அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகை ஆசிரியர்களை புறக்கணித்த கோட்டாபய

அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு அரசதலைவர் கோட்டாபய ராஜபக்சவால்  அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளிவந்துள்ளன.

அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச நேற்று பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்கு, சில பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

குறிப்பாக அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகைகளின் ஆசிரியர்களே இவ்வாறு அழைக்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அரசதலைவரின் ஊடகப் பிரிவில் இருக்கும் சிலர், திட்டமிட்டே இவ்வாறு அழைக்காமல் புறக்கணித்துள்ளனர்.

Posted in Uncategorized

யாழ். பல்கலை மாணவர்களுக்கெதிரான குற்றப்பத்திரிகை தாக்கல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் 2019 மே 03ஆம் திகதி இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் உள்ள சான்றுப்பொருள்களை பாரப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு மே 3ஆம் திகதி இராணுவத்தினர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திலும், விடுதிகளிலும் பெருமெடுப்பில் சோதனைகளை முன்னெடுத்தனர். நூற்றுக்கணக்கான படையினர் இந்த தேடுதலில் ஈடுபட்டனர்.

இந்த தேடுதலின் போது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறையில் இருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படம் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பான சில பதாதைகள், உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இராணுவ அதிகாரியால் எழுத்து மூல ஆவணம் ஒன்று பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அன்றைய தினம் முன்னிரவு யாழ்ப்பாணம் நீதிவானின் இல்லத்தில் மாணவர்கள் இருவரும் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

மாணவர்கள் இருவர் மீதும் பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் உப விதிகளின் கீழான ஏற்பாடு மற்றும் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பட்டயம் ஆகிய நான்கு ஏற்பாடுகளின் கீழ் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதனால் மாணவர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யும் விண்ணப்பத்தை நிராகரித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய கட்டளை மீது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

நான்கு குற்றச்சாட்டுகளில் மேன்முறையீட்டு நீதிமன்றால் மட்டும் பிணை வழங்கக் கூடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டை மீளப்பெறுமாறு கோப்பாய் பொலிஸாருக்கு சட்ட மா அதிபரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் 13 நாள்களின் பின்னர் மே 16ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சுமார் 30 மாதங்களின் பின்னர் யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் 2019 மே 3ஆம் திகதி நடத்திய தேடுதலில் மருத்துவபீட சிற்றுண்டிச்சாலையில் திலீபனின் ஒளிப்படம் ஒட்டப்பட்டிருந்தமையை அடுத்து சிற்றுண்டிச்சாலை நடத்துனர் கைது செய்யப்பட்டார். அவர் 12 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் மீதான வழக்கு பொலிஸாரினால் மீளப்பெறப்பட்டது.

20வது திருத்த சட்டத்தின் மூலம் ராஜபக்ச குடும்பத்தினருக்கே நன்மை

20வது திருத்த சட்டத்தின் மூலம் ராஜபக்ச குடும்பத்திற்கே பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றது ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ண் தெரிவித்தார்.

இன்று (28) நுவரெலியா – இராகலை சென்.லெனாட்ஸ் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவிக்கின்ற பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணனுக்கு ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து ஒரு தொகை பொருட்கள் (2.12.2021) வலப்பனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெருந்தோட்ட மக்களுக்கும், கிராமபுற மக்களும் நுவரெலியா – இராகலை சென்.லெனாட்ஸ் ஆலய மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளர் விஷ்வா புஷ்பநாதன், வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்களான தமிழ்மாறன் ஜனார்த்தன், அ.ஹரிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்,

நல்லாட்சி அரசாங்கம் 19 வது திருத்த சட்டத்தை கொண்டு வந்து பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கியது. ஆனால் அந்த நல்லாட்சியில் எதுவும் சரியாக நடைபெறவில்லை அதற்கு காரணம் ஜனாதிபதிக்கு அதிகாரங்கல் இல்லாமையே என்று கூறி இந்த அரசாங்கம் 20 வது திருத்த சட்டத்தை கொண்டு வந்து ஜனாதிபதிக்கு எல்லா அதிகாரங்களையும் கொடுத்தது. எல்லா பிரச்சினைகளையும் ஒருவரால் தீர்த்துவிட முடியும் என்று கூறியே இந்த அதிகாரங்களை ஜனாதிபதிக்கு கொடுத்தது.

ஆனால் பிரச்சினைகள் தீர்ந்ததா? இல்லை எல்லா பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே போகின்றது.எனவே இந்த 20வது திருத்த சட்டத்தின் மூலம் எந்தவிதமான பயனும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.இந்த அதிகாரத்தின் மூலமாக ஜனாதிபதியால் எதனையும் சாதிக்க முடியவில்லை.ஒரு விடயம் நடந்திருக்கின்றது இந்த சட்டத்தின் மூலமாக ராஜபக்ச குடும்பத்திற்கு பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றது ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற பொழுது அன்று அனைவரும் நினைத்தார்கள் இனிமேல் இந்த நாட்டில் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று நினைத்து அன்று 69 இலட்சம் மக்களும் வாக்களித்து இனறைய ஜனாதிபதியையும் பிரதமரையும் தெரிவு செய்தார்கள்.

ஆனால் நாங்கள் மலையக மக்களுக்கு கூறினோம் எங்களுக்கு வாக்குரிமையை பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் மறைந்த ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாச எனவே அவருடைய மகன் சஜித் பிரேமதாசவிற்கு எங்களுடைய வாக்குகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம். அதன்படி 60 வீதமான எங்களுடைய மக்கள் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தார்கள். ஆனால் நாட்டில் ஏனைய பகுதியில் இருந்த மக்கள் செய்த தவறின் காரணமாக நாம் இன்று 40 வருடங்கள் பின்நோக்கி சென்றுவிட்டோம்.மீண்டும் எல்லா பொருட்களுக்கும் வரிசையில் நிற்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

இன்று இந்த அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்களே இந்த அரசாங்கத்தை விமர்சனம் செய்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. நான் நினைக்கின்றேன் இன்று எதிர்கட்சியைவிட அரசாங்கத்தை அதிகம் விமர்சனம் செய்வது ஆளும் கட்சியின் அமைச்சர்களே.

இன்று அரசாங்கம் எந்த திட்டத்தை முன்வைத்தாலும் அதனை நடைமுறைபடுத்த முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை பொருட்களுக்கு விதித்தாலும் அதனை யாரும் கண்டு கொள்வதில்லை. இன்று உரத்தின் விலை ஒரு மூடை 9000 ஆயிரமாக இருக்கின்றது. இந்த விலைக்கு உரத்தை வாங்கி விவசாயிகள் இலாபம் அடைய முடியுமா? இன்றைய மரக்கறிகளின் விலையை மக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதே போல அரிசியின் விலையையும் மக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இன்று இலங்கையில் இருந்து அநேகமானவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கே முயற்சி செய்கின்றார்கள்.அநேகமாக அனைவரும் கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றார்கள்.

இலங்கைக்கு ஆபத்தின் பொழுது உதவுவது இந்தியா என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஆனால் அதே நேரத்தில் சீனாவும் எங்களுக்கு உதவி செய்கின்றது. அதற்காக அவர்கள் எங்களிடம் இருந்து எதையாவது எதிர்பார்க்கின்றார்கள்.அது நடைமுறை ஏனென்றால் அவர்கள் கடன் கொடுக்கின்ற பொழுது எதனையாவது எதிர்பார்ப்பார்கள். ஏனென்றால் யாரும் யாரையும் நம்பி கொடுக்கின்ற ஒரு நிலைமை தற்பொழுது இல்லை.

எனவே நாம் எமது பொருளாதாரத்தை பாதுகாத்து கொள்ள வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக எதையாவது விட்டுக் கொடுக்க வேண்டிய ஒரு நிலைமையிலேயே நாங்கள் இருக்கின்றோம். எனவே நாங்கள் அனைவரும் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

Posted in Uncategorized

மனோ கணேசனுக்கு தமிழில் அழைப்பாணை

கடந்த ஆட்சிக்கு முந்தைய ஆட்சியின் போது நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்களை விசாரிக்க, கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் அதன் செயலகம் தொடர்பாக இந்த ஆட்சியின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, சார்பாக ஆணைக்குழுவின் செயலாளர் எச். எம். பீ. பி. ஹேரத், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனை இம்மாதம் 29ம் திகதி விசாரணைக்கு சமூகம் அளிக்கும்படி கோரி தமிழ் மொழியில் அழைப்பாணையை மனோவின் இல்லத்துக்கு அந்த வலய பொலிஸ் நிலையம் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு சமூகம் அளிக்கும்படி, கடந்த வாரம் தனி சிங்கள மொழியில் இந்த அழைப்பாணை மனோ கணேசனுக்கு அனுப்பட்ட போது, அதை ஏற்க மறுத்து தமிழ் மொழியில் அழைப்பாணையை அனுப்பும்படி மனோ கூறி இருந்தார். இந்நடவடிக்கை ஊடகங்களில் பேசுபொருளாக இருந்தது.

இந்நிலையில் தற்போது தமிழ் மொழியில், இந்த அழைப்பாணையை மனோ எம்பியின் இல்லத்துக்கு அந்த வலய பொலிஸ் நிலையம் மூலம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சார்பாக ஆணைக்குழுவின் செயலாளர் எச். எம். பீ. பி. ஹேரத் அனுப்பி வைத்துள்ளார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தம், 13, தமிழர் அரசியல்!

யதீந்திரா-

அனைவருமாக இணைந்து இந்தியாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைப்பது தொடர்பில், 11 தமிழ் கட்சிகளிடையே இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. இது ஒரு வரலாற்று சம்பவம். இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, இதனை குழப்புவதற்கும் பல முயற்சிகள் இடம்பெற்றிருந்தன. தேசியத்தை கைவிட்டுவிட்டனர், 13இற்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முடக்க முற்படுகின்றனர், 1987இற்கு பின்னர் இத்தனை உயிர்கள் போனதெல்லாம் எதற்காக – இப்படியான பலவாறான அலங்கார நச்சு வரிகள் இதற்காக பயன்படுத்தப்பட்டன. எனினும் இந்த விடயத்தில் அனைத்து தரப்பினரும் உறுதியாக இருந்தமையால், இந்த முயற்சி இணக்கப்பாட்டை எட்டியிருக்கின்றது. ஆரம்பத்தில் இந்த முயற்சியில் இணைந்து கொள்ளாத இலங்கை தமிழரசு கட்சி இறுதியில் இணைந்து கொண்டது. எனினும் இறுதி ஆவணத்தில் அனைவரும் கையெழுத்திடும் வரையில் இந்த முயற்சியின வெற்றி எதோவொரு வகையில் ஊசலாடிக் கொண்டுதான் இருக்கின்றது. சம்பந்தன் ஒரு வேளை மேலும் இழுத்தடித்து, மேலும் குழப்பலாம். ஒரு வேளை, சம்பந்தன் தொடர்ந்தும் இழுத்தடித்தால், அவர் இந்தியாவை நோக்கிச் செல்வதை விரும்பவில்லை என்பதே அதன் பொருள். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால், சம்பந்தனை தவிர்த்துவிட்டு விடங்களை முன்னெடுப்பதுதான் சரியானது. ஒரு தனிநபருக்காக இத்தனை கட்சிகள் காத்திருக்க வேண்டியதில்லை.

இந்த முயற்சியுடன், கஜேந்திரகுமார் தலைமையிலான, தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து கொண்டிருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். 13வது திருத்தச்சட்டத்தை ஒரு ஆரப்பப்புள்ளியாக கூட ஏற்க முடியாதென்னும் நிலைப்பாட்டை கஜேந்திரகுமார் வெளிப்படுத்திவருகின்றார். ஆனால் உண்மையில், இது 13வது திருத்தச்சட்டம் தொடர்பான விடயமல்ல. அடிப்படையில், இது இந்தியாவை கையாளுவது தொடர்பான விடயமாகும். அதே வேளை, கூட்டமைப்பின் கட்சிகளோ அல்லது இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கும் ஏனைய தமிழ் தேசிய நிலைப்பாடுடைய கட்சிகள் எவையுமே, 13வது திருத்தச்சட்டம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்று எந்தவொரு இடத்திலும் கூறவில்லை. அதனை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. 13வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட காலத்திலேயே, இது தொடர்பில் இந்திய தரப்பிற்கு விபரமாகவே சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. எனவே 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் இப்போது வகுப்பெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த விடயத்தை சற்று மாறுபட்ட வகையில் சிந்திக்க வேண்டும். 13வது திருத்தச்சட்டத்திற்குள் என்ன இருக்கின்றது? – இப்படிக் கேட்பவர்கள் சமான்யர்கள். ஆனால் இன்றைய அரசியல் சூழலில், 13வது திருத்தச்சட்டத்தை ஏன் கையிலெடுக்க வேண்டும்? – அதன் முக்கியத்துவம் என்ன? இந்த அடிப்படையில் சிந்தித்தால், அது ஒருவரது அரசியல் முதிர்ச்சியை காண்பிக்கும். இப்போது தமிழ் மக்களுக்கு தேவை ராஜதந்திர நோக்கிலான அரசியல் நகர்வுகளாகும். வெறும் சுலோகங்களும், வெற்று நம்பிக்கைகளும் பயனற்றவவை. இந்த அடிப்படையில்தான் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சியை நாம் பார்க்க வேண்டும். ஒரு புறம் கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றது. வாய்ப்பு கிடைத்தால், மாகாண சபை முறைமையை முற்றிலும் இல்லாமலாக்குவது தொடர்பிலேயே அவர்கள் சிந்திக்கின்றனர். மாகாண சபைக்கு மாறாக, மாவட்ட சபை முறைமையொன்றை முன்வைப்பதற்கும் அவர்கள் முயற்சிப்பதாக தெரிகின்றது. அதே வேளை தற்போதிருப்பதை விடவும், மத்தியில் மேலும் அதிகாரங்களை குவிப்பதற்கான, ஜனாதிபதியை மேலும் அதிகாரமுள்ளவராக ஆக்குவதற்கான முயற்சியாகவே அவர்களது அரசியல் யாப்பு இருக்கும். அப்படியானதொரு அரசியல் யாப்பு வருவது நல்லதா – அல்லது, இப்போது இருக்கின்ற ஓரளவு பாதுகாப்பு ஏற்பாடுகளையாவது பாதுகாத்துக் கொள்வது சிறந்ததா? இப்போதிருக்கும் ஓரளவு சாதகமான விடயங்களை கூட, இல்லாமலாக்குவதை ஆதரிப்போர் உண்மையில் யாருடைய சேவகர்கள்? ஏனெனில் அதுதான் கோட்டபாய ராஜபக்ச தரப்பின் இலக்கு.

இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில் ஆரவாரமான தமிழ் கதைகள் பல சொல்லப்பட்டாலும் கூட, கடந்த 12 வருடங்களில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை. குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் எந்தவொரு முன்னேற்றகரமான விடயங்களும் இதுவரையில் நடைபெறவில்லை. கட்சிகளுக்கிடையிலான கொழும்பு சந்திப்பின் போது, சம்பந்தன், தான் – 13வது திருத்தச்சட்டத்தை தாண்டி சென்றுவிட்டதாக வாதிட்டிருக்கின்றார். இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்பங்களில் அவர் இப்படித்தான் கூறியிருக்கின்றார். ஆனால் சம்பந்தனின் முயற்சிகள் எவையாவது செயல்வடிவம் பெற்றிருக்கின்றதா? அரசியல் தீர்வு விடயத்தில் கடந்த 12 வருடங்களில் சம்பந்தன் சாதித்தது என்ன? 13வது திருதத்தை, ஒர் ஆரம்பப் புள்ளியாகக் கூட ஏற்றுக்கொள்ள முடியாதென்று கூறும் கஜேந்திரகுமார் சாதித்தது என்ன? இதுவரை விவாதிக்கப்பட்ட அனைத்துமே உதட்டளவு விடயங்கள் மட்டும்தான். செயலில் எதுவும் நிகழவில்லை.

இது தொடர்பில் எனது முன்னைய பத்திகளிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்வு முயற்சிகளில், இன்றுவரையில், நின்று நிலைக்கும் ஒரேயொரு விடயம், 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையலான, மாகாண சபை முறைமை ஒன்றுதான். இதற்கு காரணம் அது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அங்கமாக இருப்பதுதான். இந்த விடயமும் இல்லாதொழிக்கப்படுமாக இருந்தால், தமிழ் மக்களுக்கு இலங்கைத் தீவில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு சாதகமான விடயமும் கைநழுவிவிடும். இது தொடர்பில் தமிழர்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் சிலர் வாதிடலாம் ஆனால், அவ்வாறு கூறுபவர்களிடம் இருக்கின்ற மாற்று திட்டம் என்ன? அவர்களால் தங்களின் மாற்று திட்டங்களை மக்கள்முன் வைக்க முடியுமா? வரலாம் – வரக் கூடும், அப்படியும் இப்படியும் நடக்கலாம் என்று கூறுவதை, எவர் வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகலாம். அதற்கு அரசியல் ஞானம் தேவையில்லை. சாமானிய அறிவுபோதுமானது. ஒரு விளைச்சல் பற்றி ஆடம்பரமாக வர்ணிக்கலாம்- ஆனால், அறுவடையென்பது, இறுதியாக அடுக்கப்படும் நெல் மூட்டைகளின் எண்ணிக்கையாகும்.

1972, 1978 அரசியல் யாப்புக்களை தமிழ் தலைமைகள் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. தமிழ் மக்களின் பங்குபற்றலின்றியே அரசியல் யாப்புக்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், தமிழர்களால் என்ன செய்ய முடிந்தது? தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத அரசியல் யாப்பின் கீழ்தானே, தமிழர்கள் ஆட்சி செய்யப்பட்டனர். இதுவரையில் தமிழ் தலைமைகள் சிங்கள தலைமைகளோடு மேற்கொண்ட உன்பாடுகள் எவையுமே வெற்றிபெறவில்லை. இதில் இறுதியாக இடம்பெற்றதுதான் கூட்டமைப்பு – 2015 கூட்டரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பிற்கான முயற்சி. இவ்வாறு சிங்கள தரப்புகளோடு செய்யப்பட்ட உடன்பாடுகள் ஒரு தலைப்பட்சமாக கிழித்து வீசப்பட்ட போது, தமிழ் தலைமைகளால் என்ன செய்ய முடிந்தது? தமிழ் மக்களின் நியாயத்திற்காக எவர் வந்து தலையீடு செய்தார்? இந்த நிலையில் மீண்டுமொரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் கூட, புதிய அரசியல் யாப்பிற்கான முயற்சியொன்றில் ஈடுபடுவதற்கான வாய்பில்லை. ஏனெனில் ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் தோல்வி அவர்களுக்கான படிப்பினையாக இருக்கும்.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும், அதற்கான பொறுப்பு இந்தியாவிற்குண்டு, என்னும் கோரிக்கையை தமிழ் பேசும் கட்சிகள் அனைத்தும் ஓரு குரலில் முன்வைக்க முயற்சிக்கின்றனர். இதில் என்ன தவறுண்டு? இந்த முயற்சி அடிப்படையில் எதேச்சாதிகார அரசியல் யாப்பு ஒன்றை எதிர்ப்பதற்கான முதல் அடியாகும். ஏனெனில், கோட்டபாய ராஜபக்ச அணியினர், புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டுவருவதன் ஊடாக, 13வது திருத்தச்சட்டத்தில், அவர்களுக்கு நெருடலாக இருக்கின்ற விடயங்களை தூக்கிவிடலாம் என்றே எண்ணுகின்றனர். இந்திய வெளிவிவகார செயலருடனான சந்திப்பின் போது – 13வது திருத்தச்சட்டத்தில் சாதகமான, அதே வேளை பாதகமான அம்சங்கள் இருப்பதாக கோட்;டபாய குறிப்பிட்டிருந்தார். அது என்ன பாதகமான அம்சங்கள்? 13வது திருத்தச்சட்டத்தில் உள்ளடங்கியுள்ள, பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் அத்துடன் இரண்டு மாகாண சபைகள் இணைந்து செயற்பட முடியுமென்னும் ஏற்பாடுகளைத்தான் அவர் பாதகமான விடயங்களென்று கூறுகின்றார். இவ்வாறானதொரு சூழலில் தமிழ் கட்சிகள் என்ன செய்ய வேண்டுமோ – அதனைத்தான் தற்போது அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மேற்கொண்டிருக்கின்றன. இந்தியாவை நோக்கி செல்ல வேண்டுமென்னும் வாதத்தை இந்த கட்டுரையாளர், 2010இலிருந்து முன்வைத்து வருகின்றார். ஏனெனில், அருகிலிருக்கும் பிராந்திய அரசை தவிர்த்துவிட்டு, உலகெங்கும் அலைவதால் பயனில்லை. இந்தியாவை தவிர்த்து, புறம்தள்ளி, எந்தவொரு நாடும் ஈழத் தமிழர்களுக்கு உதவப் போவதில்லை. இதுதான் ஈழத் தமிழர்களுக்கான புவிசார் அரசியல் தலையெழுத்து.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை வலியுறுத்துகின்றோம் ஆனால் 13யை நிராகரிக்கின்றோம் என்று ஓரு சிலரும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றோம் ஆனால், 13வது திருத்தச்சட்டத்தை ஒரு ஆரம்ப புள்ளியாகக் கூட ஏற்றுக்கொள்ள மாட்டோமென்று, இன்னும் சிலரும் – வாதிடுவதை காணமுடிகின்றது. உண்மையில் இந்த இரண்டு வாதங்களும் அப்பாவித்தனமானவை. இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாகியதன் பின்னால், இந்தியாவின் நலன்கள் பற்றி கரிசனை இருந்தது உண்மையாயினும், ஒப்பத்தத்தின் அடி நாதமாக இருந்தது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை காண்பதுதான். அது எப்படியான தீர்வாக இருக்க வேண்டுமென்பது தொடர்பில்தான் திம்பு பேச்சுவார்தையில் விவாதிக்கப்பட்டது. எனினும் ஜெயவர்த்தன அரசாங்கம் பல்வேறு கோரிக்கைகளை ஏற்க மறுத்த காரணத்தினால், தமிழ் தலைமைகளின் முழுமையான எதிர்பார்ப்புக்கள் நிறைவேறவில்லை. எனினும் தான் எடுத்துக் கொண்ட விடயத்தில் பின்வாங்க விரும்பாத ராஜீவ்காந்தி, மாகாண சபை முறைமையின் கீழான அரசியல் தீர்வொன்றை ஏற்குமாறு தமிழ் தலைமைகளை கோரினார். முதலில் இதனை ஏற்றுக் கொள்ளுங்கள், பின்னர் நிங்கள் எதிர்பார்க்கும் விடயங்களை நான் செய்துதருவேன் என்றும் அவர் குறிப்பிட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த பின்புலத்தில் வந்ததுதான் இலங்கை அரசியிலமைப்பின் 13வது திருத்தச்சட்டம் மற்றும் மாகாண சபைகள் சட்டம். 1987, நவம்பர் மாதம் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 1988இல், ஜெயவர்த்தன, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒரு அலகாக இணைப்பதாக அறிவித்தார். 1988 நவம்பர் மாதத்தில் இணைந்த வடகிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் இடம்பெற்றது.

விடுதலைப் புலிகள் இயக்கம் இதனை ஏற்றுக்கொள்ளாத நிலையிலும், அப்போதிருந்த தமிழர் விடுதலை கூட்டணி தேர்தலில் போட்டியிட மறுத்திருந்த நிலையிலும்தான், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, பரந்தன் ராஜன் தலைமையிலான ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி, ஆகியவை தேர்தலில் போட்டியிட்டிருந்தன. 1988 டிசம்பரில், அன்னாமலை வரதராஜப் பெருமாள் இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் முதல் முதலமைச்சரானார். பிரேமதாச- விடுதலைப் புலிகள் உடன்பாட்டை தொடர்ந்து, 1990 மார்ச்சில், இந்திய அமைதிப் படைகள் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், மாகாண சபை செயலிழந்தது. இந்திய படைகள் இலங்கையில் தொடர்ந்தும் நிலைகொண்டிருந்தால், மாகாண சபை செயலழிந்திருக்காது. இந்திய படைகளை நம்பித்தான், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, மாகாண சபையை பொறுப்பேற்றிருந்தது.

மாகாண சபை செயலிழந்த பின்னர் – மாகாண சபையை பலப்படுத்துவது, அதன் அதிகாரங்களை உச்சளவில் பயன்படுத்துவது தொடர்பில் தமிழ் அரசியல் பரப்பில் எவரும் பேசவில்லை. ஏன்? ஏனென்றால், விடுதலைப் புலிகள் தலைமையில் ஆயுதப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த போராட்டத்தின் இலக்கு தனிநாடு. தனிநாடு தொடர்பில் சிந்தித்துக் கொண்டிருக்கும் சூழிலில் எவர் மாகாண சபை பற்றி சிந்திக்க முடியும்? கேக்கின் மீதான கனவினால், கையிலிருந்த ரொட்டியின் அருமை தொடர்பில் எவருக்கும் சிந்திக்க நேரமிருந்திருக்கவில்லை. கடந்த பன்னிரெண்டு வருடங்களாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை முன்வைத்தும், சர்வதேச அழுத்தங்களை முன்வைத்தும், பலவாறான விவாதங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் எதுவும் நிகழவில்லை.

இவ்வாறானதொரு சூழலில்தான், கையிலிருக்கும் ரொட்டியும் கைநழுவிவிடுமோ, என்னும் ஆபத்தான சூழல் தோன்றியிருக்கின்றது. இப்படியான சூழலில், மாகாண சபையை தவிர்த்து சிந்திக்க முடியுமா? அதனையும் விட்டால் வேறு என்ன வழியுண்டு? இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்கிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தொடர்பில், அவரது மருமகன், பேராசிரியர், ஏ.ஜே.வில்சன், இவ்வாறு கூறுவார். செல்வநாயகம் கேக்கிற்காக பானை நிராகரிக்கும் ஒரு தலைவரல்ல. தமிழ் மக்கள் தங்களை தாங்களே தீர்மானித்து வாழக்கூடிய, ஒரு அரசியல் ஏற்பாடுதான் எமக்கு தேவையானது. அதில் எந்தவொரு மாற்று அபிப்பிராயமும் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இருப்பவர்களுக்கு இருக்க முடியாது. ஆனால் அதனை எவ்வாறு அடைவது? வெறும் அறிக்கைகளாலும், வட்ஸ்அப் குறுந் தகவல்களாலும், முகநூல் பதிவுகளாலும் அடைய முடியுமா? கேக் கிடைக்கும் வரையில் பானை உண்டு, காத்திருக்கும் அரசியல் சிறந்ததா – பட்டினி கிடந்து செத்துப் போவது தொடர்பில் விவாதங்கள் செய்வது நல்லதா?

சீனாவை எதிர்க்கும் தைரியம் அரசாங்கத்தில் எவருக்கும் கிடையாது! – விஜேதாச ராஜபக்ச  

சீன உரக்கப்பல் விவகாரத்தில் இராஜதந்திர உறவை பாதுகாப்பதற்காக நஷ்டஈடு வழங்கப்படவில்லை சீனாவை எதிர்க்கும் தைரியம் அரசாங்கத்தில் எவருக்கும் கிடையாது என ஆளுந்தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அரசியல் ஆணவத்தில் எடுக்கும் தீர்மானங்களே நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் காரணமாகும். அமெரிக்க பிரஜையான அவரை இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் சட்ட ரீதியாக நிதி அமைச்சராக ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அவரை பதவி விலக்குவதற்காக ஜனவரியில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் வழங்கிய முழுமையான செவ்வி,

நிதி அமைச்சர்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அரசியல் ஆணவத்தில் எடுக்கும் தீர்மானங்களே நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் காரணமாகும். இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் பெயரைப் பயன்படுத்தி எரிபொருள் விலையை அதிகரித்து வெளிநாட்டுக்குச் சென்றார். தற்போது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை மக்களின் சாபத்திற்கு உள்ளாக்கிவிட்டு அவர் அமெரிக்கா சென்றுள்ளார். இவ்வாறான ஒருவரால் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று எவராவது எண்ணுவார்களாயின் அவர்கள் அங்கொடையிலுள்ள மன சிகிச்சை நிலையத்தில் இருக்க வேண்டியவர்களாவர்.

ஒரே நாடு – ஒரே சட்டம் செயலணி

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ருவன்வெலிசாயவில் பதவிப் பிரமாணம் செய்ததோடு மாத்திரமின்றி தான் சிங்கள பௌத்த வாக்குகளாலேயே அரச தலைவராக தெரிவு செய்யப்பட்டேன் கூறினார். இது ஏனைய மதங்களைப் பின்பற்றும் மக்கள் பௌத்தர்கள் மீது விரோதம் கொள்ள பிரதான காரணியாக அமைந்தது.

இவ்வாறான நிலையிலேயே தற்போது ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ அரச தலைவர் செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய பொறுப்பு நாடாளுமன்றத்தை மீறி ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக மதங்களுக்கிடையில் பழிவாங்கும் எண்ணங்களையே அரச தலைவர் ஊக்கப்படுத்தியுள்ளார். அது மாத்திரமின்றி மதகுமார்களுக்கிடையில் இவ்வாறான காரணிகளால் பிளவு ஏற்பட்டுள்ளது. பௌத்த சங்கங்கள் பிளவடையும் வகையில் செயற்பட்ட ஒரேயொரு அரச தலைவர் இவர் மாத்திரமேயாவார். இராணுவ மனநிலையைக் கொண்ட இவ்வாறான ஒருவரால் மக்களின் கஷ்டத்தை உணர முடியாது.

வரவு – செலவு திட்டம் சட்டரீதியானதல்ல

இம்முறை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரவு – செலவு திட்டம் சட்ட விரோதமானதாகும். காரணம் வெளிநாட்டு பிரஜையான பசில் ராஜபக்சவை அரசியலமைப்பின் பிரகாரம் சட்ட ரீதியாக நிதி அமைச்சராக ஏற்றுக் கொள்ள முடியாது.

காரணம் அவர் 1952 அமெரிக்க சட்டத்தின் படி அந்நாட்டு குடியுரிமையைப் பெற்ற போது அமெரிக்காவுடனான அனைத்து தொடர்புகளையும் பேணுவதாகவும் அமெரிக்காவின் அரசியலமைப்பை பாதுகாப்பதாகவும், அமெரிக்காவுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படும் போது ஆயுதம் ஏந்தி அந்நாட்டை பாதுகாப்பதாகவும் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

இவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்று சத்திப்பிரமாணம் செய்து கொள்ளும் இலங்கை பிரஜைகளின் குடியுரிமை இயல்பாகவே இரத்தாகும் என்று 1948 இல் சுதந்திரத்தின் பின்னர் டீ.எஸ்.சேனாநாயக்க முன்வைத்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சபதம்

இலங்கையின் குடியுரிமையைப் பெறாத ஒருவரால் எவ்வாறு நிதி அமைச்சு பதவியை வகிக்க முடியும்? அவரால் எவ்வாறு இரு நாடுகளினதும் அரசியலமைப்புகளை பாதுகாக்க முடியும்? எனவே தான் தற்போதைய நிதி அமைச்சரை சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுகின்றேன்.

நிதி அமைச்சரை பதவி நீக்குவதற்காக என்னால் தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 12 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்யவுள்ளேன். அதன் மூலம் நிதி அமைச்சரவை பதவி விலகச் செய்வேன்.

20 ஆவது திருத்தத்திற்கு நம்பியே வாக்களித்தோம்

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த இரட்டை குடியுரிமை விகாரம் தொடர்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 20 பேர் அரச தலைவரிடம் சில யோசனைகளை முன்வைத்திருந்தோம். அதன் போது 2021 நவம்பர் 18 ஆம் திகதிக்கு முன்னர் இந்த சர்ச்சைக்கு தீர்வு வழங்குவதாக வாக்குறுதியளித்தார்.

எனினும் அவரால் வழங்கப்பட்ட வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. அரச தலைவரின் வாக்குறுதிகளை நம்பியே 20 இற்கு நாம் வாக்களித்தோம்.

புதிய அரசியலமைப்பு சாத்தியமா?

இந்த அரசாங்கத்தின் கீழ் ஒருபோதும் புதிய அரசியலமைப்பை எதிர்பார்க்கக் கூடாது. இவர்கள் அதற்காக செயற்பட மாட்டார்கள். முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அவர்களின் ஆதரவின் ஊடாகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் 19 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்ட போது ஐக்கிய தேசிய கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 40 ஆசனங்களே காணப்பட்டன. எனினும் இதனை 216 வாக்குகளுடன் நிறைவேற்ற முடிந்தது. இதற்காக எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பணமோ பதவியோ வழங்கப்படவில்லை. காரணம் 19 ஆவது திருத்தம் மக்களுக்கானதாகக் காணப்பட்டது.

எரிவாயு அடுப்புக்களின் வெடிப்பும் எதிராக வழக்குகளும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது தமது பொறுப்பிலிருந்து விலகியவர்கள் சிறை செல்ல நேரிட்டது. அதே போன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களை அண்மித்த வெடிப்பு சம்பவங்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களும் சிறைசெல்ல வேண்டியேற்படும். அவ்வாறானவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் வழக்கு தொடர்வதற்கு நான் தயாராகிக் கொண்டிருக்கின்றேன்.

சீன உரக்கப்பல் விவகாரத்தில் இராஜதந்திர உறவை பாதுகாப்பதற்காக நஷ்டஈடு வழங்கப்படவில்லை. மாறாக அடிமைத்தனத்தின் காரணமாகவே அந்த நட்ட ஈட்டு தொகையை செலுத்த இணக்கம் தெரிவித்துள்ளனர். சீனாவை எதிர்க்கும் தைரியம் அரசாங்கத்தில் எவருக்கும் கிடையாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், சமையல் எரிவாயு விவகாரத்தைப் போலவே பேர்ள் கப்பல் விபத்துக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களும் ஒரு நாள் தண்டனையை அனுபவிப்பர்.

அரச தலைவர் விமர்சிக்கும் உரிமை உள்ளதா?

அரசாங்கத்தையும் அரச தலைவரினை விமர்சிப்பதால் எனக்கு எதிராக எவருக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது. காரணம் நான் கட்சி அரசியலமைப்பை மீறி செயற்படவில்லை. அரச தலைவர் எமது கட்சியின் அங்கத்தவர் கிடையாது. எனவே அவரை விமர்சிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது. ஆளுந்தரப்பிலுள்ள 75 சதவீதமானோர் எனது நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.

வரவு – செலவு திட்டம் என்பது பொதுசன பெரமுனவுடையதல்ல. அது நாடாளுமன்றத்திற்குரியது. நாடாளுமன்ற வரப்பிரசாதங்களுக்கமைய அதற்கு வாக்களிக்காமல் இருக்கக் கூடிய உரிமை எனக்கிருக்கிறது. நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலமைப்பை மீறி செயற்படவில்லை.

2022 இல் அதிகார மாற்ற புரட்சி நிச்சயம் ஏற்படும்

நாட்டில் தற்போது மிகவும் மோசமான சூழலே நிலவுகிறது. மக்கள் மத்தியில் கொரூரமும் , வன்முறையும் தலைதூக்கியுள்ளது. எனவே அவர்களை அடக்கி அரசாங்கத்தினால் முன்னோக்கிச் செல்ல முடியாது.

எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்றத்திற்குள் பாரிய ஆட்சி கவிழ்ப்பொன்று ஏற்படும். அவ்வாறில்லை எனில் அரசாங்கத்தில் அதிகார மாற்ற புரட்சி நிச்சயம் ஏற்படும் என்றும் அவர் தனது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடி நிலைமைக்கு அரசே முழுப் பொறுப்பு! – ஐக்கிய மக்கள் சக்தி

“ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தர பதவி விலகுவதால் நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. எனவே, தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு ஒட்டுமொத்த அரசும் பொறுப்புக்கூறவேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இரசாயன உரத்துக்குத் தடை விதித்துவிட்டு 24 மணிநேரத்துக்குள் சேதன பசளையை நோக்கி நகரும் தவறான முடிவை இந்த அரசு எடுத்தது. இதன் விளைவாக நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரிசித் தட்டுப்பாடு ஏற்படும். குறிப்பாக அடுத்த இரு மாதங்களில் அரிசி விலை 400 ரூபாவரை உயரும். தற்போது ஒரு கிலோ கீரி சம்பா 250 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது.

நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் அறிவித்தார். அவரின் அறிவிப்பு சரியானது. எனினும், அதற்காக அவர் பதவி விலக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய நிலைக்கு ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தரவே காரணம் எனச் சிலர் விமர்சிக்கின்றனர். அரசின் தவறாக முடிவுகளே காரணம். எனவே, ஒட்டுமொத்த அரசும் பொறுப்புக்கூற வேண்டும்” – என்றார்.

தமிழர் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் பேராயர் டெஸ்மண்ட் டுடூ – தமிழ்க் கூட்டமைப்பு இரங்கல்!

பேராயர் டெஸ்மண்ட் டுடூ அவர்களின் மறைவு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கை தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து ‘எல்டர்ஸ்’ குழு வெளியிட்ட அறிக்கைகளை நாம் நன்றியோடு நினைவு கூருகிறோம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராயர் டெஸ்மண்ட் டுடூ தென்னாபிரிக்காவில் இனவாதத்திற்கு எதிராகவும் உலகில் அனைத்து அநீதிகளுக்கு எதிராகவும் போராடியவர் மட்டுமல்லாது சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்குமாகவும் அயராது உழைத்தவர்.

உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றிய அவர் நீதியும் கருணையும் ஒன்றுக்கொன்று முரணானவையல்ல: பிரிக்க முடியாத முழுமையின் இரு அங்கங்கள் என்பதைக் காண்பித்தார். இயேசுவின் பிறப்பை உலகம் நினைவு கூரும் இவ்வேளையில் நிகழ்ந்த இவரது மரணம் இதனை திரும்பவும் எமக்கு ஞாபகப்படுத்துகிறது.

இலங்கை தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து ‘எல்டர்ஸ்’ குழு வெளியிட்ட அறிக்கைகளை நாம் நன்றியோடு நினைவு கூருகிறோம். தனது ஒரு புத்தகத்தின் தலைப்பான ‘மன்னிப்பு இன்றி எதிர்காலம் இல்லை’ என்பதை பேராயர் டுடூ வாழ்ந்து காண்பித்தார்.

எமது அனுதாபங்களை தென்னாபிரிக்க மக்களுக்கும் சமாதானத்தையும் சுதந்திரத்தையும் நேசிக்கும் உலக மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

சிறையில் இருந்து வெளியே வந்தார் நளினி

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி ஒரு மாத பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நளினியின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

அதனால் தமிழக அரசிடம் தனது மகளுக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தேன். இந்த கோரிக்கை மீது எந்த பதிலும் அளிக்காமல் தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. அதனால் தனது மகளுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு கேட்டு கொள்கிறேன் ” என அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆஜராகி “தமிழக அரசு நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்க முடிவு செய்துருப்பதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நளினிக்கு பரோல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் நளினிக்கு இன்று முதல் 30 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிடப்பட்டது.

அதனடிப்படையில் வேலூர் பெண்கள் சிறையில் இருந்து பரோலில் நளினி வெளியே வந்தார். வெளியே வந்த நளினி காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர், காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்குகிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் நளினி அவரது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக பரோலில் வெளியே வந்தார். அப்போது சத்துவாச்சாரியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிர்வாகி சிங்கராயர் என்பவரது வீட்டில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோசமான தீர்மானங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம் – முன்னாள் ஜனாதிபதி மைத்ரி

அரசாங்கத்தின் மோசமான தீர்மானங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றம் சாட்டியுள்ளார்.தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தை நினைவு கூர்ந்த மைத்ரிபால சிறிசேன, தனது பதவிக் காலம் முழுவதும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்றியதாக தெரிவித்தார்.நாட்டின் ஆட்சி முறைமையின் அடிப்படையிலேயே சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச தரப்புக்கள் நாட்டுக்கு உதவும் என தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகள் நாட்டிற்கு சாதகமாக இருக்கும் என நம்பினால் பேச்சுவார்த்தை நடத்த முடியும் எனவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்த்தால், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை உடன் நடவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.சட்டம் ஒழுங்கு, மனித உரிமை விவகாரங்களில் மோசமான நிலைமை காணப்பட்டால் அவ்வாறான உதவிகள் நாட்டுக்கு கிடைக்காது என அவர் கூறினார்.

அரசாங்கம் தற்போது பொருளாதார, அரசியல் மற்றும் சர்வதேச பிரச்சினைகளில் சிக்கியுள்ளது என்றும் அரசாங்கத்தின் மோசமான தீர்மானங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்துள்ளது என அவர் குற்றம் சாட்டினார்.நாட்டின் ஆட்சி முறைமையின் அடிப்படையிலேயே சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச தரப்புக்கள் நாட்டுக்கு உதவும் என தெரிவித்தார்.

Posted in Uncategorized