எதிரணி உறுப்பினர்களை விலைக்குவாங்கும் கலாசாரத்தை அரசாங்கம் நிறுத்த வேண்டும் – ஹக்கீம்

யுத்தத்தினால் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூறுவதற்கு கடந்த வருடம் தடை விதிக்கப்பட்ட போதும் இம்முறை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாலே நினைவேந்தல் நடைபெற்றது .இது ஒரு புதிய சமிக்ஜையை காட்டுகிறது . இதனை அங்கீகரிக்க வேண்டும்.

அத்துடன் அமைச்சு பதவிகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் அரசியல் கலாசாரத்தை அரசாங்கம் நிறுத்திக்கொள்ளவேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) மூன்றாவது நாளாக இடம்பெற்ற கடந்த 9ஆம் திகதி கலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்கவேண்டும் என பிரதமர் தெரிவித்திருந்தார். அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயார். அதேபோன்று அரசியல் தாமிகத்தையும் ஆளும் எதிர்க்கட்சியினர் பின்பற்றவேண்டும். குறிப்பாக அமைச்சு பதவிகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.

புதிய பிரதமரின் அரசாங்கத்தில் ஆரம்பத்தில் 15 அமைச்சர்கள் என்றார்கள் அதன் பின்னர் 18 என்றார்கள் ஆனால் தற்போது 22 அமைச்சர்கள் என கேள்விப்படுகின்றது. எதிர்க்கட்சியில் இருந்து உறுப்பினர்களை விலைக்கு வாங்கிக்கொண்டே இதனை செய்யப்பாேவதாகும் தெரியவருகின்றது.

பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி சபை ஒன்றை ஏற்படுத்தி நாட்டின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம். அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயார். ஆளும் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு நாட்டை கட்டியெழுப்புவோம். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் அரசியல் கலாசாரத்தை நிறுத்தவேண்டும். இதந்த அறிவிப்பை ஜனாதிபதிக்கு தெரிவிக்குமாறு சபை முதல்வரை கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் கடன் செலுத்த முடியாமல் போயிருப்பதால் நேற்றில் இருந்து நாடு வங்குராேத்து என சட்டரீதியிலாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் யுத்தம் வெற்றிகொண்டு 13ஆவது வருடத்தை நாங்கள் கொண்டாடுகின்றோம். ஆனால் அதிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

காலிமுகத்திடலில் போராடும் மக்கள் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தி இருக்கின்றார்கள். புலிகள் அமைப்பில் இறந்தவர்கள் அதேபோன்று உயிர் நீத்த ராணுவ வீரர்களையும் ஒரே நேரத்தில் நினைவு கூர்ந்தனர்.

கடந்த வருடம் முள்ளவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றபோது ராணுவத்தினர் அதனை தடுத்து, அவர்களை சிறையில் அடைத்தார்கள்.

ஆனால் இந்த வருடம் காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவே உயிரிழந்தவர்களை நினைகூரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதுதான் யுகமாற்றம், புதிய சமிக்ஜை. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த வழியில் நாங்கள் செல்வோம்.

அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவரின் உரைக்கு பின்னர் உரையாற்றியவர்களே ஆதரவாளர்களை தூண்டிவிடும் வகையில் செயற்பட்டனர்.

வன்முறையை தடுக்க தவறியது தொடர்பில் பொலிஸ்மா அதிபரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தென்னகோனும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி கொண்டிருக்கிறார்கள் .

அத்துடன் நீதிபதி தடை உத்தரவு பிரப்பிக்கவில்லை என தெரிவித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரதம நீதியரசருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இது நீதிமன்ற அவமதிப்பு என தெரிவித்து செயலாளருக்கு எதிராக வழக்கு தொடுக்குமாறு பிரதம நீதியரசர் சட்டமா அதிபருக்கு தெரிவித்திருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருக்கின்றது. இவை தவறான முன்மாதிரியாகும் என்றார்.