டிசம்பருக்குள் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியும் – அமைச்சர் காஞ்சன

புதிய மின்சார உற்பத்தித் திட்டத்திற்கு, எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் ஆதரவளித்தால் எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்தார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கடும் ஆட்சேபனைக்கு அமைவாக அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக காஞ்சன விஜேசேகர கூறினார்.

மின்சார சபையின் இழப்பை ஈடுகட்ட கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் மின்சார உற்பத்தி திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

மின்சார சபை ஊழலை குறைக்க ஆலோசனைகளை வழங்குகி உள்ளதாகவும் ஆனால் அதற்கு எதிராக சிலர் செயல்படுகின்றனர் என்றும் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

கட்டணம் வசூலிப்பதால், தொடர்ந்தும் மின்சாரம் வழங்க முடிந்தது என்றும் மின் உற்பத்தி திட்டத்தை செயற்படுத்தினால், ​​டிசம்பருக்குள் மின் கட்டணத்தை குறைக்க முடியும் எனகாஞ்சன விஜேசேகர கூறினார்.

இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவோம் – உலக வங்கி

இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை வரவேற்பதாகவும் அதற்காக தாம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதிவிலேயே உலக வங்கியின் பிரதி தலைவர் மார்ட்டின் ரைசர் இதனைப் தெரிவித்துள்ளார்.

மக்களை பாதுகாப்பதற்கும் பொருளாதாரத்தை மீட்பதற்குமான முக்கிய சீர்திருத்தங்களை செயற்படுத்த தாம் தொடர்ந்தும் ஆதரவளிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய்கிழமை நள்ளிரவில் எரிபொருள் QR முறை புதுப்பிக்கப்படும்

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் QR முறை புதுப்பிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

முன்னதாக QR ஒதுக்கீடு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த மாற்றம் வந்துள்ளது.

இதற்கிடையில், QR முறை மூலம் வாரத்திற்கு பெறப்படும் எரிபொருளின் அளவுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வார இறுதி நாட்களிலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் செயல்பட ஏற்பட்டதன் காரணமாக விநியோகச் செலவைக் குறைக்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

மஹிந்த ராஜபக்ஷவின் பயணத்தடை 10 நாட்களுக்கு நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பயணத்தடையை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நீக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று (08) நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தென்கொரியாவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குழு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, 10 நாட்களுக்கு பயணத்தடையை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டு

கடன் மறுசீரமைப்புநடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அத்தோடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம்தெரிவித்துள்ளது.

இதேநேரம் இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது

இலங்கையின் டொலர் கையிருப்பு அதிகரிப்பு

2023 பெப்ரவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2,217 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது ஜனவரி 2023 இல் உத்தியோகபூர்வ கையிருப்பு மதிப்பு 2,121 மில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 4.5% அதிகரிப்பைக் குறிக்கிறது.

இருப்பினும், தற்போதைய உத்தியோகபூர்வ கையிருப்புகளில் சீனாவின் மக்கள் வங்கியின் நாணய பரிமாற்ற சலுகையும் அடங்கும் என்றும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை நிறைவுக்கு கொண்டுவாருங்கள் – இலங்கைக்கு ஐ.நா. வலியுறுத்து

இலங்கையில் உள்ள கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

பலவீனமான கடன் மற்றும் பொருளாதார நெருக்கடி, இலங்கையில் அடிப்படை பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுக்கான மக்களின் அணுகலை கடுமையாக தடை செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே மீட்புக் கொள்கைகளில் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய வேண்டும் என்றும் சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார பின்னடைவுக்கான பிற விடயங்களில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஊழல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற அடிப்படை பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை நம்புவதும், சிவில் சமூகம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான துன்புறுத்தல் மற்றும் கண்காணிப்பு ஆகியவை முடிவுக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிலைமாறுகால நீதிக்கான உண்மையான மற்றும் விரிவான அணுகுமுறையை ஆதரிக்க தனது அலுவலகம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கூறினார்.

சீனாவிடம் இருந்து நிதி உத்தரவாதம் : இலங்கையின் முயற்சிக்கு IMF வரவேற்பு

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்து கொண்ட ஊழியர் ஒப்பந்தம் எதிர்வரும் 20ஆம் திகதி, நிறைவேற்று சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என அதன் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் உள்ளிட்ட இலங்கையின் முக்கிய கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெறுவதிலும், தீர்க்கமான கொள்கை நடவடிக்கைகளை எடுப்பதிலும் இலங்கை அதிகாரிகள் அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு அவர் பாரும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட ஏனைய தரப்பினரிடம் இருந்து கடனுதவி பெறும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கும் என சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.

இதற்கிடையில், நாட்டின் கடனை மறுசீரமைப்பதற்காக இருதரப்பு கடன் வழங்குபவர்களிடம் இருந்து 10 முதல் 15 ஆண்டுகள் வரை சலுகையை சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், சீனாவிடம் இருந்து இலங்கைக்கு 2 வருட காலநீடிப்பே வழங்கப்பட்டது.

இதேவேளை இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கான சீனாவின் எழுத்துமூல உத்தரவாதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தபால்மூல வாக்களிப்பு திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் திகதிகள் குறித்த அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இம்மாதம் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்து தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றய கூட்டத்தில் பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, இது தொடர்பான அறிவிப்பை வெளியிட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

இம்மாதம் 9 ஆம் திகதி தேர்தலை நடத்த முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த போதும் நிதி உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்த்க்கது.

வாக்குச்சீட்டு அச்சடிக்கும் வாய்ப்புள்ளது: அரச அச்சகர்!

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (7) காலை இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாகவும், வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்ள திறைசேரிக்கு அறிவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்ததாக, அரசாங்க அச்சக அலுவலகத்தின் பிரதானி கங்கானி லியனகே தெரிவித்தார்.

மேலும் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்போது அச்சிடப்பட்டுள்ள தபால் மூல வாக்குச் சீட்டுகளை மீள்பரிசீலனை செய்து அவற்றை வழங்குமாறும், பொலிஸ் பாதுகாப்புக்காக பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்குமாறும் ஆணைக்குழு குறிப்பிட்டதாக கங்கானி லியனகே தெரிவித்தார்.