தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை – நீதி அமைச்சர்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முதற்கட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில அரசியல் கைதிகளுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்

அதன்பின்னர் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுவிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என நீதி அமைச்சர் குறித்த பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடனும் தம்முடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர்களின் நியாயமான கோரிக்கை தொடர்பில் பரிசீலித்து வருவதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாடு குறித்து அமெரிக்கா அதிருப்தி

சர்வதேச மனித உரிமை தரங்களுக்கு இணங்காத பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற சட்டங்களைப் பயன்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்தை சிதைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே, செயற்பாட்டாளர் ஹஷந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் வண. கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அனுமதி வழங்கியுள்ள நிலையிலேயே இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை ஊக்குவிக்கிறோம் எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சர்ச்சைக்குரிய சீனக்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து வெளியேறியது

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய யுவான் வொங் 5 என்ற சீனக்கப்பல் இன்று மாலை நாட்டிலிருந்து வெளியேறியுள்ளது.

குறித்தக் கப்பல் கடந்த 16 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்து சமுத்திரத்தின் வடமேல் கடற்பகுதியில் செய்மதி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் குறித்தக் கப்பல் நாட்டிற்கு வந்திருந்தது.

யுவான் வொங் 5 என்ற குறித்த கப்பல் கடந்த 11ஆம் திகதி நாட்டிற்கு வரவிருந்தது.

இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்தியா தமது கடும் கண்டனங்களை வெளிப்படுத்தியிருந்தது.

இந்தநிலையில், அந்த பயணத்தை பிற்போடுமாறு அரசாங்கம் சீனாவை கோரியிருந்தது.

பின்னர், கடந்த 16ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு குறித்த கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் வரை அங்கு நங்கூரமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிவித்தல்

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி இலங்கையில் அண்மைக் காலமாக இடம்பெறும் கைதுகள் தொடர்பில் வௌியாகும் தகவல்கள் கவலையளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு

இலங்கையின் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 ஜூலை மாதம் பதிவாகியுள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் முதன்மைப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 66.7% ஆக பதிவாகியுள்ளது.

மாணவர் செயற்பாட்டாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்: ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தல்

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள மாணவர் செயற்பாட்டாளர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

அமைதியான போராட்டங்களில் எந்தவொரு தடையையும் ஏற்படுத்தப்போவதில்லை என அறிவித்திருந்த அரசாங்கம், அரசியலமைப்பு, சர்வதேச நியாயங்களுக்கேற்ப பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயகம் என்பவற்றை, அவசரகால சட்டத்தை பயன்படுத்தியமை ஊடாக ஒடுக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால சட்டம் நீக்கப்படுமென அறிவித்த ஜனாதிபதி, விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, 07 மாவட்டங்களுக்கு முப்படையினரை அழைத்துள்ளமை மூலம் அவரது கருத்திற்கும் செயற்பாட்டிற்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவது புலனாவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகைக்குள் நுழைந்தவர்களை கைது செய்ய தேடும் பொலிஸார்!

அலரி மாளிகைக்குள் நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

2022.07.09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இந்த சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என கொழும்பு தெற்குப் பிரிவின் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 0112 421 867, 0763 477 342, 1997 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

நான் அரசியலில் தொடர்ந்தும் நீடிப்பேன் பொருத்தமான தருணத்திலேயே ஓய்வு பெறுவேன் – மகிந்த ராஜபக்ச

நான் அரசியலில் தொடர்ந்தும் நீடிப்பேன் பொருத்தமான தருணத்திலேயே ஓய்வு பெறுவேன் அதுவரை நான் போகமாட்டேன் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக காணப்பட்டவேளை அவர் சிறந்த நிர்வாக திறனை வெளிப்படுத்தியுள்ளார் என்பதோடு ஜனாதிபதியாக அவர் கடும் அழுத்தங்களை சந்தித்தார் முன்னர் கடும்போக்குவாதியாக காணப்பட்டார் அவர தற்போது மென்மையானவராக மாறிவிட்டார் எனவும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

மேலும் கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் கருத்து தெரிக்கு பொழுது நான் போகலாமா என கேட்டிருந்தால் வேண்டாம் என்றே சொல்லியிருப்பேன் எனவும் முன்னாள் பிரதமர்மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பொதுஜனபெரமுனவின் தலைவராக தொடர்ந்தும் நீடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் அதனை கட்சியே தீர்மானிக்ககும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டாலும் நான் ஒரு சட்டத்தரணி என்னால் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பணிபுரிய முடியும் அதனை செய்ய தயார் என ஆங்கில பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு விசேட தேவையுடையவர்களுக்கு அறிவித்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் திகதியை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படும் என அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட தேவையுடையவர்களுக்கு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.இதற்கமைய, எதிர்வரும் காலங்களில் விசேட தேவையுடையவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கக்கூடிய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

வரலாற்றுத் தவறை திருத்தி நாட்டிற்காக ஒன்றிணைவோம்”: ஜனாதிபதி

உலகில் ஏனைய நாடுகள் வெற்றிகளுடன் நாளுக்கு நாள் முன்னோக்கிச் செல்லும் போது, ​​நாம் ஒன்றிணைந்து செயற்படாததால் எமது நாடு பின்னோக்கிச் செல்வதாகவும், அந்த முன்னேற்றத்திற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே எனது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இன்று (20) வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுரத்துக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி, பிற்பகல் அனுராதபுரம் சம்புத்த ஜயந்தி மகா விகாரைக்கு சென்று வடமத்திய மாகாண பிரதம சங்கநாயக கலாநிதி நுகேதென்ன பஞ்ஞானந்த நாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி அவர்களை ஆசிர்வதித்த நாயக்க தேரர், அரசாங்கத்தின் எதிர்வரும் வேலைத்திட்டத்திற்கு தமது ஆசிகளைத் தெரிவித்தார்.

நாட்டில் ஒழுக்கத்தை கட்டியெழுப்புவதே முதல் பணி என சுட்டிக்காட்டிய நுகேதென்ன பஞ்ஞானந்த நாயக்க தேரர், ஒழுக்கம் இல்லாத நாடு ஒருபோதும் முன்னோக்கிச் செல்லாது எனவும் தெரிவித்தார். பாடசாலை மாணவர்களைப்போன்று ஆசிரியர்களுக்கும் ஒழுக்கம் இருக்க வேண்டும் எனவும், சமூகத்தில் உயர்வாக மதிக்கப்படும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்த போது, ​​ஆசிரியர் தொழிலின் ஒழுக்கம் அழிந்துள்ளதாகவும் தேரர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கடந்த கால நிகழ்வுகளால் சமூகத்தில் சீர்குலைந்துள்ள ஒழுக்கத்தை மீளமைக்கப் பாடுபடும் ஜனாதிபதிக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் ஜேதவனாராம விகாராதிபதி வண. இகல ஹல்மில்லேவே ரதனபால நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம், நாட்டை அபிவிருத்தி செய்யும் ஒரு கூட்டு வேலைத்திட்டத்தை அனைத்து மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அந்தப் பொறுப்பை தாமதமின்றி நிறைவேற்றுவதற்குத் தலைமை ஏற்குமாறும், தேரர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒன்றிணைந்து செயற்பட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள முயற்சிகளைப் பாராட்டிய அவர், விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றி அவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

பின்னர் அபயகிரிய ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, விகாராதிபதி வண. கல்லஞ்சியே ரதனசிறி நாயக்க தேரரைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

பிரதேச மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் இனங்கண்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் சீகிரியா போன்ற புராதன நகரங்களை அண்மித்த பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை தங்கவைக்கும் விசேட வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இசுறுமுனிய ரஜமஹா விகாரைக்குச் சென்று வண. மதவ சுமங்கல நாயக்க தேரரை தரிசித்து ஆசி பெற்றார்.

“இருபுறமும் எரியும் தீபத்தைப் போல” நாடு இருந்த வேளையில் ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்றதை நினைவுகூர்ந்த தேரர், அந்தத் தீப்பிழம்புகளை அணைத்து மக்களின் எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க வலிமையும் தைரியமும் தாராளமாகக் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்

இசுறுமுனிய பழைய விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்களுக்கு மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கியதுடன், அங்கு வருகை தந்திருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் ஜனாதிபதி சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

அநுராதபுரம் ஸ்ரீ சாராநந்த மகா பிரிவேனாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வண. அடபாகே விமலஞான தேரர் தலைமையிலான மகா சங்கத்தினருடன் சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

Posted in Uncategorized