தமிழக மக்களின் மனிதாபிமான நன்கொடை பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன

இலங்கைக்கு இந்தியா நன்கொடையாக வழங்கிய மேலும் 2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான பொருட்கள் தாங்கிய கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளன.

மனிதாபிமான உதவியாக இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பால் மா, அரிசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் உட்பட 2 பில்லியன் ரூபா பெறுமதியான முதலாவது கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

குறித்த பொருட்கள் இலங்கையை இன்று வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்திய தமிழக மக்களால் வழங்கப்பட்டதும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பாரிய மனிதாபிமான உதவிப்பொருட் தொகுதியினை உயர் ஸ்தானிகர், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் இன்று கொழும்பில் கையளித்தார்.

இப்பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு.செந்தில் தொண்டமான், பிரதமரின் பணிக்குழாம் பிரதானி திரு.சாகல ரத்நாயக்க மற்றும் உணவுத்துறை ஆணையாளர் திருமதி ஜே.கிருஸ்ணமூர்த்தி உட்பட சிரேஸ்ட உத்தியோகத்தர்களும் ஏனைய பலரும் கலந்துகொண்டனர்.

9000 மெட்ரிக்தொன் அரிசி, 50 மெட்ரிக்தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான மருந்து வகைகளும் ஏனைய மருத்துவப் பொருட்களும் இத்தொகுதியில் உள்ளடங்கியுள்ளன.

கடந்த மே 18ஆம் திகதி தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இந்த உதவிப்பொருட்களை சென்னை துறைமுகத்திலிருந்து கொடியசைத்து வழியனுப்பிவைத்தார். தமிழக அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் 16 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 40000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய பாரிய உதவித் திட்டத்தின் கீழ் இது முதற்தொகுதியாக அனுப்பி வைக்கப்படுகின்றது.

தற்போது கையளிக்கப்பட்டுள்ள இத்தொகுதி உதவிப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடங்கிய நாடளாவிய ரீதியிலுள்ள நலிவான மற்றும் தேவைகளை எதிர்கொண்டிருக்கும் பிரிவினருக்கு இலங்கை அரசாங்கத்தால் எதிர்வரும் நாட்களில் விநியோகிக்கப்படும்.

அத்துடன் இன்னும்பல மனிதாபிமான உதவித்திட்டங்களும் ஏனைய உதவிகளும் இந்தியாவிடமிருந்து வழங்கப்படவுள்ளன. இந்திய மக்களாலும் அரசாங்கத்தாலும் முன்னெடுக்கப்பட்டும் இவ்வாறான பல்பரிமாண திட்டங்கள், இலங்கைக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தினை சுட்டிக்காட்டுவதுடன் இலங்கை மக்களின் நலன்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையினையும் பிரதிபலிக்கின்றன.

3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருளாதார உதவிகள், தடுப்பூசிவிநியோகம், சோதனை அலகுகள், கொவிட்-19 பெருநொய்க்கு எதிரான போராட்டத்துக்காக கிட்டத்தட்ட 1000 மெட்ரிக்தொன் திரவநிலை ஒட்சிசன் வழங்கியமை, கடல் அனர்த்தங்களை தணிப்பதற்காக இந்திய கடற்படை மற்றும் கரையோரக் காவல் படையால் வழங்கப்படும் உடனடி பதிலளிப்பு நடவடிக்கைக்கள் முதலான ஆதரவுகள் இலங்கைக்கு வழங்கப்படுகின்றன.

ஓகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணப்பதற்காக சர்வதேச சமூகத்தினர் இலங்கையுடன் கை கோர்த்துள்ளார்கள் என்றும். அவர்களிடமிருந்து ஆரோக்கியமான பதில் விரைவில் கிடைக்கும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு செய்தி நிறுவனமான ஸ்கைநியூஸுக்கு வழங்கிய பேட்டியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள பிரதமர் நெருக்கடி நிலைமைக்கு முன்னைய நிர்வாகமே காரணம் என்றும் கூறினார்.

நாட்டில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக குறிப்பிட்ட அவர், விவசாயத்திற்கு தேவையான உரம் இல்லாமையினால் எதிர்வரும் மூன்று மாதங்களில் உணவு நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணப்பதற்காக சர்வதேச சமூகத்தினர் இலங்கையுடன் கை கோர்த்துள்ளார்கள். அவர்களிடமிருந்து ஆரோக்கியமான பதில் விரைவில் கிடைக்கும் என்று ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் ஒருபோதும் இல்லாதவகையில் நாடு வங்குரோத்து நிலையை எதிர்கொண்டுள்ளது.எமக்கு தற்போது டொலரும் இல்லை. ரூபாவும் இல்லை.

தற்போது நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்வது குறித்து ஸ்கைநியூஸ் ஊடகவியலாளர் இதன்போது சுட்டிக்காட்டிய போது, இளைஞ்கள் தமது எதிர்காலம் பறிக்கப்பட்டதாக நினைக்கின்றனர்.இதேபோன்று வயதானவர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்னர். நடுத்தர வகுப்பினர் தமது வாழ்க்கை நிலை சீர்குழைந்திருப்பதாக காணுகின்றனர். விவசாயத்துக்கான போதிய உரம் இல்லாமையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தாம் எதிர்கொண்டுள்ள சுமைகளை தாங்கிக்கொள்ள முடியாமையினாலேயே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன என்றும் பிரதமர் கூறினார்.

உக்ரேன் போர் இலங்கை மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? இது குறுகிய காலத்திற்குள் மோசமான நிலையை அடையுமா? என்ற கேள்விக்கு பிரதமர் பதிலளிக்கையில், உண்மையிலேயே நாம் ஸ்திரமான நிலையில் இல்லை விவசாயத்துக்கான போதிய உரம் இல்லை இதனால் எதிர்வரும் பருவகாலத்தில் முழுமையான விளைச்சல் கிடைக்காமல் போகும். இதன் காரணமாக ஓகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடிக்கான சாத்தியம் காணப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் நாம் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது என்பதில் கவனம் செலுத் வேண்டும் என்றும் தெரிவித்தார்..

தற்போதைய நிலையில் உதவி வழங்க முன்வரும் நாடுகளுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன? என்ற கேள்விக்கு பிரதமர் ரணில்விக்கிமசிங்க பதில் அளிக்கையில் ” நாம் பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கு பணமில்லை. இது குறித்து வெட்கப்படவேண்டும்.இதுதான் யதார்த்தம் நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். இதற்கு சில காலம் செல்லும்” என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, உணவு நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான குழுவொன்றை நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

Posted in Uncategorized

மே18 ஐ தமிழினப் படுகொலை நாளாக கனேடிய பாராளுமன்றம் பிரகடனம்- இலங்கை கண்டனம்

கனேடிய நாடாளுமன்றில் மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கம், இலங்கைக்கான பதில் கனேடிய துாதுவரை நேரில் அழைத்து கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

கனேடிய அரசாங்கத்தின் பிரேரணையில் உள்ள இனப்படுகொலை என்ற விடயமானது போலியானது எனவும் அதனை நிராகரிப்பதாகவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு கனேடிய நாடாளுமன்றில் மே 18ஆம் திகதி தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிக்கப்பட்டது.

கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது நல்லிணக்க முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இலங்கைக்கான பதில் கனேடிய உயர்ஸ்தானிகர் Amanda Strohan அமண்டா ஸ்ரோகனை, வெளிவிவகார அமைச்சரிற்கு இன்று அழைத்து ஜி.எல். பீரிஸ் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

குறித்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் பொய்யானது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளதோடு கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையினால் இலங்கை தொடர்பில் தவறான எதிர்க்கருத்துக்கள் வெளியிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள தவறுகளை திருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இனப்படுகொலை தீர்மானத்தை கனடா பாராளுமன்றம் நேற்று ஏகமனதாக ஏற்று அங்கீகரித்தது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் மே-18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக கனடா பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

15 இலட்ச ரூபாய்க்காக தனியார் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை அரசு

இலங்கையிலிருந்து தடகள வீரர்களை, கொலம்பியாவில் நடக்க உள்ள, உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த வீரர்களை கொலம்பியா அனுப்புவதற்கு ஆகும் விமான செலவான 15 இலட்சம் ரூபாய்க்காக தனியாரின் உதவியை இலங்கை அரசு எதிர்பார்க்கிறது என்று `தி ஐலேண்ட் ஆன்லைன்` இணையத்தில் செய்தி வெளியியாகியுள்ளது.

ஓகஸ்ட் 1ம் திகதி முதல் 6ஆம் திகதி வரை, கொலம்பியாவின் காலி நகரில் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கு தகுதியான வீர்ரகளை அனுப்ப வேண்டும்.

அதேபோல, இலங்கையில் ஏற்கனவே மே 9ம் திகதி நடக்கவிருந்த தேசிய அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளும் ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த போட்டிகளும் ஜூன் 7முதல் 10 வரையிலான தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை நடத்தி, இதன்மூலமும் வீரர்களை தேர்வு செய்து சர்வதேச போட்டிக்களங்களுக்கு அனுப்ப வாய்ப்புண்டு.

ஆனால், தேர்வு செய்யப்பட்ட வீரர்களை அனுப்புவதற்கான செலவைக் கையாளுவதில் பொருளாதாரத்தில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேசும்போது “முதல் இரண்டு இடத்தில் இருக்கும் சிறந்த வீர்ரகள் இருவரை மட்டும், தங்கள் சொந்தப் பணத்தில் செல்ல அனுமதிப்ப என்பது, பணம் ஏற்பாடு செய்யமுடியாத அதேசமயம் தகுதியுடையவர்கள் இருக்கும்போது முறையன்று.

எனவேதான் இதில் தனியாரின் உதவியை நாடுகிறோம் என்கிறார் இலங்கை தடகளப்பிரிவின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் என்று ஐலேண்ட் ஆன்லைன் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Posted in Uncategorized

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான திட்டம் – சர்வதேச நிதி நிறுவனங்கள் கூட்டாக வெளியீடு

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான கூட்டுத்திட்டமொன்றை உலகவங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி ஆசிய முதலீட்டு உட்கட்டமைப்பு வங்கி ஆகியன கூட்டாக வெளியிட்டுள்ளன.

இந்த கூட்டு திட்டத்தில் மருந்துதேவைகளை நிறைவேற்றுவதற்கான திட்டம்,நிதி உதவி எரிவாயு மற்றும் உரதட்டுப்பாட்டிற்கு தீர்வை காண்பதற்கான திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

Posted in Uncategorized

இயற்கை விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்

நாட்டில் தற்போதைய பொருளாதார இடரை கருத்தில் கொண்டும் நஞ்சற்ற காய்கறி உற்பத்தியினூடாக சுய பொருளாதாரத்தை அதிகரித்தல் ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்குதல் எனும் நோக்கில் நல்லூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இயற்கை விவசாயத்தில் ஈடுபாடுள்ள வீட்டு தோட்ட ஆர்வலர்களுக்கு தானிய விதைகள், நாற்றுகள் அதனோடிணைந்த பொருட்களை இலவசமாக வழங்கி வைக்க வேண்டும் என்ற நோக்கில் இயற்கை விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடனும் நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் 50 வது மாதாந்த சபை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது குறித்த தீர்மானம் சபை உறுப்பினர் சி. கௌசலாவினால் முன்வைக்கப்பட்டது.நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார இடரை சிறிதளவேனும் குறைக்கும் வகையில் முன்வக்கப்பட்ட இந்த பிரேரணை ஏக மனதான நிறைவேற்றப்பட்டது .இதேவேளை குறித்த தீர்மானத்தின் அடிப்படையில் அதிகார பூர்வமான விபரங்களை உள்ளடக்கிய பத்திரிகை விளம்பரம் விரைவில் வெளியிடப்படும் என சபை அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

தமிழினப் படுகொலை தான் எனக் கனடா அங்கீகரித்தமை நீதி தேடும் நெடும் பயணத்தில் ஒரு மைல் கல் -ஐங்கரநேசன்

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்பதை உலகின் முதல் நாடாக கனடா ஏற்றுக்கொண்டுள்ளது. இது தமிழ் மக்களின் நீதிதேடும் நெடும் பயணத்தின் ஒரு மைல்கல் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலையே என்பதை அங்கீகரித்துக் கனேடியப் பாராளுமன்றம் ஏகமனதாகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. அதற்கு இலங்கை அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இலங்கை அரசு மிகக் கொடூரமான யுத்தத்தைத் தொடுத்துத் தமிழினப் படுகொலையை நிகழ்த்தியே 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அப்போதிருந்தே தமிழினம் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு உலக நாடுகளினதும் ஐக்கிய நாடுகள் சபையினதும் கதவுகளைத் தட்டிவந்த நிலையில் கனடாவின் தீா்மானம் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 18ஆம் திகதி கனேடியப் பாராளுமன்றில் இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலைதான் என்பதை ஏற்றுத் தீர்மானம் நிறைவேற்றியமை தொடர்பாகப் பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் நடந்த யுத்தம் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமே என்று அரச தரப்புப் பரப்புரை செய்து வருகிறது. இது ஓர் போர்க்குற்றமே என்று அரசாங்கத்தைக் காப்பாற்றும் முகமாகச் சில தரப்புகள் கூறிவருகின்றன. ஆனால், நிகழ்ந்தது தமிழினப் படுகொலையேயென தமிழினம் நீதிகேட்டுத் தசாப்த காலத்துக்கும் மேலாகப் போராடி வருகிறது. இந்நிலையிலேயே அவர்களது போராட்டத்துக்குக் கிடைத்த ஒருபெரும் வெற்றியாகக் கனேடியப் பாராளுமன்றத்தின் தீர்மானம் அமைந்துள்ளது.

கனேடியப் பாராளுமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி “இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதை ஏற்று ஆண்டுதோறும் மே-18 ஆம் திகதியைத் தமிழர் இன்படுகொலை நினைவேந்தல் நாளாக அங்கீகரிக்க வேண்டும்” என்ற பிரேரணையை முன்வைத்தபோது எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழினம் தன் இலக்கை நோக்கி முன்னேறிச்செல்ல கனேடியப் பாராளுமன்றின் இத்தீர்மானம் ஒரு கொழுகொம்பாக அமைந்துள்ளது.

கனேடியப் பாராளுமன்றில் இப்பிரேரணையைக் கொண்டு வந்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரிக்கும், ஏகமனதாக ஏற்றுக்கொண்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதன் பின்னால் நின்று உழைத்த புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துக்கும் தமிழ்கூறும் நல்லுலகு தலைசாய்த்துத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அவசரகால நிலை பிரகடனம் நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

அவசரகால நிலை பிரகடனம் நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.பாதுகாப்புப் படையினருக்கு முழு அதிகாரம் அளித்து, மே மாத தொடக்கத்தில் இரண்டாவது முறையாக அவசரகால நிலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரகடனம் செய்தார்.இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் அவசரகால சட்டம் செயலில் இல்லை என ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அவசரகால நிலை பிரகடனம் நிறைவேற்றப்பட்டு 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் அங்கீகரம் பெறப்பட வேண்டும். இதுவரை பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்பட்டிருக்காத நிலையிலேயே தன்னியல்பாக நேற்று முதல் ரத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனப்படுகொலை நினைவு நாளாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கனடா அங்கீகரித்தமையை வரவேற்கிறோம் – ரெலோ

கனடா பாராளுமன்றம் கடந்த 19ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18 ம் திகதியை இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நாளாக ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.

உலகத்திலேயே முதல் அங்கீகாரம் வழங்கிய நாடாக கனடா அமைந்துள்ளது. இதை நாம் வரவேற்கிறோம். இந்த முயற்சிக்கு பின்னணியில் இருந்த புலம்பெயர் உறவுகளுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பிரேரணையை கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கரி ஆனந்தசங்கரி அவர்கள் பாராளுமன்றில் சமர்ப்பித்த வேளை ஏகமனதாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழிய குற்றங்களுக்கான நீதிக்கான போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரத்தின் முதல் படியாக இதை நாம் கருதுகிறோம்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் மற்றும் அட்டூழிய குற்றங்களுக்காக நீதியைக் கோரி பல வருடங்களாக எமது இனம் போராடி வருகிறது. கனடியப் பாராளுமன்றத்தின் இந்த அங்கீகாரம் எமது முயற்சிக்கு நம்பிக்கை தருவதோடு ஊக்கம் அளிப்பதாகவும் அமைந்திருக்கிறது.

இது போன்று ஏனைய நாடுகளில் வாழும் புலம்பெயர் உறவுகளும் எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியக் குற்றங்களுக்கான சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை ஒருமித்து முன்னெடுக்க வேண்டும் என கோரி நிற்கிறோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

எதிரணி உறுப்பினர்களை விலைக்குவாங்கும் கலாசாரத்தை அரசாங்கம் நிறுத்த வேண்டும் – ஹக்கீம்

யுத்தத்தினால் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூறுவதற்கு கடந்த வருடம் தடை விதிக்கப்பட்ட போதும் இம்முறை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாலே நினைவேந்தல் நடைபெற்றது .இது ஒரு புதிய சமிக்ஜையை காட்டுகிறது . இதனை அங்கீகரிக்க வேண்டும்.

அத்துடன் அமைச்சு பதவிகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் அரசியல் கலாசாரத்தை அரசாங்கம் நிறுத்திக்கொள்ளவேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) மூன்றாவது நாளாக இடம்பெற்ற கடந்த 9ஆம் திகதி கலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்கவேண்டும் என பிரதமர் தெரிவித்திருந்தார். அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயார். அதேபோன்று அரசியல் தாமிகத்தையும் ஆளும் எதிர்க்கட்சியினர் பின்பற்றவேண்டும். குறிப்பாக அமைச்சு பதவிகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.

புதிய பிரதமரின் அரசாங்கத்தில் ஆரம்பத்தில் 15 அமைச்சர்கள் என்றார்கள் அதன் பின்னர் 18 என்றார்கள் ஆனால் தற்போது 22 அமைச்சர்கள் என கேள்விப்படுகின்றது. எதிர்க்கட்சியில் இருந்து உறுப்பினர்களை விலைக்கு வாங்கிக்கொண்டே இதனை செய்யப்பாேவதாகும் தெரியவருகின்றது.

பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி சபை ஒன்றை ஏற்படுத்தி நாட்டின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம். அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயார். ஆளும் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு நாட்டை கட்டியெழுப்புவோம். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் அரசியல் கலாசாரத்தை நிறுத்தவேண்டும். இதந்த அறிவிப்பை ஜனாதிபதிக்கு தெரிவிக்குமாறு சபை முதல்வரை கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் கடன் செலுத்த முடியாமல் போயிருப்பதால் நேற்றில் இருந்து நாடு வங்குராேத்து என சட்டரீதியிலாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் யுத்தம் வெற்றிகொண்டு 13ஆவது வருடத்தை நாங்கள் கொண்டாடுகின்றோம். ஆனால் அதிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

காலிமுகத்திடலில் போராடும் மக்கள் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தி இருக்கின்றார்கள். புலிகள் அமைப்பில் இறந்தவர்கள் அதேபோன்று உயிர் நீத்த ராணுவ வீரர்களையும் ஒரே நேரத்தில் நினைவு கூர்ந்தனர்.

கடந்த வருடம் முள்ளவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றபோது ராணுவத்தினர் அதனை தடுத்து, அவர்களை சிறையில் அடைத்தார்கள்.

ஆனால் இந்த வருடம் காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவே உயிரிழந்தவர்களை நினைகூரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதுதான் யுகமாற்றம், புதிய சமிக்ஜை. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த வழியில் நாங்கள் செல்வோம்.

அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவரின் உரைக்கு பின்னர் உரையாற்றியவர்களே ஆதரவாளர்களை தூண்டிவிடும் வகையில் செயற்பட்டனர்.

வன்முறையை தடுக்க தவறியது தொடர்பில் பொலிஸ்மா அதிபரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தென்னகோனும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி கொண்டிருக்கிறார்கள் .

அத்துடன் நீதிபதி தடை உத்தரவு பிரப்பிக்கவில்லை என தெரிவித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரதம நீதியரசருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இது நீதிமன்ற அவமதிப்பு என தெரிவித்து செயலாளருக்கு எதிராக வழக்கு தொடுக்குமாறு பிரதம நீதியரசர் சட்டமா அதிபருக்கு தெரிவித்திருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருக்கின்றது. இவை தவறான முன்மாதிரியாகும் என்றார்.

Posted in Uncategorized