ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உயர்ஸ்தானிகர் பச்லெட்டின் அறிக்கைக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் வரவேற்பு

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதை முன்னிறுத்தி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் வரவேற்கத்தக்கவையாகும்.

போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு எதிராகத் தடைகளை விதிப்பதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டிருப்பதானது, அரச அதிகாரத்தின் ஊடாக வழங்கப்படுகின்ற பாதுகாப்பைப் பயன்படுத்தி எதிர்வருங்காலங்களில் உயரதிகாரத்தில் இருப்பவர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான முக்கிய முன்நகர்வாகும் என்று மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெற்றது. அதன்போது இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பிலான எழுத்துமூல அறிக்கை உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அவ்வறிக்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு ஏற்றவகையில் அனைவரையும் உள்ளடக்கிய உள்ளகப்பொறிமுறையொன்றை உருவாக்குவதாக இலங்கை அரசாங்கம் வாக்குறுதியளித்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னனும் அதற்கான நம்பத்தகுந்த செயற்திட்டம் எதனையும் அரசாங்கம் சமர்ப்பிக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகரின் அறிக்கை குறித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இயங்கும் சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமது வரவேற்பை வெளியிட்டுள்ளனர். அவர்களின் கருத்துக்கள் வருமாறு:

உயர்ஸ்தானிகரின் அறிக்கை குறித்து பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதை முன்னிறுத்தி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை வரவேற்கின்றோம். அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள 61 ஆவது விடயத்தில் மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டிருப்பதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராகத் தடைகளை விதிப்பது குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது அரச அதிகாரத்தின் ஊடாக வழங்கப்படுகின்ற பாதுகாப்பைப் பயன்படுத்தி உயரதிகாரத்தில் இருப்பவர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான முக்கிய முன்நகர்வாகும்.

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப்போரின்போது பாதுகாப்புப்படையினரால் நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை அடிப்படையாகக்கொண்ட இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத்தடைகளை விதிக்குமாறு நாம் ஒரு தசாப்தகாலத்திற்கும் மேலாகத் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றோம்.

இருப்பினும் அவ்வாறான தடைகளை விதிப்பது அப்பாவி பொதுமக்களைப் பாதிக்கக்கூடும் என்பதால், இலங்கையின்மீது பொருளாதாரத்தடைகளை விதிப்பதில் சர்வதேச நாடுகள் தயக்கம் காண்பித்துவருகின்றன.

எனினும் தற்போது உக்ரேன் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்கள் மற்றும் மீறல்களுக்காக ரஷ்யாவைச் சேர்ந்த நபர்கள் மற்றும் ரஷ்யாவிற்குச் சொந்தமான முயற்சியாண்மைகளுக்கு எதிராக மேற்குலக நாடுகள் தடைகளை விதிப்பதை நாங்கள் வரவேற்கின்றோம். ஒட்டுமொத்த உலகமும் உதவமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்தபோது அரச அனுசரணையுடன் நிகழ்த்தப்பட்ட மிகமோசமான இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில், தற்போது ரஷ்யப்படையெடுப்பின் விளைவாக உக்ரேனியர்கள் முகங்கொடுத்திருக்கும் துன்பத்தை நாம் உணர்கின்றோம்.

சர்வதேச நாடுகள் தற்போது ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கின்ற தடைகளில் குறைந்தபட்சம் பொருளாதாரத்தடையையேனும் சரியான தருணத்தில் இலங்கைக்கு எதிராக விதித்து முன்னுதாரணத்தை வழங்கியிருந்தால், தற்போது உலகளாவிய ரீதியில் நடைபெறும் போக்குற்றங்களையும் அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்புக்களையும் ஓரளவிற்கேனும் குறைத்திருக்கமுடியும். எனவே தற்போதேனும் அனைத்துவழிகளிலும் இலங்கைக்கு எதிராகத் தடைகளை விதிப்பதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கை தொடர்பான விவாதத்தில் ஐ.நாவிற்கான இந்திய நிரந்தர வதிவிடப்பிரதிநிதி இந்திரா பாண்டேவினால் வெளியிடப்பட்ட கருத்து குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் ஆய்வாளர் அலன் கெனன், இலங்கை தொடர்பில் இந்தியா இத்தகைய அப்பட்டமான விமர்சன அறிக்கையை முன்வைப்பது மிகவும் சுவாரஸ்யமான விடயம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் கூறியதாவது:

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகவே மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை அமைந்திருக்கின்றது. இருப்பினும் அவ்வறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருக்கின்ற நிலையில், வெறுமனே எழுத்துமூலமாக மாத்திரமன்றி, கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்கக்கூடியவாறான செயல்வடிவிலான நடவடிக்கைகள் அவசியமாகும்.

அதேவேளை சாதாரண மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உள்நாட்டில் நியாயத்தைப் பெற்றுக்கொள்ளமுடியாத பட்சத்திலேயே சர்வதேசத்தை நாடுவர். எனவே எமது நாட்டு மக்கள் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான சர்வதேசத்தை நாடியிருப்பதென்பது அரசாங்கத்திற்கு அவமானகரமான விடயமாகும். அவ்வாறிருந்தும்கூட, உயர்ஸ்தானிகரின் அறிக்கையை நிராகரிப்பதென்பது நீதியை வலியுறுத்துகின்ற பாதிக்கப்பட்ட மக்களின் குரலை அடக்குவதற்கு ஒப்பானதாகும் என்று தெரிவித்தார்

எமது இனத்துக்காக அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் – ஜனா

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள ஐந்து கட்சிகளினால் அனுப்பப்பட்ட கடிதத்திலுள்ள பெரும்பாலான விடயங்கள் உள்ளடங்கியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது  என்று குறிப்பிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) பாதிக்கப்பட்டு, உரிமையிழந்து இருக்கின்ற எமது இனத்துக்காக அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) இன்றைய தினம் மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் கூட்டத் தொடர் தொடங்கியிருக்கிறது. அதுதான் தற்கால பேசுபொருளாகவும் இருக்கின்றது. இலங்கையில் பொறுப்புக்கூறலானது பின்னடைவைச் சந்தித்துள்ளதாக மனித உரிமை ஆணையகத்தின் ஆணையாளர் தெரிவித்திருக்கிறார்.

ஓவ்வொரு முறையும் மனித உரிமை ஆணையகத்தின்  கூட்டத்தொடர்களிலும் பாதிக்கப்பட்ட எமது தமிழர் தரப்பிலிருந்து பிரதிநிதிகள் நேரடியாக பங்கேற்பர். கடந்த சில தவைகளில் நேரடியாகப் பங்குபற்றாமல் இங்கிருந்து மெய்நிகர் வழியாக இங்கு நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்களை கடிதம் மூலமாக அனுப்பி வைக்கிறோம். அந்த வகையில் இந்த வருடம் கூட தற்போதைய கூட்டத் தொடருக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறது.

அதேபோன்று விபரமாக இங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள், காணி அபகரிப்புகள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக நடைபெறும் கைதுகள் தொடர்ந்தும் அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது போன்ற பல விடயங்களை உள்ளடக்கி தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் ஐந்து கட்சிகள் இணைந்து விபரமான அறிக்கையை அனுப்பியிருந்தார்கள்.

அந்த வகையில் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் மெய்நிகர் மூலமாக இந்த ஐந்து கட்சித் தலைவர்களுடன் உரையாடியிருந்தார்கள். இந்த ஐந்து கட்சிகள் அனுப்பிய விளக்கக் கடிதத்தில் குறிப்பிட்ட பல விடயங்கள் ஆணையாளரின் இலங்கை சம்பந்தமான அறிக்கையில் உள்ளடங்கியிருக்கிறது. ஆணையாளரினால் அங்கத்துவ நாடுகளுக்கு 13 பக்க அறிக்கை வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த அறிக்கையில் ஐந்து கட்சியினால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பது எங்களுக்கு உண்மையில் மகிழ்ச்சியைத் தருகின்றது.

மனித உரிமை ஆணையாளரின் குறுகிய அறிக்கை நிமித்தம் மெய்நிகர் மூலமாக உரையாடிய அதிகாரிகள்,  இலங்கையில் பொறுப்புக்கூறல் முறையாக நடைபெறவில்லை. இலங்கையில் சகலராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீர்வு காணப்படுவதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தியிருக்கின்றார். அத்தோடு இந்திய அரசாங்கத்தின் சார்பில் பங்குபற்றிய அதிகாரி, 13வது திருத்தச் சட்டம் உள்ளடங்கலாக இலங்கையில் தமிழர்கள் சமத்துவமாக, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு கொண்டு வரப்பட்டு மிக விரைவாக மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருக்கின்றார்.

இவற்றையெல்லாம் பார்க்கின்ற பொழுது எமக்கான தீர்வு மிக விரைவில் வரும் என்பதில் ஓரளவுக்கு நிம்மதியடையக்கூடியதாக இருக்கின்றது.

இந்த அளவில் ஒன்றைக் கூறிக்கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியப் பரப்பில் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் ஒருகாலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒற்றுமையாக, தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காக, அரசியல் ரீதியாக போராடிய கட்சிகள் 2009களுக்குப் பிற்பாடு இக் கட்சிகள் பிளவுபட்டிருக்கின்றன. இந்தக் கட்சிகள் பிளவுபடுவதற்கான காரணங்கள் ஓரளவுக்கு தெரியாமலில்லை. இந்த விடயத்தில் நாங்கள் நான் பெரிது நீ பெரிது என்று பார்க்காமல் ஐந்து கட்சிகள் ஒன்றாக இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாகத்திற்கு கடிதம் எழுதியது போன்று ஏனைய கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோhக இருந்தால் இன்னமும் விரைவாக, கூடுதலான பெறுபேறுகளைப் பொற்றுக் கொள்ள முடியும்.

அந்தவகையில், பாதிக்கப்பட்டு, உரிமையிழந்து இருக்கின்ற எமது இனத்துக்காக நாங்கள் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என்பதனை அனைத்துக் கட்சிகளிடமும் வலிந்து கேட்டுக் கொள்கின்றேன்.

இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகர் பச்லெட்டின் அறிக்கை பாரிய குறைபாடுகளைக் கொண்டுள்ளது – ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பீரிஸ் தெரிவிப்பு

இலங்கை தொடர்பில் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன.

மூன்று தேர்தல்களின் மக்களின் ஆணையைப்பெற்று தேர்வான அரசாங்கத்தின் அடிப்படை செயற்பாடுகள் மற்றும் அதன் கடப்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவாறான ஊடுருவல் போக்கிலான தன்மையே அதன் பிரதான குறைபாடு என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம் மிகத்தெளிவானதொரு பாரபட்சமான தன்மையை வெளிக்காட்டுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இது ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு ரீதியான அடிப்படையை சவாலுக்குட்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 ஆவது கூட்டத்தொடரில் வெள்ளிக்கிழமை (4) ஜெனிவா நேரப்படி மாலை 5.30 மணிக்கு இலங்கை தொடர்பிலான விவாதம் நடைபெற்றது.

இதன் ஆரம்பத்தில் இலங்கையின் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் வெளியிட்டு உரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து அவரது அறிக்கையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்குப் பதிலளித்து உரையாற்றியபோதே அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

இலங்கை தொடர்பான 46/1 தீர்மானம் பேரவையில் குறித்தளவிலான வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் ‘ஆதாரங்களைத் திரட்டுவதற்கான பொறிமுறை’ தொடர்பில் அத்தீர்மானத்தின் 6 ஆவது பந்தியில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களின் குறைபாடானதும் ஏற்றுக்கொள்ளமுடியாததுமான தன்மையினைக் கருத்திற்கொண்டு இலங்கையும் ஏனைய சில உறுப்புநாடுகளும் அத்தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

இத்தீரமானமானது பக்கசார்பற்றதன்மை, தேர்வுசெய்து இயங்காததன்மை ஆகிய பேரவையின் ஸ்தாபகக்கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானதாக அமைந்துள்ளது.

அதுமாத்திரமன்றி அத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட 60/251 தீர்மானத்தின்படி உறுப்புநாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அப்பாற்சென்றதாகவும் காணப்படுகின்றது.

இதுகுறித்து இலங்கையின் நிலைப்பாடு என்னவென்பதை கடந்த முதலாம் திகதி பேரவைக்கு அறிவித்திருந்தேன்.

இந்தத் தீர்மானத்தை நாம் எதிர்க்கின்ற போதிலும், மனித உரிமைகள் விவகாரத்தில் சர்வதேச சமூகத்துடனும் மனித உரிமைகள் பேரவை உள்ளடங்கலாக ஐக்கிய நாடுகள் சபையுடனும் இணைந்து செயற்படுவதற்குத் தயாராக இருக்கின்றோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூறப்பட்டதன்படி, நாம் சர்வதேச சட்டங்களுக்கும் பிரகடனங்களுக்கும் மதிப்பளிக்கின்ற நாடாவோம்.

இதுவிடயத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மற்றும் சவால்கள் குறித்த விடயங்களை பேரவையுடனும் ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய தொடர்புடைய கட்டமைப்புக்களுடனும் நாம் தொடர்ச்சியாகப் பகிர்ந்து வந்திருக்கின்றோம்.

உயர்ஸ்தானிகரால் இந்தப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன என்று நாம் கருதுகின்றோம்.

அதன் முக்கிய குறைபாடு எதுவெனில், இலங்கையில் நடத்தப்பட்ட மூன்று தேர்தல்களில் மக்களின் ஆணையின் ஊடாகத் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தின் அடிப்படை செயற்பாடுகள் மற்றும் கடப்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலான ஊடுரும் போக்கிலான அதன் தன்மையேயாகும்.

அதுமாத்திரமன்றி இலங்கை தொடர்பான தீர்மானத்தைப் பொறுத்தமட்டில், மிகத்தெளிவானதொரு பாரபட்மான தன்மை தென்படுகின்றது. ஏனெனில் மனித உரிமைகள் பேரவையானது அதன் ஏனைய உறுப்புநாடுகள் தொடர்பில் இவ்வாறானதொரு விசாரணைப்பொறிமுறையை முன்னெடுக்காது. இது ஐக்கிய நாடுகள் சபைக்கட்டமைப்பின் அடிப்படையை சவாலுக்குட்படுத்துகின்றது.

எவ்வித அடிப்படைகளுமற்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் மேலெழுந்தவாரிய ஏராளமான விடயங்கள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறித்து நாம் கவலையடைகின்றோம் என்று குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் இலங்கைத் தமிழ்சமூகத்தின் நியாயமான அபிலாஷைகளைப் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் மனித உரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் நிலைவரத்தை மேம்படுத்துவதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தினால் வரையறுக்கப்பட்டளவிலான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நாடுகள், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி இலங்கையின் பன்முகத்தன்மை வாய்ந்த சமூகக்கட்டமைப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும் விசனம் வெளியிட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் வெள்ளிக்கிழமை (4) இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெற்றது.

விவாதத்தின் ஆரம்பத்தில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கை குறித்த எழுத்துமூல அறிக்கை வெளியிடப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து உறுப்புநாடுகள் இலங்கை தொடர்பில் உரையாற்றின.

அதன்பிரகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 47 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் 46/1 என்ற புதிய தீர்மானத்தை முன்மொழிந்த பிரிட்டன், கனடா, ஜேர்மனி, வடமெசிடோனியா, மாலாவி மற்றும் மொன்டெனேக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகளின் சார்பில் மனித உரிமைகளுக்கான பிரிட்டனின் சர்வதேச தூதுவர் ரீட்டா ஃபிரென்ச் உரையாற்றினார்.

இணையனுசரணை நாடுகளின் சார்பில் இலங்கை குறித்து அவர் பேரவையில் முன்வைத்த விடயங்கள் வருமாறு:

முக்கிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்காக இலங்கையினால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

இருப்பினும் மனித உரிமைகள் பேரவையில் 46ஃ1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் மட்டுப்படுத்தப்பட்டளவிலான முன்னேற்றங்களே ஏற்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

முதற்கட்டமாக காணாமல்போனோரின் பெயர்கள் உள்ளடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டதன் பின்னர், அவை தொடர்பிலான விசாரணைகள் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் மந்தகதியில் முன்னெடுக்கப்படுகின்றமை விசனத்திற்குரிய விடயமாகும்.

சிவில் சமூக அமைப்பினர், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மீதான கண்காணிப்புக்கள், அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள், தடுத்துவைப்புக்கள் குறித்த எமது கரிசனைகள் இப்போதும் தொடர்கின்றன. சிவில் சமூக இடைவெளி பரந்த அடிப்படையில் பேணப்படுவது இன்றியமையாததாகும்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு அமைவாக மாற்றியமைப்பதன் முதற்கட்ட நடவடிக்கையாக, அச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த அஹ்னாப் ஜஸீம் மற்றும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயமாகும்.

எனினும் தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தங்கள் மிகவும் வரையறுக்கப்பட்டளவிலானதாகக் காணப்படுவதுடன் அச்சட்டம் குறித்த எமது கரிசனை தொடர்கின்றது.

அதேபோன்று ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி, து இலங்கையின் பன்முகத்தன்மை வாய்ந்த சமூகக்கட்டமைப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

எனவே அந்தச் செயலணியின் செயற்பாடுகள் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் பாரபட்சமற்ற முறையில் அமைவதையும் உறுதிப்படுத்துமாறு இலங்கையை வலியுறுத்துகின்றோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும் அதேவேளை, 46ஃ1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்குவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

அதேவேளை இலங்கை தொடர்பில் பேரவையின் உரையாற்றிய ஐ.நாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி இந்திரா மணி பாண்டே கூறியதாவது,

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை குறித்த வாய்மூல மற்றும் எழுத்துமூல அறிக்கை தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். இலங்கையின் அயல் மற்றும் நட்புறவு நாடு என்ற அடிப்படையில், இலங்கைவாழ் தமிழர்களின் நலனைப் பாதுகாப்பதுடன் தொடர்புடைய கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யுமாறு இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது.

ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றை அடைந்துகொள்வதற்கான தமிழர்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்வதென்பது இலங்கையின் சொந்த நலனுக்குரியது என்றே நாங்கள் நம்புகின்றோம். அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குவது தொடர்பில் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடும் இதிலடங்கும்.

மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் நல்லிணக்கம் உள்ளடங்கலாக பல்வேறு கோணங்களில் சர்வதேச சமூகப்பிரநிதிகளுடனும் சம்பந்தப்பட்ட ஏனைய அமைப்புக்களுடன் இலங்கை அரசாங்கம் தொடர்புகளைப்பேணிவருவது குறித்தும் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். சம்பந்தப்பட்ட தரப்பினரும் அவ்வாறான தொடர்புகள் பேணப்படுவதையும் அர்த்தமுள்ளதும் செயற்திறன்வாய்ந்ததுமான இருதரப்புக் கலந்துரையாடல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதையும் நாம் விரும்புகின்றோம்.

இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரத்தை மேம்படுத்துவது குறித்த முக்கிய கரிசனைகளை உயர்ஸ்தானிகரின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

நல்லிணக்கப்பொறிமுறையை முன்னெடுத்துச்செல்வதுடன் பொதுமக்களின் அடிப்படைச்சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் இலங்கைத் தமிழ்சமூகத்தின் நியாயமான அபிலாஷைகளைப் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்.

அதேவேளை அதிகாரப்பகிர்வு விடயம் குறித்து தாம் கொண்டிருக்கும் கடப்பாட்டை மனதிலிருத்தி, மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடாத்துமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

சிவில் சமூக அமைப்புகளை தொடர்ந்து கண்காணிப்பதையும் அச்சுறுத்துவதையும் கண்டிக்கின்றோம்-ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி

“சிவில் சமூக அமைப்புகளை தொடர்ந்து கண்காணிப்பதையும் அச்சுறுத்துவதையும் கண்டிக்கின்றோம்” என மனித உரிமை பேரவையில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் சமீபத்தில் பிணையில் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்கின்றோம் என்றும் விடுதலைகளை ஊக்குவிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரம் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து தனது கருத்தை முன்வைத்த நெதர்லாந்து பிரதிநிதி, முன்னைய மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறல் இன்மை ஜனநாயக ஸ்தாபனங்கள் நீதித்துறையின் சுதந்திரம் இல்லாமல் போதல் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் இலங்கை மக்கள் சிறந்த முறையில் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இலங்கை ஐநாவிற்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பிரான்ஸ் தூதுவர் மனித உரிமை பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை : ‘பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் போன்ற விடயங்களில் போதியவு முன்னேற்றமில்லை’ – நோர்வே

இலங்கையில் பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் போன்ற விடயங்களில் போதியவு முன்னேற்றமில்லாதது குறித்து கவலையடைந்துள்ளோம் என ஐ.நா மனித உரிமை பேரவையில் உரையாற்றுகையில் நோர்வே தெரிவித்துள்ளது.

சிவில் சமூகத்தினர் மீதான கண்காணிப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை இலங்கை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என்றும் கூறியுள்ளது.

அதே நேரம் காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகம் காணாமல் போனவர்கள் குறித்து மிகவும் மந்த கதியில் விசாரணைகளை முன்னெடுப்பது குறித்து பிரிட்டன் கவலை வெளியிடடுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்திற்கான உத்தேச திருத்தங்கள் மிகவும் மட்டுப்படுத்தப் பட்டவை நீண்டகால கரிசனைகள் தொடர்ந்தும் நீடிக்கின்றன என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிக்கை கோரிய மிச்சல் பச்லட்

மனித உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதை இனங்கண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்லட் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் கூடுதலாக ஈடுபடுவதை அண்மைக்காலத்தில் காணமுடிந்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான விவாதத்தின்போது அவர் நேற்று இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் உரிமைகளை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலமை தொடர்பில் விரைவில் தீர்மானிக்குமாறும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தேவையான இழப்பீடுகளை வழங்குமாறும் அவர் கேட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில ஏற்பாடுகளைத் திருத்தியமைப்பதற்கும் அந்தச் சட்டத்தின் கீழ் பல கைதிகளை விடுதலை செய்வதற்கும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் மீண்டும் ஏற்டாமல் தவிர்ப்பதற்குத் தேவையான ஆழமான சட்ட, நிறுவன மற்றும் பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்களை எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்ட வேண்டும். எனினும், கடந்த வருடம் பொறுப்புக்கூறும் செயற்பாட்டில் தொடர்ந்தும் பின்னடைவைக் காண முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அனைவரினதும் மனித உரிமைகளுக்காக அரசாங்கம் குரல் கொடுக்க வேண்டும். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான நம்பத் தகுந்த வழிவகைகளை அரசாங்கம் இன்னமும் முன்வைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கான இழப்பீடு அதேபோல் தாக்குதல்களின் தன்மை, பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பு என்பனபற்றிய விரிவான அறிக்கையொன்றை அவர் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

Posted in Uncategorized

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை இலங்கை அரசாங்கம் பாதுகாக்கின்றது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைப் பாதுகாப்பதுடன் சட்டத்தின் ஆட்சியைப் புறக்கணித்துச் செயற்பட்டுவரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கையின் சர்வதேச பங்காளிகளும் கடந்தகால மீறல்களுக்கான நீதிநாட்டப்படுவதற்கும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதற்குமான அழுத்தங்களைத் தொடர்ந்து வழங்குவார்கள் என்று பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள்.

எனவே மனித உரிமைகள் நிலைவரத்தில் உண்மையான முன்னேற்றம் அடையப்படுவதை இலக்காகக்கொண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் இலங்கை அரசாங்கத்தின்மீது பிரயோகித்துவரும் அழுத்தத்தை இருமடங்காக்கவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் கரிசனைக்குரிய மட்டத்தில் இருப்பதைக் காண்பிப்பதுடன் மனித உரிமைகள் நிலைவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்ற இலங்கை அரசாங்கத்தின் கருத்திற்கு முரணானதாகவும் அமைந்துள்ளது.

அதுமாத்திரமன்றி கடந்தகால மீறல்கள் குறித்து இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படாத நிலையில், இன, மத சிறுபான்மையினத்தவருக்கு எதிரான அடக்குமுறைகள், சிவில் சமூகப்பிரதிநிதிகளை இலக்குவைத்து பாதுகாப்புத்தரப்பினரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலும் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள், இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு எதிராகத் தடைகளை விதித்தல், இலங்கையில் இடம்பெற்ற மீறல்களுக்கு சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் நீதியை நிலைநாட்டுதல், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையர்களுக்குப் புகலிடம் வழங்கல் மற்றும் கடந்த ஆண்டு மனித உரிமைகள் பேரவையினால் உருவாக்கப்பட்ட பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கல் உள்ளடங்கலாக உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும்.

அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபையானது இலங்கையின் பாதுகாப்புப்படையினருடன் தொடர்புகளைப் பேணும்போதும் ஐ.நா அமைதிகாக்கும் படைக்கான இலங்கையின் பங்களிப்பு குறித்து மதிப்பீடுகளை மேற்கொள்ளும்போதும் மனித உரிமைகள் தொடர்பான அதன் (ஐ.நாவின்) தரநியமங்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்தவேண்டும்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் சர்வதேசத்தினால் முன்வைக்கப்பட்ட கருத்திற்கு, அரசாங்கம் பொய்யானதும் தவறாக வழிநடத்தக்கூடியவாறானதுமான பொதுத்தொடர்புகளின் மூலம் பதிலளிக்கின்றது.

ஆகவே மனித உரிமைகள் நிலைவரத்தில் உண்மையான முன்னேற்றம் அடையப்படுவதை இலக்காகக்கொண்டு உறுப்புநாடுகள் இலங்கை அரசாங்கத்தின்மீது பிரயோகித்துவரும் அழுத்தத்தை இருமடங்காக்கவேண்டும்.

கடந்த 1983 – 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நடைபெற்ற சிவில் யுத்தம் இருதரப்பிலும் பல்வேறு மீறல்கள் இடம்பெறுவதற்கு வழிவகுத்தது.

இறுதிக்கட்டப்போரின் போது அரசாங்கத்தினாலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தினாலும் பெருமளவில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களை ஐக்கிய நாடுகள் சபை ஆவணப்படுத்தியிருந்தது.

அந்த மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்குப் பதிலாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராக கொள்கைகளைப் பின்பற்றிவருகின்றது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற மிகமோசமான குற்றங்களையும் அதற்கான பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்வதற்குத் தாம் தயாரில்லை என்பதைத் தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக வெளிக்காட்டிவரும் அதேவேளை, போர்க்குற்றங்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இராணுவ அதிகாரிகள் சிலர் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச்செயலாளர் கமால் குணரத்ன மற்றும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்டோர் மனித உரிமை மீறல் குற்றங்களுக்கான கட்டளை பிறப்பிக்கும் பொறுப்பை வகித்துள்ளனர்.

அதேபோன்று கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 பேர் வலிந்து காணாமலாக்கப்பட்ட விவகாரத்துடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு ஓகஸட் மாதம் சட்டமா அதிபரினால் வாபஸ் பெறப்பட்டமை குறித்தும் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் அவர் ஜனாதிபதியினால் வடமேல்மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

சட்ட அமுலாக்கம் உள்ளடங்கலாக அரசாங்கத்தின் சிவில் செயற்பாடுகளில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கல் தொடர்பிலும் தாம் பாரபட்சமாக நடத்தப்படுவதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டதும் தமிழ்மக்கள் செறிந்துவாழும் பகுதியுமான வடமாகாணத்தில் குறித்த எண்ணிக்கையிலான இராணுவ சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளமை குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் அரச அதிகாரிகளுக்கும் சிறுபான்மையின சமூகத்தைச்சேர்ந்த நபர்களுக்கும் இடையிலான 45 கருத்து முரண்பாட்டுச்சம்பவங்களையும் ஐக்கிய நாடுகள் சபை பதிவுசெய்துள்ளது.

பௌத்த அடையாங்களைக் கண்டறிவதற்கும் பௌத்த தலங்களை நிர்மாணிப்பதற்கும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையின் மூலம் கிழக்கு மாகாணத்தின் பாரம்பரிய, பூகோள அடையாளம் மாற்றியமைக்கப்படக்கூடும் என்ற அச்சம் சிறுபான்மையின மக்கள் மத்தியில் காணப்படுவதாக மிச்சேல் பச்லெட் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களுக்கு முன்னர் இராணுவப்புலனாய்வு அதிகாரிகள் குண்டுதாரிகளைப் பாதுகாப்பதற்கு முயன்றதாக அந்த மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார் என்றும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் சிவில் சமூக இடைவெளியைப் பாதுகாப்பதற்கும் கடந்தகால மீறல்களுக்கான நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதற்குமான அழுத்தங்களைத் தொடர்ந்து வழங்குவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மீறல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலங்கையின் சர்வதேச பங்காளிகள்மீதே தங்கியிருக்கின்றார்கள் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Posted in Uncategorized

குறுகிய காலத்தில் அரசாங்கம் மக்களால் வெறுக்கப்படுவதற்கு நிதியமைச்சர் பஷிலே காரணம் – பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள்

நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு வழங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தற்போது முழுமையாக இல்லாதொழித்து விட்டார்.

குறுகிய காலத்தில் அரசாங்கம் மக்களால் வெறுக்கப்படுவதற்கு நிதியமைச்சர் பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சி தலைவர்களும்,உறுப்பினர்களும் குறிப்பிட்டனர்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச,பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன்பில ஆகியோர் ஜனாதிபதியால் உடனடியாக அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சி தலைவர்கள்,உறுப்பினர்கள் ஒன்றினைந்து நேற்று கொழும்பில் விஷேட ஊடக சந்திப்பை நடத்தினர்.

இந்த ஊடக சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச,பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார,விஜயதரணி தேசிய சபையின் தலைவர் அத்துரலியே ரத்ன தேரர்,லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன கம்யூனிச கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் டி.யு குணசேகர,கம்யூனிச கட்சியின் பதில் தலைவர் வீரசுமன வீரசிங்க,

சுதந்திர கட்சியின் பிரதிநிதியொருவர், இராஜங்க அமைச்சர் ஜயந்த சமரவீர,பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்பில் உட்பட பங்காளி கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் முறையற்ற செயற்பாடுகளுக்கு பங்காளி கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து தடையாக செயற்படுவதால் அவர் பங்காளி கட்சிகளை அரசாங்கத்திலிருந்து வேறுப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுப்பட்டார்.

நிதியமைச்சரின் செயற்பாடுகள் பொருளாதார பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் காணப்படுகிறதே தவிர நெருக்கடியை சீரமைக்கும் தன்மையில் அமையவில்லை.

தனக்கு தான் அனைத்தும் தெரியும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு செயற்படுவதால் அவர் பிற தரப்பினரது ஆலோசனைகளுக்கு மதிப்பளிப்பதில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவ பதவி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பெயரளவில் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் பதவி அரசியல் குறித்து அனுபமில்லாத பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

முறையாக பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டுமாயின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் பதவி அமைச்சர் டலஸ் அழகப்பெருமளவிற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

அரசியல் புலமையின் அடிப்படையில் பொதுஜன பெரமுன கட்சியில் பதவி வழங்கப்படவில்லை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் கருத்திற்கு இசைபாடும் தரப்பினருக்கு மாத்திரம் கட்சியில் பதவி வழங்கப்பட்டன.

அரசாங்கததிற்கு நாட்டு மக்கள் வழங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை மழுங்கடித்து குறுகிய காலத்தில் அரசாங்கத்தை மக்கள் வெறுக்கும் சூழலை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவே தோற்றுவித்தார் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

பொருளாதார பாதிப்பிற்கு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும்.பங்காளி கட்சிகளின் கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் அவர் மதிப்பளிப்பதில்லை. தன்னிச்சையாக செயற்பட்டு தீர்மானங்களை முன்னெடுப்பதால் நாடும்,நாட்டு மக்களும் தற்போது பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

நாட்டு மக்கள் குறித்து நிதியமைச்சர் அக்கறை கொள்ளவில்லை.மக்களின் பிரச்சினை குறித்து கருத்துரைத்ததால் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டோம்.

சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்திற்கு அமைய அரசாங்கம் செய்ற்படவில்லை.அமெரிக்காவின் ஆதிக்கத்தில் இருந்து நாட்டை பாதுகாக்கும் போராட்டத்தில் இனி ஈடுப்படுவோம் என முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்தார்.

வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதி எங்கே ? – சர்வதேச மன்னிப்புச்சபை

நாட்டில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை நிலைநாட்டுவதில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் செயற்திறனான முறையில் இயங்கிவருவதாக சர்வதேச சமூகத்திற்குக் காண்பிக்கவேண்டும் என்பதில் அரசாங்கம் தெளிவாக இருக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிபலிப்பு உள்ளிட்ட உண்மை நிலைவரங்களுடன் ஒப்பிடுகையில் சர்வதேச சமூகத்திற்குக் கூறப்படும் விடயங்கள் பொய்யானவை என்பதைப் புரிந்துகொள்ளமுடிவதாகவும் தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி வழங்கப்படாத நிலையில், ‘இன்னமும் பதில் வழங்கப்படவில்லை’ என்ற தலைப்பில் ஆவணப்படுத்தல் வடிவிலான அறிக்கையொன்றை சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களிடம் நடாத்தப்பட்ட நேர்காணல்கள் மற்றும் முதலாம், இரண்டாம்கட்ட ஆய்வுகளின் மூலம் திரட்டப்பட்ட தகவல்களை அடிப்படையாகக்கொண்டு மன்னிப்புச்சபை இவ்வறிக்கையைத் தயாரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உறுப்பினர்களிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தொடக்கம் இவ்வாண்டு பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் 28 நேர்காணல்கள் மேற்கொள்ளப்பட்டதாக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்களின் சுருக்கம் வருமாறு:

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டுக்குழுவின் தரவுகளின்படி, இலங்கையில் 6,259 வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதுடன் ஈராக்கிற்கு அடுத்ததாக உலகிலேயே அதிகளவான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவான இரண்டாவது நாடாக இலங்கை இருக்கின்றது.

எனினும் இலங்கையில் கடந்த 1980 ஆம் ஆண்டிலிருந்து குறைந்தபட்சம் 60,000 அல்லது 100,000 வரையிலான வலிந்து காணாமலாக்கப்படல்கள் இடம்பெற்றிருக்கக்கூடும் என்று நாம் மதிப்பிட்டுள்ளோம்.

இலங்கையின் வடமாகாணத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உண்மையையும் நீதியையும்கோரி ஆரம்பித்த தொடர் போராட்டம் கடந்த பெப்ரவரி மாதத்துடன் 5 வருடங்களைப் பூர்த்திசெய்துள்ளது.

பலவருடகாலமாக பல்வேறு உள்ளகப்பொறிமுறைகள் நிறுவப்பட்டபோதிலும், சர்வதேச சட்டங்களின் பிரகாரம் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பதில்களை வழங்குவதற்கும் அதற்கான நீதியை நிலைநாட்டுவதற்கும் இலங்கை அரசாங்கம் தவறியிருக்கின்றது.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உண்மையை வெளிப்படுத்தல், நீதியை நிலைநாட்டல், இழப்பீடு வழங்கல் ஆகிய கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு ஏற்புடைய வகையில் காணாமல்போனோர் அலுவலகம் மிகவும் செயற்திறனான முறையில் இயங்கிவருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் ஏனைய உறுப்புநாடுகளுக்கும் காண்பிக்கவேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் தெளிவாக இருக்கின்றது.

இருப்பினும் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கம் காண்பிக்கின்ற பிரதிபலிப்பு உள்ளிட்ட உண்மை நிலைவரத்துடன் ஒப்பிடுகையில் அரசாங்கம் கூறுகின்ற விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்பதை நாம் முன்னெடுத்த ஆய்வின் மூலம் புரிந்துகொள்ளமுடிகின்றது.

போரின்போதும் அதன் பின்னரும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், தமது கேள்விகளுக்கான பதில்களைக்கோரி துணிச்சலுடன் தொடர்ந்து போராடுகின்றார்கள்.

அதேவேளை வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் நீதியைப் பெற்றுக்கொள்வதை முன்னிறுத்தி இயங்கிவரும் அமைப்புக்கள் தற்போது புதியதொரு பரிமாணத்திலான மனித உரிமை மீறல்களுக்கு முகங்கொடுத்துள்ளன.

அமைதியாகப் போராட்டங்களை மேற்கொள்வதற்கான சுதந்திரம், கருத்துவெளிப்பாட்டுச்சுதந்திரம், சுதந்திரமாகச் செயற்படுவதற்கான உரிமை மற்றும் தன்னிச்சையாகத் தடுத்துவைக்கப்படல் போன்றவற்றிலிருந்து பாதுகாப்புப்பெறுவதற்கான உரிமை உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தரப்பினரின் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரை அரசாங்கம் அணுகும் முறை மற்றும் அதன் பிரதிபலிப்பு உள்ளடங்கலாக இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்துள்ளன என்று மன்னிப்புச்சபை அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.