அவுஸ்திரேலியாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – இந்திய வெளிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு

அவுஸ்திரேலியாவின் தலைநகர் பேர்த்தில் வெள்ளிக்கிழமை (09) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்திய அறக்கட்டளை மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார்.

இந்த மாநாட்டை “நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப் பொருளில் இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியாவுடனான புதிய தரைவழித் தொடர்புகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டும் – ரணில் விக்கிரமசிங்க

உலகின் பலமான நாடுகள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல், தமக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இந்து சமுத்திர வலய நாடுகளின் நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான இந்து சமுத்திரத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

2050 ஆண்டளவில் இந்தியா, இந்தோநேசியா போன்ற நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி 8 மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுவூப்படுத்தும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா பேர்த் நகரில் நடைபெற்ற 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஆற்றிய பிரதான உரையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தை அண்டிய நாடுகள் மற்றும் சமுத்திரத்தை பெருமளவில் பயன்படுத்தும் பிற நாடுகளைப் பாதிக்கும் பொதுவான எதிர்பார்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் 7ஆவது இந்து சமுத்திர மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இன்று ஆரம்பமான நிலையில் நாளையும் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டை “நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப் பொருளில் இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டொக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் உள்ளிட்ட இந்து சமுத்திர நாடுகளின் பிரதிநிதிகள் , இந்திய மன்றத்தின் ராம் மாதவ் உள்ளிட்ட பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு விரிவான பிராந்திய திட்டமொன்று அவசியம் என்றும், அதனை இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கமான IORA தலைவர்களினால் மட்டுமே செய்ய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கடல் மற்றும் விமான போக்குவரத்துச் சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிக்காத வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலான ஒழுங்கு விதிகள், காலநிலை நெருக்கடியை கையாள்வது மற்றும் இந்து சமுத்திரத்தின் நிலையான பயன்பாடு தொடர்பான வழிகாட்டல் விதிமுறைகளின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், வர்த்தகப் போக்குவரத்துகளுக்காக தற்காலத்தில் பயன்படுத்தப்படும் சூயஸ் கால்வாய் உள்ளிட்டவை எதிர்காலத்தில் போதுமானதாக இருக்காது. எனவே, பிராந்தியத்தின் விநியோக மையம் என்ற வகையில் இலங்கை தென்னிந்தியாவுடன் வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான புதிய தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை பேணுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதேபோன்றே காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளைக் கண்டறிவதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தின் ஸ்திரத்தன்மைக்காக, 5 வருடங்களுக்குள் சுதந்திரமானதும் சுயாதீனமானதுமான பாலஸ்தீன அரசை நிறுவி, இஸ்ரேல் அரசன் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளின் மூலம் காஸா பகுதியில் போர் மோதல்களை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம் என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் எதிர்கட்சித் தலைவரும் சந்திப்பு

பொருளாதாரத்தை மீட்டமையை போன்று கிரிக்கட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும் – ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில்

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இன்று(14) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

2024 ஆம் ஆண்டுக்கான தற்போதைய ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.
கடந்த வருட வரவு செலவுத் திட்ட முன்மொழிவை உரிய முறையில் பூர்த்தி செய்ய முடியாத நிலையிலேயே இவ்வருட வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் தரப்பில் இருந்து நோக்கும் போது இது பாதகமான வரவு செலவுத் திட்டம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தலை தொடர்ச்சியாக ஒத்திவைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் ஈழதமிழ் வம்சாவளி பெண் எழுத்தாளருக்கு அதியுயர் விருது

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவரும் சட்டத்தரணியுமான சங்கரி சந்திரன் என்பவர் அவுஸ்திரேலியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் அதியுயர் விருதான மைல்ஸ் பிராங்க்ளின் (Miles Franklin) விருதை வென்றுள்ளார்.

‘சாய் டைம் அட் சினமன் கார்டன்ஸ்’ (‘Chai Time at Cinnamon Gardens’) என்ற நாவலுக்காகவே அவருக்கு இவ் விருதானது வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு யுத்தத்திலிருந்து தப்பிப்பதற்காக 80களில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையைச் சேர்ந்த ஒருவரால் நடத்தப்படும் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் வசிப்பவர்களின் வாழ்க்கையை இந்த நாவல் எடுத்துக்காட்டுவதோடு, போர், இனப்படுகொலை, இனவெறி, குடும்பம், காதல் மற்றும் நட்பு போன்ற கருப்பொருள்களை இந்த நாவல் ஆராய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் “அவுஸ்திரேலிய எழுத்தாளர்களிடையே அங்கீகாரம் பெறுவது அசாதாரணமானது. ‘மைல்ஸ் பிராங்க்ளின் இலக்கிய விருதை வென்றது மிகவும் பெருமையாக இருக்கிறது” என சங்கரி குறிப்பிட்டுள்ளார்.

வைத்திய தம்பதிகளான சங்கரியின் பெற்றோர் 80களில் உள்நாட்டு யுத்தம் காரணமாக இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்று பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடியேறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர்களுக்கெதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு அவுஸ்திரேலிய செனட்டர் கண்டனம்

அவுஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சியினர் இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை கண்டிக்கின்றது என அக் கட்சியின் செனெட்டர் டேவிட் சூபிரிட்ஜ் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று நான் தமிழ் மக்களிற்கு ஆதரவை தெரிவிக்க விரும்புகின்றேன் தமிழ் அகதிகள் பேரவையின் அலுவலகத்தை திறந்துவைக்கும் நிகழ்விற்கு என்னை அவர்கள் அழைத்தது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்

தமிழ் அகதிகள் பேரவை தமிழ் அகதிகளிற்கு தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்குதல் கல்வி தொடர்பான உதவிகளை வழங்குதல் அகதிகள் தொடர்பான பரப்புரைகளை முன்னெடுத்தல் போன்ற முக்கியமான சேவைகளை அகதிகளிற்கு வழங்கிவருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதத்துடன் முள்ளிவாய்க்கலில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு 14 வருடங்களாகின்ற போதிலும் அதற்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்மக்களின் தனிநாட்டிற்கான போராட்டத்திற்கு எதிரான இராணுவநடவடிக்கையின் போது இவர்கள் முள்ளிவாய்க்காலில் சிக்கவைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் பலர் இன்னமும் இலங்கை அரசாங்கத்திலும் இராணுவத்திலும் உயர்பதவிகளில் நீடிக்கின்றனர், எனவும் குறிப்பிட்டுள்ள அவர் அவுஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சியினர் இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்டஇனப்படுகொலையை கண்டிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களிற்கு சுயநிர்ணய உரிமைக்குள் இருக்கின்ற உரிமை பாதுகாப்பு மற்றும் சமாதானத்திற்கு எங்கள் கட்சி ஆதரவளிக்கின்றது எனவும் அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழம் தமிழ் அகதிகள் அகதிகள் தொடர்பான தீர்மானங்கள் முடிவுகள் குறித்த தகவல்களை பெறுவதில் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதிகளின் அடைக்கல கோரிக்கைகளே அதிகளவு நிராகரிக்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எங்கள் நாட்டில் உள்ள தமிழர்கள் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் வாழ்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

ஐ.எம்.எவ், பாரிஸ் கிளப் கலந்துரையாடல்களில் அவுஸ்திரேலியா இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களிலும் பாரிஸ் கிளப் கூட்டங்களிலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்திரேலியா உறுதியளித்துள்ளது.

மேலும் கடல்சார் பாதுகாப்பு, போதைப்பொருள், மனித கடத்தலை தடுத்தல், மீன்பிடி மற்றும் கல்வித் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த அவுஸ்திரேலியாவுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கிடையில் நேற்று வியாழக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இலங்கைக்கு வழங்கிய உதவிக்கு அவுஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன , தகவல் தொடர்பு வலையமைப்பை வலுப்படுத்த மீன்பிடி படகுகளுக்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை வழங்க உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மாணவர்களை மட்டுமின்றி, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்தும் மாணவர்களை ஈர்க்கும் வகையில் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் இலங்கையில் இணைந்த வளாகங்களை நிறுவ முடியும் என்றும் பிரதமர் இதன் போது தெரிவித்துள்ளார்.

மீன்பிடி, விவசாயம், தகவல் தொழில்நுட்பம், மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவளம், இலத்திரனியல் மற்றும் சுற்றுலா போன்ற புதிய துறைகளிலும் முதலீட்டாளர்கள் வருகை தர வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள, குறிப்பாக சுமார் 75 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு வழங்கியமைக்காக பிரதமர் அவுஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவித்தார்.

அத்தோடு சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களிலும் பாரிஸ் கிளப் கூட்டங்களிலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உயர் ஸ்தானிகர் ஸ்டீபன்ஸ் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையிலான சட்டவிரோத குடியேற்றம் குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையிலான சட்டவிரோத குடியேற்றம் குறித்து கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவுஸ்ரேலியாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் கிம் வாட்ஸுடன் கலந்துரையாடியுள்ளார்.

23 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் அமைச்சர்கள் குழுவின் 22ஆவது கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இரு அமைச்சர்களும் பங்காளதேஷிற்கு சென்றுள்ளனர். இதன்போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள், பொருளாதார அபிவிருத்தி, கடல்சார் மற்றும் சுற்றுலா துறைகளின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது கலந்துரையாடியதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையிலான சட்டவிரோத குடியேற்றம் மற்றும் இருதரப்பு நலன்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக அவுஸ்ரேலிய அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அகதிகளுக்கு பாதுகாப்பளியுங்கள்: அவுஸ்திரேலியாவில் பேரணி

இலங்கையிலிருந்து பாதுகாப்புத் தேடி வெளியேறிய ஈழத்தமிழர்கள் உள்பட அனைத்து நாட்டு அகதிகளுக்கும் நிரந்தர பாதுகாப்பு கொடுக்க வலியுறுத்தி அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழத்தமிழர்கள் சிட்னி நகரில் பேரணி நடத்தியிருக்கின்றனர்.

அவுஸ்திரேலியாவில் தொழிற்கட்சி அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னரும் அகதிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு வழங்க மறுக்கப்பட்டு வரும் பின்னணியில், கடந்த நவம்பர் 6ம் தேதி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நிரந்தர பாதுகாப்புக்காக காத்திருக்கும் தனது தாயின் நிலைக் குறித்து பேரணியில் விளக்கிய 19வயது குமரன், “படகில் 30 நாட்கள் பயணித்து அவுஸ்திரேலியாவுக்கு வந்தோம். உள்நாட்டுப் போரின் போது வெளியேறிய காரணங்கள் குறித்து எங்கள் அனைவரிடமும் கேட்கப்பட்டது. ஆனால் அது உள்நாட்டுப் போரல்ல, தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை. எங்களது தஞ்சக்கோரிக்கை விவகாரம் பரிசீலிக்கப்பட்ட வந்த அதே சமயம், நாங்கள் இரண்டு ஆண்டுகளாக தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டோம். பின்னர் சமூகத்தடுப்பிற்குள் விடப்பட்டோம். மெல்பேர்னில் குடியமர அனுமதிக்கப்பட்ட நிலையில் நாங்கள் திடீரென வேறு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டோம். தடுப்பு முகாம் வாழ்க்கை கணிக்க முடியாதது. எப்போது வரை தடுப்பில் வைக்கப்படுவார்கள் என அகதிகளிடம் சொல்ல மாட்டார்கள். நிச்சயத்தன்மையற்ற ஒரு நடைமுறை அது,” என அவர் கூறியிருக்கிறார்.

நிரந்தர பாதுகாப்பு வழங்குவது மட்டுமே ஈழத்தமிழ் அகதிகளுக்கான ஒரே சாத்தியமான தீர்வு எனக் கூறுகிறார் தமிழ் அகதிகள் கவுன்சிலின் பேச்சாளர் ரேணுகா இன்பகுமார்.

“அவுஸ்திரேலிய அரசாங்கம் அனைத்து அகதிகளுக்கும் நிரந்தர பாதுகாப்பு வழங்க வேண்டும். அவுஸ்திரேலியாவின் இனவாத குடியேற்ற முறைக்குள் தனது நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த இவ்வாறான பேரணிகள் தொடர்ந்து நடைபெறுவது முக்கியம்,” எனக் கூறியிருக்கிறார் ரேணுகா இன்பகுமார்.

தஞ்சம் கோருவது குற்றம் ஆகாது, 10 ஆண்டுகளாக தடுத்து வைத்திருப்பது போதாதா? குடும்பம் மீண்டும் ஒன்றிணைதல் என்பது அடிப்படை உரிமை, மனநலப் பாதிப்பால் பல உயிர்கள் மாண்டுள்ளன போன்ற வாசகங்கள் பேரணி பதாகைகளில் இடம்பெற்றிருந்தன.

அகதிகளின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான பரப்புரையின் அங்கமாக வரும் நவம்பர் 29ம் தேதி அவுஸ்திரேலியாவின் கன்பரா நகரில் மற்றொரு பேரணியை தமிழ் அகதிகள் கவுன்சில் நடத்தியிருக்கிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றதாக சுமார் 700க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பலர் அவுஸ்திரேலியாவின் கடல் பகுதிகளில் இடைமறிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர்.

அத்துடன் படகு வழியாக தஞ்சம் கோரும் இலங்கை மக்களை தடுக்கும் விதமாக இலங்கை மீன்பிடி படகுகளுக்கு 4,200 ஜி.பி.எஸ் கருவிகளை வழங்கும் செயலையும் அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது.