ஐமசவை கலைக்கும் நாள் ஜனாதிபதியின் கையில்!

சஜித் பிரேமதாசவின் ஐமச மற்றும் பல கட்சிகள் இணைந்து அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணிக்கான ஆரம்பகட்ட வேலைகளை

நிறைவடைந்துள்ளன. இந்தக் கூட்டணி, எதிர்வரும் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது.

சஜித்தின் புதிய கூட்டணிக்கான ஆரம்பகட்ட வேலைகள், ஐமசவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சஜித்தின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார முகாமையாளராக சுஜீவ சேனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நாட்களில், மறுசீரமைப்புக் பணிகளைக் கவனிக்க நாடு முழுவதும் சுற்றித்திரியும் சுஜீவ, நிலைமை நன்றாக இருக்கிறதென்று சஜித்துக்கு அறிக்கையும் சமர்ப்பித்திருக்கிறார். மரிக்கார் உள்ளிட்ட பலருக்கு பிரச்சாரப் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தூதரக ஒருங்கிணைப்பு பொறுப்பு வெலிகம ரெஹான் ஜெயவிக்ரமவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனது பிரச்சார செயற்றிட்டங்களை ஆரம்பித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்வரும் ஜனவரி மாதம் தீர்க்கமான மாநாட்டை ஏற்பாடு செய்யவுள்ளதாக ஐமச உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐமசவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் செயற்குழுவில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. “இந்தக் கட்சியின் தலைவரே எங்கள் வேட்பாளராக இருப்பார். வேறு எந்தக் கட்சித் தலைவர்களும் நியமிக்கப்பட மாட்டார்கள். எங்கள் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை அனைவருக்கும் தெரியும்” என்று, அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

எதிர்க்கட்சியின் பலமான அரசியல் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பொதுத் தளத்தை உருவாக்கவுள்ளதாக, டலஸ் குழுவின் முக்கியஸ்தராக பேராசிரியர் ஜிஎல் பீரிஸ், தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

எனினும், டலஸ் சஜித் பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது. புதிய கூட்டணியின் துணைத் தலைமையை டலஸ் கோரியிருந்தார், ஆனால் சஜித் முடியாதென்று கூறிவிட்டார். தேவையென்றால், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் அல்லது தேசிய அமைப்பாளர் பதவியைத் தருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஐமசவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தென்று அறிவிக்கப்பட்டாலும், ஐமச அரசாங்கத்தின் பிரதமர் யாரென்ற போட்டி நிலவுகிறது. டலஸ் போன்றே, ரஞ்சித் மத்துமபண்டார, லக்ஷ்மன் கிரியெல்ல, ஜிஎல் பீரிஸ், ரொஷான் ரணசிங்க ஆகியோரும் பிரதமர் பதவியை எதிர்பார்த்துள்ளனர். அந்த விடயம் தொடர்பில் சஜித்துடன் நெருக்கமாக இருக்கும் ஐமசவில் முக்கிய செயற்பாட்டாளர் ஒருவரிடம் கேட்டபோது பின்வருமாறு கூறினார்.

“இப்போதே பிரதித் தலைவரை நியமித்தால், கூட்டணிக்கு வர எதிர்பார்த்து சஜித்துடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடிவரும் கட்சித் தலைவர்களும், அரசாங்க அமைச்சர்களும் குழம்பிப் போகலாம். ஜனவரி மாதம் கூட்டணியை அறிவித்த பின்னரும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும்தான் அரசாங்கத்தில் உள்ள பல அமைச்சர்கள் வருவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். சம்பிக்க, தயாசிறி, சுசில் போன்றவர்கள் வந்தால் அவர்களுக்கும் பதவி வழங்க வேண்டும். எனவே, அந்த பதவிகள் அனைத்தையும் ஜனவரியில் நிரப்பப் போவதில்லை. அனைத்துத் தொகுதி அமைப்பாளர் பணிகளும் நிரப்பப்படவில்லை. மஹரகம ஆசனத்தை ஷம்பிக்க அல்லது சுசிலுக்கு ஒதுக்கியுள்ளோம். டலஸ் வருவதை நாங்கள் விரும்புகிறோம், ஆனால் அவருக்கு துணைத்தலைவர் என்ற பதவியைக் கொடுக்கமுடியாது” என்று, லீடர் டிவிக்கு சஜித்தின் நண்பர் சொன்னார்.

இருப்பினும், கட்சியுடன் இணையும் புதியவர்களால் ஐமசவுக்கு பெரும் பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறதென்று, ஜனாதிபதியின் சகாக்கள் சிலர் காத்துக்கொண்டிருப்பதாகவும் வதந்திகள் உள்ளன.

ரணிலுக்கு விசுவாசமாக இருக்கும் எம்பிக்களை, தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் களட்டி எடுக்க ரணில் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்குள் காலம் கடந்திருக்கலாம்!

Posted in Uncategorized

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உயிராக நேசித்தவர் கேப்டன் விஜயகாந்

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உயிராக நேசித்தவர் கேப்டன் விஜயகாந்

ரெலோ இயக்க யாழ் மாவட்ட அமைப்பாளர் சபா.குகதாஸ் அனுதாபம்!

அவர் தனது அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்

மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களுக்கு பின்னர் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உணர்வு பூர்வமாக நேசித்தவர் புரட்சிக் கலைஞன் கேப்டன் விஜயகாந் அவர்கள். கேப்டன் சிறந்த நடிகராக இருந்தாலும் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் விசுவாசமாக இருந்தவர்.

ஈழத் தமிழர் விடுதலை போராட்டத்தை உயிராக நேசித்தார் என்பதற்கு விஜயகாந்தின் நூறாவது திரைப்படம் கேப்டன் பிரபாகரன் என்ற பெயரில் வெளியாகியதுடன் தன்னுடைய மூத்த மகனுக்கு விஜய் பிரபாகரன் என பெயர் வைத்தமை சிறந்த எடுத்துக் காட்டு இவற்றுக்கு அப்பால் தன்னால் இயன்ற நிதி உதவியையும் விடுதலைப் போராட்டத்திற்கு வாரி வழங்கிய வள்ளல் அத்துடன் ஏழைகளுக்கு வாரி வழங்கிய ஏழைகளின் தலைவன்.

திரைப்படத்திலும் அரசியலிலும் நிஜ வாழ்க்கையிலும் ஒரே பேச்சு அதே சிந்தனை இவையே அவரது சிறப்பு.

அன்னாரின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரை என்றும் ஈழத்தமிழர்கள் மறக்க மாட்டார்கள். அவரின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவிக்கின்றோம்.

இம்முறை திசைகாட்டிக்கு அதிக வாய்ப்பு!

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான கிறிஸ்தவர்கள், கடந்த 25ஆம் திகதியன்று, கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடினர்,

இலங்கையர்களும் இந்நாளில் பக்தியுடன் ‘க்றிஸ்மஸ்’ கொண்டாடினர்.

‘அமைதியின் இளவரசர்’ என்று உலக மக்களால் போற்றப்பட்டு மதிக்கப்படும் யேசு கிறிஸ்துவின் தனித்துவமான பிறப்பைக் குறிக்கும் டிசம்பர் 25ஆம் திகதி க்றிஸ்மஸ் தினமாகும். மார்கழிக் குளிரில், மாட்டுத் தொழுவத்தில் பிறந்த யேசு க்றிஸ்து, உலக அமைதியை நிலைநாட்ட தனது இன்னுயிரை தியாகம் செய்த மரியாதைக்குரிய மத போதகராவார்.

இலங்கையின் பிரதான கிறிஸ்மஸ் ஆராதனையானது கட்டான ஹல்பே புனித பிரான்சிஸ் சேவியர் தேவாலயத்தில், பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் தலைமையில் நடைபெற்றது. இதன்போது அவரது உரையில் வழக்கமான அரசியல் இருந்தது. அடுத்த ஆண்டு தேசிய தேர்தல் ஆண்டென்பதால், க்றிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போதும் யார் வெற்றி பெறுவார்கள் என்பதுதான் முக்கிய தலைப்பு.

செய்திகளின்படி, கட்சிகள் பலவற்றின் முக்கிய தலைப்பு ஜேவிபி தலைமையிலான திசைகாட்டி ஆகும். ஜேவிபி வெற்றிபெற்றார் நாட்டை விட்டுச்செல்ல நேரிடுமென்று சிலர் மிகவும் பயப்படுகிறார்கள். ஆனால், ஒரு மாறுதலுக்காக திசைக்காட்டிக்கும் வாய்ப்பளித்துப் பார்ப்போம் என்று சிலர் கூறுகின்றனர்.

நத்தாரின் சிவப்பு வர்ணமும், ஜேவிபிக்கு வேலைபார்க்கும் நேரம் கனிந்திருக்கிறது. நத்தார் விடுமுறையென்றுகூட பார்க்காம், திசைக்காட்டியினர் களத்தில் இறங்கிப் பணியாற்றுகின்றனர். கடந்த வாரத்தில், தொகுதிவாரிக் கூட்டங்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதேபோன்று, மாவட்ட மட்டத்தில் தமது தொழிற்சங்கங்களை பலப்படுத்தவும் புதிய கூட்டணியொன்றை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திசைக்காட்டியின் தேர்தல் ஆயத்தங்களின் ஆரம்ப கட்ட வேலைத்திட்ட பொறிமுறையானது 2023 டிசம்பரில் நிறைவடையவுள்ளது. அநுர இம்முறை வெற்றி பெறுவது உறுதி என திசைக்காட்டியின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி ரணில், வேட்பாளராகப் போட்டியிட மாட்டார் என்றும் அவர்கள் ஏற்கனவே கணக்கிட்டுள்ளனர். ஐமசவும் கண்டிப்பாக இரண்டு அல்லது மூன்றாக உடைந்து விடும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

அதாவது, திசைகாட்டிக்கான களம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இலங்கையின் அரசியலில் சிறிது மாற்றம் ஏற்பட பெருமளவில் வாய்ப்பிருக்கிறது. எனவே காத்திருப்போம்.

Posted in Uncategorized

கெப்டன் விஜயகாந்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய கிழக்கு ஆளுநர்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான

செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது அவர், கெப்டனுடன் பழகிய நாட்களை நினைவு கூர்ந்ததுடன், விஜயகாந்தின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாகவும் இலங்கை மக்கள் சார்பாகவும் அனுதாபங்களை தெரிவித்தார்.

Posted in Uncategorized

கெப்டன் விஜயகாந்த்: தமிழ் மீதும் இலங்கைத் தமிழர் மீதும் பெரும்காதல் கொண்ட புரட்சிக் கலைஞன்

“இலங்கைத் தமிழர்கள் அழும்போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது” – விஜயகாந்த்

தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்துக்கு யாரும் அறியாத எத்தனையோ பக்கங்கள் இருக்கிறது. அதேபோலத்தான் அவரின் தமிழ்மொழி மீதான பற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்லாமல் இலங்கைத் தமிழர்கள் மீது கொண்ட பாசமும் காதலும் அளப்பரியது.

விஜயகாந்த் தனக்கு 13 வயது இருக்கும்போதே மதுரையில் நடைபெற்ற 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக தகவலும் சொல்லப்படுகிறது. சிறுவயதிலேயே தமிழ்மீது கொண்ட அந்தப் பற்றுதான் திரைக்கலைஞனான பின்னும் வளர்ந்து, தமிழர்களுக்காகப் போராடவும் தூண்டியது.

குறிப்பாக, 1980களின் பிற்பகுதியில் இலங்கையில் தமிழர்கள் மீது இராணுவத்தினர் புரிந்த கொடூரமானத் தாக்குதலில் ஏராளமான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதைக் கண்டு கொதித்தெழுந்த விஜயகாந்த், இலங்கைத் தமிழர்கள் மீதானப் படுகொலையைக் கண்டித்து சக நடிகர், நடிகைகளுடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தினார். அதுமட்டுமல்லாமல் இந்தப் படுகொலையை நிறுத்தவேண்டும், இலங்கைத் தமிழர்களுக்கு நீதி வேண்டும் எனக்கோரி அப்போதைய தமிழ்நாடு ஆளுநரிடம் மனுவும் அளித்தார்.

பின்னர், 1986ம் ஆண்டு இலங்கையில் இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், அதை தடுக்கவேண்டும் எனக்கோரி சென்னை வட்டாட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தார் விஜயகாந்த்.

அவரின் ரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பும் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்தது மட்டுமல்லாமல் தமிழ்நாடு முகாம்களில் அகதிகளாக தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தார். குறிப்பாக, 1989களில் மண்டபம் முகாம்களில் அகதிகளாக வசிப்பவர்களுக்கு நேரில்சென்று உதவிபுரிந்தார்.

எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலே சென்று, இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்களுக்காக தனது பிறந்தநாள் கொண்டாடுவதையே தவிர்த்தார்.

“இலங்கைத் தமிழர்கள் அழும்போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது” என்று இலங்கைத் தமிழர்களின் வலியை உணர்ந்தவராக உணர்ச்சிப்பூர்வமாகப் பதிலளித்தார். (பின்னாள்களில் அவரின் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன).

இலங்கைத் தமிழர்கள் மீதான பற்றைப் போலவே, தனித் தமிழீழப் போராட்டத்தை முன்னின்று நடத்திய விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மீதும் அளவுகடந்த அன்பையும் மரியாதையையும் கொண்டிருந்தார். அதன் சாட்சியாக தனது மூத்த மகனுக்கு “விஜய பிரபாகரன்” என பெயர்வைத்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீதும், ஈழத்தின் மீதும் தனக்கிருந்த பற்றைப் பறைசாற்றினார்.

மேலும், தனது 100ஆவது படத்துக்கு வைத்த “கெப்டன் பிரபாகரன்” என்ற பெயர்தான், அவரின் அடைமொழியாக நின்று இன்றுவரை அனைவராலும் அன்போடு `கெப்டன்’ என அழைக்கப்படுகிறார்.

2009ஆம் ஆண்டில் இலங்கையில் இனப்படுகொலைகளை நிறுத்த வேண்டும் எனக்கோரி அவர் நடத்தியப் போராட்டங்கள் ஏராளம்.

கடல் கடந்த இலங்கைத் தமிழர்கள் மீதே அத்தனை பரிவு என்றால் கண்களோடு நிற்கும் தமிழ் நாட்டுத் தமிழர்கள் மீதான அவரின் காதலை சொல்லிமாளாது.

2002ஆம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து `நீர் தராத கர்நாடாகாவுக்கு மின்சாரம் இல்லை!’ என்கிற முழக்கத்துடன் மாபெரும் போராட்டத்தை நெய்வேலிக்கே சென்று நடத்திக் காட்டினார்.

எல்லோரும் மாநிலம், மொழி கடந்து தனது திரைப்படத்தைப் பார்க்க வேண்டும், ரசிகர்களை அள்ளிக்குவிக்க வேண்டும் பான் இந்தியா ஸ்டாராக வேண்டும் என எண்ணி தனது ரசிகர் மன்றப் பெயருக்கு முன்னால் `அகில இந்திய’ என்ற முன்னொட்டை வலிந்து சேர்த்துக்கொள்வார்கள்.

ஆனால் விஜயகாந்தோ, `தென்னிந்திய, அகில இந்திய’ என்றிருந்த தனது ரசிகர் மன்றத்தின் பெயரை 1982இலேயே `தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்றம்” எனப் பெயர் மாற்றம் செய்தவர்.

விஜயகாந்த் தமிழர்கள் மீதும் தமிழர்கள்மீதும் கொண்ட பாசமும் பற்றையும் நினைவு கூர்ந்து, ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் அவரின் இறுதி பயணத்தை கண்ணீர் ததும்ப உணர்ச்சியுடன் வழியனுப்பி வைக்கிறார்கள்!

நன்றி – விகடன்

Posted in Uncategorized

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஜனவரியில் சமர்ப்பிக்கப்படும் – நீதி அமைச்சர்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அச்சட்டமூலத்தில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

இருப்பினும் இதற்கு பல எதிர்ப்புக்கள் வெளியானதை அடுத்து திருத்த முன்மொழிவுகள் கோரப்பட்டு ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அன்றையதினம் இணையப் பாதுகாப்பு சட்டமூலம் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டது. எனவே இந்த திருத்தங்கள் அடங்கிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை ஜனவரியில் சமர்ப்பிப்பதாக விஜயதாச ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இலங்கை இந்தியாவின் கரிசனைகளையும் கருத்தில்கொள்ளவேண்டும் – இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்

வெளிநாட்டு கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்தஇந்தியாவின் கரிசனைகளை இலங்கை செவிமடுக்கவேண்டும் என இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரஅமைச்சர் எம்ஜே அக்பர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் சீனாவும் உண்மையில் இன்னமும் இராணுவமோதலில் ஈடுபட்டுள்ளன, எல்லைதகராறு தீர்க்கப்படாததால் இதற்கு இன்னமும்தீர்வு காணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே நாங்கள் விசேட கரிசனைகளை கொண்டுள்ளோம் என இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிpவித்துள்ளார்.

உங்களிற்கு தெரியும் இவை சுற்றுலா ஆடம்பர கப்பல்கள் இல்லை இவை சீன கப்பல்கள் என தெரிவித்துள்ள அவர் நாங்கள் மின்னணுசாதனங்களிற்கு மீண்டும் திரும்பியுள்ளோம் அவை மூலோபாய நலன்களின் அடிப்படை தேவைகள் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வடபகுதியில் இமாலயத்தில் சீனாவுடனான இந்தியாவின் மோதல் ஒரு கடுமையான யதார்த்தை எதிர்கொள்கின்றது என தெரிவித்துள்ள இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமைதி ஸ்திரதன்மைக்கு அடிப்படையான 1980களில் செய்து கொள்ளப்பட்டஉடன்படிக்கையை நாங்கள் இன்னமும் மதிக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எல்லையில் பதற்றம் நிலவுகின்றது ஆனால் துப்பாக்கிவேட்டுக்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்டவர்களிற்கு இந்தியா புகலிடம் வழங்குவது குறித்த விசேட கரிசனைகளை கொண்டுள்ளன இதேபோன்று எங்கள் கரிசனைகளை நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

வடக்குக்கான ரயில் சேவைகள் நிறுத்தம்

வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 07ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என ரயில்வே

திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் மார்க்கம் அன்றைய தினம் முதல் 06 மாத காலத்திற்கு மூடப்படும் என அதன் பிரதி முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே குறிப்பிட்டார்.

இந்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கசன்துறை வரை மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும்

தமிழர்களின் அரசியல் உரிமையினை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புகள்தான் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கோரிவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் ஒரேயொரு தெரிவுதான் இருக்கின்றது. இந்த தேர்தலை பகிஸ்கரிப்பதுதான அதனையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.

இன்று (27) மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் அரசியலில் வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கின்ற கதை ஒன்று ஒரு சிலரால் பரப்பப்படுகின்றது அந்த விடயம் தொடர்பாக ஒரு சில தரப்புகள் பெயர்களை கூட முன்மொழிந்திருக்கின்றார்கள் குறிப்பாக சி.வி.விக்னேஸ்வரனுடைய பெயர் தானாகவே வந்து முன்மொழிந்திருக்கின்றார்.

அனைத்துக் கட்சிகளும் இணங்கினால் தான் ஒரு வேட்பாளராக வர தயார் என்று ஏனையவர்கள் ஒரு வேட்பாளர் கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்லப்படுகின்றது.

முக்கியமாக நான் நினைக்கின்றேன் ஈ பி ஆர் எல் தரப்பின் தலைவர் அந்த அணியை சார்ந்தவர்கள் மற்றும் இன்னுமொரு அணி மனோகணேசனை நிறுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார்கள்.

இந்தப் பின்னணியில் ஊடகங்கள் எம்மிடம் தொடர்ச்சியாக எங்களுடைய நிலைப்பாட்டை கேட்டிருக்கின்ற நிலையில் நாங்கள் இது தொடர்பாக ஒரு சில கருத்துக்களை பகிரங்கப்படுத்த விரும்புகின்றோம்.

முதலாவதாக இந்த ஜனாதிபதி தேர்தல் போட்டியிட்டு வெல்லக்கூடிய தரப்பு சிங்கள தரப்பு. அதில் நான் நினைக்கின்றேன் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

அந்த சிங்கள தரப்பு யாராக இருந்தாலும் கடந்த காலங்களில் தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வு சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கலாம் பொறுப்பு கூற சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கலாம் ஏன் தமிழ் மக்களுடைய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அல்லது பாதுகாப்பு சம்பந்தமின்மை தொடர்பான இன்று இருக்கக்கூடிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஊடாக வரக்கூடிய மோசமாக நிலையாக இருக்கலாம் அரசியல் கைதிகளினுடைய நிலையாக இருக்கலாம் எங்களுடைய சொந்த காணிகளை பறிக்கின்ற விடயங்களாக இருக்கலாம் தாயகத்தில் தொடர்ச்சியாக சிங்களமைப்படுத்துகின்ற வேலை திட்டங்களாக இருக்கலாம் இது அனைத்து சம்பந்தமாக அந்த சிங்கள தரப்பினரால் நிறுத்தக்கூடிய அனைத்து தரப்புகளும் தமிழ் மக்களின் பக்கமாக இருந்தது கிடையாது.

தீர்வு சம்பந்தப்பட்ட விடயத்தில் அனைவரும் ஒற்றைய ஆட்சியை வலியுறுத்துகின்ற நிலைப்பாட்டிலே தொடர்ச்சியாக இருக்கின்றனர். வெளிப்படையாகவே வந்து 13 ஆவது திருத்தத்தை வலியுறுத்துவதாக இருப்பதாக இருந்தாலும் சரி அல்லது ஒற்றைய ஆட்சிக்குள் மட்டும் தான் தீர்வு அல்லது இருக்கும் 13 ஆம் திருத்தத்தின் பெயரில் இருக்கின்ற விடயங்களில் கழித்து சொல்லுகின்ற விடயம் மட்டும்தான் இருக்கின்றது.

இவ்வாறான ஒரு சூழலில் தமிழ் மக்களினுடைய வாக்குகள் இந்த தரப்புக்கு போக முடியாது என்கின்ற ஒரு முடிவில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள் என்பது மிகத் தெளிவு.

சிங்கள தரப்பில் இனிமேலும் தொடர்ச்சியாக வாக்களித்து நாங்கள் ஏமாறக்கூடாது என்கின்ற ஒரு தெளிவான செய்தியை இந்த தேர்தலில் தமிழ் மக்கள் உலகத்திற்கு காட்ட வேண்டும் என்கின்ற உறுதியான நிலைப்பாட்டோடு இருக்கின்றனர்.

அந்த ஒரு பின்னணியில் தான் இன்று இந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்துகின்ற கதை ஒன்று திரும்பவும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

இதனுடைய உண்மையான நோக்கத்தினை நான் தெளிவாக பதிவு செய்ய விரும்புகின்றேன். அதில் ஒரு சிலர் மிகத் தெளிவாக வெளிப்படையாகவும் கூறி இருக்கின்றனர்.

ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தினால் முதல் வட்டத்தில் ஒரு சிங்கள வேட்பாளர் தேர்தலில் வெல்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும். இரண்டாம் வாக்கெடுப்பில் வேட்பாளர் தெரிவு செய்யலாம். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அவர்கள் பேரம் பேசுவதற்கு முன் வருவர். அப்போது நாங்கள் பேரம் பேசி ஒரு தரப்பினை ஆதரிப்பதற்கான நிலைப்பாட்டை எடுக்கலாம் என தெரிவித்தார்.

மலையக மக்களைக் கௌரவித்து இந்தியா வெளியிடும் முதல் முத்திரை

இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமது உரிமைகளை வென்றெடுக்கவும் கௌரவமானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கும், பல்வேறு போராட்டங்களையும் தியாகங்களையும் செய்துள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில், எமது மலையக மக்களுக்கான அங்கீகாரம் என்பது, இன்றைய சூழ்நிலையில் மாபெரும் தேவையாகவே காணப்படுகின்றது.

இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆலோசனையின் பேரிலும் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை அவர்களின் ஏற்பாட்டிலும், நம் மலையக மக்களைக் கௌரவிக்கும் வகையில், இந்திய தபால்துறை அமைச்சினூடாக முத்திரையொன்று வெளியிடப்பட்டு, இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

புதுடில்லியில், இம்மாதம் 30 ஆம் திகதியன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வின்போது, பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நடா அவர்களால், கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களிடம் முதல் முத்திரை கையளிக்கப்படவுள்ளது.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்தமை தொடர்பான நூற்றுக்கணக்கான ஆவணங்கள், கோப்புகள் பரிசீலக்கப்பட்டு, உரிய வரலாற்றுச் சுவடுகளோடு இந்த முத்திரையை வெளியிடுவதற்கு, இந்தியத் தபால்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதன்மூலம், இலங்கைக்கு இடம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பிலான வரலாறு, இந்தியர்களுக்கு எளிதில் எடுத்துரைக்கப்படுகிறது.

இவ்வாறு வெளியிடப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்திரையை, உலகின் மிகப்பெரிய அஞ்சல் வலையமைப்பைப் கொண்டுள்ள இந்தியாவின் 155,015 க்கும் மேற்பட்ட தபால் நிலையங்களிலிருந்து, எதிர்வரும் 30 ஆம் திகதிக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், சீனா, ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, பூட்டான் உள்ளிட்ட 210க்கும் மேற்பட்ட நாடுகளில் 32,285,425க்கும் அதிகமான இந்திய வம்சாவளி மக்கள் வசித்து வருகின்றனர். இவ்வாறிருக்கையில், அந்த நாடுகளிலிருக்கும் மக்களுக்கு கிடைக்காத அங்கீகாரமொன்று, இலங்கையில் 200 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு கிடைத்திருப்பது, நம் மக்களுக்கு அளிக்கப்படும் மரியாதையாகவே பார்க்கப்படுகிறது.

உதவி, கடமை, பொறுப்புணர்வு என்ற எண்ணப்பாடுகளுக்கு அப்பால், நம் மக்களை நாம் தான் கௌரவிக்க வேண்டும், அவர்களுக்கு நாம் தான் அங்கீகாரமளிக்க வேண்டுமென்ற தொனியில், இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காக முத்திரையொன்று வெளியிடப்படுவது, இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் நட்புறவைப் பறைசாற்றி நிற்பதோடு, மலையக மக்களால் இலங்கைக்கும் கௌரவம் கிடைத்திருக்கிறது.

இவ்வாறானதொரு கௌரவிப்பு நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் முதல் முத்திரையைக் கையளிக்க நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.