யாழ்.மாநகர சபையின் புதிய தமிழ் காவல்படை! பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர ஆணையாளரிடம் 3 மணிநேரத்துக்கு மேலாக வாக்குமூலம் பெறப்படுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

காவலாளி சேவையை நடத்துவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், காவல் படை என்ற பெயரில் அரச துறையில் ஐவரை கடமைக்கு அமர்த்தியமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைய அணிந்தமை தொடர்பில் கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரையும் வாக்குமூலம் வழங்க அழைக்குமாறு பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது.

இதனால் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்துள்ளார்.

விசாரணைகள் தொடர்பில் பொலிஸாரின் தகவலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

யாழ். மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாயும், வெற்றிலை துப்பினால் 2 ஆயிரம் ரூபாயும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்று மாலை ஊடகங்கள் ஊடாக அறிவித்திருந்தார்.

இந்த நடைமுறையை கையாள்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை உருவாக்கட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சுதந்திரக் கட்சியுடனான பேச்சுவார்த்தை இறுதித் தீர்மானமின்றி நிறைவு – ஜி.எல் பீரிஸ்

அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்கள். மாகாண சபை தேர்தல் தொடர்பில் சுதந்திர கட்சியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இறுதி தீர்மானமின்றி நிறைவுப் பெற்றுள்ளது.

கூட்டணியியுடன் ஒன்றிணைந்து போட்டியிட முயற்சிக்கிறோம் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை விநியோகிக்க நடவடிக்கை – ஜீ.எல். பீரிஸ் | Virakesari.lk

மஹரகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் நிகழ்வில் கலந்துக் கொண்டன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் பல சவால்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர்க்கட்சியினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

ஆளும் தரப்பின் ஒரு சில உறுப்பினர்களும் எதிர்க்கட்சியினருக்கு ஏற்றாட்போல் செயற்படுகிறார்கள். ஒரு தரப்பினரது நோக்கம் அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதாக காணப்படுகிறது. இவ்வாறான செயற்பாடு மக்களாணைக்கு முரணானது என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. பழைய தேர்தல் முறையில் தேர்தலை நடத்த மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் அமைச்சரவையில் முன்வைத்த யோசனை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு கட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தல் குறித்து கட்சி தலைவர்கள் உறுதியான தீர்மானத்தை விரைவாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாகாண சபை தேர்தலில் தனித்துபோட்டியிடுவதாக இதுவரை அறிவிக்கவில்லை.ஆனால் தனித்து செல்லும் நிலைப்பாட்டில் அக்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ளார்கள்.

மாகாண சபை தேர்தல் குறித்து கடந்த வாரம் சுதந்திர கட்சியினருடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை இடம் பெற்றது. எவ்வித தீர்மானமும் இல்லாத வகையில் பேச்சுவார்த்தை நிறைவுப் பெற்றுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி ஊடாக அனைத்து தரப்பினiரையும் ஒன்றினைத்து மாகாண சபை தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளோம்.

அரசாங்கத்தின் குறைப்பாடுகளை நபாட்டு மக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அத்தவறுகளை திருத்திக் கொள்வது அவசியமாகும் என்றார்

11 அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்க சட்டமா அதிபர் அனுமதி

அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபடும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்க சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த விடயத்தை சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன உறுதிப்படுத்தினார்.

1. UTJ எனப்படும் ஐக்கிய தௌஹீத் ஜமா -அத்
2. CTJ எனப்படும் சிலோன் தௌஹீத் ஜமா -அத்
3. SLTJ எனப்படும் ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமா -அத்
4. ACTJ எனப்படும் அகில இலங்கை தௌஹீத் ஜமா -அத்
5. JSM எனப்படும் ஜமயத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா
6. தாருள் அதார் @ ஜமியுல் அதார் (Dharul Aadhar @ Jamiul Aadhar)
7. SLISM எனப்படும் இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம்,
8.ISIS அமைப்பு,
9. அல்கைதா (Al-Qaeda),
10. Save the Pearls அமைப்பு,
11. Super Muslim அமைப்பு

ஆகியவற்றுக்கு தடை விதிக்க சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளார்.

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை உருவாக்கம்!

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த மாநகரப் பாதுகாப்புப் படை நாளை அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) பரீட்சார்த்தப் பணியை குறித்த காவல்படை முன்னெடுத்துள்ளது.

இதன்படி, நல்லூர் சுற்றாடலில் வாகன ஒயில் ஊற்றப்பட்டுள்ள நிலையில், விபத்துக்களைத் தவிர்க்கும் முகமான முன்னாயத்த நடவடிக்கைகளை இந்த மாநகர காவல் படை கண்காணித்தது.

யாழ். மாநகரில் சுகாதார நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கும் கழிவகற்றல் பொறிமுறையைக் கண்காணிப்பதற்கும் மற்றும் மாநகரின் ஒழுங்குமுறை உள்ளிட்டவற்றைக் கண்காணிப்பதற்கும் என குறித்த மாநகர காவல் படை உருவாக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட யாழ் நகரை திறக்க அனுமதி ; கொவிட் 19 தெற்றுள்ளவர்களுக்கு அனுமதியில்லை

யாழ் நகர வர்த்தகர்களிடம் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை இன்று வியாழக்கிழமை திறக்க அனுமதிப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

கடந்த 26 ஆம் திகதி முதல் யாழ் நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வர்த்தக நிலையங்களில் பணியாற்றுவோர் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்ட நிலையில் கடந்த 14 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இனங்காணப்பட்டோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை இன்று காலை முதல் திறப்பதற்கு அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் அவசரமாக கூடிய யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்த அவர் வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் தொற்று உறுதி செய்யப்பட்டோர் தவிர்ந்த ஏனையோரின் கடைகளை இன்று முதல் திறப்பதற்கு அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்

மேலும் தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்கள் வழமை போன்று ஒன்று கூடல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டதுடன்

யாழ் நகரப் பகுதிகளில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொதுமக்களை ஒன்று கூடாத வண்ணம் செயற்படவும் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் தற்போது அபாய நிலை இன்னும் நீங்கவில்லை எனவே தற்போதைய நிலையில் பொது மக்களை ஒன்று கூடலை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களுக்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்காமல் விடும் சுற்று நிருபத்துக்கு ரெலோ வினோ எம்.பி. கண்டனம்

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும் ஊடகவியலாளர்களின் அனுமதி மறுப்பானது பொது மக்கள் உண்மைச் செய்திகளை அறிந்து விடக்கூடாது என்பது மட்டுமல்லாது மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்தையோ, அரச அதிகாரிகளையோ பொது வெளியில், ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பிரச்சனைகளைக் கொண்டு வரக்கூடாது என்ற உண்மைகளை மறைக்கும் செயற்பாடாகும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள், மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட மாவட்ட, மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களின் போது செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்காதிருக்கும் சுற்று நிருபம் தொடர்பாக வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று செவ்வாய்க்கிழமை(6) மேலும் தெரிவிக்கையில்,

ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் தான் செய்தியாளர்களைச் சந்திக்கமுடியுமென்றால், முடிவுகளை அறிவிக்க வேண்டுமென்றால் மக்கள் பிரதி நிதிகளை அழைக்கவும் தேவையில்லை.பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் அழைக்கத் தேவையில்லை. மாவட்ட, பிரதேச அபிவிருத்தி விடயங்களை அதிகாரிகளுடன் பேசி விட்டு ஊடக சந்திப்பை நடாத்தமுடியும்.

இது முற்றிலும் உண்மைகளை மறைக்கும் விடயமாகும். ஊடகவியலாளர்களின் தனித்துவமான, உண்மைச் செய்திகளைச் சேகரிக்கும் அவர்களின் கருத்துச் சுதந்திரத்துக்குச் சவால் விடுக்கும் செயற்பாடாகும்.

மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்புத் தலைவர்கள் தவறாக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கும், உண்மைகளைச் சொல்லாது விடப்படுவதற்கும் சந்தர்ப்பங்களை உருவாக்கும். நாடாளுமன்றத்தில் விவாதங்களை நேரலையாக ஒளிபரப்ப ஊடகங்கள் அனுமதிக்கப்படும் போது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க மறுக்கப்படுவது அரசாங்கத்தின் மீது சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றது.

உள்ளூர் செய்தியாளர்களைச் சந்தேக கண்கொண்டு பார்க்கப்படுவது அவர்களின் நேர்மை, துணிச்சல், பக்கம்சாரா நடு நிலை மீது கை வைக்கும் ஓர் அரச அடக்கு முறையாகவே தெரிகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அமைச்சர்களையும், அரசாங்கத்தையும் கேள்வி கேட்கலாம் என்றால் அதைப் பொதுமக்கள் நேரலையாகப் பார்க்கலாம் என்றால் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரச அதிகாரிகளையும் ஏன் கேள்வி கேட்கக் கூடாது.

ஏன் அதை மக்கள் ஊடகங்கள் ஊடாக, நேரலையாக உடனுக்குடன் பார்க்கக் கூடாது. சரிந்து போய்க்கொண்டிருக்கும் அரசாங்கத்தின் ஆதரவுத்தளம், மற்றும் மக்கள் எதிர்ப்பலைகள் அரசாங்கத்தை ஆட்டங்காணச் செய்வதில் ஊடகங்களின் பங்கு தாக்கத்தைச் செலுத்துகின்றமையே உண்மையாகும்.

உண்மைகள் எழுதப்படும் போது, வெளிக்கொணரப்படும் போது மக்கள் விழித்தெழுவதும் மக்கள் மனங்களில் மாற்றம் வருவதும், அதனால் எதிர்க்கட்சி ஆளும் கட்சியாவதும், ஆளும் கட்சி எதிர்க்கட்சியாவதும் ஜனநாயக நடைமுறை மாற்றங்களாகும்.

எனவே ஊடகங்களினதும், ஊடகவியலாளர்களினதும் குரல் வளைகளை நெரிக்கும்,சுதந்திரத்தைப் பறிக்கும் செயற்பாடுகளை நிறுத்தி உண்மைகளையும் பொய்யான விடயங்களையும் வெளி உலகுக்கும், மக்களுக்கும் கொண்டு சேர்க்க ஊடகங்களை ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹல்டன் அவர்களுடன் உத்தியோக பூர்வமான சந்திப்பினை இன்று மேற்கொண்டது

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹல்டன் அவர்களுடன் உத்தியோக பூர்வமான சந்திப்பினை இன்று 06/04/21 மேற்கொண்டது. மிக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதப்படும் இச்சந்திப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கருணாகரம் மற்றும்  ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் கலந்து கொண்டனர். ஐ நா விடயங்கள், அரசியல் தீர்வு, மாகாணசபை தேர்தல்கள், நில அபகரிப்பு, இளையோர் மற்றும் பெண்கள் பங்களிப்பு, அபிவிருத்தி ஆகிய பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக நடந்த பேச்சுக்கள் இரண்டு மணி நேரம் நடைபெற்றது.

Posted in Uncategorized

சிங்கராஜ வனத்தை பாதுகாக்க ஐ.நாவின் உதவியை நாடும் ஐ.தே.க

சிங்கராஜ வனத்தை பாதுகாக்கும் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலையீட்டை கோரியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரஸிற்கு இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரபூர்வமாக கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

இந்தக் கடிதம் இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியிடம், கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் கிளைக்கு எதிரில் இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சி கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடாத்தியிருந்தது.

இலங்கையின் இயற்கை சூழலை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிங்கராஜ வனம் பாதுகாக்கப்பட்ட வலயமாக சட்டத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வனப் பகுதியில் எவ்விதமான அழிவினை ஏற்படுத்தும் செயற்பாடுகளையும் செய்வதற்கு அனுமதிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சட்டங்களின் ஊடாக மட்டுமன்றி சர்வதேச உடன்படிக்கைகளின் மூலமும் சிங்கராஜ வனம் பாதுகாக்கப்பட்ட வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வனப் பகுதியில் எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் முன்னெடுக்க அனுமதிக்கக் கூடாது எனவும், இது குறித்து ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டம்

மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து இறுதித் தீர்மானத்தை எடுக்க எதிர்வரும் 19 ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தேர்தல் சட்டங்கள், தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண விசேட குழு

தற்பொழுது காணப்படும் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்காக பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ்வின் பிரேரணையை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சபைக்கு சமர்ப்பித்தார்.

பாராளுமன்றம் நேற்று திங்கட்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. இதன்போது சபை ஒத்திவைப்பு வேளையின்போது, சபை முதல்வரும அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன பிரேரணையை சமர்ப்பித்தார்.

குறித்த பிரேரணையின் பிரகாரம், தற்பொழுது காணப்படும் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் காண்பதும் எதிர்பார்க்கப்படும் சீர்திருத்தங்களை செயற்படுத்த அவசியமான திருத்தங்களை முன்மொழிவதும் இந்த குழுவின் கடைமையாகும்.

அத்துடன் இந்த குழுவின் தவிசாளரும் 15 பேர்களைக் கொண்ட குழு உறுப்பினர்களும் சபாநாயகரினால் நியமிக்கப்படுதல் வேண்டும். குறித்த குழு அதன் முதலாவது அறிக்கையை முதலாவது அமர்விற்கு பின்னர் ஆறுமாத காலங்களினுள் அல்லது பாராளுமன்றத்தினால் நீடிக்கப்படும் காலப்பகுதியினுள் சமர்ப்பித்தல் வேண்டும்.

மேலும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டாலும் காலத்துக்கு காலம் இடைக்கால அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கும் கூடுவதற்கும் இந்த குழுவுக்கு அதிகாரம் இருத்தல் வேண்டும் என பிரேரணையில் தெரிவிக்கப்படுள்ளது.