அவசரகால சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கான வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில்  அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத், தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளமையால், அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், கடந்த 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் சட்டவிரோதமாக கைது செய்தல், தடுத்து வைத்தல், சித்திரவதைக்குள்ளாக்குதல் போன்ற செயற்பாடுகளுக்கு வழி சமைப்பதாக எடுத்துக்கூறியுள்ள முறைப்பாட்டாளர், கடந்த 22 ஆம் திகதி காலி முகத்திடலில் ஆயுதமேந்திய படையினர் செயற்பட்ட விதம் அதற்கான எடுத்துக்காட்டு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதியின் கொடியை படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது!

ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதியின் கொடியை திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 09ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து ஜனாதிபதியின் கொடியை திருடிய 54 வயதான நபர் ஒருவர் பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் இருந்து திருடப்பட்ட ஜனாதிபதியின் கொடியை குறித்த நபர் படுக்கை விரிப்பாக பயன்படுத்திய வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அதே நேரம் , காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் முன்னின்று செயற்பட்ட லஹிரு வீரசேகர மற்றும் தெம்பிட்டியே சுகதானந்த தேரர் ஆகிய இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பிடியாணை உத்தரவு பிறப்பித்தார்.

சட்டவிரோதமாக மக்களை ஒன்றுகூட்டியமை தொடர்பான வழக்கொன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, லஹிரு வீரசேகரவும் தெம்பிட்டியே சுகதானந்த தேரரும் மன்றில் ஆஜராகியிருக்கவில்லை.

இதேவேளை, லோட்டஸ் வீதி, நிதி அமைச்சு, ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசிக்கும் நுழைவாயிலை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் வசந்த முதலிகே, ஜோசப் ஸ்டாலின், லஹிரு வீரசேகர, ரங்க லக்மால் தேவப்பிரிய, எரங்க குணசேகர மற்றும் அருட்தந்தை அமில் ஜீவந்த ஆகியோருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதித்து, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று மற்றுமொரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மட்டு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க. மோகன் ஒருவருடத்தின் பின்னர் பிணையில் விடுதலை

இணையத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பதிவேற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2021 ஆண்டு கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை சட்டமா அதிபரின் ஆலோசனையில்  வெள்ளிக்கிழமை (29) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் எஸ். அன்வர் சதாத் ஒரு இலச்சம் ரூபா இருவர் கொண்ட சரீரப்பிணையிலும் 50 ஆயிரம் ரூபா காசு பிணையிலும் விடுவித்துள்ளார்.

இணையத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பதிவு ஏற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே மாதம் 3ம் திகதி தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைக்கபபட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஏறாவூர் பொலிசார் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய சட்டத்தரணி ரி.ஜெயசிங்கம், சின்னத்துரை ஜெகன் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை (29) ஆஜராகி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் முன்நகர் பத்திரம் தாக்கல் செய்ததையடுத்து சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் எஸ். அன்வர் சதாத் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டதையடுத்து அவரை ஒரு இலச்சம் ரூபா இருவர் கொண்ட சரீரப் பிணையிலும் 50 ஆயிரம் ரூபா காசு ரொக்கப் பிணையிலும் பிணையில் விடுவித்துள்ளார்.

காலிமுகத்திடல்   போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைதுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் முகமாக மட்டக்களப்பில் கவனயீர்ப்பு

கொழும்பு காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஜனநாயகப் போராட்டங்களை மேற்கொண்டு வரும் போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், கைதுகள் போன்ற அச்சுறுத்தல்களைக் கண்டித்தும், கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரியதுமான கவனயீர்ப்புப் போராட்டம்  வெள்ளிக்கிழமை (29)  மட்டக்களப்பில் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சிவில் அமைப்புகள் இணைந்து மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் க.லவகுசராசா தலைமையில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது  அமைதியான போராட்டக் காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்;மையாகக் கண்டிக்கின்றோம், போராட்டக் காரர்களைக் கைது செய்வதை நிறத்துக, அமைதி வழியில் போராடியவர்கைள விடுதலை செய், பேச்சு சுதந்திரம் எமது அடிப்படை உரிமை, போராட்டக் காரர்கள் மீது வன்முறை வேண்டாம், ஒன்று கூடுவது எமது உரிமை போன்ற பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியும் ஆhப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் காலிமுகத்திடல் அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் முகமாக கண்டன அறிக்கையும் வெளியிடப்பட்டது.

இவ்விக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

29 ஆவணி 2022 ஆகிய இன்றைய நாளில், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களாகிய நாமும், சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மனித உரிமைப் பாதுகாவலர்கள், சிவில் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து அமைதிவழிப் போராட்டக்காரர் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அமைதிவழிப் போராட்டக்காரர்களையும், ஊடகவியலாளரையும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் தாக்குவதை நிறுத்துமாறு நாம் இலங்கை அரசை கோருகிறோம். அத்துடன், தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து போராட்டக்காரர்களையும் உடன் விடுவிக்குமாறு நாம் அரசை வேண்டுகிறோம்.

இலங்கைத் தீவின் அதிகாரங்களற்ற சாதாரண பொதுமக்கள், ஜனநாயகமான மக்கள் போராட்டத்தின் மூலம் சர்வாதிகார ராஜபக்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர். இலங்கைத் தீவின் மக்கள் எனும் வகையில், நாம் பெருமிதமடைகிறோம். தமிழின அழிப்புக்கும், போர்க்குற்றங்களுக்கும் பொறுப்பான பேரினவாதப் பாதுகாவலர்களான ராஜபக்சர்களை மண்டியிடச்செய்த மக்கள் போராட்டத்துக்கு தலை வணங்குகிறோம். முழுநாடும் ஜனநாயக ஆட்சி மாற்றத்துக்காக காத்திருந்தது. எனினும், மக்கள் போராட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அதிகாரமாற்றத்தின் காரணமாக அதிகாரத்துக்கு வந்தவர்கள், அதே மக்களுக்கு எதிராக திரும்பி அந்த மக்களின் குரலையே நசுக்குவது சந்தர்ப்பவாதமாகும்.

தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் வன்முறையான, ஜனநாயக விரோதமான நடவடிக்கைகள் நாட்டை மீளவும் ஒரு இருண்ட யுகத்துக்குக் கொண்டு செல்லுமென நாம் அஞ்சுகிறோம்.

எனவே, மக்களுக்கு அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகள மீறுவதை உடன் நிறுத்துமாறும், ஜனநாயகத்தையும் சட்ட ஆட்சியையும் உறுதிப்படுத்துமாறும் நாம் இலங்கை அரசைக் கோருகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கூட்டமைப்பின் இராஜதந்திர நம்பகத்தன்மை ? ELANADU Editorial

தமிழ் மக்கள் ஒரு அரசு இல்லாத தரப்பு. அரசு இல்லாத தரப்புக்களுக் கான இராஜதந்திர வாய்ப்புக்கள் மிகவும் பலவீனமானவை. இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றவை எனக் கூறப்படும், மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள்தான், தமிழ் மக்களுக்கான அரசியலை சர்வதேச அரங்கு களில் நீர்த்துப்போகாமல் பாதுகாத்துவருகின்றன. கொழும்பின் விடாப்படியான அணுகுமுறைகளும் இதற்கொரு காரணமாகும். கொழும்பின் ஆட்சியாளர்கள் சில விடயங்களில் முன்னேற்றத்தை காண்பிப்பார்களாயின், சர்வதேச அவதானமும் நாளடைவில் நீர்த்துப் போய்விடும். இன்றைய நிலை யில், தமிழர் களின் சர்வதேச குரலாக தொழில்படும் புலம்பெயர் சமூகமும் குறிப்பிடத்தக்களவு செல்வாக்கை செலுத்திவருகின்றது.

ஆனால், மறபுறமாக தாயகத்தில் இயங்கும் அரசியல் தரப்புக்களின், இராஜதந்திர அணுகுமுறைகள் எவ்வாறிருக்கின்றன? சில தினங்களாக இடம் பெற்ற சம்பவங்களின் அடிப்படையில் சிந்திப்பதாயின், ‘பனையால் விழுந்த வரை மாடு ஏறி மிதித்த’ – கதையாகவே தமிழ் தேசியவாத தரப்புக்களின் இராஜ தந்திர அணுகுமுறை இருக்கின்றது. ஜனாதிபதியை தெரிவு செய்வதற் கான வாக்கெடுப்பின்போது, ஏற்பட்ட சில சம்பவங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. எமக்கு கிடைக் கும் தகவல்களின்படி, இந்திய தூதரக சர்ச்சையால், ஏனைய இராஜதந்திரிகள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். அவர்கள் மத்தியில், கூட்ட மைப்பின் நம்பகத்தன்மை, பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

இராஜதந்திர தொடர்புகள் என்பவை பரஸ்பர நம்பகத்தன்மையின் அடிப் படையில் இடம்பெறும் விடயங்களாகும். நம்பகத்தன்மை போய்விட்டால், அதன் பின்னர் அதனை மீளவும் கட்டியெழுப்புவது மிகவும் சவாலானதொரு விடயமாகும்.

2009இற்கு பின்னரான காலத்தில், சம்பந்தன் தலைமையில் கடந்த 13 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட அரசியல் முன்னெடுப்புக்களில், பல்வேறு இராஜதந்திர சறுக்கல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதில், பாரதூரமானது இந்திய பிரதமர் சிறி நரேந்திர மோடியுடனான சந்திப்பை அற்ப காரணங்களை கூறி நிகராகரித்தமை. கடவுசீட்டைக் காணவில்லை, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகனின் திருமணம் என்று கூறியே, சம்பந்தன் அதனை நிராகரித்திருந்தார். 134 கோடி மக்களின் தலைவர், உலகளவில் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவர், தமிழ் மக்களின் பிரச்னைகள் தொடர்பில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியபோது, அதனை ஒருவர் நிராகரிக்கின்றார் என்றால், அவரின் இராஜந்திர ஆற்றல் தொடர்பில் என்ன கூறமுடியும்?

சில மாதங்களுக்கு முன்னர், கூட்டமைப்பின் நிபுணர் குழுவென்னும் பெயரில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு, சுமந்திரன் தலை மையில், மூவரடங்கிய குழுவினர் சென்றிருந்தனர். அதில் சென்ற இருவர், நாடு திரும்பியதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேசியதில்லை. அவர்கள் எதற்காக சென்றார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. இந்தப் பயணம் தொடர்பில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்தப் படவில்லை. நாடு திரும்பியதைத் தொடர்ந்து, ஜனவரி மாதம் நடுப்பகுதிக்குள் அமெரிக்கா கடுமையான முடிவுகளை எடுக்கவுள்ளதாகக் கூறப்பட் டது. ஆனால், அப்படியெதுவும் இடம்பெறவில்லை. ஏனெனில், அனைத்துமே தேர்தல் பிரசார நோக்கம் கொண்ட கதைகளேயேன்றி உண்மை களல்ல.

இப்போதும் தங்களுடைய திட்டம் வெற்றியளிக்க வேண்டும் என்பதற்காக, இராஜதந்திர தொடர்புகள் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சீனத் தூதரக சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பில் எவருமே தெரிந்திருக்கவில்லை. உண்மையில், என்ன அடிப்படையில் இராஜதந்திரிகளை கூட்டமைப்பின், பாராளுமன்ற உறுப்பினர்கள் அணுகுகின்றனர்? கூட்டமைப்பின் இராஜதந்திர தொடர்புகள் எவருடைய அனுமதியின் கீழ் கையாளப்படுகின்றன? பதில் இலகுவானது. கூட்டமைப்பில் இராஜதந்திர நெறிமுறையென்று ஒன்றில்லை.
தனிப்பட்ட நபர்களின் விருப்புவெறுப்புக்களின் அடிப்படையிலேயே அனைத்தும்
இடம்பெறுகின்றன. கூட்டமைப்பில் அக்கறையுள்ளவர்கள், இந்த நிலைமையை
மாற்றியமைப்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

Posted in Uncategorized

குட்டிமணி, தங்கதுரையின் 39 ஆவது நினைவு நாள் வவுனியா மாவட்ட காரியாலயத்தில் அனுஸ்டிப்பு!

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரத்தின்போது, வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி உள்ளிட்ட 53 பேரின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் தேசிய வீரர்கள் தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட காரியாலயத்தில் மாவட்ட பொறுப்பாளர் புரூஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது குட்டிமணி, தங்கத்துரை மற்றும் ஜெகன் ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கட்சியின் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் மயூரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு : வெளியானது அதிவிசேட வர்த்தமானி

பாராளுமன்ற கூட்டத்தொடரை இன்று (28) நள்ளிரவு முதல் ஒத்திவைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, புதிய பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, 9 ஆவது பாராளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. புதிய கூட்டத்தொடர் ஜனாதிபதின் கொள்கை விளக்க உரையுடன் ஆரம்பமாகும்.

Posted in Uncategorized

ஜனாதிபதியுடன் பிரித்தானி உயர்ஸ்தானிகர் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் இடையில் இன்று (28) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் டுவிட்டர் குறிப்பொன்றை வெளியிட்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர், பல விடயங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தொடர்பான செயல்முறை மற்றும் மனித உரிமைகளுக்கு இணங்குவது உட்பட பல விடயங்களில் கவனம் செலுத்தியதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இறுதியாக, அவர் தனது ட்விட்டர் பதிவில், அமைதியான மற்றும் ஜனநாயக இடத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

புதிய அரசாங்கத்திற்கு ராஜபக்ச குடும்பத்துடன் உள்ள தொடர்புகளால் இலங்கை அரசியல் ஆபத்துக்களை எதிர்கொள்கின்றது – பிட்ச்

புதிய அரசாங்கத்திற்கு ராஜபக்ச குடும்பத்துடன் உள்ள தொடர்புகள் காரணமாக இலங்கை அரசியல் ஆபத்தினை எதிர்கொள்கின்றது என பிட்ச் தரப்படுத்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை நாணய நெருக்கடி மற்றும் வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வது தொடர்பில் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது என தெரிவித்துள்ள பிட்ச் தரப்படுத்தல் முகவர் அமைப்பு வலுவான பெரும்பான்மையுடன் கடினமான புதிய அரசாங்கம் ஆட்சிபொறுப்பை ஏற்றுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

புதிய ஜனாதிபதிக்கு பெரும்பான்மை உள்ளமை நாடாளுமன்றத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது அரசாங்கம் எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலரையும் உள்வாங்கியுள்ளது என பிட்ச் தெரிவித்துள்ளது.

இது பொருளாதாரஸ்திரதன்மை மற்றும் கடன் பேண்தகுதன்மை ஆகியவற்றை மீட்டெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கும் கடினமான சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்குமான போதிய ஆதரவு அரசாங்கத்திற்கு காணப்படும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது என பிட்ச் தெரிவித்துள்ளது.

இவ்வாறான சீர்திருத்தங்கள் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி ஆதரவு கிடைக்கும் நிலையை ஏற்படுத்தலாம்,இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கு இது அவசியமானது என நாங்கள் கருதுகின்றோம் என பிட்ச் தெரிவித்துள்ளது.

ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் அகற்றப்பட்டனர் ஆனால் ராஜபக்ச அரசாங்கத்துடன் தொடர்புள்ளதால் இந்த நிர்வாகத்திற்கு மக்கள் ஆதரவு இல்லாத நிலை காணப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு நாடாளுமன்ற ஆதரவு வலுவானதாக காணப்படுகின்றது ஆனால் மக்கள் ஆதரவு மிகவும் பலவீனமானதாக உள்ளது எனவும் பிட்ச் தரப்படுத்தல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களால் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் அரசாங்கத்தில் பிரதமராக பதவி வகித்தவர் தற்போதைய ஜனாதிபதி- பாரளுமன்றமும் அமைச்சரவையும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தின் கீழ் காணப்படுகின்றன,இந்த கட்சி ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளது,என தெரிவித்துள்ள பிட்ச் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் அல்லது சீர்திருத்தங்களிற்கு பொதுமக்களின் எதிர்ப்பு உருவானால் ராஜபக்ச குடும்பத்துடனான அரசாங்கத்தின் தொடர்புகளால் நாட்டை ஸ்திரமிழக்கச்செய்யும் ஆர்ப்பாட்டங்கள் மூழக்கூடும் எனவும் பிட்ச் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்துடன் இலங்கை இணக்கப்பாட்டிற்கு வரக்கூடிய சீர்திருத்தங்கள் உயர்வரிகள்,செலவுகளை கட்டுப்படுத்துதல் நாணயமாற்று விகிதத்தில் நெகிழ்ச்சி தன்மைக்கான அர்ப்பணிப்பு போன்றவற்றை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ள பிட்ச் இதற்கு கடும் எதிர்ப்பு உருவாகலாம் இதனால் இவற்றை நடைமுறைப்படுத்துவது பாதிக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இனக் குரோதங்களை மறந்து தமிழ் மக்களின் நியாயமான தீர்விற்காக சிங்கள மக்களும் குரல் கொடுக்க வேண்டும் –   பிரசன்னா

தமிழ் மக்களுடன் சிங்கள மக்களும், சிங்கள மக்களுடன் தமிழ் மக்களும் சேர்ந்து வாழ்வதென்றால் இனக் குரோதங்களை மறந்து தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான தீர்வு கிடைப்பதற்காக சிங்கள மக்களும் குரல் கொடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற கடந்த 1983ம் ஆண்டு வெலிகடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தங்கதுரை, குட்டிமணி உள்ளிட்ட 53 பேரின் நினைவு நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய தமிழ் போராட்டத் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டது தவறு என இன்று சிங்கள மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காலி முகத்திடல் போராட்ட களத்தில் படுகொலை செய்யப்பட்ட எமது தலைவர்களுக்கு அஞ்சலி செலத்தப்பட்டிருந்தது. அவர்கள் நியாயபூர்வமாக தமிழ் மக்களின் விடுதலக்காக தன்னுயிரை அர்ப்பணித்த தலைவர்கள் என்பதை இன்று சிங்கள மக்கள் 39 வருடங்களின் பின்னர் புரிந்துள்ளார்கள்.

எனவே இந்த கோட்டா கோ கோம் என்னும் காலிமுகத்திடல் போராட்டத்தில் இருந்து போராடிக் கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். மாறி மாறி ஆட்சி செய்திருக்கின்ற சிங்கள பேரினவாத அரசுகள் இனவாதத்தைக் கக்கி தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் பிரித்து ஆண்டதன் காரணமாகவே இவ்வாறான படுகொலைகள் இடம்பெற்றன.

இன்று சிங்கள மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற அநியாயங்கள், அக்கிரமங்கள், இராணுவ அடக்குமுறைகளை அனுபவித்ததன் விளைவாகவே அவர்கள் தமிழ் மக்களின் போராட்டம் பற்றிய உண்மையை உணர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

தற்போது அந்த மக்களினால் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. ஆனாலும் மக்கள் நினைத்தது நடக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ராஜபக்சர்களின் கைப்பொம்மையாக இன்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். இவரால் இந்த நாட்டின் பொருளாதாரப் பி;ரச்சனையைத் தீர்க்க முடியும் என மக்கள் நம்பமாட்டார்கள்.

ஏனெனில் இவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் புதிய அமைச்சரவையை உருவாக்கிய போது 18 அமைச்சர்களில் 14 பேர் ராஜபக்சர்களின் சகாக்கள். இருந்தவர்களையே மீண்டும் அமைச்சர்களாக ஆக்கி அழகு பாhத்திருக்கின்றார். மக்கள் எவர் எவரையெல்லாம் தற்போது நிராகரித்துள்ளார்களோ அவர்களுடன் இணைந்தே அதிகாரத்திற்கு வந்துள்ளார்.

இந்த விடயங்கள் ஒருபுறம் இருந்தாலும் தமிழ் மக்கள் நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ் மக்களின் பலமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை மேலும் பலப்படுத்தி எமது மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டும். எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பிரித்தாள்வதற்கும் சில சக்திகள் முனைகின்றன.

தமிழ்த் தேசியத்தின் பால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பினைச் சிதைப்பதற்கு ஒரு போதும் இடமளிக்கக் கூடாது. பல உயிர்த்தியாயங்களின் மத்தியில் உருவாக்கப்பட்டதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. எமது தலைவர்களின் தீர்க்கதரிசனத்தில் உருவாக்கப்படட இதனைப் பிளவுபடுத்தும் எண்ணத்தோடு யார் இருந்தாலும் அவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

எமது தங்கதுரை குட்டிமணி ஆகியோரின் படுகொலையின் பின்னரே பல பல தமிழ் இயக்கங்கள் உருவாக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் விடுதலைப் போராட்டங்களுக்குச் சென்றார்கள். அந்த விடுதலை வேட்கையில் கிடைத்த ஒரு துளிதான் 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் கிடைத்த வடகிழக்கு இணைப்பு. ஆனால் சிங்களப் பேரின அரசு அந்த ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்றது.

எனவே இது தொடர்பில் இந்தியா உரிய கரிசனை செலுத்தி இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு மேல் சென்று வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும். இதற்கான அழுத்தங்களை இலங்கை ஆட்சியாளர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

எனவே தென்னிலங்கை மக்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களுடன் சிங்கள மக்களும், சிங்கள மக்களுடன் தமிழ் மக்களும் சேர்ந்து வாழ்வதென்றால் இனக் குரோதங்களை மறந்து தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான தீர்வு கிடைப்பதற்காக சிங்கள மக்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.