கடன் நிபந்தனைகளுக்காக 40 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த முயற்சி!

கடன் நிபந்தனைகளுக்கமைய இலங்கையில் நட்டத்தில் இயங்கும் 40 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த சர்வதேச நாணய நிதியத்தினால் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான யோசனைக்கு பாராளுமன்றத்தில் தங்களால் ஆதரவு வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெறுவதற்கு அதனால் முன்வைக்கப்படும் நிபந்தனைகள் சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய கப்பலின் வருகையை ஒத்தி வைக்குமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை!

இலங்கை வரும் சீன ஆய்வுக் கப்பலின் பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலான “யுவான் வாங் 5” இந்நாட்டிற்கு வருவது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒகஸ்ட் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய வேண்டிய கப்பல், 17 ஆம் திகதி வரை அங்கே நங்கூரமிட்டிருக்கும் என்று கூறப்படுகின்றது.

குறித்த கப்பலின் வருகை குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய இந்தியா, உயர் தொழில்நுட்ப சீனக் கப்பலின் வருகையானது பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைவதற்காக கடந்த ஜூலை 13ஆம் திகதி சீனாவின் ஜியாங்யின் பகுதியில் இருந்து புறப்பட்ட கப்பல் தற்போது தைவானின் கடல் எல்லையை வந்தடைந்துள்ளது.

இலங்கை குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் நேரடிப்பேச்சு!

இலங்கைத்தீவில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிமாற்றத்தின் இரண்டு முக்கிய பங்காளர்களாக கருதப்படும் இந்தியாவும் அமெரிக்காவும் கம்போடியாவில் இலங்கையின் சமகால நிலவரங்கள் குறித்து இன்று பேச்சுக்களை நடத்தியுள்ளன.

கம்போடியாவில் இடம்பெற்றுவரும் ஆசியான் நாடுகளின் அமைச்சர்களின் சந்திப்பின் பின்னணியில் அமெரிக்க ராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கனும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இன்று பனோம் பென்னில் இந்தப்பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

இலங்கை, மற்றும் மியான்மார் ஆகிய சீன ஆதரவு நாடுகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் முக்கியமாக சவால்கள் இருப்பதை ஏற்றுக்கொண்ட இருவரும் இந்த விடயங்களை குறித்து விரிவாக பேசுவதற்காக விரைவில் தனித்துவமான சந்திப்பு ஒன்றை நடத்தவும் உடன்பட்டுள்ளனர்.

சீனாவின் உளவுக்கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து இந்தியா ஏற்கனவே ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை குறித்து பேச வேண்டிய விடயங்கள் இருப்பதாக அன்ரனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்

Posted in Uncategorized

நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாது இருக்க வேண்டும்- சீனத் தூதுவருடனான சந்திப்பையடுத்து ரணில் ட்வீட்

க்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கும், ஒரே சீனா என்ற கொள்கைக்கும் இலங்கை எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனத் தூதுவர் Qi Zhenghong உடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடுகளுக்கிடையில் தற்போது நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை அதிகரிப்பதற்கு காரணமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு நாடுகள் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாது பரஸ்பர மரியாதையை பேணுவதற்கு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான மக்களின் உரிமைக்கு மதிப்பளிக்கவும் – சர்வதேச மன்னிப்புச் சபை !

பொது இடங்களில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான மக்களின் உரிமைக்கு மதிப்பளிக்குமாறும், அமைதியான எதிர்ப்பாளர்களைக் கலைப்பதற்கு அச்சுறுத்தல் அல்லது பலத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் இலங்கை அதிகாரிகளுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள குறித்த அமைப்பு, போராட்டத் தளமான ‘கோட்டா கோ கம’ வை காலி செய்யுமாறு பொலிஸாரின் அறிவிப்பு தொடர்பில் கவலை தெரிவித்துள்ளது.

போராட்டக்காரர்கள் மற்றும் போராட்ட ஏற்பாட்டாளர்களின் தொடர்ச்சியான கைதுகள் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான குரல்களின் ஒடுக்குமுறையின் தீவிரம் குறித்து எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையைப் பயன்படுத்தியதற்காக மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை இலங்கை அதிகாரிகள் உடனடியாக விடுவித்து கைவிட வேண்டும் என மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைகளை மதிக்கவும், பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் மற்றும் நிறைவேற்றவும், மக்கள் தங்கள் மனித உரிமைகளை சுதந்திரமாகப் பயன்படுத்த அனுமதிக்குமாறு அந்த அமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

Posted in Uncategorized

ஆறுமுகநாவலரின் கனவுகளை நனவாக்கும் பணிகளில் யாழ்.பல்கலைக்கழகத் தமிழ்த்துறை

தமிழ்மொழியின் நவீனமயமாக்கலிற்கு ஈழத்தவர்களின் பங்களிப்பு என்று நோக்கும் போது முதன்முதலாக எங்கள் கண் முன்னே தோன்றுபவர் ஆறுமுகநாவலர். நாவலர் பிறந்து இந்த ஆண்டு 200 ஆவது ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்த 200 ஆவது ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஒரு தமிழியல் ஆய்வு மாநாட்டை நடாத்தி நாங்கள் ஆறுமுகநாவலரின் கனவுகளை நனவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும், மூத்த பேராசிரியருமான எஸ்.சிவலிங்கராஜா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் சிங்கப்பூர் எஸ்டேட் கந்தையா கார்த்திகேசன் அறக்கொடை நிதியத்தின் முழுமையான நிதிப் பங்களிப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கின் ஒரு பகுதியாக மூன்றாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு நேற்றுப் புதன்கிழமை(03.8.2022) மேற்படி பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் “ஈழத்துத் தமிழியல் மரபும் மாற்றமும்” (இருபதாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது) எனும் தொனிப் பொருளில் சிறப்பாக இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு ஆய்வரங்கைத் திறந்து வைத்து திறப்புரை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நவீனத்துவம் என்பது என்ன? இந்தக் கேள்விக்கான விடையளிப்பது மிகவும் கடினம். பொதுவாகக் கூறினால் பழமையிலிருந்து வேறுபட்டுப் புதுமையை நோக்கிச் செல்வது என இதற்குப் பொருள் கூறுவார்கள். அல்லது சம காலத்தையது அல்லது பழமை அல்ல என்றும் இதற்குப் பொருள் சொல்கிறார்கள். நவீனத்துவம் என்ற கருத்து நிலை முதன்முதலில் மேலைப் புலங்களிலேயே உருவானது.

உலகளாவிய ரீதியில் வேர்விட்டு வளரத் தொடங்கிய நவீனத்துவம் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, சமயம் முதலான பல்வேறு துறைகளிலும் செல்வாக்குச் செலுத்தியது. இந்தச் செல்வாக்கு மெல்ல மெல்ல எங்கள் தமிழ்ச் சூழலுக்குள்ளும் தலைவைக்கத் தொடங்கியது.
அதற்கு அனுகூலமாக அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாட்டுப் பின்னணிகள் காரணமாக அமைந்தன.

ஈழநாட்டில் நீண்டகாலமாக நிலவி வந்த வாழ்வியல் அம்சங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைப் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலம் ஏற்படுத்துகின்றது. எனினும், நாம் தற்போது காணும், அனுபவிக்கின்ற நவீனத்துவம் பெருமளவில் இக்காலங்களில் தான் தோன்றியது என்று கூற முடியாது.

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 20 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் ஈழத்தில் நவீனத்துவம் தனது கரங்களை அகல விரித்தது. 19 ஆம் நூற்றாண்டு பல வழிகளிலும் இதற்குச் சாதகமாக அமைந்தது.

ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரையில் பல சிறப்பியல்புகளை உடைய வரலாற்றுக் காரணங்களால் 19 ஆம் நூற்றாண்டு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. மேல்நாட்டுக் கலாசாரம், ஆங்கிலக் கல்வி ஆகியவற்றின் கடுமையான தாக்கமும் அதற்கு எதிரான நிலைப்பாடுகளும் இலக்கிய, இலக்கணச் சிந்தனைகளுக்கும், ஆக்கங்களுக்கும் புதிய உத்வேகத்தைக் கொடுத்ததாகப் பேராசிரியர் கைலாசபதி குறிப்பிட்டுள்ளார்.ஈழத்து நவீனத்துவத்தின் ஊற்றுக் கால்களை இந்த மேற்கோள் தெளிவாகக் காட்டுகிறது.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து நவீனத்துவம் குட்டி போட்டுப் பட்டி பெருகியது. பின் நவீனத்துவம் என்பது போல…ஈழத்தில் காலனித்துவ காலம் நவீனமயமாக்கத்தை உள்வாங்க, உருவாக்க உதவியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

19 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த மிஷனரிமார்களின் செயற்பாடுகள் பல வழிகளிலும் இவற்றின் பின்னணியாக அமைந்தன.

ஈழத்தவர்கள் நவீனத்துவத்திற்குள் பயணிக்க மிஷனரிமார்களின் பணிகளும் முக்கிய காரணங்களாக அமைந்தன என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது.

மிஷனரிமார்கள் வருவதற்கு முன்னர் எமது கல்வி, கலை, கலாசாரம், இலக்கியம், பண்பாடு, மொழி முதலானவை கட்டிறுக்கமான, நெகிழ்ச்சித் தன்மையற்ற, குறிப்பிட்ட சில எல்லைகளுக்கு உட்பட்டே விளங்கின. சமயம், கல்வி, பண்பாடு, அரசியல், பொருளாதாரம் போன்றவற்றில் ஏற்பட்ட மாற்றங்களை குறிப்பிட்ட கட்டிறுக்கங்களைத் தகர்த்தும், தளர்த்தியும் விட்டமை நவீனத்துவ செயற்பாடுகளுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தன.

ஈழத்தில் நவீனமயமாக்கல் எனக் குறிப்பிடும் போது நமக்கு முன்னே விஸ்வரூப தரிசனமாகத் தெரிவது அச்சுக் கலையே எனலாம். ஈழத்து அச்சு இயந்திரப் பயன்பாடு பற்றிப் பலரும் விஸ்தாரமாக எழுதியுள்ளனர். பேராசிரியர் கைலாசபதி ஈழத்து இலக்கிய முன்னோடிகள் என்ற தனது நூலில் அச்சுக் கலையில் நவீனத்துவத்தை எவ்வாறு வளர்த்தெடுத்தது என்பது தொடர்பில் விரிவாக எழுதியுள்ளார்.

அச்சுக் கலையின் உடன்பிறப்பாகப் பதிப்புத் துறை மேற்கிளம்புகிறது. தமிழ் நூல்களின் பதிப்புத் துறைக்கு அத்திவாரமிட்டவர் நாவலர்.சுவர் எழுப்பியவர் சி.வை.தாமோதரம்பிள்ளை, கூரை மேய்ந்தவர் உ.வை. சாமிநாத ஐயர். வையாபுரிப்பிள்ளை போன்ற பெரிய பதிப்புச் சூறாவளிகள் வீசத் தொடங்க அத்திவாரமும், சுவரும் அசையாமலிருக்க கூரை ஆட்டம் துறையாக விளங்குகிறது.கொடுக்கத் தொடங்கியது. எனவே, ஈழத்து நவீனமயமாக்கலிற்குப் பதிப்பு முயற்சி மிக முக்கிய துறையாக விளங்குகிறது.

நவீனத்துவம் என்பது முற்றிலும் மேற்கத்தைய வாதம் அல்ல. அது எங்களுடையது. அடிப்படையில் அது எங்களுக்கு உரியது என்பதை நாங்கள் மனதிற் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

Posted in Uncategorized

இலங்கை நெருக்கடி அதிகளவு ஜனநாயக தன்மை கொண்ட அரசாங்கத்திற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது – அமெரிக்க இராஜாங்க செயலாளர்

இலங்கை நெருக்கடி அதிகளவு ஜனநாயக அரசாங்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது சவாலான நெருக்கடியான தருணத்தில் உள்ளது ஆனால் அந்த நாட்டிற்கு அதிகளவு ஜனநாயக தன்மை மிக்க அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை கம்போடிய தலைநகரில் ஆசிய வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் சந்தித்தவேளை அமெரிக்க இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைப்பதற்கு அமெரிக்கா வழங்கும் உதவியை பாராட்டுவதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பூகோள அரசியல் மோதலில் சிக்கும் இலங்கை?

சீன ஆய்வுக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு இந்தியா கொண்டு வந்துள்ளதாக The Hindu இன்று செய்தி வௌியிட்டுள்ளது.

இந்த கப்பல் தொடர்பில் இந்தியா தௌிவான தகவலை வழங்கியிருந்த போதிலும், இலங்கை பாதுகாப்பு அமைச்சு கப்பலின் வருகையை உறுதிப்படுத்தியமையினால் இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Yuan Wang 5 கப்பல் சீன இராணுவத்தின் மூலோபாய ஆதரவுப் படைக்கு சொந்தமான செய்மதிகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கண்காணிக்க பயன்படுகிறது.

இந்தியா இதனை சீன உளவு பார்க்கும் கப்பல் என தெரிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த நீர்மூழ்கிக்கப்பலை விட இது ஆபத்தானது என இந்தியாவின் Economic Times இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.

Yuan Wang 5 கப்பல் மூலம் 750 கிலோமீட்டர் தூரத்திலுள்ள இடங்கள் தொடர்பிலான தரவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இதன்மூலம் இந்தியாவின் தெற்கு பிரதேசத்தின் பாதுகாப்பு நிலையங்கள், ஆறு துறைமுகங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென Economic Times வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை முகாம் உள்ளிட்ட முக்கிய இடங்களும் இதில் அடங்குகின்றன.

இதன் காரணமாக சீன ஆய்வுக் கப்பலை இந்தியா மிகவும் ஆபத்தானது என்றே கூறுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் இந்தியா அதிக கவனம் செலுத்தியுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

Yuan Wang 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ள விடயம் குறித்து கடந்த வாரம் ஊடங்கள் மூலம் தகவல் வௌியானதும், அதனை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்ததாகவும் பின்னர் ஆகஸ்ட் 11 ஆம் திகதியில் இருந்து 17 ஆம் திகதி வரை இந்த கப்பலுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கியுள்ளமை உறுதியாகியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன.

இதேவேளை, தாய்வானை அடிப்படையாகக் கொண்டு சீனா – அமெரிக்கா இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு வரும் நிலையிலேயே இந்திய – சீன சமுத்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் Nancy Pelosi-யின் தாய்வான் விஜயத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

தமது நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதியாக சீனா தாய்வானை கருதுவதுடன், அமெரிக்கா தமது எதிர்ப்பையும் கருத்திற்கொள்ளாமல் செயற்பட்டால் ஆபத்துகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும், மலேஷியாவிற்கான விஜயத்தை நிறைவு செய்த அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் இன்று இரவு 10.30-க்கு தாய்வானை சென்றடையவுள்ளார்.

தாய்வானை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்டுள்ள இந்த முரண்பாடு காரணமாக அமெரிக்கா தமது பிரதான மூன்று யுத்த கப்பல்களை தாய்வானின் மேற்கு கடற்பகுதியில் நிறுத்தியுள்ளது.

தாக்குதல் கப்பல்களான USS, Ronald Reagan, Abraham Lincoln, USS Tripoli ஆகிய கப்பல்களே அவையாகும்.

அத்துடன், சீனாவும் தமது தாக்குதல் கப்பல்களை தென் சீன கடல் எல்லை , அதனை அண்டிய பகுதிகளில் நிலை நிறுத்தியுள்ளதுடன், யுத்தம் ஏற்பட்டால் அதற்கு பதில் வழங்க தயார் எனவும் கூறியுள்ளது.

தாய்வானை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருதற்கு தயாராகும் சீன கப்பல் தொடர்பில் இந்திய வௌிவிகார அமைச்சின் பேச்சாளரும் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்காக மேற்கொள்ள முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அவர் கூறியிருந்தார்.

இராஜதந்திர ரீதியில் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் அளவிற்கு இந்தியாவும் சீனாவும் இந்த நெருக்கடி நிலைமையில் நெகிழ்வுடன் செயற்படுமா?

இந்தியா தமது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என கருதும் விடயத்தினை இலங்கை கடற்பரப்பில் இடம்பெறுவதற்கு இடமளிக்குமா?

சீனா தமக்கு சொந்தமான ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகளுக்கு மற்றுமொரு நாடு அழுத்தம் விடுக்கும்போது மௌனம் காக்குமா?

தமக்குத் தேவையானவாறு வௌிநாடுகளுடன் செய்துகொண்ட கொடுக்கல் வாங்கல்கள் காரணமாகவே இன்று இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

SEA OF SRI LANKA எனப்படும் இலங்கை கடலுக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படுத்தும் தீர்மானங்களை எடுத்தமையினால் இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையின் போது தலையிட வேண்டி ஏற்பட்டுள்ளதல்லவா?

தாய்வானைப் போன்று இலங்கையும் பூகோள அரசியல் மோதலில் சிக்காமல் இருப்பதற்கு தற்போதேனும் கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் எடுக்கப்படுமா?

எமது நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், இன்னுமொரு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது.

Posted in Uncategorized

இன்று (04) நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் பணிப்பகிஷ்கரிப்பு

இன்று (04) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

பஸ்கள் ஒரு நாளேனும் முழுமையாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையால், இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

QR முறையினூடாக தனியார் பஸ்களுக்கு வாராந்தம் 40 லிட்டர் டீசல் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் நீண்ட தூர பஸ் பயணங்களுக்கு அது போதுமானது அல்ல எனவும் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் குறிப்பிட்டார்.

அத்துடன், குறுந்தூர சேவைகளில் ஈடுபடும் பஸ்கள் 8 மணித்தியாலங்களே பயணிக்க முடியும் எனவும் அஞ்சன பிரியஞ்சித் சுட்டிக்காட்டினார்.

பஸ்களுக்கு போதுமானளவு டீசல் வழங்கும் வரையில் தமது பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் எனவும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் குறிப்பிட்டார்.

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் எடுத்துள்ள தீர்மானம்

நேற்று (03) இரவு காலி முகத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சில கூடாரங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி முகத்திடலில் தங்கியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் நாளை மாலை 05 மணிக்கு முன்னர் குறித்த பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் வழங்கிய அறிவித்தலின் பேரில் கூடாரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனிடையே, ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு போராட்ட களத்தில் சுடர் ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டம் இன்று 118வது நாளாக தொடர்கிறது.