மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இணைத்தது சீனா

இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மீறி கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமையால் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இணைப்பதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக செயலகத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானத்திற்கு அமைய, இலங்கையுடனான சர்வதேச கொடுக்கல் வாங்கலின் போது மக்கள் வங்கியினால் வெளியிடப்படும் கடன் சான்று பத்திரத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கையுடனான நிர்வாகத்தை முன்னெடுக்குமாறும் அனைத்து சீன முதலீட்டாளர்களுக்கும் அறிவிப்பதாகவும் சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

உரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இரு தரப்பினரிடையே ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டிற்கு அமைய வெளியிடப்பட்ட கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்துமாறு சீனாவின் சிந்தாவோ சீவிங் பயோடெக் நிறுவனம் மக்கள் வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

வர்த்தக சட்ட திட்டங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக கொள்கைக்கு அமைய மக்கள் வங்கி செயற்படாது கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமையால் சீன நிறுவனத்திற்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், சீன நிறுவனத்திடம் இருந்து அனுப்பப்பட்ட இரண்டு உர மாதிரிகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் பக்டீரியாக்கள் காணப்பட்ட காரணத்தினால் அந்த உரத்தை கொள்வனவு செய்யாதிருப்பதற்கு இலங்கை தற்போது தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் உர நிறுவனங்கள் இரண்டு, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குறித்த சீன நிறுவனத்திற்கான கடன் சான்று பத்திரத்திற்குரிய நிதியை செலுத்துவதைத் தடுத்து தற்போது இடைக்கால தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக, இளைஞர் ஆய்வு வெளியீடு

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் செயற்திட்டத்தில் திருகோணமலை மாவட்ட இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட சமூக ஆய்வுப் பணயத்தில் இளையோர் பங்குபற்றுதலின் பிரதிபலிப்புக்கள் என்ற தலைப்பிலான ஊடக சந்திப்பு திருகோணமலை மாவட்ட விழுது ஆற்றல் மேம்பாட்டு மைய அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது இளைஞர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அறிக்கை வெளியிடப்பட்டது.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் ,போதைப்பொருள் பாவனையும் இளையோர் சமுதாயமும் , தமிழ் மக்களும் மொழி உரிமையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தேவைப்பாடு அதன் பிரயோக நிலையும் என்ற தலைப்புக்களிலான ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்டது.

மூதூர்- மல்லிகைத்தீவு கிராமத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களை மாதிரியாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி பின்வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை தொடர்பாக இவ்வாறு தெரிவித்தார்கள்

2009 யுத்தத்தின் போதும், அதற்கு முன்னரும் வடக்கு கிழக்கில் அதிகளவானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

ஆட்சி மாற்றங்கள் காலத்திற்கு காலம் இடம்பெற்ற போதிலும் கூட எந்த விதமான தீர்வினையும் பெற்றுக் கொடுக்க வில்லை. இவ்வாறு ஆண்டுகள் கடந்து செல்கின்றதே தவிர மக்களுக்கு எவ்விதமான தீர்வினையும் பெற்றுக் கொடுக்கவில்லை.

நீதிக்கான பரிந்துரைகள்

1.சகலவிதமான நியாமற்ற கைதுகளும் சித்திரவதைக்கு உட்படுத்தலையும் கைது செய்யப்பட்டபோது நிகழ்ந்த உயிர் இழப்புக்களுக்காவும் விசாரனைகள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

2.காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக நடைபெறும் விசாரணைகள், கொழும்பு மேல் நீதிமன்ற விசாரனைகளில் இருந்து விடுபட்டு மாவட்ட நீதிமன்ற விசாரனைகளின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

3.தொழில் மற்றும் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் வேண்டும்.
நினைவு கூறுதலுக்கான பரிந்துரைகள்

4.காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களிடம் மறைந்து இருக்க கூடிய ஆளுமை தன்னம்பிக்கை, துணிவு, மனவுறுதி என்பவற்றை வெளிக்கொணர்வதன் மூலமாக பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், என்பவற்றை நடாத்தி, சமூகத்தில் அவர்களையும் எழுச்சி பெறச் செய்ய வேண்டிய பொறுப்பு அரசு , அரச சார்பற்ற நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என இளைஞர்களின் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பிரிட்டனின் வெளியுறவு செயலாளர், இலங்கையின் மனித உரிமைகள் குறித்து குறிப்பிடாதது அசாதாரணமானது- கெரெத் தோமஸ்

பிரிட்டனின் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரூஸ், இலங்கையின் வெளியுறவு அமைச்சரிடம் மனித உரிமைகள் குறித்து கலந்துரையாடாதது அசாதாரணமானது என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் கெரெத் தோமஸ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பிரிட்டனின் வெளியுறவு வெயலாளர் லிஸ் ட்ரூஸ் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

குறித்த சந்திப்பு தொடர்பாக லிஸ் ட்ரூஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “மனித உரிமைகள், போர்க்குற்றங்கள் மற்றும் தண்டனையின்மைக் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவது” பற்றி கலந்துரையாடப்பட்டவை குறித்து குறிப்பிடப்படவில்லை என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் கெரெத் தோமஸ் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இலங்கையுடன் வலுவான தொடர்புடைய பிரிட்டன் வாழ் மக்கள் வெளியுறவு செயலாளரிடம் இருந்து இதனைவிட சிறந்ததை எதிர்பார்ப்பதாக கெரெத் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

லண்டன் வருகின்ற கோட்டாபயவை கைது செய்ய வேண்டும்- வைகோ அறிக்கை

லண்டன் செல்லும் கோட்டாபய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை செய்த கொடியவர்கள் மகிந்த ராஜபக்சே, கோட்டாபய ராஜபக்சே மற்றும் இலங்கைப் படைத்தலைவர்கள் கமால் குணரட்ன, ஜகத் ஜெயசூரியா, சிசிர மெண்டிஸ் மற்றும் பல அதிகாரிகளைக் கைது செய்து, உலக நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, மறுமலர்ச்சி தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள, ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் 36 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்றபோது, அந்தக் கருத்தை வலியுறுத்தினேன், இந்திய நாடாளுமன்றத்திலும் பேசி இருக்கின்றேன்.

2009 ஆம் ஆண்டு, இறுதிக்கட்டப் போரில் மட்டும், 1 இலட்சத்து 37 ஆயிரம் ஈழத்தமிழர்கள் பேர் படுகொலை செய்யப்பட்டதாக, ஐ.நா. மன்றம் அமைத்த மார்சுகி தாருஸ்மன், ஸ்டீவன் ராட்னர், யாஸ்மின் சூகா ஆகிய மூவர் குழு அளித்த ஆய்வு அறிக்கை, ஆவணச் சான்றுகளுடன் குற்றம் சாட்டி இருக்கின்றது.

ஆனால், 12 ஆண்டுகள் கடந்தபின்னரும், இன்றுவரையிலும், இனப்படுகொலையாளர்கள் மீது எந்த நடவடிக்கையையும், உலக நாடுகள் மேற்கொள்ளவில்லை. இலங்கையிலும் அத்தகைய நீதி விசாரணை எதுவும் நடைபெறவில்லை. இது தமிழ் இனத்திற்கு எதிரான அநீதி ஆகும்.

படுகொலை செய்யப்பட்டவர்கள் தவிர, பல்லாயிரக்கணக்கில் காணாமல் போன ஈழத்தமிழ் இளைஞர்களின் நிலை என்ன? அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? என்பதும் தெரியவில்லை.

சுமார் 8 இலட்சம் தமிழர்கள், இலங்கையில் இருந்து வெளியேறி, உலகின் பல நாடுகளில் அடைக்கலம் பெற்று இருக்கின்றார்கள். அவர்களுள் பல்லாயிரக்கணக்கானவர்கள், இலங்கைக்கு வந்து போவதற்கும் இலங்கை அரசு தடை விதித்து இருக்கின்றது. தவிர, ஆட் கடத்தல், சட்டத்திற்கு எதிராக தடுத்து வைத்தல், சித்திரவதைகள், வலுக்கட்டாயமாக நாடு கடத்தல் போன்ற குற்றங்களையும், இலங்கையின் சிங்கள இனவாத அரசு, தொடர்ந்து செய்து வருகின்றது. இவை எல்லாம், மனித உரிமைகளுக்கு எதிரான குற்றம்.

மியான்மர் நாட்டில், ரோகிங்யா முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்த வழக்கை, உலக நீதிமன்றம் (International Court of Criminal Justice) விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு இருக்கின்றது.

அதுபோல, இலங்கையில் பாதிக்கப்பட்ட 200 தமிழர்கள் சார்பாக, Global Rights Compliance LLP (GRC) என்ற சட்ட அமைப்பு, ரோமச் சட்டத்தின் 15 ஆவது சரத்தின் கீழ் (Article 7 of the Ro Roman Statute) பன்னாட்டுக் குற்ற இயல் நீதிமன்றத்தின் வழக்கு நடத்துபவரின் கவனத்திற்கு, பிரச்சினையைக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், பிரித்தானியாவில் கிளாஸ்கோ நகரில், ஐ.நா.மன்றத்தின் சார்பில், இந்த ஆண்டு காலநிலை மாற்ற மாநாடு (COP26) நடைபெற இருக்கின்றது. அந்த மாநாட்டில், கோட்டாபய இராஜபக்சே கலந்து கொள்ள இருப்பதாகத் தெரிகின்றது.

அக்கொடியவனின் வருகையை எதிர்த்துக் களம் காண, புலம் பெயர் நாடுகளில் வாழுகின்ற ஈழத்தமிழர்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்கள்.

இனக்கொலை செய்த பல நாடுகளின் ஆட்சியாளர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணையின் முடிவில் தண்டனை பெற்று இருக்கின்றார்கள். இரண்டாம் உலகப் போரின்போது, 3500 யூதர்கள் படுகொலையில் தொடர்பு உடைய, 100 வயதான நாஜி அதிகாரி மீது, ஜெர்மனி நாட்டின் நீதிமன்றத்தில் கடந்த மாதம் விசாரணை தொடங்கி இருக்கின்றது.

அதுபோல, மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களை இழைத்த கோட்டாபய இராஜபக்சேவைக் கைது செய்து, குற்றக்கூண்டில் நிறுத்த வேண்டும் என, ஈழத்தமிழ் அமைப்புகள் கோரிக்கை பிரித்தானிய அரசின் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தக் கோரிக்கையை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்கின்றது. இந்தத் கருத்தை வலியுறுத்தி, ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சிகளுக்கு நேர்காணல் அளித்துள்ளேன்.

ஐரோப்பியக் கண்டத்தின் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் ஒருங்கிணைந்து, கோத்தபாயவுக்கு எதிரான அறப்போரில் களம் காண வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மிக மோசமான இனவாதியின் தலைமையில் ஒரு செயலணி

மிக மோசமான இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லச் சொன்னால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதும், அவர்களுக்கு எதுவுமே இல்லாமல் செய்வதுதான் இவர்களது நோக்கமா என ஈபிஆர்எல்எப் இன் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பினார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு நாடு ஒரு சட்டம் என்பது தொடர்பாக ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை போன்ற பல மொழிகள் பல மதங்கள் பல கலாச்சாரங்கள் கொண்ட வேறுபட்ட இனங்கள் வாழக்கூடிய நாட்டிலே பல்வேறு விதமான சட்ட திட்டங்கள் இருப்பது என்பது இயல்பானது. உலகத்திலும் பல்வேறுபட்ட சட்டங்கள் இருக்கின்றது. அமெரிக்காவின் சில மாநிலங்களில் மரண தண்டனை சட்டம் இருக்கின்றது சில மாநிலங்களில் இல்லை.

இலங்கையிலும் கூட யாழ்ப்பாண தேசவழமைச் சட்டம், கண்டியச் சட்டம், ஷரியாத் சட்டமென ஒவ்வொரு சட்டங்கள் காணப்படுகின்றது. இது இன்று நேற்றல்ல. நீண்டகாலமாக வழிவழியாக வந்த சட்டங்களே அவை. அது இன்றுவரை நடைமுறையில் இருக்கின்றது.

இவ்வாறான சூழ்நிலை தான் ஜனாதிபதியினால் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதன் அடிப்படையிலேயே இலங்கையினுடைய மிக மோசமான இனவாதி எனக் கூறப்படும் ஞானசார தேரரின் தலைமையில் ஒரு செயலணி உருவாக்கப்பட்டிருக்கிறது.

பர்மாவில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் கொலைசெய்யப்பட்ட பொழுது அதற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டவர். இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத கருத்துக்களை தொடர்ச்சியாக பேசிக் கொள்ளக் கூடியவர். முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணியில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்தவர். நீதிமன்றத்தின் கட்டளைகளை ஏற்க மறுத்ததன் காரணமாக அவரை நீதிமன்றம் தண்டித்து சிறை தண்டனை வழங்கி இருந்தது.அதன் பின்பு பொதுமன்னிப்பில் விடுதலையானார்.

இவ்வாறான ஒருவரது தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்று பேசுகின்ற பொழுது கேலியாகவும் சிரிப்புக்கிடமாகவே காணப்படுகின்றது. இந்த நாடு எத்தனை முன்னெடுத்துச் செல்கின்றது என்பது பெரிய கேள்வியாக இருக்கின்றது.

மிக மோசமான இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லச் சொன்னால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதும், அவர்களுக்கு எதுவுமே இல்லாமல் செய்வதுதான் இவர்களது நோக்கமா என்கின்ற கேள்வி எழுகின்றது.

ஒரே நாடு ஒரே சட்டம் மாகாண சபைகளை இல்லாமல் செய்கின்ற, மாகாண சபைகளுக்கு சட்டமியற்றும் உரிமையை இல்லாமல் செய்கின்ற அடிப்படையில் இவ்வாறான ஒரு புதிய முயற்சியை உருவாக்குகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

ஜனாதிபதி பதவிக்கு வந்தபொழுது சிங்கள பௌத்தத்தை பாதுகாப்பதே எனது கடமை என்றார். சிங்கள பௌத்தத்தை பாதுகாத்தல் என்பது வேறு தமிழ் முஸ்லிம் இனங்களை, அவர்களது கலாச்சாரங்களை, சட்டதிட்டங்களை, நடைமுறைகளை இல்லாமல் செய்வதென்பது வேறு.

அரசாங்கம் இப்பொழுது எடுக்கக்கூடிய முயற்சி என்பது தேசிய இனங்களான வடகிழக்கு தமிழர்களாக இருக்கலாம் முஸ்லிம்களாக இருக்கலாம் மலையகத் தமிழர்களாக இருக்கலாம் அவர்களுக்கான பண்பாடு கலாசாரம் என்பதை இல்லாமல் செய்து இது சிங்கள பௌத்த நாடு என்ற அடிப்படையில் இந்த சட்டங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனவா என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் எழுந்திருக்கின்றது.

இவ்வாறான செயலணியில் தமிழர்கள் இல்லை என்று பலரும் கூறுகின்றனர். இவ்வாறு நியமிக்கப்படுபவர்களின் நோக்கம் என்ன? அரசாங்கத்தின் சொல்லுக்கு தலையாட்டுபவர்களே? இதிலே முஸ்லீம்கள் நியமிக்கப்பட்டு இருந்தாலும்கூட முஸ்லிம்களுக்கு இதனால் உபகாரங்கள் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. தங்களுக்கு தலையாட்ட கூடிய சிலரை நியமித்து எதனையும் சாதிக்க போவது கிடையாது.

இது கண்டிக்கப்பட வேண்டியதுடன் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இது வெறுமனே தமிழ் முஸ்லிம்கள் மாத்திரமல்ல சிங்களத் தரப்பில் இருக்கக்கூடிய எதிர்க்கட்சி கூட செயற்படவேண்டும். ஏனைய இனங்களுக்கு இருக்கக்கூடிய அடிப்படை உரிமைகளை மறுதலித்து ஒரு ஜனநாயக விரோத செயற்பாடாக தான் இந்த செயலணி உருவாக்கம் இருக்கின்றது என்பதை நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

’இன மோதல்களுக்கு அரசாங்கம் தூபமிடுகிறது’ – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராக சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் நியமிக்கப்பட்டிருப்பதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இந்த நியமனத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது, எவருக்குமே அறவே புரியாத, எந்தவிதமான தெளிவுமற்ற ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற விவகாரம் பற்றி பல்லின சமூகத்தவர் வாழும் இலங்கை நாட்டில் மக்கள் மத்தியிலும் பொது வெளியிலும் தாறுமாறான கருத்துக்கள் பரவலாக நிலவிவருகின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான நோக்கம் ஆட்சிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டதா?  முஸ்லிம்களையும், அல்லாஹ்வையும் பகிரங்கமாகவே நிந்தித்து வருபவரும், பொதுவாக பௌத்தம் தவிர்ந்த ஏனைய சமயங்கள் மீது பகிரங்கமாகத் தமது வெறுப்புணர்வை கொட்டித் தீர்த்து வரும் ஞானசார தேரரை தலைவராக நியமித்திருப்பது நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்ற இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தலை மேலும் மோசமான நிலைமைக்கே  இட்டுச்செல்லும் எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இச்செயல்பாடானது நாட்டில் அமைதியின்மை தொடர்வதற்கும் இனங்களுக்கிடையிலான மோதல்கள் அடிக்கடி நிகழ்வதற்கும் தூபமிடும் செயலாகவே அமைந்துள்ளதாகதாகவும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இன விகிதாசாரத்தை மாற்றி அமைக்கும் செயற்பாட்டுக்கு எதிராக கண்டனம்

வவுனியா வடக்கில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் செயற்பாட்டுக்கு எதிராக எதிர்வரும் வெள்ளிக் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

மதவாச்சியில் உள்ள 1330 சிங்கள குடும்பங்களை வவுனியா வடக்கு பிரிவில் இணைத்து இன விகிதாசரத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனி தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் நிலத்தையும், இருப்பையும் காக்க தமிழ் மக்களை இவ் ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிணையுமாறும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய உட்பட பலர் மீது சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!

ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் போன்றனவற்றைப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறிலங்காவின் அரச தலைவர் கோட்டாபாய ராஜபக்ச உட்பட பல இராணுவ உயரதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court (ICC) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Global Rights Compliance LLP (GRC) என்ற சட்டவல்லுனர் அமைப்பு இந்த வழக்கைத் தாக்கல் செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த முக்கியஸ்தர்களை புலனாய்வு செய்து, உரிய நேரத்தில் கைதுசெய்து, குற்றவிசாரணை செய்யவேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் தற்போதைய அதிபரும் முன்னாள் பாதுகாப்புச் செயலருமான கோட்டாபய ராஜபக்ச, சிறிலங்காவின் தற்போதைய பாதுகாப்புச் செயலரும் சிறிலங்கா இராணுவத்தின் (SLA) முன்னாள் இராணுவ அதிகாரியுமான கமல் குணரட்ண, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜகத் ஜெயசூரியா, சிறிலங்கா பொலிஸின் குற்ற விசாரணைப் பிரிவு (CID) மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவுகளின் (TID) பிரதிப் பொலிஸ்மா அதிபர் சிசிர மென்டிஸ் உட்பட 2002ம் ஆண்டு முதல் சிறிலங்கா காவல்துறையின் (SLP) பொலிஸ்மா அதிபர்களாகப் பதவி வகித்து வந்தவர்கள் மற்றும் 2002ம் ஆண்டு முதல் சிறிலங்கா காவல்துறையின் விசேட அதிரடிப்படைப்பிரிவின் (STF) கட்டளை அதிகாரிகளாக செயற்பட்டவர்கள் போன்றோர்களின் பெயர்களும் அந்த மனுவில் இடம்பெற்றுள்ளன.

சிறிலங்காவிலும் பிரித்தானியாவிலும் வாழும் ஏராளமான பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் ஆகிய செயற்பாடுகள் ஊடாக வலுக்கட்டாயமாக நாடுகடத்தல், தாயகத்திற்கு திரும்பிச் செல்வதற்கான உரிமையினை மறுதலித்தல், துன்புறுத்துதல் ஆகிய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் பொறுப்பாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான ‘வெள்ளை வான் கடத்தல்கள்’ உட்பட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிவதில் ஈடுபட்டுள்ளதற்கான ஆதாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக, இந்த வழக்கினைத் தாக்கல் செய்த புலம்பெயர் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட 200 இலங்கைத் தமிழர்கள் சார்பாக Global Rights Compliance LLP (GRC)என்ற சட்டவல்லுனர் அமைப்பினால் ரோமச் சட்டத்தின் 15ஆவது சரத்தின் (Article 7 of the Rome Statute) கீழ் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கு நடத்துபவருக்கு இத்தொடர்பாடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

இராணுவ வீரராக இருந்தவருக்கு விவசாயிகளின் நிலை புரியாது – நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம்  

இராணுவ வீரராக இருந்த ஜனாதிபதி அவர்களுக்கு விவசாயிகளின் நிலைமை புரியாது. எனவே அரசானது தனது பிடிவாதத்தை கைவிட்டு கொள்கைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம்    தெரிவித்தார்.

இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினி வேண்டி மன்னார் மாவட்டத்தின் 174 கமநல சேவை விவசாய அமைப்புக்கள் ஒன்றிணைந்து மன்னார் விவசாய சம்மேளனத்தின் தலைமையில் உயிலங்குளம் பகுதியில் கடந்த மாபெரும் கவனயீர்ப்பு போரட்டம் ஒன்றை கடந்த ஜதிங்கள் கிழமை (25.10.2021) மேற்கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போதுமன்னார் மாவட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு இரசாயன உரம் மற்றும் கிருமி நாசினி வேண்டி போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்களுடைய போராட்டத்தில் நாங்களும் இவர்களுடன் முழுமையாக இணைந்துள்ளோம்.

இப்பிரச்சனை மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமல்ல இந்த நாடு முழுவதும் இவ் பாரிய பிரச்சனையாக இருக்கின்றது.

விவசாயிகளை கைவிட்டால் இந்த நாடு பெரியதொரு வறுமைக்கு தள்ளப்பட்டு விடும்.அரசானது இந்த உரப் பிரச்சனையை விட்டுக்கொடுக்காத நிலையில் அவர்கள் தன்னிச்சையான செயல்பாட்டில் இருந்து வருகின்றனர்.

ஒரு இராணுவ வீரனாக இருந்தவருக்கு விவசாயத்தின் அருமை தெரியாத நிலையே இங்கு காணப்படுகின்றது.ஆகவே அரசானது உரத்தை இறக்குமதி செய்து விவசாயிகளின் போராட்டத்தை நிறுத்துவதற்கான செயல்பாட்டில் இறங்க வேண்டும் என்பதை இந்த நேரத்தில் அரசுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

மன்னார் மாவட்டத்திலுள்ள விவசாய நிலம் சேதன பசளைக்கு இடம்கொடுக்காத நிலை காணப்படுவதால் திடீரென சேதன பசளைக்கு இங்குள்ள நிலத்தை மாற்றுவது ஒரு கடினமான செயல்பாடாகும்.

ஆகவே விவசாயிகள் இவ் நிலத்தை சேதன பசளைக்கு ஏற்ப இவ் நிலத்தை பக்குவப்டுத்தும் வரைக்கும் விவசாயிகளுக்கு இரசாயன பசளையை இந்த நேரத்தில் வழங்க வேண்டு;ம் என நாம் இங்கு கோரி நிற்கின்றோம் என இவ்வாறு தெரிவித்தார்.

Posted in Uncategorized

சீன டெலிகொம் நிறுவனத்தின் அனுமதி இரத்து செய்தது அமெரிக்கா

சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் அனுமதியை தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தை சுட்டிக்காட்டி அமெரிக்கா இரத்து செய்துள்ளது.

எனவே சீனா டெலிகொம் என்ற அந்த சீன தொலைத்தொடர்பு நிறுவனம் அமெரிக்காவில் சேவை வழங்குவதை 60 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் அமெரிக்க தொலைத்தொடர்புகள் குறித்த தகவல்களை சீன அரசு சேமிக்க, இடைமறிக்க, திசை திருப்ப உதவியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் அமெரிக்காவுக்கு எதிராக உளவு பார்க்கும் சதி மற்றும் பிற தீங்கான நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் அமெரிக்காவில் கடந்த 20 வருடங்களாக தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வந்த அந்த நிறுவனம் அமெரிக்காவின் இந்த முடிவு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளது.

110 நாடுகளில் நூற்றுக்கணக்கான மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள குறித்த நிறுவனம், இணைய வசதி முதல் மொபைல் மற்றும் தொலைபேசி நெட்வொர்க் சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.