அனைவரும் அரசியல் கடந்து அணிதிரள அழைப்பு!

இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள்’ எனும் தொனிப்பொருளில் நாளை 4 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் மாபெரும் போராட்டத்துக்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

கரிநாள் போராட்டத்தில் அனைவரையும் பங்குகொள்ளுமாறு யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஏற்பாட்டாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது எமக்கான சுதந்திர தினம் அல்ல எமக்கான நீதி கிடைக்கப் பெறாத இடத்தில் எவ்வாறு சுதந்திரம் கிடைக்கும். பொதுமக்கள் இந்த விடயத்தில் அலட்சியமாக இருக்காது ஒன்று கூடி இந்த கருப்பு நாளை அனுஸ்டிக்க வேண்டும் என வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது.

சிறீலங்காவின் சுதந்திர தினம் என்பதை காலம் காலமாக தமிழர்கள் கரிநாளாக அனுஸ்டித்து வந்துள்ளனர். எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு இன அழிப்பு நடந்த முள்ளிவாய்க்கால் மண்ணிலே எவ்வித அரசியல் பின்னணியும் இன்றி அரசியல் நோக்கங்கள் இல்லாமல் ஒன்றிணைய வேண்டும். எமது இயக்கமும் இதற்கு பூரண ஆதரவை வழங்குகிறது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்க இணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்திருந்தார்.

ஒரே நாட்டிலேயே ஒருபுறம் ஆரவாரம் வெற்றிக்கொண்டாட்டம் மகிழ்ச்சி என்பன காணப்படும் போது இன்னொரு புறத்தில் கவலை வறுமை பொருளாதார பின்னடைவு போன்றன காணப்படுகின்றதெவும் இதனை நாங்கள் இரண்டு நாளாக அனுஸ்டிக்கிறோமென மெதடிஸ்த திருச்சபையின் அருட்திரு றொபேர்ட் சசிகரன் அடிகளார் தெரிவித்தார்.

சிறீலங்கா அரசுக்கு தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக கொடுக்கப்பட்ட அனுமதிப்பத்திரமே சுதந்திர தினமாகும். 1956 சுதந்திர தினத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய திருமலை நடராஜன் படுகொலையோடு உயிர்ப்பலி என்பது ஆரம்பித்துவிட்டது. தமிழ் இன ஒடுக்குமுறைக்கு நூறு வருடங்கள் கடந்துவிட்டது. சுதந்திரத்திற்கு முன்னர் அனுமதிப்பத்திரம் இல்லாமல் எம்மை ஒடுக்கினார்கள் சுதந்திரத்துக்குப் பின்னர் அனுமதிப் பத்திரத்துடன் நம்மை ஒடுக்குகிறார்கள் என சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இணைப்பாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்திருந்தார்;.

அரசியல் கைதிகள் பிரச்சினை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர்பில் சரியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் அடுத்த வருடங்களில் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிக்க வேண்டிய தேவை இருக்காது. நாளைய தினத்தில் தனித்தனித் போராட்டங்களை முன்னெடுக்காமல் முள்ளிவாய்க்காலில் அணிதிரண்டு வலுச்சேர்க்க வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்திருந்தார்.

துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கறுப்பு உடையணிந்து அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதுடன் வாகன ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

இவ் ஊடக சந்திப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க யாழ் மாவட்ட தலைவி சிவபாதம் இளங்கோதை, உபதலைவி நிர்மலநாதன் மேரி ரஞ்சினி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்க இணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான தவத்திரு வேலன் சுவாமிகள்,மெதடிஸ்த திருச்சபையின் அருட்திரு றொபேர்ட் சசிகரன்,சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இணைப்பாளர் சி.அ.யோதிலிங்கம்,

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் ஆகியோர் பங்கேற்றனர்.

சர்வதேச நாணய நிதியத்திடம் ஒத்துழைப்பு கோரும் அரசாங்கம்

நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நேற்று (02) தெரிவித்த கருத்திற்கு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று பதிலளித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நேற்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், இன்று காலை ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டிருந்தார்.

நிதி அமைச்சுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெறுவது வழமையான ஒன்றென அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நிதி அமைச்சர் வௌியிட்ட கருத்து தொடர்பிலானது. இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பிலான சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்வதென்பது நிதி அமைச்சின் நிதி பிரிவின் மேம்பாட்டிற்காக தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் வழமையான செயற்பாடாகும். அதனை விட வேறு ஒன்றும் இல்லை

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் நிதி அமைச்சரும் மத்திய வங்கியின் ஆளுநரும் இவ்வாறு கருத்துத் தெரிவிக்கும் போது, இலங்கை சீமெந்து மற்றும் அரிசி கொள்வனவிற்காக பாகிஸ்தானிடம் கோரியுள்ள 200 மில்லியன் டொலர் கடன் வசதியை அந்நாட்டிற்கு IMF மூலம் கிடைக்கவுள்ள கடனிலிருந்து வழங்குவதற்கு பாகிஸ்தான் தயாராகின்றது.

தேவையற்ற செலவுகளை குறைத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு பாகிஸ்தான் காட்டும் சிறந்த ஆர்வத்தை கருத்திற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு பாகிஸ்தானுக்கு இந்த கடனை வழங்க தயாராகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியம் ஒரு பில்லியன் டொலர் கடனை வழங்கிய பின்னர், இலங்கைக்கு சீமெந்து மற்றும் அரிசி கொள்வனவிற்கு தேவையான 200 மில்லியன் டொலரை வழங்குவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

சுதந்திர தின விழாவை புறக்கணிக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் தெரிவிப்பு!

சுதந்திர தின விழாவை நாளை புறக்கணிக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பொரளை தேவாலய கைக்குண்டு வழக்கு மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் உள்ள குறைபாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்படவுள்ளதாக கொழும்பு பேராயர் தொடர்பு பிரிவு உறுப்பினர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த அவர், சுதந்திர தினத்தன்று வழமையாக மேற்கொள்ளும் சேவையை இரத்து செய்ய கர்தினால் ரஞ்சித் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரத்தில் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ஆதாரம் இருந்தும், தேவாலயத்தின் பாதுகாவலர் ஏன் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து தாங்கள் கலக்கமடைந்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவாலயத்தின் பராமரிப்பாளருக்காக எதிர்பார்க்கப்பட்ட ஏனைய சந்தேகநபர்கள் அனைவரும் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மீனவர் பிரச்சினை – மத்திய அரசுக்கு அழுத்தம் அளித்து நிரந்தரத் தீர்வு காணுங்கள்: முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள், 2 விசைப்படகுகளையும் மீட்க மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தை கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்கெனவே சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படவிருக்கும் சூழ்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் சிறைபிடித்துள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 29-01-2022 அன்று மதியம் அமிர்தலிங்கத்திற்கு சொந்தமான விசைப்படகில் பன்னிரெண்டு பேர் மீன்பிடிக்கச் சென்றதாகவும், 31-01-2022 அன்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பன்னிரெண்டு தமிழக மீனவர்களையும், விசைப்படகையும் இலங்கை மீனவர்கள் சுற்றிவளைத்து தகராறு செய்ததாகவும், இதற்கிடையே அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 12 பேரையும், விசைப்படகையும் சிறைபிடித்து மயிலட்டி துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

இதேபோன்று, புதுச்சேரியைச் சேர்ந்த காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கோட்டுச்சேரி மேட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 31-01-2022 அன்று அதிகாலை ஒன்பது பேர் கோடியக்கரைக்கு தெற்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கும் ஏழுக்கு மேற்பட்ட இலங்கை மீனவர்கள் வந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை சுற்றி வளைத்த நிலையில் அங்கு வந்த இலங்கைப் படையினர் 9 இந்திய மீனவர்களையும் அவர்கள் வந்த விசைப்படகினையும் சிறைபிடித்து காங்கேசன் துறைமுகத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இலங்கை கடற்படையினரின் மேற்படி செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது.

மேற்படி சம்பவங்களில் மட்டும் 21 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் இரண்டு விசைப் படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டதையடுத்து, அனைவரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை வருகிற 7ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்தாலும், தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவதும் மீனவர்கள் மத்தியில் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, அவர்களுடைய வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு விடுமோ என்ற மிகப் பெரிய கவலையும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடரக்கூடாது என்பதோடு, மத்திய அரசின் உதவியோடு இதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் கலந்து பேசி இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மீனவ மக்களிடையே தற்போது நிலவுகிறது.

எனவே, முதல்வர் இது குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசித்து, தேவையான அழுத்தத்தை அளித்து, இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 21 இந்திய மீனவர்களையும், இரண்டு விசைப்படகுகளையும் விரைந்து விடுவிக்கவும் நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்கு சிங்கள மக்கள் முன்வரவேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்கு சிங்கள் மக்கள் முன்வரவேண்டும் என வவுனியாவில் கடந்த 1812 வது நாளாக தொடர்போராட்டம் மேற்கொண்டுவரும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் இன்று(வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்கள், “பயங்கரவாதச் சட்டத்தை நீக்குவதற்கு ஜிஎஸ்பி பிளஸைப் பயன்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தி ஒரு கடிதம் அனுப்பியுள்ளோம். எமது பிள்ளைகள் இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதற்கு தற்போதைய பயங்கரவாதச் சட்டமே பிரதான காரணமாகும்.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளின் தாய்மார்களாகிய நாங்கள் பணத்தையோ இறப்புச் சான்றிதழையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதை நீதி அமைச்சரிடம் கூற விரும்புகிறோம். எங்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதி வேண்டும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மட்டுமே நீதி மற்றும் பொறுப்புக்கூறலை எமக்கு வழங்க முடியும்.

இதேவேளை சிங்களமக்களின் சுதந்திர தினத்தை நாம் எதிர்க்க விரும்பவில்லை. தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்கு சிங்களமக்கள் முன்வரவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

ஒடுக்குமுறையில் இருந்து சுதந்திரத்தை அனுபவிக்கும் விடயத்தை அவர்கள் தமிழர்களுக்கும் வழங்கவேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளும் தமது உறவுகளுடன் மகிழ்வுடன் வாழ்வதை அவர்கள் அங்கிகரிக்கவேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க வேண்டும் – ஞானசார

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக ஒரே நாடு-ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வெலிகட சிறைச்சாலையில் இருந்த வேளையில் விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சிறைக்கைதிகள் என்னுடன் சுமுகமான முறையில் பழகினார்கள். அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த துயரங்களை பரிமாற்றிக் கொண்டார்கள்.

யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் யுத்த சூழலை தொடர்ந்து மீட்டுவது நடைமுறைக்கு பொருத்தமற்றதாக அமையாது. ஆகவே சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது சிறையில் உள்ளவர்களின் உறவினர்கள் அவர்களை விடுவிக்குமாறு தாழ்மையுடன் வலியுறுத்தினார்கள்.

விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தியபோது அவர் ‘அதனை செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டார்.

74 ஆவது தேசிய சுதந்திர தினத்தின்போது விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் கூறினார்.

Posted in Uncategorized

சுதந்திரதினம் கறுப்பு தினமே- மாபெரும் போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழ்மக்கள் கறுப்பு தினமாகவே அனுஸ்டிக்கவுள்ளோம். இதனையடுத்து எதிர்வரும் நான்காம் திகதி காலை 10 மணியளவில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் மற்றும் வடகிழக்கு சிவில் சமூகங்களின் ஏற்பாட்டில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட இருக்கின்றது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அனுஸ்டித்து நடைபெறவுள்ள போராட்டத்தில் இளைஞர் யுவதிகள், பல்கலைகழக மாணவர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள், தனியார் பேருந்துசங்கங்கள், தமிழ்த்தேசியத்தின் பால் செயற்பட்டு வருகின்ற கட்சிகள், மதகுருமார்கள் என அனைத்து உறவுகளும் கலந்து கொண்டு எமக்கான ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழினத்திற்கான சுதந்திரம் கிடைக்காத நிலையிலேயே நாம் இதுவரை போராடி கொண்டிருக்கின்றோம். நாம் எமது உரிமையை இழந்திருக்கின்றோம், உறவுகளை இழந்திருக்கின்றோம். எனினும் உணர்வுகளை இழக்ககூடாது. தமிழனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இது தலயாய கடமை என்பதை புரிந்துகொண்டு குறித்த போராட்டத்தில் ஒன்றிணைந்து கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம். நாம் அனைவரும் ஒருமித்து குரல்கொடுத்தாலேயே எமது உரிமையையும் சுதந்திரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு உளரீதியான ஆலோசனைகளை வழங்க தயாராக இருப்பதாக நீதி அமைச்சர் அண்மையில் தெரிவித்தார். நாங்கள் நன்றாகத்தான் இருக்கிறோம். எமக்கு மன உளைச்சல் இல்லை. எமது உறவுகள் கிடைக்கும்வரை நாம் சோர்ந்துபோய் ஒடுங்கிவிடமாட்டோம்.

எனவே எமது உறவுகளை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக்கொள்கிறோம். எமக்கான நீதி கிடைக்கும்வரை நாம் உறுதியாக நின்று போராடுவோம்” என்றனர்.

Posted in Uncategorized

போர் நடைபெற்ற போது ஐ.நா தமிழ் மக்களை காப்பாற்றும் என நம்பினோம்- ஐநா பிரதிநிதியிடம் மணிவண்ணன் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐநாவுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருக்கும் மாநகர முதல்வர் வி மணிவண்ணனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மற்றும் உயர் அதிகாரிகளுடன் மாநகர முதல்வர் பி. மணிவண்ணன் மற்றும் மாநகர ஆணையாளர் இ. த.ஜெயசீலன் ஆகியோர் பங்குபற்றினர்.

இக்கலந்துரையாடலில் ஐநாவுக்கான வதிவிடப் பிரதிநிதியிடம் மாநகர முதல்வர் பின்வரும் கருத்துக்களை ஆணித்தரமாக தெரிவித்தார்.

“கொடிய யுத்தம் நடைபெற்ற காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை போரை நிறுத்தும் எமது மக்களை காப்பாற்றும் என்று நாம் பெரும் நம்பிகை கொண்டிருந்தோம். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. 150,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர். இந் நிலையில் போருக்கும் பிற்பாடும் ஐநா தொடர்ந்தும் தவறு இழைத்து வருகின்றது.

யுத்ததத்தில் போர்குற்றம் புரிந்ததாகக் கூறப்படுகின்ற படை அதிகாரிகள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப் படுகின்றனர். அவர்கள் தமிழ் இனத்தின் மீது மேற்கொண்டதாக கூறப்படும் படுகொலைகள் தொடர்பில் நீதி விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை.

இனப்படுகொலை எனபது சர்வதேச குற்றம் அதை யாரும் ஒரு நாட்டின் உள்ளகரீதியான பிரச்சனை என்று கைவிட்டு விடமுடியாது. யுத்தம் முடிவடைந்த பின்னரும் எங்களுடைய பொருளாதாரவளம், கல்வி பண்பாடுகள் கலாச்சாரம் போன்ற எங்களுடைய அடிப்படைகள் அழிக்கப்படுகின்றன.

2ஆம் உலக யுத்தத்திற்கு பின்னர் ஐக்கிய நாடுகள் சபை ஏன் உருவாக்கப்பட்டது எனில் நாடுகளைப் பாதுகாப்தற்கு அல்ல. அந்த நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக. அந்த நியாயப்பாட்டை அதன் முக்கியத்துவத்தை ஐ.நா முன்னெடுக்க வேண்டும்.

இறுதியுத்தம் தொடர்பான மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மட்டுமல்ல கடந்த காலங்களில் எமக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து குற்றங்கள் தொடர்பிலும் கரிசனை செலுத்துவதோடு அதற்கான தீர்வையும் எமக்கு பெற்றுத் தரவேண்டும்.

தற்போதும் எங்களுடைய காணிகள் அபகரிக்கப்படுகின்றன. வலி வடக்கு பகுதியில் பல நூற்றுக்காணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இராணுவம் கடற்படை விமானப்படை என தங்களுடைய படைத்தேவைகளுக்காக அபரிக்கப்படுகின்றன. அந்த காணி உரிமையளார்கள் இடைத்தங்கல் முகாங்களில் அகதி வாழ்க்கை வாழ்கின்றனா். எமது பொருளாதரம் என்பது இரண்டு விடயங்களில் தங்கியுள்ளன.

ஒன்று விவசாயம் மற்றது மீன்படி. இன்று எமது விவசாய காணிகள் பலவற்றை இராணுவம் தமது தேவைகளுக்காக பயன்படுத்துகின்றது. இதனால் எமது பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. மீன்பிடி என்பது அரச இயந்திரத்தையும் தாண்டி தற்போது இந்திய மீனவர்களின் அத்து மீறலால் எங்களுடைய மீன்வர்கள் பெரும் துன்பம் அடைகின்றார்கள். அவர்களது வலைகள் அறுக்கப்படுகின்றன படகுகள் அழிக்கப்படுகின்றன. இவ்வாறு பல விடயங்களில் திட்டமிட்டு எமது பொருளாதாரம் அழிக்கப்படுகின்றது.

இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ் மண்டபம் அமைப்பதற்கு முன்னர் இலங்கை அரசாங்கமும் இந்தியா அரசாங்கமும் கலாசார மண்டபத்தினை அமைத்து அதனை யாழ்.மாநகர சபையிடம் கையளிப்பது என்று ஒப்பந்தம் செய்தது. ஆனால் இக் கட்டிடம் அமைக்கப்பட்ட பின்னர் தற்போது இது யாழ்.மாநகர சபைக்குத் தரமுடியாது மத்திய அரசாங்கத்திடம் தரவேண்டும் என்று அழுத்தங்கள் பிரயோகிக்கப் படுகின்றன. இதன் காரணமாக கட்டி முடிக்கப்பட்டு ஒன்றரை வருடத்திற்கு மேல் அது திறக்கப்படாமல் உள்ளது என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறப்படுகின்றது. எப்படி அது சாத்தியம் இங்கு தமிழர்கள் சிங்களவர் முஸ்லீம் மலையகத் தமிழர் என்று பல இன மக்கள் வாழ்கின்றார்கள். அவர்களுக்கு என்று ஒரு வரலாறுப் பண்பாட்டு பாரம்பரியங்கள் உள்ளன. அவர்களின் வரலாற்றில் இருந்து தான் சட்டங்கள் இயற்றப் படவேண்டுமே ஒழிய பெரும்பான்மை இனத்தின் வரலாற்றைக் கொண்டு சட்டங்களை இயற்றிக் கொண்டு அதனை ஏனைய இனங்கள் மீது திணிக்கின்ற நிலைமை இங்கு காணப்படுகின்றது.

எமது அரசியில் அபிலாசைகளை நாம் பெற்றுக் கொள்வது தொடர்பில் நீங்கள் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்ளுகின்றேன். ஆனால் நீங்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் போதாது. அரசியல் கைதிகள் சிறைகளில் பல்லாண்டு காலமாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். காணாமல் போன உறவுகள் நீதி வேண்டி போராடுகின்றார்கள்.

அவ்வாறு இருக்கையில் நீங்கள் விடுகின்ற வெறும் அறிக்கைகள் அல்லது தீர்மானங்கள் எங்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வுகளைத் தராது. அறிக்கைகள் ஆறுதல் அளிக்காது.

கூடிய விரைவில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது விசேட குற்றவியல் நீதிமன்றத்தின் மூலமாக எமது பிரச்சனைகளுக்கான நிரந்த தீர்வுகள் எட்டப்படும் என்பதில் எமது தமிழ் அரசியல் தலைவர்களும் மக்களும் விரும்புகின்றார்கள். நான் உங்களிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கின்றேன்.

ஒன்று எமது இனத்தின் மீது காலாகாலம் மேற்கொள்ளபட்ட இன அழிப்புகளுக்கு சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கிடைக்கப்பெற வேண்டும். சுயநிர்ணய உரிமை அங்கீகிக்கப்பட்ட எமக்கான அரசியல் தீர்வை பெற ஐநா உதவ வேண்டும். இரண்டாவது திட்டமிட்டு அழிக்கப்படுகின்ற பொருளாதார கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்கு எமது மக்களுக்கான வாழ்வியலை மேம்படுத்தவும் உதவ வேண்டும்” என்றார்.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஏறாவூர் நீதிமன்றத்தில் பிணை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படத்தை முகநூலில் பகிர்ந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நான்கு இளைஞர்கள் ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பை சேர்ந்த சந்தேக நபர்கள் 2020 நவம்பர் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் முகப் புத்தகத்தினூடாக பிரபாகரனின் படத்தைப் பகிர்ந்ததன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்தினை மீளுருவாக்கம் செய்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

இவர்கள் சார்பில் கொழும்பில் உள்ள மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் இதற்கென சமீபத்தில் நிறுவப்பட்ட ஆலோசனைக் குழுவின் முன்னால் சமர்ப்பித்து இவர்களின் விடுதலையைக் கோரியது.

இம்மனுக்களை பரிசீலித்ததன் பின்னர் ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழுவானது மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட நூறுக்கும் அதிகமான மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலரை விடுதலை செய்வதற்கு அல்லது பிணையில் விடுவிப்பதற்கு தீர்மானித்திருந்தது. இதன் விளைவாக சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் திணைக்களத்திற்கும் பலவிதமான பணிப்புரைகளை விடுத்திருந்தது.

இதன் பிரகாரம் நேற்று இவ்வழக்கு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அளிக்கப்பட்ட அறிவுரைக்கமைய ஏறாவூர் நீதவான் நீதிமன்ற நீதவான் சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

சுமார் 13 மாதங்களின் பின்னர் சட்ட மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய சந்தேகநபர்கள் நால்வரும் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என சந்தேகநபர்களுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பல வருடங்களாக வடக்கு மீனவர்களுக்கு ஏற்படும் அவலம்! க.வி.விக்னேஸ்வரன்

பல வருடங்களாகவே எமது கடற்தொழிலாளர்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

எமது எல்லைக்குள் எல்லை தாண்டிய இந்திய இழுவைப்படகுகள் இவர்களது வாழ்வாதாரத்தை முற்றாக அழித்து வருகின்றன. எமது மீன் வளங்களை இல்லாது ஒழிக்கும் நடவடிக்கையாகவே இவை அமைந்துள்ளன. முன்னர் இந்தியக் கடல் எல்லைக்குள் இருந்த இடங்களில் கடல் வளங்கள் பலவற்றையும் இல்லாமல் ஆக்கியவர்களே இப்போது இழுவைப் படகுகள் மூலம் எமது வளங்களையும் சூறையாடி வருகின்றார்கள்.

இவ்வாறு தொடர்ந்தால் அது எமது மீனவர்களையே வெகுவாகப் பாதிக்கும். ஆனால் இதே நேரத்தில் வன்முறையில் ஈடுபடுவோர் யார், எதற்காக அவ்வாறு ஈடுபடுகின்றார்கள் என்பதை நாம் ஆராய்ந்து அறிய வேண்டும். மூன்றாந் தரப்பாரின் உள்ளீடுகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதோ என்பதையும் நாம் ஆராய வேண்டும்.

எமது கடற்தொழிலாளர்களின் வலைகள், படகுகள் போன்ற உபகரணங்கள் சேதமாக்கப்பட்டு எம்மவர்களின் வாழ்வாதாரமே அழிக்கப்பட்டு வருகின்றது. இந்நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டே வருவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இவை போதாதென்று எம்மவர்களின் உயிரிழப்புக்களும் தாங்கொண்ணாத விதமாக அதிகரித்து வருகின்றன. நான் முதலமைச்சராக இருந்த போது டெல்லியிலிருந்து இங்கு வந்த உயர் அதிகாரியுடன் இது பற்றி கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட போது நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தோம்.

இந்தியா – இலங்கை மத்தியில் இருக்கும் கடலில் இழுவைப் படகுகள் பாவிக்கப்படக் கூடாது என்றும் அவை யாவும் வங்காள விரிகுடா மற்றும் அரேபியக் கடலில் சென்று பல நாட்கள் இருந்து மீன் பிடித்து வர ஆவன செய்ய வேண்டும் என்றும் ஆழ் கடலுக்குச் செல்லும் இழுவைப் படகுகள் அதற்கேற்றவாறு இரு அரசாங்கங்களினாலும் மாற்றி அமைக்க உதவப்பட வேண்டும் என்றும் முடிவெடுத்தோம்.

ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எமது அரசாங்கம் இனிமேலும் பராமுகமாக இருக்காது எமது கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கத்திற்கு உறைக்கும் விதமாக ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எமது அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளனர்.