வெலிக்கடைப் படுகொலையின்  39ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு

வெலிக்கடைப் படுகொலையின்  39ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பிலுள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ) அலுவலகத்தில் நடைபெற்றது.

ரெலோவின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,

ரெலோ வின் உப தலைவர் இந்திரகுமார் பிரசனன்னா, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் ஞா.யோகநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் இளைஞர் அணி உப தலைவரும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினருமான இரத்தினையா வேணுராஜ், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள்,  உள்ளிட்ட பலரும் கநந்து கொண்டனர்.

Posted in Uncategorized

கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் நாடு திரும்புவார் – அரசாங்கம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் நாடு திரும்புவார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாகவில்லை எனவும், சிங்கபூரில் இருந்து அவர் விரைவில் நாடு திரும்புவார் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த 20 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 20 பேரை இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அடையாளம் கண்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட காணொளிகள் ஊடாகவே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வலுக்கட்டாயமாக இல்லத்திற்கு நுழைந்தவர்கள் மற்றும் இல்லத்திற்குள் நுழைய வழிவகுத்தவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் தலைமையகத்தினால் குறித்த சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், சந்தேக நபர்கள் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்களின் உதவியை நாடவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சந்தேக நபர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தியதன் பின்னர், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் கடந்த 9ஆம் திகதி தீக்கிரையாக்கப்பட்டது.

தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் மகன் மறுநாள் துபாய் சென்றுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் துபாயில் இருந்து இங்கிலாந்து சென்றுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியையும் குற்றப் புலனாய்வு திணைக்களம் கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Posted in Uncategorized

இலங்கைக்கு தமிழகத்தில் இருந்து மேலும் நிவாரணப் பொதிகள்!

தமிழக அரசாங்கத்தினால் 3.4 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனிதாபிமான உதவி, இந்திய உயர்ஸ்தானிகரினால் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டதுடன், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் அதனை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

தமிழக அரசினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிகள், மூன்றாவது கட்டமாக இலங்கையை வந்தடைந்துள்ளன.

இதுவரையில், 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 100 மெட்ரிக் தொன் மருந்துகள் என மொத்தமாக சுமார் 22 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

’ஆயுதமேந்தும் நோக்கமில்லை’ – ராஜித சேனாரத்ன

போராட்டக்காரர்களுக்கு ஆயுதமேந்துவதற்கான எந்தவிதமான நோக்கங்களும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனநாயகரீதியாக தேசிய சபை ஒன்றை அமைக்க வேண்டுமென்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளதாகவும், போராட்டக்காரர்கள் ஜனநாயகரீதியாக செயற்பட்டு வருகிறார்கள். அவர்கள் மிகுந்த புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்கிறார்கள். மார்ச் மாதம் இப்போராட்டத்தை ஆரம்பிக்கும்போது இப்போராட்டத்துக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை. இப்போராட்டத்துக்கு யார் தலைமைத் தாங்குகிறார்கள் என்பது தெரியாதென அவர்கள் கூறினார்கள். ஆனால் நானும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுமே இப்போராட்டத்துக்கு ஆதரவை வழங்கியிருந்தோம் என்றார்.

சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு முன்பாக சர்வக்கட்சி மாநாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கக் கூட்டி அதில் போராட்டக்காரர்களையும் கலந்துக்கொள்ள செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து வாக்களிக்க சஜித் அணி முடிவு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் மற்றும் செயற்குழுக் கூட்டம் என்பன இன்று (26.07.2022) கூடி பின்வரும் முடிவுகளை எட்டின.

01). கருத்துத் தெரிவிக்கும் உரிமை போராட்டம் நடத்துவதற்கான உரிமை மற்றும் மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும் உரிமைகளை ஒடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

02). மக்கள் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வுகளை வழங்காமல் அரச பயங்கரவாதத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறை அரசாங்கத்துடன் கூட்டுச் சேராதிருப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

03). பாராளுமன்ற ஜனநாயக அமைப்பில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக பாராளுமன்றத்தில் குழு முறைமையொன்று ஸ்தாபிக்கப்பட்டால், அதற்கு ஆதரவளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

Posted in Uncategorized

தேசிய அரசு – அதிகாரபூர்வ அழைப்பு எவருக்கும் இதுவரை வரவில்லை – மனோ கணேசன்

தேசிய அரசு அல்லது சர்வ கட்சி அரசு அமைப்பது தொடர்பில், அரசாங்கத்திடமிருந்து எமக்கு இதுவரை அதிகாரபூர்வ அழைப்பு எதுவும் வரவில்லை. ஏனைய எதிர்கட்சிகளுக்கும் அதிகாரபூர்வ அழைப்புகள் வரவில்லை. ஆகவே அதற்குள் “பேச்சுகள் நடக்கின்றன; அமைச்சர்கள் ஆகிறார்கள்” என்பவையெல்லாம் வெறும் சுவாரசிய செய்திகளாக மட்டுமே இருக்கின்றன. ஆனால், நாடு இன்று இருக்கும் அவதி நிலையில், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும், அவசரப்பட்டு எதிர்ப்பு அரசியல் ஆர்ப்பாட்டங்களை செய்யக்கூடாது எனவும், தமிழ் முற்போக்கு கூட்டணி நம்புகிறது என கூட்டணி தலைவர் மனோ கணேசன்  எம்பி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,

தேசிய அரசு அல்லது சர்வ கட்சி அரசு அமைப்பது தொடர்பில் அதிகாரபூர்வ அழைப்பு வரவில்லை. ஆனால், கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடமும், ஏனைய கட்சி தலைவர்களிடமும்  நேரடியாக இது பற்றி கூறினார். ஆனால்,  கட்சிகளுக்கு சர்வ கட்சி அரசு அமைப்பது தொடர்பில், அரசாங்கத்திடமிருந்து அதிகாரபூர்வ அழைப்பு வரவேண்டும்.

அதன் பிறகு நாம் எமது கட்சிகள் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழுக்கள் மத்தியில் இதுபற்றி பேசுவோம். அதேபோல் ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமைக்குழுவிலும் பேசுவோம். இதுதான் ஒரு பொறுப்புள்ள நேர்மையுள்ள ஜனநாயக அரசியல் கட்சி செய்ய வேண்டிய முறைமை. அதை நாம் செய்வோம். எமது  முடிவுகளை எமக்கு வாக்களித்து தெரிவு செய்துள்ள, எமது மக்களின் நலன்களை முன்னிட்டு, நாம் ஒற்றுமையாக எடுப்போம்.

அதேவேளை, நாடு இன்று இருக்கும் அவதி நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும், அவசரப்பட்டு எதிர்ப்பு அரசியல் ஆர்ப்பாட்டங்களை செய்யக்கூடாது எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணி திடமாக நம்புகிறது. அதுவே  எங்கள் மக்களின் நிலைப்பாடாகவும் இருக்கிறது. பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் நலன்களை சார்ந்து மாத்திரம் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் செய்யாது.

அரசில் சேருகிறோமோ, இல்லையோ, புதிய அரசியலமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சருடன் நாம், மலையக தமிழ் இலங்கையர்களின் அரசியல் அபிலாஷைகளை முன் வைப்போம். அடுத்து வரும் அரசியலமைப்பு திருத்தத்தில் எமது மக்களின் எதிர்பார்ப்புகளை இடம்பெறச்செய்ய எம்மால் ஆனதை நாம் பொறுப்புடன் செய்வோம்.

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவும் – மோடி உறுதி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் இலங்கையின் பொருளாதார சமநிலைக்கு இந்திய தொடர்ந்து உதவிகளை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

விக்கி ரணிலுன் பக்கம் சாய்தது ஏன் அவரே தெரிவிக்கும் பதில்.

ஒருவரை நம்புவது குற்றமா என கேள்வி எழுப்புகின்றார் பாராளுமன்ற உறுப்பினர்
க.வி.விக்னேஸ்வரன்.

அண்மையில் கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்வில் ரணில் விக்கிரமசிங்காவை ஆதரிக்க முடிவெடுத்த தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதன் பதில்களும்,

  1. கேள்வி: ஜனாதிபதித் தேர்வில் நடுநிலை வகிப்பதாக அறிவித்த நீங்கள் எதன் அடிப்படையில் அந்த முடிவை மாற்றிக்கொண்டீர்கள்?.

பதில்: ஜனாதிபதித் தேர்தலில் நடுநிலை வகிக்க வேண்டியிருப்பதாக கூறப்பட்ட போது யார் யார் எவ்வெதனைக் கூறப் போகின்றார்கள் என்று அறியாதிருந்தோம். அப்போது இரணிலா சஜீத்தா என்ற கேள்வியே முன்னிலைப்படுத்தப்பட்டு இருந்தது. இருவரில் யார் எமது கோரிக்கைகளுக்கு எமது எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்பப் பதில் தருகின்றார்களோ அவர்களை ஆதரிப்பது பற்றி சிந்திக்கலாம் என்றும் கூறியிருந்தோம். இரணில் பிரதம மந்திரியாகப் பதவி வகிக்க முன்வந்தபோதே தனியார்  தொலைக்காட்சியின்  கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் முகமாக எமது எதிர்பார்ப்புக்கள் பற்றிக் கூறியிருந்தேன். மூன்று நிபந்தனைகளை விதித்து அவற்றிற்கு தீர்வு கொண்டு வந்தால் அவருடன் சேர்ந்து பயணிக்க முடியும் என்றும் கூறியிருந்தேன். ஜனாதிபதித் தேர்வில் இரணிலும் சஜீத்தும் என்னை நாடி எனது ஆதரவை வேண்டி நின்றார்கள். நான் ஜூலை 19ந் திகதி பாராளுமன்றம் வரும் போது எமது கோரிக்கைகளை முன் வைப்பேன் என்று இருவரிடமும் கூறியிருந்தேன். அன்று சஜீத் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். டலசோ, அனுர குமாரவோ என்னுடன் தேர்தல் சம்பந்தமாகப் பேசவுமில்லை, ஆதரவு கேட்கவுமில்லை. சஜீத் கூட டலசுக்காக ஆதரவு கேட்கவில்லை.

19ந் திகதி இரணிலே என் பாராளுமன்ற இருக்கை தேடி வந்து நாங்கள் சந்திக்க வேண்டும் என்றார். அவரின் காரியாலய அறைக்கு நானே வருவதாகக் கூறி அங்கு சென்று சந்தித்தேன். ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் தயாரித்த எமது கோரிக்கைக் கடிதத்தை அவரிடம் கையளித்தேன். பலதையும் பற்றிப் பேசினோம். கோவா, பாண்டிச்சேரி பற்றி இந்திய அரசியல் யாப்பில் கூறப்பட்டவற்றை ஆராய்ந்து வருவதாகக் கூறினார். அதாவது இந்திய அரசியல் யாப்பின் அடிப்படையில் இங்கு மாற்றங்களை அறிமுகப்படுத்த முடியுமா என்பதை ஆராய்வதாகக் கூறினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணி அபகரிப்புக்களை நிறுத்துதல், இராணுவத்தினரின் தொகையை அரைவாசியாகக் குறைத்து காலக்கிரமத்தில் முழுமையாக நீக்கல் போன்ற பலதையும் படிப்படியாகத் தான் செய்வதாகக் கூறினார். மொத்தத்தில் எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அவர் எதிர்ப்பேதும் தெரிவிக்கவில்லை. எனது பல கேள்விகளுக்குப் பொருத்தமான பதில்கள் தந்தார். தான் தனது பதவிக் காலத்தில் செய்யப் போகின்றவற்றை விவரித்தார். அவரின் கூற்றுக்களை நான் ஏற்றுக் கொண்டேன். அவருக்கு ஆதரவு அளிப்பது எமது மக்களுக்கு நன்மையையே தரும் என்ற எனது முடிவின் அடிப்படையிலேயே இரணிலுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முன்வந்தேன். வெளிப்படையாக எனது ஆதரவையும் தெரிவித்தேன்.

  1. கேள்வி: ரணில் விக்கிரமசிங்காவும் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை முன் வைக்கப்படுவதோடு அவரை ஆதரித்த தங்களிற்கு எதிராகவும் போராடும் நிலைமை ஏற்படும் என சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படுவது தொடர்பில் என்ன கருதுகின்றீர்கள்?

பதில்: இந்தத் தருணத்தில் இரணிலைப் பதவியில் இருந்து நீக்குவது நாட்டுக்கு நன்மை தராது. அதை நாம் மறத்தலாகாது. மேற்கையும் கிழக்கையும் சமாளித்துச் செல்லும் வல்லமை உடையவர் அவர். முதலில் கோட்டா கோ ஹோம், அடுத்து இரணில் கோ ஹோம்; நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அதற்கு அடுத்தது “விக்கி கோ ஹோம்” என்று பல்லவி மாறப் போவதாகத் தெரிகின்றது. இவை எல்லாம் விகடமாகத் தெரியவில்லையா? சமூக ஊடகங்கள் நினைப்பது போல் ஒருவர் நடந்து கொள்ளாவிடில் ஒன்றில் அவரைப் பைத்தியக்காரர் என்பார்கள் அல்லது பயங்கரவாதி என்பார்கள் அல்லது தீவிரவாதி என்பார்கள் அல்லது “வீட்டுக்குப் போ” என்பார்கள். நான் ஏற்கனவே என் வீட்டில்த் தான் இருக்கின்றேன். என்னை எங்கு துரத்தப் பார்க்கின்றார்கள்? பாராளுமன்றத்தில் இரணிலை ஆதரித்த 132 பேரையும் வீட்டுக்கு அனுப்பப் போகின்றார்களா? சமூக ஊடகங்களுக்கு எம்மை வீட்டுக்கு அனுப்பும் இந்த உரித்தை யார் கொடுத்தார்கள்? வீட்டுக்குப் போவதை நிறுத்தி இனி நாம் எல்லாம் வேலைக்குப் போகக் கற்றுக் கொள்வோம்.

  1. கேள்வி: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்தால் அமைச்சரவையில் பங்குகொள்வீர்களா?

பதில்: அதை முடிவு செய்வது எனது கட்சி. எம்மக்களுக்கு எது நன்மை பயக்குமோ அதன் அடிப்படையில் அவர்களின் தீர்மானம் இருக்கும் என்று  நம்புகின்றேன்.

  1. கேள்வி: மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் ரணிலை நம்ப முடியாது அவர் ஒரு பொய்யர் எனத் தெரிவித்த நீங்கள் தற்போது எதன் அடிப்படையில் நம்பினீர்கள்?

பதில்: அப்போது அவர் என்னை ஒரு பொய்யர் என்று கூறினார். உண்மையில் பொய் கூறியது அவரே. என்னையும், திரு சம்பந்தனையும், திரு சுமந்திரனையும் மலிக் சமரவிக்ரமவின் வீட்டில் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ந் திகதி சந்தித்தும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சிங்கள மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அரசியல் இடர்நிலை அவருக்கு அன்று இருந்தது. உண்மையை வெளியிட அப்போது திரு சம்பந்தனும் திரு சுமந்திரனும் கூட முன்வரவிலை. என்னுடனும் உண்மை நிலையுடனும் நில்லாது பொய்மையுடனும் திரு. இரணிலுடனும் நின்று மௌனம் காத்தார்கள்.

ஆனால் அதன் பின்னர் பல வருடங்கள் சென்று விட்டன. இரணிலை ஒரு குள்ள நரி என்று இன்றும் பலர் கூறுகின்றார்கள்.
ஆனால் அதற்கு அப்பால் சென்று எமது மக்களின் கோரிக்கைகளை எழுத்தில் இட்டு அவரிடம் கையளித்து அவற்றின் அடிப்படையில் நாங்கள் கருத்துப் பரிமாறிக் கொண்டோம். 15 நிமிடங்களுக்கு மேலாக நாம் கருத்துப் பரிமாறிக் கொண்டோம். அவர் தன் பதவிக் காலத்தில் இந்த நாட்டின் பிரச்சனைகளை சுமூகமாகத் தீர்த்து பொருளாதார ரீதியாக நாட்டைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற கனவில் இருந்ததை நான் புரிந்து கொண்டேன். எவ்வெவெற்றை செய்யவிருக்கின்றார் என்பதை அவர் மனம் விட்டுப் பேசினார். அவர் பொய் பேசியிருக்கக் கூடும் ஆனால் அவரின் சிந்தனைகளின் பரந்த வீச்சு, நினைத்ததைச் செய்து முடிப்பேன் என்ற திடசங்கற்பம் ஆகியன என்னைக் கவர்ந்தன. ஒருவரை நம்புவது அவ்வளவு பெரிய குற்றமா என்ன? கொடுத்த வாக்கை அவர் காப்பாற்றா விட்டால் அதன் பெறுபேறு அவருக்குரியது எனக்குரியது அல்ல எனப் பதிலளித்தார்.

திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஆகஸ்டில் பாராளுமன்றத்திற்கு

திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, தற்போது அனைத்து அமைச்சுக்களின் வரவு செலவுத் திட்டங்களும் திருத்தப்பட்டு புள்ளிவிபரங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி எதிர்வரும் சில மாதங்களுக்கான இந்த வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.