ஒரு லட்சம் ரூபாயை தந்து நீதியை இல்லாமல் ஒழிப்பதற்கே நீதியமைச்சர் முயல்கின்றார்- சி.ஜெனிற்றா

ஒரு லட்சம் ரூபாயையும், சான்றிதழையும் தந்து நீதியை இல்லாமல் ஒழிப்பதற்காகவே நீதியமைச்சர் அலி சப்ரி இவ்வாறு கூறிக்கொண்டிருக்கின்றார் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று ( புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நீதி அமைச்சரின் நடமாடும் சேவையில் காணாமல் போனோருக்கான அலுவலகம் வேண்டாம் என நாங்கள் கூறியிருந்தோம். இழப்பீடோ, மரணச்சான்றிதழோ தேவையில்லை என கூறியிருந்தோம். அப்படியிருந்தும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மீது திடீரென ஏன் அக்கறை வருகின்றது.

ஒருலட்சம் ரூபா நிதியினை எமது உறவுகளுக்கு வழங்கி அந்த நிதியில் வாழ்க்கை செலவை கட்டியெழுப்ப முடியுமா? இந்த நிதியில் எமது உறவுகள் வாழ முடியுமா? நீதிக்காக இதுவரை காலமும் போராடி கொண்டிருந்தோமே தவிர ஒரு லட்சம் ரூபாவிற்காக போராடவில்லை.

யுத்தம் முடவடைந்து 13 வருடங்களை கடந்தும் எமது உறவுகளை தான் தேடிக்கொண்டிருக்கின்றோம். உறவுகளுக்கு ஒரு லட்சம் ரூபா வழங்கி உறவுகளை திருப்திப்படுத்துவதாக நீதி அமைச்சர் கூறியிருக்கின்றார்.

எமது உறவுகள் நிதிக்காக போராடவில்லை. சர்வதேசமானது நீதி அமைச்சர் அலிசப்ரி கூறுகின்ற கூற்றையும், பதிவாளர் நாயகம் எடுத்திருக்கின்ற இந்த முடிவும் தவறானது. ஏனென்றால் நாங்கள் 13 வருடமாக தொடர்ச்சியாக வீதியோரத்தில் நின்று நிதிக்காகவோ, காணாமல் போனவர்களுக்கான சான்றிதழிற்காகவோ போராடவில்லை. எமக்கு நீதி தான் தேவையென்றே போராடி வருகின்றோம்.

சர்வதேசமானது இதனை கண்டித்து 49 ஆவது கூட்ட தொடரிலாவது எமக்கு நீதி வழங்க ஆவன செய்வார்கள் என்ற நம்பிக்கையிலே காத்திருக்கின்றோம். ஒரு லட்சம் ரூபாயையும், காணாமல் போனவர்களுக்கான சான்றிதழையும் தந்து நீதியை இல்லாமல் ஒழிப்பதற்காகவே நீதியமைச்சர் அலி சப்ரி இவ்வாறு கூறிக்கொண்டிருக்கின்றார். இவரின் கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இலங்கை அரசின் நீதி மறுக்கப்பட்ட போதுதான் சர்வதேசத்தை நோக்கி போராடி வருகின்றோம். இலங்கை அரசின் உள்ளக பொறிமுறையோ, காணாமல் போனோரின் அலுவலகமோ எமக்கு தேவையில்லை என்பதனை தான் கூறிக்கொண்டிருக்கின்றோம்.

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி பொறுப்பு கூற வேண்டிய கடமை இருக்கிறது. ஏனென்றால் கையில் ஒப்படைக்கப்பட்டவர்களும் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களும், இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டவர்களும் , இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களையும் தான் நாங்கள் கேட்டுக்கொண்டு இருக்கின்றோம்.

ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியா எமது உறவுகளின் பெறுமதி? இதனை எமது உறவுகள் யாரும் வாங்க கூடாது என்பதனை ஊடக வாயிலாக தெரிவித்து கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சற்று முன்னர் புதுடில்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.இந்த சந்திப்பின்போது இலங்கைக்கு இந்தியா வழங்கும் நிதி உதவிக்கு இந்திய பிரதமருக்கு நிதி அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

அத்துடன் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்குமாறு நிதி அமைச்சர் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.இல்லையெனில் மார்ச் 30 அன்று இலங்கையால் நடத்தப்படும் வங்காள விரிகுடாவின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்முயற்சி மாநாட்டில் கலந்துகொள்ள அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை இந்திய வெளியுறவு அமைச்சர் . எஸ். ஜெய்சங்கர், நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி ஆகியோரையும் நிதியமைச்சர் சந்திக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜபக்ஷர்களுக்கு ஒரு உயிரின் பெறுமதி வெறுமனே ஒரு இலட்சம் ரூபாய் மாத்திரமே – அம்பிகா சற்குணநாதன்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒருதடவை மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாயை வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் விசனம் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் மரணச் சான்றிதழை பெற்றுக் கொள்வோருக்கு ஒரு இலட்சம் பணத்தை உதவித் தொகையாக ஒரு தடவை மட்டும் வழங்குவதற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், “காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மரணச் சான்றிதழையோ அல்லது இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்த அவர், மாறாக அவர்கள் உண்மையையும் நீதியையுமே கோருகின்றார்கள்” என அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்ஷ அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் ஒரு உயிரின் பெறுமதி வெறுமனே ஒரு இலட்சம் ரூபாய் மாத்திரமே. இது அவமரியாதை செய்யும் வகையிலான மிகமோசமான செயல் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழாராய்ச்சி மாநாடும் அரை உண்மைகளும் – தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

ஈழத்தமிழர் வரலாற்றில், உணர்ச்சிமிக்கதாகப் பேசப்படுவது யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாளில் நிகழ்ந்த வன்முறை பற்றிய கதைகளுமாகும்.
செவிவழிக் கதைகள் போல, இக்கதைகள் அரை உண்மைகளாகச் சொல்லப்பட்டு, இன்று சமூகத்தில் அவை நிலைபெற்றுள்ளன. அச்சம்பவங்களும் அதைச் சூழ்ந்த நிகழ்வுகளும் பற்றிய முழுமையான தேடலோ விசாரணையோ இல்லாமல், இன்றுவரை அக்கதை திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது.

ஈழத்தமிழர் வரலாற்றின் முக்கியமான திருப்புமுனை அச்சம்பவம். ஆனால், ஏனைய நிகழ்வுகளுக்குக் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் இதற்குக் கொடுக்கப்படுவதில்லை. காரணம் சொல்லப்பட்டுள்ள கதைகளில் உள்ள கோளாறும் அதன் நியாயமற்ற தன்மையுமாகும். தேடி விசாரித்தறியத் தவறும் சமூகம், எத்தகையதொரு கொடிய தண்டனையை எதிர்நோக்க வேண்டிவரும் என்பதற்கு, இச்சம்பவம் நல்லதொரு சான்று.

சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையில், தமிழருக்கு எதிரான தொடர்ச்சியான நடவடிக்கைகளை, அரசாங்கங்கள் மேற்கொண்டு வந்த நிலையில், தமிழ்த் தலைவர்களுக்கும் அரச தலைவர்களுக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்படிக்கைகள், தொடர்ச்சியாகத் தோல்வியடைந்தன.

குறிப்பாக, பண்டாரநாயக்க செல்வநாயகம் உடன்படிக்கைப்படி, குடியேற்றத் திட்டங்கள் மீதான அதிகாரம் உடைய மாவட்ட சபைகள் நிறுவப்படும் என ஏற்கப்பட்டது. அதே அடிச்சுவட்டில், டட்லிசெல்வா உடன்படிக்கை தோற்றம் பெற்றது. இரண்டும் செயல்வடிவம் பெறவில்லை.

இவற்றின் மூலம், குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வுக்குக் கூட, பேரினவாதக் கட்சிகள் தயாராக இல்லை என்பதை மிகத் தெளிவாகக் காட்டின. ஆனால், இந்நிலைப்பாடு ஐக்கிய தேசிய கட்சியோடு தொடர்ந்தும் நல்லுறவைப் பேணுவதற்கு, தமிழரசுக் கட்சிக்குத் தடைகள் இருக்கவில்லை. இவ்வுறவு 1960களில் புதிய பரிமாணம் கண்டது.

1970ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில், சிறிமா தலைமையிலான ஐக்கிய முன்னணி, மூன்றில் இரண்டுக்கும் மேலான பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. அப்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ். ஜே. வீ. செல்வநாயகம், “தமிழரை இனிமேல் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொன்னார்.

இது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியை, பேரினவாத ஆட்சியாகக் கண்டதை மட்டுமன்றி, அரசாங்கத்தை அமைப்பதில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையை தமிழரசுக் கட்சி இழந்த ஏமாற்றத்தையும் குறித்தது. புதிய அரசாங்கத்துடன் செயற்படவியலாத வகையில், தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசிய கட்சியோடு தன்னை நெருக்கமாகப் பிணைத்துக் கொண்டது. இதனால் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய ஒரு நிலையை இழந்தது.

இதில் கவனிப்புக்கு உரியது. யாதெனில், தமிழ் மக்களின் தெரியப்பட்ட பிரதிநிதிகளையுடைய தமிழரசுக் கட்சியோடு அலட்சியமான முறையிலேயே அரசாங்கம் நடந்து கொண்டது. குறிப்பாக, யாழ்ப்பாண மாநகர மேயராக இருந்த அல்பிரட் துரையப்பாவுக்கு அரசாங்கம் கொடுத்த முக்கியத்துவம், தமிழரசுக் கட்சிக்குச் சினமூட்டியது.

இதன் தொடர்ச்சியாக அரசியலில் அறிமுகமில்லாத, மக்களால் அறியப்படாத செல்லையா குமாரசூரியர் என்ற பொறியியலாளரை, மூதவையான செனட் சபைக்கு நியமித்த அரசாங்கம், அவரை தபால் தொலைத்தொடர்பு அமைச்சராக்கியது. இச்செயல்கள் மூலம், தமிழர் நலன்களைத் தங்களது தமிழர்கள் மூலமே கவனித்துக்கொள்ளவியலும் என்பதைக் கோடுகாட்டியதோடு, தமிழரசுக் கட்சியினரைப் புறக்கணித்தது.

இக்காலப்பகுதியில், சிறுபான்மையினரது நலன்கள் தொடர்ச்சியாக நெருக்குதலுக்கு உள்ளாகின. தமிழ் மக்களுக்கு குமாரசூரியர் அமைச்சரானது போல, பதியூதின் மஹ்மூத்தை கல்வி அமைச்சராக்கி, அவரூடாக முஸ்லிம்கள் நலன்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதாக அரசு காட்டிக் கொள்ள முயற்சி செய்தது.
சிறிமாவின் அரசு தொடர்ச்சியாக, சிறுபான்மையினரின் நலன்களைப் புறக்கணித்து வந்தது என்பதும் இந்த அமைச்சரவை நியமனங்கள் சிறுபான்மையின நலநோக்கில் செய்யப்பட்டவையல்ல என்பதும் வெளிப்படையானது.

இவ்வாறு, 1970களில் தமிழ்ப் பாரளுமன்றப் பிரதிநிதிகளும் அரசாங்கமும் தொடர்ச்சியான மோதற்போக்குடன் தொடர்ந்த நிலையில், 1972ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பு, சிறுபான்மையினருக்கான பேரினவாத நிகழ்ச்சிநிரல் ஒன்றை, அரசாங்கம் முன்னெடுக்கிறது என்பதைக் காட்டியது.

ஈழத்தின் முன்னோடியான தமிழ் அறிஞர்களில் ஒருவராகிய தனிநாயகம் அடிகளாரின் அயராத முயற்சியால், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட்டு, 1966இல் கோலாலம்பூரில் முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்த இரண்டாவது மாநாடு, 1968இல் சென்னையிலும் மூன்றாவது 1970இல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் நடைபெற்றன. பாரிஸ் மாநாட்டைத் தொடர்ந்து, நான்காவது மாநாட்டை இலங்கையில் நடத்துவது என்று முடிவானது.

மாநாடுகள் தொடர்ச்சியாக, இரண்டாண்டு கால இடைவெளியில் நடத்தப்பட்ட நிலையில், இலங்கையில் 1972இல் இம்மாநாட்டை நடத்தத் திட்டமிடப்பட்டது. அரசியல் தலையீடுகள் காரணமாக, இது 1974 ஜனவரியிலேயே சாத்தியமானது.
இம்மாநாட்டை நடத்துவதற்குப் பொறுப்பான தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இலங்கை கிளை, இம்மாநாட்டை கொழும்பிலேயே நடத்தத் திட்டமிட்டது. ஆனால், தமிழரசுக் கட்சியினர் இதை யாழ்ப்பாணத்தில் நடத்த விரும்பினர். இலங்கை கிளையில் இருந்த தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களின் அழுத்தத்தால், இம்மாநாடு யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டது.

அமைச்சராக இருந்த குமாரசூரியர், இம்மாநாட்டை கொழும்பில் நடத்த விரும்பினார். அதன்மூலம், தனக்கு அரசியல் இலாபம் தேடலாம் எனக் கணித்தார். எனவே, மாநாட்டை எங்கே நடத்துவது என்ற இழுபறி தொடர்ந்தது. இதனால் இம்மாநாடு ஓர் அரசியல் பிரச்சினையானது.

உலகளாவிய தமிழ் அறிஞர்கள் பங்குகொள்ளும் ஒரு மாநாட்டை, அரசியல் பிரச்சினையாக்கக் கூடாது என்பது, பலரது கருத்தாக இருந்தது. பல தமிழறிஞர்கள் இக்கருத்தோடு உடன்பட்டார்கள். சிலர், இதனை அரசியலாக்குவதன் ஆபத்துகள் குறித்து எச்சரித்தனர்.

தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்த தமிழரசுக் கட்சி, தங்கள் செல்வாக்கை மீட்பதற்கான வாய்ப்பாக, இதைப் பயன்படுத்த முயன்றது என்பதை, மாநாடு சார்ந்த நடவடிக்கைகள் உணர்த்தின.

யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு எட்டப்பட்ட முடிவை, அரசாங்கம் பகையாகக் கண்டது. இதனால், மாநாட்டுக்கு வருகை தருவோருக்கான விசாக்கள் தாமதமாகின. அரசியல் பிரமுகர்களுக்கு விசா மறுக்கப்பட்டது. அரசுக்குரிய பாடசாலை மண்டபங்கள் மறுக்கப்பட்டன. அரசாங்கத்தின் ஆதரவுடைய அல்பிரட் துரையப்பா, யாழ்ப்பாண மேயராக இருந்தது ஒழுங்கமைப்பாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

அரசாங்கம் நெருக்கடிகளைக் கொடுத்தாலும், இம்மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு சிங்கள மக்கள் மத்தியிலும் ஆதரவு இருந்தது. சிங்களப் பொதுமக்கள், அறிஞர்கள் எனப் பலர் இந்த மாநாட்டை வரவேற்று ஆதரவு வழங்கினார்கள். இந்தத் தகவலை, இலங்கை கிளைக்குத் தலைவராக இருந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன், அம்மாநாட்டு நினைவுமலருக்கு எழுதிய செய்திக்குறிப்பில் விதந்துரைத்துள்ளார்.

இம்மாநாடு, அறிஞர்கள் பங்குகொள்கின்ற தமிழாய்வை முன்னெடுக்கும் ஒரு நிகழ்வு. ஆனால், இதைப் பொது மக்களுக்கான நிகழ்வாக மாற்றுவது என்ற யோசனை, தமிழரசுக் கட்சியினரால் முன்மொழியப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் இருந்தபோதும், இறுதியில் இம்முன்மொழிவு ஏற்கப்பட்டு, இறுதிநாள் நிகழ்வானது பொதுமக்களுக்கான நிகழ்வாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடத்த முடிவானது.

இந்நிகழ்வு நோக்கிய நகர்வுகள், ஏட்டிக்குப் போட்டியானவையாக மாறின. அரசாங்கம் என்னவகையில் தடுத்தாலும், நிகழ்வை நடத்தியே தீருவது என்று தமிழரசுக் கட்சி கங்கணம் கட்டிக்கொண்டது.

இதன் ஒருபகுதியாக, விசா மறுக்கப்பட்ட தமிழ்த் தேசியவாதியான ஜனார்த்தனனைக் களவாகக் கொண்டு வந்து, மேடையேற்றுவது என்று தமிழரசுக் கட்சித் தலைவர்கள் சிலரும் இளைஞர்களும் முடிவெடுத்தனர். இதன்மூலம் அரசாங்கத்தின் முகத்தில் அறைவது என்று முடிவானது.

இதன்படி, படகுவழியாகக் கள்ளமாக யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டம் குறித்த செய்திகள், பொலிஸாருக்குத் தெரிந்திருந்தன. ஒருவேளை, ஜனார்த்தனனை மேடையேற்ற முயன்றால், அதைத் தடுப்பதென்றும் தேவையேற்படின் அவரைக் கைது செய்வதென்றும் அரசாங்கம் முடிவெடுத்தது. இவை, ஓர் ஆராய்ச்சி மாநாடு, எவ்வாறு அரசியலானது என்பதற்கான சாட்சியங்கள்.

ஜனார்த்தனன் மேடையேற, அதைத்தடுக்க பொலிஸார் மேடையை நோக்கி விரைந்தனர். பொலிஸாரை இளைஞர்கள் தடுத்தனர். பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

கூட்டத்தைக் கலைக்க, பொலிஸார் வானத்தை நோக்கிச் சுட்டனர். பெருமளவில் முற்றவெளியில் கூடியிருந்த மக்கள் சிதறி ஓடினர். மின்சாரக் கம்பிகள் சரிந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி ஏழு பேர் உயிரிழந்தனர். இவ்வுயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆரம்பம் முதலே, இம்மாநாடு குறித்த பகையுணர்வும் சட்டம், ஒழுங்கை பொலிஸ் பேணத்தவறியமையும் ஏற்புடையதல்ல. அதேவேளை, இந்த உயிரிழப்புகள் குறித்த எந்தவொரு விசாரணையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

இதேவேளை, இந்த அனர்த்தத்துக்கு தமிழரசுக் கட்சியும் பொறுப்பு என்பதை மறுக்கவியலாது. தமிழரசுக் கட்சியின் பொறுப்பற்ற செயல்குறித்து யாரும் பேசுவதில்லை. இவ்வாறு, மக்களைக் குறிவைப்பதனூடாக, அரசியல் ஆதாயம் பெறும் புதிய யுத்தியை, தனது தேர்தல் அரசியலுக்காக தமிழரசுக் கட்சி தொடங்கியது.

இந்நிகழ்வுகள் தமிழரசுக் கட்சியின் உணர்ச்சிகர அரசியலுக்கு வலுவூட்டி, அரசியல் வன்முறைகளை இளைஞர்கள் கையிலெடுப்பதற்கு வழிகோலியது. இவ்வகையான வன்முறைகளுக்கு, மௌன அங்கிகாரத்தை வழங்கின. இதைத் தொடர்ந்து, துரையப்பாவில் தொடங்கியது கொலைக் கலாசாரம். அது, ஈழத் தமிழர் வரலாற்றின் கறைபடித்த பக்கங்கள்.

Posted in Uncategorized

இந்திய வௌியுறவு செயலாளரை சந்தித்த நிதி அமைச்சர் பசில்

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் அந்நாட்டு வௌியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் போது, அந்நாட்டு வௌிநாட்டலுவல்கள் அமைச்சர், கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் உதவி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Posted in Uncategorized

இந்திய பிரதமர் – நிதி அமைச்சர் பசில் இடையே சந்திப்பு

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ புது டெல்லியில் வைத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவையும் சந்தித்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நிதியமைச்சர் நேற்று (15) இந்தியா சென்றுள்ளார்.

மக்கள் சக்தியின் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டது!

அரசாங்கத்திற்கு எதிராக, சஜித் பிரேமதாச தலைமையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய போராட்டம் இன்று(15) பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.

‘நாடு நாசம், மீட்டெடுப்போம்’ – எனும் தொனிப்பொருளின் கீழ் இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட இப் போரட்டத்திற்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவான பொது மக்கள் கொழும்பு நோக்கி படையெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி ஹட்டன், பொலன்னறுவை, காலி ஆகிய பிரதேசங்களிலிருந்தும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இப் போராட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.

கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகிலிருந்தும், பி.டி.சிரிசேன மைதானத்திற்கு அருகிலிருந்துமென இரு இடங்களில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணிகள் ஆரம்பமாகியிருந்தன.

இந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மக்களுடன் ஆர்ப்பாட்டப் பேரணியில் இணைந்துள்ளார்.

இதன்போது மக்கள் சவப்பெட்டியை சுமந்து வருவதை காணக்கூடியதாக இருப்பதுடன், பலர் நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச போன்று வேடமிட்டு இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பசில் போன்று வேடமிட்டவர்கள் “என்னால் நாட்டை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது, மன்னித்து விடுங்கள்” என ஒப்பாரியுடன் கூறிக்கொண்டு பேரணியில் இணைந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பின் முக்கிய பகுதியான காலிமுகத் திடலிலுள்ள ஜனாதிபதி செயலக முன்றலில் திரண்டு அப்பகுதியை முற்றுகையிட்டுள்ளனர்.

அதேவேளை ஜனாதிபதி செயலகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் வகையில் விசேட அதிரடிப்படையினர், கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட மக்கள் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தை அடைந்துள்ள நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டகாரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வெளியே வருமாறு அழைப்பதுடன், ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைவதற்கான பலத்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இப் போராட்டம் ஆரம்பிக்க காரணமாக அமைவது,

நாட்டில் பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்துவருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மக்களுக்கு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.

இதனையடுத்து அந்நிய செலாவணி கையிருப்பும் சடுதியாக குறைவடைந்துள்ளது. பொருளாதாரமும் சிதைவடைந்துள்ளது.

எனவே, இவற்றை சீர்செய்வதற்கு அரசாங்கத்திற்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படவுள்ளது.

இன்றைய போராட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காலக்கெடுவுக்குள் தீர்வு இல்லையேல் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும், மக்களும் மற்றும் கட்சி ஆதரவாளர்களும் கலந்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பயங்கரவாதத் தடுப்பு சட்டமூலம்தை திருத்தங்களுடன் முன்வைக்க அனுமதி

பயங்கரவாதத் தடை (திருத்தம்) சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சு சார் ஆலோசனைக் குழு இணங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் குறித்த குழு கூடிய நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சட்டமூலம் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதலாவது வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமைவாக திருத்தங்களை உள்ளடக்கிய சட்டமூலம், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகரிக்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் வாரத்தில் இரண்டாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதாரச் சூழலைத் தீர்ப்பதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட வேண்டும் – ரணில்

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை நிராகரித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் எண்ணமில்லை என்றும் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதாரச் சூழலைத் தீர்ப்பதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இதேவேளை உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்துள்ளது, உர உற்பத்தியில் ரஷ்யா முன்னணியில் உள்ள போதும் அங்கிருந்து வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையின் மொத்தக் கடன் 19 ஆயிரம் பில்லியன் என்றும் இந்தக் கடன்களைத் தீர்க்க வெளிநாட்டு நாணயத்தை நாம் கடனாகப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் ஒரு பில்லியன் கடனை திரும்பச் செலுத்த வேண்டிய நிலையில் தற்போது 600 மில்லியன் மட்டுமே கையிருப்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized

காணாமல் போனோருக்காக ஒருமுறை மாத்திரம் செலுத்தப்படும் கொடுப்பனவு!

காணாமல் போன நபரின் நெருங்கிய உறவினருக்கு குடும்ப மீள்வாழ்வுக்காக ஒருமுறை மாத்திரம் செலுத்தப்படும் 100,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இழப்பீட்டுக் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கமைய, பல்வேறு நிலைமைகளின் கீழ் ஏற்பட்ட தொந்தரவுகளால் அழுத்தங்களுக்குள்ளாகிய பிரஜைகளுக்கு அவர்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்காகவும் மற்றும் மீள்நிலைக்குக் கொண்டுவருவதற்கு ஒத்துழைப்பதற்காகவும் இக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்கால சந்ததியினர் உள்ளிட்ட இலங்கையர்களின் நலன்களுக்காகவும் பாதுகாப்புக்காகவும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் தற்போது வகுக்கப்பட்டுள்ள கொள்கைகளுக்கமைய அக்குடும்பங்களுக்கு உதவிகளை வழங்க வேண்டியுள்ளது. 2016 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டத்தின் மூலம் காணாமல் போன நபர்கள் தொடர்பாக சரியான விசாரணைகளை நடாத்திய பின்னர் இறப்புச் சான்றிதழ் அல்லது காணக்கிடைக்கவில்லை என்ற சான்றிதழை வழங்குவதற்காக பதிவாளர் நாயகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் கண்டறிப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பதிவாளர் நாயகத்தால் வழங்கப்பட்டு காணக்கிடைக்கவில்லை எனும் சான்றிதழைப் பெற்றுள்ள காணாமல் போன நபரின் நெருங்கிய உறவினருக்கு குடும்ப மீள்வாழ்வுக்காக ஒருமுறை மாத்திரம் செலுத்தப்படும் 100,000 ரூபாய்களைச் செலுத்துவதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.