இலங்கை திரும்பும் தினத்தை ஒத்தி வைத்தார் கோட்டாபய!

தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்ட போதும், அவர் அந்தத் தீர்மானத்தை ஒத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருடன் கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பின்னணியிலேயே இம்மாதம் திட்டமிடப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவின் வருகை பிற்போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் எதிர்ப்பை அடுத்து மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்று ஜூலை மாதம் 9 ஆம் திகதி பதவியை கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமா செய்தார்.

இதனை அடுத்து தாய்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

அதன் அடிப்படையில் மிரிஹானவில் உள்ள அவரது இல்லம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஐநா விசேட பிரதிநிதி ஜனாதிபதி ரணிலுக்கு விடுத்த எச்சரிக்கை அறிவிப்பு!

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோர் பயங்கார தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஐநாவின் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான விசேட பிரதிநிதி மேரி லோலர் கவலை வெளியிட்டுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் மேரி லோலர் இதுபற்றி தெரிவித்துள்ளார்.

அதில்,  ”மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே, ஜீவந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தான் மிகுந்த கவலையடைகின்றேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர்களின் தடுப்புக் காவல் உத்தரவுகளில் கையெழுத்திட வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொள்வதாகவும் மேரி லோலர் தெரிவித்துள்ளார்.  அவ்வாறு தடுப்பு உத்தரவுகளில் கையெழுத்திட்டால் அது இலங்கைக்கு கறுப்புத் தினமான அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ரணில் – சஜித் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் இன்று(22) பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இதில் கலந்துகொண்டிருந்தார்.

சர்வ கட்சி அரசாங்கத்திற்கான வேலைத்திட்டம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதியால் எதிர்க்கட்சித் தலைவரிடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எனினும், அதனை நிராகரித்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமது கட்சி அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் சர்வ கட்சி அரசாங்க வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவிகளை பெற்று மக்களின் செலவீனங்களை அதிகரிப்பதற்குப் பதிலாக அரசாங்கத்தின் நியாயமான முன்மொழிவுகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அரசாங்கத்தின் மக்கள் விரோத வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் விமர்சிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது கூறியுள்ளார்.

Posted in Uncategorized

வசந்த முதலிகே உளிட்ட மூவரையும் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் தடுத்துவைப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வௌ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகிய மூவரையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில்வைத்து விசாரிப்பதற்கான உத்தரவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கையெழுத்திட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட மூவரையும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்குத் தடுத்துவைத்து விசாரிப்பதற்கு விசாரணையாளர்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் விண்ணப்பம் செய்திருந்த நிலையிலேயே, பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது ஐந்து லாம்பு சந்தியில்வைத்துக் கைதுசெய்யப்பட்டதுடன் அவரோடு ஒன்றாகப் பயணித்த ஹஷாந்த ஜீவந்த குணத்திலக ஆகியோர் கடந்த 18 ஆம் திகதி முதல் பயங்கரவாதத்தடை சட்டத்தின் விதிவிதானங்கள் பிரகாரம், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் அனுமதியின் கீழான 72 மணிநேரத் தடுப்புக்காவலின் கீழ், பேலியகொட பொலிஸ் நிலையக் கட்டடத்தில் தடுத்துவைக்கப்பட்டு களனி வலய குற்றவிசாரணை பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வந்தனர்.

கல்வெவ சிறிதம்ம தேரர் தலங்கம பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த மூவர் குறித்த விசாரணைகளையும் உடனடியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்குமாறு பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன நேற்று (21) ஆலோசனை வழங்கியிருந்தார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த 18 ஆம் திகதி மாலை கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் 19 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். முறையற்ற விதத்தில் ஒன்றுகூடிய குற்றச்சாட்டில் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இதில் வசந்த முதலிகே, கல்வௌ சிறிதம்ம தேரர் மற்றும் ஹஷாந்த ஜீவந்த குணதிலக ஆகியோரும் உள்ளடங்கும் நிலையில் அந்த மூன்று பேருக்கு எதிராக மட்டும் பயங்கரவாத்தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்ப்ட்டமை குறிப்பிடத்தக்கது

Posted in Uncategorized

நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களில் கலைக்கும் முடிவு: 50க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் எதிர்ப்பு !

நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களில் கலைக்கும் முடிவுக்கு சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இரண்டரை வருடங்களில் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்க 22 ஆவது திருத்ததில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சரத்தை திருத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுன மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடங்கலாக 50க்கும் மேற்பட்டவர்களின் கையொப்பத்துடன் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

22ஆவது திருத்தத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களாக கலைக்கும் பிரேரணையை நான்கரை வருடங்களாக மாற்றுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Posted in Uncategorized

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை – நீதி அமைச்சர்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முதற்கட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில அரசியல் கைதிகளுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்

அதன்பின்னர் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுவிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என நீதி அமைச்சர் குறித்த பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடனும் தம்முடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர்களின் நியாயமான கோரிக்கை தொடர்பில் பரிசீலித்து வருவதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாடு குறித்து அமெரிக்கா அதிருப்தி

சர்வதேச மனித உரிமை தரங்களுக்கு இணங்காத பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற சட்டங்களைப் பயன்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்தை சிதைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே, செயற்பாட்டாளர் ஹஷந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் வண. கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அனுமதி வழங்கியுள்ள நிலையிலேயே இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை ஊக்குவிக்கிறோம் எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய சீனக்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து வெளியேறியது

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய யுவான் வொங் 5 என்ற சீனக்கப்பல் இன்று மாலை நாட்டிலிருந்து வெளியேறியுள்ளது.

குறித்தக் கப்பல் கடந்த 16 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்து சமுத்திரத்தின் வடமேல் கடற்பகுதியில் செய்மதி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் குறித்தக் கப்பல் நாட்டிற்கு வந்திருந்தது.

யுவான் வொங் 5 என்ற குறித்த கப்பல் கடந்த 11ஆம் திகதி நாட்டிற்கு வரவிருந்தது.

இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்தியா தமது கடும் கண்டனங்களை வெளிப்படுத்தியிருந்தது.

இந்தநிலையில், அந்த பயணத்தை பிற்போடுமாறு அரசாங்கம் சீனாவை கோரியிருந்தது.

பின்னர், கடந்த 16ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு குறித்த கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் வரை அங்கு நங்கூரமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிவித்தல்

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி இலங்கையில் அண்மைக் காலமாக இடம்பெறும் கைதுகள் தொடர்பில் வௌியாகும் தகவல்கள் கவலையளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு

இலங்கையின் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 ஜூலை மாதம் பதிவாகியுள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் முதன்மைப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 66.7% ஆக பதிவாகியுள்ளது.