இலங்கை நெருக்கடி அதிகளவு ஜனநாயக தன்மை கொண்ட அரசாங்கத்திற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது – அமெரிக்க இராஜாங்க செயலாளர்

இலங்கை நெருக்கடி அதிகளவு ஜனநாயக அரசாங்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது சவாலான நெருக்கடியான தருணத்தில் உள்ளது ஆனால் அந்த நாட்டிற்கு அதிகளவு ஜனநாயக தன்மை மிக்க அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை கம்போடிய தலைநகரில் ஆசிய வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் சந்தித்தவேளை அமெரிக்க இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைப்பதற்கு அமெரிக்கா வழங்கும் உதவியை பாராட்டுவதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பூகோள அரசியல் மோதலில் சிக்கும் இலங்கை?

சீன ஆய்வுக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு இந்தியா கொண்டு வந்துள்ளதாக The Hindu இன்று செய்தி வௌியிட்டுள்ளது.

இந்த கப்பல் தொடர்பில் இந்தியா தௌிவான தகவலை வழங்கியிருந்த போதிலும், இலங்கை பாதுகாப்பு அமைச்சு கப்பலின் வருகையை உறுதிப்படுத்தியமையினால் இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Yuan Wang 5 கப்பல் சீன இராணுவத்தின் மூலோபாய ஆதரவுப் படைக்கு சொந்தமான செய்மதிகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கண்காணிக்க பயன்படுகிறது.

இந்தியா இதனை சீன உளவு பார்க்கும் கப்பல் என தெரிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த நீர்மூழ்கிக்கப்பலை விட இது ஆபத்தானது என இந்தியாவின் Economic Times இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.

Yuan Wang 5 கப்பல் மூலம் 750 கிலோமீட்டர் தூரத்திலுள்ள இடங்கள் தொடர்பிலான தரவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இதன்மூலம் இந்தியாவின் தெற்கு பிரதேசத்தின் பாதுகாப்பு நிலையங்கள், ஆறு துறைமுகங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென Economic Times வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை முகாம் உள்ளிட்ட முக்கிய இடங்களும் இதில் அடங்குகின்றன.

இதன் காரணமாக சீன ஆய்வுக் கப்பலை இந்தியா மிகவும் ஆபத்தானது என்றே கூறுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் இந்தியா அதிக கவனம் செலுத்தியுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

Yuan Wang 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ள விடயம் குறித்து கடந்த வாரம் ஊடங்கள் மூலம் தகவல் வௌியானதும், அதனை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்ததாகவும் பின்னர் ஆகஸ்ட் 11 ஆம் திகதியில் இருந்து 17 ஆம் திகதி வரை இந்த கப்பலுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கியுள்ளமை உறுதியாகியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன.

இதேவேளை, தாய்வானை அடிப்படையாகக் கொண்டு சீனா – அமெரிக்கா இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு வரும் நிலையிலேயே இந்திய – சீன சமுத்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் Nancy Pelosi-யின் தாய்வான் விஜயத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

தமது நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதியாக சீனா தாய்வானை கருதுவதுடன், அமெரிக்கா தமது எதிர்ப்பையும் கருத்திற்கொள்ளாமல் செயற்பட்டால் ஆபத்துகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும், மலேஷியாவிற்கான விஜயத்தை நிறைவு செய்த அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் இன்று இரவு 10.30-க்கு தாய்வானை சென்றடையவுள்ளார்.

தாய்வானை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்டுள்ள இந்த முரண்பாடு காரணமாக அமெரிக்கா தமது பிரதான மூன்று யுத்த கப்பல்களை தாய்வானின் மேற்கு கடற்பகுதியில் நிறுத்தியுள்ளது.

தாக்குதல் கப்பல்களான USS, Ronald Reagan, Abraham Lincoln, USS Tripoli ஆகிய கப்பல்களே அவையாகும்.

அத்துடன், சீனாவும் தமது தாக்குதல் கப்பல்களை தென் சீன கடல் எல்லை , அதனை அண்டிய பகுதிகளில் நிலை நிறுத்தியுள்ளதுடன், யுத்தம் ஏற்பட்டால் அதற்கு பதில் வழங்க தயார் எனவும் கூறியுள்ளது.

தாய்வானை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருதற்கு தயாராகும் சீன கப்பல் தொடர்பில் இந்திய வௌிவிகார அமைச்சின் பேச்சாளரும் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்காக மேற்கொள்ள முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அவர் கூறியிருந்தார்.

இராஜதந்திர ரீதியில் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் அளவிற்கு இந்தியாவும் சீனாவும் இந்த நெருக்கடி நிலைமையில் நெகிழ்வுடன் செயற்படுமா?

இந்தியா தமது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என கருதும் விடயத்தினை இலங்கை கடற்பரப்பில் இடம்பெறுவதற்கு இடமளிக்குமா?

சீனா தமக்கு சொந்தமான ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகளுக்கு மற்றுமொரு நாடு அழுத்தம் விடுக்கும்போது மௌனம் காக்குமா?

தமக்குத் தேவையானவாறு வௌிநாடுகளுடன் செய்துகொண்ட கொடுக்கல் வாங்கல்கள் காரணமாகவே இன்று இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

SEA OF SRI LANKA எனப்படும் இலங்கை கடலுக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படுத்தும் தீர்மானங்களை எடுத்தமையினால் இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையின் போது தலையிட வேண்டி ஏற்பட்டுள்ளதல்லவா?

தாய்வானைப் போன்று இலங்கையும் பூகோள அரசியல் மோதலில் சிக்காமல் இருப்பதற்கு தற்போதேனும் கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் எடுக்கப்படுமா?

எமது நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், இன்னுமொரு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது.

இன்று (04) நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் பணிப்பகிஷ்கரிப்பு

இன்று (04) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

பஸ்கள் ஒரு நாளேனும் முழுமையாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையால், இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

QR முறையினூடாக தனியார் பஸ்களுக்கு வாராந்தம் 40 லிட்டர் டீசல் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் நீண்ட தூர பஸ் பயணங்களுக்கு அது போதுமானது அல்ல எனவும் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் குறிப்பிட்டார்.

அத்துடன், குறுந்தூர சேவைகளில் ஈடுபடும் பஸ்கள் 8 மணித்தியாலங்களே பயணிக்க முடியும் எனவும் அஞ்சன பிரியஞ்சித் சுட்டிக்காட்டினார்.

பஸ்களுக்கு போதுமானளவு டீசல் வழங்கும் வரையில் தமது பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் எனவும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் எடுத்துள்ள தீர்மானம்

நேற்று (03) இரவு காலி முகத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சில கூடாரங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி முகத்திடலில் தங்கியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் நாளை மாலை 05 மணிக்கு முன்னர் குறித்த பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் வழங்கிய அறிவித்தலின் பேரில் கூடாரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனிடையே, ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு போராட்ட களத்தில் சுடர் ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டம் இன்று 118வது நாளாக தொடர்கிறது.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம்  ஏற்படுத்தும் செயற்பாட்டை தமிழர்களாகிய நாங்கள் ஏற்க மாட்டோம் ரெலோவின் தலைவர் செல்வம்

இலங்கை பொருளாதார ரீதியாக நலிவடைந்து  மக்களுடைய அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இந்த சூழ்நிலையில் ஒரு ராஜதந்திர நடவடிக்கையாக இலங்கை அரசாங்கம் செயல்படவில்லை. ஏனெனில்   இந்தியாவினுடைய புலனாய்வு அறிக்கையின் படி சீனாவினுடைய உளவு கப்பல் வருகை என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பாரிய ஒரு இடைவெளியை கொண்டு வரும் என  நாங்கள் நினைக்கிறோம் என
பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான (ரெலோ) செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(2) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் இந்தியா பெரும் பங்கு வகிக்கின்றது.
 சீனாவின்  உளவு  பார்க்கும் கப்பல் இலங்கை நோக்கி வருகை என்பதை இலங்கை அரசு மற்றும் ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும்.
எங்களைப் பொறுத்தமட்டில் இந்தியாவுக்கு பாதுகாப்பு பிரச்சினை வருமாக இருந்தால் அதனை அனுமதிக்க முடியாது என்பதில் எமது மக்கள் உறுதியாக உள்ளார்கள்.
 தற்போது இந்திய மீனவர்களின் வருகை என்பது  கவலையான விடயமாக இருந்தாலும் தமிழ் பேசும் சமூகமாகிய நாங்கள் இந்தியாவை ஒருபோதும் கைவிட முடியாது.
 அதை விட தமிழ்நாடு இன்றைக்கும் எங்களோடு இருந்து கொண்டிருக்கிறது.
எமது ஈழப் பிரச்சனையில் எமக்காக பல பேர் தங்களை எரித்து தற்கொலை செய்து இருக்கிறார்கள்.
அப்படியான ஒரு சூழலில் இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கின்ற சம்பவங்கள் எதுவாக இருந்தாலும் எமது தமிழ் தரப்பு எதிர்க்கும் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
 அண்மையில் சீனாவினுடைய தூதுவர் இங்கு வந்து ஒரு சர்ச்சையை கிளப்பி சென்ற பின்னணியில் பல எதிர்ப்புகளை எமது மக்கள் காட்டியிருந்தார்கள்.
 ஆகவே இலங்கை அரசாங்கம் ராஜா தந்திர நடவடிக்கையாக இரண்டு நாடுகளையும் சாதகமாக வைத்திருக்க வேண்டும் என்றால் இந்தியாவை பகைக்க கூடாது என்பது எனது கருத்து.
 ஏனெனில் இந்தியா தான் பொருளாதார ரீதியில் விழுந்து கிடக்கின்ற இலங்கையை அண்மைக்காலமாக கை தூக்கி வருகிறது.
எமது தமிழர்களை பொருத்தமட்டில் இந்தியா தான் எமக்கான தீர்வை பெற்று தரக்கூடியதும்  எங்களுக்கு குரல் கொடுக்கக்கூடிய வல்லமை பொருந்தியதாக இருக்கிறது.
 இந்த விடயத்தில் சீனாவின்   வேவு  பார்க்கும் கப்பல் வருகையை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.
 இல்லையெனில் இந்தியா இலங்கையை விட்டு  அதிக தூரம் செல்லக்கூடிய  வாய்ப்பு இருக்கிறது.
 ஆகவே இந்தியாவை பகைப்பதால்   இலங்கைக்கு ஒருபோதும் நன்மை கிடைக்காது.  அதை தமிழர்களாகிய நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
 மேலும் முல்லைத்தீவில் எமது மீனவர் சமாசம் ஒன்று கூடி இந்த மீனவ பிரச்சினை தொடர்பான ஆதங்கத்தை வெளியிட்டு செய்திருந்தது உண்மையில் அது ஒரு நியாயமான கோரிக்கையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
  அமைச்சரிடம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் எமது மீனவர்கள் நான்கு மாதங்களுக்கு மேலாக பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள் என்று நேரடியாக தெரிவித்து  அது உடனடியாக நடவடிக்கைக்கு வர வேண்டும் கோரிக்கை விடுத்திருந்தோம்.
 தற்போது    அந்த தீர்மானத்தின் படி  அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்ற படாவிட்டால்  பாரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதாக தெரிவித்து இருந்தார்கள்.
 எமது மீனவர்களும், விவசாயிகளும் போராட்டத்தில் இறங்கினால் நாடு தாங்காது என்பதை இங்கு   குறிப்பிட விரும்புகிறேன்.
ஏற்கனவே கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் விவசாயிகளுடைய வயிற்றில் கை வைத்ததன் பின்பு தான் அவர் நாட்டை விட்டு ஓடக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.
 அதேபோல் எமது மீனவ சமூகத்தையும் நோகடிக்கும் அல்லது அவர்களுடைய   வயிற்றில் அடிக்கின்ற செயற்பாடுகளை இந்த அரசும் செய்யுமானால் அவர்களுடைய போராட்டம் வெடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
 ஆகவே பெட்ரோல் , டீசலுக்கு கொடுக்கின்ற முன்னுரிமையை மண்ணெண்ணெய்கும் வழங்க வேண்டும்.
 இதனால் எமது விவசாயிகளும் மீனவ சமூகமும் பயனடைய வேண்டும். எனவே முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளும் மீனவர்களும் விடும் கோரிக்கையை நிறைவு செய்து கொடுக்க வேண்டும் .  நாம் ஜனாதிபதியிடமும் அமைச்சரிடமும் மீண்டும் வலியுறுத்தி  கோரிக்கை விடுக்கின்றோம்  என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்   ஊடக சந்திப்பில்  தெரிவித்தார்
Posted in Uncategorized

இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல சலுகைகளை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது -மனுஷ நாணயக்கார

வங்கி முறை மூலம் சட்டப்பூர்வமாக வெளிநாட்டுப் பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை நேற்று அனுமதி அளித்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒரு முன்மொழிவில் சட்டப்பூர்வ பணம் செலுத்தும் அடிப்படையில் புதிய வரியில்லா கொடுப்பனவை அறிமுகப்படுத்தியுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இலங்கைக்கு சட்டப்பூர்வமாக அனுப்பும் பணத்தில் 50 வீதத்திற்கு சமமான பெறுமதியான மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விமான நிலையத்தில் அமெரிக்க டொலரில் பணம் செலுத்த விரும்பும் சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு எரிபொருள் உரிமம் வழங்கும் முன்மொழிவுக்கு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இணங்கியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கை வரும் சீன கப்பலால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்?

யுவான் வாங் 5 என்ற சீனாவின் கண்காணிப்பு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான வருகை,  இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்ததோடு தென் இந்திய அரசியல்வாதிகளும்  எச்சரிக்கை செய்கின்றனர்.

குறித்த கப்பல் இலங்கைக்கு வரப்போவதில்லை என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு பல சந்தர்ப்பங்களில் மறுத்த போதிலும், தற்போது கப்பல் வந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த கப்பல் ஓகஸ்ட் 11 மற்றும் 17ம் திகதிக்கு இடையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு, வசதிகளை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேர்ணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் உள்ளிட்ட சேவைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே, இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத் தரவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

”இது முதல் முறையாக வருகைத் தருகின்ற கப்பல் கிடையாது. சீனா, இந்தியா, தென் கொரியா, ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து இதற்கு முன்னர் இவ்வாறான கப்பல்கள் வருகைத் தந்துள்ளன. வணிக கப்பலை போன்று, கடற்படைக்கு சொந்தமான கப்பல்களும் வருகைத் தருகின்றன” என அவர் குறிப்பிடுகின்றார்.

யுவான் வாங் 5 (IMO: 9413054) என்ற கப்பலானது, 2007ம் ஆண்டு (15 வருடங்களுக்கு முன்பு) சீனாவின் தேசிய கொடியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆய்வு மற்றும் கண்காணப்பு கப்பலாகும்.

இந்த கப்பலில் 11000 மெற்றிக் தொன் எடையுடைய பொருட்களை கொண்டு செல்ல முடியும் என்பதுடன், கப்பல் 222 மீட்டர் நீளமும், 25.2 மீட்டர் அகலமும் கொண்டமைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் விண்கல கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5, நாட்டின் Long March-5B ரொக்கெட்டை ஏவுவதற்கான கடல் சார் கண்காணிப்பு மற்றும் அளவீட்டு பணிக்கு பயன்படுத்தப்படுகின்றது.

2000ம் ஆண்டு ஆரம்ப காலத்தில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையததில் உறுப்பு நாடாக சீனா ஆர்வம் காட்டியது. எனினும், சீனாவின் உறுப்புரிமைக்கான கோரிக்கை பல முறை நிராகரிக்கப்பட்டது. இந்த பின்னணியிலேயே, யுவான் வாங் 5 போன்ற அறிவியல் ஆராய்ச்சி கப்பல் சீனாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

இந்நிலையில்,விண்வெளி மற்றும் செயற்கை கோள் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை கொண்டமைக்கப்பட்டுள்ள யுவான் வாங் 5 ஆய்வு மற்றும் கண்காணப்பு கப்பலானது, சீனாவின் உளவு கப்பலாவே இந்திய ஊடகங்கள் அடையாளப்படுத்துகின்றன.

இந்த கப்பலின் வான் வழி 750 கிலோமீற்றருக்கு அதிகமாக உள்ளமையினால், தென்னிந்தியாவின் கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் போன்ற இந்திய எல்லைக்குள் காணப்படுகின்ற அணு ஆராய்ச்சி மையங்களை மறைமுகமாக இந்த கப்பலினால் கண்காணிக்க முடியும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் சீனாவின் சியாங் துறைமுகத்திலிருந்து கடந்த 13 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்து, தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொண்டதன் பின்னர் இந்திய பெருங்கடலில் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையர்களை நாடுகடத்தும் நடவடிக்கையை நிறுத்துமாறு சுவிஸ் அரசிடம் OMCT கோரிக்கை

மருத்துவ சிகிச்சை தேவைப்படும் இலங்கையர்களான புலம்பெயர்ந்தோர் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் நடவடிக்கையை சுவிட்சர்லாந்து உடனடியாக நிறுத்த வேண்டும் என சித்திரவதைக்கெதிரான உலக அமைப்பு (OMCT) கடிதம் ஒன்றின் ஊடாக  கோரியுள்ளது.

மேலும்  குறித்த கடிதத்தில்,

இலங்கையில் தற்போது நிலவும் சூழல் பயங்கரமானது, பொருளாதார நெருக்கடிகள் வன்முறைக்கு வழிவகுத்துள்ள நிலையில், அங்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கூட நிச்சயமில்லை.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், புகலிடக் கோரிக்கையாளர்களையும், புலம்பெயர்ந்தோரையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல்.

அவர்களில் சிலருக்கு இன்னமும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. அப்படி அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது, சுவிட்சர்லாந்தை அதன் சர்வதேச சட்ட ரீதியான பொறுப்புக்களை மீறவைப்பதாக அமையும்.

சித்திரவதையால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் பலருக்கு இப்போது சுவிட்சர்லாந்தில் போதுமான சிகிச்சை கிடைத்து வருகிறது. அவர்களில், பாலியல் வன்புணர்வு முதலான பல்வேறு கடுமையான துன்புறுத்தல்களுக்கு ஆளான இலங்கைத் தமிழர்களும் அடங்குவர்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், அவர்களை இலங்கைக்குத் திரும்ப அனுப்புவது அவர்களுக்கு மேலும் பிரச்சினைகளை உருவாக்குவதுடன், அவர்களுக்கு தேவையான மருத்துவ புனர்வாழ்வு சேவைகள் கிடைப்பதற்கும் தடையாக அமையும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துங்கள்! தேசிய சமாதான பேரவை அரசாங்கத்திடம் கோரிக்கை

பாராளுமன்ற ஆணையை புதுப்பிப்பதற்கு முன்கூட்டியே தேர்தலை நடத்துமாறு ஸ்ரீ தேசிய சமாதான ஆணைக்குழு (NPC) கோரியுள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , “உலகில் அரிதாகவே காணக்கூடிய அரசியல் புரட்சியை இலங்கை கண்டுள்ளது. மக்களால், மக்களுக்காக ஒரு நிராயுதபாணியான எதிர்ப்பு இயக்கம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையை இராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியது. எதிர்ப்பு இயக்கம் அதன் அளவு, செயல்திறன் மற்றும் வன்முறையற்ற தன்மை காரணமாக சர்வதேச சமூகத்தின் வரவேற்பை பெற்றுள்ளது. போராட்ட இயக்கத்தின் வெற்றிக்கு அதன் தன்னிச்சையான மற்றும் அமைதியான தன்மையே காரணம்.

மக்களின் உண்மையான மனக்குறைகளே போராட்ட இயக்கத்தை உருவாக்கி அதை வெகுஜன இயக்கமாக மாற்றியது. நாட்டில் நிலவும் பேரழிவு நிலைமைக்கான பொறுப்பை முன்னாள் அரசாங்கம் மறுத்ததுடன், நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது. வன்முறையைத் தொடங்கியதே அரசுதான். தற்போது புதிய ஜனாதிபதியுடன் ஒரு புதிய அரசாங்கம் உள்ளது, ஆனால் 2022 மே மாதம் இராஜினாமா செய்த அமைச்சரவையே பெரும்பான்மையாக உள்ளது. இது எதிர்ப்பாளர்களின் விரக்தியை அதிகப்படுத்தியுள்ளது.

பொருளாதார சரிவுக்கான காரணங்களை ஆராய்ந்து அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய அமைதி கவுன்சில் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் காரணமாக நாடு அனுபவித்த பல சீரழிவுகள் காரணமாக மக்களின் இதயங்களிலும் மனங்களிலும் இழந்துள்ள பாராளுமன்ற ஆணையை புதுப்பிப்பதற்கு முன்கூட்டியே தேர்தலை அறிவிக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்” என இலங்கை தேசிய சமாதானப் பேரவை தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

இலங்கையில் தொடரும் பொருளாதர நெருக்கடி- ஆடை தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்

பொருளாதார நெருக்கடியால் ஆடை உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சில தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய வர்த்தக வலய சேவை மையம் தெரிவித்துள்ளது.

வர்த்தக வலய தொழிலாளர்களுக்கான தேசிய மத்திய நிலையத்தின் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிகள் உள்ளிட்டவற்றால் ஆடை உற்பத்தித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் மற்றும் மின்சாரம் இன்மையால் தமது பொருட்களை உரிய நேரத்தில் வழங்க முடிவதில்லை எனவும் இதன் காரணமாக சர்வதேச சந்தையில் இலங்கை பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.