புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுக்கு விளக்கமளிப்பு

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக நாட்டில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்கள் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திர பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தலைமையில் வெள்ளிக்கிழமை (01) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக உயர் ஸ்தானிகர்கள், தூதுவர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை இதன்போது முன்வைத்துடன் அதுதொடர்பில் அவர்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் தொடர்பாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ், வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் விளக்கங்களை வழங்கி தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்நிகழ்வில் நீதி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன, நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களின் செயலாளர்கள். சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைபு திணைக்களம், உயர் ஸ்தானிகர் காரியாலயம் மற்றும் தூதுவராலய காரியாலயங்களை பிரிதிநிதித்துவப்படுத்தி ராஜதந்திர அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக சந்தோஷ் ஜா?

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக இராஜதந்திர சேவையில் உள்ள சந்தோஷ் ஜா இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளார்.

2020ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை காலமும் கொழும்பில் உயர்ஸ்தானிகராக இருக்கும் கோபால் பாக்லே அவுஸ்திரேலியாவில் இந்தியாவின் இராஜதந்திர பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.

2020ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக நியமனம் பெற்ற சந்தோஷ் ஜா, 2019 முதல் ஜூலை 2020 வரை உஸ்பெகிஸ்தானில் இந்தியத் தூதராக பணியாற்றியுள்ளார்.

மேலும், 2017 – 2019 ஆண்டுகளில் வொஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதுவராக கடமையாற்றியுள்ளார்.

அத்துடன், 2015 – 2017 வரையிலான ஆண்டுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சின் கொள்கை திட்டமிடல் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இந்த காலப்பகுதியில், இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய ஈடுபாடுகளுக்கும் சவால்களுக்கும் பதிலளிக்கும் திறன் கொண்ட இராஜதந்திர பிரிவை உருவாக்க பங்களிப்பு செய்திருந்தார்.

குறிப்பாக, முக்கிய இந்திய வெளியுறவுக் கொள்கை முன்முயற்சிகளை உருவாக்குவதிலும், பல மூலோபாய உரையாடல் மன்றங்களை நிறுவுவதிலும் நெருக்கமாக செயற்பட்டவராகவே இராஜதந்திரி சந்தோஷ் ஜா காணப்படுகிறார்.

அதே போன்று பூகோள அரசியல் மற்றும் பொருளாதாரத்தை மையப்படுத்தி உலகளவில் புகழ்பெற்ற ரெய்சினா கலந்துரையாடல்களிலும் முக்கிய பங்கை வகித்துள்ளார்.

அத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களையும் கையாண்டுள்ளார்.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற 2007 தொடக்கம் 2010 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பில் உள்ள இந்தியா உயர்ஸ்தானிகராலயத்தில் முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

குறிப்பாக, இலங்கையில் இறுதிப்போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார மற்றும் கட்டுமான துறைகளை மேம்படுத்தும் இந்திய திட்டங்களிலும் முக்கிய பங்கை வகித்திருந்தார்.

எனவே, இலங்கையின் உள்ளக அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பரந்துபட்ட அனுபவத்தை கொண்ட மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜாவை கொழும்பில் அடுத்த உயர்ஸ்தானிகராக கடமைகளை பொறுப்பேற்க டெல்லி அனுப்புகிறது.

இலங்கையை மையப்படுத்திய சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்து இந்தியாவின் மூலோபாய கவலைகள் அதிகமாக காணப்படுகின்ற சூழலில் இந்த நியமனம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Posted in Uncategorized

இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா

இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா செனவிரட்ண நியமிக்கப்படவுள்ளார்.

இலங்கையின் உயர்ஸ்தானிகராக தற்போது பணியாற்றும் மிலிந்தமொராகொட செப்டம்பரில் தனது பொறுப்பினை முடித்துக்கொள்ளவுள்ள நிலையில் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் சேனுகா செனவிரட்ண உயர்ஸ்தானிகர் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

சேனுகா நியுயோர்க்கி;ல் உள்ள ஐக்கியநாடுகள் அலுவலகத்தின் நிரந்தரவதிவிடப்பிரதிநிதியாகவும் பணியாற்றியிருந்தார்.

மேலும் ஐக்கிய இராச்சியம் தாய்லாந்து ஆகிய நாடுகளிற்கான தூதுவராகவும் இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

சென்னை – யாழ்ப்பாணம் கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்கும்; இந்திய துணைத்தூதர் நம்பிக்கை

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவையை, விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னைக்கும் – யாழ்ப்பாணத்துக்கும் இடையில், அலையன்ஸ் எயார் மூலம் இயக்கப்படும் 100ஆவது விமானச் சேவைக்கான நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே தொடர்பினை பேணுவதற்கு போக்குவரத்து மிக முக்கியமானதாகும்.
அந்த போக்குவரத்தை மேம்படுத்த, இருநாட்டு அரசாங்கங்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் செயற்பாடு பொறுப்பற்ற செயலாகும் – அலி சப்ரி அதிருப்தி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடா அரசாங்கம் தடைகளை விதித்தமை தொடர்பில் இலங்கை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் ஆகியோருக்கு இடையில் இன்று (ஜன 11) புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இலங்கையின் அதிருப்தியை அமைச்சர் அலி சப்ரி வெளிப்படுத்தியுள்ளார்.

மனித உரிமை மீறல்களை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை கனேடிய அரசாங்கத்தினால் பல்வேறு முக்கிய தடைகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையிலேயே நேற்றைய தினம் கனேடிய உயர்ஸ்தானிகரை , வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கு வரவழைத்து அமைச்சர் இலங்கையின் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தமை இந்த முக்கியமான தருணத்தில் பொறுப்பற்ற செயலாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, நல்லிணக்கத்தை அடைவதற்காக ஆழமான  பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களில் நாடு ஈடுபட்டுள்ள வேளையிலேயே இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவின் இந்த நடவடிக்கையானது தற்போதைய சந்தர்ப்பத்தில் உதவியற்றதும் , இலங்கையிலுள்ள சமூகத்தினரை ஓரங்கட்டுவதைப் போன்ற செயற்பாடுமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் – இந்திய உயர்ஸ்தானிகர்

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும். இலங்கைக்கு இதுவரையான காலத்துக்குள் 4 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அபிவிருத்தி மேம்பாட்டுக்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

அநுராதபுரம் ஜெய ஸ்ரீ மகா விகாரையில் சனிக்கிழமை (7) இரவு மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர், ஜெய ஸ்ரீ மகா விகாரையின் விகாராதிபதி ஈதலவென்வாவே நாகதிலக தேரருடன் கலந்துரையாடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பெரும்பாலான வெளிநாட்டு தூதுவர்கள் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஆலோசனைகளுக்கமைய செயற்படுகிறார்கள்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு மதத்தை அடிப்படையாக கொண்டு ஆரம்பமானது. இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு பல்வேறு முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்டுள்ளது.

அரச சார்பற்ற அமைப்புக்களின் கருத்துகளுக்கு கவனம் செலுத்தாமல், நாட்டின் நடைமுறையில் உள்ள உண்மைத்தன்மைகளுக்கு மதிப்பளித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் செயற்படுவது வரவேற்கத்தக்கது.

நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கைக்கு நட்பு நாடான இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது என ஜெய ஸ்ரீ மகா விகாரையின் விகாராதிபதி ஈதலவென்வாவே நாகதிலக தேரர் இந்திய உயர்ஸ்தானிகரிடம் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ளது.

இரு நாட்டு மக்கள் பல்வேறு விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்கள். பௌத்த மத கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு இரு நாடுகளின் நல்லுறவு பலம் பெற்றுள்ளது.

இலங்கை, இந்தியா குறுகிய காலத்துக்குள் 4 பில்லியன் டொலரை மனிதாபிமான அடிப்படையில் வழங்கியுள்ளது.

விசேடமாக, பொருளாதார முன்னேற்றத்துக்கு மேலதிகமாக எரிபொருள் கொள்வனவுக்கு 750 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன், உணவு, மருந்து மற்றும் உரம் ஆகியவற்றுக்கு மேலதிகமாக 1 பில்லியன் டொலர் அளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கு முழுமையான ஒத்துழைப்பை இந்தியா வழங்கும். இலங்கையின் அபிவிருத்தி மேம்பாட்டுக்கும் தொடர்ந்து ஒத்துழைப்போம் என்றார்

இலங்கையும் தென்னாபிரிக்காவும் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்  S.E.Schalk உடன் ஒரு சுற்று கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச ஆதரவைப் பெறுவது மற்றும் நாட்டின் சட்ட அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இலங்கையில் அடிப்படை உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவை வலுப்படுத்துவதற்கும், சட்ட அமைப்பில் சீர்திருத்தங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் தென்னாபிரிக்கா ஆதரவளிக்கும் என உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

மோதலைத் தொடர்ந்து சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்த இலங்கை மேற்கொண்ட நல்லிணக்கத் திட்டத்தைப் பாராட்டிய உயர் ஸ்தானிகர் தென்னாபிரிக்காவின் அனுபவத்தின் ஊடாக இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளனர், இலங்கையில் சட்ட அமைப்பை வலுப்படுத்தும்  சட்ட சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படும் என நீதி அமைச்சர் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார்.

ஐந்து நாடுகளின் இராஜ தந்திரிகளுடன் பேச்சு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய தூதுவர், அமெரிக்க தூதுவர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோரை கொழும்பில் சந்தித்து இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்.