உயர் பதவிகளில் தமிழர்கள்; மீண்டும் பொறாமைகொள்ளும் சிங்களம்- ரெலோ செயலாளர் ஜனா எம்.பி

தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பிரதம செயலாளர்களாக சிங்கள அதிகாரிகள் இருக்க இயலுமென்றால் மத்திய அரசாங்கத்திலே பணிப்பாளர் நாயகங்களாக தமிழ் பேசும் அதிகாரிகள் ஏன் இருக்க முடியாது? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
 அண்மையில் பொதுச் சேவை ஆணைக்குழுவினால் பணிப்பாளர் நாயகங்களாகப் பதவி உயர் வழங்கப்பட்டிருந்த அதிகாரிகளில் சிங்கள அதிகாரிகள் தவிர்ந்து ஏனைய தமிழ் அதிகாரிகள் குறித்த அவர்களின் பதவிகளைப் பொறுப்பேற்பதற்கு அமைச்சுக்களின் செயலாளர்களால் அனுமதிக்கப்படாமை தொடர்பில் இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் பணிப்பாளர் நாயகங்களாகப் பதவி உயர்வு பெற்ற தமிழ் பேசும் அதிகாரிகள் சிங்கள மொழி மூலம் தான் நிருவாகம் செய்ய வேண்டும் என்ற காரணம் காட்டி அமைச்சுக்களின் செயலாளர்களால் பதவிகளைப் பொறுப்பேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலே கடந்த காலங்களில் தமிழ் பேசும் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்பட்டதன் நிமித்தம் இந்த நாடு முப்பது வருடங்களுக்கு மேலாக ஒரு உள்நாட்டுப் போரைச் சந்தித்திருந்தது. அந்தப் போரின் நிமித்தம் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்திருக்கின்றது. இருந்தும் 2009லே போர் மௌனிக்கப்பட்டிருந்தாலும், அந்தப் போர் எதற்காகத் தொடங்கப்பட்டது? எப்படித் தொடங்கப்பட்டது என்பதற்கு உதாரணமாக மீண்டும் அந்த நிலைமையை ஏற்படுத்தும் சூழ்நிலைக்கு இந்த அரசாங்கமும் இந்த அரசாங்கத்தில் இருக்கும் மேலதிகாரிகளும் தமிழ் பேசும் மக்களை ஒடுக்கி துன்புருத்தும் நிலைமை அதிகாரிகள் மட்டத்திலே அரங்கேறுகின்றது.

கடந்த வைகாசி பதினொராம் திகதி பொதுச் சேவை ஆணைக்குழுவானது திட்டமிடல் பிரிவில் அதிகாரிகளாகக் கடமை புரிந்தவர்களை நேர்முகப் பரீட்சைகள் மற்றும் சேவை மூப்பின் அடிப்படையில் அவர்களுக்குப் பணிப்பாளர் நாயகங்களாகப் பதவி உயர்வு கொடுத்து பொது நிர்வாக அமைச்சிற்கு பத்து அதிகாரிகளைச் சிபாரிசு செய்திருந்தது. பதவி உயர்வு பெற்ற பத்துப் பேரில் ஐவர் சிங்களவர்கள், நால்வர் தமிழர், ஒருவர் முஸ்லீம் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.பொது நிர்வாக அமைச்சு இந்தப் பத்துப் பேருக்கும் கடந்த ஆகஸ்ட் 07ம் திகதிக்கிடையில் அவர்களது கடமைகளை அவர்களுக்கு வழங்கப்பட்ட அந்த அந்த அமைச்சுகளில் பொறுப்பேற்கும்படி அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. இதில் சிங்களவர்கள் ஐவரும் எவ்வித தடையும், இடையூறுகளுமின்றி தங்களது கடமைகளை தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அமைச்சுகளில் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

ஆனால் ஏனைய தமிழ் முஸ்லீம் அதிகாரிகள் ஐவரும் தங்கள் கடமைகளைப் பொறுப்பேற்கச் சென்ற இடத்தில் ஐந்து அமைச்சுக்களின் செயலாளர்களும் இவர்களை பதவியேற்பதற்கு அனுமதிக்கவில்லை. இங்கு சிங்கள மொழி மூலம் தான் நிருவாகம் செய்ய வேண்டும் அதனால் அந்த அதிகாரிகள் தகுதியற்றவர்கள் என்ற காரணம் அமைச்சுக்களின் செயலாளர்களால் கூறப்பட்டிருக்கின்றது.

இந்த நிகழ்வானது திட்டமிட்ட ஒன்றாகவே இவ்வாறு பதவி உயர்வு பெற்ற தமிழ் அதிகாரிகளுக்கு நடைபெற்றிருப்பதாகவே நான் அறிகின்றேன். இது வெறுமனே அமைச்சுக்களின் செயலாளர்களால் மாத்திரம் இடம்பெற்றிருக்க மாட்டாது. இவர்களுக்கு யாரோ மேல் அதிகாரியோ, அரசியல்வாதிகளோ பதவி உயர்வு பெற்ற பத்துப் பேரில் சிங்களவர்களைத் தவிர்த்து மிகுதி தமிழ் முஸ்லீம் அதிகாரிகள் ஐந்து பேரையும் தங்கள் பதவிகளைப் பொறுப்பெடுப்பதற்கு இடம்கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

இந்த நாட்டிலே கடந்த கால யுத்தங்கள் நடைபெற முன்பு எந்த திணைக்களங்களை எடுத்துக் கொண்டாலும் தமிழ் அதிகாரிகள் தான் தலைமைப் பொறுப்புகளில் இருந்த வரலாறுகளே இருக்கின்றது. இதன் பின்பாடு நிருவாக பொறுப்புகள் மற்றும் பல்கலைக்கழக நுழைவுகளிலும் பல்வேறு இடையூறுகள் தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டதன் காரணமாகத்தான் இந்த நாட்டிலே போர் மூண்டது, இத்தனை அழிவுகளையும் இந்த நாடு சந்தித்தது என்ற பட்டறிவை இந்த அரசு கொண்டிருந்தாலும், மீண்டும் அவ்வாறானதொரு நிலைமைக்கு தமிழ் பேசும் மக்களைத் தள்ளுவதற்கான ஒரு உத்தேசமாக இருக்கின்றதோ என்று எண்ணத் தோணுகின்றது.

இது சிங்கள தேசம் என்ற சிந்தனையில் சிங்களவர்களைக் கொண்டுதான் அரசியல் ரீதியதாகவும், நிருவாக ரீதியாகவும் இந்த நாட்டை நடத்தப் போகின்றீர்கள் என்றால் வடக்கு கிழக்கிலே பெரும்பான்மையாக தமிழ் பேசும் வாழும் பிரதேசம் உங்களுக்குத் தேவையில்லையா? அல்லது எதிர்காலத்திலும் தமிழ் பேசும் மக்களை அடிமைகளாகவே வைத்திருக்கப் போகின்றீர்களா?

மத்திய அரசாங்கத்திலே சிங்கள மொழி மூலம் தான் நீங்கள் நிருவாகம் செய்ய வேண்டும். சிங்களவர்களைக் கொண்டு தான் நீங்கள் நிருவாகம் செய்யப் போகின்றீர்கள் என்றால் வடக்கு கிழக்கிற்கு எதற்காக நீங்கள் சிங்கள அதிகாரிகளை நியமிக்கின்றீர்கள். 98 வீதத்திற்கு மேல் தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் சிங்களவர் ஒருவரைப் பிரதம செயலாளராக நியமித்திருக்கின்றீர்கள். வவுனியா, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலே சிங்கள அரச அதிபர்களை நியமித்திருக்கின்றீர்கள். 75 வீதம் தமிழ் பேசும் மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் நீங்கள் தொடர்ச்சியாக சிங்களவர் ஒருவரையே பிரதம செயலாளராக வைத்திருக்கின்றீர்கள்.

தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பிரதம செயலாளர்களாக சிங்கள அதிகாரிகள் இருக்க இயலுமென்றால் மத்திய அரசாங்கத்திலே பணிப்பாளர் நாயகங்களாக தமிழ் பேசும் அதிகாரிகள் ஏன் இருக்க முடியாது?

எனவே இவ்விடயமானது இந்த நாட்டை மீண்டும் ஒரு அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கான அறிகுறியாகவும், மீண்டும் ஒரு போரை ஏற்படுத்துவதற்குமான எத்தனிப்பாகவுமே தென்படுகின்றது.

இன்று பதவி உயர்வு பெற்ற தமிழ் பேசும் அதிகாரிகள் தங்கள் வேலை செய்த இடங்களில் விடுவிப்பினைப் பெற்று மத்திய அரசின் கீழ் தங்கள் கடமைகளைப் பொறுப்பேற்கச் சென்றவர்கள் அங்கு ஏற்படுத்தப்பட்ட தடை காரணமாக பொது நிருவாக அமைச்சிலே வெறுமனே கையெழுத்து வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

எனவே அந்த உயர் அதிகாரிகளை தங்கள் கடமைகளைப் பொறுப்பேற்று அவர்களது கடமைகளைச் செய்ய விட வேண்டும். அல்லது வடக்கு கிழக்கிலே இருக்கும் சிங்கள அதிகாரிகளை அங்கே எடுத்துவிட்டு இவர்களை வடக்கு கிழக்கிலே அவர்களது கடமைகளைச் செய்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பொருட்களின் விலை உயர்வால் மக்கள்அவதி – செல்வம் அடைக்கலநாதன்

பொருட்களின் விலை உயர்வால் மூன்று மாவட்டங்களிலும் மக்கள் அவதிப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துலகுணவர்த்தனவுக்கு ரெலோ அமைப்பின்தலைவரும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அத்தியாவசியப் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் அல்லது கட்டுப்பாட்டு விலையில் எந்தப் பொருட்களையும் பெற முடியாத சூழ்நிலை என் தேர்தல் மாவட்டங்களான மன்னார்இவவுனியா மற்றும் முல்லைத்தீவில் உள்ளது.

ஏழைகளின் உணவுப் பொருட்களாகக் கருதப்படும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் விற்கப்படுகின்றன.

இந்த விவகாரத்தை ஆராய எந்த அரச அதிகாரிகளும் முன் வருவதாக தெரியவில்லை. பொருட்களின் விலை அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்தும் கூட நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மாறுபட்டு கூடிய விலையில் பொருட்கள் யாவும் விற்கப்படுகின்றன.

அரசு விதித்த கட்டுப்பாட்டு நிர்ணய விலை பொருந்தாததாக இங்கு காணப்படுகிறது. இதற்கு காரணம் அரச அதிகாரிகளின் அசமந்த போக்கு என்றே கூறவேண்டும். மக்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலையே இங்கு காணப்படுகிறது.

எனவே இவ் விடயத்தினை கவனத்தில் இருத்தி இந்த மக்களின் அவதி நிலையினை போக்க உரிய நடவடிக்கை எடுக்க முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பூகோள அரசியல் சூழ்நிலைகளை கவனத்திலெடுத்து ஆளும் அரசு செயற்படவில்லை – தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் சுரேன் குருசாமி 

ஒரு நாட்டையும், அதன் மக்களையும் துன்பங்களிலிருந்து விடுபட வைப்பதற்கு பொருத்தமான செயற்பாடுகளை அந்நாட்டின் ஆளும் அரசு கைக்கொள்ள வேண்டும். அதில் பிரதானமானவைகள் பூகோள அரசியல், உள்நாட்டு அரசியில், பூகோள வர்த்தகம், உள்நாட்டு இயற்கை வளங்களை பிரயோசனப்படுத்தல், விஞ்ஞான தொழில்நுட்ப வழங்கள் என்று ஏகப்பட்டவைகள் அடங்கும். நம் நாட்டை எடுத்துக்கொண்டால் பூகோள அரசியலுக்குள் நமக்கு சாதகமான நாடுகளும், நம்மை சுரண்டும் நாடுகளும் அடங்கும் அவைகளைத் தாண்டியே நாம் கால, தேச, வர்த்தமானங்களுக்கு ஏற்பகொள்கைகளை வகுத்து முன்னேற வேண்டும். இதில் இடைவிடாத தீவிர மேற்பார்வை இன்றியமையாதது. மாற்றங்கள் அப்போதைக்கு அப்போது தேவை மாற்றத்தை விரும்பாதவர்களுக்கு முன்னேற்றம் ஒருபோதும் ஏற்படப்போவதில்லையென தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்தார்.

அண்மையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கொள்கை மீளாய்வுக் கலந்துரையாடல் மட்டக்களப்பு நகரில் அதன் கட்சிப்பணிமனையில் இடம்பெற்றது.

கட்சியின் சில முக்கியஸ்தர்கள் மாத்திரமே வரவழைக்கப்பட்டிருந்தனர். அங்கு கருத்துரை வழங்குகையிலேயே சுரேன் இவ்வாறு தெரிவித்தார்

அவர் தொடர்ந்து பேசுகையில், சமகால அரசியல் நிகழ்வான ஒரு விடயத்தை நாம் உதாரணத்திற்கு எடுக்கலாம். அதாவது, ”போர்ட் சிற்றியை” சீனாவுக்கு வழங்குவதால் உலக நாடுகளிடையே ஒரு எதிர்ப்பு நிலையை நமது நாடு பெற்றிருக்கிறது இது எமது நாட்டை எங்கேயோ கொண்டு செல்லப்போகிறது. நாம் உன்னிப்பாக இதனை பார்க்க வேண்டும்.

உலக நாடுகளின் எதிர்ப்பு என்பது பொதுப்படையாக கூறப்பட்டாலும் அமெரிக்காவை இது பெருமளவு ஆத்திரமூட்டி இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அமெரிக்கா சீனா முதலீட்டு எதிர்ப்பு கொள்கையை கடைபிடித்து சீனாவில் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களுக்கான சந்தை வாய்ப்பை அமெரிக்காவில் தாங்கள் மூடுவதாக தெரிவித்திருந்தது. இதனால் சீனாவில் இருந்து பல நிறுவனங்கள் வெளியேறி வேறு நாடுகளில் தங்கள் முதலீடுகளை முன்னெடுத்து வருகிறார்கள். வெளிப்படையான சீன எதிர்ப்பு கொள்கையை அமெரிக்கா கடைப்பிடித்து வருகின்ற வேளையில் வெளிப்படையாகவே இலங்கை சீனச் சார்பு கொள்கையை கடைப்பிடித்திருப்பது அமெரிக்காவை கவலை கொள்ள வைத்திருக்கலாம்.

சீனாவில் இருந்து வெளியேறி அமெரிக்க சந்தை வாய்ப்பை பயன்படுத்த, வேறுநாடுகளில் பாரிய முதலீடுகளை செய்துவரும் சர்வதேச நிறுவனங்களை இலங்கைக்கு தருவித்து நிலைபேறான அபிவிருத்தயை முன்னெடுத்திருக்கலாம். அது சிரமமான விடயமல்ல

முக்கியமாக இலங்கை அரசுக்கு மில்லேனியம் சேலஞ்ச் கோப்பரேஷன் MCC என்ற அமெரிக்க நிறுவனத்தின் ஊடாக 480 மில்லியன் டொலர் மானிய மற்றும் முதலீட்டு அடிப்படையில் அபிவிருத்தி திட்டத்திற்கான ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்க அரசு சமர்ப்பித்திருந்தது.

இதன் மூலம் பெருந்தெருக்கள் போக்குவரத்தையும் மற்றும் காணி முகாமைத்துவத்தையும் நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையை முன்மொழிந்து இருந்தது.

இலங்கை அரசின் அமைச்சரவை இந்த ஒப்பந்தத்தில் இருக்கின்ற சரத்துக்களை ஏற்று கையெழுத்திடுவது அரசுக்கு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று அது சுட்டிக்காட்டியது. இந்த ஒப்பந்தத்தின் சரத்துகள் இலங்கை அரசியல் யாப்புக்கும் சட்ட திட்டங்களுக்கும் முரணானவை என்று விளக்கம் கொடுத்தது. இதை நடைமுறைப்படுத்தினால் இலங்கையின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் குறை கூறியது. பொதுசன வாக்கெடுப்புக்கு சமர்ப்பித்து தான் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள முடியும் என்று கருத்துக் கூறியது. ஆகையினால் இந்த ஒப்பந்தத்தை ஒட்டுமொத்தமாக இலங்கை அரசு கைச்சாத்திடாமல் நிராகரித்தது. தாம் இந்த நாட்டின் அதி விசுவாசம் மிக்க தேசபக்தர்களாக காட்டியது.

அதையும் தாண்டி இலங்கை அரசாங்கம் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது, எதை காரணம் காட்டி அமெரிக்காவை இலங்கை அரசு நிராகரித்ததோ, அதே காரணங்களுக்காக சிறப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து துறைமுக நகரத்தின் ஒரு பகுதியை சீன அரசாங்கத்திற்கு தாரை வார்த்தது.

உதவி வழங்க முன்வந்த அமெரிக்க அரசை நிராகரிப்பதற்கு கூறிய காரணங்களை கடன் வழங்கிய நாடான சீனாவிற்காக நியாயப்படுத்தியது. இலங்கை அரசு இதில் பாரிய தவறை இழைத்துவிட்டது.

அணிசேராக் கொள்கையை கடைப்பிடித்து வந்த இலங்கை நடுநிலமையான போக்கை கொண்டது என்ற நிலையிலிருந்து இங்குதான் வெளிப்படையாக வழுவியது.

உலக வல்லாதிக்க அரசான அமெரிக்க நாட்டை எள்ளி நகையாடியதாக சர்வதேச நாடுகள் கருதுகின்றன. இதற்கான பலாபலன்கள் பாரதூரமானது என்பது சர்வதேசம் நன்கு அறிந்திருக்கிறது. இதன் விளைவு எப்படியிருக்கப் போகிறது என்பதை இப்போதைக்கு ஊகிக்க முடியாது

இலங்கை அரசாங்கம் ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளை நிராகரிப்பதற்கு தேசபக்தியாளர்களாக தங்களை காட்டிக்கொண்டு, வழக்கம்போல சிங்கள, பெளத்த, இனவாதத்தை சிங்கள மக்களுக்கு காட்டி நியாயப்படுத்தியது. சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் கோரிக்கையை நிராகரித்தோம் என்ற கருத்தை சிங்கள மக்களுக்கு முன் வைத்தார்கள். அதன் பின்விளைவு பூதாகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதை அரசு எண்ணிப்பார்க்கவில்லை.

அண்மையில் அமெரிக்க காங்கிரசில் கொண்டுவந்த பிரேரணை இதற்கு முன்னோடியாக அமையும். இவ்வாறான விடயங்கள் இனி தொடரலாம். நமது நாட்டைப்பொறுத்தவரை ஆளும் கட்சிக்குள்ளேயும், எதிர்க்கட்சிக்குள்யேயும் ”போர்ட் சிற்றியை” சீனாவுக்கு தாரைவார்ப்பதற்கு விரும்பாத பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இச்செயற்பாட்டுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு, சமந்த வீரக்கொடி, பேராசிரியர் திஸ்ஸ விதாரண போன்றோரை குறிப்பிடலாம். இந்தஎதிர்ப்புகளுக்கு அரசு அஞ்சுமா? அவைகளுக்கு தாக்குபிடிக்குமா? என்பதுபற்றி நாம் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.

துறைமுக நகரத் திட்டத்தை முன்மொழியும் பொழுதும் முந்தைய அரசாங்கத்தில் இவர்கள் அங்கம் வகித்தவர்கள். அப்பொழுது எதிர்க்காதவர்கள் இப்போது குரல் கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட ஒரு பலமான கட்டமைப்பில் இருக்கின்ற அரசாங்கம் ஓரிருவரின் கருத்துக்களுக்கு செவிமடுக்க போவதில்லை. அரசுக்குள்ளே மாற்றத்தை கொண்டு வரக்கூடிய பலமான சக்திகளின் குரலாக இதைக் கருத முடியாது. இருப்பினும் எதிர்கால அரசியல் எற்படப்போகும் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு துணிச்சலோடு அவர்கள் சொல்லும் கருத்தை வரவேற்கத்தான் வேண்டும்.

இன்னும் கொஞ்சம் ஆழமாக பார்த்தால், உண்மையில் இந்தியாவை, இலங்கை நன்றாக ஏமாற்றியிருக்கிறது. இதனை இந்தியா உணர்ந்திருக்கிறதென்பதைவிட, அது நல்ல கடுப்பில் இருக்கிறது என்பதே உண்மை. இதை நாம் ஓரளவுக்கு ஊகிக்க முடியும்.
கப்பல் போக்குவரத்தை கையாளுகின்ற துறைமுக பரிமாற்றங்களிலும் அவற்றை வழங்குவதிலும் ஏமாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால் துறைமுக நகர விடயத்தில் சற்று வித்தியாசமான நடைமுறையை இந்தியாவிடம் அவதானிக்க முடிகிறது. வர்த்தக நோக்கங்களோடும் அபிவிருத்தி நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்படுகின்றன. அத் திட்டங்களை தாங்கள் எதிர்க்கப் போவதில்லை என்று இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்திருக்கிறது. ஆனாலும் இந்த நோக்கங்களுக்கு புறம்பான செயற்பாடுகள் துறைமுக நகரத்திலும் இலங்கையிலும் நடைபெறுகின்றனவா என்பதை தாங்கள் உற்று அவதானிப்பதாகவும் இந்தியா தெரிவித்திருக்கிறது.

மேலும் இந்திய முதலீட்டாளர்களை இலங்கையில் அதிக முதலீடுகளை செய்யுமாறு இலங்கைக்கான இந்திய தூதுவர் அழைப்பு விடுத்திருக்கிறார். குறிப்பாக துறைமுக நகரத்தில் இந்திய முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடைமுறையை கையாள முடியும். இதன் எதிர்கால சாத்தியப்பாடு எப்படியிருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இலங்கையை தம்முடன் சேர்ந்து பயணிக்க இந்தியா நட்பு ரீதியான அழைப்பையும் விடுத்துள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டிற்கான காரணத்தையும் இலங்கை கவனத்திலெடுக்க வேண்டும்.

இவை ஒருபுறமிருக்க, ஆளும் அரசு பொருளாதார அபிவிருத்திக்கான முயற்சிகளுக்கும் தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதற்குமான செயற்பாடுகளுக்கும் அனுமதி அளிப்பது அத்தியாவசியமானது.

இதனடிப்படையில் நல்லாட்சி அரசின் காலத்தில் புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கையில் முதலீடுகள் செய்வதற்கு காத்திருந்தன, முன்வந்தன. அரசு அதற்கு அனுமதிக்கவில்லை. இப்படியான அரசு இப்போது எமது நாட்டின் தலைநகரத்தில் ஒருபகுதியை சீன தேசத்திற்கு வழங்கியிருக்கிறது. அத்தோடு அதற்கென பிரத்தியேக நிர்வாக கட்டமைப்பையும் உருவாக்கியிருக்கிறது. உண்மையில் நமது நாட்டு மக்களிடமிருந்து சீன தேசத்தால் போர்ட் சிற்றி மூலமாக உழைக்கப்படும் பணம் சீன தேசத்திற்குத்தான் போய்ச் சேரப்போகிறது. புலம்பெயர் அமைப்புக்களின் முயற்சியால் நம் நாட்டுக்குள் கொண்டுவரப்படும் நிதியால் பயனடையப்போவது நம் நாட்டு மக்கள்தான், சீன தேசத்தவர்களல்ல. இதை இனியாவது அரசு உணருமா? இனிமேல் இவ்வாறான முயற்சிக்கு அனுமதி கிடைக்குமா என்பதுபற்றி நாம் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

வடக்கு கிழக்கில் மாத்திரமல்ல நாடு முழுவதுமே நிலைபேறான வேலை வாய்ப்பினை உருவாக்கக்கூடிய நாட்டினுடைய வளங்களை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க கூடிய எந்த முதலீடுகளைப் பொறுத்தவரை கடந்த இரண்டு தசாப்தங்களாக எந்த அரசாங்கங்களும் அவைகளை முன்னெடுக்க தவறி விட்டன. அப்படிப்பட்ட பல அபிவிருத்தியோடு கூடிய முதலீட்டுத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருந்தாலும் ஊழல் லஞ்சம் காரணமாக அவையெல்லாம் இழுத்தடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. இச் செயற்பாடு நாட்டிற்கு உதவாத ஒன்று

குறுகிய கால உட்கட்டுமான அபிவிருத்தி திட்டங்கள் கடன்களைப் பெற்று முன்னெடுக்கப்பட்டன. இதனால் நாட்டினுடைய கடன்சுமை கட்டு மீறி உள்ளது. அந்நியச்செலாவணி, வேலைவாய்ப்பு, உற்பத்தித் திறன் அதிகரிப்பு , வளங்களைப் பயன்படுத்துதல், நிலையான வருமானத்தை அரசாங்கத்துக்கு ஈட்டிக் கொடுத்தல் போன்ற விடயங்களை கருத்தில் கொள்ளவில்லை. அதனால் நாட்டின் ஒட்டு மொத்த அபிவிருத்தியும் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

குறிப்பாக வடக்கு கிழக்கில் முதலீடு செய்ய முன்வந்த எங்களுடைய புலம் பெயர் உறவுகளின் முதலீடுகளை நிதி மூல ஆதாரங்களை கோரியும் பல்வேறு சந்தேகங்களை வெளியிட்டும் தடுத்து நிறுத்தினர். ஆனால் இன்று துறைமுக நகரத்தில் முதலீடு செய்பவர்களை இருகரம் கூப்பி வரவேற்பதை காணலாம். அவர்களின் நிதி மூல ஆதாரங்களை பற்றிய எந்தக் கேள்விகளையும் முன்வைக்காது செங்கம்பளம் விரித்து முதலீட்டாளர்களை வரவேற்கிறார்கள். துறைமுக நகரத்தில் ஏற்பாடு செய்யப்படுகின்ற களியாட்ட விடுதிகள் மூலம் காசு சலவை செய்யப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாக பல தரப்பும் அக்கறை தெரிவித்துள்ளனர். ஆனால் அதைப் பற்றி அரசு கவலைப்படவில்லை. எமது புலம்பெயர் உறவுகளின் நிதி மூலங்கள் மாத்திரம் சந்தேகக்கண்ணோடு ஆராயப்படுகிறது. இது குறிப்பாக வடக்கு கிழக்குக்கான புலம்பெயர் உறவுகளின் பாரிய அபிவிருத்தி திட்டங்களை தடுத்து நிறுத்தம் நடவடிக்கையாகவும் கருதலாம்.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் எமது மாகாணசபை குறிப்பாக வடக்கில் இருந்த அல்லது இருக்கின்ற, அதிகாரிகளும் இப்படியான அபிவிருத்திக்கு பெரும் தடையாக இருந்ததை அனைவரும் அறிந்திருப்பார்கள்.

ஏற்கெனவே பல்வேறு நிலைபேறான அபிவிருத்தியை முன்னெடுக்க கூடிய திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு இழுத்தடிப்பு செய்யப்பட்டு கொண்டிருப்பதும் குறுகிய கால அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒருசில நிமிடங்களில் அமைச்சரவையில் அனுமதி வழங்கும் நிலையும் நம் நாட்டில் சமகாவத்தில் காணப்படுகிறது.

மேலும் சீனாவில் இருந்து வெளியேறும் சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து வருவதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். சீன சார்பாக பக்கம் சாயும் இந்த அரசு மேலே சொன்ன முதலீடுகளை வரவேற்க தவறுவதோடு தமது தீர்க்க தரிசனமற்ற முதலீட்டு மற்றும் வெளிவிவகார கொள்கைகளால் அவற்றை இந்தியாவிற்கும் வேறு முதலீட்டு மையங்களுக்கும் திசைதிருப்புவதாகவே அமையும்.

எதிர் காலங்களிலும் நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய முதலீடுகளை வரவேற்பதில் இந்த அரசு கவனம் செலுத்துமா என்பது சந்தேகமே.

குறுகிய கால தனிப்பட்டோர்களின் லாபநோக்கங்களை கருத்தில்கொண்டு அதன் அடிப்படையில் முன்னெடுக்கும் அபிவிருத்திகளுக்கே முன்னுரிமை வழங்குவது தான் நடைபெறுமாயின் அது அர்த்தபுஸ்டியாகாது
இந்த தவறுகளை தமிழினத்தின் உரிமைகளை மறுக்க இனவாத அல்லது பெருந்தேசிய வாதப் போக்கை கவசமாக பயன்படுத்தி சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதால் அரசு தனது அரசியல் இருப்பை தக்க வைக்க முயலும். எதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

நாட்டில் கொரோனா பாதிப்பு 4 இலட்சத்தை கடந்தது

நாட்டில் மேலும் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 406,675 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3348,930 க அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,750 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 46,605 பேர் வைத்தியசாலைகள் மற்றும் கொவிட் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

ஒக்சிஜன் வழங்கலில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்குமாறு இந்திய உயர்ஸ்தானிகரிடம் கெஹெலிய கோரிக்கை

இலங்கைக்கு ஒக்சிஜன் வழங்குவது தொடர்பில் முன்னுரிமை வழங்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நடமாடும் ஒக்சிஜன் தொகுதிகளை நாட்டிற்கு பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சுவசிறிபாய – சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நடமாடும் ஒக்சிஜன் தொகுதி தற்போதைய நிலையில் மிகவும் அத்தியாவசியமானதொன்று எனவும், ஒக்சிஜன் தேவைப்பாடு தொடர்பில் முன்னுரிமை வழங்கி, இந்தியா நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் இதன்போது சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, Tocilizumab மருந்தை இலங்கைக்கு வழங்குவது தொடர்பிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

வைத்தியருக்கு கொலை மிரட்டல்: ரிஷாட் பதியுதீனிடம் சிறைச்சாலை தீர்ப்பாயம் விரைவில் விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், மெகசின் சிறைச்சாலையில் வைத்தியர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை தீர்ப்பாயத்தில் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட சிறைச்சாலைகள் உதவி அத்தியட்சகரின் பரிந்துரைக்கு அமைய, தீர்ப்பாய விசாரணையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 87-இன் முதலாம் பிரிவிற்கு அமைய, சிறைச்சாலைக்குள் ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவரை, சிறைச்சாலைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை செய்வதற்கான ஏற்பாடுகள் காணப்படுகின்றன.

அதற்கமைய, வைத்தியரை அச்சுறுத்தியமை தொடர்பான விடயத்தை தீர்ப்பாயத்தின் முன் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் நீதவான் ஒருவரினால் சிறைச்சாலைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

Posted in Uncategorized

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் குறித்து பரிந்துரைகளை வழங்க ஆலோசனைக் குழு

பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மற்றும் தடுப்பு காவல் உத்தரவின் கீழ் ​கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் தொடர்பில் ஆராய்தல், விடுதலை செய்தல், பிணை வழங்குதல் உள்ளிட்ட எதிர்கால தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு பரிந்துரைகள் மற்றும் ஆலோசனை வழங்க ஆலோசனை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த ஆலோசனை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் 1979 இலக்க 48 பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13 -ன் படி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்ட பணிப்பாளர் நாயகம், உயர்நீதிமன்ற சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக்குழுவின் தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி அசோக டி சில்வா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர் ஹெயின்துடுவ மற்றும் ஓய்வு பெற்ற சொலிசிட்டர் நாயகம் சுஹந்த கம்லத் ஆகியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட காலமான ஆலோசனைக்குழு ஒன்று நியமிக்கப்படாத காரணத்தால் இதுவரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தமது உரிமைகள் தொடர்பில் விடயங்களை முன்வைக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இந்த ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டதுடன் குறித்த சிறைக்கைதிகளுக்கு அவர்களது பிரச்சினைகளை முன்வைக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஹரிகுப்த ரோஹனதீர தெரிவித்தார்.

Posted in Uncategorized

பயணக்கட்டுப்பாடு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது – பிரசன்ன

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பிரவேசிக்க முடியும் என அவர் கூறினார்.

எவ்வாறிருப்பினும் Bio-bubble திட்டத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு மாத்திரமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டார்.

சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கான ஹோட்டல்களுக்கு அறிவித்து, தாம் தங்குவதற்கான வசதி​களையும் ஏற்படுத்திக்கொள்ளுதல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் குறித்து பொலிஸ் மா அதிபரின் அதிரடி அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதி சஹ்ரான் உள்ளிட்ட கும்பலானது, மொத்த பயங்கரவாத வலையமைப்பின் ஒரு சிறு பகுதி மட்டுமே என்பது விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்தார்.

அத்துடன் மிக சூட்சுமமாக, குறித்த பயங்கரவாத வலையமைப்பு 2 ஆம் நிலை குழுவொன்றினை தயார் படுத்தி, சிறுவர்களுக்கு தமது சிந்தனைகளை விதைத்துள்ளமையும் அவ்விசாரணைகளின் ஊடாக தெரியவந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதுவரையிலான விசாரணைகளில் 723 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 311 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் அல்லது தடுப்புக் காவலின் கீழ் உள்ளனர்.

பல வங்கிக் கணக்குகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. 365 மில்லியன் ரூபா பணம், அசையும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டு, 168 மில்லியன் சொத்துக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

இதுவரை 11 குற்றப் பத்திரிகைகள் 46 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சுமார் 100 இற்கும் அதிகமான சம்பவங்கள் குறித்த விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு ஆவணங்கள் சட்ட மா அதிபருக்கு அனுப்பட்டுள்ளன.

சுமார் 52 ஆயிரம் பக்கங்களை கொண்ட 104 ஆவணங்கள் இவ்வாறு சட்ட மா அதிபரின் பரிசீலனையின் கீழ் உள்ளன.

எனவே இது ஒரு பரந்துபட்ட விசாரணை என்பது தெளிவாகின்றது. இவ்விசாரணைகள் தொடர்பில் எனக்கு எந்த அழுத்தங்களும் எவராலும் பிரயோகிக்கப்படவில்லை.

இந்த குண்டுத் தாக்குதல்களில் இறந்த, காயமடைந்தவர்களுக்கு நிலை நாட்டப்படும் நியாயமாக, உறுதியான விசாரணைகள் ஊடாக குற்றவாளிகளை தண்டிப்பதையே நாம் கருதுகின்றோம். எனவே தான் மிக ஆழமாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்.’ என தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது சீன இராணுவம்

சீனா மக்கள் விடுதலை இராணுவத்தினால் (People’s Liberation Army of China) இலங்கை இராணுவத்திற்கு Sinopharm தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளன.

அன்பளிப்பு செய்யப்பட்டுள்ள Sinopharm தடுப்பூசிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த 300,000 சினோபார்ம் தடுப்பூசிகளும் எதிர்வரும் 28ஆம் திகதி நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized