தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர்- தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கண்டனம்

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தீவிர தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் சிறிலங்காவின் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றதாக தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,“சிறிலங்காவின் அரசியலமைப்பில் தனியொரு நபருக்கு இழைக்கப்படும் அநீதிகள், விசாரணைகள், தடை உத்தரவுகள் என்பவற்றை நோக்கும் போது நாட்டின் ஜனநாயகத்தின் மீது பெரும் கேள்விகளும், சந்தேகங்களும் எழுகின்றது.

இந்த நாட்டின் முக்கிய சட்டமான பயங்கரவாத தடைச் சட்டம் தமிழர்களை இல்லாது ஒழிப்பதற்கும், தமிழர்களை அடக்கி, ஒடுக்குவதற்குமே பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை இவர்களின் செயற்பாடுகள் மூலமாக அறிந்துகொள்ள முடிகின்றது.

இவ் பயங்கரவாத தடைச் சட்டம் என்பது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்பதை ஆட்சியாளர்களும், பௌத்த பேரினவாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனத்திற்கான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி போராடும் அனைத்து தமிழ் அமைப்புக்கள் மீதும் சிங்கள பேரினவாதம் பாசிசக் கரம் கொண்டு கடுமையான சட்டங்களை பாய்ச்சி இந்த அமைப்புக்களை இல்லாது ஒழிக்கின்ற செயற்பாடுகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றது.

இதன் நீPட்சியியாகவே வடகிழக்கில் உள்ள தமிழ் அமைப்புக்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீதும் பயங்கரவாத தடைச் சட்டத்தின்மூலம் பொய் வழக்குகளை புனைந்து விசாரணை என்கின்ற பெயரில் பெரும் அச்சுறுத்தலை மேற்கொண்டு வருகின்றார்கள்.

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை என்கின்ற எமது அமைப்பு கடந்த ஒரு தசாப்தமாக தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் வகையில் ஜனநாயக ரீதியில் அறவழியில் போராடி வருகின்றது.

மக்கள் சக்தியை திரட்டி போராடும் வேளைகளில் எல்லாம் இவ் அமைப்பின் மீது சிறிலங்கா அரசு பெரும் நெருக்கடிகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் உண்டாக்குகின்றது.

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் முக்கிய செயற்பாட்டாளர்கள் மீது தொடர்ச்சியாக பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கடுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. அதுமட்டுமின்றி பொய்யான குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படுகின்றது.

இலங்கையின் சுதந்திர தினம் அன்று காலை முதல் மாலை வரை பல மணி நேரம் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் யாழ் மாவட்ட அமைப்பாளரான கஜேந்திரன் ஜெனனன் மீது சிறிலங்காவின் பயங்கரவாத குற்றத்தடுப்பபு விசாரணைப் பிரிவு, தேசிய புலனாய்வுப் பிரிவு, பொலீஸ் குற்றத்தடுப்பு பிரிவு என பல பிரிவினரால் யாழ் மாவட்ட அவர்களது அலுவலகங்களில் தடுத்து வைத்து அச்சுறுத்தும் வகையில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் பல முறை சுவீகரன் நிஷாந்தன், நடராஜா ரவிவர்மா போன்றவர்களும் சிறிலங்கா பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் விசாரணை எனும் பெயரில் இடம்பெற்ற அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா புலனாய்வுத் துறையினரால் தமிழ்த் தேசிய தீவிர செயற்பாட்டாளர்கள், தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்கள் போன்றவர்களை அச்சுறுத்தும் வகையில் திட்டமிட்டு அரங்கேற்றும் விசாரணைகளை தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை வன்மையாக கண்டிப்பதுடன் இது போன்ற செயற்பாடுகளை தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்கா அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் எம் இளைஞர்களுக்காக தொடர்ந்தும் நாம் குரல் கொடுப்போம் என்று இந்த சிறிலங்கா அரசுக்கு குறிக்கொள்ள விரும்புகின்றோம்” என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

ரவிகரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்கு விசாரணை ஜூலை 26 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில், மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை சுவீகரிக்க சென்றபொழுது நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தர்களை கடமை செய்ய விடாமல் தடுத்து வாகனம் சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணை 08.02.2022 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் மற்றும், மதிப்புறு எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதன்போது குற்றசாட்டிற்கு உள்ளானவர்கள் சார்பாக மன்றில் பிரசன்னமாகியிருந்த அனைத்து சட்டத்தரணிகளும் ஆயராகி இருந்தார்கள். சட்டத்தரணிகள் நீதவானிடம் விண்ணப்பித்தமைக்கு அமைவாக தொடர்ச்சியாக வழங்கு தாக்கல் செய்யப்படாமல் சட்டமாஅதிபரிடம் இருந்து எதிர்பாக்கப்படுவதாக சொல்லப்படுவதை அடுத்து

அழைப்பாணை அனுப்பப்பட்டால் மாத்திரம் நீதிமன்றத்திற்கு வருகை தரவேண்டும் என்று நீதிபதியால் சொல்லப்பட்டுள்ளதுடன் இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 26 ஆம் திகதி திகதியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு விடுத்துள்ள அறிவித்தல்!

பங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை வழங்கி, விடுதலை செய்வதற்கான நடைமுறை சாத்தியமான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம்இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கையின் கூட்டு ஆணைக்குழுவின் 24 ஆவது கூட்டம் பெல்ஜியத்தின் பிரசல்ஸில் நடைபெற்றது.

நேற்று நிறைவுபெற்ற கூட்டு ஆணைக்குழு கூட்டத்தின் பின்னர் விடுக்கப்பட்ட இணைந்த அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள விடயங்களில் அத்தியாவசியமான திருத்தங்கள் உள்ளடக்கப்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச தரங்களுக்கு அமைய இந்த திருத்தங்களை மேற்கொள்வதாக வௌிவிவகார அமைச்சின் செயலாளர், பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே உள்ளிட்ட இலங்கையின் பிரதிநிதிகள் குழு இதன்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

மீன்பிடிப் படகுகளை ஏலம்விடுதல் தொடர்பில் இந்தியத் தூதரகம் அறிக்கை

இந்திய மீன்பிடிப் படகுகளை இலங்கையில் ஏலம்விடும் செயற்பாடுகள் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இந்திய மீன்பிடி படகுகள் ஏலம்விடப்படுகின்றமை தொடர்பாக வெளியான பல்வேறு அறிக்கைகளும் செய்திகளும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கவனத்துக்கு வந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இருதரப்பு புரிந்துணர்வு ஒன்று ஏற்கனவே உள்ளது என்பதை முதலில் வலியுறுத்தி கூறுகின்றோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வுக்கு அமைவாக இலங்கையில், இயக்க முடியாத நிலையிலுள்ள இந்திய மீன்பிடி படகுகளை அகற்றுவது குறித்த தீர்மானங்களை மேற்கொள்வதற்காக இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவிருந்தனர். இலங்கை அரசாங்கத்திடம் இந்த விஜயத்திற்கு தேவையான அனுமதியை உயர்  ஸ்தானிகராலயம் மீண்டும் கோரியுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுப்பு – சித்தார்த்தன்

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.அரசு தொல்பொருள் திணைக்களம் மற்றும் வேறு பல திணைக்களகங்கள் ஊடாகவும் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றது.குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தனது வேலைத்திட்டத்தை தீவிரமாக செயற்படுத்தி வருகின்றது.

இன்று தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் இக்கட்டான காலகட்டத்தில் இலங்கையரசு தமிழ் மக்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு முயற்சி எடுப்பதுடன் தங்களுக்கான சர்வதேச ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான பிரச்சாரங்களை மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.இக் காலத்தில் தமிழ் மக்கள் தமது நலன்சார் வலுவான அரசியல் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.

இது போன்ற பல விடயங்களில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாது செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமையையும் பலத்தினையும் உறுதிசெய்வதற்கு, எதிர் வரும் 12.02.2022 திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு இளங்கலைஞர் மன்றத்தில் கருத்தரங்கொன்று நடைபெறவுள்ளது.

தமிழ் தேசியக்கட்சிகளின் தலைவர்களும், அரசியல் ஆய்வாளர்களும் கலந்து கொள்ளும் முதலாவது கருத்தரங்கில் கலந்துகொள்வதன் மூலம் கருத்துக்களுக்கு வலுச்சேர்க்குமாறு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மாகாணசபை தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கான யோசனையை முன்வைக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானம்!

மாகாணசபை தேர்தல் சட்டத்தை திருத்தி, பழைய விகிதாசார முறையில் மாகாணசபை தேர்தலை நடத்தும்படியான யோசனையை அரசுக்கு முன் வைக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று (வியாழக்கிழமை) கூடிய தேர்தல் முறை சீர்திருத்த குழுவில் இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அத்தோடு, உள்ளூராட்சி தேர்தல் முறையிலும் சில சீர்திருத்தங்களை செயற்படுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதன்படி எதிர்வரும் 22ம் திகதி அடுத்த கூட்டம் நடைபெறும்போது, இவை குறித்து ஆய்வு செய்து முடிவுகள் எடுக்கப்படும் எனவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இறக்குமதித் தடையை நீக்குக : ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை

வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளினால் பல ஐரோப்பிய தயாரிப்புகள் இலங்கை சந்தைக்கு வருவதற்கு தடை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும், இலங்கை அரசாங்கத் தரப்பிற்கும் இடையில் நடந்த கலந்துரையாடலின் போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கையில் நிலவும் டொலர் கையிருப்பு நெருக்கடியால் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கொவிட் நெருக்கடியினால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு, இலங்கை அரசாங்கத்தின் தவறான பொருளாதாரகக் கொள்கை என்பவற்றினால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

எவ்வாறாயினும், இலங்கையில் இறக்குமதிப் பொருட்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக வர்த்தக அமைப்பு ஆகியன அதிருப்தி தெரிவித்திருந்தன.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை சபையில் முன்வைத்தார் வெளிவிவகாரத்துறை அமைச்சர்

1979 ஆம் ஆண்டின் 48ஆம் இழக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துவதற்கானதொரு சட்டமூலம் நேற்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிசினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதன் இரண்டாம் வாசிப்பு நாளைய தினம் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹகீம், ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு சில முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளது.

Posted in Uncategorized

மீனவர் பிரச்சினை தொடர்பான பிரேரணையை திரும்பப்பெற்றனர் முன்னணியினர் : செல்வராசா கஜேந்திரன்

“இந்தியத் தூதரக அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க மீனவர்களது பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அவர்களது முயற்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணையை இன்று விவாதத்துக்கு எடுப்பதைத் தவிர்த்துக்கொண்டுள்ளோம்.” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்,

“வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகிய நான் முன்மொழிந்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழிமொழிந்து விவாதத்தை ஆரம்பிக்கும் வகையில் எமது தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் குறித்த பிரேரணை இன்று பிற்பகல் 4.50 மணியளவில் விவாதத்துக்குக் கொண்டு வரப்படும் வகையில் நாடாளுமன்றில் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

குறிப்பாக எமது மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைத் தடுக்காது, அவர்களது வலைகள் அழிக்கப்படுவதையும், படகுகள் சேதமாக்கப்படுவதையும், மீனவர்கள் தாக்கப்படுவதையும், கொல்லப்படுவதையும் இலங்கைக் கடற்படையும் இலங்கை அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றமை தொடர்பில் குறித்த விவாதத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

இந்நிலையில், இன்று நண்பகல் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து அதிகாரி ஒருவர் தொடர்புகொண்டு, எம்மால் முன்னெடுக்கப்படவிருந்த விவாதம் தொடர்பில் கலந்துரையாடினார்.

அதன்போது நாம், எமது வட பகுதி மீனவர்களது கடற்தொழிலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில், இலங்கை கடற்படை நடவடிக்கை எடுக்காதது, எமது வடபகுதி மீனவர்களுக்கும் எல்லை தாண்டிவரும் மீனவர்களுக்கும் இடையில் மோதலைத் தீவிரப்படுத்தி பகைமையை வளர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் சபையின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் நாம் குறித்த விவாதத்தை ஏற்பாடு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்தோம்.

அதன்போது, தூதரக அதிகாரி, இந்தப் பிரச்சினை தொடர்பில் தமது தரப்பிலிருந்தும் தாம் அக்கறை செலுத்துவதாகவும், மேற்படி மீனவர் பிரச்சினையானது யாழ்ப்பாணத்திலும், தமிழகத்திலும் ஒரு நெருக்கடி மிகுந்த சிக்கல் நிலைக்கு வந்துள்ளதாகவும், அந்த நெருக்கடி நிலையைத் தாம் புரிந்து கொண்டுள்ளதாகவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் இப்பிரச்சினையைக் கட்டுப்படுத்துவதற்குத் தாம் முடிவெடுத்துள்ளதாகவும், தாம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளுக்கு வாய்ப்பளிக்கும் முகமாகக் குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

குறித்த தூதரக அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க மீனவர்களது பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அவர்களது முயற்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் குறித்த பிரேரணையை இன்று விவாதத்துக்கு எடுப்பதைத் தவிர்த்துக்கொண்டுள்ளோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரப் பகிர்வு குறித்து கவனத்திற்கொள்ளப்படும்: G.L.பீரிஸ் இந்தியாவில் தெரிவிப்பு

அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்தியா ஆர்வம் காட்டியுள்ளதாகவும் புதிய அரசியலமைப்பில் அது கவனத்திற்கொள்ளப்படும் எனவும் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் இந்தியாவில் தெரிவித்துள்ளார்.

13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சில தமிழ் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் The Hindu பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுவதாகவும் நிபுணர் குழுவொன்று அதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வு விடயம் சந்தேகத்திற்கிடமின்றி கவனத்திற்கொள்ளப்படும் என அமைச்சர் தனது இந்திய விஜயத்தின் போது The Hindu பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

எனினும், எதனை செய்தாலும் நாட்டில் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும் என்பதுடன், பாரியளவிலான எதிர்ப்பை எதிர்கொண்டால் களத்தில் செயற்படுவது கடினமாக இருக்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் பேசுவதற்கு தாம் முயற்சிகளை மேற்கொண்டு வருதாகவும் இலங்கையின் அரசியல் கட்சிகள், முதன்மையாக இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேச்சுவார்த்தை தொடர்பில் அறிவிக்கப்பட்டு 8 மாதங்களாகியும் ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெறாமை தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கும் அமைச்சர் பதிலளித்துள்ளார்.

COVID-19 உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் இதன்போது தலையீடு செய்ததாக தெரிவித்த அமைச்சர், விரைவில் அந்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என பதிலளித்துள்ளார்.