Telo Sri Anna 2021

தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு எழுச்சி

நாளைய தினம் 06/05/2021 காலை 10.00 மணிக்கு மறைந்த எம் தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அவரை சுட்டு படுகொலை செய்த இடமான கோண்டாவில் அன்னங்கை தோட்ட வெளியில் நடைபெறும்.

நிகழ்வுகள்,

01,மறைந்த தலைவர்,போராளிகள்,பொதுமக்கள் ஆகியோருக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி,
02,பொதுச்சுடர் ஏற்றுதல்,
03,தலைவரின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்தல்,
04,திருவுருவ படத்திற்கு மலர் தூபி அஞ்சலி செலுத்துதல்.

நாட்டின் கோவிட் சூழ்நிலை காரணமாக மாவட்ட செயலகங்களில் 06-05-2021 அன்று எளிமையான முறையில் நடைபெறும்.

 

 

 

தமிழ் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் சமல் ராஜபக்சவுடன் சந்திப்பு

தமிழ் தேசிய கட்சிகளின் ரெலோ, தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் புளட் ஆகிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் அமைச்சர் சமல்ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன் போது பல்வேறு விடயங்களுக்கு அமைச்சர் சாதகமான பதில்களை வழங்கியுள்ளதுடன் அடுத்த கட்டமாக மீண்டும் ஒரு சந்திப்பை நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

1.கல்முனை பிரதேச செயலகத்தை தரமிறக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க இணக்கம் தெரிவித்தார்.

2. முல்லை கரைத்துறைப்பற்றில் 08 கிராம சேவையார் பிரிவுகளதும் காணி நிர்வாகத்தினை மகாவலி அதிகார சபை பொறுப்பேற்பதனை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக இணங்கினார்.

இது தொடர்பில் குழு அமைத்து ஆராயும் வரை எந்த நடவடிக்கையும் மேலதிகமாக நடைபெறாதனவும் இணங்கினார்.

3. மாதுறு ஓயா இடது கரை நீர்ப்பாசன நீரை வாகனேரி குளத்திற்கு கொண்டு செல்லும் வகையில் விளானோடையில் தடுப்பு அணை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் இணங்கினார்.

4.மகாவலி நீர் கோடைகாலத்தில் மாவில் பகுதியில் மறிக்கப்பட்டு கோடைகால விவசாயத்திற்காக மூதூர் பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

இதனால் மாவில் பகுதியிலிருந்து கடற்கரை வரையான 12KM நீளமான பகுதியில் மாகாவலி ஆற்றின் இரு கரைகளிலும் ஏற்று நீர்ப்பாசனம் மூலம் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் மார்ச் முதல் செப்ரெம்பர் வரை நீர் இன்மையால் நீர்ப்பாசனம் செய்ய முடியாத நிலையில் பயிர்கள் அழிவடைகிறது.

அதனால் மாதம் இருமுறை மாவில் பகுதியிலிருந்து நீரை திறந்து ஏற்று நீர்ப்பாசன விவசாயிகளுக்கு வசதி செய்யுமாறு கோரனோம் அதற்கும் இணங்கினார்.

5.அபிவிருத்தி உத்தியோகத்தர்களது இடமாற்ற விடயம் பற்றிப் பேசுவதற்கு இம்மாத இறுதியில் நேரம் ஒதுக்குவதாக தெரிவித்தார்.

Posted in Uncategorized

பிரதமரின் கூட்டத்தை புறக்கணித்த பங்காளிக்கட்சிகள்

அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளின் பல தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வாசுதேவ நானாயக்காரா, உதய கம்மன்பிலா, பேராசிரியர் திஸ்ஸா விட்டாரணா, டாக்டர் ஜி.வீரசிங்க, விமல்வீரவன்சா ஏ.எல்.எம் அதாவுல்லா, டிரான் அலெஸ், அசங்கா நவரத்னே, அதுரலியே ரத்தனா தேரா் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மாகாண சபைத் தேர்தல் முறை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பிரதமரின் தலைமையில் கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாக அறியப்படுகிறது.

மீண்டும் கூட்டம் எதிர்வரும் 11ம் திகதி அலரிமாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலங்கு வானூர்திகளை கொள்வனவு செய்யவதை கை விட்டு கொரோனாவை பாருங்கள்: சஜித்

நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்து, பல இடங்களில் சிகிச்சை பெறுவது கடினமாக இருக்கின்ற சூழ்நிலையில் அரசாங்கம் ரஷ்யாவிடம் உலங்கு வானூர்திகளை கொள்வனவு செய்ய எடுக்கும் முயற்சி தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.

மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் ஹெலிகப்டர் கொள்வனவு தற்போது அவசியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது போன்ற சூழ்நிலையில் அரசாங்கம் பணத்தை விரயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான விவாதம் ஒத்திவைப்பு

கொழும்பு துறைமுக நகர விசேட வர்த்தக ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு கிடைக்காமையால், நாளை (05) நடைபெறவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த விடயத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உறுதிப்படுத்தினார்.

Posted in Uncategorized

O/L, A/L பரீட்சைகளில் மாற்றம் தொடர்பான விஷேட அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டு பரீட்சைகளையும் நடத்தும் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் இவ்வாண்டு அமுல்படுத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் மாதம் சாதாரண தர பரீட்சையையும், டிசம்பரில் உயர்தர பரீட்சையும் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

இருப்பினும் இந்த மாற்றம் 2022 ஆண்டு அல்லது 2023 ஆம் ஆண்டே அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 10 மற்றும் 11 ஆம் தரங்களுக்கான பாடத்திட்டத்தை ஒரு வருடமும் 09 மாதங்களுக்கு மட்டுப்படுத்தி மறுசீரமைக்க கல்வி அமைச்சர் முன்மொழிந்த யோசனைக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

அதன்படி, அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு எடுக்கும் காலத்தை குறைப்பதன் மூலம் குறுகிய காலத்தில் மாணவர்கள் முதல் பட்டப்படிப்பைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தமிழர் இதயபூமியை மகாவலி எல் வலயம் சிங்கள குடியேற்றங்களுக்கு உட்படுத்தி அபகரிக்க முயற்சி – ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்

தமிழர் இதயபூமியை மகாவலி எல் வலயம் அபகரிக்க முயற்சி என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயத்தின் மூலம் கபளீகரம் செய்ய முயற்சிக்கும் மத்திய அரசாங்கத்தின் முயற்சிக்கு வடக்கு மாகாண ஆளுநர் நிர்வாகம் உடன்படக் கூடாது அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த பிரதேசங்களை சிங்கள குடியேற்றங்களுக்கு உட்படுத்தி தமிழர் தாயக கோட்பாட்டை உடைக்கும் பேரினவாத அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தடுத்து நிறுத்த தொடர்ந்து தமிழ் மக்கள் போராடி வரும் நிலையில் வடக்கு கிழக்கு இணைப்பை நிலத் தொடர்பு ரீதியாக இல்லாது ஒழிக்கும் இந்த மகாவலி எல் வலயம் திட்டமிட்ட ஒரு இனவழிப்பு என்பதை தெட்டத் தெளிவாக காட்டுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் தமிழர்களின் இதய பூமி அதனை அபகரிக்கும் பாரிய திட்டம் முதற்கட்டமாக மணலாறு பிரதேசம் வெலிஓயா என்ற பெயர்மாற்று சிங்கள குடியேற்றத்துடன் ஆரம்பமாகி தென்னமரவடி,கொக்குளாய்,கொக்குத் தொடுவாய்,கருநாட்டுக்கேணி,செம்மலை தண்ணீர் ஊற்று என பெரும் நிலப் பிரதேசங்களை உள்ளடக்கி 16 அதிகமான கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை கொண்ட ஒரு சிங்கள பிரதேச செயலகப் பிரிவை குறிவைத்து நகர்த்தப்படுகின்றது.

இப்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் 1984 ஆண்டின் பின்னர் யுத்தத்தினால் இடம்பெயர ஆரம்பித்து 2010 வரை அகதிகளாக அவலங்களை அனுபவித்து மிகுந்த வறுமையில் தற்போது குடியேறி வாழும் போது போதிய உதவிகள் இன்றி துன்படுகின்றனர்.

வடக்கு மாகாணத்தில் 75000 இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பு இல்லாமல் பெரும் துயரங்களை அனுபவிக்கின்றனர்.

அவர்களுக்கான சுய தொழில் முயற்சிக்கு காணிகள் வழங்குவதன் மூலம் தொழில் வாய்ப்பு பிரச்சினைக்கு தீர்வு வழங்கலாம் அத்துடன் தற்சார்புப் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.

இதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நிர்வாகம் அரசாங்கத்திடம் திட்டங்களை முன் மொழிந்து இளைய தலைமுறையின் நல்வாழ்விற்கு உதவி புரிய வேண்டும்.

ஏற்கனவே புதிய தொழில் முயற்சியாளர்களுக்கு காணி வழங்க விண்ணப்பங்கள் கோரப்பட்டு விண்ணப்பித்தோர் எதிர்பார்த்து காத்திருக்கும் போது அவர்களுக்கான தீர்வையாவது இதன் ஊடாக தீர்க்க நடவடிக்கை எடுங்கள்.

வடக்கு மாகாண ஆளுநர் நிர்வாகம் நியாயமற்ற குடியேற்ற திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்காது தமிழர்களின் இருப்பை பாதுகாக்க நீதியாக நடந்து கொள்ள வேண்டும்.

Posted in Uncategorized

ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளை விசாரித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துங்கள் – சர்வதேச மன்னிப்புச்சபை

ஊடகங்களின் கருத்துச்சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

மக்களின் கருத்துச்சுதந்திரத்தை, குறிப்பாக ஊடகங்களின் கருத்துச்சுதந்திரத்தை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அப்பதிவில் சுட்டிக்காட்டியிருக்கும் மன்னிப்புச்சபை, ஊடகத்துறையில் பணியாற்றுவோருக்கான பாதுகாப்பான சூழலை உறுதிசெய்வதன் மூலம் அவர்கள் எவ்வித அச்சமும் இழப்புமின்றி உண்மையான செய்திகளை அல்லது தகவல்களை வெளியிடுவதற்கு அல்லது பேசுவதற்கு இடமளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் அண்மைய வருடங்களில் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டுவரும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் மிகவும் கவலைக்குரியவையாகும் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித பக்கச்சார்புமின்றி முழுமையாக விசாரணை மேற்கொள்வதுடன், அவற்றுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும் என்றும் மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கையில் சட்டத்தின் ஆட்சியும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையும் வலுவிழக்கக்கூடும் எச்சரிக்கிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதால் சட்டத்தின் ஆட்சியும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையும் மேலும் வலுவிழக்கக்கூடும்.

அதேவேளை மனித உரிமை மீறல் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட அதிகாரிகளை விடுவிப்பதற்கு ஏதுவான வகையில் செயற்படுவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியிருக்கிறது.

இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

மனித உரிமை மீறல் சம்பவங்களில் தொடர்புபட்ட அதிகாரிகளை விடுவிப்பதற்கும் அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் அதிகாரிகளைத் தண்டிப்பதற்கும் ஏற்புடைய வகையிலான தீர்மானத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும்.

கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்படுவதென்பது ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் வலுவிழந்துள்ள நீதிமன்றத்தின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றை மேலும் தொய்வடைச்செய்யும்.

இந்தத் தீர்மானமானது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறுவப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

இது மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளை முடக்குவதுடன் ஊழல்மோசடிகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதிலிருந்து ராஜபக்ஷ குடும்பத்தையும் ஏனையோரையும் பாதுகாக்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயற்பாடுகள் அவரது குடும்பத்தினருக்கு உதவும் வகையிலேயே அமைந்துள்ளன. ராஜபக்ஷ, தான் தொடர்புபட்டிருப்பது உள்ளடங்கலாக பல்வேறு மோசமான குற்றங்களை மறைப்பதற்காக முன்னெடுக்கக்கூடிய எந்தவொரு முயற்சியையும் அவர் விட்டுவைக்கவில்லை.

குற்ற விசாரணைப்பிரிவின் அதிகாரிகளான ஷானி அபேசேகர, நிஷாந்த சில்வா உள்ளடங்கலாக மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்படி ஆணைக்குழு அச்சுறுத்தியுள்ளது.

அதுமாத்திரமன்றி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையின் விளைவாக நாட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதிமன்றத்தின் சுயாதீனத்துவம் ஆகியவை வலுவிழக்கலாம் என்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் வினைத்திறனான செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

2008 – 2009 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கல் சம்பவங்கள், கடற்படையின் சில உறுப்பினர்கள் தொடர்புபட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் 11 மாணவர்கள் கொலைச்சம்பவம் ஆகியவை குறித்து இடம்பெறும் சட்டவிசாரணைகளை முடக்குவதற்கு ராஜபக்ஷ அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது.

மேலும் 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை, 2009 ஆம் ஆண்டு சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை, 2010 ஆம் ஆண்டில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை, 2012 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகள் ஆகியவை பற்றிய விசாரணைகளும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன.

இந்த வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள், அச்சம்பவங்கள் நடைபெற்றபோது தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச்செயலாளராகப் பதவி வகித்தமை தொடர்பில் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த வழக்குகளில் காணப்பட்ட அரசியல் தலையீடுகள், ஏற்கனவே இவற்றுக்கான நீதிவழங்கல் பொறிமுறைகளைத் தாமதப்படுத்திவிட்டது. பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்கு அனுமதிப்பதற்குப் பதிலாக, இலங்கை அரசாங்கம் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக அதன் கடப்பாடுகளைப் பேணவேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புர்கா தடை உத்தரவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும்- சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு

புர்கா மற்றும் நிகாப் உள்ளடங்களாக முகத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்குத் தடைவிதிப்பதென்பது ஒருவர் விரும்பிய மதம் அல்லது நம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கு அனுமதியளிக்கின்ற சர்வதேச சட்டக்கட்டுப்பாடுகளுக்கு முரணானதாகவே அமையும் என சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் பொது மக்களின் உரிமையை மறுக்கும் வகையிலான இந்த மோசமான யோசனையை இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும் எனவும் சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக் குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு, 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை கடந்த 13ம் திகதி இலங்கை அரசு வெளியிட்டது.

மேற்குறிதத தாக்குதலில் தற்கொலை குண்டுத்தாரிகளுக்கு ஆதரவு வழங்கியதாக குற்றம் சுமத்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஆகியோர் கடந்த 24ம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நிகாப், புர்கா மற்றும் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்குத் தடைவிதிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது மக்களின் உரிமையை மறுக்கும் வகையிலான புர்கா மற்றும் நிகாப் உள்ளடங்களாக முகத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்குத் தடைவிதிப்பு போன்ற மோசமான யோசனையை இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.