கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம்! முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில் ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட தமிழின படுகொலையின் 13 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது

வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இறுதி யுத்தத்தில் தனது ஒரு கையினை இழந்து பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து ஏனைய உறவுகளும் தமது உறவுகளுக்கான சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

இதேவேளை முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வெளியிடப்பட்டுள்ளதோடு கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில் மக்கள் பாரிய உணவு நெருக்கடிக்கு முகம் கொடுத்த வேளையிலே அந்த மக்கள் உணவுத் தேவைக்காக பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் அவர்களது பசி போக்கியது முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பல்வேறு தரப்பினராலும் வழங்கப்பட்டது

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்: உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளனை விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதன்படி 30 வருடங்களின் பின்னர் பேரறிவாளனுக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,
சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமத்தப்படுதியது தவறு என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கில் பேரறிவாளன், தமிழக அரசு, மத்திய அரசு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்திருந்தது. பேரறிவாளன் விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக வாதங்கள் நடைபெற்ற நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கொழும்பு காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.கடந்த காலங்களில் வடக்குஇ கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இலங்கையின் தலைநகர் கொழும்பில்முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளதுடன்இ தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர். அத்துடன், சிங்கள, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூறும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

 

Posted in Uncategorized

புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டாலும் ஜனாதிபதி வீட்டுக்கு செல்லாத வரை தொடர்ந்து இந்த குழப்பம் இருக்கும் -ரெலோ தலைவர் செல்வம் எம்பி

புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டாலும் ஜனாதிபதி வீட்டுக்கு செல்லாத வரை தொடர்ந்து இந்த குழப்பம் இருக்கும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

புதிதாக பிரதமர் பதவியேற்றது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இந்த விடயத்தில் மக்கள் எதிர்ப்பு இருக்கிறதற்கு காரணம் கோட்டா கோ கோம் என்ற அடிப்படையில் ஜனாதிபதி இதற்குள்ளே இருந்து கொண்டு தன்னுடைய பரிவாரங்களை தெரிவு செய்திருக்கின்ற ஒரு சூழலை மக்கள் எதிர்க்கிறார்கள்.

அந்தவகையிலே புதிய பிரதமராக தெரிவு செய்து அடுத்த அமைச்சரவை அவர்களுடைய சகாக்களாக இருக்கின்ற சூழல் ஏற்படும். அதனால் மக்கள் எதிர்க்கின்ற வாய்ப்பு இருக்கிறது.

ஜனாதிபதி அவர் கூறியது போல 19 ஆவது திருத்த சட்டத்தை பாராளுமன்றிற்கு அதிகாரங்களை கொடுக்கின்ற வகையிலே அதனை செய்து பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை கொடுத்துவிட்டு அவர் வீட்டுக்கு செல்ல வேண்டும். அப்படி செல்கின்ற போது தான் மக்கள் ஜனநாயக முறையான பாராளுமன்றத்திற்கு ஆதரவை தருகின்ற வாய்ப்பு ஏற்படும்.

ஆகவே ஜனாதிபதி வீட்டுக்கு செல்லாத வரைக்கும் தொடர்ந்து இந்த குழப்பம் இருக்க தான் செய்யும். அவர் 19 ஆவது திருத்த சட்டத்தை அல்லது 21 என்ற அடிப்படையில் பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை தந்து அந்த பதவியிலிருந்து விலகி செல்லுகின்ற சூழல் உருவாகும் மட்டும் இந்த பிரச்சினை தொடர்ச்சியாக இருக்கும் என்று தான் கூற முடியும்.

ஏனென்றால் மக்கள் கோருவது மகிந்த ராஜபக்ஷ பரிவாரங்கள் இருக்க கூடாதென. அந்த சூழலில் தான் மக்கள் பார்க்கின்றார்கள். அந்தவகையில் ஜனாதிபதி இருக்கும் வரைக்கும் இந்த எதிர்ப்பு தொடர்ச்சியாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் விளம்பர பலகையினை வலி கிழக்கு தவிசாளர் அகற்றிய வழக்கு விசாரணைக்கு

உள்ளுராட்சி மன்றமான பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியில் மத்திய அரசாங்கத்தின் நிறுவனமான வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அனுமதியின்றி காட்சிப்படுத்தப்பட்ட விளம்பரப் பலகையினை அகற்றியமை தொடர்பில் ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை புதன்கிழமை (18) மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மத்திய அரசாங்கத்தினால் ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அச்செழு அம்மன் வீதியைப் புனரமைப்பதற்கான நடவடிக்கையினை வீதி அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்டிருந்தது. இந் நிலையில் மாவட்ட அவிருத்திக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தரப்பினரால் சம்பிரதாய பூர்வமாக குறித்த வீதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு வீதியில் பிரதமர் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களுடனான பெயர்ப்பலகை காட்சிப்படுத்தப்பட்டது.

அவ் விளம்பரப் பலகை குறித்த பிரதேசத்திற்குப் பொறுப்பான உள்ளுராட்சி மன்றமான வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் அனுமதியின்றி மத்திய அரசாங்கத்தின் தாபனமான வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உடன் அகற்றுமாறு தவிசாளர் பணித்திருந்தார். உடனடியாக அகற்றப்படாத நிலையில் குறித்த வீதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விளம்பரப்பலகையினை தவிசாளர் அகற்றியிருந்தார்.

இந் நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான விளம்பரப் பலகையினைக் காணவில்லை எனத் தெரிவித்து வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டினைத் தொடர்ந்து மத்திய அரசாங்கத்தின் உயர் அரசியல் அழுத்தம் காரணமாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷை அச்சுவேலி பொலிஸார் கைது செய்வதற்கான நடவடிக்கையினை எடுத்தனர். அவர் அரசியல் ரீதியிலான பழிவாங்கலாக தன்னைக் கைது செய்வதற்கு முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்து சிரேஷ்ட சட்டத்தரணி வி.திருக்குமரன் ஊடாக நீதிமன்ற முன் பிணைக்கு விண்ணப்பம் செய்து கைதில் இருந்து தவிசாளர் தன்னைப் பாதுகாத்துக்கொண்டார்.

கடந்த வழக்குத் தவணையின் போது போது தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதேச சபையின் உரிய அனுமதிகளைப் பெற்றுச் செயற்படுவதாகவும் தவிசாளர் சார்பாக முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி திருக்குமரன் தலைமையிலான சட்டத்தரணிகள் எடுத்துரைத்தனர். இந் நிலையில் வழக்கினை தொடர்ந்து நடத்துவது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிலைப்பாட்டை மன்றுக்கு தெரியப்படுத்துமாறு மன்றில் தெரிவிக்கப்பட்டது.

இந் நிலையில் நாளை புதன்கிழமை (18) திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இவ் வழக்கில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் தலைமையிலான சட்டத்தணிகள் குழாம் முன்னிலையாகின்றமை குறிப்பிடத்தக்கது

Posted in Uncategorized

’பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’

ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை விவாதிப்பதற்கான எதிர்க்கட்சிகளின் முயற்சி அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் இன்று முடக்கப்பட்டதை அடுத்து பிரதமர் இந்த விளக்கத்தை வெளியிட்டார்.

பிரேரணையை  விவாதிப்பதை தோற்கடிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கத்துடன் வாக்களித்தார்.

இது தொடர்பில் பிரதமர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,

இது ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு அல்ல. இது அனைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கும், அதிருப்தி பிரேரணையை உடனடியாக விவாதிப்பதற்குமான வாக்கெடுப்பாகும்.

தமது வீடுகள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விவாதம் நடத்த விரும்பும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என சுமந்திரன் எம்.பியிடம் 16 ஆம் திகதி அறிவுரை கூறினேன்.

தாக்குதல்கள் மீதான விவாதத்தை இன்றே நடத்த அனுமதிருந்தால் நன்றாக இருந்திருக்கும், இன்னும் சில நாட்களில் இந்த அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அடையாள அதிருப்தி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இப்போது ஜனாதிபதியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பின் தோல்வியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, அதிருப்தி பிரேரணையை பிந்தைய திகதியில் எடுத்துக்கொள்வதை தடுக்கிறார்கள்.

எதிர்கட்சிகள் சிறந்த வியூக அணுகுமுறையை முன்னோக்கிப் பயன்படுத்தினால் நல்லது. இருந்தபோதிலும், கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கான எங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சுமந்திரனின் பிரேரணை 51 வாக்குகளால் தோற்கடிப்பு

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ளார்.

நிலையியற் கட்டளையின் பிரகாரம் அவ்வாறு செய்யமுடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அப்படியாயின், வாக்கெடுப்புக்குச் செல்வோமென தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் இலத்திரனியல் முறைமையின் கீழ் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 68  வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் கிடைத்தன. அதனடிப்படையில், பிரேரணை 51 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

Posted in Uncategorized

நாளை முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து போராட்டம்

ஆட்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (18) முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.

அந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Posted in Uncategorized

“இலங்கை மனித உரிமை மீறல்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் மேஜிக் செய்து மாற்ற முடியாது” – அம்பிகா சற்குணநாதன்

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார் என்பதற்காக இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை மாயாஜால வித்தைகளை செய்து மாற்றிவிட முடியாது என, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

“மனித உரிமை நிலவரங்களில் ஏற்படும் முன்னேற்றங்கள் தனிமனிதரில் தங்கியிருப்பதில்லை. புதிய ஒருவர் பதவிக்கு வருவதால் மாத்திரம் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படாது.

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார் என்பதற்காக மாயாஜால வித்தைகளை செய்து மனித உரிமைகள் செயற்பாடுகளில் அவரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜோன்ஸ்டன், சனத் நிஷாந்த உள்ளிட்ட 24 பேரை கைது செய்ய உத்தரவு!

காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடந்த 9 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உள்ளிட்ட 22 பேரை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் பணிப்புரை விடுத்துள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து சட்டமா அதிபர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன, மிலான் ஜயதிலக்க மற்றும் மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 22 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த 22 சந்தேக நபர்கள் தொடர்பில் நேரடி, சூழ்நிலை மற்றும் தொழில்நுட்ப சாட்சியங்கள் இருப்பின் அவர்களை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்படும் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.