சிங்கராஜ வனத்தை பாதுகாக்க ஐ.நாவின் உதவியை நாடும் ஐ.தே.க

சிங்கராஜ வனத்தை பாதுகாக்கும் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலையீட்டை கோரியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரஸிற்கு இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரபூர்வமாக கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

இந்தக் கடிதம் இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியிடம், கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் கிளைக்கு எதிரில் இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சி கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடாத்தியிருந்தது.

இலங்கையின் இயற்கை சூழலை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிங்கராஜ வனம் பாதுகாக்கப்பட்ட வலயமாக சட்டத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வனப் பகுதியில் எவ்விதமான அழிவினை ஏற்படுத்தும் செயற்பாடுகளையும் செய்வதற்கு அனுமதிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சட்டங்களின் ஊடாக மட்டுமன்றி சர்வதேச உடன்படிக்கைகளின் மூலமும் சிங்கராஜ வனம் பாதுகாக்கப்பட்ட வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வனப் பகுதியில் எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் முன்னெடுக்க அனுமதிக்கக் கூடாது எனவும், இது குறித்து ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.