இலங்கையில் அன்றாட தேவைகளுக்கு செலவிட திறைசேரியில் பணம் இல்லை – பிரதமர் ரணில்

உணவு நெருக்கடி உலகளாவிய நெருக்கடியாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் நிலைமையை முன்னறிவிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் உலக வங்கி 30 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் இலங்கையை மாத்திரம் பாதிக்கும் பிரச்சினையல்ல எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இலங்கையில் அன்றாட தேவைகளுக்கு செலவிட திறைசேரியில் பணம் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அன்றாட நுகர்வுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான செலவினங்களுக்காக உடனடியாக நிதியைக் கண்டறிய வேண்டியதன் அவசியம் தொடர்பான விரிவான அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்

பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியில் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் உயர் அழுத்தம் மிகுந்த கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

‘கோட்டா – ரணில் சதி அரசாங்கத்தை விரட்டுவோம், முறைமையை மாற்றுவோம்’ எனும் தொனிப்பொருளிலான பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி அழகியற்கலை பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஆரம்பமானது.

ஆர்ப்பாட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் பொலிஸார் அவ்விடத்திற்கு சென்று அதனை நிறுத்துமாறு அறிவுறுத்தல் விடுத்தனர்.

எனினும், கொழும்பு நகர மண்டபம் , மருதானை, தொழில்நுட்ப சந்தியை தாண்டி ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு கோட்டையை சென்றடைந்தது.

இதற்கிடையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கொழும்பு கோட்டை பகுதியிலுள்ள எந்தவொரு அரச நிறுவனங்களுக்குள்ளும் 5 வீதிகளுக்குள்ளும் பிரவேசிக்க முடியாதவாறு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கோரிக்கைக்கு அமைய, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய உத்தியோகபூர்வ இல்லங்களுக்குள் பிரவேசிப்பது , பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது, பொருட்களுக்கு சேதம் விளைவிப்பது, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது.

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாகக் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பொலிஸார் இதனைக் கூற
முற்பட்டபோது அங்கு இரு தரப்பினருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டதால், பொலிஸார் அங்கிருந்து ஓடிச்சென்றனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் உலக வர்த்தக மைய வளாகத்தை அடைந்தனர்.

இதன்போது, பொலிஸாரால் உயர் அழுத்தம் மிகுந்த கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் பல சந்தர்ப்பங்களில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

அப்பகுதியில் தமது வேலைகளில் ஈடுபட்டிருந்த சாதாரண மக்களும் பொலிஸாரின் கண்ணீர்ப்புகை, நீர்தாரை பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டனர்.

Posted in Uncategorized

மஹிந்த 2 ஆவது தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின் ஓய்வுபெற்றிருக்க வேண்டும் – சமல்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, இலங்கையின் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என அவரது சகோதரரும் பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவ்வாறு செய்யத் தவறியதன் விளைவாகவே தற்போதைய நிலைமைக்கு மஹிந்த ராஜபக்ஷ முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

“கிட்டத்தட்ட 50 ஆண்டுகால அவரது சிறப்பான அரசியல் சாதனைகள் மற்றும் பயணம் தற்போது தொலைந்து போயுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

அரசியலில் பிரவேசிப்பது மற்றும் ஈடுபடுவதுடன், மக்கள் சரியான நேரத்தில் விட்டுக்கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“நாம் அதிகாரம் மற்றும் அரசியல் பதவிகளுக்கு பேராசை கொண்டால், இன்று நாம் காணும் இத்தகைய விளைவுகளை சந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

வலி கிழக்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி

யாழ். வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தலைமையில் (மே 18) காலை 7 மணிக்கு ஒன்று கூடிய பிரதேச சபை உறுப்பினர்கள் பணியாளர்கள் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இந்த அஞ்சலி அனுஷ்டிப்பைத் தொடர்ந்து தவிசாளர், மற்றும் சபையின் உறுப்பினர்கள் செல்வதிசைநாயகம் தவநாயகம் ஆகியோர் அஞ்சலியுரையாற்றினர். இவ் அஞ்சலியுரைகளில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமைகளுக்கு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷ் சிறப்புரையாற்றினார்.

அதில் அவர் தெரிவித்ததாவது,

“எமது மக்கள் மீது தொடர்ச்சியாக அரச பயங்கரவாதம் பிரயோகிக்கப்பட்டே வந்துள்ளது. சிங்கள மக்கள் போன்று நாட்டில் உரிமைகளுடன் நாமும் ஓர் தேசிய இனம் என்ற வகையில் வாழ வேண்டும் என்றே எமது இனம் அபிலாசை கொண்டுள்ளது.

அரசியல் உரிமைகளை கேட்டு அகிம்சை வழியில் போராடிய போது எமக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்ட அரச பயங்கரவாதமே ஆயுதப்போருக்கு வழிவகுத்தது.

அரச படைகள் ஊடாக எமது சிறுவர்கள் வயோதிபர்கள் பெண்கள் என்ற பாகுபாடின்றி மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டுள்ளோம்.

உலகம் மனித உரிமைகளுக்காக பாடுபடுகின்ற ஓர் சூழ்நிலையில் அத்தனை உரிமைகளும் அரசினாலேயே இலாவகமாக மீறப்பட்டுள்ளன.

அரச படைகளால் எமது மக்கள் கடலிலும், தரையிலும் வெட்டியும், சுட்டும், வான் வெளி கொத்துக் குண்டு வீச்சிலும் எத்தனையே ஆயிரம் சிறார்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெண்களின் உரிமைகள் பற்றி உலகம் பேசுகின்றது.

ஆனால் எத்தனை பெண்கள் யுத்தகாலத்தில் அரச அணுசரனையில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டுனர். அதுபோன்று தமிழ் மக்களை கொன்றழித்த கொலைக்குற்றவாளிகள் தண்டனைகள் வழங்கப்படாது அவர்களுக்கு அரச அந்தஸ்தளிக்கப்பட்டுள்ளது.

அரச படைகளிடம் சரணடைந்த மற்றும் அரச படைகளால் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களைத் தேடி தாய்மார் இன்றும் போராடுகின்றனர்.

எதற்குமே நீதி கிட்டவில்லை. போரில் குழந்தைகளைக் கூட கொன்று குவித்த அரசிற்கு எதிராக போதுமான மனித உரிமை ரீதியிலான ஒழுங்குகள் பிரயோகிக்கப்படவில்லை என்பதை ஓர் இனமாக நாம் வெளிப்படுத்துகின்றோம்.

இந்நிலையில் இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு வழங்க இணக்கம் காணப்படுகின்ற உதவிகள் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள் பற்றிய பொறுப்புச் சொல்வதை உறுதிப்படுத்துவதுடன் தமிழ் மக்கள் மீது மீளவும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் உறுதிப்படுத்துவதாகவும் எமக்கான தீர்வை முன்வைப்பதாகவும் அமையவேண்டும்”. என மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தமிழக முதல்வரால் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

தமிழக அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் சென்னை துறைமுகத்திலிருந்து இன்று (18) நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு வழங்கும் உதவியின் ஒரு கட்டமாக, நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு கடந்த மாதம் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்திருந்தார்.

அதன்படி, 40,000 தொன் அரிசி, 500 தொன் பால் மா, இந்திய ரூபாவில் 28 கோடி ரூபா பெறுமதியான 137 வகையான அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் கப்பல் மூலம் நாட்டிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரணப்பொருட்களை தமிழகத்தின் சிறுபான்மையின மற்றும் வெளிநாடுவாழ் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் நேற்று சென்று பார்வையிட்டிருந்தார்.

இந்த நிலையில், சென்னை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள நிவாரணப்பொருட்களை ஏற்றிய கப்பலை இன்று மாலை முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

Posted in Uncategorized

மே-18 ஐ இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரித்தது கனேடிய பாராளுமன்றம்

கனடா பாராளுமன்றத்தில் மே 18 ஆம் நாளை இனப்படுகொலை தினமாக அங்கீகரிக்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி மே 18ஆம் நாளை இனப்படுகொலை தினமாக அங்கீகரிக்கும் பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.

பாராளுமன்றில் குறித்த பிரேரணை முன்நகர்த்தப்பட்டிருந்த நிலையில், தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை அங்கீகரிப்பதுடன், ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஏற்றுக்கொள்வதாகவும் சபை தெரிவித்துள்ளது.

இந்தப் பிரேரணைக்கு லிபரல், கன்சர்வேட்டி உட்பட பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் 338உறுப்பினர்களும் ஏகமனதாக அங்கீகாரம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கைத்தீவில் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் தான் வன்முறையை வளர்த்தவர்கள்: சபா குகதாஸ்

இலங்கைத்தீவில் 1948 ஆண்டின் பின்னர் வன்முறையை வளர்த்தவர்கள் ஆட்சிக்குத் தொடர்ந்து வந்த சிங்கள தலைவர்களும் அவர்கள் சார்ந்த அரசாங்கமும் என்ற உண்மையைச் சிங்கள பெரும்பாண்மை மக்கள் உணரும் வரை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஆரம்பத்தில் தனிச் சிங்களச் சட்டத்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க அரசாங்கம் கொண்டு வந்த போது பூர்வீக தமிழர்களின் தமிழ்மொழி அரசியலமைப்பு ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டதனால் அன்றைய தமிழ்த் தலைவர்கள் காலமுகத்திடலில் சாத்வீக வழி சத்தியாக்கிரக போராட்டத்தை 1956 யூன் 5 ஆம் திகதி நடத்தினர்.

இதன்போது இன்று கோட்டா கோ கோம் போராட்டத் தரப்பின் மீது எப்படி ஒரு வன்முறை ஆட்சியாளர்களினால் கட்டவிழ்க்கப்பட்டதோ இதைவிட மோசமாக அன்று தமிழ்த் தலைவர்கள் மீது இதே காலிமுகத்திடலில் பொலிஸாரினாலும் குண்டர்களினாலும் கோரமான வன்முறை மேற்கொள்ளப்பட்டு ஜனநாயக போராட்டம் வன்முறை மூலம் அடக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சி 1977 வரை மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் தமிழர்களின் அகிம்சைப் போராட்டங்களை வன்முறை கொண்டு அடக்கியதன் விழைவே ஆயுதப் போராட்டமாக மாறியது. உண்மையாகத் தமிழர்கள் வன்முறை மீது காதல் கொண்டு ஆயுதம் தூக்கவில்லை. சிங்கள ஆட்சியாளர்களே தமிழர்களை ஆயுதம் ஏந்த நிர்ப்பந்தித்தார்கள்.

அதன் விளைவை இன்று ஒட்டுமொத்த நாடும் அனுபவிக்கின்றது. அத்தகைய அவலநிலைக்கு அரசியல், பொருளாதாரத்தின் கட்டமைப்பு சீரழிந்துள்ளது. 1956 தமிழர்களுக்குச் செய்த தவறை மீண்டும் 2022 ஆட்சியாளர்கள் அதே காலிமுகத்திடலில் ஜனநாயக வழியில் போராடிய தாம் சார்ந்த சிங்கள சகோதரர்களுக்கும் வன்முறையைப் பிரயோகித்துள்ளார்கள்.

நாகரிகம் வளர்ந்த இந்த நூற்றாண்டில் மிகவும் பிற்போக்காக ஆட்சி அதிகாரங்களைத் தக்கவைக்க வாக்களித்த மக்களையே வன்முறை மூலம் அடக்கும் கிட்லர் ஆட்சியாளர்களை நினைக்கத் தலைகுனிவாகவும் வெட்கமாகவும் உள்ளது.

இலங்கைத் தீவில் வாழும் பல்லின மக்களையும் அவர்களது நியாயமான அபிலாசைகளையும் ஏற்றுக் கொள்ளும் அரசியலமைப்பை உருவாக்கி ஜனநாயக பண்புகளுக்கு முன்னுரிமை வழங்கும் ஆட்சியாளர்கள் வரும் வரை இலங்கைத் தீவில் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது கடினமானதாகும். இதனைச் சிங்கள பெரும்பான்மை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையின் கடன் தொகையை அடுத்த வாரம் அறிவிப்பதாக பிரதமர் தெரிவிப்பு

இலங்கை எவ்வளவு கடனை செலுத்த வேண்டும் என்பது தொடர்பில் தகவல்களை சேகரித்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஒருவருக்கு ஒருவர் விமர்சனங்களை முன்வைக்காமல், நாட்டைக் கட்டியெழுப்ப முன்வருமாறு பிரதமர் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொண்டார்.

இன்று பாராளுமன்றத்தில் நாட்டின் கடன் தொகை தொடர்பில் பிரதமரிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.

இலங்கை உடனடியாக திருப்பி செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு என அவர் வினவினார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அது தொடர்பிலான முழுமையான அறிக்கையை அடுத்த வாரமளவில் தயாரிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

சில தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் சில தகவல்கள் பொய்யானவை எனவும் குறிப்பிட்ட பிரதமர், இதன் காரணமாக தன்னால் சரியான தொகையை உடனடியாகக் கூற முடியவில்லை என தெரிவித்தார்.

கடன் தொகை 10 பில்லியனாக இருந்தாலும் அதனை வழங்குவதற்கு ஒரு மில்லியன் கூட எம்மிடம் இல்லை என பிரதமர் கூறினார்.

எனவே தான் மூன்றாம் வாரத்தில் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் விவாதம் ஒன்றை நடத்துமாறு தாம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்த அவர், விரைவில் அத்தகவல்களை எதிர்க்கட்சிக்கு வழங்கவுள்ளதாகவும் கூறினார்.

கடன்களை தற்போதைக்கு மீள செலுத்துவதில்லை என கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி அரசாங்கம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு –  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று மாலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோராதலிங்கம் , தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம கோவிந்தன் கருணாகரம்(ஜனா) ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

 

‘மே 18 தமிழனப் படுகொலை நாள்’- வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் அறிக்கை

”மே மாதம், சிறிலங்காவில் முரண்பாடான உணர்வுகளை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றது. வடக்கு -கிழக்கு தமிழினப் படுகொலைகளில் இறந்தவர்களை நினைவு கூறுகையில், தெற்கு போர் வெற்றியைக் கொண்டாடுகின்றது. கௌதம புத்தர் கூறியது போன்று மூன்று விடையங்களை மூடி மறைக்க முடியாது.

“சூரியன், சந்திரன், உண்மை”. சிறிலங்காவின் பொருளாதார – அரசியல் நெருக்கீடு தெளிவான பாடத்தைப் புகட்டி இருக்கின்றது, வன்முறை எந்தவிதத்திலும் பிரச்சினைக்குத் தீர்வாகாது, பிரச்சினைக்கான மூலகாரணியைக்கண்டு அதை நிவர்த்தி செய்வது இன்றியமையாதது. வடக்கு- கிழக்கு தமிழர்கள் மே 18ஐ தமிழினப்படுகொலை நாளாக நினைவு கூறுகின்றனர்” என்று வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized