தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி சந்திப்பு இரத்து

ஜனாதிபதி கோட்டாபாய ராயபக்சாவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமான இன்றைய சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை 3.30ற்கு இடம்பெறவிருந்த சந்திப்புத் தொடர்பில் கூட்டமைப்பினர் இன்று கலந்துகொளவது தொடர்பான நெருக்கடி தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

எனினும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அறிவித்திருந்தது.

பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வதெனில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சில பிரச்சனைகளிற்கு தீர்வை அறிவித்து பேச்சுக்குரிய சூழலை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

இந்நிலையில் இன்று சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது, ரெலோ வின் நிலைப்பாடு மற்றும் எதிரணி இன்று திட்டமிட்டுள்ள போராட்டம் காரணமாக சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறும் என, ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ஜனாதிபதி அழைத்தவுடன் செல்வதற்கு தமிழர் விவகாரம் சம்பந்தனின் குடும்ப விவகாரம் அல்ல: சி.அ.ஜோதிலிங்கம்

ஜனாதிபதி அழைத்தவுடன் விழுந்தடித்துக்கொண்டு செல்வதற்கு இந்த விவகாரம் சம்பந்தனின் குடும்ப விவகாரம் அல்ல என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வுமைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் இடம் பெறவுள்ள பேச்சுவார்த்தை தொடர்பாக இன்று யாழ் ஊடக மையத்தில் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவருடன் சமூக விஞ்ஞான ஆய்வு மைய துணை இயக்குநர் மருத்துவர் க.பவணந்தியும் உடனிருந்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மார்ச் மாதம் 15ஆம் திகதி மாலை 3 மணிக்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்குமிடையே பேச்சுவார்த்தை நடைபெற இருக்கின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எந்தவித கலந்துரையாடலும் கூட்டமைப்புக்குள்ளோ வெளியிலோ நடாத்தாமல் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.

இது தொடர்பாக பங்காளிக்கட்சிகளுடனும் எதுவித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. தமிழரசுக் கட்சிக்குள்ளும் கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை. கூட்டமைப்புக்கு வெளியே கல்வியாளர்கள், சமூக முக்கியஸ்தர்களுடனும் எந்தவித உரையாடலும் இடம்பெறவில்லை.

பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சிநிரலும் தயாரிக்கப்படவில்லை. பங்காளிகாளிக்கட்சியான ரெலோ பேச்சுவார்த்தையை நிராகரிக்கும் படி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கேட்டிருக்கின்றது.

அதேவேளை கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை ஜனாதிபதியின் பொறிக்குள் சிக்க வேண்டாம் என சம்பந்தனுக்குக் கடிதம் எழுதியுள்ளது. ஆனாலும் சம்பந்தன் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது என்பதில் உறுதியாக உள்ளார்.

ஜனாதிபதி அழைத்தவுடன் விழுந்தடித்துக்கொண்டு செல்வதற்கு இந்த விவகாரம் சம்பந்தனின் குடும்ப விவகாரம் அல்ல. இது வரலாற்று ரீதியாகத் திட்டமிட்ட ஒடுக்குமுறைகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்து வரும் தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பு பற்றிய பிரச்சினை. இதில் சம்பந்தன் மட்டும் தீர்மானங்களை எடுத்துச் செயற்பட முடியாது.

தற்போதைய கோட்டாபய அரசாங்கம் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பலத்த நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது. சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த நெருக்கடிகளிலிருந்து விடுபட முடியாது. சர்வதேச சமூகம் நாட்டின் ஸ்திரத் தன்மையை உடனடியாகப் பேணுமாறு கேட்டிருக்கின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் நாட்டின் ஸ்திரத் தன்மையை ஒருபோதும் பேண முடியாது. கோட்டாபய அரசாங்கம் வலிமையான கொளுக்கிக்குள் மாட்டுப்பட்டுள்ளது. இந்தக் கொளுக்கி தமிழ் மக்களுக்குச் சாதகமானது.

இதனைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. இலங்கை அரசுடனான தமிழ்த் தரப்பின் பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் ஒருபோதும் வெற்றிகளைத் தரவில்லை.

இலங்கை அரசு தமிழ் மக்களை இது விடயத்தில் ஏமாற்றியதே வரலாறு. எனவே அனைத்து பேச்சுவார்த்தைகளும் சர்வதேச மத்தியஸ்தத்துடனேயே இடம்பெற வேண்டும். தமிழ் மக்களை அரசியல் தீர்வு என்கின்ற அடிப்படைப் பிரச்சினை, இன அழிப்புக்கு நீதி கோரும் பிரச்சினை, ஆக்கிரமிப்புப் பிரச்சினை, இயல்புநிலையைக் கொண்டுவருதல் பிரச்சினை, அன்றாடப் பிரச்சினை என ஐந்து வகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் உரிய வகையில் பேச்சுவார்த்தையில் உள்வாங்கப்படல் வேண்டும். எனவே தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார, கலாச்சார விடயங்கள் தொடர்பாகக் கருத்துக்களை உருவாக்கி மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் பணிகளை மேற்கொண்டு வருகின்ற சமூக, விஞ்ஞான ஆய்வுமையத்தினராகிய நாம் பின்வரும் கோரிக்கைகளைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரிடம் முன் வைக்கிறோம்.

1. மார்ச் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறும் பேச்சு வார்த்தையை நிகழ்ச்சி நிரல் தயாரிப்பதற்கு மட்டும் பயன்படுத்துதல் வேண்டும். தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி எதிர்காலத்தில் சர்வதேச மத்தியஸ்தத்தினுடனேயே பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும்.

2. சர்வதேச மத்தியஸ்தர்கள் யார் என்பது தொடர்பாக மார்ச் 15ஆம் திகதி பேச்சுவார்த்தையில் ஒரு இணக்கத்திற்கு வரலாம்.

3. சர்வதேச மத்தியஸ்தத்துடனான பேச்சுவார்த்தைக்கு முன்னர் பேச்சுவார்த்தை தொடர்பான நல்லெண்ணத்தை அரசு வெளிக்காட்ட வேண்டும். அதன் பின்னரே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்பதை வலியுறுத்த வேண்டும்.

4. அரசியல் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி எந்தவித நிபந்தனையுமில்லாமல் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படல் வேண்டும்.

5. சர்வதேச சமூகம் சிபார்சு செய்தபடி நிலைமாறு கால நீதிக் கோட்பாட்டிற்கிணங்க காணாமல் போனோரின் விவகாரம் உண்மையைக் கண்டறிதல், நீதி வழங்குதல், இழப்பீடு வழங்குதல், மீள நிகழாமையை உறுதிப்படுத்துதல் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

6. காணாமல் போனோர்க்கான இழப்பீடு தீர்மானிக்கும் வரை பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக மாதாந்த இழப்பீடு தொகை வழங்கப்படல் வேண்டும். முன்னைய 6000 ரூபா போதுமானதல்ல.

7. இராணுவம் கைப்பற்றியுள்ள காணிகள் உடனடியாக உரிமையாளர்களிடம் கையளிக்கப்படல் வேண்டும்.

8. தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வருகின்ற சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

9. தொல்லியல் திணைக்களம் வனபரிபாலன திணைக்களம், வனஜீவரராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, பௌத்த விவகாரங்கள் அமைச்சு என்பன தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ஆக்கிரமிப்புக்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

10. தமிழ் பிரதேசங்களில் உள்ள அரச செயலகங்களில் உயர் அதிகாரிகளாகச் சிங்களவர்களை நியமிப்பது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

11. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம் கிழக்குப் பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்பவற்றில் எழுபது வீதம் மாணவர்கள் தமிழ் பேசும் மாணவர்களாக இருத்தல் வேண்டும்.

12. கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் உடனடியாக தீர்க்கப்படல் வேண்டும்.

13. தமிழ்ப் பிரதேச கடற்பரப்பில் சிங்கள கடற்தொழிலாளர்களின் ஆக்கிரமிப்புக்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். குறிப்பாக மயிலிட்டித் துறைமுகத்தில் சிங்கள கடற்தொழிலாளர்களின் ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

14. எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளின் போது அரசியல் தலைமைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கென துறைமுக சார் நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு உருவாக்கப்படல் வேண்டும். இக்குழுவின் ஆலோசனைப்படியே அரசியல் தலைமை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

என்ன விடயத்தை பேச போகிறேன் எதையும் குறிப்பிடாது வாருங்கள் என்று கூறினால் நாங்கள் மீண்டும் ஏமாறுவதற்கு தயாராக இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு என்ன விடயத்தை பேச போகிறேன் என்று எதையும் குறிப்பிடாது, வாருங்கள் என்று கூறினால் நாங்கள் மீண்டும் மீண்டும் ஏமாறுவதற்கு தயாராக இல்லை என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமை குழு உறுப்பினருமான வினோநோகதாரலிங்கம், எவ்வித நிபந்தனையுமின்றி நாம் ஜனாதிபதியோடு பேசத் தயாராக இல்லை என்று தெரிவித்தார்.

வவுனியாவில் சிறிநகர் மக்களின் 25 வருட கோரிக்கையாக இருந்த விளையாட்டு மைதானத்தை சனிக்கிழமை (12) திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், “நாங்கள் பல போராட்டங்களை நடாத்தினால்தான் எங்களுடைய உரிமையை பெற முடியும். நாங்கள் போராடாமல் வீட்டுக்குள்ளே இருந்தால் எங்களுடைய உரிமையை நிச்சயமாக பெற்றுக்கொள்ள முடியாது.

ஜனாதிபதி, எதிர்வரும் 15ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச அழைப்பு விடுத்திருக்கிறார்.

நாடு தற்போது இக்கட்டான நிலைமையில் இருந்து கொண்டு இருக்கின்றது. அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகளும் வரிசையாக நிற்கின்ற யுகத்தை மீண்டும் சந்திக்கின்ற நிலைமை வந்து கொண்டிருக்கின்றது. எந்த பொருளை வாங்குவதானாலும், வாங்க நினைத்தாலும் கூட நாங்கள் வரிசையில் நின்றுதான் வாங்குகின்ற நிலைமை வந்து கொண்டிருக்கின்றது.

எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் விலை தொடர்ந்து அதிகரித்தவண்ணமே உள்ளது. இது போன்றே பல பொருட்களும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருட்களின் விலைகளும் உயர்ந்து கொண்டு இருக்கின்றது. இந்த நாட்டை ஆள முடியாமல் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மிகவும் தடுமாறி கொண்டு இருக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அவரின் தலைமையிலான அரசாங்கம் இந்த நாட்டை ஆள முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறது.

அவருக்கு ஆதரவாக வாக்களித்த 69 இலட்சம் மக்களும் அவரை இன்று துரத்தியடிக்க வேண்டும், அவர் இந்த நாட்டை ஆள தகுதி இல்லாதவர் என்று சொல்கின்ற நிலைமை உருவாகியுள்ளது. இந்த நாடு வெளிநாடுகளிலே பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கின்றது. இனி இந்த நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு குடிமகனும் பிச்சை எடுக்கின்ற நிலைமை இருக்கின்றது.

இப்படியான நிலைமையில் நாட்டை ஆட்டங்காண வைத்து அதளபாதாளத்தில் தள்ளிவிட்டு, தான் தப்புவதற்காக இவ்வளவு காலமும் பேச முடியாத நிலைமையில் இருந்துகொண்டு ஐநா மனித உரிமை பேரவையிலே கேள்வி மேல் கேள்வி தொடுக்கப்பட்டு கொண்டு இருக்கின்ற இந்த நேரத்தில் தன்னையும் அரசையும் தப்பவைப்பதற்காக எங்களோடு பேச வேண்டும் என்ற வார்த்தை கூறப்பட்டிருக்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்போடு என்ன விடயத்தை பேச போகிறேன் என்று எதையும் குறிப்பிடாது வாருங்கள் என்று கூறினால் நாங்கள் மீண்டும் மீண்டும் ஏமாறுவதற்கு தயாராக இல்லை.

முதலில் அவர்கள் இங்கே தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்தவித நிபந்தனையும் இல்லாமல் சென்று அவர்களோடு எதை பேச வேண்டும்.

தற்போதைய நாட்டின் உடைய நிலைமையில் இருந்து சர்வதேச ரீதியாக அல்லது ஐ.நா மனித உரிமை பேரவையின் ஊடாக அல்லது அயலில் இருக்கின்ற மிகப்பெரிய வல்லரசு நாடாகிய இந்தியாவினுடைய தலையீட்டில் இருந்து தப்புவதற்காக எங்களை பகடைக்காயாக பயன்படுத்துவதை ஒரு போதும் ஏற்று கொள்ள போவதில்லை.

தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினையும் தீர்க்க போவதில்லை, பொருளாதார பிரச்சினையும் தீர்க்க போவதில்லை. ஆகவே தான் கூறுகின்றேன் இந்த போராட்டத்தின் மூலம் வெற்றி அடைந்தது போல் எதிர் காலத்திலே நாம் ஒவ்வொன்றிற்காகவும் போராட வேண்டிய நிலைமை இருக்கின்றது“ என மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கை கடல் பரப்புக்குள் இந்திய மீனவர்களின் இழுவைமடி தொழிலுக்கு அனுமதி வழங்க முடியாது: அ.அன்னராசா

இலங்கை கடல் பரப்புக்குள் இந்திய கடற்தொழிலாளர்களின் இழுவைமடித் தொழிலை ஒரு நிமிடம் கூட அனுமதி வழங்க முடியாதென இந்திய மீனவர்களிடம் தெரிவித்துள்ளதாக, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னரசா தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய – இலங்கை கடற்தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பில் சிநேகபூர்வமான கலந்துரையாடலொன்று கடந்த 11ஆம் திகதி கச்சதீவில் நடைபெற்றது.

இதில் நாம் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராக மட்டுமே போராடி வருகின்றோம். ஆனால் அதை, இந்தியத் தொப்புள் கொடி உறவுகளுக்கு எதிரான போராட்டமாகச் சிலர் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவகையில் கதைத்து வருகின்றனர்.

நாம் அங்கே தெளிவாகக் கூறினோம், 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை வடக்கு மக்களுக்கு, இந்திய உறவுகள் செய்த உதவிகளை நாம் மறக்க மாட்டோம்.

ஆனால் ஒரு நிமிடம் கூட இலங்கை கடல் பரப்புக்குள் இழுவை மடித்தொழிலை செய்ய அனுமதிக்க மாட்டோம். நாட்டுப்படகோ இழுவைமடி படகோ ஏதுவாக இருந்தாலும் எமது நாட்டுக் கடற்பகுதிக்குள் அத்துமீறி வரும் பொழுது சட்டம் தன் கடமையைச் செய்யும்.

இந்திய கடற்தொழிலாளர்கள் இழுவை மடி தொழிலை நிறுத்தினால் உங்கள் தரப்பிலுள்ள நியாயமான கோரிக்கைகளை நாம் வெளியுறவு அமைச்சின் ஊடாக ஆராய்வோம் என கூறியிருந்தோம்.

அதேவேளை இந்திய நாட்டுப் படகு தொழிலாளர்கள், இழுவை மடித் தொழிலால் தாமும் பாதிக்கப்படுவதாக, அதற்கு எதிராகத் தாமும் செயற்படுவோம் என்றும் தமது பிரச்சினை தொடர்பில் முதலமைச்சர் மட்டம் வரை கொண்டு சென்றும் எந்தப் பிரயோசனமும் இல்லையென்றும் கூறியிருந்தார்கள்.

அத்துடன் எமது பிரச்சினையை அவர்கள் 90 வீதம் ஏற்றுக்கொண்டார்கள். இலங்கை மற்றும் இந்தியப் பாரம்பரிய கடற்றொழிலாளர்கள் கூட்டாக இணைந்து இலங்கை இந்தியக்கடல் வளத்தைப் பாதுகாக்கவும் தீர்மானித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

வழமையான ஏற்பாடுகளுக்கு முன்னதாகவே சர்வதேச நாணய நிதியத்தினர் கோட்டாபயவை சந்திக்கின்றனர்

சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் நாளை செவ்வாய்க்கிழமை, இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்கின்றனர்.

இதன்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்துக்கான மதிப்பீடுகள் குறித்து அவர்கள் கோட்டாபயவிடம் விளக்கமளிப்பார்கள் என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கையின் தலைமையாளர் மசாக்கிரோ நொசாக்கியை கோடிட்டு, ரொயட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இதுவரை இலங்கைக்கான நிதியுதவிகள் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோரிக்கைகள் விடுக்கப்படுமானால் அது குறித்து கலந்துரையாட தமது அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும் நொசாக்கி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்துடன் ஏற்கனவே அடுத்த மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ள வழமையான சந்திப்புக்கு புறம்பாகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தற்போது, பாரிய பொருளாதார நெருடிக்கடியை எதிர்கொள்கிறது

நாட்டில் வெளிநாட்டு இருப்பு 2.31 பில்லியன் டொலர்களாக இருக்கும் நிலையில், எரிபொருள், உணவு மற்றும் மருந்துகளின் இறக்குமதிகளை மேற்கொள்வதில் பாரிய சிரமம் எதிர்கொள்ளப்படுகிறது.

ஏற்கனவே இந்த மாத ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்ட ஒரு காலமுறை மறுஆய்வில், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் “நம்பகமான மற்றும் ஒத்திசைவான” மூலோபாயத்தை செயல்படுத்துமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

Posted in Uncategorized

தேசிய அரசாங்கம் பயனற்றது – மஹிந்த அமரவீர

தேசிய அரசாங்கம் பயனற்றது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போது நாட்டில் டொலர்கள் இல்லை. வெளிநாட்டு கையிருப்பு இல்லை.

நாம் உண்மையில் மரணத்தின் விளிம்பில் இருக்கிறோம். இப்போது எங்களிடம் அதிக எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் உள்ளனர், இது அதிகரித்து வருகிறது.

இதனை குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நேரத்தில் அரசியல் பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இருப்பவர்களை எப்படி வெளியேற்றுவது, எப்படி பதவிகளை எடுப்பது என்பது முக்கியமல்ல. ஜனாதிபதியை சந்தித்த போது சர்வகட்சி மாநாட்டை முன்மொழிந்தோம். மனிதர்கள் படும் துன்பங்களைப் பற்றி அவரிடம் கூறினோம்.

அண்மைக்காலமாக டீசல் வாங்க மக்கள் வரிசையில் நிற்கின்றனர். வரிசையில் போய் இன்னும் விலை உயர்ந்த டீசலை நிரப்பிக்கொண்டு, எரிபொருள் தீரும் வரை எரிவாயு தேடி அலைய வேண்டும்.

இது ஒருவரது தவறு அல்ல, இந்த முழு அரசாங்கத்திலும் ஏதோ தவறு இருக்கிறது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

பிரித்தானியா தமது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை

மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட பொருட்களுக்கான பற்றாக்குறை காரணமாக பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாகக் கூறி இலங்கைக்கு செல்வதற்கான பயண ஆலோசனையை பிரித்தானியா புதுப்பித்துள்ளது.மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறையுடன் அந்த நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாக பிரித்தானியா எச்சரித்துள்ளது.

இறக்குமதிக்கு செலுத்துவதற்கு பணம் இல்லாதமை காரணமாக இலங்கை தற்போது அடிப்படைத் தேவைகளில் பற்றாக்குறையை அனுபவித்து வருவதாக பிரித்தானியா தமது குடிமக்களுக்கு தெரிவித்துள்ளது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் முடக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும், நாட்டில் குறுகிய பயணக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம் என பிரித்தானிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பலசரக்கு கடைகள், எரிவாயு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் நீண்ட வரிசைகள் இருக்கலாம் எனவும் பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.அத்துடன் மின்சார உற்பத்திக்கான நெருக்கடி காரணமாக சூழற்சி முறையில் அதிகாரிகள் மின்வெட்டை நடைமுறைப்படுத்தலாம் எனவும் பிரித்தானியா, தமது பிரஜைகளுக்கான பயண ஆலோசனையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

நிதியமைச்சர் பசிலுக்கு எதிராக நமிக்கையில்லா பிரேரணை!

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கவனம் செலுத்தியுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு நிதியமைச்சரின் செயற்பாடுகளே காரணம் என்பதால் அவர் மீதான நம்பிக்கை தகர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகணத்தில் இந்திய முதலீடுகளை செய்வதற்கு தயார் – இலங்கைக்கான இந்தியத் தூதுவர்

இந்திய அரசாங்கத்தினால் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபம் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது என இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.அத்துடன் வடக்கு மாகணத்தில் இந்திய முதலீடுகளை செய்வதற்கு திட்டங்களை வகுத்து வருவதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் மீனவர்களுக்கு உதவிகளை செய்யும் முகமாக இந்திய முதலீடுகளையும் இங்கு கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் கூறினார்.இதன் மூலம் மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரம் மற்றும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் இதற்கு அனைவரது ஒத்துழைப்பு தேவை என வடக்கு மாகாண மீனவர்களிற்கான வாழ்வாதார உதவித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தபின்னர் உரையாற்றும் போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Posted in Uncategorized

மறைந்த ரெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் மூத்த சகோதரருக்கு யாழில் உணர்வுபூர்வ அஞ்சலி

ஈழ விடுதலை போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும், தன் இறுதி மூச்சு வரை உறுதியாக தமிழ் இன விடுதலையை நேசித்தவரும், பலமுறை சிறை சென்று சித்திரவதைகளுக்கு ஆளாகிச் சிறை மீண்டவருமான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினத்தின் மூத்த சகோதரர் டாக்டர்.சுந்தரம்பிள்ளை கந்தசாமி(கந்தா)கடந்த 9 ஆம் திகதி புதன்கிழமை சுகவீனம் காரணமாக இந்தியாவின் சென்னையில் காலமாகியிருந்தார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(13.3.2022) சென்னையில் நடைபெற்றது.

இந்நிலையில் மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினம் மற்றும் அவரது மூத்த சகோதரரான அமரர் சு.கந்தசாமி (கந்தா) ஆகியோரின் இல்லம் அமைந்துள்ள இடமான யாழ்.கல்வியங்காடு செங்குந்தா இந்துக் கல்லூரி மைதானத்திற்கு அருகில் இன்று முற்பகல்-11 மணிக்கு அஞ்சலி நிகழ்வொன்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் மெளன வணக்கம், ஈகைச் சுடரேற்றல், உருவப் படத்திற்கு மலர் மாலைகள் அணிவித்து மலரஞ்சலி,மற்றும் அஞ்சலி உரைகளும் நடைபெற்றன.

மேற்படி அஞ்சலி நிகழ்வில் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சரும், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன், பிரபல சட்டத்தரணி ஏ.இராஜரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி உரைகள் நிகழ்த்தினர்.

அஞ்சலி நிகழ்வில் ரெலோவின் மூத்த போராளிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினம் மற்றும் அவரது சகோதரர் அமரர் சு.கந்தசாமி(கந்தா) ஆகியோரின் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள், ஊரவர்களின் வேண்டுகோளின் பேரில் விந்தன் கனகரட்ணம், விஸ்வநாதன் விஸ்வா மற்றும் கஜேந்தினி, காந்தரூபன், இராசதுரை, நடராசா ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் குறித்த அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.