சீனாவை எதிர்க்கும் தைரியம் அரசாங்கத்தில் எவருக்கும் கிடையாது! – விஜேதாச ராஜபக்ச  

சீன உரக்கப்பல் விவகாரத்தில் இராஜதந்திர உறவை பாதுகாப்பதற்காக நஷ்டஈடு வழங்கப்படவில்லை சீனாவை எதிர்க்கும் தைரியம் அரசாங்கத்தில் எவருக்கும் கிடையாது என ஆளுந்தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அரசியல் ஆணவத்தில் எடுக்கும் தீர்மானங்களே நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் காரணமாகும். அமெரிக்க பிரஜையான அவரை இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் சட்ட ரீதியாக நிதி அமைச்சராக ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அவரை பதவி விலக்குவதற்காக ஜனவரியில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் வழங்கிய முழுமையான செவ்வி,

நிதி அமைச்சர்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அரசியல் ஆணவத்தில் எடுக்கும் தீர்மானங்களே நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் காரணமாகும். இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் பெயரைப் பயன்படுத்தி எரிபொருள் விலையை அதிகரித்து வெளிநாட்டுக்குச் சென்றார். தற்போது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை மக்களின் சாபத்திற்கு உள்ளாக்கிவிட்டு அவர் அமெரிக்கா சென்றுள்ளார். இவ்வாறான ஒருவரால் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று எவராவது எண்ணுவார்களாயின் அவர்கள் அங்கொடையிலுள்ள மன சிகிச்சை நிலையத்தில் இருக்க வேண்டியவர்களாவர்.

ஒரே நாடு – ஒரே சட்டம் செயலணி

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ருவன்வெலிசாயவில் பதவிப் பிரமாணம் செய்ததோடு மாத்திரமின்றி தான் சிங்கள பௌத்த வாக்குகளாலேயே அரச தலைவராக தெரிவு செய்யப்பட்டேன் கூறினார். இது ஏனைய மதங்களைப் பின்பற்றும் மக்கள் பௌத்தர்கள் மீது விரோதம் கொள்ள பிரதான காரணியாக அமைந்தது.

இவ்வாறான நிலையிலேயே தற்போது ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ அரச தலைவர் செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய பொறுப்பு நாடாளுமன்றத்தை மீறி ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக மதங்களுக்கிடையில் பழிவாங்கும் எண்ணங்களையே அரச தலைவர் ஊக்கப்படுத்தியுள்ளார். அது மாத்திரமின்றி மதகுமார்களுக்கிடையில் இவ்வாறான காரணிகளால் பிளவு ஏற்பட்டுள்ளது. பௌத்த சங்கங்கள் பிளவடையும் வகையில் செயற்பட்ட ஒரேயொரு அரச தலைவர் இவர் மாத்திரமேயாவார். இராணுவ மனநிலையைக் கொண்ட இவ்வாறான ஒருவரால் மக்களின் கஷ்டத்தை உணர முடியாது.

வரவு – செலவு திட்டம் சட்டரீதியானதல்ல

இம்முறை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரவு – செலவு திட்டம் சட்ட விரோதமானதாகும். காரணம் வெளிநாட்டு பிரஜையான பசில் ராஜபக்சவை அரசியலமைப்பின் பிரகாரம் சட்ட ரீதியாக நிதி அமைச்சராக ஏற்றுக் கொள்ள முடியாது.

காரணம் அவர் 1952 அமெரிக்க சட்டத்தின் படி அந்நாட்டு குடியுரிமையைப் பெற்ற போது அமெரிக்காவுடனான அனைத்து தொடர்புகளையும் பேணுவதாகவும் அமெரிக்காவின் அரசியலமைப்பை பாதுகாப்பதாகவும், அமெரிக்காவுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படும் போது ஆயுதம் ஏந்தி அந்நாட்டை பாதுகாப்பதாகவும் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

இவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்று சத்திப்பிரமாணம் செய்து கொள்ளும் இலங்கை பிரஜைகளின் குடியுரிமை இயல்பாகவே இரத்தாகும் என்று 1948 இல் சுதந்திரத்தின் பின்னர் டீ.எஸ்.சேனாநாயக்க முன்வைத்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சபதம்

இலங்கையின் குடியுரிமையைப் பெறாத ஒருவரால் எவ்வாறு நிதி அமைச்சு பதவியை வகிக்க முடியும்? அவரால் எவ்வாறு இரு நாடுகளினதும் அரசியலமைப்புகளை பாதுகாக்க முடியும்? எனவே தான் தற்போதைய நிதி அமைச்சரை சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுகின்றேன்.

நிதி அமைச்சரை பதவி நீக்குவதற்காக என்னால் தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 12 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்யவுள்ளேன். அதன் மூலம் நிதி அமைச்சரவை பதவி விலகச் செய்வேன்.

20 ஆவது திருத்தத்திற்கு நம்பியே வாக்களித்தோம்

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த இரட்டை குடியுரிமை விகாரம் தொடர்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 20 பேர் அரச தலைவரிடம் சில யோசனைகளை முன்வைத்திருந்தோம். அதன் போது 2021 நவம்பர் 18 ஆம் திகதிக்கு முன்னர் இந்த சர்ச்சைக்கு தீர்வு வழங்குவதாக வாக்குறுதியளித்தார்.

எனினும் அவரால் வழங்கப்பட்ட வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. அரச தலைவரின் வாக்குறுதிகளை நம்பியே 20 இற்கு நாம் வாக்களித்தோம்.

புதிய அரசியலமைப்பு சாத்தியமா?

இந்த அரசாங்கத்தின் கீழ் ஒருபோதும் புதிய அரசியலமைப்பை எதிர்பார்க்கக் கூடாது. இவர்கள் அதற்காக செயற்பட மாட்டார்கள். முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அவர்களின் ஆதரவின் ஊடாகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் 19 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்ட போது ஐக்கிய தேசிய கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 40 ஆசனங்களே காணப்பட்டன. எனினும் இதனை 216 வாக்குகளுடன் நிறைவேற்ற முடிந்தது. இதற்காக எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பணமோ பதவியோ வழங்கப்படவில்லை. காரணம் 19 ஆவது திருத்தம் மக்களுக்கானதாகக் காணப்பட்டது.

எரிவாயு அடுப்புக்களின் வெடிப்பும் எதிராக வழக்குகளும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது தமது பொறுப்பிலிருந்து விலகியவர்கள் சிறை செல்ல நேரிட்டது. அதே போன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களை அண்மித்த வெடிப்பு சம்பவங்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களும் சிறைசெல்ல வேண்டியேற்படும். அவ்வாறானவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் வழக்கு தொடர்வதற்கு நான் தயாராகிக் கொண்டிருக்கின்றேன்.

சீன உரக்கப்பல் விவகாரத்தில் இராஜதந்திர உறவை பாதுகாப்பதற்காக நஷ்டஈடு வழங்கப்படவில்லை. மாறாக அடிமைத்தனத்தின் காரணமாகவே அந்த நட்ட ஈட்டு தொகையை செலுத்த இணக்கம் தெரிவித்துள்ளனர். சீனாவை எதிர்க்கும் தைரியம் அரசாங்கத்தில் எவருக்கும் கிடையாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், சமையல் எரிவாயு விவகாரத்தைப் போலவே பேர்ள் கப்பல் விபத்துக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களும் ஒரு நாள் தண்டனையை அனுபவிப்பர்.

அரச தலைவர் விமர்சிக்கும் உரிமை உள்ளதா?

அரசாங்கத்தையும் அரச தலைவரினை விமர்சிப்பதால் எனக்கு எதிராக எவருக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது. காரணம் நான் கட்சி அரசியலமைப்பை மீறி செயற்படவில்லை. அரச தலைவர் எமது கட்சியின் அங்கத்தவர் கிடையாது. எனவே அவரை விமர்சிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது. ஆளுந்தரப்பிலுள்ள 75 சதவீதமானோர் எனது நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.

வரவு – செலவு திட்டம் என்பது பொதுசன பெரமுனவுடையதல்ல. அது நாடாளுமன்றத்திற்குரியது. நாடாளுமன்ற வரப்பிரசாதங்களுக்கமைய அதற்கு வாக்களிக்காமல் இருக்கக் கூடிய உரிமை எனக்கிருக்கிறது. நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலமைப்பை மீறி செயற்படவில்லை.

2022 இல் அதிகார மாற்ற புரட்சி நிச்சயம் ஏற்படும்

நாட்டில் தற்போது மிகவும் மோசமான சூழலே நிலவுகிறது. மக்கள் மத்தியில் கொரூரமும் , வன்முறையும் தலைதூக்கியுள்ளது. எனவே அவர்களை அடக்கி அரசாங்கத்தினால் முன்னோக்கிச் செல்ல முடியாது.

எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்றத்திற்குள் பாரிய ஆட்சி கவிழ்ப்பொன்று ஏற்படும். அவ்வாறில்லை எனில் அரசாங்கத்தில் அதிகார மாற்ற புரட்சி நிச்சயம் ஏற்படும் என்றும் அவர் தனது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடி நிலைமைக்கு அரசே முழுப் பொறுப்பு! – ஐக்கிய மக்கள் சக்தி

“ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தர பதவி விலகுவதால் நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. எனவே, தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு ஒட்டுமொத்த அரசும் பொறுப்புக்கூறவேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இரசாயன உரத்துக்குத் தடை விதித்துவிட்டு 24 மணிநேரத்துக்குள் சேதன பசளையை நோக்கி நகரும் தவறான முடிவை இந்த அரசு எடுத்தது. இதன் விளைவாக நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரிசித் தட்டுப்பாடு ஏற்படும். குறிப்பாக அடுத்த இரு மாதங்களில் அரிசி விலை 400 ரூபாவரை உயரும். தற்போது ஒரு கிலோ கீரி சம்பா 250 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது.

நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் அறிவித்தார். அவரின் அறிவிப்பு சரியானது. எனினும், அதற்காக அவர் பதவி விலக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய நிலைக்கு ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தரவே காரணம் எனச் சிலர் விமர்சிக்கின்றனர். அரசின் தவறாக முடிவுகளே காரணம். எனவே, ஒட்டுமொத்த அரசும் பொறுப்புக்கூற வேண்டும்” – என்றார்.

தமிழர் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் பேராயர் டெஸ்மண்ட் டுடூ – தமிழ்க் கூட்டமைப்பு இரங்கல்!

பேராயர் டெஸ்மண்ட் டுடூ அவர்களின் மறைவு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கை தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து ‘எல்டர்ஸ்’ குழு வெளியிட்ட அறிக்கைகளை நாம் நன்றியோடு நினைவு கூருகிறோம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராயர் டெஸ்மண்ட் டுடூ தென்னாபிரிக்காவில் இனவாதத்திற்கு எதிராகவும் உலகில் அனைத்து அநீதிகளுக்கு எதிராகவும் போராடியவர் மட்டுமல்லாது சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்குமாகவும் அயராது உழைத்தவர்.

உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றிய அவர் நீதியும் கருணையும் ஒன்றுக்கொன்று முரணானவையல்ல: பிரிக்க முடியாத முழுமையின் இரு அங்கங்கள் என்பதைக் காண்பித்தார். இயேசுவின் பிறப்பை உலகம் நினைவு கூரும் இவ்வேளையில் நிகழ்ந்த இவரது மரணம் இதனை திரும்பவும் எமக்கு ஞாபகப்படுத்துகிறது.

இலங்கை தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து ‘எல்டர்ஸ்’ குழு வெளியிட்ட அறிக்கைகளை நாம் நன்றியோடு நினைவு கூருகிறோம். தனது ஒரு புத்தகத்தின் தலைப்பான ‘மன்னிப்பு இன்றி எதிர்காலம் இல்லை’ என்பதை பேராயர் டுடூ வாழ்ந்து காண்பித்தார்.

எமது அனுதாபங்களை தென்னாபிரிக்க மக்களுக்கும் சமாதானத்தையும் சுதந்திரத்தையும் நேசிக்கும் உலக மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் இருந்து வெளியே வந்தார் நளினி

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி ஒரு மாத பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நளினியின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

அதனால் தமிழக அரசிடம் தனது மகளுக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தேன். இந்த கோரிக்கை மீது எந்த பதிலும் அளிக்காமல் தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. அதனால் தனது மகளுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு கேட்டு கொள்கிறேன் ” என அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆஜராகி “தமிழக அரசு நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்க முடிவு செய்துருப்பதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நளினிக்கு பரோல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் நளினிக்கு இன்று முதல் 30 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிடப்பட்டது.

அதனடிப்படையில் வேலூர் பெண்கள் சிறையில் இருந்து பரோலில் நளினி வெளியே வந்தார். வெளியே வந்த நளினி காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர், காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்குகிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் நளினி அவரது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக பரோலில் வெளியே வந்தார். அப்போது சத்துவாச்சாரியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிர்வாகி சிங்கராயர் என்பவரது வீட்டில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோசமான தீர்மானங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம் – முன்னாள் ஜனாதிபதி மைத்ரி

அரசாங்கத்தின் மோசமான தீர்மானங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றம் சாட்டியுள்ளார்.தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தை நினைவு கூர்ந்த மைத்ரிபால சிறிசேன, தனது பதவிக் காலம் முழுவதும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்றியதாக தெரிவித்தார்.நாட்டின் ஆட்சி முறைமையின் அடிப்படையிலேயே சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச தரப்புக்கள் நாட்டுக்கு உதவும் என தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகள் நாட்டிற்கு சாதகமாக இருக்கும் என நம்பினால் பேச்சுவார்த்தை நடத்த முடியும் எனவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்த்தால், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை உடன் நடவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.சட்டம் ஒழுங்கு, மனித உரிமை விவகாரங்களில் மோசமான நிலைமை காணப்பட்டால் அவ்வாறான உதவிகள் நாட்டுக்கு கிடைக்காது என அவர் கூறினார்.

அரசாங்கம் தற்போது பொருளாதார, அரசியல் மற்றும் சர்வதேச பிரச்சினைகளில் சிக்கியுள்ளது என்றும் அரசாங்கத்தின் மோசமான தீர்மானங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்துள்ளது என அவர் குற்றம் சாட்டினார்.நாட்டின் ஆட்சி முறைமையின் அடிப்படையிலேயே சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச தரப்புக்கள் நாட்டுக்கு உதவும் என தெரிவித்தார்.

Posted in Uncategorized

தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட கலாசார படுகொலை தொடர்கிறது- ரெலோ சபா.குகதாஸ்

தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து எவ்வாறு சிங்கள குடியேற்றங்களை பௌத்த சிங்கள ஆட்சியாளர்கள் சட்டவிரோதமாக மேற் கொள்கின்றார்களோ அதே போல தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலாசார இடங்களில் புத்தரைக் குடியேற்றி தமிழர் கலாசாரத்தை அழிக்கும் நடவடிக்கையையும் ஆட்சியாளர்கள் சட்டவிரோதமாக மேற் கொள்கின்றனர்” எனக் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ( ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமானசபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“தமிழர் தாயகத்தில் 1952 இருந்து 2009 வரை சிங்கள பேரினவாத அரசாங்கத்தால் பாரிய தமிழ் இனப்படுகொலை நடந்தேறியது அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழர் தாயகத்தின் நிலங்களை அபகரிக்கும் செயற்பாட்டுடன் தமிழர் கலாசாரத்தை அழிக்கும் நிகழ்ச்சி நிரல் தற்போதைய ஆட்சியாளர்களினால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவில் கடந்த காலம் தொடக்கம் ஆயிரக்கணக்கான சைவ ஆலயங்கள் சிங்கள ஆட்சியாளர்களினால் அழிக்கப்பட்டுள்ளது அதன் தொடர்ச்சியாக முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஆலயத்தில் நீதிமன்றத்தின் தடையை மீறி நிரந்தரமான பௌத்த விகாரை அமைக்கும் பணியை ஆட்சியாளர்கள் தொடர்கின்றனர் இச் செயற்பாடு நீதித்துறையை அவமதிப்பதுடன் திட்டமிட்ட தமிழர் கலாசாரம் தொடர்பான வரலாற்று ஆதாரங்களைஅழிக்கும் படுகொலை ஒன்று அரங்கேறியுள்ளது.

அண்மையில் பிள்ளையார் சிலைகளுடன் கடத்தல் காரர்கள் குழு அகப்பட்டனர் அவர்கள் கடத்திய சிலைகளுள் காங்கேசன் துறையில் சில வாரங்களுக்கு முன்னர் காணாமல் போன பிள்ளையார் சிலையும் காணப்பட்டுள்ளது உண்மையாக காங்கேசன் துறையில் பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த பிள்ளையார் ஆலயத்தின் முன்னால் சட்டவிரோதமாக அண்மையில் விகாரை ஒன்று சிறிலங்கா இராணுவத்தினரால் கட்டப்பட்டது அதன் பின்னணியில் பிள்ளையார் ஆலயத்தை அழிப்பதற்காக மேற் கொண்ட முதற் கட்ட முயற்சியே சிலை கடத்தல் இதுவும் திட்டமிட்ட தமிழர் கலாசாரப் படுகொலை.

இரண்டு நாட்களுக்கு முன்னர் மூதூரில் பிள்ளையார் சிலை அமையப் பெற்ற மலையில் பிள்ளையாருக்கு மேலே திடீரென புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது இவ்வாறு தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட பாரிய கலாசார படுகொலை சிங்கள ஆட்சியாளர்களினால் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து எவ்வாறு சிங்கள குடியேற்றங்களை பௌத்த சிங்கள ஆட்சியாளர்கள் சட்டவிரோதமாக மேற் கொள்கின்றார்களோ அதே போல தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலாசார இடங்களில் புத்தரைக் குடியேற்றி தமிழர் கலாசாரத்தை அழிக்கும் நடவடிக்கையையும் ஆட்சியாளர்கள் சட்டவிரோதமாக மேற் கொள்கின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

தமிழ்த் தலைமைகளால் மேற்கொள்ளப்படும் 13ஐ அமுல்படுத்தும் முயற்சியை வலுப்படுத்த வேண்டும் – இரா.துரைரெத்தினம்

தழிழர்களுக்கான தீர்வு சுயாட்சியாக இருந்தாலும் 13ஆவது திருத்தச் சட்டத்தை தற்காலிகமாவேனும் அமுல்படுத்தவதற்கு தமிழ்த் தலைமைகளால் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் வரவேற்க்கத்தக்கது. இதை வலுவுள்ளதாக மாற்றுவதற்கு  விடா முயற்சியுடன் செயற்படுமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை  உறுப்பினரும்  பத்மநாபா மன்றம்- ஈ.பி.ஆர்.எல்.எப் ன் தலைவருமான இரா.துரைரெத்தினம்  அறைகூவல் விடுத்துள்ளார்.

இவ்விடயம் குறித்து இன்றைய தினம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

1989ம் ஆண்டு இருந்து இன்றுவரையும் முப்பத்திமூன்று வருடங்களாக மாகாணமுறை நிருவாகம் அமுலில் உள்ளது. இது பாராளுமன்றத் சட்டத்திருத்தத்தில் உள்ளடக்கப்பட்ட ஒரு அரசியல் அதிகாரமாகும். இது இலங்கையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 13ஆவது திருத்தச்சட்ட அரசியல் அதிகாரத்திலுள்ள சில அதிகாரங்கள் மாகாண முறைமைக்குக் கீழ் கொண்டு வரப்படவில்லை. பல விடயங்கள் மத்திக்கும், மாகாணத்திற்கும் பொதுவாக உள்ளன. சில விடயங்கள் மட்டுமே மாகாணத்திற்கென தனியாக உள்ளன.

13ன்றைப் பொறுத்தவரையில் சிறுபான்மை இனத்திற்காக வடக்கு, கிழக்கை இணைத்து ஒரு மாகாண சபையாக இயங்கி வந்த நிலையில் பல அதிகாரங்கள் மாகாணசபை நிருவாகத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டன. காலப்போக்கில் இனவாத அரசினால் சில அதிகாரங்கள் இல்லாமலாக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணசபை 30.06.2006ம் ஆண்டு காலகட்டத்தில் வடக்கு, கிழக்கு இணைத்த முறைமை தவறென பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த  ஒருவரினால் வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டு வடக்கு, கிழக்கு மாகாண சபை நிருவாகம் கிழக்கு வேறாக, வடக்கு வேறாக பிரிக்கப்பட்டது.

இத்தோடு, மாகாண நிருவாகத்திற்கென உள்ளடக்கப்பட்ட அதிகாரங்களான பிரதேச செயலகத்திற்கு கட்டுப்பட்ட சில அதிகாரங்கள் இல்லாமலாக்கப் பட்டதோடு, பொலிஸ்அதிகாரங்கள், காணி அதிகாரங்கள்,  நிதி தொடர்பான  அதிகாரங்கள், விவசாய, நீர்பாசனத்தோடு சம்பந்தப்பட்ட அதிகாரங்கள், வரிஅறவீடு, பொதுச்சேவை மற்றும் பொதுநிருவாகத்தின் கீழுள்ள அதிகாரங்களை மத்திய அரசு கையில் எடுத்துக் கொண்டது.

குறிப்பிட்ட அதிகாரங்களை மத்தியஅரசு எடுத்துக் கொண்டாலும், இன்னும் சில அதிகாரங்கள் மாகாணசபை முறைமையின் கீழுள்ள நிலையில் முன்பு இல்லாமல் இருக்கும் அதிகாரங்களை மீளப் பெறுவதற்கும் தமிழர்கள் ஆகிய நாங்கள் உள்ளதை சிறப்பாக செய்வதற்கும் முயற்சிக்க வேண்டும்.

இதேவேளை அரசு சிறுபான்மை இனத்திற்கு உள்ள அதிகாரத்தை இல்லாமலாக்குவதோடு, புதிய அதிகாரங்களைத் தர மறுக்கின்ற செயல் வடிவத்தை இல்லாமலாக்குவதற்கும், சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டு சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த தமிழ்த் தலைமைகள் செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.

கடந்த காலத்தில் மாகாணசபையை அதிகாரம் உள்ளதாக மாற்றுவதற்கு தமிழ்த்தலைமைகள் எந்தளவிற்கு வலுவாகச் செயல்பட்டன.விரும்பிச் செயல் பட்டன என்பதை மீளாய்வு செய்து கொண்டு  விட்ட தவறுகளை சுயவிமர்சனம் செய்து கொண்டு எதிர் காலத்தில் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்க தமிழ்த்தலைமைகள் கூடிப்பேசி ஒரு தீர்மானத்திற்கு வந்தது நல்ல முண்ணுதாரணமாகும்.

ஆட்சி செய்யும் அரசுடன் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட அதிகாரங்களை ஒவ்வொன்றாகப் பெறுவதற்கும் சமூகநலன் தொடர்பாக விகிதாசார முறையில் அபிவிருத்தி செய்வதற்கும் அரசுடன் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆளும் தரப்புடன் பேசுவதூடாகவே பிரச்சினைகளை தீர்க்க முடியும். கடந்த காலங்களில் மத்தியஅரசு தமிழர்களுக்கு எதிரான வினோதமான செயற்பாடுகளில் செயல்பட்டு வந்தது மட்டுமல்லாமல் இது தொடர்ந்த வண்ணமே உள்ளன.

அதிகாரப் பரவலாக்கலையும், அபிவிருத்தியையும் சமூகம் ஏற்றுக் கொண்ட நிலையில் தமிழ்த்தலைமைகள் இவ்விடயத்தில் உள்ளடக்கப்பட்ட அதிகார பரவலாக்கல் தொடர்பாக கூடி முடிவெடுக்கப்பட்டது தமிழர்களின் மத்தியில் நல்லதொரு விழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத் தலைமைகள் சிறப்பாக இவ்விடயத்தை செயல்படுத்த வேண்டுமென மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

Posted in Uncategorized

வெளிநாட்டு அமைச்சு திடீர் தீர்மானம்!

நைஜீரியாவின் அபுஜாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் மற்றும் சைப்ரஸின் நிக்கோசியாவில் உள்ள இலங்கையின் துணைத்தூதரகம் போன்ற வெளிநாடுகளில் உள்ள மூன்று தூதரகங்கள் / பணிமனைகளை 2021 டிசம்பர் 31ஆந் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடுவதற்கு வெளிநாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு வௌிநாட்டு அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்ற இந்தத் தீர்மானமானது, வெளிநாட்டு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகளின் வலையமைப்பின் மறுசீரமைப்புச் செயன்முறையின் ஒரு பகுதியாகும். உலகளாவிய தொற்றுநோயால் முன்வைக்கப்படும் கடுமையான பொருளாதார சவால்களின் பின்னணியில் இருதரப்பு உறவுகளை திறம்பட முன்னெடுப்பதனை உறுதி செய்யும் அதே வேளையில், நாட்டிற்குத் தேவையான வெளிநாட்டு இருப்புக்களைப் பாதுகாத்தல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்கள் / பணிமனைகளைப் பராமரித்தல் தொடர்பான செலவீனங்களைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

தெரிவு செய்யப்பட்ட மூன்று தூதரகங்கள் / பணிமனைகள் மூடப்பட்டவுடன், இருதரப்பு அரசியல், பொருளாதாரம், கலாச்சார உறவுகள் மற்றும் தூதரக செயற்பாடுகளைப் பராமரித்தல் உள்ளிட்ட அவற்றின் செயற்பாடுகள் அங்கீகாரம் பெற்ற தூதரகங்களின் கீழ் வரும் அதே வேளையில், அபுஜா மற்றும் நிக்கோசியா ஆகியவற்றின் விடங்கள் இலங்கையின் வதிவிடமல்லாத உயர்ஸ்தானிகராலயங்கள் / தூதரகங்களால் மேற்கொள்ளப்படும். இது சம்பந்தமாக, கென்யாவின் நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக நைஜீரியாவுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், ஆபிரிக்காவில் உள்ள ஏனைய நாடுகள் முறையே அபுஜாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாகவும், கெய்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகம், எகிப்து மற்றும் நைரோபியில் உள்ள உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாகவும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளன. பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத்தூதரகத்தின் செயற்பாடுகள், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு, அத்துடன் பிராங்பேர்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கைப் பிரஜைகளின் கொன்சியூலர் விவகாரங்கள் ஆகியன ஜேர்மனியின் பேர்லினில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் வரும்.

இத்தாலியின் ரோமில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம் சைப்ரஸிற்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் வழங்கப்படுவது தற்போதைய நடைமுறையின்படி சைப்ரஸுடனான இலங்கையின் இருதரப்பு உறவுகளைக் கையாள்வதன் மூலம் தொடரும். நிக்கோசியாவில் உள்ள துணைத் தூதரகத்தால் கையாளப்படும் தூதரகப் பணிகள் ரோமில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் கொண்டு வரப்படும். எவ்வாறாயினும், வழக்கமான அடிப்படையில் கவனிக்கப்பட வேண்டிய சைப்ரஸில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் சுமார் 6,000 இலங்கை ஊழியர் சமூகத்தின் குறிப்பிடத்தக்க தூதரக மற்றும் நலன்புரித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நிக்கோசியாவைத் தளமாகக் கொண்ட பொருத்தமான தகுதி வாய்ந்த கௌரவ தூதுவரை உடனடியாக நியமனம் செய்வதற்கு வெளிநாட்டு அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறு நியமிக்கப்பட்ட கௌரவ தூதுவர், ரோமில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயற்படுவார். வெளிநாட்டு அமைச்சு சைப்ரஸில் உள்ள மாறுதல் செயன்முறையை உன்னிப்பாகக் கண்காணித்து, ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், பொருத்தமானதாகவும் அவசியமானதாகவும் கருதப்படும் மேலதிக தீர்வுகளை எதிர்காலத்தில் வழங்கும்.

செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் இருந்தபோதிலும், வெளிநாட்டு அமைச்சு அனைத்து நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளை உகந்த அளவில் பராமரிக்கவும், ஏற்றுமதி, வெளிநாட்டு நேரடி முதலீடு, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருளாதார இராஜதந்திரத்தில் விஷேட கவனம் செலுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை நோக்கங்களை நிறைவேற்றவும் அதிக முன்னுரிமை அளித்து வருகின்றது. வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்திற்கான அவர்களது நேரடி மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களின் நலன் மற்றும் வினைத்திறனான செயற்பாடுகளைப் பாதுகாப்பதற்கு அமைச்சு அதிக கவனம் செலுத்துகின்றது. இலக்குகளை அடைவதற்கான தூதரகங்கள் / பணிமனைகளின் பிந்தைய தேவைகளின் தொடர்ச்சியான மதிப்பீடனது, வெளிநாட்டு அமைச்சினால் வெளிநாட்டு அமைச்சு மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் தூதரக / பணிமனைத் தலைவர்கள், நிதி மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சுக்கள், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகள், வர்த்தகத் திணைக்களம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, இலங்கை முதலீட்டு சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் உட்பட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய உள்ளக மற்றும் வெளியக ஆலோசனை செயன்முறையின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. அடையாளம் காணப்பட்ட மூன்று தூதரகங்கள் / பணிமனைகளை தற்காலிகமாக மூடுவதற்கான தீர்மானம் தொடர்ச்சியான மீளாய்வுக்கு உட்பட்டு, தேவையானதாக கருதப்படும் சம்பந்தப்பட்ட வதிவிடத் தூதரகங்கள் / பணிமனைகளை மீண்டும் நிறுவுவது குறித்து பரிசீலணை செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

திருமணங்களுக்கு “பாதுகாப்பு தடைநீக்கல் அறிக்கை” கட்டாயம்

வெளிநாட்டவர்களை பதிவு திருமணம் செய்துகொள்ளும் இலங்கையர்கள், பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து “பாதுகாப்பு தடைநீக்கல் அறிக்கை” பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்களை திருமணம் செய்துகொள்ளப்போகும் இலங்கையர்களின் திருமணம் மேலதிக மாவட்டப் பதிவாளர் ஊடாக மாத்திரமே பதிவு செய்துகொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நபர்களைப் பதிவு திருமணம் செய்துகொள்வதால் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுப்பதற்காகவும், மேலும் சமூக சிக்கல்களை குறைப்பதற்காகவுமே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  பதிவாளர் நாயகம் வௌியிட்டுள்ள சுற்றுநிரூபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையர்களை திருமணம் செய்துகொள்ள விரும்பும் வெளிநாட்டவர்கள் அந்தந்த நாடுகளின் பாதுகாப்புப் பிரிவிடமிருந்து குற்றவாளி  அல்ல என்பதற்கான சான்றிதழின் மூலப் பிரதியை, அவரின் சுகாதார நிலைமைகள் தொடர்பான அறிக்கை என்பனவும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தமிழர்களின் கலை வரலாற்றில் புலிகளின் காலம் பொற்காலம்

தமிழர்களின் கலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற கலாலயத்தின் வெளியீடான ‘விழுதொலிகள்’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், போர் முடிந்ததன் பின்னரான காலப்பகுதியில் கலைஞர்கள் தங்களின் படைப்புக்களுக்கு உரித்தான அந்தஸ்து கிடைப்பதில்லை என்பதான ஒரு குற்றச்சாட்டு கலைஞர்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது என்றார்.

உண்மை தான், எம்மவர்கள் இந்த மண்ணில் இருந்தபோது கலைகளையும் கலைஞர்களையும் வளர்க்க விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் என்ற பிரிவு உருவாக்கப்பட்டு, அதனூடாக பாரம்பரிய கலைகளையும் பண்பாட்டையும் வளர்த்திருந்தார்கள் எனவும், அவர் கூறினார்.

‘தமிழர்களின் கலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலமே பொற்காலம் ஆகும்.

‘கலைஞர்களும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆற்றிய பங்கும் மகத்தானது. தங்களின் கலைப்படைப்புக்களால் போராட்டத்தின் பக்கம் மக்களை எழுச்சிகொள்ள வைத்தவர்கள் என்றால் மிகையில்லை.

‘கலைஞர்களும் இந்த மண்ணில் மீளும் சிறப்பாக உரிய அந்தஸ்தத்தோடு வாழும் காலம் உருவாக்ப்படும்’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized