அறிவுள்ளவர்கள் நிர்வகித்திருந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது – மத்திய வங்கி ஆளுநர்

நாட்டின் பொருளாதாரத்தை அறிவுள்ளவர்கள் நிர்வகித்திருந்தால் நாடு இவ்வாறான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்காது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (19) மாத்தறை ராகுல கல்லூரியின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்து கொண்டபோதே இந்த கருத்தினை முன்வைத்திருந்தார்.

மேலும் அவர் “தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எடுக்கப்படும் கடினமான தீர்மானங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் கூட, முடிவெடுப்பவர்களும், கொள்கை வகுப்பாளர்களும் சரியான திறன்களைக் கொண்ட சரியான நபர் நீண்ட காலமாக அந்த பதவிகளில் பணியாற்றியிருந்தால், நாம் இந்த நிலையை அடைந்திருக்க மாட்டோம்.

தகுதியானவர்களுக்கு சரியான இடம் கிடைத்தால்தான் வளர்ந்த நாடுகள் வளரும்.

இல்லாவிட்டால், தனக்கு உரிய இடம் கிடைக்காத திறமைசாலி, தன் திறமைக்கேற்ப போட்டி போட்டு முன்னேற முடியாத சமூகத்தில் இருந்தால் அது வெற்றியாக கருதமுடியாது.

மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். நாங்கள் மிகவும் கடினமான காலங்களில் இருக்கிறோம். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது எளிதல்ல. இதற்கு கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும்”என தெரிவித்திருந்தார்.

தலைமன்னார் இறங்குதுறையை பார்வையிட்டார் ரணில்

புவி வெப்பமயமாதலின் தாக்கத்தை குறைப்பதற்காக வடமாகாணத்தில் பாரிய பசுமை ஹைட்ரஜன் திட்டம், மேம்படுத்தப்பட்ட நீர் முகாமைத்துவக் கட்டமைப்பு மற்றும் மீள் காடுவளர்ப்புத் திட்டம் என்பவற்றை ஆரம்பிப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்க அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

மன்னார்,தம்பபவனி காற்றாலை மின்உற்பத்தி நிலையத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (20) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, இந்நாட்டு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் அடுத்த பத்து ஆண்டுகளுக்கான திட்டங்கள் தொடர்பாகவும் இதற்குப் பொறுப்பான நிறுவனமான இலங்கை மின்சார சபை மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அதிகார சபையுடனான கலந்துரையாடலின் போது இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்டங்கள் மற்றும் ஹைட்ரஜன் திட்டங்களுக்கு விரைவாக மாற வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி, இங்கு வலியுறுத்தினார்.

கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தை எதிர்காலத்தில் முன்னெடுக்கவும் மீன்பிடி படகுகளுக்கான பசுமை ஹைட்ரஜன் வலுசக்தி முறையை உடனடியாக அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திலும் வடக்கின் பொருளாதாரத்திலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வட மாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கடல்நீர் சுத்திகரிக்கும் திட்டம் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. இதன் ஊடாக எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய வரட்சியான காலநிலைக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க முடியும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் வன வளம் மற்றும் நீர் மூலங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

சிறிய நீர்மின் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சிறிய நீர்மின் திட்டங்களாக மாற்றக்கூடிய நீர்ப்பாசனக் கால்வாய்களை அடையாளம் காணுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததுடன், புவி வெப்பமயமாதலின் தாக்கத்தை இதன் மூலம் குறைத்துக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

மொரட்டுவை மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் வலுசக்தி துறையில் எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகளை அடையாளம் காணுதல் மற்றும் ஆராய்ச்சி செய்வது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு கப்பல்கள்,விமானங்கள் இலங்கையினுள் உள்நுழைய புதிய நடைமுறை

வெளிநாட்டு கப்பல்கள் விவகாரத்தை கையாள்வதற்காக அரசாங்கம் புதிய பொறிமுறையொன்றை உருவாக்கவுள்ளது.

இலங்கைக்குள் நுழைகின்ற கப்பல்கள் விமானங்களிற்கு அனுமதி வழங்குகின்றமை குறித்து தீர்மானிப்பதற்காஅரசாங்கம் அதன் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் புதிய பொறிமுறையை உருவாக்கவுள்ளது.

இது தொடர்பான நடவடிக்கைகளில் பாதுகாப்பு அமைச்சும் சட்டமா அதிபர் திணைக்களமும் ஈடுபட்டுள்ளன.

ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகரகாரியவசத்தின் மேற்பார்வையின் கீழ் கப்பல்கள் விமானங்களிற்கு அனுமதி வழங்குவது தொடர்பிலான புதிய நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய நடைமுறைகளை அரசாங்கம் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளது.

சீன கப்பலின் விஜயம் தொடர்பில் உருவான இராஜதந்திர நெருக்கடியை தொடர்ந்தே அரசாங்கம் புதிய பொறிமுறையை உருவாக்கியுள்ளது.

வடக்கு ஆளுநரை சந்தித்த ஐ.நா பிரதிநிதிகள்

யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட  ஐ.நாவுக்கான சிறப்பு அதிகாரிகள் நேற்று (19) குழு வட மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன் போது எதிர்கால வடக்கு அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதுடன் வடக்கு அபிவிருத்திக்கு தமது தொடர்ச்சியான பங்களிப்பு இருக்கும் என ஐ.நா நிறுவனப் பிரதிநிதிகள் ஆளுநருக்கு தெரிவித்தனர்

குறித்த சந்திப்பில் ஐ.நாவின் ஆசிய பசுபிக் பிராந்திய அரசியல் விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி பீட்டர் நிக்கோலஸ் டியு, மற்றும் இலங்கைக்கான ஐ.நா  பதிவிட பிரதிநிதி ஹான சிங்கர் மற்றும் ஐக்கிய நாடுகள் நிறுவன அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கிளைபோசேட் தடை நீக்கம்

ஏழு வருடங்களின் பின்னர் கிளைபோசெட் தடையை நீக்குவது தொடர்பான வர்த்தமானி, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கையொப்பத்துடன் அரசாங்க அச்சகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.

விவசாயப் பிரதிநிதிகள், விவசாய நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கருத்துகளை கேட்டறிந்த பின்னர் இந்தத் தடையை நீக்க அமைச்சர் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டு மக்களை ஒட்ட சுரண்டி, பிழிந்தெடுக்கும் ரணில் அரசு- சோசலிச இளைஞர் சங்கம் குற்றச்சாட்டு

இந்த நாட்டில் இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் என்பவற்றை விதைத்து சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையகம் என்ற அனைத்து மக்களிடையேயும் முரண்பாடுகளை ஏற்படுத்தி, பிரித்து, வன்முறைகளை தூண்டி, இந்த அரசாங்கம் ஆட்சியினை தக்க வைத்துக்கொள்வதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது என சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர் சதீஷ் செல்வராஜ் தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இளைஞர்களை அணி திரட்டுவதும், அவர்களை தெளிவுபடுத்துவதும் எங்களின் கடப்பாடாக இருக்கின்ற காரணத்தினால், நாங்கள் நாட்டிலுள்ள அனைத்து தமிழ், சிங்கள, முஸ்லீம், மலையகம் என்ற பேதம் இல்லாமல் எல்லா இளைஞர்களும் அணிதிரண்டு நாட்டினை கட்டியெழுப்புவதற்காக ஒரு சக்தியினை வழங்குவதற்காக அணி திரள வேண்டும் என்பதற்காக இன்று யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கிறோம்.

பொருளாதார ரீதியாக எமது நாடு பாரிய வீழ்ச்சியை கண்டிருக்கிறது. அதீத வட்டி, அதீத வரி, அதேவேளை மக்கள் நாட்டில் வாழ முடியாத சூழ்நிலையை இந்த ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள்.

இந்த, நாட்டில் இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் என்பவற்றை விதைத்து சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையகம் என்ற அனைத்து மக்களிடையேயும் முரண்பாடுகளை ஏற்படுத்தி, பிரித்து, வன்முறைகளை தூண்டி அவர்கள் தங்களுடைய ஆட்சியினை தக்க வைத்துக்கொள்வதற்கான முயற்சியில் இறங்கி உள்ளார்கள்.

அந்தவகையில் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தினை பார்ப்போமாக இருந்தால், 3,456 பில்லியன் ரூபா வருமானமாக கொள்ளப்படுகிறது. செலுத்தப்பட வேண்டிய கடன் உட்பட நாட்டினுடைய மொத்த செலவு 7,879 பில்லியன் ரூபா, அதிகமாக காணப்படுகிறது. வருடத்திற்ககான கடன் தேவை 4,979 பில்லியன் ரூபாவுக்கு நாடு தள்ளப்பட்டிருக்கிறது. கடன் மொத்த செலவில் கடன் வட்டிக்கு மாத்திரம் 53.53 சதவீதம் பங்கினை இங்கு ஒதுக்க வேண்டிய நிலைமைக்கு இந்த நாடு தள்ளப்பட்டிருக்கிறது.

வருமானத்தை எடுத்துக்கொண்டால் மறைமுக வட்டி, விலையேற்றம் போன்ற வட்டி மூலம் வருமானத்தை திரட்டிக்கொள்வதற்கு இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றதே தவிர நாட்டில் விழுந்து கிடக்கும் உற்பத்தி பொருளாதாரத்தினை உயர்த்துவதற்கு எந்த நடவடிக்கையிலும் இந்த அரசாங்கம் ஈடுபடாது. மேலும் நாட்டு மக்களை ஒட்ட சுரண்டி, பிழிந்தெடுக்கிற வேலையில் ரணில் அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

கூலித்தொழில் செய்ய முடியாத நிலைக்கு இன்றை தொழிலார்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வடக்கு விவசாயிகள் மிகவும் பாரியளவில் சிக்கல்களுக்கு முகங்கொடுத்து இருக்கிறார்கள். நாட்டினுடைய விவசாய துறை சீரழிந்து வீழ்ந்து இருக்கிறது.

யூரியா, இரசாயனப்பசளை பிரச்சினைகள், இது போன்று மீன்பிடிக்கு பெற்றோல், டீசல் பிரச்சினைகள், இதனை மேம்படுத்துவதற்காக முறையான திட்டமின்மை காரணமாக மீன்பிடி பாரியளவு வீழ்ச்சி கண்டிருக்கிறது. இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகமாக இருக்கிற இந்த நேரத்தில் இதற்கு தீர்வு இல்லாமல் இருக்கிறார்கள். எங்களுடைய கடல் வளம் வெளிநாட்டு கம்பனிகளுக்கு தாரைவார்க்கப்படுகிறது.

இந்த  இனவாத ஆட்சியாளர்களை விரட்டியடிக்க தேசிய ஒற்றுமையினை முன்னிறுத்தி இந்த போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற இந்த வேளையில் எமது நிலம், எமது உரிமை, எமது மக்கள் என இந்த ஊழல்வாதிகளை, இனவாத ஆட்சியாளர்களை விரட்டியடித்து தேசிய ஒற்றுமையினை கட்டியெழுப்புவதன் ஊடாக எல்லா இன மக்களும் ஒற்றுமையாக இணைந்து வாழ்வதற்கு கட்டியெழுப்பவது நம் எல்லோரினதும் கடமையாகும். – என்றார்.

மாற்றத்தை ஏற்படுத்த பஸில் ஞானி இல்லை – திஸ்ஸ அத்தநாயக்க

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச நாடு திரும்பினார் என்பதற்காக நாட்டில் புதிதாக ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை. நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவர் ஒன்றும் ஞானி கிடையாது.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அமெரிக்கா சென்றிருந்த பஸில் ராஜபக்ச ஒன்றரை மாதங்களின் பின்னர் இன்று (20) நாடு திரும்பியமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசில் பஸில் ராஜபக்சவின் வருகையை ‘மொட்டு’க் கட்சியின் உறுப்பினர்கள் ஆரவாரத்துடன் ஏற்றுக்கொண்டனர்.

அவர் வருகை தந்தால் நாடு பிரகாசிக்கும் என்றார்கள். இறுதியில் என்ன நடந்தது?

அவர் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். நாடு வங்குரோத்து அடைந்தது.

எனவே, பஸில் ராஜபக்ச நாடு திரும்பியதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவர் ஒன்றும் ஞானி கிடையாது.

நாடு வங்குரோத்து அடைந்தமைக்கான பொறுப்பை அவர் மீளவும் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஏனெனில் நிதி அமைச்சர் என்ற முறையில் அவரது செயற்பாடுகள், நடவடிக்கைகள் என்பன நாடு வங்குரோத்து அடைவதற்கு மற்றுமொரு காரணியாக அமைந்திருந்தது.

இந்த அரசைக் கொண்டு நடத்துபவர் பஸில் ராஜபக்ச என்பது தற்போது தெளிவாகின்றது.

அமைச்சுகளுக்கும் பதவிகளுக்கும் நபர்களைப் பரிந்துரைக்கும் பொறுப்பை அவர் திரைமறைவிலிருந்து செயற்படுத்தி வருகின்றார்.

அரசையும் ஜனாதிபதியையும் இயக்கும் நபராகப் பஸில் ராஜபக்ச திறைமறைவிலிருந்து செயற்பட்டு வருகின்றார்” – என்றார்.

பசில் ராஜபக்ச நாடு திரும்பினார்

ஒன்றரை மாதங்களின் பின்னர் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ரபக்ஷவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் பின்னர், இரட்டைக் குடியுரிமை கொண்ட பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்குச் சென்றார்.

இந்நிலையில் பசில் ராஜபக்சவின் வருகையுடன் எதிர்வரும் தேர்தலுக்கான தமது கட்சியின் திட்டங்களை விரைவில் அமுல்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஆளும்கட்சி கூறியுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் தொடர்பில் தீர்மானங்களை அவர் எடுப்பர் என்றும் அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களில் ஒருவரான முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பசில் ராஜபக்சவை வரவேற்க முக்கிய அமைச்சர்களும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, நளின் பெர்னாண்டோ, திலும் அமுனுகம உள்ளிட்டோரும் கட்டுநாயக்க விமான நிலையதிற்கு வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே ஒழுக்கமற்ற இராணுவம் இலங்கை இராணுவமே – கஜேந்திரன்

உலகிலேயே ஒழுக்கமற்ற இராணுவமாக தாம் இலங்கை இராணுவத்தையே பார்ப்பதாகவும்.உலகில் எங்கும் எந்த இராணுவமும் உயிர்நீர்த்தவர்களின் உடலங்களை கிளறி எறியவில்லையெனவும்.ஆனால் இலங்கை இராணுவம் அதனை முன்னெடுத்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளருமான செ.கஜேந்திரன் தெரிவித்தார்.

வடகிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைக்கும் பணிகள் தமிழ் தேசிய பரப்பில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் மாவீரர் பணிக்குழுவினர், பொதுமக்களின் பங்களிப்புடன் சிரமதான அடிப்படையில் புனரமைக்கப்பட்டுவருகின்றன.

அம்பாறை மாவட்ட கஞ்சி குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம் செய்து துப்புரவாக்கப்பட்டது.

இதன்போது அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளருமான செ.கஜேந்திரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், தவிசாளர்கள் உள்ளிட்ட குழுவினர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். மாவீரர் பணிக்குழுவினரும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இதன்போ திருக்கோவில் பொலிஸார் ஸ்தலத்திற்கு வந்த பொலிஸார் குறித்த சிரமதான பணியை இடைநிறுத்துமாறு கோரினர். இந்த காணி சிரமதானம் காரணமாக ஏதாவது இனப் பிரச்சினை எழும் எனவும் அதனால் இப்பணியை நிறுத்துமாறும் பொலிஸார் கோரினர்.

எனினும் “இது எமது மண்ணுக்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூருகின்ற நிகழ்வு. இது எமது உரிமை. இதில் எந்த பிரச்சினையும் வரப்போவதில்லை” என்று மக்கள் பிரதிநிதிகள் கூறியதையடுத்து பொலிஸார் அங்கிருந்துசென்றர். அதனை தொடர்ந்து சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த  கஜேந்திரன்,”இந்த மாதம் தமிழர்களின் உரிமைக்காக போராடி உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவுகூரும் புனிதமான மாதம்.2009ஆம் ஆண்டு வரையில் இந்த நினைவேந்தல்கள் பாரியளவில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுவந்தது.

2009 மே 18இல் எமது உரிமைப்போராட்டம் இன அழிப்பின் ஊடாக முடிவுறுத்தப்பட்ட நிலையில் வடகிழக்கிலிருந்த அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலுமிருந்த வித்துடல்கள் இராணுவத்தினால் கிளறி எறியப்பட்டன.அதன் பின்னர் பல துயிலும் இல்லங்களில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்,பல துயிலுமில்லங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கமுடியாத வகையில் இலங்கை அரசும் அதன் இராணுவமும் புலனாய்வுத்துறையினரும் நெருக்கடிகளை வழங்கிவருகின்றனர்.அதனையும் தாண்டி எமது புனிதர்களின் நினைவுகூருவதை எமது மக்கள் முன்னெடுத்துவருகின்றனர்.

27ஆம் திகதி மாவீரர்களை நினைவுகூரும் வகையில் துயிலும் இல்லங்கள் பல்வேறுதரப்பினராலும் தூய்மைப்படுத்தப்பட்டுவருகின்றது.21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரையில் மாவீரர் வாரம் அனுஸ்டிக்கப்படும்.

சகல தடைகளையும் தாண்டி நினைவேந்தல் உரிமையினை உறுதிப்படுத்துவதற்கு,தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்காகவும் நிரந்தர அரசியல் தீர்வுக்காகவும் உயிர்தியாகம் செய்துள்ளார்கள்.அந்த இலட்சியத்தினை நாங்கள் முன்கொண்டுசெல்வோம் என்பதை உறுதிகொள்ளும் நாளாக இந்த நாள் அமையவேண்டும்.

21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரையில் மாவீரர் வாரம் அனுஸ்டிக்கப்படும்போது அந்த வாரத்தினை முன்னிட்டு தமிழர் தாயகப்பகுதியில் வீதியோரங்களை தூய்மைப்படுத்தி புனிதர்களின் நினைவு தினத்தை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கவேண்டும்.

இன்று பல மாவீரர் துயிலும் இல்லங்களில் இராணுவம் குடிகொண்டுள்ளது.வடகிழக்கில் உள்ள பல மாவீரர் துயிலும் இல்லங்களில் இராணுவத்தினர் குடிகொண்டுள்ளனர்.அந்த இடங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேவேண்டும்.இது இராணுவ ஒழுக்கமற்ற நடவடிக்கையினையே காட்டுகின்றது.இறந்தவர்களின் உடலங்களை கிளறி எறிந்ததாக உலகில் எந்த இராணுவமும் செய்ததாக நாங்கள் அறியவில்லை.

பிரித்தானியா இந்த நாட்டினை 150வருடத்திற்கு மேல் அடிமைப்படுத்தி வைத்திருந்திருந்தாலும் கூட தோற்கடித்த எமது மன்னர்களின் சிலைகளைக்கூடி நிறுவிவைத்துள்ளார்கள்.யுத்த மரபுகளை மீறியே யுத்ததினை செய்தது.யுத்தம் முடிந்த பின்னர் கூட உயிரிழந்தவர்களை நினைவுகூரமுடியாத வகையிலான அநாகரிமான செயற்பாடுகளையே முன்னெடுத்துவருகின்றனர்.

இன்றும் துயிலும் இல்லங்களுக்கு மேல் அவர்கள் இருப்பதன் மூலம் உலகிலேயே ஒழுக்கம் அற்ற,நெறிகெட்ட இராணுவம் என்பதை மீண்டும்மீண்டும் வெளிப்படுத்திவருகின்றனர்.இந்த நிலைமை மாறவேண்டும்.

சர்வதேச சமூகம் இவர்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்து துயிலும் இல்லங்களிலிருந்து இராணுவம் வெளியேற்றவேண்டும்.தமிழினம் இந்த தீவிலே வாழும் வரைக்கும் நினைவேந்தல்கள் தொடர்ந்து நடைபெறவேண்டும்.வெறுமனே விளக்கேற்றுவதும் மாலைபோடுவதும் கடமையல்ல.அவர்களின் இலட்சியத்தினை அடைவதற்கு ஒவ்வொருவரும் நேர்மையாக செயற்படவேண்டும்.

ஒருபுறம் அரசாங்கத்தின் தோளில் கைகளைப்போட்டுக்கொண்டு,அவர்கள் போடும் எலும்புத்துண்டுகளுக்காக தமிழ் தேசியத்தினை நாங்கள் விற்ககூடாது.நாங்கள் அனைவரும் அந்த இலட்சியத்தினை அடைவதற்காக ஒன்றுபட்டு செயலாற்றவேண்டும்.” என்றார்.

அரசியல் அமைப்பில் கடுமையான மாற்றங்கள் வேண்டும் – பேராயர்

தற்போது நடைமுறையில் உள்ள இந்த நாட்டின் சட்டங்கள், ஒரு தனிநபருக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட தரப்பிற்கு முழு தேசத்தையும் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஆட்சி செய்ய அதிகாரம் அளிக்கும் வகையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 12 வீடுகளை கையளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிலையில் தற்போதுள்ள அரசியல் அமைப்பில் கடுமையான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றும் உண்மையான ஜனநாயகத்தை அனுமதிக்கும் புதிய அரசியலமைப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சுதந்திரம் அடைந்து கடந்த 74 ஆண்டுகாலமாக மக்களுக்கு பொய்களை சொல்லி அவர்களை ஏமாற்றி அவர்கள் விரும்பியதைச் சாதிப்பதற்காக அரசியல் தலைவர்கள் சட்டத்தைக் கையாண்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.