கோட்டாவின் பொறிக்குள் விழுந்துவிட வேண்டாம் ! சம்பந்தனுக்கு கூட்டமைப்பின் பிரித்தானிய கிளையும் கடிதம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டப்பட்ட பொறுப்புக்கூறல் பற்றிய விடயங்களால் நெருக்கடிகளைச் சந்தித்துள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிலிருந்து மீள்வதற்கான பொறியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பதற்கு அழைத்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரத்தானியக் கிளை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவின் பொறிக்குள் விழுந்து விடவேண்டாம் என்றும் அவசரமாக சந்திக்க வேண்டிய தேவையில்லை என்பதால் அழைப்பை மறுபரிசீலனைக்கு உட்படுத்துமாறும் அக்கிளை குறிப்பிட்டு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

அக்கடிதத்தில், இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பேச்சுவார்த்தைக்கு அவசரமாக அழைத்துள்ளது.

இந்தஅழைப்பு தொடாபில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தங்களுக்கு அனுப்பிய கடிதத்தினை தயவு செய்து காழ்ப்புணர்ச்சி இல்லாது ஆழமாகப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்புக்கு இழுத்தடிப்புச் செய்துவிட்டு ஜனாதிபதி கோட்டாபயவின் அழைப்புக்கு விழுந்தடித்து ஓடவேண்டுமா? என்று ஒருகணம் சிந்திப்பது நல்லது.

இலங்கை ஜனாதிபதியின் அழைப்பானது, ஐ.நா.வின் சூடடைத் தணிக்கவே என்பது குழந்தைப் பிள்ளைக்கும் தெரிந்த விடயம். ஆகவே ஜனாதிபதியின் பொறிக்குள் தயவு செய்து அகப்பட்டுவிடாதீர்கள் என புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பாக குறிப்பிடுகின்றோம்.

அத்துடன், கீழ்வரும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது,

1.ஜனாதிபதி, முதலில் என்ன விடயங்கள் பற்றி பேச அழைக்கிறார் என்பது தெளிவுபடுத்த வேண்டும்.

2.கடந்த 2 வருடங்களாக இந்தத் தலைவர் எடுத்துவரும் காணி சுவீகரிப்புரூபவ் பௌத்த, சின்னங்கள் வைப்பு யாவும் உடன் நிறுத்தி தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவேண்டும்.

3.மரண தண்டனைக் குற்றவாளிகளை விடுதலை செய்த மன்னிப்புக்குணம் கொண்ட இந்த மகான் அரசியல் கைதிகள் அத்தனைபேரையும் விடுதலை செய்யவேண்டும்.

4.வலிந்து காணாமல்போனோர் பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும்.

5.பயங்கரவாதச் தடைச்ச சட்டம் உடன் நீக்கப்பட வேண்டும்.

6.இந்தியா எமது தீர்வுக்காகக் கோரிநிற்கும் 13ஆவது திருத்தச் சட்ட முழுமையான அமுலாக்கம், காத்திரமான அதிகாரப்பகிர்வும் பற்றி வெளிப்படையான நிலைப்பாடு அறிவிக்கப்படவேண்டும்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் யாவும் பேச்சுவார்த்தை இல்லாமலேயே செய்யக்கூடியவை.

பேச்சுவார்த்தை என்பது காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடு என்பதை விளக்கத் தேவையில்லை.

இவற்றைச் செய்தால் சிங்கள மக்களுக்கு இரத்தக் கொதிப்பு ஏற்படும் என்ற வாதத்தை இனியும் நாம் ஏற்காத தயாராக இல்லை. தயவு செய்து கூடியவிரைவில் இதுபற்றித் தங்கள் அறிக்கையை எதிர்பார்க்கிறோம். இதுவே ஈழத்தமிழர் பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது என்று அதில் உள்ளது.

Posted in Uncategorized

அதானி குழுமத்தின் வசமாகியது மன்னார் மற்றும் பூநகரி : வெள்ளியன்று கைச்சாத்தானது முக்கிய ஒப்பந்தம்

இரு பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களுக்காக வடக்கில் மன்னார் மற்றும் பூநகரியை அரசாங்கம் இந்தியாவின் அதானி குழுமத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

சுமார் 500 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ள குறித்த இரு திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டதாக அறிய முடிகின்றது.

இந்தியாவின் தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்துடன் திருகோணமலை, சம்பூரில் சூரிய மின்சக்தி பூங்காவை அமைப்பதற்கான புரிந்துரணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை நிதி அமைச்சில் அதானியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மேலும் 500 மெகாவாட் மொத்த உற்பத்தி திறன் கொண்ட குறித்த இரு திட்டங்களையும் ஓராண்டுக்குள் முடிக்க அதானி குழுமம் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மூன்று முக்கிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திட்டங்கள் இப்போது இந்திய முதலீடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாவுடன் பேசப்போகும் விடயங்கள் என்ன ? செவ்வாய் கூடுகின்றது கூட்டமைப்பு – மாவை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தையின்போது முன்வைக்கப்போகும் விடயங்கள் குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று கொழும்பில் கூடி ஆராயவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதின் நல்லெண்ண சமிக்ஞைகளின் பின்னரே சந்திப்பினை மேற்கொள்ள வேண்டும் என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம், கடிதம் மூலம் சம்பந்தனுக்கு அறிவித்துள்ளது.

அத்துடன் குறித்த விடயம் குறித்து தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடனும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.

இந்நிலையில் கருத்து வெளியிட்டுள்ள மாவை சோனதிராஜா, ஜனாதிபதி கோட்டாபயவைச் சந்திப்பதற்கு முன்னதாக இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் சந்திக்கவுள்ளதாக கூறினார்.

இனப்பிரச்சினை குறித்து மௌனமாகவும் பயங்கரவாத தடைச் சடத்தை முழுமையாக நீக்கவும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் தயாராக இல்லாத ஜனாதிபதி, என்ன விடயங்கள் தொடர்பாக தம்முடன் பேசப்போகின்றார் என்ற கேள்வியெழுந்துள்ளதாக குறிப்பிட்டார்.

எவ்வாறிருந்தாலும் காணாமலாக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள், காணி அபகரிப்புக்கள் குறித்து எடுத்துரைத்து தீர்வுகளை வழங்குமாறு தாம் வலியுறுத்தவுள்ளதாகவும் அதற்கான நிகழ்ச்சி நிரலை குறித்த சந்திப்பின்போது தயாரிப்போம் என்றும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

தமிழ் அரசியலுக்கு அவசியமானது கத்தியா? வித்தையா? சி.அ.யோதிலிங்கம்.

ரஸ்ய உக்ரைன் போர் இன்று இரண்டாவது வாரத்தைக் கடக்கத் தொடங்கியுள்ளது. 20 லட்சம் வரையான உக்ரைன் மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். உக்ரைன் நகரங்கள் ஒவ்வொன்றாக ரஸ்யாவிடம் விழுந்து கொண்டிருக்கின்றன. மிக மெதுவாக ஆனால் காத்திரமான வகையில் ரஸ்யா முன்னேறிக் கொண்டிருக்கின்றது.  அமைதிக்கான பேச்சுவார்த்ததைகள் தொடர்ந்து நடந்தாலும் அவையெல்லாம் தோல்வியில் முடிந்துள்ளன. தனது இலக்கு நிறைவேறும் வரை ரஸ்யா போரை நிறுத்தும் எனக் கூறுவதற்கில்லை.  ரஸ்ய அதிபர் கத்திக்காரன் மட்டுமல்ல வித்தைக்காறனும் கூட.  அவர் என்ன நேரம் என்ன செய்வார் என எவரும் எதிர்வு கூற முடியாது. முன்னாள் சோவியத் உளவுப்பிரிவின் தலைவரான அவர் கத்தியை விட வித்தையிலேயே அதிக நம்பிக்கை கொண்டவர்.
உக்ரைன் தொடர்பான போர் முயற்சியை ரஸ்ய அதிபர் கட்டம் கட்டமாகவே மேற் கொண்டார். சிரியா யுத்தத்தில் தலையிட்டதன் மூலம் சிறந்த போர்ப்பயிற்சி கிடைத்தது. புதிய ஆயுதங்கள் பரீட்சித்தும் பார்க்கப்பட்டன. ஒரு வகையில் சிரியா தலையீடு அமெரிக்காவிற்கு வழங்கப்பட்ட சிக்னல் என்றும் கூறலாம். “நானும் தயாராகி விட்டேன்” என்பது தான் அந்த சிக்னல். இரண்டாவது சிக்னல் கிரிமியாவை கைப்பற்றிய போது காட்டப்பட்டது. அது அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்திற்கு காட்டப்பட்ட சிக்னல் மட்டுமல்ல உக்ரைனுக்கும் காட்டப்பட்ட சிக்னல் தான். அந்த சிக்னல் மொழியை உக்ரைன் ஒழுங்காக புரிந்துகொள்வில்லை. நேட்டோ தன்னைப் பாதுகாக்கும் என அதீத நம்பிக்கையுடன் உக்ரைன் இருந்தது. இன்று அந்த நம்பிக்கை எல்லாம் தவிடுபொடியாகிவிட்டது.
அமெரிக்காவுக்கும் மேற்குலகத்திற்கும் இரண்டு நபர்களில் அதிக பயம். ஒன்று வடகொரியா அதிபர். இரண்டாவது ரஸ்ய அதிபர். இருவரும் சொல்வதைச் செய்வார்கள். அணு ஆயுதம் பயன்படுத்துவேன் என்று கூறினால் பயன்படுத்தியே முடிப்பர். தென்கொரியாவிற்கு இவை நன்கு புரியும் என்பதால் தான் போர்ச்சூழல் ஏற்படும்போதெல்லாம் எப்படியாவது அதனைத் தவிர்த்துவிடுகின்றது. தென்கொரிய அதிபருக்கு இருந்த இக் கெட்டித்தனம் உக்ரைன் அதிபருக்கு இருக்கவில்லை.

போரை ரசிக்க முடியாது என்பது உண்மைதான். அது தரும் வலி கொஞ்சநஞ்சமல்ல. போர் நடக்கும் நாடுகளில் மட்டுமல்ல அதனைக் கடந்தும் அது வலியைக் கொடுக்கக் கூடியது. இன்று உக்ரைன் போரினால் அதனுடன் எந்தவித தொடர்பும் இல்லாத இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தங்கள் வாழ்வாதாரத்தை பேணுகின்ற மலையக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளாக ரஸ்யாவும், உக்ரைனும் இருக்கின்றன. உல்லாசப் பயணத் துறையிலும் ரஸ்யாவினதும் உக்ரைனினதும் பங்கு அதிகமானது.
போர் என்பது அரசியலின் விளைவு. வெறுமனவே மனிதாபிமான நெருக்கடிகளைப் பார்த்து ஒப்பாரி வைப்பதால் போரை ஒருபோதும் நிறுத்திவிட முடியாது. அதன் பின்னாலுள்ள அரசியல் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதனைத் தீர்ப்பதன் மூலமே போரைத் தவிர்க்க முடியும். சிலவேளை போரில் ஒரு தரப்பு தற்காலிகமாக வெற்றியடையலாம். ஆனால் அரசியல் பிரச்சினை தீராவிட்டால் போர் வேறு வகைகளில் தொடரவே செய்யும். இலங்கையில் அருவருக்கத் தக்க இன அழிப்பின் மூலம் பெருந்தேசியவாத அரசு போரில் வெற்றி கண்டது. ஆனால் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இன்று வேறோர் வகையில் போர் தொடர்கின்றது. ஆயுதப் போரில் வெற்றி கண்ட பெரும் தேசியவாத அரசு தற்போது வேறு வகைகளில் தொடரும் போரினால் தனது இருப்பையே பாதுகாக்க முடியாமல் திணறுகின்றது.
ரஸ்ய – உக்ரைன் போரைப் பொறுத்தவரை இரண்டு அரசியல் பிரச்சினைகள் உள்ளன. ஒன்று உக்ரைனில் வாழும் ரஸ்ய இனத்தவர்களின் தேசிய இனப் பிரச்சினை. இரண்டாவது ரஸ்யாவின் தேசியப் பாதுகாப்புப் பிரச்சினை. இது இலங்கைப் பிரச்சினை போன்றது தான். இலங்கையிலும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை உள்ளது. அதேவேளை இந்தியாவின் தேசியப் பாதுகாப்புப் பிரச்சினையும் உள்ளது. இரண்டும் சேர்ந்துதான் பிரச்சினையின் உக்கிரத்தை தீர்மானிக்கின்றது. எவ்வாறு வரலாற்று ரீதியாக புனைவுகள், ஐதீகங்களுடன் இந்திய எதிர்ப்பு சிங்கள மக்களிடம் வேரூன்றி உள்ளதோ அதே போல ரஸ்ய எதிர்ப்பு உக்ரைன் பெரும்பான்மை மக்களிடம் வேரூன்றி உள்ளது.
உக்ரைனில் ரஸ்யாவின் எல்லையை ஒட்டிய கிழக்குப் பகுதியில் ரஸ்ய இனத்தவர்கள் வாழ்கின்றனர். சோவியத் யூனியன் காலத்தில் உக்ரைனில் ரஸ்ய எதிர்ப்பை பலவீனப்படுத்துவதற்காக ரஸ்ய இனத்தைச் சேர்ந்தவர் கிழக்குப் பகுதியில் குடியேற்றப்பட்டனர் என்ற கதைகளும் உண்டு. ரஸ்ய மக்கள் கிழக்குப் பகுதியில் வாழும் இந்த ரஸ்ய இனத்தவர்களுடன் தொப்புள்கொடி உறவுகொண்டவர்கள். ஈழத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் தொப்புள்கொடி உறவு இருப்பது போல. உக்ரைனின் மேற்குப் பகுதியில் உக்ரைன் வம்சா வழியினர் வாழ்கின்றனர். நாடு முழுவதிலும் பெரும்பான்மை அவர்கள்தான். உக்ரைன் தனி நாடாக வந்த காலம் தொடக்கம் கிழக்குப் பகுதியல் ரஸ்ய இனத்தவர்கள் கொடுரமாக ஒடுக்கப்ட்டனர்.  இதற்கு எதிராக ரஸ்ய இன மக்கள் மேற்கொண்ட கிளர்ச்சிகள் கொடுரமாக நசுக்கப்பட்டன. இந் அடக்குமுறைச் செயற்பாட்டில் உக்ரைன் அரசு மட்டுமல்ல அதனுடன் இணைந்து செயற்படும் வலதுசாரிக்குழு ஒன்றும் உள்ளடக்கம். இந்த வலதுசாரிக்குழு இரண்டாம் உலக யுத்த காலத்தில் கிட்லர் ரஸ்யா மீது படையெடுத்த போது கிட்லரின் படையினை வரவேற்ற குழுவாகும்.
கிழக்குப் பிரதேச ரஸ்ய இன மக்களுக்கும் ரஸ்யாவில் வாழும் ரஸ்ய இன மக்களுக்கும் இடையே தொப்புள் கொடி உறவு இருப்பதால் கிழக்குப் பிரதேச மக்களின் அபிலாசைகளை ரஸ்ய ஆட்சியாளர்களினால் இலகுவில் புறக்கணித்துவிட முடியாது. அது ரஸ்யாவின் உள்ளக அரசியலில் பல நெருக்கடிகளை உருவாக்கும்.

தமிழ்நாட்டு மக்களின் ஈழத் தமிழர்கள் தொடர்பான உணர்வுகளை இந்திய மத்திய அரசு புறக்கணிக்க முடியாதோ அது போலத்தான் இதுவும். இந்தியாவில் தமிழ்நாடு ஒரு மாநிலம் மட்டும்தான். இதனால் மத்திய அரசு சற்றுப் பின்வாங்கலாம். ஆனால் ரஸ்யா முழுவதும் ரஸ்ய இனத்தவர்கள் வாழ்வதால் ரஸ்ய ஆட்சியாளர்களினால் பின்வாங்க முடியாது.
இரண்டாவது ரஸ்யாவின் தேசியப் பாதுகாப்புப் பிரச்சினையாகும். சோவியத்யூனியனை பல நாடுகளாக உடைத்ததில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்திற்கும் அதன் பாதுகாப்பு அமைப்பான நேட்டோவிற்கும் பெரும் பங்கு உண்டு. அது தொடர்பான பாரிய அதிர்ப்தி சோவியத் உளவுப் பரிவின் தலைவரான தற்போதைய அதிபர் புடினுக்கு அதிகம் உண்டு. உக்ரைன் ஒரு தனிநாடல்ல என புடின் கூறுவதற்கும் இதுவே காரணம்.
இன்று அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் ரஸ்யாவை துண்டு துண்டாக உடைப்பதில் அக்கறை செலுத்துவதாக வலுவான கருத்து உண்டு. சோவியத் யூனியன் உடைந்தாலும் ரஸ்யா தற்போதும் உலகில் பெரிய நாடுகளில் ஒன்றாகவே உள்ளது. ஐரோப்பா, ஆசியா, என அதற்கு எல்லைகள் உள்ளன. இந்த பெரிய நாடு என்ற நிலைதான் உலக வல்லரசு என்ற நிலைக்கு அதனை உயர்த்தியுள்ளது. இந்த பெரிய நாட்டை பாதுகாக்க வேண்டிய தேசியப் பாதுகாப்புப் பிரச்சினை அதற்கு உண்டு. நேட்டோ அமைப்பு 1949ம் ஆண்டு அமெரிக்கா சார்பு நாடுகளை கம்யூனிச அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் விதிகளின்படி நேட்டோ நாடுகளில் ஒன்றை வேறு நாடுகள் தாக்கினால் ஏனைய நேட்டோ நாடுகள் இணைந்து அதற்கு பதிலடி கொடுக்கலாம். இந்த நேட்டோ அமைப்பில் முன்னைய சோவியத் யூனியனில் இருந்து போன பல நாடுகள் அங்கம் வகின்றன. ஏற்கனவே நேட்டோவிற்கு எதிராக சோவியத் யூனியன் தலைமையில் வார்சோ அமைப்பு 1955 இல் உருவாக்கப்பட்டது. அதில் அங்கம் வகித்த பல நாடுகள் நேட்டோவில் அங்கம் வகிக்கும் நிலை வளர்ந்து தற்போது சோவியத் யூனியனில் அங்கமாக இருந்த நாடுகளும் அங்கத்துவம் வகிக்கும் நிலை தோன்றியுள்ளது.  வார்சேர் என்பது போலந்தின் தலைநகரமாகும். வார்கோ அமைப்பு அங்கு உருவாக்கப்பட்டதனாலேயே அந்தப் பெயர் உருவானது. இன்று போலந்து நேட்டோவில் ஒரு அங்கத்துவ நாடாக உள்ளது.

இந்த நேட்டோ அமைப்பில் உக்ரைனும் இணைவதற்கு முயற்சிக்கின்றது.  அந்த இணைவு இடம்பெற்றால் நேட்டோவின் படைத்தளங்கள் உக்ரைனில் உருவாகலாம். இது ரஸ்யாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது.  ரஸ்யா சந்திக்கும் மிகப்பெரிய நெருக்கடி இதுதான். இது பனிப்போர் காலத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்து இலங்கையில் அமெரிக்க நலன்களுக்கு இடங்கொடுக்க முயற்சித்த நிலையாகும். இந்தியா தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுக்க இதுவே காரணமாகியது. இறுதியில் இந்தியா  யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களைப் போட்டு சிக்னலை வலுவாகக் காட்ட இலங்கை அரசு சாஸ்டாங்கமாக வீழ்ந்து பணிந்தது.
இது விடயத்தில் இலங்கைக்கும் உக்ரைனுக்கும் உள்ள வித்தியாசம் இந்தியா உறுமும் பொது இலங்கை காலடியில் வீழ்ந்தது. மாறாக உக்ரைன் தொடர்ந்து உறுமுகின்றது என்பதே! இலங்கை ஆட்சியாளர்கள் இந்திய தேசியப் பாதுகாப்புக்காக சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்து தமழர்களின் தேசிய இனப் பிரச்சினையை சற்று அடக்கி வைத்தனர். ஒருபோதும் சரணடைய மாட்டாது எனக் கருதிய கோத்தபாய அரசே இன்று இந்தியாவிடம் சரணடையத் தொடங்கியுள்ளது. இலங்கை ஆட்சியாளர்களுக்கு இந்திய எதிர்ப்பின் எல்லை தெரியும். உக்ரைன் ஆட்சியாளர்களுக்கு ரஸ்ய எதிர்ப்பின் எல்லை தெரியவில்லை.
இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவிற்கு சில விட்டுக்கொடுப்புக்களை செய்தாலும், சீனா வலுவாக காலூன்றியுள்ளதாலும் பெரும்தேசியவாதத்திற்கு விட்டுக்கொடுப்புக்களில் ஒரு மட்டுப்பாடு இருப்பதனாலும் விட்டுக்கொடுப்புக்களுக்கும் ஒரு எல்லை உண்டு. இந்த எல்லையுடன் கூடிய விட்டுக்கொடுப்புக்கள்தான் தமிழ் மக்களுக்கு சார்பானது. ஒரு பிராந்திய வல்லரசின் தேசிய பாதுகாப்பு என்பது சில விடடுக்கொடுப்புக்களுடன் மட்டும் திருப்தியடையக் கூடிய ஒன்றல்ல.
தமிழ் மக்கள் தேசிய இனப் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துவதன் மூலமும், இந்திய தேசிய பாதுகாப்பை உயர்த்திப் பிடிப்பதன் மூலமும், புவிசார் அரசியலில் கௌரவமான பங்காளிகளாவதன் மூலமும், வினைத்திறன் மிக்க அடைவுகளை நோக்கி முன்னேற முடியும்.
இதற்கு கத்தியைவிட வித்தைதான் அதிகம் உதவக் கூடியதாக இருக்கும். விவகாரங்களை கறுப்பு வெள்ளையாகப் பார்த்தால் வித்தை மேல் நிலைக்கு வராது. தமிழ்த் தேசிய சக்திகள் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளல் அவசியமானது.

இலங்கைக்கு நிதியுதவி கிடைக்குமா கிடைக்காதா?:முடிவு ஐரோப்பிய நாடுகளின் கைகளில்…!

இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திற்கு கோரிக்கைகள் அடங்கிய யோசனைகளை முன்வைத்தாலும் உடனடியாக நிதியம், நிதியுதவிகளை வழங்காது என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள, நிதியமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் வொஷிங்டனில் அமைந்துள்ள சர்வதேச நாணய நிதியத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.

அப்போது அவர், கோரிக்கைகள் அடங்கிய யோசனைகளை நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்க உள்ளார். எனினும் கோரிக்கைகளை முன்வைத்தாலும் உடனடியாக நாணய நிதியம் நிதியுதவிகளை வழங்காது.

அதற்கு நீண்ட செயற்பாடுகள் இருக்கின்றன. அத்துடன் கடந்து செல்ல வேண்டிய சில தடைகளும் இருக்கின்றன. இதில் முதல் தடை சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பு நாடுகளின் வாக்கெடுப்புக்கு இலங்கை உட்பட வேண்டும் என்பதாகும்.

வாக்கெடுப்பில் இலங்கை குறைந்தது 50 சத வீத வாக்குகளை பெற வேண்டும். இலங்கை 11 உறுப்பு நாடுகளில் வாக்குகளை பெற்றாக வேண்டும்.

தற்போது காணப்படும் சூழ்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பு நாடுகளான சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் வாக்குகளை பெறுவது இலங்கை சிரமமாக இருக்கலாம்.

அதேவேளை பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகள் இலங்கை சம்பந்தமாக எப்படியான பிரதிபலிப்பை வெளியிடும் என்பது சிக்கலுக்குரியது. இந்த நாடுகள் எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு நிதியுதவியை வழங்குவதா இல்லையா என்று தீர்மானிக்கும் எனக் கூறப்படுகிறது.

Posted in Uncategorized

இலங்கை மக்களை ஏமாற்றும் அரசின் மோசமான செயல்! ரகசியங்களை அம்பலப்படுத்தும் பிரமுகர்

இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு எரிபொருள் விலையை உயர்த்துவதற்காக கடந்த சில வாரங்களாக எரிபொருட்களை மறைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

20,000 மெற்றிக் டன் பெற்றோல், 7,000 மெற்றிக் டன் சுப்பர் டீசல், 6,000 மெற்றிக் டன் சுப்பர் பெற்றோலைக் கிடங்குகளில் மறைத்து வைத்து, விலை அதிகரித்ததாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பெற்றோலிய ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

ஒரு கறுப்புச் சந்தை வியாபாரி கூட இவ்வாறான சட்டவிரோத கொடுக்கல் வாங்கலில் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் செலுத்தப்பட்ட 55,000 மெற்றிக் டன் எரிபொருள் இறக்கப்படாமல் கப்பலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் ஆனந்த பாலித சுட்டிக்காட்டினார்.

கூட்டுத்தாபனத்தில் உள்ள கிடங்குகளில் 20,000 மெட்ரிக் டன் பெட்ரோல், 7,000 மெட்ரிக் டன் சூப்பர் டீசல் மற்றும் 6,000 மெட்ரிக் டன் சூப்பர் பெட்ரோல் இருந்ததும் விநியோகிக்கப்படவில்லை.

எரிபொருளுக்கு உண்மையாகவே தட்டுப்பாடு ஏற்படவில்லை. நாட்டிற்கு வந்த எரிபொருளுக்கு பணம் செலுத்தப்பட்டிருந்தது. எனினும் அரசாங்கம் விலை அதிகரிக்கும் வரை விநியோகிக்கப்படவில்லை.

கறுப்புச் ந்தை வியாபாரி கூட இவ்வாறு செய்ய மாட்டார் என மக்கள் சக்தி கட்சியின் பெற்றோலிய ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ரணிலுக்கு முக்கிய பதவியை வழங்க தயாராகும் கோட்டாபய

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொருளாதார சபையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ரணில் விக்கிரமசிங்க பொருளாதார சபையில் இணைத்துக் கொள்ளப்படுவதாக தெரிய வருகிறது.

நாடு எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே இந்த பொருளாதார சபை நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் பொருளாதார சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நிதி அமைச்சின் செயலாளர், ஆளுநர் மற்றும் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ஆகியோர் சபைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

Posted in Uncategorized

கொழும்பு அரசியல் மட்டத்தில் பரபரப்பு – மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கும் செக் வைத்த பசில்

அண்மைக்காலமாக கொழும்பு அரசியல் மட்டத்தில் எதிர்பாராத பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நிதியமைச்சுக்கும் மத்திய வங்கிக்கும் இடையிலான முரண்பாடு காரணமாக புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தவிர்க்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் இடையில் முரண்பாடுகள் வலுவடைந்துள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் மத்திய வங்கி ஆளுநர் தொடர்ந்தும் உள்ளார். இதனால் பசில் ராஜபக்ஷ கடும் சீற்றம் அடைந்துள்ளதாக நிதியமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இரண்டு தலைவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

ராஜதந்திரிகளின் விஜயத்திலும் முரண்பாடு தீவிரம் அடைந்துள்ளது. இலங்கை வரும் அதிகாரிகள், எதிர்வரும் திங்கட்கிழமை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்திக்க உள்ளதுடன், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் எதிர்காலத்தில் கடன் உதவி வழங்குவதற்கான நிபந்தனைகள் அடங்கிய பிரேரணையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிய வருகிறது.

கடன்களை மறுசீரமைக்கும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கை செல்வதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் கடன் மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க பசில் ராஜபக்ஷ தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இதனை மறுத்துள்ள மத்திய வங்கி ஆளுநர், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடவில்லை என தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் ஊடாகவும் நிதியமைச்சுக்கும் மத்திய வங்கிக்கும் இடையிலான முரண்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

பசில் ராஜபக்ஷவுடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவுரை

இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு நுண்பாகப்பொருளாதாரத்தை உரியவாறு மறுசீரமைத்து, முகாமைசெய்வது அவசியம் என்று வலியுறுத்தியுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி, தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைந்துகொள்வதற்கும் இலங்கைக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்சுகு அசகவா இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்ததுடன் அன்றைய தினமே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பின்போது சமூக, நிதி மற்றும் கடன் ரீதியான சவால்களை எதிர்கொள்வதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ந்து வழங்கும் என்று அவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.

மேலும் இலங்கை விஜயம் குறித்துத் கருத்து வெளியிட்டுள்ள அவர் ‘இலங்கைக்கு மீண்டும் வருகைதருவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

நான் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் கிமிமஸா றருமிசுவுடன் கடந்த 1991 ஆம் ஆண்டில் முதன்முறையான இந்த அழகிய நாட்டிற்கு வருகைதந்திருந்தேன். அப்போது நான் அவரது சிரேஷ்ட ஆலோசகராவேன்.

சுமார் 30 வருடங்களின் பின்னர், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் எமது வருடாந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு இலங்கை தயாராகின்றது. அந்தவகையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் என்ற ரீதியில் நான் இப்போது இலங்கை எனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்குச்சென்று அதனைப் பார்வையிட்ட அவர், ‘ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்தக்கூட்டம் இங்குதான் நடைபெறவிருக்கின்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதன்முறையாக பிராந்திய அதிகாரிகள் நேரடியாக இங்கு வருகைதரவிருக்கின்றார்கள்.

அத்தோடு ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தக்கூட்டம் தெற்காசியாவின் நடைபெறும் இரண்டாவது முறை இதுவாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தையடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு நுண்பாகப்பொருளாதாரத்தை உரியவாறு மறுசீரமைத்து, முகாமைசெய்வது அவசியமாகும். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவலைத்தொடரந்து உருவான பல்வேறு சவால்களை உரியவாறு கையாள்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுத்திருக்கின்றது.

பணவீக்கத்திற்கு மத்தியில் நிதி மற்றும் வெளியக இருப்பை சரியான மட்டத்தில் பேணுவதற்கென எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் அதில் உள்ளடங்குகின்றன.

தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைந்துகொள்வதற்கும் இலங்கைக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக இருக்கின்றது என்று அவர் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்தக்கூட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ‘கொவிட்-19 தொற்றுப்பரவலுக்குப் பின்னரான உலகத்தில் காலநிலை மாற்றத்திற்கு இசைவான மீள்தன்மையுடைய பசுமைப்பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பல்’ என்ற தொனிப்பொருளில் இலங்கையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசு ஆபத்தில் இருக்கும்போது அரசை காப்பாற்ற ஜனாதிபதி தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு; வினோ நோகதாரலிங்கம்!

அரசு ஆபத்தில் இருக்கும்போது அரசை காப்பாற்ற ஜனாதிபதி தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமை குழு உறுப்பினருமான வினோநோகதாரலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி எதிர்வரும் 15 ஆம் திகதி தன்னை சந்திக்க வருமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாடு இன்று மிகவும் இக்கட்டான் நிலையில் இருக்கின்றது.

விலைவாசிகள் ஒவ்வொருநாளும் விடிய விடிய ஏறிக்கொண்டே இருக்கின்றது. அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மிக மோசமாக இருக்கின்றது. வரிசை யுகத்தினை மீண்டும் சந்திக்கும் நிலை வந்துகொண்டிருக்கின்றது. எந்த பொருளை வாங்க வேண்டுமாக இருந்தாலும் வரிசையில் நின்றுதான் வாங்க வேண்டியுள்ளது.

எரிபொருளின் விலை வானலாவ உயர்கின்றது. எரிவாயுவுக்கு தட்டுப்பாடு, விலை உயர்வு, சீமெந்தை பெற முடியாதுள்ளது. 2000 ருபா வரைக்கு செல்லும் நிலை உள்ளது. இன்னும் நாட்கள் செல்ல செல்ல ஒவ்வொரு பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி கோத்தபாய தற்போது மிகவும் தடுமாறிக்கொண்டிருக்கின்ற நிலைமை காணப்படுகின்றது. அவர் தலைமையிலான அரசாங்கம் இந்த நாட்டை ஆள முடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கின்றது. அவருக்கு ஆதரவாக வாக்களித்த 69 இலட்சம் மக்களும் அவரை துரத்தியடிக்க வேண்டும் அவர் இந்த நாட்டை ஆள தகுதியற்றவர் என சொல்லும் நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது.

இந்த நாடு வெளிநாடுகளில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கின்றது. இனிமேல் நாங்கள் பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை உள்ளது.

இவ்வாறான நிலையில்தான் நாட்டை ஆட்டம் காண செய்து விட்டு நாட்டை அதாலபாதாழத்திற்குள் தள்ளிவிட்டு தான் தப்புவதற்காக இவ்வளவு காலமும் பேச முடியாத நிலையில் இருந்துகொண்டு ஐ. நா. மனித உரிமை பேரவையில் கேள்வி மேல் கேள்வி எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கும் இந் நிலையில் தன்னையும் இந்த அரசாங்கத்தினையும் தப்ப வைப்பதற்காக எங்களோடு பேச வேண்டும் என்ற வார்த்தை கூறப்பட்டுள்ளது.

Posted in Uncategorized