நினைவு கூரும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்தி நிறுத்தினால் எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் – ரெலோவின் தலைவர் செல்வம்!

போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்தி நிறுத்தினால் எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்இ “இந்த மாதம் கார்த்திகை மாதம் என்பதனால் நீதிமன்ற தடை உத்தரவுகளை வீடு வீடாக சென்று ஒவ்வொருவருக்கும் பொலிஸார் கொடுத்து வருகின்றனர்.

எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. போர் மௌனித்துவிட்டதுஇ போரில் தனது இனம்இ மண்ணுக்காக மரணித்தவர்களை நினைவு கூருவதற்கான வாய்ப்புக்களை இன்று அரசாங்கம் தடுக்கின்றது.

இவ்வாறு தடுப்பதன் மூலம் எதனை நீங்கள் சாதிக்கபோகின்றீர்கள்?“ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசின் ஒப்பந்த  வேலைகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை

மத்திய அரசாங்கத்தினால் ஒப்பந்தம் வழங்கப்பட்டு செய்து முடிக்கப்பட்ட பல வேலைகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் மாகாணங்களுக்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதி  வேலைக்கான கொடுப்பனவு அதிகமான ஒப்பந்ததாரர்களுக்கு இன்னும் முழுமையாக வழங்கப்படாது உள்ளதென இலங்கை தேசிய நிர்மாண சங்கத்தின் வடமாகாண கிளையின் தலைவர் அன்ரன் றேமன்ஸ் குரூஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “2019ஆம் ஆண்டு ஏப்ரல் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா காரணமாக பொருட்களின் விலைகள்  அதிகரித்து, தற்போது மிகவும் எதிர்பாராத வகையில் பொருட்களின விலை அதி உச்சத்தை அடைந்துள்ளது.

இலங்கை வரலாற்றில் இது முதல் முறையாகவும் உள்ளது. இது தனியாக கம்பி, சீமெந்து மட்டும் அல்லாது கட்டிடத்திற்கு தேவையான அனைத்து வகை கற்கள், அலுமினியம், கூரை பொருட்கள் மற்றும் சிறிய சிறிய சகல கட்டுமான பொருட்களும் விலை அதிகரித்துள்ளது. ஆனால் இதன் மேலதிக விலை ஏற்றத்திற்கான செலவை வேலை தருநர்கள் தர மறுக்கின்றார்கள்.

5 மில்லியனுக்கும் 3 மாத ஒப்பந்த காலத்திற்கு மேற்பட்ட வேலைகளுக்கு விலையேற்றத்திற்கான சூத்திரம் பாவிப்பதற்கு இடம் இருந்தும் அந்த நிபந்தனை செயல்படுத்த முடியாதவாறு நிபந்தனைகள் மாற்றியமைத்து பல ஒப்பந்தங்கள் கோரப்படுகின்றது.

மேலும் அந்த நிபந்தனைகள் உள்ள ஒப்பந்தத்திலும் கூட சில பொருட்களின்  விலையேற்றத்ததை அச் சூத்திரம் மூலம் பெறமுடியாமல் உள்ளது.

அதன்படி ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒரு ஒப்பந்தகாரருக்கு முற்பணமானது 14 நாட்களிலும் இடைக் கொடுப்பனவு 35 நாட்களிலும் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறு கொடுப்பனவு கொடுக்கப்படுவதில்லை. அந்த தாமதத்திற்கான வட்டியும் கொடுக்கப்படுவதில்லை.

இதில் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டமானது” 2016ம் ஆண்டு தொடக்கம் 2020 ஆண்டு வரை செய்யப்பட்ட பல வேலைக்கு கொடுப்பனவு  ஒப்பந்தகாரர்களுக்கு கொடுக்கப்படவில்லை.

இத்திட்டமானது மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் கட்டிடத் திணைக்களம், திட்ட முகாமைத்துவ அலுவலகம் ஊடாகவும் வேலைகள் செய்து 2018 ஆண்டு தொடக்கம் கொடுப்பனவு எடுக்காத ஒப்பந்தகாரர்களும் உள்ளார்கள். அதன் பெறுமதி 16.50 கோடி ரூபா ஆகும் அதில் மேலும் வழங்கப்பட்ட வேலைகளை முடிவுறுத்துவதற்கு 62 கோடி ரூபா தேவையாக உள்ளது.

அதே போன்று  கிராம உட்கட்டுமான அபிவிருத்தி திட்டம் மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் ஒப்பந்தம் வழங்கப்பட்டு வேலைகள் முடிவுறுத்தப்பட்டு சரியாக இரண்டு வருடம் கடந்தும் 80 வீதமான கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை.

அதன் பெறுமதி 12 கோடி ரூபா ஆகும். மேலும் மத்திய அரசால் ஒப்பந்தம் வழங்கப்பட்டு செய்து முடிக்கப்பட்ட பல வேலைகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படாமல் உள்ளது.

மேலும் மாகாணங்களுக்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதி  வேலைக்கான கொடுப்பனவு அதிகமான ஒப்பந்ததாரர்களுக்கு இன்னும் முழுமையாக வழங்கப்படாதுள்ளது.

தற்போதைய அரசாங்கம் அந்த திட்டத்தை நிறுத்தி உள்ளமையால் பல வேலைகள் முடிவுறுத்தப் படாமலும் உள்ளது. முடிவுறுத்தப்பட்ட வேலையிலும் கொடுப்பனவு கொடுக்கப்படவில்லை.

இவ்வாறு பல பிரச்சனைகள் உள்ள எமது அங்கத்தவர்கள் பலர் தொழிலை தொடர்ந்து நடாத்த முடியாமலும் வங்கிகளில் இருந்து எடுத்த கடன்களை கட்ட முடியாமலும் உள்ளார்கள்.

எனவே இது தொடர்பாக நாம் ஆளுநருடன்  உயரதிகாரிகளுடனும்  கதைப்பதற்கு நேரம் கேட்டு 2019 ஆண்டு ஜுலை மாதத்திற்கு பின்னர் தொடக்கம் இன்று வரை பல கடிதங்கள்,தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும்  எம்மை அவர்கள் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கூட தரவில்லை.

எனவே எமக்கு வேறு வழியில்லாமல் இந்த ஊடக சந்திப்பை முதல் முறையாக கூட்டி எங்களது பிரச்சினைகளை உங்கள் ஊடாக வெளிகொண்டு  வருகிறோம்.

இதற்கு பிறகும் எமக்கான தீர்வு கிடைக்கவில்லையாயின் நாம் வீதிகளில் இறங்கி போராடுவதை தவிர வேறு வழியில்லை. இதனால் ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி அது சார்ந்த பல தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சார்பில் இந்த மனுக்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.

முன்னர் கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் அமைந்துள்ள இராணுவத்தின் 512 பிரிகேட் தலைமையகத்துக்கு முன்பாகவும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சூழலிலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய எல்லையிலும் மாவீரர் நாளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அந்த மனுவில் கூறப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 120 ஆவது பிரிவுக்கு அமையவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் படியும், இந்த நிகழ்வை நடத்துவது குற்றம் என்றும் இதனைத் தடை செய்யுமாறும் பொலிஸார்ர கோரியுள்ளனர்.

இந்த மனு இன்று யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் வி.ரி. சிவலிங்கம் முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நாளை மறுதினம் 21ஆம் திகதி தொடக்கம் வரும் 28 ஆம் திகதிவரை ஒரு வாரத்துக்கு நடத்த தடை உத்தரவு நீதிமன்றினால் நடத்தப்பட்டது.

Posted in Uncategorized

இராணுவத்துக்கு எதற்கு அதிக நிதி? – ரெலோவின் தலைவர் செல்வம்

நாடு வறுமையில் சிக்கித் தவிக்கையில் இராணுவத்துக்கு எதற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவா இந்த நகர்வு என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் மேலும் உயரும் என எதிர்வுகூறப்படுகின்றது. இதனை தடுப்பதற்கான வல்லமை இந்த அரசாங்கத்திடம் இல்லை.

இந்நிலையில் இராணுவத்துக்கு பலகோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு வறுமையில் சிக்கித்தவிக்கையில் எதற்கு இராணுவத்துக்கு அதிக நிதி? இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவா இவ்வாறு அதிக நிதி ஒதுக்கப்படுகின்றது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விடுதலைப்பு புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் எனக் கூறப்படுகின்றது. எனவே, யாருடன் போரிடப்போகின்றீர்கள். பாகிஸ்தானுடனா, இந்தியாவுடனா அல்லது தமிழர்களுடனா என்ற கேள்வியும் எழுகின்றது. ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

கிளிநொச்சி நீதிமன்றில் 51 பேருக்கு தடையுத்தரவு

மாவீரர் நாள் நிலைவேந்தலிற்கு கிளிநொச்சி நீதிமன்றிலும் தடையுத்தரவு இன்று பெறப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிசாரால் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இவ்வாறு தடையுத்தரவு இன்றைய தினம் பெறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், விசுவமடு, முழங்காவில் ஆகிய பகுதிகளில் மாவீரர் துயிலுமில்லங்கள் காணப்படுகின்றன. குறித்த துயிலுமில்லங்களில் கடந்த 2017 மற்றம் 18ம் ஆண்டுகளில் மாவீர்நாள் நினைவேந்தல்கள் இடம்பெற்றன.

இந்த நிலயைில் 2019ம் ஆண்டுக்க பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மாவீரர் நாள் கிளிநொச்சி நீதிமன்றில் 51 பேருக்கு தடையுத்தரவு நினைவேந்தல்களிற்கு தடைகள் பிறப்பிக்கப்பட்டன. எதிர்வரும் 27ம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலயைில் இன்றைய தினம் தடையுத்தரவுகள் பெறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸாரால், 9 பேருக்கு எதிராக இன்று நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபைதவிசாளர் வேழமாலிகிதன், கரைச்சி பிரதேச சபை உப தவிசாளர் தவபாலன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான, சுப்பையா, சிவகுமார், இயேசுதாசன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி ஆகியோருக்கே இவ்வாறு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இதேவேளை தர்மபுரம் பொலிஸாரால் 02 பேருக்கும், அக்கராயன் பொலிஸாரால் 02 பேருக்கும், பளை பொலிஸாரால்18 பேருக்கும் , முழங்காவில் பொலிஸாரால் 04 பேருக்கும், மருதங்கேணி பொலிஸாரால் 09 பேருக்கும், பூநகரி பொலிஸாரால் 07 பேருக்கும், தடையுத்தரவுகள் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த நபர்கள் அல்லது அவர்களின் உறவுகளோ, ஆர்வலர்களோ சமய குருமார்களோ, ஒத்துழைப்பாளர்களோ, நபர்களுா யாவரும் தடைசெய்யப்பட்ட எல்.ரி.ரி.ஈ அமைப்பின் இறந்தவர்களை நினைந்து எந்த செயலையும் குறித்த காலப்பகுதியில் செய்ய்கூடாது என கட்டளை வழங்குமாறு நீதிமன்றில் தடையுத்தரவு கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜோ பைடனின் அதிகாரங்கள் தற்காலிகமாக கமலா ஹாரிஸிற்கு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அதிகாரங்கள் தற்காலிகமாக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் பதவி வகிக்கிறார். துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவி வகிக்கிறார்.

இன்று, தலைநகர் வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீடு மருத்துவ மையத்தில், மருத்துவப் பரிசோதனைக்காக, ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெருங்குடல் தொடர்பான கொலோனோஸ்கோபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வைத்தியசாலையில் வழக்கமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலோனோஸ்கோபி சிகிச்சையின் போது ஜனாதிபதி ஜோ பைடனுக்கு மயக்க மருந்து செலுத்தப்படும். இதன் காரணாக, அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப் பொறுப்பு, துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு வழங்கப்படுகிறது.

Posted in Uncategorized

கொழும்பில் இந்திய தூதுவரின் வீட்டை வீடியோ பதிவு செய்த பாகிஸ்தானியர்கள்

இந்திய உயர்ஸ்தானிகரின் கொழும்பு தேஷ்டன் வீதியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை காணொளியாக பதிவு செய்த மூன்று பாகிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கணனி பொறியியலாளர் ஒருவரும் இருப்பதாகவும் இவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நாட்டில் இருந்து வெளியேற தடைவிதித்து கொழும்பு கோட்டை நீதவான் நேற்று உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இவர்கள் மூவரும் முச்சக்கர வண்டியில் சென்றுக்கொண்டிருந்த போது மேல் குறிப்பிட்ட இடத்தில் வண்டியை நிறுத்தி இந்திய உயர்ஸ்தானிகரின் இல்லத்தை காணொளியாக பதிவு செய்ததாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து கமராக்களில் அந்த காட்சிகள் இருந்தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Posted in Uncategorized

‘முன்னாள் போராளிகள் மனித உரிமை ஆணைக்குழுவில் மனமுருகி கோரிக்கை’

நவம்பர் 27 ஆம் திகதி விளக்கேற்ற அனுமதிக்குமாறு முன்னாள் போராளிகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் மனமுருகி கோரிக்கை விடுத்துள்ளனர். –எதிர்வரும் 27ஆம் திகதி எங்களது உறவினர்கள், சக நண்பர்கள் அடக்கப்பட்ட இடத்தில் நாங்கள் விளக்கேற்றி, அதில் விழுந்து அழுது, எங்களது கவலைகளை ஞாபகப்படுத்த அந்த தினத்தினை தருமாறு அன்பாக வேண்டுகின்றோம் என ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மனித உரிமை ஆணைக்குழு எதிரில், வடக்கில் வாழும் முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் 7 பேர் ஆஜராகி இவ்வாறு கோரிக்கையினை முன்வைத்தனர்.

ஆணைக்குழுவின் தலைவரும், உயர்நீதிமன்ற நீதிபதியுமான நவாஸ் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, சட்டத்திணைக்களத்தின் அரச சட்டத்தரணிகளும் இவ்வமர்வில் சமுகமளித்திருந்தனர் முன்னாள் போராளிகளை ஆணைக்குழு முன் கருத்து தெரிவிக்க மலை

யக மக்கள் முன்னணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனும், அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சதீஷ்குமாரும் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது ,

நான் வவுனியாவில் வாழ்கின்றேன். யுத்த காலத்தில் நான் ஷெல்லடிபட்டு கால்களை இழந்துள்ளேன். எனது மனைவி இரண்டு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு வேறொருவரை திருமணம் முடித்து வெளிநாடு சென்றுவிட்டாள். நான் வவுனியாவில் சில்லறைக்கடை ஒன்றை வைத்து எனது 2 குழந்தைகளையும் வளர்த்து வருகின்றேன். நான் கொழும்பில் பிறந்து வாழ்ந்தவன். எனது கல்வியை பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் கற்றவன். எனது அடையாள அட்டை இன்றும் கொழும்பு முகவரியிலேயேதான் இருக்கின்றது. நான் 20 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்தேன்.

அதன் பின்னர் இறுதி யுத்தத்தில் காயப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின்னர் காயங்களுடன் மக்களோடு மக்களாக முள்ளிவாய்க்கால் ஊடாக வவுனியாவில் அகதி முகாமில் இருந்தேன். அதன் பின்னர் என்னை இராணுவத்தினர் கைதுசெய்து பல சிறைச்சாலைகளில் வைத்தனர். என்மீது பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்கொன்றினை வவுனியா உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பின்னர் விடுதலையானேன். நான் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அரச கடன் ரூ. 2 இலட்சம் தரப்பட்டு சுயதொழில் ஒன்றை ஆரம்பிப்பித்தேன்.

ஒவ்வொரு வருடத்தின் நவம்பர் மாதம் 27ஆம் திகதியன்று விடுதலைப்புலிகளின் உறவினர்கள், தமது குடும்ப உறுப்பினர் மறைந்த தினத்தினை நினைவுகூர அனுமதிக்குமாறு அரசாங்கத்திடமும், இந்த ஆணைக்குழுவிடமும் கேட்கின்றோம். எங்களது உறவினர்கள், சக நண்பர்கள் அடக்கப்பட்ட இடத்தில் நாங்கள் விளக்கேற்றி அதில் விழுந்து அழுது எங்களது கவலைகளை ஞாபகப்படுத்தவே அந்த தினத்தினைத் தருமாறு அன்பாக வேண்டுகின்றோம்.

இராணுவம் வெற்றி தினத்தினை நினைவு கூர்கின்றது. இந்திய இராணுவம் இலங்கையில் இறந்த தமது உறுப்பினர்களுக்குக் கூட கோப்பாயில் ஒரு தூபியமைக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அத்துடன் ஜே.வி.பி. புரட்சியில் இறந்தவர்களுக்கு 2 தினங்களை அரசாங்கம் நினைவுகூர அனுமதித்துள்ளது. ஏன் இந்த நாட்டில் பிறந்த எங்களுக்கு எங்களது உறவுகளை நினைத்து மெழுகுத்திரி ஏற்றுவதற்கு அனுமதி மறுக்கின்றனர்? எங்களது இறந்த உறவினர்கள், நண்பர்கள், சகோதர சகோதரிகளுக்கு நினைவு கூர அனுமதி தர மறுக்கின்றார்கள். இது சாதாரண எங்களது உரிமையாகும்.

நாங்கள் நினைவு கூர ஆரம்பித்தால் எங்கள் வீடுகளில் இராணுவத்தினரும், சி.ஐ.டி யினரும் எங்களை சுற்றிவளைக்கின்றார்கள். கைதுசெய்கின்றார்கள். இதனால் நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எங்கள் வீடுகளுக்கு அடிக்கடி சி.ஐ.டி. யினர் வருகை தருகின்றனர். இதனால் அயலவர்களும், எங்களது குழந்தைகளும் அச்சமடைகின்றனர்.

நாங்கள் தற்பொழுது இங்கு கொழும்பு வந்து ஆணைக்குழுவுக்கு சாட்சியமளிக்க வந்தால்கூட எங்கள் வீடுகளுக்கு சி.ஐ.டி.யினர் போய் எமது பிள்ளைகளிடம் விசாரணை செய்கின்றனர். எங்கள் வாழ்நாளில் இதுவே ஒரு ஆணைக்குழுவுக்கு வந்து எங்களது கருத்துக்களை கூறும் முதல் சந்தர்ப்பமாகும்.

நாங்களும் இந்த சமூகத்தில் எல்லோரும் போன்று சமமாகவும், சமாதானமாகவும், நற்பிரஜையாகவும் வாழவே விரும்புகின்றோம் . நாங்கள் எங்களது நாளாந்த வாழ்க்கையை நடத்த முடியாமல் உள்ளது. எங்களை முன்னாள் போராளிகள் அல்லது பயங்கரவாதிகள் என்று பாதுகாப்புப் படையினரும், அரச அதிகாரிகளும் சமூகத்திலிருந்து விலக்கி வைத்துப் பார்க்கின்றனர். அதுமட்டுமல்ல, எங்களை சந்தேகக்கண் கொண்டே பார்க்கின்றனர். கணவன், மனைவியை இழந்த போராளிகளுக்கு இரண்டாம் திருமண முடிப்பதற்குக் கூட முடியாமல் உள்ளது. பாதுகாப்புப் படையினரும், சி.ஐ.டி. அதிகாரிகளும் வீடு வருவதால் எவரும் எங்களைத் திருமண முடிப்பதற்கு முன்வருவதில்லை.

எங்களது வடக்கிலுள்ள காணிகள் மீள ஒப்படைக்கப்படல் வேண்டும், காணாமல் போன எங்களது உறவுகளுக்கு அவர்கள் பற்றிய உண்மையான நிலை தெளிவுபடுத்தப்படல் வேண்டும். இந்து மதத்திற்கும், பௌத்த மதத்திற்கு பாரிய சம்பந்தமுள்ளது. பௌத்த மத சின்னங்கள் எனச் சொல்லி வடக்கு – கிழக்கு பிரதேசத்தில் உள்ள காணிகள், நிலங்களை ஆக்கிரமிக்கின்றனர். இவை நிறுத்தப்படல் வேண்டும்.

எங்களது காணி நிலங்களை மகாவலி, சொர்ணபூமி, வீடமைப்பு, வனவளம், சுற்றாடல் சூழலியல் என திட்டமிட்டு ஆக்கிரமிக்கின்றனர். சகல சமூகங்களும் சமாதானமாக, சமமாக வாழ வழிவகுக்கப்பட வேண்டும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வதாரம், வீடு, புனரமைப்பு புனர்வாழ்வுத் திட்டங்களை உரிய முறைப்படி அரசாங்கம் வழங்குதல் வேண்டும்.
ஆசியாவிலேயே கடல் நீர்மூழ்கிக் கப்பல், ஹெலிகொப்டர் தயாரிப்புகளை செய்தது விடுதலைப்புலிகள் அமைப்பு. எவ்வாறு உதவி வழங்கப்படல் வேண்டும் என எங்களுக்குத் தெரியும். இன்றும் எங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துதான் வருகின்றோம். அதற்கான சக்தி எங்களிடம் உள்ளது – என்று குறிப்பிட்டார்.

நிதி வேண்டாம்; நீதியே வேண்டும் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத் தலைவி

எங்களுடைய போராட்டத்தை நீர்த்து போக செய்வதற்காகவே காணாமல் போனவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா, தமக்கு அந்த நிதி வேண்டாம் எனவும் நீதியே வேண்டும் எனவும்  தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக வரவு – செலவுத்திட்டத்தில் (பட்ஜெட்) 300 மில்லியன் ரூபாய் நிதி அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், “நாங்கள் 1,838ஆவது நாளாக இன்று போராடிக் கொண்டிருக்கின்றோம். எங்களுடைய போராட்டத்தை நீர்த்துப் போக செய்வதற்காக பாராளுமன்ற வரவு – செலவுத் திட்டத்திலே, காணாமல் போனவர்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளனர்.

“இவ்வாறு நிதி ஒதுக்கியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். எந்த ஒரு தாயும் இந்த நிதியை வேண்டுவதற்கு தயாராக இல்லை. ஏனென்றால், நாங்கள் இந்தப் போராட்டத்தில் உண்மையான ஆதாரங்களுடன், கண்கண்ட சாட்சியங்களுடன் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

“எங்களுடைய போராட்டத்துக்கும்,  எங்களுடைய பிள்ளைகளை எங்கே கொண்டு சென்று வைத்திருக்கிறார்கள் என்பதற்கும் பதில் கூற வேண்டும். எங்களுக்கு நிதியைத் தந்து ஏமாற்ற வேண்டாம்” என்றார்.

பிரித்தானிய உயர் ஸ்தானிகருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஸாரா ஹல்டன் அம்மையார் உடனான சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர். 18 நவம்பர் 2021 வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு கொழும்பில் அமைந்த உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் மற்றும் சட்டத்தரணி தயாபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் ஐநா பிரேரணை சம்பந்தமாகவும் முக்கியமாக கலந்துரையாடப்பட்டன.

பிரித்தானியாவின் தலைமையிலே ஐ.நா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட 46/1 பிரேரணையின் முக்கியத்துவம் அதில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள், அவற்றில் காணப்படுகின்ற முன்னேற்றங்கள், அதன் அடிப்படையில் செயற்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் என்பனவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. கால வரையறை யோடு கொண்டுவரப்பட்ட இந்த பிரேரணையில் பிரேரிக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்ற 18 மாதங்களே உள்ளன. அதில் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய விடயங்கள் ஒருபுறம் இருக்க தமிழ் தரப்பினரால் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்களிலும் அக்கறை செலுத்துவது பற்றி கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டன.

இதன் பிரகாரம் தமிழ் மக்கள் முகம் கொடுத்திருக்க முக்கிய பிரச்சினையான காணி அபகரிப்பு இன குடிப்பரம்பல் சிதைப்பு என்பவற்றை தற்காலிகமாக தடுத்து நிறுத்தும் முயற்சியாக ஐ.நா பிரேரணையில் பரிந்துரைக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நிறைவேற்றுவது, மாகாணசபை தேர்தல்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

தமிழர்கள் ஒருமித்த நிலைப்பாட்டில் சம்பந்தப்பட்ட தரப்புகளை வலியுறுத்துவது, அதன் முக்கியத்துவம், அதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவற்றின் முன்னேற்றம், ஆதரவு தரப்புக்கள், எதிர்கால நகர்வுகள் என்பன பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.

நாடு எதிர்காண்டிருக்கும் பொருளாதாரச் சிக்கல்கள், தமிழ் மக்களும் நாட்டு மக்களும் முகம் கொடுக்கும் அவலங்கள், கோரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலை என பிற விபயங்களும் கலந்துரையாடப்பட்டன.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது என்று ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்தார்.

Posted in Uncategorized