தமிழனத்தின் காவலனின் இழப்பு பேரிழப்பாகும் -ரெலோ வினோ நோகதாரலிங்கம்

எவருக்கும் அடி பணியாமல் உரிமைக்காக குரல் கொடுத்த தமிழனத்தின் காவலனின் இழப்பு தமிழினத்திற்கு பேரிழப்பாகும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோகதாரலிங்கம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மன்னார் ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு குறித்து இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அனுதாப செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவ் அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளதாவது,

“அகில உலகமே போற்றுகின்றி வணங்குகின்ற ஓர் ஒப்பற்ற ஆன்மீக தந்தையை நம் நாடு இன்று இழந்திருக்கின்றது. அதிவந்தனைக்குரிய ஆயர் இராயப்புயோசப் ஆண்டகையின் உடலும் உருவமும் பௌதீக இழப்புக்குள் செல்வது இறைவிதி ஆகும். மனிதகுலத்தின் குறிப்பாக தமிழ்தேசிய நெஞ்சங்களில் வியாபித்து நிற்கும் உயிரும் உணர்வும் மௌனிக்க முடியாதது.

பேரருட்திரு ஆண்டகையின் ஓருயிர் ஓராயிரம் கோடி உயிர்களிடம் சங்கமித்துவிட்டது. இனம் மதம் மொழி தேசம் கடந்து ஒரு ஆன்மீகப் பணியாளனின் உயிர் உச்சரிப்பை வரலாறு எல்லோருக்கும் தந்துவிட்டுச் செல்வதில்லை.

அரசியல் பணியாளனாக தந்தை செல்வாவை அடையாளப்படுத்திச் சென்ற வரலாற்றைப் போல அந்த வெற்றிடத்தை அரசியல் ஆன்மீக சமூகவிடுதலை உரிமைசார்ந்த அனைத்துப் பரிமாணங்களிலும் ஒன்றித்து பயணித்து வரலாற்று சாட்சியமாக ஆயர் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்.

ஆயரின் பணிக்காலம் என்பது போர் முனைகள் ஆயுத அடக்குமுறைகள் சூழ்ந்திருந்தகாலம். தமிழ் தேசிய தரப்புக்கள் கூட முரண்பாடுகளை கொண்டிருந்த காலம். தமிழ் பேசும் இனம் கடந்த கால அனுபவங்களை மறந்து ஒன்றுபட வேணும் என்றும் குரல் கொடுத்து அதற்கான சகல முயற்சிகளையும் முன்னெடுத்தவர்.

ஆயரின் அழைப்பையோ அறிவுரைகளையோ எந்ததரப்பினரும் நிராகரிப்பதில்லை. உறுதியான தூய்மையான எண்ணங்களை கொண்டிருந்தவர். தனது பணிகளை தனது சக்திக்கும் இயலுமைக்கும் ஏற்றாற்போல பூரணப்படுத்தி மக்கள் மனங்களில் எப்போதும் வாழ்வதற்கானவராக வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கின்றார்.

இராயப்புயோசப் ஆண்டகை பெருந்தேசியவாத சிந்தனை கொண்ட சமூகத்துக்கு எப்போதும் சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர். ஒரு இனத்தின் மறுக்கப்பட்ட உரிமைக்காக விடுதலைக்காக குரல் கொடுப்பவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்த இனத்துவேசிகள் ஆயரையும் அப்பட்டியலில் இணைத்து முத்திரை குத்தினர். புலிகளாக சித்தரித்தனர்.

பயமுறுத்தல்கள் அச்சுறுத்தல்களை கண்டுகொள்ளாமல் சரியானதையும் உண்மையானதையும் நேர்மையான பாதை அமைத்து துணிவுடன் பயணித்தார். யாருக்கும் அஞ்சாமல் யாரிடமும் அடிபணியாமல் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே வந்தார். உலகின் மூலை முடுக்குகளெல்லாம் அவரின் உரிமைக்குரல் பதிவாகியது.

ஒரு இனத்தின் விடுதலைக்காக இறுதி மூச்சுவரை உழைத்த ஓர் உத்தமனின் உயிர்ப்பிரிவானது கோடானுகோடி இதயங்களை கதறி அழச் செய்துள்ளது. உலக சரித்திரத்தின் ஒவ்வொரு பக்கங்களும் அவரால் நிரப்பப்பட்டிருக்கும். நீண்ட பலகாலம் காத்திருந்தும் ஆயரின் வெற்றிடம் அடைக்கப்படும் என உறுதியாக்கம் செய்யப்படப்போவதில்லை. அவருக்கு நிகர் அவர் மட்டுமே.

அமைதிக்கும் சமாதானத்துக்கும் அயராது உழைத்து களைத்துப்போய் துயில் கொள்ளும் ஆண்டகைக்கு எங்கள் இறுதி அஞ்சலிகளை காணிக்கையாக்கி அவர் தம் ஆன்மீக அரசியல் சமூக விடுதலைப் பாதையில் பயணிக்க அவர்தம் கனவுகள் மெய்ப்பட அவர் நாமம் சுமந்து எங்கள் வாழ்வையும் அர்ப்பணிப்போம்” என்றார்.

Posted in Uncategorized

இந்தியாவை ஏமாற்ற நினைத்து தம்மை ஏமாற்றிக்கொண்ட கோட்டாபய அரசாங்கம் – சிறிதுங்க சாடல்

ஜெனீவா பிரேரணைக்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் மோடியின் அரசாங்கத்தை ஏமாற்றி அதன் மூலம் மனிதவுரிமைகள் பேரவையில் தமக்கான ஆதரவை பெற முடியும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்துள்ளது என்று குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜெயசூரிய யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்தியாவை ஏமாற்றி இந்த வேலையை செய்து கொள்ள முடியும் எனவும் நினைத்து மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஆலோசனை வழங்கினார்கள்.

அதற்கான சட்டங்களை கொண்டு வருமாறு பாராளுமன்றத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தையும் இந்தியா அவதானித்துக் கொண்டிருந்தது.

இந்தநிலையில், மோடி – கோட்டாவை ஏமாற்றிவிட்டார். இந்தியா ஆதரவாக வாக்களிக்கும் என்று ஜயநாத் கொலம்பகே கூறியிருந்தார்.

அதுதான், கோட்டாபய தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பின்வாங்குகின்றார். தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட வியத்மக குழுவினர் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அவர்கள் மாகாண சபை முறைமையை இல்லாமல் செய்யுமாறு கூறுகின்றனர். ஆனால் இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே ஜனாதிபதி மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசிக்கின்றார்.” என்று சிறிதுங்க ஜயசூரிய குறிப்பிட்டார்.

ஆளும் கட்சிக்குள் குழப்பம் ; உறுப்பினர்கள் சிலர் வழக்கு தொடரத் தீர்மானம் – காரணத்தை வெளியிட்டார் அமைச்சர் லொக்குகே

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் தரப்பின் ஒரு சில உறுப்பினர்கள் எல்லை நிர்ணய விவகாரம், தேர்தல் முறைமை உள்ளிட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் பங்காளி கட்சிகளில் பெரும்பாலானோர் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த இணக்கம் தெரிவித்துள்ளார்கள். என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபை தேர்தல் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் மாகாண சபை தேர்தல் குறித்து முன்வைத்த யோசனை தொடர்பில் கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்குமாறு குறிப்பிடப்பட்டடுள்ளது.

மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாம் என மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்கள்.

மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாம் என குறிப்பிட்டு ஆளும் தரப்பினர் ஒரு சில உறுப்பினர்கள் எல்லை நிர்ணயம், தேர்தல் முறைமை ஆகிய காரணிகளை முன்வைத்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளார்கள்.

பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் பெரும்பாலான உறுப்பினர்கள் மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்த இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.

மாகாண சபைதேர்தல் தொடர்பில் எழுந்துள்ள மாறுப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் முழுமையாக பரிசீலனை செய்யப்படும்.

உரிய காலத்தில் மாகாண சபை தேர்தல் இடம் பெற்றிருந்தால் தற்போது இந்த நெருக்கடி நிலை தோற்றம் பெற்றிருக்காது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபையின் நிர்வாகம் முன்னெடுக்கப்படுவது ஜனநாயக கோட்பாட்டுக்கு முரணானது .

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் மாகாண சபை தேர்தல் குறித்து கவனம் செலுத்துமாறு மகாசங்கத்தினர் வலியுறுத்தியுள்ளார்கள்.

இந்த யோசனை தொடர்பில் ஜனாதிபதி மகாசங்கத்தினருடன் இடம் பெறும் சந்திப்பின் போது தீர்மானத்தை அறிவிப்பார். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையினை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு

மாகாண சபை தேர்தலை அரசியல் காரணிகளுக்காக பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. மாகாண சபை தேர்தல் எத்தேர்தல் முறையில் ,எப்போதுஇடம் பெற்றாலும் பொதுஜன பெரமுன நாடளாவிய ரீதியில் பெற்றிப்பெறும் என்பதை என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என்றார்.

Posted in Uncategorized

ஆயருக்கு ரெலோ யாழில் அஞ்சலி

மறைந்த ஆயர் அதிவணக்கத்திற்குரிய கலாநிதி இராஜப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடலுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் யாழில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொரிய கோவிலில் மக்கள் அஞ்சலிக்காக ஆண்டகையின் திருவுடல் யாழ் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை கட்சியின் தலைவர் மற்றும்,ரெலோ யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ்,பொருளாளர் விந்தன் கனகரத்தினம், மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் சுகாதார மட்டுப்பாடுகளுடன் அஞ்சலி செலுத்தினர்.

Posted in Uncategorized

ஆயரின் மறைவிற்கு வலி கிழக்குப் பிரதேச சபை ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றது -ரெலோ தவிசாளர் நிரோஷ்

தமிழ் மக்களின் விடுதலைப் பாதையில் மறைந்த ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை அவர்களது பங்களிப்பு மதிப்பிடப்பட முடியாதது. அவரது இழப்பிற்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உள்ளூராட்சி மன்றம் என்ற வகையில் உத்தியோகபூர்வமாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

போரின் போதும் போருக்குப் பின்பாகவும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளை நியாயமாக வெளிப்படுத்தும் நடுநிலையாளராக மறைந்த ஆயார் அதிமேதகு இராஜப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் செயற்பட்டார்.

தமிழ் மக்களுக்காக அவர் எடுத்துக்கொண்ட நீதியான வகிபாகத்தின் நிமிர்த்தம் பல சவால்களையும் விமர்சனங்களையும் சந்தித்தார். ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு நீதியான அரசியல் தீர்வுத் திட்டத்தினை வழங்கவேண்டும் என்பதில் உறுதியாகவும் உணர்வாகவும் அவர் செயற்பட்டுவந்தார்.

தமிழ்த் தேசியப் பரப்பில் மதங்களைக் கடந்து எமது மக்கள் விடுதலை அடையவேண்டும் என்ற உறுதியோடு பயணித்த உத்தமர் ஒருவரையே தமிழ் இனம் இழந்து நிற்கின்றது.

தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படுவதற்காக சர்வதேச சமூகம் இறுக்கமான முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதை ஆயர் பக்கசார்பற்று நடு நிலையாளராக ஐ.நா. வரை வலியுறுத்தி வந்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலை வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி மீள்குடியேற்றம் என அவரது பங்களிப்பு மனித உரிமைகளுக்கு அடிப்படையானதாக அமைந்தது. இதற்கு மேலாக இராணுவமயமாக்கம் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மதகுருமாரையும் சிவில் அமைப்புக்களையும் ஒன்றிணைத்துச் செயற்பட்ட ஒருவரையே நாம் இழந்து நிற்கின்றோம்.

எமது இனத்தின் மீதான ஒடுக்கு முறைகளை வெளிப்படுத்தும் உலகம் ஏற்றுக்கொண்ட ஒருவரான அவரை இழந்து இனம் தவிக்கின்றது என்பதே உண்மை. அவர் போன்றவர்கள் எம் இனத்திற்குத் தீர்வு கிட்டுவரையிலாவது இருந்திருக்க வேண்டும். அதற்குக் காலம் சந்தர்ப்பமளிக்கவில்லை. அவர் காட்டிச் சென்ற பாதையை எல்லோரும் பின்தொடரவேண்டும் என்பதே இன்றைய கடமை.

தமிழ் மக்களின் விடயங்களுக்கு அப்பால் முஸ்லிம் சமூகத்தினர் மீது முடுக்கிவிடப்பட்ட தாக்குதல்கள் சிறைகளில் சிங்கள கைதிகள் கொல்லப்பட்டமை ஊடகவியலாளர்கள் தொழிற்சங்கவியலாளர்கள் மாணவ தலைவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்காகவும் எதிர்த்துப்போராடினார். ஜனநாகக் கருத்துருவாக்கத்திலும் மனித உரிமைகளுக்காக குரலற்றவர்களுக்கான குரலாக விளங்கியமையிலும் ஆயரின் பணி அளப்பரியது.

இந் நிலையில் வலிகாமம் பிரதேச சபை ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது என அதன் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

திங்கட்கிழமையை துக்க நாளாக அறிவிக்க கோரிக்கை ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவவர்களின் இறுதி அடக்க நாளான எதிர்வரும் திங்கட்கிழமையை அரசு துக்க நாளாக அறிவிக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் பிரதமரிடம் அவசர கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (1) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் அவர்களின் மறைவு தமிழினத்திற்கு பேரிழப்பாகும். இதற்காக தமிழர்கள் அனைவரும் எதிர் வரும் மூன்று நாட்களுக்கு துக்க தினம் அனுஸ்டிக்க வேண்டும்.

யுத்த காலத்தில் இன, மத , மொழி பேதம் பாராமல் மனிதம் மட்டுமே மேன்மை என கருதி அனைத்து மக்களுக்குமான சேவைகளை வழங்கியவர் மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை.

ஆண்டகை அவர்கள் சுகயீனம் காரணமாக இன்று (1)அதிகாலையில் இயற்கை எய்தினார். அவரது இழப்பானது எமது தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.

ஆயர் அனைத்து மதங்களையும் ஒரே மாதிரியாகவே பார்த்து வந்துள்ளார். இதனால் மதத்தலைவர்கள் பிற மதத்தவர்களின் அன்பை அதிகமாக பெற்றவர் இராயப்பு ஜோசப் ஆண்டகை என்றால் அது மிகையாகாது.

யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்காக அயராது பாடுபட்டவர். குhணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும் அரசியல் கைதிகளுக்கும் ஓடி ஓடி உழைத்தவர்.

தமிழ் மக்கள் அனைவரும் நிம்மதியாகவும் சுய கௌரவத்துடனும் வாழ வேண்டுமென்பதில் உறுதியான பற்றோடு இருந்தவர்.

இன்று அவர் எம்மை விட்டு பிரிந்து உள்ளார.; ஆகவே எமது ஆயரின் ஆன்மா சாந்தி அடைவதற்காக அனைத்து மக்களின் வீடுகளிலும் கருப்புக் கொடிகளை பறக்கவிட்டு மூன்று நாட்கள் துக்க தினமாக அனுஸ்டிக்க வேண்டும் .

மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு இன்று அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன்.

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் அவர்களின் இறுதி நல்லடக்க நாளான திங்கட்கிழமையை (05) ஒரு துக்க நாளாக அறிவிக்கும் படி கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளேன்.

பிரதமர் ஆயரை நன்கு அறிந்தவர். அந்த வகையில் எதிர் வரும் திங்கட்கிழமையை துக்க நாளாக அறிவிக்க வேண்டும்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன் பௌத்த மத தலைவர் ஒருவர் மரணித்த போது அவரது இறுதி அடக்க நாளை துக்க நாளாக அரசு அறிவித்து இருந்தது.

அதே போன்று மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களின் இறுதி அடக்க நாளான திங்கட்கிழமையை துக்க நாளாக அரசு அறிவிக்க வேண்டும். குறித்த கோரிக்கையை பிரதமரிடம் முன் வைத்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா

2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ளது.

2019 இல் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் 2020 ஓகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றது.

இருப்பினும் கொரோனா தொற்றினால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் சர்வதேசத்தின் பார்வையையும் குறைந்த உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பையும் தடுத்ததாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் கொரோனா தொற்றை காரணம் காட்டி செய்யப்பட்ட கட்டுப்பாடற்ற பிரச்சாரச் செலவுகள், அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்தல் போன்ற விடயங்கள் இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளது.

உள்நாட்டுப் பாதுகாப்பைப் பேணுவதற்கு பொறுப்பேற்றுள்ள பொலிஸார் நவம்பர் 20 ஆம் திகதி உருவாக்கப்பட்ட பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இது பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள இராணுவம், குறிப்பாக வரையறுக்கப்பட்ட உள்நாட்டு பாதுகாப்பு பொறுப்புகளை கையாள கைது அதிகாரம் இல்லாமல் அழைக்கப்பட வழிவகுத்தது என சுட்டிக்காட்டியுள்ளது.

இதனை அடுத்து நீதித்துறை மற்றும் சுயாதீன அரசு நிறுவனங்களின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் சிவில் சமூகக் குழுக்களும் பரவலாக விமர்சித்த நிலையிலும் ஒக்டோபர் 22 இல் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நிறைவேறியது.

மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழு போன்ற அமைப்புகளுக்குரிய நியமனங்கள் வழங்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதலின் போது கொண்டுவரப்பட்ட பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழான அவசரகால நிலையினால் பாதுகாப்பு தரப்பினருக்கு கைது செய்யும் அதிகாரமும் வழங்கப்பட்டது. பின்னர் 2019 ஓகஸ்டில் குறித்த அவசரகால நிலை முடிவுக்கு வந்தது.

எவ்வாறாயினும், அவசரகால நிலை காலாவதியானதிலிருந்து ஒவ்வொரு மாதமும் பொதுப் பாதுகாப்பை உறுதிசெய்ய படைகளை அனுப்பும் உத்தரவை அரசாங்கம் வர்த்தமானி செய்து, இராணுவத்தை தொடர்ந்தும் நிலைநிறுத்தியது.

இறந்த தற்கொலை குண்டு தாரர்களுக்கு பொருள் ஆதரவு மற்றும் தொடர்ச்சியான விசாரணைகளுக்காக பலர் கைது செய்யப்பட்டபோதும் தாக்குதல்களில் ஈடுபட்டதாக சந்தேக நபர்கள் மீது வழக்குத் தொடரப்படவில்லை என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்தின் சட்டவிரோத செயற்பாடுகள், சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் செயற்படுதல், தன்னிச்சையாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுதல், ஊடகவியலாளர்கள் கைது, பெண்களுக்கு எதிரான வன்முறை, சிறுபான்மையினரை குறிவைத்து மேற்கொள்ளப்படும் குற்றங்கள் குறித்தும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Posted in Uncategorized

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமனம்

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறையின் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காணவும் தேவையான திருத்தங்களை பரிந்துரைக்கவும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் முன்மொழியப்பட்ட குறித்த தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான தீர்மானம் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைப்பு நேரத்தில் அவைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் குறித்த தீர்மானம் முன்வைக்கப்படும் என நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

15 உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக்குழு , சபாநாயகர் நியமித்த ஆறு மாதங்களுக்குள் குழுவின் பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழு, தற்போதுள்ள தேர்தல் முறைமை மற்றும் அதன் கட்டமைப்பின் குறைபாடுகளை அடையாளம் காணவும், திருத்தங்களையும் பரிந்துரைகளையும் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா வழங்கியுள்ள தடுப்பூசியை பயன்படுத்தக்கூடாது – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

சீனா வழங்கிய கொரோனாவைரஸ் தடுப்பூசியை இலங்கைமக்களிற்கு வழங்க கூடாது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிததுள்ளனர்.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 600,000 கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவது குறித்து அரசமற்றும் தனியார்துறையை சேர்ந்த சிரேஸ்ட மருத்துவ நிபுணர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சீனாவின் தடுப்பூசி குறித்தும் அதற்கு அவசர அனுமதியை வழங்கலாமா என்பது குறித்தும் ஆராய்வதற்காக நிபுணர்கள் குழுவை நியமித்தது என மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் அந்த குழு சீனாவின் தடுப்பூசியின் பாதுகாப்பு திறன் போன்றவை குறித்து உறுதி செய்வதற்கான போதுமான தரவுகள் இல்லை என தெரிவித்துள்ளது என மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் சீனாவின் தடுப்பூசியை தற்போதைய சூழ்நிலையில் பயன்படுத்தகூடாது என தீர்மானிக்கப்பட்டது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை சுகாதார கொள்கைகள் குறித்த நிறுவகத்தின் இயக்குநர் வைத்தியர் ரவீந்திர ரனஎலிய சீனாவின் தடுப்பூசி போதுமான தகவல்களை கொண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளார். நான் அதனை உள்நாட்டு பாவனைக்கு அனுமதிக்கமாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நீதி மற்றும் விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தி தடம்புரளாத பயணம்

இன்று பலர் நாட்டிலும் புலத்திலும் எம்மக்களின் பிரச்சனையை தாமேதான் ஐநாவுக்கு அதுவும் 2009 இற்கு பின்னர் எடுத்துச் சென்றதாக அறைகூவல் விடுக்கிறார்கள்.

ஆனால் 1984 ஐப்பசி மாதம் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் எமது மக்கள் மீது திட்டமிட்ட இனவழிப்பு நடைபெறுகிறது என்பதை ஐநா செயலாளர் நாயகத்திற்கு அறிக்கையிட்டதோடு ஆதாரங்களோடு நேரடி சந்திப்புக்கான கோரிக்கையையும் அனுப்பி வைத்தது.

மறைந்த, ஒப்பற்ற தமிழ் தேசியத்தின் தலைவன் சிறிசபாரத்தினம் ஐநா செயலாளர் நாயகத்திடம் முன்வைத்த கோரிக்கை முரசொலி பத்திரிகையில் ஆதாரமாக….

தொடர்ந்தும், இன்றும் ரெலோ அதில் உறுதியாகவே உள்ளது ,

2019 பங்குனியில் சர்வதேச நீதி மற்றும் விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரிடம் கோரியது

2021 மாசி மாதம் பிரித்தானிய வெளியுறவு செயலகத்திடம் பூச்சிய வரைபை பலப்படுத்திய பிரேரணை ஆக்குமாறு வலியுறுத்தியது

தொடர்ந்தும் எம்மக்களின் நீதி, அரசியல் தீர்வு, மற்றும் நிலையான பொருளாதாரக் கட்டமைப்புக்காய் போராடும்

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்
ஊடக வாரியம்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்- ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு