பெருந்தோட்டத்துறை தொடர்பில் ஜனாதிபதிக்கு மனோ அவசர கடிதம்

மத்திய மாகாண நுவரெலியா, கண்டி, மாத்தளை, ஊவா மாகாண பதுளை, மொனராகலை, சப்ரகமுவ இரத்தினபுரி, கேகாலை, மேல் மாகாண களுத்துறை, தென் மாகாண காலி, மாத்தறை மற்றும் கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை படர்ந்துள்ள பெருந்தோட்டத்துறை குடியிருப்புக்களை “நலிவுற்ற” பிரிவாக அறிவித்து, அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சி திட்டங்கள் அமுல் படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பான விசேட வாழ்வாதார உதவிகளை இலங்கை அரசுக்கு வழங்கி உதவுங்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களையும், கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் ஊடாக கோருகிறேன். பெருந்தோட்ட துறையில் நிலைமை மோசமடைந்து பட்டினி சாவு ஏற்பட முன் இனியும் தாமதிக்காமல் இந்நடவடிக்கை அவசர நிலையாக கருதி முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இலங்கையில் “வறுமை” பற்றிய கணக்கெடுப்பு அறிக்கையில் உலக வங்கி, இலங்கையின் தேசிய வறுமை மட்டம் 26 விகிதமாக உயர்ந்துள்ள வேளையில் பெருந்தோட்ட துறையில் வறுமை 53 விகிதமாக அதீதமாக உயர்ந்து இருக்கின்றது. அதேவேளை, ஐநா உலக உணவு நிறுவனத்தின் இலங்கை பற்றிய அறிக்கையில் “உணவின்மை”, நகர துறையில் 43% என்றும், கிராமிய துறையில் 34% என்றும், பெருந்தோட்ட துறையில் 51%, என்றும் கூறுகிறது.

ஆகவேதான், மத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் முதல், மேல் மாகாண களுத்துறை, கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை படர்ந்துள்ள பெருந்தோட்டத்துறை மக்கள் வாழும் குடியிருப்புக்களை “நலிவுற்ற” பிரிவாக அறிவித்து, அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சி திட்டங்கள் அமுல் படுத்த வேண்டும். நம் நாட்டில் இன்று நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள, உணவின்மை பிரச்சினையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி மலையக பெருந்தோட்ட மக்களுக்கு விசேட உதவிகளை வழங்கிட இந்திய மத்திய அரசும், தமிழக மாநில அரசும் முன்வர வேண்டும்.

இலங்கை முழு நாட்டுக்கும் இந்திய மத்திய அரசு வழங்கிடும் உதவிகள், மிகவும் நலிவுற்ற நிலையில் வாடும் இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்களுக்கு முறையாக கிடைப்பதில்லை என்பதை மிகவும் பொறுப்புடன் இந்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

பெருந்தோட்ட துறையில் நிலைமை மோசமடைந்து பட்டினி சாவு ஏற்பட முன் இனியும் தாமதிக்காமல் இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி கோருகிறது.

இந்திய பாதுகாப்பு ஆலோசகருடன் இலங்கை உயர்ஸ்தானிகர் சந்திப்பு

இலங்கை – இந்திய உறவுகளின் தற்போதைய நிலையை மீளாய்வு செய்து பரந்துப்பட்டு பல துறைகளில் கூட்டாண்மையுடன் செயற்படுவது தொடர்பில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவால் மற்றும் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிற்கும் இடையில் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

புது டெல்லியில் சனிக்கிழமை (12) இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பு உறவின் தற்போதைய நிலைமை குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். கடந்த செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதியும் தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவால் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிற்கும் இடையில் இதே போன்றதொரு கலந்துரையாடல் டெல்லியில் இடம்பெற்றிருந்தது.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் போது இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்கியது. பொருளாதார ஸ்தீரதன்மையை உருவாக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் முன்னெடுக்கும் பேச்சு வார்த்தைகளின் போதும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான அவசியத்தை சர்வதேச அரங்குகளில் வலியுறுத்தி வருகின்றது. கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியுடன் (எக்ஸிம்) இலங்கை கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

விடுவிக்கப்பட்டதும் சாந்தன் இலங்கை திரும்ப விருப்பம்

வேலூர் ஜெயிலில் சாந்தனை வக்கீல் ராஜகுரு சந்தித்து பேசினார். அப்போது சாந்தன் வெளியே வந்த பிறகு தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று வழிபட உள்ளார். அதைத் தொடர்ந்து தனது சொந்த நாடான இலங்கைக்கு செல்ல உள்ளார் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டது. எனவே பாஸ்போர்ட்டை புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் உள்ள சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி (வயது 75) கூறியதாவது:- 30 ஆண்டுகளாக பிரிந்து இருந்த எனது மகனை தற்போது மத்திய அரசு விடுதலை செய்து அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காகப் பாடுபட்டு அத்தனை காலம் உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு பேரும் சேர்ந்துதான் எனது பிள்ளையின் விடுதலைக்கு வழி செய்திருக்கிறீர்கள். தமிழக அரசுக்கும் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் எப்போதும் இந்த நன்றியை மறக்க மாட்டோம். எனக்குத் தான் இந்த அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. இருந்தாலும் நலமாக உள்ளேன். எனது பிள்ளை என்னோடு வந்து சேர்ந்துவிடுவான் என உறுதியாக உ ள்ளேன் . இவ்வவாறு அவர் கூறினார்.

எனது பிள்ளையுடன் வாழ்வதற்கே உயிருடன் உள்ளேன் – சாந்தனின் தாயார் உருக்கம்

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிககளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், றொபேர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பில் சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி (வயது 75) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
யாழ்ப்பாணம் , வடமராட் சி – உடுப்பிட்டியில் வசித்து வரும் சாந்தனின் தாயார் மேலும் தெரிவிக்கையில், 30 வருடங்களாக கோயில் கோயிலாகத் திரிந்து முன்வைத்த வேண்டுதல்களுக்கு இன்று பலன் கிடைத்துள்ளது.

எனது மகன் விடுதலையாவதற்குக் காரணமான அனைவருக்கும் நன்றி.பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதில் இருந்து எனக்குப் பெரும் மன வருத்தமாக இருந்தது. எனது பிள்ளையை எப்போது விடுதலை செய்வார்கள் என்று ஏக்கமாக இருந்தது. அது இப்போதுதான் நிறைவேறியது.

எனது பிள்ளைக்கு இப்போது 53 வயது. 30 வருடங்களைச் சிறையிலேயே தொலைத்துவிட்டார். எனது உடல்நிலை சரியில்லை. இல்லையென்றால் நான் சென்று எனது பிள்ளையை அழைத்து வருவேன்.

எனது ஆசை எல்லாம் எனது பிள்ளை நல்லபடியாக என்னிடம் வந்து சேரவேண்டும் என்பதுதான். அவருடன் நான் சிறிது காலம் வாழவேண்டும். அதற்காகத்தான் நான் உயிருடன் இருக்கின்றேன் என்றார்.

Posted in Uncategorized

தமிழகம் போன்று அரசியல் கைதிகளை விரைந்து விடுவிக்க வேண்டும் – அருட்தந்தை சக்திவேல்

தமிழக அரசைப் போன்று தமிழ் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான அரசியல் கைதி¸ விடுவிக்க வேண்டும் எனும் குரலுக்குச் செவிமடுத்தும், அரசியல் கைதிகளின் நன்னடத்தையை அடிப்படையாகக் கொண்டும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய துரித நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப் பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் வலியுறுத்தியுள்ளார். அவர் இன்று (12) வெளியிட்டுள்ள ஊடக அ றி க்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புபட்ட வர்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 30 வருட காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களை இந்திய உச்ச நீதிமன்றம் அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்திருப்பதை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பாராட்டுகின்றது. இவர்களுடைய விடுதலைக்காகப் பாடுபட்ட தமிழக அரசு உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றியையும் தெரிவிக்கின்றது.

இந்த வழக்கின் தீர்ப்பை முன் மாதிரியாகக் கொண்டேனும் இலங்கை சிறைகளில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசு துரித நடவடிக்கை மேற் கொள்ளல் வேண்டும்.

மஹிந்த ராஜபக்௸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 12 ஆயிரம் முன் னாள் போராளிகள் சமூக மயமாக்கப்பட்டனர் என்று கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்டு குறுகிய காலத்திலேயே நன்னடத்தையாளர்களாக அடை யாளம் காணப்பட்டு இவர்கள் சமூக மயமாக்கப்பட்டனர். தொடர்ந்து அரசியல் கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது அவரைக் கொலை செய்வதற்காக முயற்சித்தவர் எனப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட் டிருந்த ஒருவர் விடுதலை செய்யப்பட்டார்.

அதேபோன்று கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி காலத்திலும் தண் டனை தீர்ப்பளிக்கப்பட்ட 16 பேர் விடு விக்கப்பட்டதையும் நாம் அறிவோம்.தற்போதைய ஜனாதிபதியும் அண்மையில் சிலருக்கு விடுதலைக்கு அனுமதி அளித்திருந்தார். இதற்கு இவர்களின் நன்னடத்தையும் ஒரு காரணமாகும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது நீண்ட காலம் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக் கும் எந்தவொரு காலகட்டத்திலும் சிறைச்சாலை நிர்வாகத்துக்கு எதி ராகவோ, அரசுக்கு எதிராகவோ எதனை யும் செய்யவில்லை. நன்னடத்தை மிக்க வர்களாகவே காணப்பட்டுள்ளனர். அரசியல் கைதிகள் தங்களின் விடுதலையை வலியுறுத்தி நிர்வாகத்துக்கு முன் அறிவிப்பு செய்தே பல்வேறு கால கட்டங்களில் சிறைச்சாலைப் பொருட் களுக்கோ அல்லது வேறு எதற்குமோ எ ந் த வி த மான சேதங்களையும் ஏற்படுத்தாது அமைதிப் போராட்டங்களையே நடத்தியுள்ளனர்.

இந்தப் போராட்டக் காலத்தில் சிறந்த ஒழுக்க நெறியை இவர்கள் கடைப்பிடித் துள்ளனர். தொடர்ந்து சிறைச்சாலை நிர்வாகத்தின் ந ன் ம தி ப் பைப்ப் பெற்றவர்களாகவே உள்ளனர்.பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பலர் ஒப்புதல் வாக்கு மூலமே குற்றவாளிகள் ஆக்கப்பட்டு தண்டனை அனுப விப்பவர்களாக உ ள் ள ன ர் . இதனைக் க ரு த் தி ல் கொண்டும், தமிழக அரசைப் போன்று தமிழ் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனும் குரலுக்குச் செவிமடுத்தும், அரசியல் கைதிகளின் நன்னடத்தையை அடிப்படையாகக் கொண்டும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசு அவசர நடவடிக் கையை மேற்கொள்ள வேண்டும்.

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முயலும் அரசு அந்த மக்களின் நீண்ட காலப் பிரச்சினைகளில் ஒன்றானதும் அரசியல் பிரச்சினையோடு நேரடி தொடர்புபட் ட துமான அ ர சி ய ல் கைதிகளின் விடுதலை பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருதல் வேண்டும். அதுவே அரசு மீதான நம்பிக்கைக்கு வழி வகுக்கும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை: தமிழக தலைவர்கள் வரவேற்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ளதாவது,

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்த 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இதன்மூலம், மறைந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவின் நோக்கம் நிறைவேறியுள்ளது. இது அதிமுகவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: நீண்ட காலம் சிறையில் இருந்த 6 பேரை விடுவித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம். மாநில அரசின் உரிமைகளை உறுதிப்படுத்தியதுடன், ஆளுநரின் செயல்பாட்டுக்கும் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் சரியான பாடம் புகட்டியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: 7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் மீது ஆளுநரும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுத்து, காலத்தில் விடுதலை செய்ய தவறிவிட்டனர். இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சட்டப் போராட்டத்தில் 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருப்பதை வரவேற்கிறோம்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: சிறையில் இருப்போரை விடுதலை செய்வது குறித்து முந்தைய ஆளுநரும், தற்போதைய ஆளுநரும் மோசடி நாடகத்தை நடத்தி வந்தனர். இதற்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்து, நீதி வென்றே தீரும் என்பதை நிலைநாட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ்: 2018-ல் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டிருந்தால், அப்போதே அவர்கள் விடுதலையாகி இருப்பார்கள். அமைச்சரவையின் பரிந்துரை, தீர்மானம் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி உட்பட 6 பேருக்கு கிடைத்த தீர்ப்பு தாமதமானாலும் அவர்களின் விடுதலை வரவேற்கத்தக்கது.

விசிக தலைவர் திருமாவளவன்: 6 பேர் விடுதலை ஆறுதல் அளிக்கிறது. தமிழர் விரோத ஆளுநருக்கு தக்க பாடம் புகட்டியுள்ள தனிப்பெரும் தீர்ப்பு. ஆளுநர் பதவி விலகுவதே சரி.

26 தமிழர் உயிர் காப்புக் குழுதலைவர் பழ.நெடுமாறன்: விடுதலையான 6 பேரில் 4 பேர் இலங்கை தமிழர்கள். அவர்களை பிற வெளிநாடுகளில் வாழும் அவர்களது உறவினர்களிடம் அனுப்ப வேண்டும்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: தமிழக அரசின் பரிந்துரையை ஏற்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை போட்டது சட்டப் பிழை என்பதற்கான சான்றே இந்தத் தீர்ப்பு. இனியாவது அரசமைப்புச் சட்ட கடமையில் இருந்து தவறாமல் ஆளுநர்கள் நடக்க வேண்டும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: பேரறிவாளனை தொடர்ந்து, மற்ற 6 தமிழர்களின் நீண்ட சட்டப் போராட்டம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது. சிறையில் இருந்து வெளியே வரும் அவர்கள் புதியதோர் வாழ்வை தொடங்க வாழ்த்துகள்.

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 7 பேர் விடுதலைக்கு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பழனிசாமி ஆட்சியின்போது, அமைச்சரவையைக் கூட்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிமுகவின் சட்ட நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சசிகலா, தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், எஸ்டிபிஐ மாநிலத்தலைவர் நெல்லை முபாரக், முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் சேது.கருணாஸ் உள்ளிட்டோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

மூன்று விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மீது இந்தியாவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழ்நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டதாகக் கூறப்படும் மூன்று விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு திணைக்களம் நேற்று வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான நவீன் என்கிற எம். சக்கரவர்த்தி, ஜே சஞ்சய் பிரகாஷ் மற்றும் கபிலர் என்ற கபிலன் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மே 19 அன்று, சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையப் பகுதியில் வாகனச் சோதனையின் போது, ​​இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிப் பொடிகள் மீட்கப்பட்டது தொடர்பாக வழக்கு என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

விடுதலை புலிகளின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்தும் நோக்கத்துடன் புலிகளைப் போன்ற ஒரு அமைப்பை உருவாக்க விரும்பியதாக தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை உள்நாட்டுப் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இலங்கைத் தமிழ் மக்களால் அனுசரிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளைக் குறிக்கும் மே 18 அன்று வேலைநிறுத்தம் செய்யவும் இவர்கள் திட்டமிட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது

இந்தியாவுக்கு இ.தொ.கா தலைவர் திடீர் விஜயம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்தியாவுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவின் கூடலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலனின் அழைப்பின் பேரிலே அவர் இந்தியா சென்றுள்ளார். கூடலூர் TENTEA தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் தாங்கள் எதிர்நோக்கும்  பிரச்சினைக்கு  உடனடி தீர்வு பெற்றுத்தருமாறு  உதவி கோரியுள்ளனர்.

அதற்கமையவே அவர் இந்தியா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தரம் ஒன்றில் இருந்து மாணவர்களுக்கு ஆங்கிலம்

தரம் ஒன்றில் இருந்து மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் பழக்கத்தை அதிகரிக்க 2023ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இதற்கமைய அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரச பாடசாலைகளின் முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 13,500 ஆசிரியர்களை நவம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பயிற்றுவிப்பாளர்களாகப் பயிற்சியளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்காலத் தேவைக்கு ஏற்ற வகையில் பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கில மொழியைக் கற்பிப்பதற்கு முன்னுரிமை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

ஆங்கில மொழிமூலப் பாடப்புத்தகங்களில் உள்ள இலக்கணப் பிழைகள் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அவ்வாறான இலக்கணப் பிழைகள் உள்ளதா என்பதைக் கண்டறியுமாறு தேசிய கல்வி நிறுவகத்துக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் இலங்கையிலுள்ள தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் உள்ள பிள்ளைகள் விரும்பினால் சிங்கள மொழிமூலத்தில் கல்வி கற்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இங்கு பரிசீலிக்கப்பட்டது.

தற்பொழுது பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதாகவும், இதனைத் தடுப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கருத்துத் தெரிவித்ததுடன், இது தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் பதில் வழங்கினார்.

அகதிகளுக்கு பாதுகாப்பளியுங்கள்: அவுஸ்திரேலியாவில் பேரணி

இலங்கையிலிருந்து பாதுகாப்புத் தேடி வெளியேறிய ஈழத்தமிழர்கள் உள்பட அனைத்து நாட்டு அகதிகளுக்கும் நிரந்தர பாதுகாப்பு கொடுக்க வலியுறுத்தி அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழத்தமிழர்கள் சிட்னி நகரில் பேரணி நடத்தியிருக்கின்றனர்.

அவுஸ்திரேலியாவில் தொழிற்கட்சி அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னரும் அகதிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு வழங்க மறுக்கப்பட்டு வரும் பின்னணியில், கடந்த நவம்பர் 6ம் தேதி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நிரந்தர பாதுகாப்புக்காக காத்திருக்கும் தனது தாயின் நிலைக் குறித்து பேரணியில் விளக்கிய 19வயது குமரன், “படகில் 30 நாட்கள் பயணித்து அவுஸ்திரேலியாவுக்கு வந்தோம். உள்நாட்டுப் போரின் போது வெளியேறிய காரணங்கள் குறித்து எங்கள் அனைவரிடமும் கேட்கப்பட்டது. ஆனால் அது உள்நாட்டுப் போரல்ல, தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை. எங்களது தஞ்சக்கோரிக்கை விவகாரம் பரிசீலிக்கப்பட்ட வந்த அதே சமயம், நாங்கள் இரண்டு ஆண்டுகளாக தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டோம். பின்னர் சமூகத்தடுப்பிற்குள் விடப்பட்டோம். மெல்பேர்னில் குடியமர அனுமதிக்கப்பட்ட நிலையில் நாங்கள் திடீரென வேறு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டோம். தடுப்பு முகாம் வாழ்க்கை கணிக்க முடியாதது. எப்போது வரை தடுப்பில் வைக்கப்படுவார்கள் என அகதிகளிடம் சொல்ல மாட்டார்கள். நிச்சயத்தன்மையற்ற ஒரு நடைமுறை அது,” என அவர் கூறியிருக்கிறார்.

நிரந்தர பாதுகாப்பு வழங்குவது மட்டுமே ஈழத்தமிழ் அகதிகளுக்கான ஒரே சாத்தியமான தீர்வு எனக் கூறுகிறார் தமிழ் அகதிகள் கவுன்சிலின் பேச்சாளர் ரேணுகா இன்பகுமார்.

“அவுஸ்திரேலிய அரசாங்கம் அனைத்து அகதிகளுக்கும் நிரந்தர பாதுகாப்பு வழங்க வேண்டும். அவுஸ்திரேலியாவின் இனவாத குடியேற்ற முறைக்குள் தனது நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த இவ்வாறான பேரணிகள் தொடர்ந்து நடைபெறுவது முக்கியம்,” எனக் கூறியிருக்கிறார் ரேணுகா இன்பகுமார்.

தஞ்சம் கோருவது குற்றம் ஆகாது, 10 ஆண்டுகளாக தடுத்து வைத்திருப்பது போதாதா? குடும்பம் மீண்டும் ஒன்றிணைதல் என்பது அடிப்படை உரிமை, மனநலப் பாதிப்பால் பல உயிர்கள் மாண்டுள்ளன போன்ற வாசகங்கள் பேரணி பதாகைகளில் இடம்பெற்றிருந்தன.

அகதிகளின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான பரப்புரையின் அங்கமாக வரும் நவம்பர் 29ம் தேதி அவுஸ்திரேலியாவின் கன்பரா நகரில் மற்றொரு பேரணியை தமிழ் அகதிகள் கவுன்சில் நடத்தியிருக்கிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றதாக சுமார் 700க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பலர் அவுஸ்திரேலியாவின் கடல் பகுதிகளில் இடைமறிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர்.

அத்துடன் படகு வழியாக தஞ்சம் கோரும் இலங்கை மக்களை தடுக்கும் விதமாக இலங்கை மீன்பிடி படகுகளுக்கு 4,200 ஜி.பி.எஸ் கருவிகளை வழங்கும் செயலையும் அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது.