பதவி விலகுவதற்கு ஜனாதிபதி தயாராகவே உள்ளதாக அறிவிப்பு!

பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்தால் ஜனாதிபதி பதவி விலகுவார் என்று சபாநாயகர் கூறியுள்ளார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்படி சபாநாயகர் இடமளித்தால் எதிர்க்கட்சியில் உள்ள அனைவரும் ஏகமனதாக அந்த கோரிக்கையை விடுக்கத் தயாராகவே இருக்கின்றோம் என்றும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி வௌியிட்டுள்ள அறிக்கை

றம்புக்கணை சம்பவம் தொடர்பில் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எதிர்ப்பாளர்களுக்கு சேதம் ஏற்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அது குறித்து கவலையடடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தரப்பினரும் வன்முறையைப் பயன்படுத்துவது அமைதியான போராட்டக்காரர்களின் உரிமைகள் மீறப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களைப் பாதுகாக்க குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்துவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் தங்கள் அடிப்படை சுதந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமை இதனூடாக பாதுகாக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு

உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை றம்புக்கணை பொலிஸ் பிரிவிற்குட்ட பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.

றம்புக்கணை பிரதேசத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, றம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 24 பேர் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவிததுள்ளார்.

இவர்களில் 8 பேர் பொலிஸ் அதிகாரிகள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, றம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேகாலை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மிஹிரி பிரியங்கனி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் படுகாயமடைந்த இருவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் உயிரிழப்பு, 12 பேர் காயம்

இரம்புக்கனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இரம்புக்கனை நகரில் ரயில் மார்க்கத்தை மறித்து இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு இன்று மாலை பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

முன்னதாக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டிருந்த போதும், மக்கள் எரிபொருள் பௌசருக்கு தீ வைத்து, முச்சக்கரவண்டியை சேதப்படுத்தியதால் பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள நேரிட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டகாரர்களால் பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

துப்பாக்கி பிரயோகத்தின் போது சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த பொதுமக்களும் பொலிஸ் அதிகாரிகள் சிலரும் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரம்புக்கனை நகருக்குள் செல்வதற்கான அனைத்து வீதிகளையும் மறித்து இன்று காலை முதல் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இரம்புக்கனை – மாவனெல்ல வீதி, ரம்புக்கனை – கேகாலை வீதி, இரம்புக்கனை – குருநாகல் வீதி என அனைத்து பகுதிகளிலும் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை, நீர்கொழும்பு கொச்சிக்கடை பாலத்திற்கு அருகில் வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நீர்கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் தோப்பு பாலம் அருகில் வீதியை மறித்து மக்கள் இன்று மாலை 3 மணியிலிருந்து மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் .

பதுளை – எட்டம்பிட்டிய நகரிலும், பதுளை – நுவரெலியா பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பதுளை – எல்ல பள்ளக்கேட்டுவ நகரில் கொட்டும் மழையிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

இதனிடையே, மஸ்கெலியா நகரிலிருந்து வௌி இடங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களின் சாரதிகளும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், நோட்டன், கினிகத்தேன, ஹட்டன், சாமிமலை, நல்லதண்ணி ஆகிய பகுதிகளுக்கு மஸ்கெலியா நகரிலிருந்து பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை என செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

இதனிடையே மாத்தளை நகரிலும் தனியார் பஸ் ஊழியர்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதேவேளை, கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் இயங்கும் அனைத்து தூர இடங்களுக்கான பஸ்களும் இன்று சேவையிலிருந்து விலகியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

A9 வீதியில் கட்டுகஸ்தோட்டை பகுதியை மறித்து தனியார் பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, ஹட்டன் நகரிலும் இன்று எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியையும் மக்கள் மறித்து எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியூடான வாகன போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, அநுராதபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டி – மஹியங்களை பிரதான வீதி தெல்தெனிய நகரில் மறிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். அதிகளவிலான மக்கள் கூடி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, காலி பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள சுற்றுவட்டம் அருகே பஸ்கள் நிறுத்தப்பட்டு வீதி மறிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை நகரிலும் வீதி மறிக்கப்பட்டு மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

எரிபொருள் விலையேற்றம், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிட்டுள்ளமையால், மக்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்,

கொழும்பு – பதுளை பிரதான வீதி – ஹப்புத்தளை நகரில் மறிக்கப்பட்டு இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பண்டாரவளை நகரிலும் பஸ் சாரதிகள் இன்று முற்பகல் முதல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Posted in Uncategorized

பேருவளையில் ஆரம்பித்த பேரணி கொழும்பை வந்தடைந்தது

மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசாங்கத்தை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் 3 நாட்களாக முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று மாலை கொழும்பை வந்தடைந்தது.

லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட பேரணிக்கு தேசிய மக்கள் சக்தியின் தவைர் அனுரகுமார திசாநாயக்க தலைமை தாங்கினார்.

கடந்த 17 ஆம் திகதி பேருவளையில் ஆரம்பித்த இந்த பேரணி மொரட்டுவை, காலி வீதியூடாக வௌ்ளவத்தை, பாமன்கடை , ஹெவ்லொக் பகுதிகளின் ஊடாக இன்று கொழும்பை வந்தடைந்தது.

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை , அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறுபட்ட தொழிற்சங்கங்கள் , இளைஞர் அணிகள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பெருமளவில் எதிர்ப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

கோட்டா அரசுக்கு எதிராக பற்றி எரியும் போராட்டம் – வீதிகளை மறித்து போராட்டம்

கோட்டாபய ராஜபக்சே அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதற்கு எதிரப்பு தெரிவித்து வீதிகளை மறித்து மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை சந்தித்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோட்டா அரசை பதவி விலக வலியுறுத்தும் போராட்டம் காலி முகத்திடலில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டடுள்ளன. இதையடுத்து பெற்றோல் (ஒக்டேன் 92 ரகம்) 338 ரூபா, பெற்றோல் (ஒக்டேன் 95 ரகம்) 374 ரூபா, ஓட்டோ டீசல் 289 ரூபா, சுப்பர் டீசல் 329 ரூபா என அதிககரிக்கப்டப்டுள்ளது.

கோட்டா அரசுக்கு எதிராக பற்றி எரியும் போராட்டம் – வீதிகளை மறித்து போராட்டம்

ஏற்கனவே அதிகரித்த எரிபொருள் விலை காரணமாக பல்வேறு பொருளாதார நெருக்கடியை மக்கள் சந்தித்து வரும் நிலையில் தற்போது மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து நாட்டின் பல்வேறு நகரங்களில் பிரதான வீதிகளை மறித்து மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கோட்டா அரசுக்கு எதிராக பற்றி எரியும் போராட்டம் – வீதிகளை மறித்து போராட்டம்

பேருந்துகள், முச்சக்கர வண்டிகள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனைங்களை வீதிகளுக்கு குறுக்காக நிறுத்தியும், வாகன ரயர்களை போட்டு எரித்தும், தடைகளை ஏற்படுத்தியும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

திடீரென ஒரே நாளில் நாடு தழுவியதாக மக்கள் வீதிகளை மறித்து மேற்கொண்டு வரும் போராட்டம் காரணமாக இலங்கையில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

கடன் தரப்படுத்தலில் இலங்கையை மேலும் தாழ்த்துவதற்கு மூடிஸ்(Moody’s) நிறுவனம் தீர்மானம்

கடன் தரப்படுத்தலில் இலங்கையை மேலும் தாழ்த்துவதற்கு மூடிஸ்(Moody’s) நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, இலங்கை Caa2 மட்டத்திலிருந்து Ca தரத்திற்கு தாழ்த்தப்பட்டுள்ளது.

வௌிநாட்டு கடனை மீளச் செலுத்துவதை இடைநிறுத்துவதற்கு இலங்கை மேற்கொண்ட தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு Moody’s நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Posted in Uncategorized

அரசாங்கத்தில் இருந்து விலகிய 40 பேர் எதிர்க்கட்சியில் அமர்ந்தனர்!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் எதிர்க்கட்சி பக்கத்தில் அமர்ந்தனர்.

இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் கூடிய போது, அவர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளனர்.

தாம் எதிர்க்கட்சியில் அமர்ந்தாலும், சுயாதீனமானவர்களாகவே செயற்படுவோம் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 12 உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 11 கட்சிகளை சேர்ந்த 15 உறுப்பினர்களும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த 9 உறுப்பினர்களும் அடங்கலாக 40 பேர் எதிர்க்கட்சிக்கு சென்றுள்ளனர்.

“19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அவசியமானது”: பிரதமர் மகிந்த

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவரின் பாராளமன்ற உரை வருமாறு,

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் இந்த சபையின் உறுப்பினர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். நமது நாட்டின் வரலாற்றில் நீண்ட காலமாக எதிர்கொண்ட பொருளாதார சவால் தற்போது மிகவும் கடினமான கட்டத்தை எட்டியுள்ளது.

ஒரு அரசு தன் மக்களுக்கு ஒருபோதும் மனமுவந்து கஷ்டங்களை ஏற்படுத்தாது. ஆனால் இந்நாட்டு மக்கள் இன்று பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிவாயு நெருக்கடி ஆகியவை நம் கண்களுக்கு புலப்படும் சிரமங்களாகும். இதன் காரணமாக இன்று மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதை நான் அறிவேன்.

இந்த நெருக்கடியை சமாளிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. மக்கள் எம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டை உண்மையாக நேசிப்பவர் யார் என்பதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அரசாங்கம் என்ற ரீதியில் நாம் எமது பொறுப்புகளில் இருந்து விடுபட முடியாது, இந்த நெருக்கடியை போக்குவதற்கான திட்டங்களை ஒவ்வொன்றாக முன்வைக்க வேண்டும்.

எமது அரசியல் வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு முன், நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். எனவே பாரபட்சமின்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் கைகோர்க்குமாறு எதிர்க்கட்சியினரை மனதார அழைக்கின்றோம். அந்த அழைப்பு இன்றும் செல்லுபடியாகும் என்பதை நினைவூட்டுகின்றேன்.

நாட்டில் நிலவும் நெருக்கடியை சமாளிக்க பொருளாதார முகாமைத்துவம் மிகவும் முக்கியமானது.

அதற்காக மக்கள் போன்றே இச்சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் என்ற பாகுபாடின்றி மதிப்பிடப்படும் பொருளாதார முகாமைத்துவத் துறையில் சர்வதேச அனுபவமுள்ள மூன்று பொருளாதார நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய வங்கி உள்ளிட்ட நிதி நிர்வாகத்தின் சார்பில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒருவரை இது தொடர்பாக நியமிக்க நடவடிக்கை எடுத்தோம்.

மேலும், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் ஏற்கனவே கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம். அவர்களிடம் இருந்து நல்ல பதில் கிடைத்து வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு தேவையான ஆதரவை எங்கள் நட்பு நாடுகள் எமக்கு வழங்கி வருகின்றன.

நிதியமைச்சர், நிதியமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோர் நாட்டிற்கான தமது பொறுப்புகளையும் கடமைகளையும் மிகுந்த அர்ப்பணிப்புடன் நிறைவேற்றி வருகின்றனர். ஆனால் இவ்வாறானதொரு சூழ்நிலையில் குறுகிய காலத்தில் நிலைமையை நிர்வகிப்பது குறித்தும், நீண்டகாலத்தில் நாட்டில் இவ்வாறான நெருக்கடிகள் மீண்டும் ஏற்படாதவாறு உறுதியான அடித்தளத்தை அமைப்பது குறித்தும் நாம் அதிகம் சிந்திக்க வேண்டும். அதனால்தான் எதிர்ப்புக்கு அப்பாற்பட்ட தலையீடு தேவை என்பதை நான் முன்பே உங்களுக்கு நினைவூட்டினேன்.

பேச்சுவார்த்தை மூலம் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். முன்னதாக காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுக்களை கலந்துரையாடலுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தேன். அவர்களின் பெறுமதியான யோசனைகளை எடுத்து தேவையான தலையீடுகளை செய்ய முன்வந்தோம் என்பதை நினைவுபடுத்த வேண்டும்.

நீண்டகால மின்வெட்டுக்கான காரணங்களில் ஒன்று, சரியான நேரத்தில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படாமையாகும். சிலர் வேண்டுமென்றே புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் அடுத்த படியைத் தவறவிட்டனர். இப்போது அந்த பழியை கடந்த காலத்தின் மீது சுமத்துவதில் அர்த்தமில்லை. அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.மின் உற்பத்தி நிலையங்கள் எரிபொருள் பற்றாக்குறையை தீர்த்து வருவதாலும், மத்திய மலைநாட்டில் தற்போது மழை பெய்து வருவதாலும் இந்த பிரச்சனையை மிக விரைவாக தீர்க்க முடியும்.

இரண்டு நாட்களில் இந்தப் பிரச்சினை முடிந்துவிடும் என்று சொல்வதை விட, நம்மால் முடிந்த வரையில் தீர்வு காண்பதுதான் முக்கியம். மின்வெட்டை நிமிடத்திற்கு நிமிடம் குறைக்கிறோம்.

எதிர்வரும் சில வாரங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற சந்தேகம் தேவையில்லை.

அன்றாட வாழ்வில் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய வலியை அறிந்து, இந்த நிலையைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை ஒப்புக் கொள்கிறோம். 24 மணி நேரத்திற்குள் தீர்வு கிடைக்காவிட்டாலும், உங்களை இனிமேலும் நாங்கள் வரிசையில் காத்திருக்க வைக்க மாட்டோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் நமது நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மையும் மிக முக்கியமானது. இந்தப் பிரச்சினைக்கு விரைவான மற்றும் நடைமுறைத் தீர்வாக அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

அதன் முதல் படியாக, அரசியலமைப்பின் பத்தொன்பதாவது திருத்தத்தை அத்தியாவசிய மற்றும் சரியான நேரத்தில் திருத்தங்களுடன் ஜனநாயக ரீதியில் அமுலாக்குவது குறுகிய காலத்தில் மேற்கொள்ளக்கூடிய சாத்தியமான மிக சரியான தீர்வாகும் என்று நான் நம்புகிறேன்.

ஜனாதிபதியின் ஆசீர்வாதத்துடன், நாம் ஒரு விரிவான புதிய அரசியலமைப்பு திருத்தத்தை நோக்கி நகர வேண்டும். அதற்கான எமது முயற்சிக்கு கட்சி பேதமின்றி உங்கள் அனைவரதும் ஆதரவும், மக்களின் ஆசிர்வாதமும் கிடைக்கும் என நம்புகிறேன்.

கோட்டா கோ கம: இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் படிக்காத ஒரு முட்டாள் தீவில் ஒரு புதிய கிராமம்

  • நிலாந்தன்

தோன்றிய அன்றே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஊடகங்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த ஒரு கிராமம் என்றால் அது காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் கோட்டா கோகம கிராமம்தான். உலகில் அதிகம் பேர் உற்றுக் கவனிக்கும் ஒரு கிராமமாக அது மாறிவருகிறது. இலங்கைத்தீவில் அதுதான் மிகப் பிரசித்தமான ஒரு ட்ரெண்ட்.இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் முள்ளிவாய்க்கால் என்ற கிராமத்தின் பெயர் அதிகம் உச்சரிக்கப்பட்டது.இப்பொழுது கோட்டா கோகம என்ற கிராமம் ட்ரெண்ட் ஆகியிருக்கிறது.

அரசுக்கு எதிரான போராட்டங்களைப் பொறுத்தவரை இலங்கைத்தீவில் பெருந்தொற்று நோய்க் காலத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட கபன் துணி போராட்டம் புத்தாக்கத் திறன் மிக்க ஒரு குறியீட்டுப் போராட்டம். அதுபோலவே கோட்டா கோகமவும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஒரு எதிர்ப்பு நடவடிக்கை.உருவாக்கப்பட்ட மிகச் சில நாட்களுக்குள் அதுபோல வேறு எந்தக் கிராமமும் வேகமாக வரவில்லை.அதில் குடியிருப்பவர்களைப் பொறுத்தவரை அது ஒரு புரட்சிக் கிராமம். கோட்டாவை வீட்டுக்குப் போ என்று கேட்கும் எல்லாருக்கும் அது ஒரு புரட்சி கிராமம்.

இந்தியாவில் ஆந்திராவில் தெலுங்கானா விடுதலை போராட்டத்தின்போது கவிஞர் சொரபண்டார ராஜ் எழுதிய ஒரு கவிதை உண்டு. ரகசியம் காக்கும் புரட்சிக் கிராமம் என்று அதற்குத் தலைப்பு.ஆந்திராவில் மட்டுமல்ல, ஈழத்தமிழர்கள் மத்தியிலும் உலகம் முழுவதிலும் சுதந்திரத்துக்காகப் போராடிய எல்லாம் மக்கள் கூட்டங்களின் மத்தியிலும் அவ்வாறான ரகசியம் காக்கும் புரட்சிக் கிராமங்கள் காணப்பட்டன. விடுதலைப் போராட்டத்தை அவைதான் அடைகாத்தன.

ஒரு குடும்ப ஆட்சிக்கு எதிராகப் போராடும் ஆர்பாட்டக்காரர்களின் குடியிருப்பு என்ற அடிப்படையில் கோட்டா கம கிராமத்துக்கு ஒரு புரட்சிகரமான பாத்திரம் உண்டு. அது இப்பொழுது அரசுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு குறியீடாக மாறியிருக்கிறது.மேலும் அது இலங்கைத்தீவின் பல்லினத் தன்மையை நோக்கிய கட்டமைப்பு மாற்றத்தைக் கருக்கட்டும் கிராமமாகவும் வளர்ச்சி பெற்றால் அது மகத்தானதே.

இது நோன்பு காலம் என்பதனால் ஒருபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் அக்குடியிருப்புக்கு உதவுகிறார்கள்.தவிர கரு ஜயசூரியவால் நிர்வகிக்கப்படும் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றும் உதவிகளைச் செய்வதாக தகவல். மேலும் மாணவர் அமைப்புக்களும் அங்கே நிற்பதாக ஒரு தகவல். எனவே காலிமுகத்திடலில் தங்கியிருக்கும் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தங்குமிட வசதிகளும் ஏனைய வசதிகளும் ஏதோ ஒரு விதத்தில் கிடைப்பதாக தெரிகிறது. இனி வெளிச்சக்திகளும் அக்கிராமத்தை தத்தெடுக்க முயற்சிக்கக்கூடும் .

கொழும்பில் உள்ள மேற்கத்திய நாட்டுத் தூதுவர்கள் தமது ருவிட்டர் பக்கங்களில் வெளியிடும் செய்திகள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக காணப்படுகின்றன.மேற்கத்தைய ஊடகங்களும் இந்திய ஊடகங்களும் விவகாரத்தை பெருப்பித்து எழுதுகின்றன. குறிப்பாக சில தமிழக யூடியூப்பர்களின் கற்பனையை தாங்கமுடியவில்லை.சில யூடியூப்பர்களின் பொய்களை மில்லியன் கணக்கான மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். ஆனால் சரியான தகவல்களைத் தரும் யூடியூப்களை அந்தளவு தொகையினர் பார்ப்பதில்லை.

நாட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் பொதுவாக இரண்டு வகைப்பட்டவை. ஒருபகுதி ஆர்ப்பாட்டங்கள் கட்சிகளால் ஒழுங்கமைக்கப்படுகின்றன. மற்றொரு பகுதி தன்னியல்பானது.கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் மக்கள் தன்னியல்பாக தெருவுக்கு வருகிறார்கள். காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டமும் அத்தகையதே.ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் எந்தக் கட்சியின் கொடிகளும் காணப்படவில்லை. ஏந்தக் கட்சியின் கோஷமும் காணப்படவில்லை. ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான கோஷங்களும் சிங்கக்கொடியும் மட்டும்தான் காணப்படுகின்றன. அவர்களை இரண்டு விவகாரங்கள் இணைக்கின்றன ஒன்று ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான கூட்டுணர்வு.இரண்டாவது, இலங்கையர்கள் என்ற கூட்டுணர்வு.சிங்கக்கொடி அதைத்தான் பிரதிபலிக்கிறது.மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் கட்சிப் பிரமுகர்களைக் காணமுடியவில்லை. கட்சி முக்கியஸ்தர்களும் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களில் சற்று விலகி நிற்பதாக தெரிகிறது. அரசியல் கட்சிகளை நீக்கிவிட்டு மக்கள் தன்னியல்பாக ஆர்ப்பாட்டங்களை,போராட்டங்களை முன்னெடுப்பது என்பது இலங்கைத் தீவில் மட்டும்தான் நடக்கும் ஒரு விவகாரம் அல்ல.ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டக்களத்தில் தாற்காலிகமாகத் தங்கியிருந்து போராடுவதும் இதுதான் முதற்தடவையல்ல.அதற்கு உலக அளவிலும் பிராந்திய அளவிலும் உள்நாட்டிலும் முன்னுதாரணங்கள் உண்டு.

அமெரிக்காவின் வோல்ட்ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டத்தில் அவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்காலிகமாக தங்கியிருப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன.அரபு வசந்தத்திலும் அவ்வாறான ஏற்பாடுகள் காணப்பட்டன. இந்தியாவில் அண்மையில் வெற்றி பெற்ற விவசாயிகளின் போராட்டத்தின்போது டெல்லியில் விவசாயிகள் தற்காலிகமாக தங்கி இருப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன..இவைதவிர சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை நடாத்திய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் மெரினா கடற்கரையில் அவ்வாறு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன.

இவையாவும் நாட்டுக்கு வெளியே உள்ள உதாரணங்கள். நாட்டுக்குள் தமிழ்ப் பகுதிகளில் கடந்த 12 ஆண்டுகளில் துலக்கமான மூன்று உதாரணங்களை இங்கே காட்டலாம். முதலாவது உதாரணம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடையது.பல ஆண்டுகளாக தொடர்ந்து வீதியோரங்களில் போராடும் அன்னையர்கள் மிகச்சிலர்தான். அவர்களும் வீதியோரத்தில் குடில்களை அமைத்து தங்கி இருக்கிறார்கள்.அப்போராட்டங்கள் மக்கள் பயப்படவில்லை எனினும், தொடர்ச்சியாக நடப்பவை.அடுத்த போராட்டம் கேப்பாபிலவில் காணிகளை மீட்பதற்காக நடந்த போராட்டம். அதில் போராடிய பெண்கள் படையினரின் பெரும்படைத் தளங்களின் முட்கம்பி வேலிகளின் ஓரமாக அமர்ந்திருந்தது மழைக்கும் வெயிலுக்கும் தற்காலிக குடியிருப்புகளை அமைத்து தொடர்ச்சியாகப் போராடினார்கள். அப்படித்தான் இரணைதீவில் தமது வீடுகளை மீட்கச் சென்ற பெண்களும் போராடினார்கள். இந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதாரணங்களின் பின்னணியில்தான் காலிமுகத்திடலில் கோட்டா வீட்டுக்குப் போ என்ற கிராமம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

காலிமுகத் திடலில் கூடாரம் அமைத்துத் தங்கியிருப்பவர்களுக்கிடையே ஒரு கூட்டுணர்வு உண்டு. தன்னியல்பாக அவர்கள் அமைப்பாகி வருகிறார்கள். அவர்கள் மத்தியிலிருந்து தலைமகள் மேலெக்கூடும். அரசியல் விழிப்புடைய தலைமைகளால் வழிநடத்தப்படாத போராட்டங்கள் ஒன்றில் தாமாகச் சோர்ந்து போய்விடும். அல்லது பலப்பிரயோகத்தின் மூலம் ஒடுக்கப்படலாம்.அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பலத்தை பிரயோகிக்கும் முடிவை இதுவரை எடுக்கவில்லை.நேற்று-சனிக்கிழமை-காலிமுகத்திடலை நோக்கி போலீஸ் வாகனத்தொடர் அணி ஒன்று நகர்த்தப்பட்டது.எனினும் அது பின்னர் பின்னெடுக்கப்பட்டது. அது கோட்டா கோகமவின் மீதான ஓர் உளவியல் தாக்குதலே

அதேசமயம் எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தோடு இணக்கத்துக்கு வரத் தயாரில்லை.அவை அரசாங்கத்தை எப்படித் தோற்கடிக்கலாம் என்றே சிந்திக்கின்றன. ஆனால் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு அல்லது ஜனாதிபதியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகளிடம் போதிய பலம் இல்லை என்றே தெரிகிறது. அரசாங்கத்திடமிருந்து விலகி நிற்கும் அரசாங்கத்தின் முன்னாள் கூட்டாளிகளை நம்ப முடியாது. அரசாங்கம் அவர்களை ஏதோ ஒரு விதத்தில் சமாளித்து ஒரு புதிய அமைச்சரவையை உருவாக்கலாமா என்று தொடர்ந்து எத்தனிக்கிறது. இதனால் விவகாரம் இப்பொழுது ஒரு யாப்பு நெருக்கடியாக மாறிவருகிறது. யாப்பின்படி அரசாங்கத்தை கவிழ்ப்பது கடினம் என்று தெரிகிறது. அரசாங்கத்தை கவிழ்க்கத் தேவையான பலம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. யாப்புக்கு வெளியே போய் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் தயாரில்லை. இதனால் ஏறக்குறைய அரசற்ற ஒரு நிலை தோன்றியிருக்கிறது. இந்த அரசற்ற நிலையினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மக்கள்தான் மேலும் பாதிக்கப்படுவார்கள். வர்த்தகர்கள் பொருட்களை விரும்பிய விலையில் விற்கிறார்கள். எரிபொருள் விநியோகம், எரிவாயு விநியோகம் எல்லாவற்றிலும் முறைகேடுகள் காணப்படுகின்றன.

ஒருவித அரசற்ற நிலை தொடர்ந்து நீடித்தால் பொதுமக்களின் தன்னியல்பான எழுச்சிகள் மேலும் அதிகரிக்கும். அதேசமயம் ஐஎம்எப் போன்ற உலகப் பொது நிறுவனங்களும் அரசாங்கத்துக்கு உதவத் தயங்கும்.ஏனென்றால் பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கு பிரதான முன்நிபந்தனை அரசியல் ஸ்திரத்தன்மை ஆகும். பொருளாதார நெருக்கடிகள் இப்பொழுது யாப்பு நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரமின்மை என்ற வளர்ச்சியை அடைந்துவிட்டன. எனவே இப்பொழுது உடனடியாகத் தேவைப்படுவது அரசியல் ஸ்திரத்தன்மைதான். ஆனால் அவ்வாறான ஓர் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அரசாங்கத்தால் முடியவில்லை.அதே சமயம் அப்படி ஒரு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்தோடு ஒத்துழைக்க எதிர்க்கட்சிகளும் தயாரில்லை.எனவே அரசியல் ஸ்திரமின்மை அல்லது ஒருவித அரசற்ற நிலை தொடர்ந்தும் இருக்கப்போகிறது?

அதாவது கோட்டா வீட்டுக்குப் போக மாட்டார்.அவரை வீட்டுக்கு அனுப்புவதற்காக காலிமுகத்திடலில் திரண்டிருக்கும் மக்களும் இப்போதைக்கு வீட்டுக்குப் போக முடியாது என்று தெரிகிறது.ஒரு உல்லாச வெளி நாட்டின் உலைக்களமாக இன்னும் எவ்வளவு காலத்துக்குக் கொதித்துக் கொண்டிருக்கப் போகிறது?

இதே காலிமுகத்திடலில் 1956இல் தமிழ் சத்தியாக்கிரகிகள் வெண்ணிற ஆடைகளோடு தமது அறவழிப் போராட்டத்தை தொடங்கினார்கள். அவர்கள் தனிநாடு கேட்கவில்லை. சிங்கள மக்களுடைய சாப்பாட்டை தட்டிப் பறிக்கவில்லை. நாட்டைப் பிரிக்க சொல்லியும் கேட்கவில்லை.சிங்களம் மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக்கப்படுவதை எதிர்த்தார்கள்.சத்தியாகிரகிகள் மத்தியில் மக்கள் பிரதிநிதிகளும் இருந்தார்கள். ஆனால் அப்போது இருந்த அரசாங்கம் என்ன செய்தது? அறவழிப் போராட்டத்தின் மீது குண்டர்களை ஏவிவிட்டது.குண்டர்கள் சத்தியாக்கிரகிகளை அடித்து மிதித்தார்கள்.சிலருடைய காதுகளைக் கடித்தார்கள்.போலீசார் எல்லாவற்றையும் ரசித்துக்கொண்டு நின்றார்கள்.இவ்வாறான வன்முறைகளின் தொடர் விளைவாக நாடு மீளமுடியாத வன்முறைச் சுழலுக்குள் சிக்கியது.யுத்தத்தின் சங்கிலித்தொடர் விளைவே இப்பொழுதுள்ள பொருளாதார நெருக்கடி.சுமார் அறுபத்தாறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் மக்களின் அறவழிப் போராட்டத்தை வன்முறை கொண்டு நசுக்கினார்கள். அதன் விளைவாக வந்த ஆயுதப் போராட்டத்தையும் 2009 ஆம் ஆண்டு நசுக்கினார்கள். அந்த வெற்றியை இதே காலிமுகத்திடலில் விமரிசையாகக் கொண்டாடினார்கள்.இப்பொழுது எல்லா வெற்றிகளும் தோல்விகளாக மாறிவிட்டன.அரை நூற்றாண்டுக்கு மேலாக இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு முட்டாள் தீவு மீண்டும் ஒருதடவை காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருக்கிறது?