்படுகொலையில் இருந்து கற்றுக்கொண்ட மக்களாகத் தெரியவில்லை.ஒருபகுதியினர் வரிசைகளில் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.ஒரு பகுதியினர் திரும்பத் திரும்ப எரிபொருளை மீள நிரப்புகிறார்கள்.அதை ஒரு குழுவாகத் திட்டமிட்டு வியாபாரமாகச் செய்கிறார்கள்.அந்த எரிபொருள் கறுப்புச் சந்தையில் ஒரு லீற்றர் 1000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. நிர்வாகம் சீர்குலைந்தால் கள்ளச் சந்தையும் பதுக்கலும் தலைவிரித்தாடும். யார் அதைக் கட்டுப்படுத்துவது? தெற்கில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் பொறுமையிழந்து மோதலுக்கு போனால் அதை போலீஸ் கட்டுப்படுத்துகிறது.ஆனால் வடக்கில், விசுவமடுவில் அதை ராணுவம் கையாண்டிருக்கிறது.

 

எரிபொருள் வரிசைகள் மட்டுமில்ல, கடந்த வாரம் பாடசாலைகளை இயக்குவது தொடர்பிலும் அவ்வாறான குழப்பத்தைக் காணமுடிந்தது.இங்கு முதலில் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். எரிபொருட் தட்டுப்பாடு காரணமாக அன்றாட வாழ்வின் அசைவுகளை மட்டுப்படுத்த வேண்டியிருக்கிறது. எனினும் தனியார் கல்வி நிறுவனங்கள் குறிப்பாக கல்விப் பொதுச்சாதாரணம், உயர்தரம்,மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் போன்ற தேசிய பரீட்சைகளுக்கான தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குகின்றன.அவற்றை நோக்கி ஆயிரக்கணக்கில் தமது பிள்ளைகளை பெற்றோர் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றி இறக்குகிறார்கள். ஒரு நண்பர் பகிடியாக சொன்னார்…..பெட்ரோல் கியூவில் நிற்கும் ஒரு பகுதியினர் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தமது பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்காகத்தான் எரிபொருளைச் சேமிக்கிறார்களா? என்று.

அரசாங்கம் மாறிமாறி அறிக்கைகளை விடுகிறது.ரணில் விக்ரமசிங்க பிரதமராக வந்த பின்னரும்கூட நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று உண்டா என்று கேட்குளவுக்குத்தான் நிலைமை தொடர்ந்தும் காணப்படுகிறது. எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் குழம்பிப் போனதால் நிர்வாக அதிகாரிகளும் குழம்பிப் போனார்கள்,நிர்வாகக் கட்டமைப்பும் குழம்பிபோய் விட்டது,என்று ஒரு விளக்கத்தை தரமுடியும்.

கடந்த வாரம் பாடசாலைகளை திறப்பதா இல்லையா என்ற விடயத்தில் முடிவெடுக்க முடியாத ஒரு நிலைமை காணப்பட்டது. முதலில் பாடசாலைகளை குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மூடப்போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அது மேல் மாகாணத்துக்கு மட்டுமே பொருந்தும்,என்றும் ஏனைய மாகாணங்களுக்கு பொருந்தாது என்றும் பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது. அதேசமயம் கிட்ட உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் கல்வி கற்கலாம் என்று கூறப்பட்டது.மேலும் இணைய வழியிலும் வகுப்புகளை நடத்தலாம் என்று கூறப்பட்டது. அதாவது ஹைபிரிட் முறைமை. முடிவில் அதிபர்கள் தற்துணிவாக முடிவெடுக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் இப்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்பில் நெருக்கடிக்குள் ரிஸ்க் எடுத்து துணிவாக முடிவெடுக்க எத்தனை அதிபர்கள் தயார்? அவ்வாறு ரிஸ்க் எடுத்து முடிவெடுக்கக்கூடிய ஒரு நிர்வாகக் கட்டமைப்பு நாட்டில் உண்டா? துணிந்து முடிவெடுக்கும் அதிபர்கள் அதன் விளைவுகளுக்கும் பதில் சொல்ல வேண்டும்.அவர்கள் எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டும்?கல்வித் திணைக்களம், பெற்றோர்,பழைய மாணவர் என்று எல்லாத் தரப்பும் அதிபரைத் தான் பிடுங்குவார்கள்.கிளிநொச்சி மாவடடத்தைச் சேர்ந்த ஒரு அதிபர் பின்வருமாறு முகநூலில் எழுதியிருந்தார்…”நினைச்சு நினைச்சு கலியாணம் முடிக்கிறாங்கள்.என்னெண்டு பிரயோக முடிவுகளை எடுப்பது? சீ”.

இதுவிடயத்தில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் மட்டும் குழம்பிப் போயிருந்தன என்பதல்ல,ஊடகங்களும் குறிப்பாக இணையவழி ஊடகங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு நிலைமையைக் குளப்பின என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.ஒரு செய்தியின் மூலத்தை விசாரிக்காமல் பரபரப்பிற்காக செய்திகளைப் போடும் ஒரு போக்கை சமூக வலைத்தளங்கள் வளர்த்துவிட்டிருக்கின்றன.இதனால்,உண்மையை விட வதந்தியே அதிகம் பரவலாகச் சென்றடைகிறது.இது கடந்த ஞாயிற்றுக்கிழமையும் நடந்தது.பதினோரு மணியளவில் அடுத்த நாள் பாடசாலைகள் இயங்காது என்று இணைய ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன.ஆனால் சுமார் அரை மணித்தியால இடைவெளிக்குள் அச்செய்தியை அதே ஊடகங்கள் மறுத்தன. நாட்டைக் குழப்புவதில் உறுதிப்படுத்தப்படாத செய்திகள்,அல்லது பரபரப்பு செய்திகளுக்கும் ஒரு பங்கு உண்டு.குறிப்பாக பொருட்கள் பதுக்கப்படுவதற்கும் விலைகள் உயர்வதற்கும் பரபரப்புச் செய்திகளும் ஒரு விதத்தில் காரணம். ஓர் அனர்த்த காலத்தில் மக்களை குழப்பாமல் இருக்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கும் உண்டு.

அத்தியாவசிய சேவைகளுக்குரிய நிர்வாகக் கட்டமைப்பின்படி நாட்டின் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளருக்கு கீழ் ஒவ்வொரு மாவட்டச் செயலரும் பதவி வழியாக பிரதி அத்தியாவசிய சேவைகள் ஆணையாளராகச் செயற்பட முடியும்.அதாவது மாவட்ட செயலர்களுக்கு அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக முடிவெடுக்கத் தேவையான முழு அளவு அதிகாரம் உண்டு. அவர்கள் தமது மக்களுக்காக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்தால் சரி. ஆனால் தமிழ்ப் பகுதிகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டமன்றங்கள் இல்லை. இதனால் கொழும்பினால் நேரடியாக நிர்வகிக்கப்படும் நிர்வாகக் கட்டமைப்பே உண்டு. இதுவும் தமிழ் நிர்வாகிகளின் சுயாதீனத்தை கட்டுப்படுத்துகிறது.

இவ்வாறான ஒரு நிர்வாகச் சூழலில்ஆளுநர் ஒருவரின் கூற்றில் தொடங்கிய இக் கட்டுரையை மற்றொரு ஆளுநரின் அறிவிப்பில் முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.சில நாட்களுக்கு முன் வடமாகாண ஆளுநரின் அறிவிப்பு ஒன்றை ஊடகங்களில் பார்க்க முடிந்தது. எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இயன்றவரை நீராகாரத்தை வழங்குமாறு ஆளுநர் கேட்டிருக்கிறார்.அது ஒரு மனிதாபிமான நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு மாகாண ஆளுநர் அதைவிடக்கூடுதலாகச் செய்யவேண்டிய ஒரு வேலை இருக்கிறது. எரிபொருள் வரிசைகளை எப்படிப் புத்திபூர்வமாக ஏதோ ஒரு முறைமைக்குள் கொண்டு வரலாம் என்று சிந்திப்பதே அது. பதவி வழி அதிகாரமுடைய நிர்வாகிகள் துணிந்து ரிஸ்க் எடுக்க வேண்டிய ஒரு காலகட்டம் இது. தமிழ் அதிகாரிகள் மதிப்புக்குரிய,முன்னுதாரணம்மிக்க இறந்தகால அனுபவங்களைப் பின் தொடர வேண்டும்.

Posted in Uncategorized

இயக்கங்களின் அன்றைய இயலுமையும் இன்றைய இயலாமையும் ?

யதீந்திரா?
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் (ஈ.பி.ஆர்.எல்.எப்) அவர்களது, தலைவர் பத்மநாபா கொலைசெய்யப்பட்ட தினத்தை, தியாகிகள் தினமாக நினைவு கூர்ந்துவருகின்றனர். அண்மையில் 31வது தியாகிகள் தினம் நினைவு கூரப்பட்டது. நிகழ்வில் பேசுமாறு, பம்பநாபா அபிவிருத்தி ஒன்றியம் என்னும் பெயரில் இயங்கிவரும் ஒரு பிரிவினர், என்னை அழைத்திருந்தனர். இதன் போது நான் பகிர்ந்துகொண்ட சில விடயங்களையே – இங்கு கட்டுரையாக்கியிருக்கின்றேன்.

இதிலுள்ள கவலைக்குரிய விடயம் என்னவென்றால், தங்களின் தலைவருக்கான நினைவு தினத்தைக் கூட, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினரால், கருத்தொருமித்து, ஒருங்கிணைந்து முன்னெடுக்க முடியவில்லை. ஈழ அரசியலில், ஒற்றுமையின்மை என்னும் நோய், எவ்வாறு தமிழனத்தை பாதித்தது, பாதித்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கு, ஈ.பி.ஆர்.எல்.எப் ஒரு வாழும் சாட்சியாகும். ஒரு இயக்கத்தை பிரதிநிதித்துவம் செய்தவர்களாலேயே, தங்களுக்குள் ஒன்றுபட முடியவில்லையாயின், மற்றவர்கள் அனைவரையும் எவ்வாறு ஒரணியாக கொண்டுவர முடியும்? ஒற்றுமையின்மை என்னும் நோயிலிருந்து அவர்களை எவ்வாறு விடுவிக்க முடியும்? இந்தக் கேள்வியுடன்தான், தமிழ் தேசிய அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து செல்கின்றது. வரலாற்றோடு எவ்வித தொடர்புமில்லாத வியாபாரிகளின் ஆதிக்கத்திற்குள் சென்று கொண்டிருக்கின்றது. விரைவில் அது வியாபாரிகள் உகச்சரிக்கும் தமிழ் தேசியமாக உருமாறலாம்.

இனவிடுதலையை வென்றெடுப்பதற்கு ஆயுதப் போராட்டங்களே, ஒரேயொரு வழிமுறையாகும் என்னும் புறச்சூழலில்தான், தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தோற்றம் பெற்றன. உலகின் பல பாகங்களிலும் ஆயுதப் போராட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலமது. நான் இந்த காலகட்டத்தை சேர்ந்தவன் இல்லையென்றாலும், வரலாற்றை உற்று நோக்கும் மாணவன் என்னும் வகையில் விடயங்களை தேடியும், சம்பந்தப்பட்டவர்களோடு உரையாடியும் அறிந்துகொண்டதன் மூலம், இந்த வரலாற்று காலகட்டத்திற்குள் செல்ல முடிந்தது. இன்று முன்னாள் இயக்கங்கள் என்னும் அiமொழியுடன், எதைச் சாதிப்பதற்காக சென்றோம் – இப்போது எந்த நிலையில் இருக்கின்றோம் – இனி எங்களால் என்ன செய்ய முடியும்? என்னும் கேள்விகளுடன், வெறும் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், அன்றைய சூழலில், மாபெரும் கனவுகளுடன்தான் இயங்கங்களில் இணைந்து கொண்டவர்கள்.

உண்மையில், அன்றைய சூழலில் இயக்கங்களில் இணைந்து கொண்டவர்கள் பலர், எந்த இயக்கமென்று ஆராய்ந்து இணைந்தவர்களல்லர். அப்படி ஆராய்வதற்கான தேவையும் அப்போது இருந்திருக்கவில்லை. ஏனெனில், இயக்கங்களில் சிறந்தது எது என்னும் கேள்விகளில்லாத காலமது. அனைவருமே விடுதலைக்காக போராடுபவர்கள் என்னும் பெருமை மட்டுமே மேலோங்கியிருந்த காலமது. இயக்கங்களின் தலைமைகளுக்கிடையில் மோதல்களும், பேதங்களும் ஏற்பட்ட போது, அனைத்துமே நிர்மூலமாகியது. சமூதாயத்தை தலைகீழாக புரட்டிப் போடும் கனவுகளோடு சென்றவர்கள், துரோகி, ஒட்டுக்குழுக்கள், மண்டையன் குழுக்கள், காட்டிக்கொடுப்பவர்கள், கூலிப்படைகள் இப்படியான அடைமொழிகளிலிருந்து தப்பிப்பிதற்காக, சமூதாயத்தையேவிட்டே ஓடவேண்டிய துர்பாக்கிய நிலையுருவாகியது. இறுதியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கின்றது.

2015இல், ஒரு சில முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள், தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் தருமாறு சம்பந்தனிடம் கோரினர். அப்போது சம்பந்தன் அவர்களுக்கு வழங்கிய பதில் – உங்களிலிருந்துதான், கே.பி வந்தார். உங்களிலிருந்துதான் கருணா வந்தார். நீங்கள் அரச புலனாய்வு பிரிவோடு சேர்ந்து செயற்படுதாக சந்தேகங்கள் இருக்கின்றன – உங்களுக்கு எவ்வாறு, இடம்தரமுடியுமென்று கேட்டிருந்தார். இதிலுள்ள துர்பாக்கியம் என்னவென்றால், சம்பந்தன் அவ்வாறு கூறுகின்ற போது, முன்னாள் இயக்கங்களான கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், சம்பந்தனை மறுதலிக்கவோ கண்டிக்கவோ இல்லை. ஒரு கட்சியில் ஆசனங்கள் வழங்குவது – வழங்காமல் விடுவது அந்த கட்சியின் முடிவு. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு கட்டாயம் ஆசனங்கள் வழங்கத்தான் வேண்டுமென்பதல்ல.

ஆனால் அவர்களை நிராகரிப்பதற்கு சொல்லப்படும் காரணத்தில்தான், இந்த சமூதாயத்தின் மோசமான சிந்தனைப் போக்கு வெளிப்படுகின்றது. முன்னர் ஏனைய இயக்கங்களை அரச ஒட்டுக் குழுக்களென்று கூறி, அவமானப்படுத்திய போது, அமைதியாக இருந்த தமிழ் சமூகம், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அவமானப்படுத்தப்பட்ட போதும், அமைதியாகவே இருந்தது. மொத்தத்தில் இயங்கங்களின் இன்றைய நிலை பூச்சியமாகும். ஏனைய இயக்கங்களுக்கு எது நடந்ததோ, அதுவே இப்போது, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் நடந்திருக்கின்றது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, பல பிரிவுகளாக இருப்பது போன்றுதான், விடுதலைப் புலியாதரவு புலம்பெயர் தரப்புக்களும் இருக்கின்றன.

இன்று இயக்கங்களின் நிலைமையை ஒரு வரியில் கூறுவதனால், கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைமை எனலாம். எந்த மிதவாத அரசியல் கட்சிகளை புறம்தள்ளி இயக்கங்கள் தோற்றம்பெற்றனவோ – இன்று அதே மிதவாதிகளின் தயவில் – அவர்கள் போடும் ஆசனங்களை எண்ணிக்கொண்டிருக்கும் இழிநிலையில்தான் இயக்கங்களின் கதையிருக்கின்றது. தமிழரசு கட்சியின் தயவில் அல்லது விக்கினேஸ்வரன் போன்றவர்களின் தயவில், தங்களின் எதிர்காலத்தை தேடும் நிலையில்தான் இன்று முன்னாள் இயக்கங்களின் நிலையிருக்கின்றது. இந்த நிலைமைக்கு யார் காரணம்? ஒரு காலத்தின் அரசியலை தீர்மானித்தவர்களால், ஏன் இன்றைய ஜனநாயக அரசியலில் சொல்வாக்கு செலுத்தமுடியவில்லை? மிதவாதிகளிடமிருந்த அரசியல் பார்வைகளைவிடவும் செழுமையான அரசியல் பார்வைகள் இயக்கங்களின் தலைமைகளிடம் இருந்தது. அன்றைய சூழலில் மிகவும் ஆழுமைமிக்க தலைவராக கருதப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் கூட, 1988இல், இடம்பெற்ற, மாகாண சபை தேர்தலில் போட்டியிட முன்வரவில்லை. இத்தனைக்கும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அமிர்தலிங்கம் ஆதரித்திருந்தார். அந்த ஒப்பந்தத்திற்கு பின்னர்தான், தமிழ் மக்கள் நிம்மதியாக நித்திரைகொள்ள முடிந்ததென்று, உரையாற்றிய, அமிர்தலிங்கம், மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு, ஒரு வலுவான தலைமைத்துவத்தை வழங்க முன்வரவில்லை.

விடுதலைப் புலிகளின் எதிர்ப்பை கருத்தில் கொண்டே அமிர்தலிங்கம், அவ்வாறனதொரு முடிவை எடுத்ததாக சிலர் கூறுகின்றனர். ஆனாலும் ஒரு ஆளுமைமிக்க தலைவர் தனக்கு சரியென்று படும் ஒன்றில் பின்நிற்கக் கூடாது. இந்தப் பி;ன்புலத்தில்தான், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டது. இன்று பின்நோக்கி பார்த்தால், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முடிவை வரலாறு, நியாயப்படுத்தியிருக்கின்றது. இந்தியாவை புறம்தள்ளி, ஈழத்தமிழர்கள் எந்தவொரு அரசியல் தீர்வையும், எக்காலத்திலும் பெற முடியாதென்னும் வரலாற்று உண்மை நிருபிக்கப்பட்டிருக்கின்றது. பத்மநாபா கூறிய ஓரு கருத்தை சில வருடங்களுக்கு முன்னர் எனது கட்டுரையொன்றில், பயன்படுத்தியிருக்கின்றேன். அதாவது, இந்தியா என்பது ஒரு கருங்கல் பாறை. அதனோடு முட்டினால் நமது தலைதான் உடையும். ஈழத் தமிழர் அரசியலை பொறுத்தவரையில் அன்றும் இந்தியா கருங்கற்பாறைதான், இன்றும் கருங்கற்பாறை – என்றுமே பாறைதான். பாறை என்பது பலத்தின் அடைமொழி. அன்று எவருமே முன்வராத நிலையில்தான், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டது. இன்று அந்த மாகாணசபையை பாதுகாப்பது தொடர்பில்தான் உரையாடல்கள் இடம்பெறுகின்றன. இந்த இடத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அன்றைய முடிவு, வரலாற்றால் நியாயப்படுத்தப்பட்டுவிட்டது. இந்தியாவை எதிர்;த்து போராட்டத்தை தொடர முடியாதென்னும் நிலையில்தான், விடுதலைப் புலிகள் தவிர்ந்த அனைத்து இயக்கங்களும் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு, ஜனநாயக நீரோட்டத்திற்கு திரும்பின. இன்று மீளவும் தமிழ் தேசிய அரசியல் இந்தியாவின் தயவிற்காகவே காத்திருக்கின்றது. ஆகக் குறைந்தது 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினாலே இப்போதைக்கு போதுமானதென்னும் நிலைமை உருவாக்கியிருக்கின்றது. ஆனால் இப்போது கூட, முன்னாள் இயக்கங்கள் அனைத்தும் ஓரணியில் பயணிக்க முடியவில்லை. ஒன்றாக இணைந்து மக்களை எதிர்கொள்ள முடியவில்லை. இதற்கு யார் காரணமென்றால் அனைத்து இயங்களின் மீதும்தான் விரல் நீள வேண்டும். இத்தனை அனுபவங்களுக்கு பின்னரும் தங்களுக்குள் உடன்பட முடியவில்லையாயின், பின்னர் எதற்காக முன்னாள் இயக்கங்கள் என்னும் அடைமொழி? தியாகங்களால் உருப்பெற்ற வரலாற்றை சுமந்து கொண்டிருக்கும் முன்னாள் இயக்கங்கள், மிதவாதிகள் போடும் ஆசனங்களை எண்ணிக் கொண்டிருப்பதைவிடவும், தங்களின் இயக்க அடையாள கட்சிகளை கலைத்துவிட்டு செல்லவது பெருமையானது.

இன்றும் இயக்கங்களை பிரதிநித்துவம் செய்பவர்களுக்கு முதன்மையான பொறுப்புண்டு. ஏனெனில் தமிழ் சமூகம் அரசியல்ரீதியில் இன்று வந்திருக்கும் இடத்திற்கு அனைவருக்குமே பொறுப்புண்டு. விடுதலைப் புலிகளுக்கு முதன்மையான பொறுப்புண்டு. உண்மையில் 2009இல் பேரழிவு ஒன்றை சந்தித்த போது, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்போர், சார்பற்ற சுயவிமர்சனமொற்றிற்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கு யாருமே தயாராக இருந்திருக்கவில்லை. இல்லாதவர் இருக்கின்றார் என்று கூறி, அரசியல் மாயைகளை கட்டமைப்பதிலேயே சிலர் கவனம் செலுத்தினர். இதன் விளைவைத்தான் இன்று தமிழர் அரசியல் எதிர்கொண்டிருக்கின்றது. இன்று அனைத்து இயங்கங்களும் ஒரு புள்ளியில்தான் வந்து சேர்ந்திருக்கின்றன அதாவது, தியாகங்கள் பெறுமதியற்றுப் போனமைக்கு, இருப்பவர்கள் வெறும் சாட்சியாகியிருக்கின்றனர். இப்போது ஒரு வழிமட்டுமே இருக்கின்றது. அதாவது, முன்னாள் இயக்கங்களின் இப்போதைய தலைமைகள், தங்களது ஒவ்வொரு இயக்கங்களினதும், முடிவுகளுக்காக மாண்டு போனவர்களது தியாகங்களை மதிப்பது உண்மையாயின், அனைவரும் ஓரணியில் சங்கமிக்க வேண்டும். ஆளுமைமிக்க ஜனநாயக அரசியல் பாதையொன்றை வகுக்க வேண்டும். முயன்றால், இது முடியாத காரியமல்ல.

ஒரு வரலாற்றியலாளன் என்பவன், வரலாற்றை அதன் போக்கில் சென்று நோக்க வேண்டும் என்பார் வரலாற்றியல் அறிஞர் ஈ.எச்.கார். ஒரு அரசியல் வரலாற்று மாணவன் என்னும்வகையில், கடந்தகால வரலாற்றை அதன் போக்கில் நோக்கினால், இயக்கவழிப் பாதையில் எவருமே புனிதர்களல்லர். அனைவரது பக்கத்திலும் தவறுகள் உண்டு. அந்த தவறுகள் என்னவென்பது அந்த இயக்கங்களில் எஞ்சியிருப்போர்களுக்கு தெரியும். ஆனால் அனைத்து தவறுகளிலிருந்தும் பாடங்களை படிக்க வேண்டிய நிர்பந்தத்தை வரலாறு அவர்கள் மீது சுமத்தியிருக்கின்றது. வரலாற்று சுமையை இறக்கி வைப்பது தொடர்பில்தான் அவர்கள் இப்போது சிந்திக்க வேண்டும். வரலாறு மனிதர்களால்தான் உருவாக்கப்படுகின்றது. மனிதர்கள் உருவாக்கிய வரலாற்றின் திசைவழியை, மனிதர்களால் மாற்றியமைக்கவும் முடியும். தமிழ் இயக்கங்களின் வரலாறென்பது, ஒரு புறம் தியாகங்களால் உருப்பெற்ற வரலாறாக இருக்கும் போது, மறுபுறம், அது ஒரு இரத்தக்கறை படிந்த வரலாறு, கொலைகளை ஆராதித்த வரலாறு, மனித உரிமைகளை போற்றாத வரலாறு, அரசியல் தீண்டாமைகளை போற்றிய வரலாறு, குற்றவுணர்விற்கு அச்சம்கொள்ளாத வரலாறு. தமிழ் அரசியல் வரலாற்றின் இந்தப் பக்கமே, மறுபுறம், இயக்கங்களின் தியாகங்களை பெறுமதியற்றதாக்கியிருக்கின்றது. முன்னாள் இயக்கங்கள் அனைத்தும், ஜனநாயக நீரோட்டத்தில் ஒன்றுபட்டால், இந்த வரலாற்று கறைகளை சீர்செய்ய முடியும் .

குருந்தூர் மலையும் காலிமுகத்திடலும்

-நிலாந்தன் –

நாட்டில் பொருளாதார நெருக்கடி என்ற ஒன்று உண்டா என்று ஐயப்படும் அளவுக்கு திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் விமரிசையாக நடக்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் திருவிழாக்களில் கூடுகிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கொண்டாட்டங்களில் கூடுகிறார்கள்.வல்லிபுர ஆழ்வார் கோவில், பாசையூர் அந்தோணியார் கோவில், வற்றாப்பளை அம்மன் கோயில் போன்றவற்றில் திருவிழாக்கள் அமோகமாக நடந்தன. இக்கட்டுரை எழுதப்படும் நாளில் கண்டியில் கிரிக்கெட் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.திருவிழாக்கள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் சனங்கள் அணியும் ஆடைகள்,எடுப்புச் சாய்ப்பு எதிலுமே பொருளாதார நெருக்கடியைக் காணமுடியவில்லை.

ஆனால் யாழ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர் கூறினார் 12 மாணவர்களைக் கொண்ட ஒரு வகுப்பில் 11 பேருக்கு உணவுத் தட்டுப்பாடு இருப்பதாக.அவர்கள் ஒரு வேளை அல்லது இரு வேளை உணவையே உட்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். இம்மாணவர்கள் பெருமளவுக்கு கிழக்கு, மலையகம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் சொன்னார்.எனவே மாணவர்களுக்கு உணவு கொடுக்கும் விதத்தில் “கொம்யூனிட்டி கிச்சின்களை” உருவாக்கியிருப்பதாகவும்அவர் தெரிவித்தார்.

அவ்வாறான சமூகப்பொதுச் சமையலறைகளை குறித்து ஏற்கனவே மனோகணேசன் பேசிவருகிறார்.நகர்ப்புறத் தொடர்மாடிக் குடியிருப்பாளர்களுக்கு அவ்வாறு பொதுச் சமையல் அறைகளை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார்.கடந்தகிழமை அக்கரைப்பற்றில் அவ்வாறான முயற்சிகளை சில முஸ்லீம் நண்பர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள்.“வீட்டிலிருந்து ஒரு பார்சல்” என்ற பெயரில் அது மருதமுனை,சாய்ந்தமருது,மாளிகைக்காடு,கல்முனைக்குடி,பாலமுனை போன்ற கிராமங்களுக்கு வேகமாகப் பரவுவதாகக் கூறப்படுகிறது.

அதாவது சமூகப் பொதுச்சமையலறை மூலம் உணவூட்டப்பட வேண்டிய ஒரு தொகுதியினர் உருவாகி வருகிறார்கள் என்று பொருள்.இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்க முன்பிருந்ததைவிடவும் நிலைமை பாரதூரமானதாக மாறிவருகிறது என்று பொருள்.அவர் பதவியேற்க முன்பிருந்ததை விடவும் இப்பொழுது எரிபொருளுக்கான வரிசைகள் அதிகரித்த அளவிலும் மிக நீண்ட வகைகளாகக் காணப்படுகின்றன. கடந்த 16 ஆம் திகதி வியாழக்கிழமை எரிபொருளுக்காக யாழ்ப்பாணத்தில் பல கிலோ மீட்டர் நீளமான வரிசைகள் காணப்பட்டன. யாழ்ப்பாணத்தின் நவீன வரலாற்றில் இவ்வாறான மிக நீண்ட வரிசைகள் காணப்பட்ட ஒரு நாள் அது.எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சிலர் சைக்கிள்களை வாடகைக்கு எடுத்து அதில் வேலைக்கு வருகிறார்கள்.ஒரு நாளைக்கு சைக்கிள் வாடகை 150 ரூபாய்.

ஆனால் நாட்டின் பிரதமரும் அமைச்சர்களும் குறிசொல்வோராக மாறி விடடார்கள் என்று கடந்த வியாழக்கிழமை ஐலன்ட் பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் விமர்சித்திருந்தது.பிரதமர்,அமைச்சர்கள்,எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எனைய அரசியல்வாதிகளை, அந்த ஆசிரியர் தலையங்கம் ஞானா அக்காவின் மச்சான்கள் என்று வர்ணித்திருந்தது.

அதாவது கோட்டா கோகம,மைனா கோகம,ஹிரு கோ கம போன்ற போராட்ட கிராமங்கள் உருவாக்கப்படுவதற்கு காரணமாக இருந்த பொருளாதார நெருக்கடிகளை இப்பொழுது மேலும் தீவிரமாகியிருக்கின்றன.இப்படிப் பார்த்தால் இப்பொழுதுதான் போராட்டமும் அதிகரிக்கவேண்டும். ஒன்றல்ல பல கிராமங்களை நாடு முழுவதும் உருவாக்க வேண்டும். ஆனால் இருக்கின்ற கோட்டா கோகம கிராமமும் தற்பொழுது சோர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்பு ஒவ்வொரு நாளும் பிற்பகலில் அக்கிராமத்தை நோக்கி ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்தார்கள்.இப்பொழுது அவ்வாறான திரட்சி காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவு செய்யப்பட்ட பின் நிகழ்ந்த மாற்றங்களில் அதுவும் ஒன்று. போராட்டக் கிராமங்கள் சோரத் தொடங்கி விட்டன என்பது.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச்செயலர் குமார் குணரட்னம் அதை ஏற்றுக் கொண்டார். கோட்டா கோகம கிராமத்தில் வினைத்திறனோடு செயற்படும் பல்வேறு அமைப்புக்கள் மத்தியில் முன்னிலை சோசலிசக் கட்சியின் மாணவர் அமைப்பும் காணப்படுகிறது. போராட்டத்தில் எழுச்சியும் வீழ்ச்சியும் உண்டு என்று குமார் குணரட்னம் கூறுகிறார்.

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் சோரத் தொடங்கியதற்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம். அவற்றுள் முக்கியமானவை வருமாறு.

முதலாவது காரணம் ரணில் விக்கிரமசிங்கவின் வருகை.அவர் பிரதமராக நியமிக்கப்பட்டதோடு நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் ஒப்பீட்டளவில் நம்பிக்கைகள் அதிகரித்துள்ளன.தென்னிலங்கையில் படித்த நகர்ப்புற நடுத்தர வர்க்கம் எனப்படுவது பெருமளவுக்கு யு.என்.பிக்கு ஆதரவானது.அதில் ஒரு சிறு பகுதி ஜேவிபியினால் ஈர்க்கப்படுகிறது. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக் கிராமங்களுக்கு மேற்படி நகர்ப்புற படித்த,நடுத்தர வர்க்கத்தின் ஆசீர்வாதம் அதிகளவு உண்டு என்று குமார் குணரட்னம் கூறுகிறார். ரணில் பிரதமராக நியமிக்கப்பட்ட பின் மேற்படி நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் போராட்டத்துக்கான உத்வேகம் குறைந்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. இது ஒரு காரணம்.

இரண்டாவது காரணம்.அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்து தலைமை தாங்கவல்ல பலமான கட்டமைப்புக்கள் எவையும் அங்கே கிடையாது. ஒரு சித்தாந்த அடித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட அமைப்போ கட்சியோ அங்கு இல்லை. போராட்டக்களத்தில் காணப்படும் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட செயற்பாட்டாளர்கள் தங்களுக்கிடையே இறுக்கம் குறைந்த இணைப்புகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் என்ற ஒரு ஒற்றைப் புள்ளியில் அவர்கள் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள்.ஆனால் அந்தப்பிணைப்பு மேலிருந்து கீழ்நோக்கிய ஒரு மையத்திலிருந்து நிர்வகிக்கப்படுகின்ற, ஒரு தலைமைத்துவத்துக்கு கீழ்ப்பட்ட பிணைப்பு அல்ல.மாறாக பக்கவாட்டில் ஒருவர் மற்றவரோடு கொள்ளும் சுயாதீனமான பிணைப்புக்கள். இவ்வாறு பலமான தலைமைத்துவமோ அல்லது பலமான நிறுவனக் கட்டமைப்போ இல்லாத ஒரு பின்னணியில் இதுபோன்ற போராட்டங்கள் காலப்போக்கில் சோர்ந்து போகும் ஆபத்து உண்டு. இது இரண்டாவது காரணம்.

மூன்றாவது காரணம்.சனங்கள் நெருக்கடிகளுக்கு இசைவாக்கம் அடைந்து வருவது. நெருக்கடியின் தொடக்க காலத்தில் அவர்களுக்கு அது பாரதூரமாகத் தெரிந்தது.ஆனால் இப்பொழுது அது அவர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது.இயல்பின்மையே இயல்பானதாக மாறிவிட்டது. இதுதான் யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கும் நடந்தது. ஏன் ஆயுத மோதல்களுக்கு பின்னரான காலங்களிலும் அதுதானே நிலைமை?அந்தக் கூட்டு அனுபவம்தான் பின் வந்த வைரஸ் பிரச்சினை,இப்பொழுதுள்ள பொருளாதாரப் பிரச்சனை போன்றவற்றை தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பொழுதும் அவர்களுக்கு உதவுகின்றது. இப்பொழுது தமிழ் மக்களைப் போலவே சிங்கள மக்களும் நெருக்கடிகளுக்கு பழக்கப்பட்டு வருகிறார்களா?அதனால்தான் போராட்டத்தின் தீவிரம் குறைந்து வருகிறதா?

நாலாவது காரணம், மக்கள் எரிபொருளுக்கும் எரிவாயுவுக்குமாக நீண்ட நேரம் மிக நீண்ட வரிசைகளில் காத்துக் கிடக்கிறார்கள். தமது வயிற்றுப்பாட்டுக்காக இவ்வாறு நீண்டநேரம் காத்திருப்பதால் அவர்களுக்கு போராடுவதற்கு நேரம் குறைவாகவே கிடைக்கிறது.

ஐந்தாவது காரணம், எரிபொருள் விலை உயர்வினால் போக்குவரத்து ஒரு பிரச்சினையாக மாறியிருப்பது.நாட்டின் ஏனைய பாகங்களில் இருந்து காலிமுகத்திடலை நோக்கிப் பயணம் செய்வதற்குப் பெருந்தொகை பணத்தைச் செலவிட வேண்டியிருக்கிறது. இதுவும் ஒரு காரணம்.

மேற்கண்ட காரணங்களின் தொகுக்கப்பட்ட விளைவாக போராட்ட கிராமங்களில் ஒருவித தொய்வு ஏற்பட்டிருக்கிறது.போராட்டங்களின் விளைவாக மஹிந்த வெளியேறிவிட்டார்.பஸில் வெளியேறிவிட்டார்.இது போராடும் தரப்புக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்க வேண்டும். மஹிந்தவையும் பசிலையும் அகற்றியது போல கோட்டாபயவையும் அகற்றலாம் என்ற நம்பிக்கை இப்பொழுதுதான் அதிகரிக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படியாகத் தெரியவில்லை.

எனினும் போக்குவரத்துச் செலவு காரணமாக காலிமுகத்திடலில் கூடுவோரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைந்திருந்தாலும்,சிறிய பரவலான ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.மக்கள் தாங்கள் வாழும் இடங்களில் ஆங்காங்கே சிறியளவில் எதிர்ப்புகளை அவ்வப்போது காட்டிவருவதாக கோட்டா கோகம கிராமத்தை சேர்ந்தவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.அதாவது ஒரு மையமான இடத்தில் பெருந்தொகையானவர்கள் கூடுவதற்கு பதிலாக சிதறலாக பரவலாக சிறிய அளவில் எதிர்ப்புக்கள் காட்டப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த குமார் குணரட்னம் தமிழ் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான செயற்பாட்டாளர்கள் காலிமுகத்திடலுக்கு வந்தால் போராட்டத்தின் பரிமாணம் வேறு விதமாக அமையும் என்று எதிர்பார்ப்பதாக தெரிகிறது. குமார் குணரட்ணம் வடக்கிற்கு வந்த அதே காலப்பகுதியில்தான் குருந்தூர் மலையில் புதிய தாதுகோப கலசத்தை பிரதிஷ்டை செய்யும் வேலைகள் முடுக்கிவிடப்பட்டன.தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களின் எதிர்ப்பினால் அது கைவிடப்பட்டது.

ஆனால் அந்த மரபுரிமை ஆக்கிரமிப்பை குறித்து கண்டியிலும் காலிமுகத்திடலிலும் கோட்டா கோகம கிராமங்களில் எதிர்ப்புகள் காட்டப்படவில்லை. மாறாக இந்தியப் பெரு வணிக நிறுவனமான அதானி குழுமத்துடன் கோட்டாபாய அரசாங்கம் செய்து கொண்ட டீலுக்கு எதிராக காலிமுகத்திடலில் எதிர்ப்புக் காட்டப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் விசாரித்தபொழுது அது தொடர்பான செய்திகள் தமக்கு உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்று கொழும்பு கோட்டா கோகம கிராமத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் தென்னிலங்கையில் போராடும் தரப்புக்கள் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு கிடைத்த மிகப்பிந்திய தருணங்களில் அதுவும் ஒன்று.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டா கோகம கிராமத்திலிருந்து செயற்பாட்டாளர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார்கள்.கோட்டா கோகம கிராமத்திலிருந்து யாழ்.நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நூல்களை கையளிப்பது அவர்களுடைய வருகையின் நோக்கம்.அது ஒரு நன்நோக்கம் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்மக்களின் கூட்டுக்காயங்களை சுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அதில் உண்டு. அதேசமயம் தமிழ் மக்களின் கூட்டுக்காயங்கள் இதுபோன்ற நற்செயல்களால் மட்டும் சுகப்படுத்த முடியாத அளவுக்கு ஆழமானவை,தொடர்ந்து புதுப்பிக்கப்படுபவை என்பதைத் தமிழ் செயற்பாட்டாளர்கள் அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். குருந்தூர்மலை ஆக்ரமிப்பு அதை நிரூபிக்கக் கிடைத்த ஆகப்பிந்திய உதாரணங்களில் ஒன்று.

கோத்தா + ரணில் : அசுத்தக் கூட்டா ?

  • நிலாந்தன்

தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது. தந்தைக்கு நிரந்தர தொழில் இல்லை.வேறு வருமான வழிகளும் இல்லை.இதனால்,அக்குடும்பம் சுமார் 3 நாட்களாக நீரை மட்டுமே அருந்தி உயிர்வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.இது முதலாவது செய்தி.

வெலிகேபொல, பிரதேசத்தில் கிராமத்தில் ஒரு வறிய பெண் நோயுற்ற தனது பிள்ளைக்கு உணவுக்கு எதுவும் இல்லை என்பதால் அருகிலுள்ள உறவினருக்கு சொந்தமான ஈரப்பலா மரத்தில் காயொன்றைப் பறித்து 100 ரூபாய்க்கு விற்றுள்ளார்.அப்பணத்தில் 500 கிராம் அரிசியை வாங்கியுள்ளார்.ஈரப்பலா பறிக்கப்பட்டதை அறிந்த உறவினர், கோபமுற்று அந்தத்தாயைத் தாக்கியுள்ளார். இது இரண்டாவது செய்தி.

கதிர்காமத்தில்,மூன்று பிள்ளைகளின் தாயொருவர்,ஒரு கிலோ அரிசி, 250 கிராம் சீனி, 200கிராம் கருவாடு மற்றும் பிஸ்கட் என்பவற்றை வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். வழியில்,மீன் வியாபாரியொருவர் சைக்கிளில் வந்துள்ளார்.சைக்கிளை நிறுத்தி,மீன் வாங்கியுள்ளார்.அப்பொழுது,உணவுப்பொருட்கள் இருந்த பையை தரையில் வைத்துள்ளார்.மீனை வாங்கிக்கொண்டு,பையைப் பார்த்தபோது,பையைக் காணவில்லை. பையை யாரோ திருடி விட்டார்கள்.இது மூன்றாவது செய்தி

தொடரும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக கொழும்பு ‘லேடி ரிட்ஜ்வே’ சிறுவர் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா கவலை வெளியிட்டுள்ளார்.அண்மை நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 53 குழந்தைகளில் 11 பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்றும், அவர்களில் நால்வருக்கு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அறிகுறிகள் தென்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இது நாலாவது செய்தி.

கடந்த 31ஆம் திகதி “சவுத் சைனா மோர்னிங் போஸ்ற்” என்ற இணைய ஊடகத்தில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் அணியும் சுகாதார பாதுகாப்பு நப்கின்களின் விலை அதிகரித்த காரணத்தால் பாடசாலைக்குச் செல்லும் மாணவிகள் அவதிப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.மாதவிடாய் காலங்களில் பள்ளிக்கூடம் செல்வதை தாங்கள் தவிர்ப்பதாக மாணவிகள் தெரிவித்திருக்கிறார்கள்.இறக்குமதி செய்யப்படும் நப்கின்களுக்கு அரசாங்கம் 58 விகித வரி அறவிவிடுகிறது.இதனால் வெளிநாட்டு நப்கின்களை வாங்க முடியாத ஒரு நிலைமை.வறிய பெண்கள் பெருமளவுக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நப்கின்களை பயன்படுத்தப்படுவதாகவும்,ஆனால் அவற்றின் விலையும் அதிகரித்திருப்பதால் பல குடும்பங்கள் அவற்றுக்காக காசை செலவழிக்க முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.நப்கினா சாப்பாடா என்று கேட்டால் சாப்பாடுதான் முக்கியம் என்று பல குடும்பத்தலைவிகள் கருதுவதாகத் தெரிகிறது.இதனால் நப்கின்கள் இல்லாத காரணத்தால் பல மாணவிகள் பள்ளிக்கூடம் வருவதில்லை என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.மிகவறிய பெண்கள் விலை கூடிய நப்கின்களை வாங்குவதற்கு பதிலாக சீலைத் துண்டுகளை பயன்படுத்துவதாகவும் அது சுகாதாரமற்றதுநோய் தொற்றுக்கான காரணிகளில் ஒன்று என்று எச்சரிக்கப் பட்டிருக்கிறது.இது ஐந்தாவது செய்தி.

கடந்தமாதம் 28ஆம் திகதி “தெ டெலிகிராப்” இணையத்தளத்தில் வெளிவந்த மற்றொரு கட்டுரையில்,ஆடைத் தொழிற்துறையைச் சேர்ந்த ஒரு தொகுதி பெண்கள் வேலையின்மை,வறுமை காரணமாக பாலியல் தொழிலை நோக்கிச் செல்வதாக கூறப்பட்டுள்ளது.இது ஆறாவது செய்தி.

இதுதான் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னரான நாட்டின் நிலை. எனினும் அவர் பதவியேற்ற பின் ஒரு விடயத்தில் மிகவும் தெளிவாக காணப்படுகிறார்.நாட்டில் எந்தப் பொருள்?எவ்வளவு கையிருப்பில் உண்டு?எவ்வளவு நாடுக்குத் தேவை?எவ்வளவு கடனாகக் கிடைக்கும்? எப்பொழுது எந்த பொருளுக்கு தட்டுப்பாடு வரும்? எப்பொழுது பஞ்சம் வரலாம்? போன்ற எல்லா விவரங்களையும் அடிக்கடி வானிலை அறிவித்தலில் கூறுவதுபோல வெளிப்படையாகச் சொல்லி வருகிறார். அதனால்தான் ஒரு முஸ்லிம் நண்பர் முகநூலில் பின்வருமாறு எழுதினார்….

ரனில் விக்ரமசிங்கவை இலங்கை கிறிக்கட் அணித்தலைவராக நியமித்தால்….

“அடுத்து வரும் போட்டிகளில் எமக்கு வீசுவதற்கு ஒரு பஞ்சு கட்டி கூட கிடைக்காது”

“இனி வரும் ஆட்டங்களில் இடை வேளையில் மூன்று மிடறு தண்ணீருக்கு பதிலாக இரண்டு மிடறு தண்ணீரையே பருக வேண்டி வரும்”

“ஒக்டோபர் மாதம் வரும் போது கிறிக்கட் மட்டைக்கு பதிலாக நாங்கள் தென்னம் மட்டையே பயன் படுத்த வேண்டிவரும்”

“உக்ரேன் வீரர்களுடன் கிறிக்கட்டும் அதே விக்கட்டால் ரஷ்ய வீரர்களுடன் கிட்டிப்புள்ளும் விளையாடுங்கள்”…….

ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கும் புள்ளிவிபரங்கள் உண்மையோ பொய்யோ அவர் நாட்டின் நிலைமையை ஒளிவு மறைவின்றி மக்களுக்கு தெரியப்படுத்துகிறார் என்ற ஒரு தோற்றத்தை வெற்றிகரமாக கட்டியெழுப்பி விட்டார்.ஆனால் இது மக்களுக்குப் பீதியூட்டும் நடவடிக்கை என்றும்,இதனால் வர்த்தகர்கள் பொருட்களைப் பதுக்குகிறார்கள் என்றும் ஒரு விமர்சனம் வருகிறது.

ஆனால் இதுவிடயத்தில் ரணில் விக்கிரமசிங்கவிடம் வேறு உள்நோக்கங்கள் இருப்பதாக தெரிகிறது.நாட்டின் நிலைமையை வெளிப்படையாக செய்வதன்மூலம் மக்களை அவர் நெருக்கடிக்கு தயார்படுத்துகிறார்.மக்களை உஷாராக இருக்குமாறு எச்சரிக்கிறார்.அதேசமயம் இந்த நெருக்கடிகளுக்குத் தான் பொறுப்பில்லை என்பதையும் மறைமுகமாக உணர்த்தப்பார்க்கிறார்.அவர் கூறுவது போல விடயங்கள் நடக்கும்பொழுது அவர் உண்மையைத்தான் சொன்னார்,எதையும் மறைக்கவில்லை என்ற உணர்வு மக்கள் மத்தியில் பரவும். இது தன்னைப் பலப்படுத்த உதவும் என்று அவர் நம்புகிறாரா? வியட்நாம் விடுதலைப் போராட்டத்தின் தலைவர் கோசிமின் கூறிய“மக்களிடம் செல்லுங்கள்,மக்களுக்கு உண்மையைச் சொல்லுங்கள், மக்கள் உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தருவார்கள்”என்ற மேற்கோளை ரணில் எப்படி விளங்கி வைத்திருக்கிறார்?

அவர் பிரதமராக வந்தபின் நாட்டுக்கு உள்ளேயும் நாட்டுக்கு வெளியேயும் நம்பிக்கைகளை கட்டியெழுப்ப வேண்டிய ஒருவராகக் காணப்படுகிறார்.நாட்டுக்குள் அவ்வாறு நம்பிக்கைகளை கட்டியெழுப்பினாரோ இல்லையோ நாட்டுக்கு வெளியே படிப்படியாக நம்பிக்கைகளைக் கட்டியெழுப்பி வருகிறார் என்பது உண்மை.

ரூபாயை மிதக்க விட்டமை,சில பொருட்களுக்கான வரியை அதிகரித்தமை,வட்டி விகிதத்தைக் கூட்டியமை,விலைக் கட்டுப்பாட்டை நீக்கியமை,அரசு செலவினங்களை குறைத்தமை,சில அமைச்சுக்களின் செயலர்களாக இருந்த படைத்துறை பிரதானிகளின் இடத்துக்கு சிவில் அதிகாரிகளை நியமித்தமை,அமெரிக்காவினால் பயணத்தடை விதிக்கப்பட்ட சவேந்திர சில்வாவின் பதவியை மாற்றியமை,ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை இடைநிறுத்தி,குற்றம் சாட்டப்பட்ட சிலரை மீண்டும் கைதுசெய்தமை,பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்திலிருந்து அகற்றியமை.போன்ற மாற்றங்களோடு, முக்கியமாக ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் விதத்தில் 21ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவரும் ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறார்.

 

மேற்கண்ட மாற்றங்களின்மூலம் நாட்டின் நீதித்துறை சுயாதீனமாக இயங்குகிறது என்ற ஒரு தோற்றத்தையும்,நாட்டில் ராணுவமய நீக்கம் நிகழ்கிறது என்ற ஒரு தோற்றத்தையும்,ராஜபக்சவின் அதிகாரம் குறைக்கப்படுகிறது என்று ஒரு தோற்றத்தையும் கட்டியெழுப்புவதே கோத்தா+ரணில் கூட்டின் நோக்கமாகும்.அப்படி ஒரு தோற்றம் கட்டியெழுப்பப்பட்டால் மேற்கு நாடுகளையும் ஐஎம்எப் போன்ற பன்னாட்டு நிறுவனங்களையும் கவரலாம் என்று ரணில் அரசாங்கம் சிந்திக்கிறது.

ஒருபுறம் இந்தியா நாட்டுக்கு சேலைன் ஏற்றிக்கொண்டிருக்கிறது. இந்தியா திட்டமிட்டு சிறுகச்சிறுக உதவிகளைச் செய்துவருகிறது. உடனடியாக பெருமெடுப்பில் உதவிகளைச் செய்யாமல்,சேலைன் ஏற்றுவது போல துளித்துளியாக இந்திய உதவிகள் கிடைக்கின்றன. இதன்மூலம் இந்தியா தனது அருமையை உணர்த்தமுற்படுகிறது. அதேசமயம்,பெருமெடுப்பிலான உதவிகள் அடுத்தடுத்த மாதங்களில் ஐ.எம்.எப்பிடமிருந்து கிடைக்கலாம் என்று ரணில் விக்ரமசிங்க எதிர்பார்க்கிறார்.

குறிப்பாக 21ஆவது திருத்தத்தின்மூலம் ஐ.எம்.எப்,மேற்கு நாடுகள்,எதிர்க்கட்சிகள்,காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருப்பவர்கள்.ஆகிய நான்கு தரப்புக்களையும் திருப்திப்படுத்தலாம் என்று கோத்தா+ரணில் கூட்டு சிந்திக்கின்றது.

ஐஎம்எப், காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருப்பவர்கள்,மேற்கு நாடுகள் போன்றன ராஜபக்சவை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.ஆனால் கோத்தா+ரணில் கூட்டு அதற்கு உடனடியாகத் தயாரில்லை.கோட்டாபயவின் அதிகாரங்களைக் குறைத்துவிட்டு அவரைத் தொடர்ந்தும் பதவியில் வைத்திருப்பதே அவர்களுடைய உள் நோக்கம்.

கோட்டாபய பதவி விலகத் தயார் இல்லை என்பதைத்தான் அண்மையில் அவர் அமெரிக்காவின் அவர் அமெரிக்காவின் ப்ளூம்பேர்க் (Bloomberg) செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செவ்வி காட்டுகிறது. “தோற்றுப்போன ஜனாதிபதி என்ற பெயருடன் விலகிச் செல்ல முடியாது”என்று அவர் கூறியிருக்கிறார் (Bloomberg) செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செவ்வி காட்டுகிறது.”தோற்றுப்போன ஜனாதிபதி என்ற பெயருடன் விலகிச் செல்ல முடியாது”என்று அவர் கூறியிருக்கிறார்.

அதாவது தான் இப்பொழுது தோற்றுப் போயிருக்கிறார் என்பதனை அவர் ஒப்புக்கொள்கிறார்.யுத்த வெற்றியை முதலீடாகக் கொண்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற ஒரு குடும்பத்தின் பிரதிநிதி அவர். யுத்த வெற்றியை ஒரு குடும்பச் சொத்தாக மாறிய ராஜபக்சக்கள், அவர்களுக்கு முன்னிருந்த எல்லாத் தலைவர்களும் செய்த தவறுகளின் விளைவாக வந்த திரட்டப்பட்ட தோல்வியை சுமக்க வேண்டி வந்தமை என்பது இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் ஒரு நகைமுரண்தான்.நாட்டின் பொருளாதாரத் தோல்விகளுக்கு ராஜபக்சக்கள் மட்டும் பொறுப்பில்லை.ரணிலும் உட்பட இனப்பிரச்சினையை படைப் பலத்தின்மூலம் தீர்க்க முற்பட்ட எல்லாத் தலைவர்களுமே பொறுப்புத்தான்.இவர்கள் எல்லாருடைய தொடர் தோல்விகளின் திரட்டப்பட்ட விளைவுதான் கோத்தாபயவின் தலையில் வந்து பொறிந்தது.

ஆனால் அவர் வெற்றி பெற்றவராகப் பதவி விலகுவாரா என்பது சந்தேகமே. ஏனென்றால் அவர் இனிப் பெறக்கூடிய எல்லா வெற்றிகளும் ரணில் விக்கிரமசிங்கவின் கணக்கில்தான் சேர்க்கப்படும்.

கோத்தா+ரணில் கூட்டு ஒர் அசுத்தக் கூட்டு என்று யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.அது ஒரு தந்திரக் கூட்டு.தோல்வியின் விளிம்பில் சிங்களத் தலைவர்கள் கட்சி பேதங்களைக் கடந்து எப்படி ஒருவர் மற்றவரைப் பாதுகாப்பார்கள் என்பதற்கு அதுவோர் ஆகப் பிந்திய உதாரணம்.

ரணிலின் அரசியல் சதுரங்கம் ?

யதீந்திரா

சில வாரங்கள் வரையில், ரணிலின் அரசியல் வாழ்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதான ஒரு அனுமானமே பரவலாக இருந்தது. ஆனால், ராஜபக்சக்களின் வீழ்ச்சி, ரணில் விக்கிரமசிங்கவை ஆறாவது பிரதமராக்கியிருக்கின்றது. இதன் மூலம், ரணில் – தனது அரசியல் எதிர்காலம் தொடர்பான அனைத்து ஆருடங்களையும் ஒரு ஆசனத்தின் மூலம் தோற்கடித்திருக்கின்றார். ரணிலின் பதவியேற்பு தொடர்பில், பலவாறான அபிப்பிராயங்கள் இருக்கின்றன. அவரது நியமனம் ஜனநாயகரீதியானதல்ல – அது முறையானதல்ல என்று கூறுவோர் உண்டு. ரணில் விக்கிரமசிங்கவின் நியமனத்தை, ஜனநாயகரீதியில் பார்க்க முடியுமென்று நான் கருதவில்லை. இது அடிப்படையில் நெருக்கடி நிலையை கையாளுவதற்கான ஒரு தந்திரோபாய நகர்வு. தந்திரோபாய நகர்வுகளுக்கும் ஜனநாயகத்திற்கும் என்ன தொடர்பு? இதில் வெளித்தெரியாத டீல்கள் இருக்கலாம். அதிகார அரசியலில் டில்கள் தவிர்க்க முடியாதவை அதையும் விட்டுவிடுவோம். இவ்வாறான எதிர் கருத்துக்களுக்கப்பால், இன்றைய சூழலில் ரணில் விக்கிரமசிங்க நிலைமைகளை சமாளிக்கக் கூடிய ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. தென்னிலங்கையில் மட்டுமல்ல, தமிழர்கள் மத்தியிலும் அவ்வாறான அப்பிராயம் பரவலாக உண்டு.

ரணில் ஒரு நரியென்னும் அப்பிராயம் தமிழ் தேசியவாதிகள் மத்தியிலுண்டு. நான் தமிழ் அரசியலில் ஈடுபட ஆரம்பித்த போது, படித்த தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்கவை நரியென்று கூறுவதை பரவலாக கேட்டிருக்கின்றேன். அதாவது, அவர் ஒரு தந்திரசாலி. அவரிடம் கவனமாக இருக்க வேண்டுமென்னும் அச்சத்திலிருந்தே, மேற்படி பார்வை உருவாகியது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன தொடர்பிலும் தமிழ் அரசியலாளர்கள் மத்தியில் இவ்வாறான பார்வையே உண்டு. ஜெயவர்த்தன வழிவந்த ஒருவர் என்பதால்தான், ரணிலையும் பலர் அவ்வாறு உச்சரிக்கின்றனர். இங்கு நரியென்னும் அடைமொழி, அரசியல் அர்தத்திலேயே பயன்படுத்தப்படுகின்றது. ஒரு தலைவன் என்பவன், நரியாகவும் இருக்க வேண்டுமென்பது, மாக்கியவல்லியின் அறிவுரை. மாக்கியவல்லியின் பார்வையில், ஒரு தலைவர் என்பவர் சிங்கமாகவும் நரியாகவும் இருக்க வேண்டும். ரணில் மாக்கியவல்லியின் கூற்றுக்கு இணையான ஒரு அரசியல்வாதி. ரணிலின் மீதுள்ள அச்சத்தின் காரணமாகவே, பிரபாகரன், தேர்தல் பகிஸ்கரிப்பின் மூலம், அவரை தோற்கடிக்கும் வியூகத்தை வகுத்திருந்தார்.

2005 தேர்தலில், தமிழ் மக்கள் பெருவாரியாக வாக்களித்திருந்தால், நிச்சயம், ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பார். ரணிலின் புத்திசாதுர்யம்மிக்க வியூகங்களை எதிர்கொள்வதை விடவும், கடும்போக்குவாதியொருவரின் யுத்தத்தை எதிர்கொள்வதையே, பிரபாகரன் விரும்பினார். இறுதியில் அவரது தெரிவு அவருக்கே அழிவானது. தங்களின் வெல்ல முடியாத அரசியல் எதிரிகளை, தற்கொலை தாக்குதலின்
மூலம் வீழ்த்துவே, புலிகளின் வழமையான அரசியல் தந்திரோபாயமாகும். ரணில் விக்கிரமசிங்கவின் விடயத்தில், வழமைக்கு மாறாக, தமிழர்களின் வாக்குகளை கொண்டே, ரணிலின் அரசியல் எதிர்காலத்தை பிரபாகரன் தோற்கடித்தார்.

இப்போது அவர் பிரதமராக வந்திருக்கும் பின்னணி தொடர்பான, விமர்சனங்களுக்கு அப்பால், இன்றைய சூழலை கையாளுவதற்கு ரணிலை விடவும் வேறொரு பொருத்தமான நபர் இல்லையென்பதை பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். 2019 நாடாளுமன்ற தேர்தலில், படுமோசமான தோல்வியை சந்தித்திருந்த ரணில் விக்கிரமசிங்க, ஒரேயொரு ஆசனத்தின் மூலம் நாட்டின் பிரதமராக வந்திருக்கின்றார் என்றால், அது அவரது புத்திக் கூர்மையன்றி, வேறொன்றுமில்லை. ராஜபக்சக்கள் மிகவும் திட்டமிட்டு இதனை செய்திருக்கின்றனர் என்றும் சிலர் கூறுகின்றனர் – இதனை நான் சரியான கணிப்பாக பார்க்கவில்லை. ஏனெனில், ஜனாதிபதி கோட்டபாயவின் முதல் தெரிவு, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவாகவே இருந்தது. ஆனால் சந்தர்பத்தை சரியாக கையாளுவதில் துரிதமாகவும் புத்திசாலித்தனமாகவும் பிரேமதாச செயற்பட்டிருக்கவில்லை. இந்த இடைவெளியைத்தான் ரணில் பயன்படுத்திக் கொண்டார்.

இன்றைய சூழலில் மக்களின் முதன்மையான பிரச்சினை பொருளாதார சுமைதான். இதனை சரிசெய்வதில் ரணில் வெற்றிபெறுவாராக இருந்தால், அவர் மீளவும் சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள ஒரு தலைவராக வந்துவிடலாம். ஆனால் ஆட்சி மாற்றத்தின் போது, ரணிலின் மீது வைத்திருந்த நம்பிக்கையை பாதுகாப்பதில் அவர் தோல்வியடைந்திருந்தார். ரணில்-மைத்திரி ஆட்சியின் தவறுகளும் ராஜபக்சக்களின் மீளெழுச்சிக்கு ஒரு பிரதான காரணமாகும். ஆட்சி மாற்றத்தின் தோல்வியே, இறுதியில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியின் சிதைவுக்கும் வழிவகுத்தது. எந்த ராஜபக்சக்களை வீழ்த்துவதற்காக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதோ, இறுதியில், ராஜபக்சக்களை பலப்படுத்துவதற்கே அது பயன்பட்டது. அந்த வகையில், ஆட்சி மாற்றத்தை தக்கவைப்பதில் ரணிலால் வெற்றிபெற முடியவில்லை.

ரணில் இன்றைய நெருக்கடி நிலையையை கையாளக் கூடியவரென்று கூறுவதற்கு பின்னாலிருக்கும் பிரதான காரணம், அவர் மேற்குலகிற்கு சார்பானவர் என்னும் பார்வையாகும். இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளில், அமெரிக்கா அதிக ஈடுபாடு காட்டியிருந்தது. இதற்கு, அமெரிக்காவின் அப்போதைய உதவி ராஜாங்கச் செயலர், ரிட்சர்ட் ஆமிட்ரேஜின் பிரத்தியோக ஈடுபாடும் ஒரு பிரதான காரணமாகும். இது பற்றி, அப்போது, இலங்கைக்கான, அமெரிக்க தூதுவராகவிருந்த ஜிப்ரி லுன்ஸ்டட் இவ்வாறு விபரிக்கின்றார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டுமென்பதில் ரிச்சர்ட் ஆமிட்ரேஜ் பிரத்தியேக ஈடுபாடு காண்பித்திருந்தார். ஜக்கிய தேசியக் கட்சி, அடிப்படையில் மேற்குசார்பான கட்சி. உலகளாவிய கொன்சவர்டிவ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில், ஜக்கிய தேசியக் கட்சியும் ஒரு அங்கத்துவ கட்சி. இந்த கூட்டமைப்பின் இணை நிறுவனர்களில், அப்போது அமெரிக்காவின் ஜனாபதியாக இருந்த, ஜோர்ஜ். எச்.டயிள்யு.புஸ்சும் ஒருவராவார். அதே வேளை, அமெரிக்காவின் குடியரசு கட்சிக்கும் ஜக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான நீண்டகால நெருக்கமிருந்தது. இப்படியான காரணங்களால், ரணில் தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்த வேண்டுமென்பதில் ஆமிட்ரேஜ் பிரத்தியேக ஈடுபாடு காண்பித்திருந்தார். அன்றைய சூழலில், அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள வட்டாரத்தில், இலங்கைக்கான அதிகாரியென்று அழைக்கப்படுமளவிற்கு, ஆமிட்ரேஜ், இலங்கை விடயங்களில் பிரத்தியே ஈடுபாட்டை காண்பித்திருந்தார். ஆனால் ஆமிட்ரேஜின் பிரத்தியேக நகர்வையே விடுதலைப் புலிகள் தோற்கடித்திருந்தனர். மேற்குலகு விடுதலைப் புலிகளுக்கு எதிராக முற்றாக திரும்பிய இடமும் இதுதான்.

ரணில் விக்கிரமசிங்க மிகவும் புத்திக் கூர்மையுள்ளவராக இருந்த போதிலும் கூட, அவரால் நிறைவேற்றதிகார கதிரையை ஒரு முறை கூட தொடமுடியவில்லை. 2005இல் விடுதலைப் புலிகளால் அந்த வாய்ப்பை இழந்து போனார். 2015இல், ஆட்சி மாற்றத்திற்கான பரந்த கூட்டணியொன்று உருவாக்ககப்பட்ட போதிலும் கூட, ரணிலுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மைத்திரிபால சிறிசேனவிற்கு பின்னாலிருந்தே ரணில் செயற்பட வேண்டியேற்பட்டது. ஆட்சிமாற்றம், ரணில் விக்கிரமசிங்கவை மீளவும் அதிகாரமுள்ள பிரதமராக முன்னிறுத்திய போதிலும் கூட, ரணில்-மைத்திரி உள்-மோதல்களால், அவர், மீளவும் மக்கள் மத்தியில் அன்னியப்படக் கூடிய சூழலே உருவாகியது. சஜித் பிரேமதாசவின் பிளவால், இறுதியில் ஜக்கிய தேசியக் கட்சி முற்றிலுமாக சிதைந்தது. கிட்டத்தட்ட ரணில் விக்கிரமசிங்க காணாமல் போய்விட்டார் என்னும் நிலையிலிருந்துதான், அவர் தற்போது, மீளவும் பிரதமராகியிருக்கின்றார்.

எரிக் சொல்கெய்ம், சொல்வது போன்று, ரணில் விக்கிரமசிங்க ஒரு சிறந்த புத்திஜீவி ஆனால் தெருச் சண்டைக்காரரல்ல – அவரிடம் விரிவான பொருளாதார திட்டமிருந்தது – சிங்கப்பூர், தாய்வான் போன்று, இலங்கையையும் மாற்ற வேண்டுமென்று அவர் விரும்பினார். ஆனால், சிங்கள தெருச்சண்டித்தனத்திற்கு முன்னால் ரணிலின் புத்திக் கூர்மை வெற்றிபெறவில்லை. ரணிலால் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக ஒரு போதுமே நிமிரமுடியவில்லை. ஆனாலும் தனது புத்திக் கூர்மைகொண்டு, தனக்கான ஆடுகளத்தை அவர் எப்போதுமே உருவாக்கிக் கொள்கின்றார். தெருச்சண்டியர்களான ராஜபக்சக்கள் தேற்றுப்போயிருக்கும் ஆடுகளத்தில், சிங்கமாகவும் நரியாகவும் மீண்டும் ரணில், களமிறங்கியிருக்கின்றார்.

ரணில் இதற்கு முன்னர் ஆடிய அரசியல் களங்களுக்கும் இதற்கும் அடிப்படையான வேறுபாடுண்டு. மீட்பர்கள் இல்லாத இடைவெளியில், தன்னால் மீட்க முடியுமென்னும் நம்பிக்கையோடு களமிறங்கியிருக்கின்றார். இது மிகவும் சிக்கலான சவால். இந்தச் சவாலில் ரணில் வெற்றிபெற்றால், அவர், மக்கள் மத்தியில் மறக்கமுடியாதவொரு தலைவராவார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு விடயம் உண்மை. ரணில் இந்த ஆட்டத்தில் தோல்வியடையக் கூடாது. ஒரு வேளை ரணில் தோல்வியடைந்தால், நாடு மீள முடியாத நெருக்கடிக்குள் வீழ்வது நிச்சயம். மோசமான வனமுறையொன்றும் வெளிக்கிளம்பலாம்.

வரலாறு பல ஆச்சரியங்களை மறைத்து வைத்திருக்கும் ஆசானாகும். 2005இல், ரணிலின் தோல்விக்கு தமிழர்கள் காரணமானபோது, அது விடுதலைப் புலிகளுக்கும்; தமிழ் மக்களுக்கும் பேரழிவை கொடுத்தது. இப்போது சிங்களவர்கள் ரணிலை தோற்கடித்தால், சிங்களவர்கள் பேரழிவை சந்திக்க நேரிடும். இப்போது ரணில் தமிழர்களுக்கு தேவையோ இல்லையோ ஆனால் நிச்சயம் சிங்களவர்களுக்கு தேவை. எனது கருத்தில் அவர் தமிழர்களுக்கும் தேவைதான்.

Posted in Uncategorized