மகாத்மா காந்தியின் 74 ஆவது நினைவு தினம் யாழில் நினைவுகூரல்

மகாத்மா காந்தியின் 74 ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது.

அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலை முன்றலில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை அமைந்துள்ள இடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது காந்தியின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் அதிகாரபூர்வ வெளியீடான காந்தீயம் பத்திரிகை பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரனால் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் இந்திய துணைத்தூதரக பதில் தூதர் ராம் மகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், சி.வி.விக்னேஸ்வரன், மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், கஜதீபன், மாநகர ஆணையாளர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

பலாலி விமான நிலையம் அரசியலிற்காக மூடப்படவில்லை – ஜீ.எல்.பீரிஸ்

பலாலி சர்வதேச விமான நிலையம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா நிலை காரணமாகவே மூடப்பட்டுள்ளது தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களுக்குமாக  மூடப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்ட கொரோனாசூழ்நிலை காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டிருந்தன  யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. அதே போல தற்பொழுது ஏனைய சில விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல பலாலி விமான நிலையம் திறக்கப்படும்.  தற்போது பலாலி விமான நிலையத்தில் சில திருத்த வேலைகள் செய்ய வேண்டி உள்ளது குறிப்பாக ஓடுபாதை விரிவுபடுத்த வேண்டி உள்ளது.

மேலும் பல விமான சேவைகளுக்கான அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் காரணமாக சற்று தாமதநிலை காணப்படுகின்றது எனினும் அந்த வேலைகள் முடிந்த பின்னர் விரைவாக பலாலி விமான நிலையம் திறக்கப்படும்.

இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் ஏதாவது நீங்கள் பேச நினைக்கிறீர்களா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது,

அது ஒரு நீண்டகாலப் பிரச்சினை இரண்டு நாட்டு அரசாங்கங்களும் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினை எனவே வந்த பிரச்சினை தொடர்பில் இரண்டு நாட்டு பிரதிநிதிகளும் பேசி ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் அந்த பிரச்சினையை இனியும் நீண்ட காலத்திற்கு இழுத்துச் செல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.

மாகாண சபை ஒழிக்கப்படாது – நீதி அமைச்சர்

புதிய அரசியல் யாப்பில் மாகாண சபை முறமை முற்றாக ஒழுக்கப்படுவதாக கூறப்படும் செய்தியில் எந்தவிதமான ஒரு உண்மையும் கிடையாது என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

வடக்கின் 5 மாவட்டங்களிலும் இடம்பெற்ற நீதிச் சேவை ஆணைக்குழுவின் நடமாடும் சேவை தொடர்பில் இன்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்புல் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் நீதி அமைச்சர் மேலும் விபரம் தெரிவிக்கையில்,

பெதிய அரசியல் யாப்பை தயாரிக்க ஓர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இன்னமும் அறிக்கை தயாரித்து முடிக்கவே இல்லை. அவ்வாறு தயாரிக்கும் யாப்பை நானோ அல்லது ஜனாதிபதியோ இதுவரை பார்க்கவெம் இல்லை.

குழப்பகரணான  ஒர் செய்தி. அதேநேரம் மாகாண சபை முறமை தொடரும் யாப்பில் திருத்தங்களே ஏற்படும் என்றார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்கள்: சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியானது!

இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாத தடைச் சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இந்த வர்த்மானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்களின் அடிப்படையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விதிகளின் கீழ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியும்.

அத்துடன், சட்டத்தரணி ஒருவருக்கு தடுப்புக்காவல் அல்லது விளக்கமறியலில் தடுத்து வைத்திருக்கும் நபரை பார்வையிட செல்லமுடியும் என்பதுடன், சந்தேகநபரின் உறவினர்களுடன் தொடர்புகொள்ள முடியும்.

இந்தத் திருத்தங்கள், தடுப்புக்காவல் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒருவரைத் தடுத்து வைக்கும் காலத்தை 18 மாதங்களில் இருந்து 12 மாதங்களாகக் குறைக்கவும் வழிவகை செய்கின்றன.

அத்துடன், குறித்த திருத்தங்கள் ஊடாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரின் நிலை குறித்து ஆராய்வதற்கு நீதவானுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது.

மேலும், சந்தேகநபரை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தி, அவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கும் இதன் மூலம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சீனாவின் முகவர்களா? – கோவிந்தன் கருணாகரம்

நாங்கள் இந்தியாவின் முகவர்கள் எனச் சித்தரிக்கின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அப்போ நீங்கள் யாரது முகவர்கள்? நீங்கள் சீனாவின் முகவர்களா?

சீனா எதிர்பார்ப்பதைத்தானே நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்கின்றீர்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்க செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கண்ணகி அம்மன் ஆலய வீதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் இன்று(29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கிலே தற்போது அரசியல் பேசும் பொருளாக 13வது திருத்தச் சட்டமும் இந்திய இலங்கை ஒப்பந்தமும் மிகவும் நடைபெற்றிருக்கின்றது.

அந்த வகையில் 13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக அமுல்படுத்த வேண்டும். அமுல்படுத்திய 13 திருத்த சட்டத்தின் ஊடாக மாகாணசபை தேர்தலை விரைவாக வைக்கவேண்டும் எனத் தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள ஒரு கட்சியைத் தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் வேண்டிநிற்கின்றனர்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக இந்த 13வது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்று நேற்று யாழ்ப்பாணத்தில் கூடித் தெரிவித்தன. ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 13வது திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.

இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் 1987 யூலை 29 ம் திகதி கைச்சாத்திடப்பட்டுக் கொண்டுவரப்பட்டது. இது வெறுமனவே தமிழர்கள் மீது உள்ள அக்கறை மூலமாகக் கொண்டுவரப்பட்டது அல்ல.

பல தியாகங்கள், உயிரிழப்பு, பல போராட்டங்கள், பல அழிவுகளின் பின்பு அந்த போராட்ட தியாகத்தின் அடிப்படையில் தான் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இன்று நாங்கள் இருக்கும் நிலையைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நாங்கள் அனைவரும் விரும்பியே விரும்பாமலே ஏற்றுக் கொண்டிருந்தோம்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் வந்த 13வது திருத்தச் சட்டம் போராட்டத்தில் ஈடுபட்டு எமது உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடிய எமக்கு ஒரு இறுதி தீர்வாக நாங்கள் எந்த இடத்திலும் எவரிடமும் நாங்கள் கூறவில்லை.

தமிழ் ஈழம் வேண்டும் என போராடியவர்கள் எனவே 13வது திருத்தச் சட்டம் மூலம் வந்த மாகாணசபை முறைமையை நாங்கள் இறுதி தீர்வாக எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.

தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆழக்கூடிய சுயநிர்ணயம் கூடிய தாயத்தை நாங்கள் ஆழக்கூடிய ஒரு சமஷ்டி முறையிலான தீர்வு தான் எமக்கான அறுதி தீர்வாகும்.

2009 ஆம் ஆண்டு ஆயுத போராட்டம் மௌனிக்கப்படும் வரை தமிழ் ஈழம் இந்த மலரும், அந்தா மலரும் என்ற ஒரு நிலைப்பாட்டில் நாங்கள் இருந்தோம்.

அந்த காலகட்டத்தில் இலங்கை இந்த ஒப்பந்தத்தை விட இன்னும் தமிழர்களுக்கு உரிமைகளைக் கொடுக்கக் கூடிய ஒரு சில ஒப்பந்தங்கள் வந்திருந்தும் கூட நாங்கள் தனிநாட்டை எதிர்பார்த்து அவைகளைக் கூட நிராகரித்தோம்.

ஆனால் 2009 மே 18க்கு பின்பு தமிழ் மக்கள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றோம் எனச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். தற்போது வடக்கு கிழக்கு நலத் தொடர்பை நிரந்தரமாகப் பிரிக்கப் பேரினவாத அரசு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றதுடன் வடக்கு கிழக்கில் எமது குடிப்பரம்பலை குறைப்பதற்காக எல்லைப்புறம் ஊடாக பெரும்பான்மை மக்களைக் குடியேற்றிவருகின்றார்.

13வது திருத்தச் சட்டத்துக்கு ஊடாக வழங்கப்பட்ட அதிகாரங்கள் அமுல்படுத்தப்படாமல் இருக்கின்றது, அமுல்படுத்தப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டிருக்கின்றது. புதிய அரசியல் அமைப்பு 3 மாதத்தில் வரவிருக்கின்றது.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச வந்த பின்பு உரையாற்றும் அனைத்தும் இந்த நாடு ஒரு பௌத்த நாடு அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பேன் என்கின்ற ரீதியில் பேசிவருகின்றார்.

எனவே புதிய அரசியல் அமைப்பில் எங்களுக்கான தீர்வு வரும் என எதிர்பார்க்கவில்லை . தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எங்களை இந்தியாவின் முகவர்கள் எனச் சித்தரிக்கின்றனர். அப்போ நீங்கள் யாரது முகவர்கள்? நீங்கள் சீனாவின் முகவர்களா? சீனா எதிர்பார்ப்பதைத்தானே நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்கின்றீர்கள்.

கோட்டாபயவை எதிர்த்து சஜித் பிரேமதாஸ் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். அதற்கு முன்பு மகிந்த ராஜபக்சவை எதிர்த்து மைத்திரி பால சிறிசேன போட்டியிட்டார்.

இந்த ராஜபக்ச சகோதரர்கள் தமிழ் மக்களுக்குச் செய்த அட்டூழியங்கள் அநியாயங்கள் அழிப்புக்களை எதிர்த்து அவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று அவர்களுக்கு எதிராகத் தமிழ்த் தேசிய பரப்பிலே உள்ள அனைத்து கட்சிகளும், அனைத்து மக்களும் வீறு கொண்டு எழுந்தபோது தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு நீங்கள் கூறுகின்றீர்கள்.

அப்படியென்றால் நீங்கள் மறைமுகமாக யாருக்கு உதவி செய்ய நினைக்கின்றீர்கள்? இன்று சீனா யாழ்ப்பாண கரையோரத்திலிருந்து இந்தியா எவ்வளவு தூரம் என்று கேட்கும் அளவிற்கு வந்திருக்கின்றது. இந்த நிலையில் நீங்கள் அதை எதிர்க்கவில்லை.

சீனாவைப் பொறுத்தமட்டில் எந்தவொரு விடுதலைப் போராட்டத்திற்குமே மனித உரிமைகள் மீறல்களுக்கும் எதிராகவே குரல்கொடுத்த வரலாறு இல்லை. எனவே நாங்கள் எக்காரணம் கொண்டும் சீனாவை ஆதரிக்க முடியாது.

எமக்கு இருக்கும் அண்டை நாடான இந்தியாவுக்கும் தமிழ் மக்களுக்கும் மாத்திரம் அல்ல. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்டகால தொடர்புகள் உண்டு.

தற்போது இலங்கை பொருளாதார ரீதியாக அதலபாதாளத்தில் இருக்கின்ற நிலையில் இந்தியா உதவி செய்துவருகின்றது. 1971 ம் ஆண்டு ஜே வி பி கிளர்ச்சியின் போது இந்தியா இலங்கைக்கு உதவி செய்தது.

அதேபோன்று விடுதலைப் போராட்டத்துக்கு எந்தளவு உதவி செய்ததோ அந்தளவுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு 2009 இலங்கை அரசுக்கு இந்தியா உதவி செய்தது. அதற்குப் பின்பு வடக்கு கிழக்கிலே பல அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவி செய்தது. மலையகத்தில் ஆயிரக்கணக்கான வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது.

தற்போது இலங்கை பொருளாதாரத்திலிருந்து மீட்பதற்குப் பல உதவிகளைச் செய்துவருகின்றது. எனவே இந்த நேரத்தில் நாங்கள் இந்தியர் பயன்படுத்த வேண்டும் ஏன் என்றால் அவர்களுக்குக் கடமையுண்டு.

13 திருத்தச் சட்டம் முற்று முழுதாக அமுல்படுத்தப்படுமாக இருந்தால் நாங்கள் இருப்பையாவது காப்பாற்றிக் கொள்ளலாம் என்பது தான் எங்களது நிலைப்பாடு.

இதைவிடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 13 திருத்தச் சட்டம் வேண்டாம் ஆனால் அதற்கு ஊடாக அதிகாரமற்ற மாகாணசபை தேர்தல் வந்தால் கூட போட்டியிடுவோம் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருக்கின்றனர்.

எனவே தமிழ் மக்கள் எதற்காக போராடினமே அந்த இலக்கை அடையவில்லை. இருந்தும் சமஷ்டியைப் பெறுவதற்கா நாங்கள் போராடுவோம். அதுவரை எமக்கு எமது இருப்பை காப்பாற்றுவதற்கு முழு அதிகார பரவலுடன் 13வது திருத்தச் சட்டம் வேண்டும்.

எனவே 13 திருத்தச் சட்டம் ஊடக தமிழ் மக்களின் இருப்பை கூட இல்லாமல் செய்ய அதற்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாடத்தினை உண்மையான தமிழ்த் தேசியத்தை விரும்பும் தமிழ் மக்கள் அதனை எதிர்க்கவேண்டும் அவர்களை விரட்டியடிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை மீதான தடை அமெரிக்காவுடன் ஆராயும் பிரித்தானியா

இலங்கை படை அதிகாரிகள் மீதான தடை குறித்து அமெரிக்காவுடனும், ஏனைய நாடுகளுடனும் தாம் கலந்துரையாடல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி திணைக்கள அமைச்சர் அமந்தா மிலிங் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றின்போது, இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியான ஜெனரல் சவீந்திர சில்வா மீது அமெரிக்கா கொண்டுவந்தது போல தடையை கொண்டுவர பிரித்தானியா அரசுக்கு என்ன ஆதாரங்கள் தேவை என பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபன் மக்டொனா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எல்லா ஆதாரங்களையும், தகவல்களையும் பிரித்தானியா அரசு சேகரித்து வைத்துள்ளது. பிரித்தானியாவின் அனைத்துல மனித உரிமை ஆய்வுக்குழு அதனை ஆய்வுக்குட்படுத்தியுள்ளது.

எதிர்கால தடை குறித்து நாம் எதிர்வுகூறுவதில்லை அது எமது நடவடிக்கைகளை பாதிக்கும் என அமந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கும் சுகாதாரத் துறையினர் ஒவ்வொருவரும் போராளிகளே – ஜனா

கொவிட் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கும் சுகாதாரத் துறையினர் ஒவ்வொருவரும் போராளிகளே. மக்களைத் தொற்றிலிருந்து பாதுக்காக வேண்டும் என்பதற்காக எத்தனையோ வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கின்றார்கள். அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா)தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற கொவிட் தடுப்பூசி திட்டத்தின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகலாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தி கொவிட் 19 தொற்றானது இலங்கைத் தீவையும் விட்டுவைக்கவில்லை. என்னைப் பொறுத்தமட்டில் விடுதலைப் போராட்டத்தில் இருந்து அரசியலுக்குள் வந்தவன் என்ற ரீதியில் இந்த கொவிட் தொற்றுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் சுகாதாத் துறையினரை நான் விடுதலைப் போராளிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன்.
ஒரு போராட்டத்தில் போராளியொருவர் தாக்குதலுக்குச் செல்லும் போது பல நாட்கள் நித்திரையிழந்து, பட்டினி கிடந்து, தன்னைச் சார்ந்த சமூகத்திற்காக உயிரைக் கூட தியாகம் செய்ய வேண்டும். அந்த வழியிலே சுகாதாத் துறையினர் உண்மையிலேயே தங்களை அர்ப்பணித்து வீடுகளுக்கும் செல்லாமல் வேலை செய்யும் இடங்களிலேயே தங்கி நமது மக்களுக்கான சேவைகள் செய்தவர்கள். அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

இந்த மக்களைத் தொற்றிலிருந்து பாதுக்காக வேண்டும் என்பதற்காக எத்தனையோ வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கின்றார்கள். அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களிலே இருந்த பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் மயுரன் உட்பட அவரது உத்தியோகத்தர்கள், போதனா வைத்தியாசலை உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், உள்ளுராட்சி மன்றங்கள், பொலிஸார், இராணுவத்தினர், அரச அதிகாரிகள் போன்றோர் இணைந்து இந்தக் கொவிட் தொற்றுக்கு எதிராகப் போராடியிருக்கின்றார்கள்.

கொவிட் முதலாவது அலையில் மட்டக்களப்பு மாவட்டம் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. இரண்டாவது அலையிலேயே கூடுதலாகப் பாதிக்கப்பட்டது. இலங்கையில் கொவிட் முதலாவது தடுப்பூசி கடந்த வருடம் இதேநாள் ஏற்றப்பட்டிருந்தாலும் அதற்குப் பின்னர் இரண்டாம் கட்டமாக ஊசிகள் ஏற்றப்பட்டத்தில் ஏற்பட்ட காலதாமதம் தான் இரண்டாவது அலையிலே நாங்கள் கூடுதலாகப் பாதிக்கப்பட்டிருந்தோம்.

குறைகள் கூறுவதென்றால் கூறிக்கொண்டே போகலாம். ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல. ஆனாலும் பல கோமாளித் தனங்களும் கொரோனாவையொட்டி இந்த நாட்டிலே நடந்ததை நாங்கள் அறிவோம். வெத மாத்தையா என்பதும், முட்டியை ஆற்றில் விட்டது போன்ற கோமாளித் தனங்களும் இங்கு நடந்துதான் இருக்கின்றது.

இந்த நாட்டின் அரச இயந்திரம் முதலாவது பகுதி தடுப்பூசி இந்தியாவில் இருந்து வந்ததன் பின்பு இரண்டாம் கட்டத்தை காலம் தாழ்த்தாமல் முன்னமே எடுத்திருந்தால் இரண்டாவது அலையின் தாக்கத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

இருந்தாலும் பல நாடுகள் இலங்கைக்கு உதவி செய்ததன் காரணமாக இன்று ஓரளவிற்கு இந்தத் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முடிந்திருக்கின்றது. அந்த வகையிலே அனைத்து தரப்பினரயும் நான் பாராட்டுகின்றேன்.

தற்போது ஒமிக்றோன் பரவலில் மட்டக்களப்பு மாவட்டமும் திகழுவதாகத் தகவல்கள் அறியக் கிடைத்துள்ளன. தற்போது கல்முனையில் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயற்பட்ட வைத்தியர் சுகுணன் இங்கு பதவியேற்றுள்ளார். அந்த அடிப்படையில் அவரின் தலைமையில் இந்த ஒமிக்குறோன் பரவலையும் சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. மக்கள் பிரதிநிதியாக எங்களால் முடிந்த உதவிகளை நாங்கள் செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்லாது முழு இலங்கையிலும் இளம் சமுதாயத்தினர் குறிப்பாக வெளிநாட்டு மோகத்துடன் இருப்பவர்கள் இந்த தடுப்பூசி பெறுவதற்குக் கொஞ்சம் தயக்கம் காட்டுகின்றார்கள். குறிப்பாக சினோபாம் பெறுவதற்கே தயங்குகின்றார்கள். இவர்களுக்கு ஒரு செய்தியைக் கூறியே ஆக வேண்டும்.

பல நாடுகளுக்கும் நாங்கள் விஜயம் செய்திருக்கின்றோம். குறிப்பிட்ட ஓரிரு நாடுகளைத் தவிர ஏனைய நாடுகள் எந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதைக் கேட்பதில்லை. இரண்டு தடுப்பூசிகளும் இட்ட அட்டை இருக்குமாக இருந்தால் நீங்கள் எந்த நாட்டுக்கும் பிரயாணம் செய்யலாம் என்பதைக் கருத்திற்கொண்டு எமது சமுதாயத்தைக் காப்பாற்றுவதற்கு அனைவரும் முன்வந்து இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் இந்தத் தடுப்பூசியொன்று தான் கொவிட் தொற்றில் இருந்து எங்களைக் காப்பாற்றும் என்பதில் உலக நாடுகள் அனைத்தும் உறுதியாக இருக்கின்றது.

இரண்டாவது அலையில் இலங்கையின் சனத்தெகையில் இறந்தவர்களின் எண்ணிக்கை விகிதத்தில் இந்தியாவை விட அதிகமானது. ஏனெனில் நாங்கள் அந்த நேரத்தில் தடுப்பூசி இட்டுக் கொண்டது குறைவாக இருந்திருக்கின்றது. தற்போது போதுமான அளவிற்கு தடுப்பூசி இருக்கின்ற காரணத்தினால் அனைவரும் தடுப்பூசி இடவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

சட்ட மறுசீரமைப்புக்கான உள்ளகப்பொறிமுறைகள் குறித்து அரசாங்கத்தை வலியுறுத்தும் ஐ. நா.

சட்ட மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கக்கூடிய அரசாங்கம், அதனை முன்னிறுத்திய உள்ளகப்பொறிமுறைகள் சர்வதேச நியமங்களையும் கடப்பாடுகளையும் பூர்த்திசெய்யும் வகையில் அமைந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி, அதிலுள்ள குறைபாடுகளை அடையாளங்காண்பதற்கு விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று வியாழக்கிழமை விளக்கமளித்திருந்தார்.

இதன்போது மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்கு இலங்கை தயாராக இருப்பதாகக் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின்போது தான் அளித்த வாக்குறுதியை மீண்டும் நினைவுகூர்ந்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பொறுப்புக்கூறல், சட்ட மறுசீரமைப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு உள்நாட்டு நிறுவனங்களின் ஊடாக இலங்கை அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

வெளிவிவகார அமைச்சருடனான இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டியும் பங்கேற்றிருந்த நிலையில், நிலைமாறுகால நீதியை உறுதிப்படுத்தல், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைதல் மற்றும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல் ஆகிய விடயங்களில் அவற்றுடன் தொடர்புடைய உள்நாட்டுக்கட்டமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு அவர் தனது பாராட்டை வெளிப்படுத்தினார்.

அதேவேளை சட்ட மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கக்கூடிய அரசாங்கம், அதனை முன்னிறுத்திய உள்ளகப்பொறிமுறைகள் சர்வதேச தரநியமங்களையும் கடப்பாடுகளையும் பூர்த்திசெய்யும் வகையில் அமைந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியமாகும் என்றும் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் வலியுறுத்தியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே ஹனா சிங்கர் ஹம்டி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

சட்டத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் சட்ட அமுலாக்கத்தினால் ஏற்படுத்தப்படும் மாற்றங்களுடன் சமாந்தரமாகப் பயணிப்பதாக அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ள அவர், இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அவற்றிலுள்ள குறைபாடுகளை அடையாளங்காண்பதற்கும் தீர்வுகளைக் கண்டறிவதற்கும் விரிவான கலந்துரையாடல்களும் ஆராய்வும் இன்றியமையாததாகும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போர்க்குற்றங்களில் ஈடுப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகத் தடைவிதியுங்கள் – 9 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாகக் கோரிக்கை

இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக அவுஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா, தென்னாபிரிக்கா, சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் தடைவிதிக்கவேண்டும் என்று அந்தந்த நாடுகளைத் தளமாகக்கொண்டியங்கும் 9 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இலங்கை அரசாங்கங்களினால் திட்டமிட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைகளால் புலம்பெயர் தமிழர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் இழந்திருக்கின்றார்கள்.

அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறி, வெளிநாடுகளில் வசித்துவருகின்றார்கள்.

அவர்கள் திட்டமிட்ட இனப்படுகொலையினால் ஏற்பட்ட வடுக்களிலிருந்து மீள்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும் கடுமையாகப் போராடிவருகின்றார்கள் என்றும் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகத் தாம் வசிக்கும் நாடுகளின் அரசாங்கங்கள் தடைவிதிக்கவேண்டும் என்று வலியுறுத்தி அவுஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ், பிரித்தானிய தமிழர் பேரவை, அயர்லாந்து தமிழர் பேரவை, பிரான்ஸை தளமாகக்கொண்டியங்கும் மைசன் டு தமிழ் ஈழம், கனேடியத்தமிழர்களின் தேசிய பேரவை, தென்னாபிரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் சமாதானம் மற்றும் நீதிக்கான ஒருமைப்பாட்டுக்குழு, சுவிஸ் தமிழ் செயற்பாட்டுக்குழு, இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் இயக்கம் மற்றும் ஐக்கிய அமெரிக்க தமிழர் செயற்பாட்டுக்குழு ஆகிய 9 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது,

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய ஒரு மில்லியனுக்கும் அதிகமான தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்களான நாம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் திரட்டப்பட்ட நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகத் தடைவிதிக்கவேண்டும் என்று நாங்கள் வாழக்கூடிய நாடுகளின் அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான மிகமோசமான மீறல்கள் தொடர்பில் நம்பத்தகுந்த வகையில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கக்கூடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரே தற்போது இலங்கை அரசாங்கத்திற்குத் தலைமைதாங்குகின்றனர்.

தமிழ்மக்களுக்கு எதிரான தீவிர பிரசாரம் மற்றும் தமது கட்டளையின்கீழ் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்களைப் பாதுகாப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி என்பவற்றின் ஊடாகவே அவர்கள் ஆட்சியதிகாரத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

இலங்கையில் ஆட்பீடமேறும் ஒவ்வொரு அரசாங்கங்களும் இதனையே தொடர்ந்து செய்கின்றன. அந்தவகையில் தற்போதைய அரசாங்கம் வெளிநாடுகளின் இராஜதந்திர அழுத்தங்களைக் குறைத்துக்கொள்ளும் நோக்கில் அரசநிர்வாகம் மற்றும் இராஜதந்திர ரீதியில் முக்கியமான பதவிகளுக்கு முன்னாள் இராணுவ அதிகாரிகளை நியமித்துவருகின்றது.

இலங்கை அரசாங்கங்களினால் திட்டமிட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைகளால் புலம்பெயர் தமிழர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் இழந்திருக்கின்றார்கள்.

அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறி, வெளிநாடுகளில் வசித்துவருகின்றார்கள். அவர்கள் திட்டமிட்ட இனப்படுகொலையினால் ஏற்பட்ட வடுக்களிலிருந்து மீள்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும் கடுமையாகப் போராடிவருகின்றார்கள்.

போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட சில இராணுவ அதிகாரிகள் தமது நாட்டிற்குள் நுழைவதற்கு பிரேஸில், கனடா, ஐக்கிய அமெரிக்க, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகள் தடைவிதித்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக அண்மையில் இலங்கையின் இரு இராணுவ அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் தடைவிதித்தது.

ஆகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையில் நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் மிகமோசமான மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நபர்களுக்கு எதிராகத் தடைவிதிக்குமாறு நாம் வசிக்கும் நாடுகளின் அரசாங்கங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்று அவ்வறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குக் கட்டளை பிறப்பிக்கும் அதிகாரத்திலும் பொறுப்பிலும் இருந்தவர்கள் என்ற அடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜெனரல் சரத்பொன்சேகா, ஜெனரல் சவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் சத்யப்ரிய லியனகே, ஜெனரல் கமால் குணரத்ன, மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உள்ளடங்கலாக 18 பேரின் பெயர்களையும் மேற்குறிப்பிட்ட புலம்பெயர் அமைப்புக்கள் தமது அறிக்கையில் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும்: G.L.பீரிஸ்

தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் என வௌிவிவகார அமைச்சர் G.L.பீரிஸ் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் தற்போது துரித திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் இரண்டு பகுதிகளாக பிரித்து, முழுமையாக ஆராய்ந்து புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் G.L.பீரிஸ் குறிப்பிட்டார்.

அதற்காக குழுவொன்றை நியமித்து, பொறுப்புகளை ஒப்படைத்துள்ளதாகவும் 1979 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.