2023 மார்ச் 25 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த திட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

அடுத்த மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர், தேர்தலை நடத்துவதற்கான திகதியை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படும் என ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க குறிப்பிட்டார்.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மேலுமொரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பதவிக்காலமும் எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இதனடிப்படையில், தற்போதுள்ள நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்ப, தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்தி உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டும்.

இந்த தேர்தலினூடாக 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை கலைத்து மக்கள் ஆணைக்கு இடமளிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தி போராட்டம்

பாராளுமன்றத்தைக் கலைத்து, மக்கள் ஆணைக்கு இடம் வழங்குங்கள்’ எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

மக்கள் ஆணைக்கு இடம் வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டக்காரர்கள் விஜேராம சந்தியிலிருந்து ஹைலெவல் வீதியூடாக நுகேகொடை வரை பயணித்து, ஆனந்த சமரக்கோன் திறந்த விளையாட்டரங்கில் ஒன்றுகூடினர்.

இதன்போது உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர், அனுரகுமார திசாநாயக்க, போராட்டக்காரர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் அரசாங்கத்திற்கு தனது கண்டனங்களை வௌியிட்டார்.

Posted in Uncategorized

ஜ.நா பிரதிநிதிகள் யாழ். மேயரை சந்தித்தனர்

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO)ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் David Mclachlan-Karr-க்கும் யாழ்ப்பாண மாநகர சபை மேயருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை நடைபெற்றது.

யாழ். மாநகர சபையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரும் பங்கேற்றிருந்தார்.

இதன்போது, யாழ்ப்பாண மாநகர சபை மேயர் விசுவலிங்கம் மணிவண்ணன், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் David Mclachlan-Karr-க்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கினார்.

இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் 10 இலட்சம் ரூபா கடனாளிகள்

இலங்கையில் தனிநபர் கடன் தொகை தற்போது 1 மில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, ஏப்ரல் 2022க்குள், மத்திய அரசு செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 4 மாதங்களுக்குள் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2022 ஏப்ரல் மாதத்திற்குள் மத்திய அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 23,310.1 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12,442.3 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடன்களாகவும் 10.867.8 பில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன்களாகவும் இருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் இறுதியில் 17,589.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்த மத்திய அரசாங்கத்தின் மொத்தக் கடன் 04 மாத காலப்பகுதிக்குள் 5,720.7 பில்லியன் ரூபா அல்லது 32.52% அதிகரித்துள்ளது என்பது விசேட அம்சமாகும்.

அதேவேளை, இலங்கையில் தனிநபர் கடனின் அளவும் விரைவான அதிகரிப்பை சந்தித்துள்ளது.

இந்நாட்டின் சனத்தொகை 22 மில்லியன், அதன்படி இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் 10 இலட்சம் ரூபா கடனாளிகளாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாடல்

2009 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தத்தின் போதான வலிகள், தாக்கங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களுடன் பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் (Rishi Sunak) கலந்துரையாடல்.

பிரித்தானிய தமிழ் கன்சர்வேட்டிவ் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சந்திப்பில், அதன் இணைத்தலைவரும் கவுன்சிலருமாகிய ஜெய், செயலாளர் கயன்,அருச்சுனா சிவானந்தன்,ஜனனி ஜெகநாயகம்,ரெலோ பிரித்தானிய கிளையின் அமைப்பாளார் சாம் சம்பந்தன், தென்மராட்சி TDA தலைவர் டாக்டர் புவி ,ரகு தவறாஜ், கவுன்சிலர் பரம் நந்தா, கரன் போல் மற்றும் பல பிரித்தானிய புலம்பெயர் தமிழ் மக்களின் முக்கிய செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திலும் இறுதி யுத்தத்தின் போதும் தமிழர்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளுக்கும், அவை குறித்த பொறுப்புக்கூறல் தொடர்பிலும் ரிஷி சுனக் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை வேட்பாளர் ரிஷி சுனக், தமிழ் தரப்பினரை சந்தித்துள்ளதுடன், பிரித்தானியாவில் தமிழர்களின் பங்களிப்பிற்காகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் இருந்து விலகியமை காரணமாக, இலங்கை மீது கடுமையான நிலைப்பாட்டை பிரயோகிப்பதில் சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்களுக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பிலான ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு தனது ஆதரவை வழங்கியுள்ள ரிஷி சுனக், எதிர்கால தீர்ப்பாயத்தில் பயன்படுத்தக்கூடிய போர்க்குற்ற சான்றுகளை சேகரிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, ரஷ்யர்கள் மீது இங்கிலாந்து விதித்துள்ள தடைகளைப் போன்று, இலங்கை அதிகாரிகள் மீது தடை விதிப்பதற்கான சாத்தியம் தொடர்பிலும், பிரித்தானியவாழ் தமிழர் பிரதிநிதிகளுடன் ரிஷி சுனக் கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பிலும் ரிஷி சுனக் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடி, எல்லையில்லா பணவீக்கம் , அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறை தொடர்பிலும் அவர் கவனம் செலுத்தியுள்ளார்.

Posted in Uncategorized

நிபந்தனைகளுடன் இலங்கைக்கு உதவுங்கள்! சர்வதேசத்திடம் கர்தினால் கோரிக்கை

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, நேர்மை மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தெளிவான நிபந்தனைகளுடன் இலங்கைக்கு உதவிகளை வழங்குமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மூன்று காரணிகளால், இலங்கையின் ஜனநாயகம் பாரியளவில் சிதைவடைந்துள்ளதாக மல்கம் ரஞ்சித் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டத்தின் ஆட்சி படிப்படியாக சீர்குலைந்து, நீதித்துறையில் அரசியல் தலைவர்களின் தலையீடானது, நீதியை ஒரு பிரச்சினையாக மாற்றியுள்ளது.

ஊழல்களை மேற்கொண்டு ஒரு சில குடும்பங்கள் மட்டுமே முடிவில்லாமல் சம்பாதித்து வருகின்றன. பல குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அவை அடக்குமுறைக்கு ஆளாகின்றன. எனவே இந்த தவறுகளை சரி செய்யப்படுவதை உறுதிப்படுத்த சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கர்தினால் கோரியுள்ளார்.

தவறான கொள்கைகளாலும், தவறான பொருளாதார நிர்வாகத்தாலும், நிதி நெருக்கடி, கடுமையாக மாறியுள்ளது. அரசாங்கங்களின் தவறான திட்டங்களால் நாட்டில் பெரும் கடன் பிரச்னை ஏற்பட்டு, அதிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியவில்லை.

அதனால், தேசிய வருமானமும், உற்பத்தித் திறனும் குறைந்துள்ளதால், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

கோட்டாபயவின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுன வலியுறுத்தல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு இடம் வழங்கப்பட வேண்டுமென பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று பிற்பகல் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்த்து நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பூரண ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு இடம் வழங்கப்பட வேண்டுமெனவும் பசில் ராஜபக்ஷ இந்த கலந்துரையாடலில் தெரிவித்தார்.

இது, ஜனாதிபதி உட்பட அரசாங்கத்திடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைக்கும் மிக முக்கியமான கோரிக்கையாகும் என பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பிரசன்ன ரணதுங்க, சாகர காரியவசம், ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ஷ மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

யுவோன் ஜோன்சன் என்ற 19 வயது யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை அனுபவித்து வந்த ஜூட் ஷமன் அந்தோனி ஜயமஹா, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த போது பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டார்.இதன்போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்சம் ஊழல் தொடர்பான விசாரணையின் ஒரு அம்சமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று வியாழக்கிழமை சுமார் 03 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

அத்துரலியே ரதன தேரர் செய்த இரண்டு முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேனவிடம் இது தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

”மீண்டும் ஜனாதிபதியுடன் பேசத் தயார்”: சஜித்

பயனளிக்கும் மறுசீரமைப்பு செயற்பாட்டின் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தான் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

வரப்பிரசாதங்கள் சலுகைகளைப் பெறுவதற்குப் பதிலாக பிரயோக ரீதியாக தலையிட்டு நாட்டைக் கட்டியெழுப்புவதே தமது நோக்கமாகும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கம் கொண்டு வரும் நேர்மறையான, முற்போக்கான முன்மொழிவுகளை ஆதரிக்கும் வகையில் ஒரு வேலைத்திட்டம் வடிவமைக்கப்படும் எனவும், ஒருபோதும் மக்களின் எண்ணங்களுக்கும், விருப்பங்களுக்கும் துரோகம் இழைக்கமாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு கையிருப்பில் எஞ்சியுள்ள டொலர்களை அழிக்கும் செயற்பாட்டிற்கு ஒருபோதும் பங்களிக்கப்போவதில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,தற்போது அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை கட்டியெழுப்ப பதவிகள் அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மறுசீரமைப்புகளுக்கான புத்திஜீவிகள் ஒன்றியத்தின் விசேட கூட்டம் இன்று (19) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.

தற்போது நிலவும் சூழ்நிலையில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இதன்போது இடம்பெற்றது.

பா.உ ஜனாவின் நிதி ஒதுக்கீட்டில் அமைப்புகள், கழகங்களுக்குஉபகரணங்கள் வழங்கிவைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்( ஜனா) அவர்களின் 2022ம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைப்புகள் மற்றும் கழகங்கள் சிலவற்றுக்கான தளபாடங்கள், விளையாட்டு உபகரணங்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.

கோரளைப்பற்று வாழைச்சேனை, மண்முனை மேற்கு வவுணதீவு, மண்முனைப் பற்று ஆரயம்பதி பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழ் இயங்கும் அமைப்புகள், கழகங்களுக்கான உபகரணங்களே இன்று வழங்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் அவர்களிடம் மேற்படி கழகங்களால் மேற்கொள்ளப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் 2022ம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் உரிய பிரதேச செயலங்களினூடாக உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டது. இருப்பினும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனைகள், அரசியல் குழப்பங்கள் போன்றவற்றின் காரணமாக உபகரணங்கள் கையளிக்கும் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்து தற்போது அவை உரிய அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் இன்றைய தினம் மேற்குறிப்பிட்ட மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழுள்ள அமைப்புகளுக்கு தளபாடங்கள், உபகரணங்கள் கையளிப்பட்டது.

இந்நிகழ்வில்  முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் வேணு ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized