22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் உள்ள மாற்றங்கள் எவை?

22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் உள்ள மாற்றங்கள் என்ன?

22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அது நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தற்போது 21 ஆவது அரசியலமைப்பு திருத்தமாகக் கருதப்படுகிறது. எனவே, 22 ஆம் திருத்தமாகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் 21 ஆம் அரசியலமைப்பு திருத்தமாகவே அரசியலமைப்பில் உள்வாங்கப்படுகிறது.

இந்த திருத்தத்திற்கு எவ்வாறு வாக்களிக்கப்பட்டது?

இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது இதற்கு ஆதரவாக 179 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், மூன்றாவது வாசிப்பின் பின்னரான வாக்கெடுப்பின் ​போது 174 வாக்குகள் அளிக்கப்பட்டன. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஶ்ரீலங்கா பொதுஜக பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரமே எதிராக வாக்களித்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி , ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி , தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததுடன், எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்த திருத்தத்திற்கு வாக்களிக்காதவர்கள் யார்?

44 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பின் போது சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

திருத்தத்திற்கு வாக்களிக்காத ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்

  1. மஹிந்த ராஜபக்ஸ
  2. பிரசன்ன ரணதுங்க
  3. மஹிந்த அமரவீர
  4. பிரமித்த பண்டார
  5. சனத் நிசாந்த
  6. சிறிபால கம்லத்
  7. அநுராத ஜயரத்ன
  8. சீதா அரம்பேபொல
  9. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
  10. பவித்ரா வன்னியாராச்சி
  11. காமினி லொகுகே
  12. ஜனக பண்டார தென்னகோன்
  13. எஸ்.எம்.சந்திரசேன
  14. ரோஹித அபேகுணவர்தன
  15. விமலவீர திசாநாயக்க
  16. தம்மிக பெரேரா
  17. எஸ்.எம்.எம். முஷாரப்
  18. ஜயந்த கெடகொட
  19. பிரதீப் உதுகொட
  20. சஞ்ஜீவ எதிரிமான்ன
  21. நாலக பண்டார கொட்டிகொட
  22. நிபுண ரணவக்க
  23. சஹன் பிரதீப்
  24. சாகர காரியவசம்
  25. ரஞ்சித் பண்டார
  26. ஜயந்த வீரசிங்க

ஆகியோர் வாக்களிப்பு நடைபெற்ற போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

வாக்கெடுப்பு நடைபெற்ற போது ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை

  1. ஹேஷா விதானகே
  2. ஹெக்டர் அப்புஹாமி
  3. வடிவேல் சுரேஷ்
  4. வேலு குமார்
  5. அப்துல் ஹலீம்

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வாக்களிப்பில் பங்குபற்றியிருக்கவில்லை

  1. இரா.சம்பந்தன்
  2. எம்.ஏ.சுமந்திரன்
  3. இரா.சாணக்கியன்
  4. எஸ்.நோகராதலிங்கம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை

  1. ஜி.எல்.பீரிஸ்
  2. உபுல் கலபதி
  3. திஸ்ஸ விதாரண

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.

  1. அங்கஜன் இராமநாதன்
  2. சான் விஜயலால் டி சில்வா

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான

  1. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
  2. செல்வராசா கஜேந்திரன்

ஆகியோர் வாக்களிப்பில் இருந்து விலகி இருந்தனர்.

புதிய திருத்தத்தில் உள்ள மாற்றங்கள்

  • குறித்த அரசியலமைப்பு திருத்தத்தில் ஜனாதிபதியின் நியமன அதிகாரத்தை நீக்கி, அரசியலமைப்பு சபையை அதனுடன் இணைத்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனினும், தற்போதுள்ள ஆணைக்குழுக்கள் கலைக்கப்பட்டு இந்த திருத்தத்தின் பின்னர் புதிய அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
  • இந்த திருத்தத்தின் ஊடாக இரட்டை பிரஜாவுரிமை இல்லாதொழிக்கப்படுவதுடன், தற்போது பாராளுமன்றத்தில் உள்ளவர்களுக்கு உறுப்புரிமை இல்லாமலாக்கப்படும்.
  • இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு அளிக்கும் வகையில் இந்த திருத்தச் சட்டம் உருவாகியுள்ளது.
  • அரசியலமைப்பு சபைக்கான சிவில் பிரதிநிதிகளை நியமிக்கும் போது, எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனையையும் பெற்றுக்கொள்வதற்கு இன்று திருத்தங்கள் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது

வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அடுத்த சில மாதங்களில் அரசாங்கத்தின் பொறிமுறையை மாற்றியமைக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக “ஆளுமையில் இளைஞர்கள்” என்ற மாநாட்டில் நேற்று (ஒக்.22) கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“இன்று நமது பல தொழில்கள் வங்குரோத்து அடைந்துள்ளன. முதலில் நமது வங்கி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளை மறுசீரமைக்க வேண்டும். அதன் மூலம் பல தொழில்களை வாங்குரோத்து நிலையில் இருந்து மீட்க முடியும். பொருளாதார உற்பத்தியை நாம் முன்னெடுத்துச் செல்ல முடியும்.” என ஜனாதிபதி கூறினார்

இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் முக்கிய தீர்மானம்

பிரித்தானிய கட்டுப்பாட்டில் உள்ள சாகோஸ் தீவுகளில் புகலிடம் கோரிய 120 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களை பாதுகாப்பாக வேறு நாட்டிற்கு அனுப்புவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சாகோஸ் தீவுக்கூட்டங்களில் உள்ள டியாகோ கார்சியாவில் சுமார் 120 இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த புகலிடக்கோரிக்கையாளர்கள் குழு இலங்கைக்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவிக்காமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

இந்நிலையில் புகலிடக்கோரிக்கையாளர்களை இன்னொரு மூன்றாவது நாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைக்க பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவுக்கும், மொரீஷியஸுக்கும் இடையே சாகோஸ் தீவுகளின் உரிமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக பிரித்தானிய அதிகாரிகள் இந்த அவசர தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Posted in Uncategorized

கனடாவில் ரெலோ யாழ் மாவட்ட தலைவர் தவிசாளர் நிரோஷ் உடன் கிராம அமைப்புக்கள் சந்திக்கவுள்ளன

ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளருமான (உள்ளுராட்சி மன்றத் தலைவர் ) தியாகராஜா நிரோஷிற்கும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைக்குட்பட்ட அயல் கிராமங்களின் புலம் பெயர் தமிழ் உறவுகளுக்குமான கலந்துரையாடலை கனடா நவக்கிரி மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கலந்துரையாடல் scarborugh Event center, 5637 finch Ave East, Scarborough ON, M1B 5R1 என்னும் முகவரியில் மாலை 3 மணி தொடக்கம் 5 மணி வரையில் நடைபெறவுள்ளதாக நவக்கிரி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

மேலதிக தொடர்புகளுக்கு 416- 319 – 3139, 647-818-6750, 647-717-6977 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இக் கலந்துரையாடலுக்கு வலிகாமம் கிழக்குப் பிரதேசத்திற்கு உட்பட்ட அயல் கிராமத்தவர்களும் கலந்து கொள்ள முடியும் என வரவேற்கப்பட்டுள்ளதுடன் ஏனைய கிராமங்களைச் சேர்ந்த அமைப்புக்களும் தவிசாளர் தியாகராஜா நிரோசுடன் பிரத்தியே சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் கனடாவில் தங்கியிருக்கும் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உடன் வட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்வதாயின் 0094776569959 என்னும் ஏற்கனவே அவரது பாவனையில் உள்ள தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

வருட இறுதிக்குள் ஐ.எம்.எப் உதவியை எதிர்பார்க்கிறோம் – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

இவ்வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சபையில் தெரிவித்தார்.

அடுத்த மாதத்தின் முதல் வாரத்துக்குள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தீர்க்கமான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலாக உள்ளது. எனவே இலங்கையின் பிரதான இருதரப்பு கடன் வழங்குநர்களான சீனா,இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் எமக்கு சாதகமான பதிலை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே இவ்வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றோம்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனும்,உலக வங்கியின் பிரதிநிதிகளுடனும் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம்,உலக வங்கியின் பிரதிநிதிகளும் உறுதியளித்துள்ளனர். அதேபோல் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தகப்பட்டுள்ளது என்றார்.

 

Posted in Uncategorized

ஜே.ஆர் நினைத்துப் பார்க்காத ஒன்று நடந்து விட்டது! டலஸ் வெளிப்படுத்தும் விடயம்

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன நினைத்துப் பார்க்காத ஒன்று நடந்து விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தனது மருமகன் தேர்தலில் தோல்வியடைந்து தனது அரசியல் அமைப்பினை பயன்படுத்தி ஜனாதிபதியாவார் என ஜே.ஆர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

44 ஆண்டுகளுக்கு முன்னர் ஜே.ஆர் இந்த அரசியல் அமைப்பினை உருவாக்கிய போது இவ்வாறான ஓர் நிகழ்வு நடைபெறும் என நினைத்திருக்க மாட்டார்.

ஜே.ஆரின் மருமகன் தேர்தலில் தோல்வியடைந்து தேசியப் பட்டியலில் நாடாளுமன்றம் சென்று ஜனாதிபதியாகி விட்டார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான விகாரமான எதிர்காலங்கள் உருவாவதனை தவிர்த்து, நாட்டு மக்களுக்கு சார்பான ஓர் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

13ஆல் நாட்டிற்கு பெரும் ஆபத்து! சரத் வீரசேகர

13ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சரும், பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அத்துடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்காகவே நாட்டு மக்கள் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆணை வழங்கினார்களே தவிர அரசியலமைப்பு திருத்தத்திற்கு அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

பதவி விலகும் கட்டாயத்தில் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இரட்டைக் குடியுரிமையுடன் சுமார் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றனர்.

இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாவதை தடுக்கும் வகையில், நாடாளுமன்றத்தால் இன்று அங்கீகரிக்கப்பட்ட சட்டம் காரணமாக, இரட்டை குடியுரிமைக் கொண்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தொடர முடியாது தடைசெய்யப்பட்டுள்ளது.

எனவே இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் சாசனத்திற்கு மதிப்பளித்தால் பதவி விலக வேண்டும்.

இலங்கையின் நாடாளுமன்றில் இன்று 22 வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட்டது.

இதன் காரணமாக முக்கியமாக பொதுஜன பெரமுனவின் ஸ்தாபரும், அமெரிக்க குடியுரிமையை கொண்டவருமான பசில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினராக தொடர முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை அனைத்து பிரஜைகளுக்கும் கிடைத்த வெற்றி: கரு ஜயசூரிய

அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை ஜனநாயகத்தை மதிக்கும் இலங்கையின் அனைத்து பிரஜைகளுக்கும் கிடைத்த வெற்றி என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றில் இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த அரசியலமைப்பு சீர்த்திருத்தத்திற்காக தொடர்ந்து வாதிடும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், சிவில் மற்றும் அரசியல் சக்திகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கையை எதேச்சதிகார ஆட்சிக்கு மாற்றும் நோக்கில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை இரத்து செய்து 22ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை நாடாளுமன்றம் நேற்று (21.10.2022) நிறைவேற்றியுள்ளது.

நாடாளுமன்றத்தால் எடுக்கப்பட்ட இந்த தீர்மானமானது ஒரு மிக முக்கியமான இடைக்கால அரசியலமைப்பு சீர்திருத்தமாகும்.

இது புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இந்த தருணத்தில், அனைத்து அரசியல் சக்திகளும் இந்த சாதனையால் வலுப்பெற்று, ஜனநாயகத்தை வலுப்படுத்தி, நாட்டு மக்களின் நலனுக்காக இந்த பணி முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நாங்கள் கூறுவதை கேட்பதில்லை-மகிந்தானந்த அளுத்கமகே

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறுவதை செய்யும் நபர் அல்ல என அந்த கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்டுப்படுத்த முயற்சித்தால், அது அரசாங்கத்தின் அழிவாக அமைந்து விடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நெருக்கடியில் இருந்து மீளவே நாங்கள் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். இரண்டு வருடங்களுக்கு அவர் பணியாற்ற தேவையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையில் அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.

மறுபுறம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாங்கள் கூறுவதை கேட்க மாட்டார். எனினும் எங்களுடன் ஒத்துழைப்புடன் வேலை செய்கிறார். அவர் அனுபவமுள்ள அரசியல்வாதி. முன்னாள் பிரதமர்.

நாங்கள் அவரை கட்டுப்படுத்தும் அளவுக்கு அவர் முட்டாள் அல்ல. நாங்கள் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்து, அவரை கட்டுப்படுத்த முயற்சித்தால், அதுதான் அரசாங்கத்தின் அழிவாக இருக்கும் எனவும் மகிந்தானந்த அளுத்கமகே மேலும் கூறியுள்ளார்.

Posted in Uncategorized