பயணக் கட்டுப்பாட்டிற்கு மத்தியிலும் சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஓயாமல் தொடரும் அன்னதானப் பணி

அன்னதானக் கந்தன் எனப் போற்றிச் சிறப்பிக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயச் சூழலில் நீண்டகாலமாகப் பல்வேறு சமய, சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகம் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டிற்கு மத்தியிலும் அன்னதானப் பணியை ஓயாமல் தொடர்ந்து வருகிறது.

தற்போதைய நிலையிலும் பராமரிக்க யாருமின்றி, உற்றவர்களின் அன்பு இன்றி சந்நிதியான் ஆலயச் சூழலில் தங்கியுள்ள 50 இற்கும் மேற்பட்ட வயது முதிர்ந்தவர்கள் தினமும் சந்நிதியான் ஆச்சிரமத்திற்குச் சென்று தங்கள் பசிப் பிணியைப் போக்கி வருகின்றனர். அத்துடன் அயற் பகுதிகளிலிருந்தும் வறியநிலையிலுள்ள பலரும் தினமும் ஆச்சிரமத்தை நாடிச் சென்று தமது பசிப் பிணியைப் போக்கிவரும் நிலையில் அவர்களின் நன்மை கருதி இந்த இக்கட்டான சூழலிலும் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகம் அன்னதானப் பணியைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது.

அதுமாத்திரமல்லாமல் தற்போதைய அசாதாரண நிலையைக் கருத்திற் கொண்டு கொரோனாத் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், பயணக் கட்டுப்பாட்டால் வாழ்வாதாரத்தை இழந்த பல குடும்பங்களுக்கும் தொடர்ச்சியான உதவிகள் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் மேற்படி ஆச்சிரமத்தில் வைத்தும், வீடுகள் தேடிச் சென்றும் வழங்கப்பட்டு வருகிறது. அதுமாத்திரமன்றித் தற்போதைய சூழலில் ஆச்சிரமத்தை தேடிவரும் உதவிக் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

சந்நிதி முருகப் பெருமானின் திருவருளுடன் எளிமையின் உருவமாக விளங்கும் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகி மேற்படி பணிகளையெல்லாம் முன்னின்று நெறிப்படுத்தி வழிநடாத்தி வருகிறார்.

கொடிதிலும் கொடிது பசிப் பிணி. அந்தக் கொடிய பசிப் பிணியைப் போக்கும் வகையில் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகம் தொடர்ச்சியாக அன்னதானப் பணியை மேற்கொண்டு வருவதுடன் காலத்தின் தேவையறிந்து சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருவது பாராட்டுதற்குரியது.

அந்தவகையில் தற்போதைய பயணக் கட்டுப்பாட்டிற்கு மத்தியிலும் மேற்படி ஆச்சிரமத்தின் அன்னதானப் பணி மூலம் தினமும் பயன்பெற்று வரும் மூத்தோர்கள் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதுடன், சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்துக்குத் தமது நன்றிகளையும் வெளிப்படுத்தினர்.

Posted in Uncategorized

பயணத் தடை காலம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிப்பு

தற்போது நாட்டில் அமுலில் உள்ள பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரையில் பயணத் தடை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பயணத் தடை காலப்பகுதியினுள் அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட மேலும் சில சேவைகளுக்கு அனுமதியளிக்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

அதன்படி, ஆடைத் தொலிற்சாலைகள், முக்கிய கட்டுமான தளங்கள், வாரத் சந்தை, கரிம உர உற்பத்தி நடவடிக்கை மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு சுகாதார வழிகாட்டுதலின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வங்கி நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களை திறக்கும் திகதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

X-PRESS PEARL பேரழிவு: கோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை

X-PRESS PEARL கப்பலில் பாரிய எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளமையை செய்மதி படங்களில் காணக்கூடியதாக உள்ளதென பிரித்தானியாவின் Sky News செய்தி சேவை தெரிவித்துள்ளது.

எனினும் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

X-PRESS PEARL கப்பலில் தீ பற்றிய நாள் முதல் எண்ணெய் கசிவு அல்லது கழிவுகள் கலப்பதால் இலங்கை கடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ந்தும் கேள்வி எழுப்பி வருகின்றது.

இந்த கேள்விக்கு சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை உள்ளிட்ட அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை.

பிரித்தானியாவின் Sky News செய்திச் சேவை Planet Labs எனும் செய்மதி நிழற்பட சேவையிலிருந்து அண்மையில் பெற்றுக்கொண்ட சில நிழற்படங்களை பிரசுரித்து கப்பலில் பாரியளவில் எண்ணெய் கசிந்துள்ளதாக இன்று செய்தி வெளியிட்டது.

வௌ்ளி நிறத்தில் செய்மதி நிழற்படத்தில் காணப்படுகின்ற இந்த படலம் 100 மீட்டருக்கு மேல் பரவியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இலங்கையின் சமுத்திர சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அழிவு என Sky News தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எண்ணெய் கசிவு ஏற்படவில்லை. நிறம் மாறிய நீர் மற்றும் நீரில் ஏற்பட்டுள்ள சிறு மாற்றங்களே செய்மதி மூலம் அடையாளம் காணப்படுகின்றது. இலங்கை விமானப் படை பதிவு செய்துள்ள நிழற்படங்களை நோக்குமிடத்து, கப்பலை சூழ நீரின் நிறம் மாறியுள்ளதை அவதானிக்க முடிகிறது. கொள்கலன் கழுவிச் செல்லப்படுவதாலேயே நீரின் நிறம் மாறியுள்ளது என மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் சமுத்திரவியல் விஞ்ஞானி பேராசிரியர் சரித்த பட்டியாரச்சி தெரிவித்தார்.

இந்நிலையில், கப்பல் மூழ்குவதற்கு காரணமான விடயங்கள் தொடர்பிலும் கவனம் திரும்பியுள்ளது.

சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட X-PRESS PEARL கொள்கலன் போக்குவரத்து கப்பலை 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் சிங்கப்பூரின் X-Press Feeders நிறுவனம் சேவையில் இணைத்தது.

சிங்கப்பூர் கொடியுடன் கப்பல் சிங்கபூர், கொழும்பு, இந்தியா, கட்டார் மற்றும் துபாய் ஆகிய துறைமுகங்களுக்கு இடையே கொள்கலன் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டிருந்தது.

கப்பலில் நைட்ரிக் அமிலக் கசிவு ஏற்பட்டுள்ளதை கப்பல் பணியாளர்கள் மே மாதம் 11 ஆம் திகதி முதற்தடவையாக அறிந்தனர்.

அந்த சந்தர்ப்பத்தில் கப்பல் துபாயின் ஜபெல் அலியில் இருந்து கட்டாரின் ஹமாத் துறைமுகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

கசிவு ஏற்பட்ட கொள்கலனை இறக்கி மீள ஏற்றுவது தொடர்பில் கப்பல் பணியாளர்கள் ஹமாத் துறைமுகத்திடம் கோரிக்கை முன்வைத்தாலும் நோன்புப் பெருநாள் காரணமாக துறைமுகத்தில் மட்டுப்படுத்தப்பட்டளவு ஊழியர்கள் கடமையாற்றியதால் அந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என துறைமுக அதிகாரிகள் கப்பலுக்கு அறிவித்துள்ளனர்.

இந்தியாவின் ஹசீரா துறைமுகத்தில் அந்த கொள்கலனை இறக்குமாறு ஹமாட் துறைமுக பிரதிநிதிகள் கப்பலுக்கு அறிவித்திருந்ததாகவும் தெரியவருகிறது.

அந்த கப்பல் மே மாதம் 15 ஆம் திகதி ஹசீரா துறைமுகத்தை நெருங்கியது. இதன்போது அமிலக் கசிவு ஏற்பட்டுள்ள கொள்கலனை இறக்குவதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. நிழற்படங்களுடன் கூடிய விரிவான அறிக்கையுடன் ஹசீரா துறைமுக பிரதிநிதி அமிலக் கசிவு தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை ஆராய்ந்ததன் பின்னர் கொள்கலன் ஹசீரா துறைமுகத்தில் இறக்கப்பட்டால் துறைமுகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என துறைமுக பிரதிநிதி கப்பலுக்கும் கப்பல் நிறுவனத்திற்கும் அறிவித்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, மே மாதம் 15 ஆம் திகதி கப்பல் ஹசீரா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளதுடன், கொள்கலனில் இருந்து கசியும் இரசாயனத்தின் அளவு தொடர்பாக அவ்வப்போது கெப்டன் கப்பல் நிறுவனத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

மே மாதம் 15 ஆம் திகதி ஹசீரா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டதன் பின்னர் கெப்டன் அனுப்பிய அறிவிப்பில், மணித்தியாலத்திற்கு 500 மில்லி லிட்டருக்கும் ஒரு லிட்டருக்கும் இடையிலான நைட்ரிக் அமிலம் கொள்கலனில் இருந்து கசிவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே, இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக, பாதையை விட்டு விலகி கப்பல் ஆபிரிக்காவின் திசைக்கு செலுத்தப்பட்டு பின்னர் கொழும்பு துறைமுகத்தை நோக்கி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, கெப்டன் துறைமுக நிறுவனத்திற்கு வழங்கிய அறிவிப்பில் மணித்தியாலத்திற்கு 0.5 லிட்டர் அமிலம் கசிவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கப்பல் இலங்கையை அண்மித்த சந்தர்ப்பத்தில் கப்பலின் தாய் நிறுவன பிரதிநிதி இலங்கையிலுள்ள பிரதிநிதிக்கு கசிவு ஏற்பட்டுள்ள கொள்கலன் தொடர்பாக மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மே மாதம் 19 ஆம் திகதி காலை 10.37-க்கு கப்பலின் கெப்டன் இலங்கையிலுள்ள பிரதிநிதிக்கு பிரதியிட்டு தாய் நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், பிரச்சினைக்குரிய கொள்கலனை கொழும்பு துறைமுகத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என அறிவித்திருந்தமை தெரியவந்துள்ளது.

அதே நாள் மாலை 4.45-க்கு கப்பலின் கெப்டன், அமிலக் கசிவு ஏற்பட்டுள்ள கொள்கலன் தொடர்பிலான பிரச்சினை குறித்து பரிமாறிய மின்னஞ்சல் தகவல்கள் அடங்கிய வலையமைப்பில் உள்நாட்டு முகவரையும் இணைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

ஹார்பர் மாஸ்டர் அலுவலகம் மூடப்பட்டுள்ளதால், மறுநாள் காலை வேளையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பதாக 19 ஆம் திகதி மாலை 4.57-க்கு கப்பலின் உள்நாட்டு பிரதிநிதி அதற்கு பதிலளித்துள்ளார்.

அன்றைய தினம் நள்ளிரவு வேளையில் கப்பல் கொழும்பு வெளிப்புற துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டதை அடுத்து சில மணித்தியாலங்களில், அதாவது 20 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் கப்பலிருந்து புகை வெளியேறுவதாக கெப்டன் துறைமுகத்திற்கு ரேடியோ செய்தியை அனுப்பியுள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை அதிகாரிகள் கூறும் வகையில் கப்பலின் பிரச்சினை தொடர்பபாக கொழும்பு துறைமுக ஹார்பர் மாஸ்டர், 20 ஆம் திகதி முற்பகல் 10.19-க்கே மின்னஞ்சல் ஊடாக அறிந்துள்ளார்.

மின்னஞ்சல் ஊடாக இலங்கை பிரதிநிதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், ரேடியோ தகவல் ஊடாக துறைமுகம் அறிந்திருந்தும் கப்பலின் அழிவை குறைத்துக்கொள்வதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் இருக்கவில்லையா?

இது தொடர்பாக CID-யினர் விசாரணை நடத்துவதுடன் அவர்கள் அவ்வப்போது நீதிமன்றத்திற்கும் அறிக்கையிடுகின்றனர்.

கப்பலில் ஏற்பட்ட தீயினால் சமுத்திர சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக நட்டஈடு பெறுவதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கை இன்னமும் சிக்கலானது.

கப்பலின் உரிமையாளர்களான X-Press Feeders நிறுவனம், சர்வதேச எரிபொருள் போக்குவரத்து கப்பல் உரிமையாளர்களின் சங்கம் மற்றும் OSR லிமிட்டட் ஆகிய நிறுவனங்களையும் இலங்கை அதிகாரிகளுடன் இணைத்து பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்காக நியமித்துள்ளது.

இந்த நியமனத்தை இலங்கை அதிகாரிகளின்றி சிங்கப்பூர் நிறுவனமே மேற்கொண்டுள்ளது.

இலங்கையின் சமூத்திர சுற்றுச்சூழலை நிர்வகிப்பதற்கான சட்ட அதிகாரம் MEPA என்றழைக்கப்படுகின்ற சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கே உள்ளது.

அவ்வாறெனில், கப்பலினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பை மதிப்பீடு செய்வதற்காக சர்வதேச நிறுவனங்களை நியமிக்கும் உரிமையும் MEPA நிறுவனத்திற்கேயுள்ளது.

எனினும், இலங்கை சார்பாக இந்த நடவடிக்கைகள் தொடர்பிலான பொறுப்பு வேறு நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதை காண முடியவில்லை.

X-PRESS PEARL கப்பலின் உரிமையாளர்கள் இந்த விபத்து தொடர்பில் தமது பிரதிநிதிகளையே நியமிக்க சந்தர்ப்பம் வழங்கியதன் மூலம் இலங்கை கோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைப்பதற்கு நிகரான செயலை புரிகின்றது அல்லவா?

எரிபொருள் போக்குவரத்து கப்பல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் OSR லிமிட்டட் ஆகியன கப்பல் உரிமையாளர்கள் மற்றும் எரிபொருள் நிறுவனங்களின் தேவைகளுக்காகவே ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறெனில், இலங்கை கடலின் பாதுகாப்பு தொடர்பில் அவர்களுக்கு பொறுப்புள்ளதா என்ற சிக்கலும் எழுகிறது.

இந்த நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் கப்பல் நிறுவன உரிமையாளர்கள், காப்புறுதி நிறுனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவன உரிமையாளர்களே அங்கம் வகிக்கின்றனர்.

இதற்கமைய, X-PRESS PEARL கப்பலின் உரிமையாளர்களே இவர்களை நியமித்துள்ளமை கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமல்லவா?

இதனிடையே, சமூத்திர சுற்றுச்சூழல் தொடர்ந்தும் அழிவை சந்தித்து வருகிறது. இன்றும் சில பகுதிகளில் கப்பலில் இருந்து கடலில் கலந்த பொருட்கள் கரையொதுங்கின.

யார் எவ்வாறு பொறுப்புக் கூற வேண்டியிருந்தாலும், யார் எவ்வாறு அனுகூலங்களைப் பெற்றாலும் எமது பெறுமதி மிக்க இயற்கை வளமே அழிவடைகின்றது.

Posted in Uncategorized

நாட்டில் மேலும் 101 கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,011 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதன் அடிப்படையில் மேலும் 101 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இலங்கையில் ஒரே நாளில் உறுதி செய்யப்பட்ட அதிகளவான மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

வடக்கு கடலில் கடலுணவுகளின் இனப்பெருக்கத்தினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

வடக்கு கடலில் கடலுணவுகளின் இனப்பெருக்கத்தினை அதிகரிப்பதற்காக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலின் அடிப்படையில், இன்று(வெள்ளிக்கிழமை) விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடலுணவுகளின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் பிரதேசங்களை அடையாளங்கண்டு, குறித்த பிரதேசத்தில் கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளை இறக்கி விடுவதன் மூலம் மீன் இனங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடற்படையின் ஒத்துழைப்புடன் கடற்றொழில் திணைக்களத்தினால் வடக்கு கடலில் மேற்கொள்ளப்படும் குறித்த செயற்திட்டத்தின் முதற் கட்டத்தில் சுமார் 40 பேரூந்துகளை கடலில் இறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், முதலாவது தொகுதி பேரூந்துகளை ஏற்றிய கடற்படைக் கப்பல், அடையாளப்படுத்தப்பட்ட கடல் பகுதியை நோக்கிய தனது பயணத்தினை ஆரம்பித்துள்ளது.

Posted in Uncategorized

இலங்கையில் பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம்

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி ஐக்கிய ஒன்றிய நாடாளுமன்றில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்பெய்ன்-மொக்ரோ எல்லைப் பகுதி, ரஸ்யா மற்றும் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குளும், எதிராக 15 வாக்களும் அளிக்கப்பட்டதுடன் 40 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பிரசன்னமாகவில்லை.

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்வதாகவும் அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் சிவிலியன் சந்தேக நபர்களை கைது செய்யவும் தடுத்து வைக்கவும் கூடிய அதிக அதிகாரங்களை வழங்குவது குறித்து அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக சித்திரவகைள் இடம்பெறுவதாகவும் பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாகவும், பலவந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்து தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் இது சர்வதேச நியமங்களுக்கு அமைவானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு இலங்கைக்கு மீளவும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்கப்பட்டது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்தல், மனித உரிமை விவகாரங்கள் உள்ளிட்ட 27 சர்வதேச பிரகடனங்களை அமுல்படுத்தல் ஆகிய நிபந்தனைகளுக்கு உட்பட்டே இந்த சலுகை வழங்கப்பட்டது.

இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஓர் வழியாக இந்த சலுகைத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தீர்மானம் நிறைவேற்றிய உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

இலங்கைக்கு தற்காலிக அடிப்படையில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் தி;ட்டத்தை இடைநிறுத்தக் கூடிய சாத்தியங்கள் உண்டா என்பதனை உன்னிப்பாக மதிப்பீடு செய்யுமாறும் கோரியுள்ளனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வைகோ அவசர கடிதம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அவசர கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, வணக்கம்.

தெற்கு ஆசியாவில், இந்தியப் பெருங்கடலில், இந்தியாவின் ஆளுமையை நிலை நிறுத்துவதற்கு, தமிழ் ஈழம் அமைந்தாக வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கின்றது. அதற்கான சூழ்நிலைகளை, தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விழைகின்றேன்.

கடந்த காலங்களில், இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய நாடாக இலங்கை இருந்தது இல்லை. அண்டை நாடு என்கின்ற முறையில், இந்தியா இலங்கைக்குக் கூடுதல் முன்னுரிமை வழங்கினாலும் கூட, இக்கட்டான வேளைகளில், அவர்கள் இந்தியாவின் காலை வாரி விடுகின்றார்கள். தாங்கள் ஒரு சீனச் சார்பு நாடு என்பதை, அவர்கள் பலமுறை எடுத்துக் காட்டி இருக்கின்றார்கள்.

மகிந்த ராஜபக்ச, இலங்கைக் குடி அரசின் தலைவராகப் பொறுப்பு ஏற்பதற்கு, இந்தியா மறைமுக ஆதரவு அளித்தது. ஆட்சிப் பொறுப்பு ஏற்ற அவர், அம்பாந்தோட்டை துறைமுகத்தில், சீன நீர் மூழ்கிக் கப்பல் நுழைய ஒப்புதல் வழங்கினார். இந்தியப் பெருங்கடலில், முதன்முறையாக, சீன நீர் மூழ்கிக் கப்பல் நுழைந்தது. அவருக்கு அடுத்து ஆட்சிப் பொறுப்பு ஏற்ற மைத்திரிபால சிறிசேனா, மற்றொரு சீன நீர் மூழ்கிக் கப்பலை, அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய விட்டார்.

இலங்கைக்கு அளவுக்கு அதிகமான கடன் கொடுத்து, 99 ஆண்டுகள் குத்தகை என்ற பெயரில், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கைப்பற்றி விட்டது. இப்போது, ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சியில், இந்தியப் பெருங்கடலில் சீனமயமாக்கல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இலங்கை தலைநகர் கொழும்பில் ஒரு நிலப்பரப்பை, சீனாவுக்குக் கொடுத்து விட்டனர். இலங்கை நாடு முழுமையும், சீன உதவியுடன் நடைபெறுகின்ற கட்டுமானப் பணிகளில், ஐந்து இலட்சம் சீனத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றார்கள். அவர்களுள் ஒரு பகுதியினர், சீன உளவுத்துறையினர் என்பதில் ஐயம் இல்லை. அவர்களுக்காக, சீன மொழிப் பள்ளிகள், சீனக் கலை அமைப்புகள், சீனப் பயிற்சியாளர்களின் கராத்தே வகுப்புகள், இலங்கையில் தொடங்கப்பட்டுள்ளன.

தெருக்கள், தொடர் வண்டி நிலையங்கள், விடுதிகளின் பெயர்ப் பலகைகளில், சீன மொழி எழுத்துகள் எழுதப்பட்டு வருகின்றன. தமிழ் ஈழப் பகுதிகளில், அனலைத் தீவு, நெடுந்தீவு, நயினா தீவு ஆகிய பகுதிகளில் அமைய இருக்கின்ற சூரிய மின்விசைத் திட்டமும், சீனாவுக்குத் தரப்பட இருக்கின்றது.

வத்தலான் என்னும் சிற்றூரில், சிறுவர்களுக்கான பூங்காவை சீன முதலீட்டாளர்கள் வடிவமைத்து இருக்கின்றார்கள். பூங்காவின் நுழைவாயிலில், சீனர்களின் நெடும்பாம்பு (டிராகன்) சின்னத்தை வரைந்து இருக்கின்றார்கள்.

எனவே, இலங்கை நாடு சீனாவின் தளமாக மாறி வருகின்றது. இந்த நிலையில், இந்திய எல்லையை ஒட்டி இருக்கின்ற, தமிழ் ஈழம் மட்டுமே, இந்தியாவின் தளமாக இருக்க முடியும். கடந்த காலங்களில், இலங்கை சீனாவின் பக்கம் சாய்ந்த வேளைகளில், இலங்கையின் ஆட்சித்தலைமையை மாற்றும் அணுகுமுறையை இந்தியா கடைப்பிடித்தது.

ஆனால், இனி அந்த அணுகுமுறை வெற்றி பெறாது. லண்டன் கிங்ஸ் கல்லூரியில், அனைத்து நாடுகள் உறவு மற்றும் பாதுகாப்பு ஆய்வுத்துறைப் பேராசிரியராகப் பணிபுரிகின்ற, ஆற்றல்மிக்க எழுத்தாளர் ஹர்ஷ் வி. பந்த் (Harsh V. Pant), 29.01.2015 ஆம் நாள், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே தருகின்றேன்.

Indian policymakers will be mistaken if they think a change of regime in Colombo, will lead to a dampening of Sino-Sri Lanka ties. China’s role is now firmly embedded in Sri Lanka-economically as well as geopolitically.

India will have to up it’s game, if it wants to retain it’s leverage in Colombo. -Harsh V. Pant, Professor in International Relations, Department of Defence Studies, King’s college, London.

இந்திய கொள்கை வகுப்பாளர்கள், இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நினைத்தால், தவறாக முடியும்; அது சீன இலங்கை உறவுகளைச் சீர்குலைக்கும்; பொருளாதாரம் மற்றும் புவிசார் அடிப்படையில், இலங்கையில் இப்போது சீனாவின் பங்கு உறுதியாகி இருக்கின்றது.

கொழும்பில் தன் செல்வாக்கை நிலைநிறுத்த இந்தியா விரும்பினால், ஒரு விளையாட்டு ஆடித்தான் ஆக வேண்டும். எனவே, தமிழ் ஈழத்தைக் காக்கவும், ஈழத்தமிழர்களின் இறையாண்மையை நிலைநாட்டவும் இந்தியா தவறினால், இந்தியப் பெருங்கடலில் ஆளுமையை இழக்க நேரிடும்.

சீனாவுக்கு இடம் தருவதாக ஆகி விடும். அவ்வாறு, தமிழ் ஈழத்திற்குத் துணையாக நின்றால், சிங்கள இலங்கை அரசு, சீனாவின் முழு ஆதரவு நாடு ஆகி விடும் என்பது தவறான கணிப்பு ஆகும். தமிழ் ஈழம் அமைந்தால், இலங்கை வலு இழந்து விடும்.

இந்தியாவைப் பகைத்துக் கொள்ள மாட்டார்கள். இலங்கை சீன ஆதரவு நாடு ஆகிவிடும் என்று, நமது அயல் உறவுக் கொள்கை வகுப்பாளர்கள் சிலர் கருதுவது, கால விரயம் ஆகும்.இப்போதும் கூட, இலங்கை, சீன ஆதரவு நாடு தான்.

இலங்கையில் சீனாவின் பிடி மேலும்மேலும் இறுக வாய்ப்பு அளிப்பது இந்தியாவுக்குக் கேடாகவே முடியும். எனவே, இந்தியப் பெருங்கடலில்,இந்தியாவின் உறுதிமிக்க ஆளுமை, அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரத் தளமாக, இறையாண்மை உள்ள தமிழ் ஈழம் தான் இருக்க முடியும். 2021 மே 18 ஆம் நாள், அமெரிக்க நாடாளுமன்றத்தின் (House of Representatives) 117 ஆவது கூட்டத்தொடரின் முதலாவது அமர்வில், நிறைவேற்றப்பட்ட 413 ஆவது தீர்மானம், ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை விரிவாகப் பட்டியல் இட்டு, உலக நாடுகள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருக்கின்றது.

அந்த தீர்மானத்தின் சில பகுதிகளை, இங்கே மேற்கோள் காட்ட விழைகின்றேன். இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் இறந்தனர். காணாமல் போயினர்,புலம் பெயர்ந்து சென்றனர்,ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு, 2019 ஆம் ஆண்டு, ராஜபக்ச அரசு பொறுப்பு ஏற்றதை அடுத்து, மனித உரிமைகள் மன்றத்தின் 30-1 தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகிக் கொண்டது.

தமிழர்களின் மரபுவழித் தாயகமான, அந்த நாட்டின் வடகிழக்கு நிலப்பரப்பில், போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இடங்களில், படைகள் குவிக்கப்பட்டு, இரண்டு பொதுமக்களுக்கு ஒரு படை வீரர் என்ற வகையில் நிற்கின்றனர்.

இலங்கையின் வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தில், ஆயுதப் போராட்டத்தின்போது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை கோரியும், வடக்கு-கிழக்கு நிலப்பரப்பில், ஐ.நா.மன்றத்தின் மேற்பார்வையில், பொது வாக்குப்பதிவு நடத்தி நிலையான தீர்வு காணக் கோருகின்றது.

இலங்கை அரசு, பல ஆண்டுகளாக, மாகாண சபைத் தேர்தல்களை நடத்தவில்லை; அதனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டும் அன்றி, ஒட்டுமொத்தமாக இலங்கை நாடு முழுமையும், ஊர் ஆட்சி மன்றங்களைத் தேர்ந்து எடுக்கின்ற உரிமை, மக்களுக்கு மறுக்கப்பட்டு இருக்கின்றது.

2021 ஆம் ஆண்டு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, கடந்த ஆண்டுகளில்,இலங்கை அரசு, (1) போர்க்குற்றங்கள் புரிந்தவர்களை உயர் பதவிகளில் அமர்த்தி இருக்கின்றது. (2) போர்க்குற்றம் இழைத்தவர் என அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு, பொது மன்னிப்பு வழங்கி இருக்கின்றது. (3) மக்கள் ஆட்சியை வலுப்படுத்துகின்ற சீர்திருத்த நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு, அனைத்து அதிகாரங்களையும், குடிஅரசின் தலைவரிடம் குவித்து இருக்கின்றது. (7) ஆட்சியாளர்களை எதிர்ப்பவர்களைக் கடத்துவதற்கும், துன்புறுத்துவதற்கும் பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்துகின்றது.

மேலும், போர்க்குற்றம் இழைத்தவர்கள் எனக் குற்றம் சாட்டப்படுவோரை, நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தவர்களுக்கு எதிரான சான்றுகளைத் திரட்டுகின்ற முயற்சிகளுக்கும், அரசு தடைகளை ஏற்படுத்துகின்றது.

சட்டத்தைப் புறந்தள்ளி, கைது செய்கின்றது. மேலும், வழக்கு ஒழிந்துபோன, மிகக் கடுமையான, வன்முறையாளர்களை அடக்குகின்ற சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பன்னாட்டு நடைமுறைகளுக்கு எதிரான, திரும்பப் பெறுவதாக அரசே பலமுறை உறுதிமொழி அளித்தபடி திரும்பப் பெறாத, அடக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்துகின்றனர்.

மேலும், 2021 ஜனவரி மாதம், ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையர் மிச்சேல் பேச்சலெட் குறிப்பிட்டபடி, தேசிய மட்டத்தில், பொறுப்பு உணர்வை முன்னெடுத்துச் செல்ல, அரசாங்கத்தின் இயலாமை மற்றும் விருப்பம் இன்மையைக் கருத்தில் கொண்டு, பன்னாட்டுக் குற்றங்களுக்கான நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பன்னாட்டு அளவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய வேளை இது.

ஆயுதப் போரின் போதும், அதைத் தொடர்ந்தும், காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு, தங்களது அன்புக்கு உரியவர்கள் இருக்கின்ற இடம் குறித்து, இதுவரை எந்தத் தகவலும் இல்லை; போரின் முடிவில், அரசாங்கத்திடம் சரண் அடைந்தவர்கள் குறித்தும், இதுவரை எந்தப் பட்டியலும் வெளியிடப்படவில்லை.

எனவே, இந்த அவை (House of Representatives) நிறைவேற்றும் தீர்மானம்: 1. இலங்கையில் ஆயுதப் போர் முடிந்த 12 ஆம் ஆண்டு நினைவு நாளில், போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது.

2. இறந்தவர்களின் நினைவை மதித்துப் போற்றுகின்றது; நல்லிணக்கம், மறுவாழ்வு, இழப்பு ஈடு மற்றும் சீர்திருத்தங்களுக்கான தேடலில், இலங்கையில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் உறுதுணையாக இருக்க உறுதி பூணுகின்றது.

3. மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் முன்னுரிமை அளித்த, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மன்றத்தைப் பாராட்டுகின்றது; இந்த நடவடிக்கைகளில், இலங்கை அரசு தலையிடக் கூடாது.

4. இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களிலும் நீதிக்காகப் போராடுகின்ற வழக்குஉரைஞர்கள், அரசாங்க பாதுகாப்புப் படையினரால் அச்சுறுத்தப்பட்டு வருகின்ற, காணாமல் போன தமிழர்களின் குடும்பத்தினரின் துணிச்சலைப் பாராட்டுகின்றது.

5. இலங்கையில் வரலாற்றுக் காலந்தொட்டு ஒடுக்கப்பட்டு வருகின்ற, வடக்கு, கிழக்கு நிலப்பரப்பில் வாழ்கின் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும்படி, பன்னாட்டு சமூகத்தை வலியுறுத்துகின்றது.

இன மோதல்களுக்கு வழிவகுத்த அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முழுமையான அரசியல் தீர்வை நோக்கி செயல்பட வேண்டும்.

7. இலங்கையில் போரின்போது நிகழ்ந்த கடுமையான குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறலுக்கான, நம்பகமான மற்றும் பயனுள்ள, பன்னாட்டுப் பொறிமுறையை நிறுவ, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை, பாதுகாப்பு சபை, மனித உரிமைகள் மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுமாறு, அமெரிக்காவை வலியுறுத்துகின்றது.

இவ்வாறு, அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது. எனவே, உலக வரைபடத்தில், இஸ்ரேல் என்ற நாட்டை யூதர்கள் ஆக்கியது போல், வங்கதேசம் என்ற நாட்டை இந்தியா ஆக்கியது போல், தமிழ் ஈழம் என்ற நாட்டை அமைப்பதற்கு, ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில், உலகம் முழுமையும் பல நாடுகளில் பரவி வாழ்கின்ற ஈழத்தமிழர்களிடம் பொது வாக்குப்பதிவு நடத்துவதற்கான முயற்சிகளை, இந்திய ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என, வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

பயணக்கட்டுப்பாடு 14ஆம் திகதி தளர்த்தப்படுவதாக அறிவிப்பு!

தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டு ஜூன் 14 ஆம் திகதியின் பின்னர் தொடர்வதற்கு எந்த தீர்மானமும் இல்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவிவரும் பொய்யான செய்தி தொடர்பில் பதில் அளித்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது அமுலில் இருக்கும் பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘சஜித் தான் எனது தலைவன்: ஆனால், நான்தான் சூழ்ச்சிக்காரன்’

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாஸவை, எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவிக்கு நியமிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும், அதில், ஐக்கிய மக்கள் மக்கள் சக்தியைச் சேர்ந்த பலரும் அங்கம் வகிக்கவுள்ளனர் எனவும் தகவல்கள் கசிந்திருந்தன. இது அரசியல் அரங்கில் பெரிதும் பேசப்படும் கருப்பொருளாக மாறிவிட்டது.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ஹரின் பெர்ணான்டோ எம்.பி, திடீரென ஊடகங்களிடம் சிக்கிக்கொண்டார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கீழ் கண்டவாறு பதிலளித்தார்.

கேள்வி: எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பங்கேற்காத கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவே நியமிக்கப்படுவார் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஏன்?

பதில்: “அத்தீர்மானத்தை நிறைவேற்றியவர்களிடம்தான் கேட்கவேண்டும். உண்மையிலே​யே அது முட்டாள்தனமான செயற்பாடாகும்” என்றார்.

“எனது தலைவர் சஜித் பிரேமதாஸ, அவர்தான் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை மீண்டுமொரு தடவை உறுதிப்படுத்துவதற்கான விசேடமான காரணம் என்ன? என்பதை அதனை செய்தவர்களிடம்தான் கேட்கவேண்டும். நான் இருந்திருந்தால் கேட்டிருப்பேன். நான், இரண்டு மாதங்கள் விடுமுறையில் இருக்கின்றேன்” என்றார்.

“தேவையில்லாத பயத்தை தோற்றுவிப்பதற்கு யாருக்கு பைத்தியம் பிடித்திருந்தது என்பதை பார்க்கவேண்டும்” என்றார்.

கேள்வி: ரணிலுக்கு இன்னும் பயமிருக்கிறதா? ​ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பலர் விலகிச்சென்றுவிடுவர் என நீங்கள் நினைக்கின்றீர்களா?

பதில்: அரசியல் நீண்ட அனுபவம் கொண்டவர், மூளைச்சாலியான ரணில் விக்கிரமசிங்கவை, எவ்விடத்தில் கண்டாலும் அவருடன் உரையாடுவேன். ஐ.ம.சத்தியை உருவாக்கியுள்ளோம். ஆனால், அங்கிங்குமிங்கும் பாயும் பைத்தியங்கள் ஐ.ம.சக்திக்குள்ளும் இருக்கக்கூடும் என்றார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் ​ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். அதனூடாகவே ஆட்சியை கவிழ்க்கமுடியும். அவ்வாறில்லாது, அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது.

ஐக்கிய தேசியக் கட்சி தேவையில்லையென ஐக்கிய மக்கள் சக்தி நினைக்குமாயின் அது முட்டாள்தனமானது. அதேபோல, ஐக்கிய மக்கள் சக்தி தேவையில்லையென ஐக்கிய தேசியக் கட்சியும் நினைத்தால் அதுவும் முட்டாள் தனமானது.

இந்த அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது. அதனை உறுதிசெய்யவேண்டுமாயின் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும். மக்களுக்கு ஏதாவது செய்வேண்டுமாயின் புது நோக்கம் இருக்கவேண்டும் என்றார்.

கேள்வி: எதிர்க்கட்சி ஒன்றுமே செய்யவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பதில்: “ஒன்றரை மாதங்கள் நான் இருக்கவில்லைதானே அதுதான்” என்றார்.

கேள்வி: நீங்கள் உட்பட, 15 பேர் ரணிலுடன் செல்லவிருப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளாரே?

பதில்: இல்லை, அது முற்றிலும் பொய்யானது. ரணிலை நான் மதிப்பவன், அரசியலுக்கு அழைத்தார், எம்.பியாக்கினார். மாகாண சபை முதலமைச்சராக்கினார். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக்கினார். அவருடைய காலத்தில்தான் இவையெல்லாம் நடந்தன. அவருடன் எந்தவொரு பிரச்சினையும் எனக்கில்லை என்றார்.

அவரை காணும் போதெல்லாம் கதைப்பேன், அவரை மதிப்பேன். அப்படியாக இருக்கும்போது, அரசியல் என்றவகையில், சஜித் பிரேமதாஸவுக்கு நான், எதிரானவன் அல்லன் என்றார்.

கேள்வி: உங்கள் கட்சிக்குள் சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றனவா?

பதில்: “சூழ்ச்சிகளை செய்வதாக இருந்தால், அதனை நான்தான் செய்வேன், அவ்வாறான சூழ்ச்சிகள் எவையும் இடம்பெறாது” என்றார்.

முடக்கத்தால் வட-கிழக்கில் வருமானம் இழப்பு: முகவர்களின் மிரட்டல்களால் பலர் பாதிப்பு! ரெலோ மதுசுதன்

முடக்க காலங்களில் வருமானத்தை இழந்திருக்கும் நிலையில் லீசிங் கம்பனிகள் கட்டுப் பணத்தினைச் செலுத்த நிர்ப்பந்திப்பதாகவும், நுண்நிதி நிறுவனங்கள், வங்கிகள் கடன் தவணைப் பணத்தைச் செலுத்த நிர்ப்பந்திப்பதாகவும் பலர் முறைப்பாடளிக்கின்றனர். வடக்கு- கிழக்கில் பெரும் பிரச்சினையாக இது உருவெடுத்துள்ளது என நல்லூர் பிரதேச சபை உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நல்லூர் தொகுதி அமைப்பாளருமான குமாரசாமி மதுசுதன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் இன்று வியாழக்கிழமை(10) அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாகனங்களையும், சுயதொழில்களுக்காக கடன்,நுண்கடன் பெற்றவர்களுக்கும் அவர்களின் வருமானம் இல்லாத நிலையில் இந் நிறுவன முகவர்களின் மிரட்டல்களால் பலரும் தற்கொலை செய்து வருகின்றனர்.

பல முன்னாள் போராளிகளுக்கும் இதே நிலை தான். ஆகவே, அரசும்,சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பயணக் கட்டுப்பாட்டுக் காலத்தில் இவ்வாறான நிதி மீள் அறவீடுகளுக்கு விலக்களிப்புச் செய்தலை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு லீசிங், கடன் பெற்றோர் எழுத்து மூலம் உங்கள் நிலைமையை வெளிப்படுத்தி உங்கள் நிறுவனம் அல்லது வங்கியிடம் அறிவியுங்கள் .அது ஆவணமாகும். அதையும் மீறித் தொந்தரவு புரிந்தால் நீங்கள் நேரடியாக முறைப்பாடளிக்கலாம். எமது சட்டத்தரணிகள் இவ் விடயத்தில் அதிக கரிசனை கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார் .