காங்கேசன் துறை – நாகபட்டினம் இடையே கப்பல் சேவை விரைவில் ஆரம்பம் – இந்திய துணைத் தூதுவர்

இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் – இந்தியா தமிழ்நாடு நாகபட்டினத்திற்கு இடையேயான கப்பல் சேவையினை விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராகேஷ் நடராஜ் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஆரம்பத்தில் காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது கங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே குறித்த பயணப்பாதை மாற்றப்பட்டமையினாலேயே இவ் தாமதம் ஏற்பட்டது.

குறித்த கப்பல் சேவை தொடர்பில் விரைவில் ஆரம்பிப்பதற்காக தமிழ்நாடு நாகபட்டினத்தில் பயணிகள் இறங்குமிடம் , சுங்கம் போன்ற அமைக்கும் பணிகளை இடம்பெற்று வருகின்றன. அப்பணிகள் நிறைவடைந்தமையுடன் கப்பல் சேவையினை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம் . அவ் கப்பல் சேவை தொடர்பிலான நல்லதொரு செய்தியினை மக்களுக்கு விரைவில் அறிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இலங்கைப் பிரதிநிதிகள் இருவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதிகள் இருவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மிலிந்த ஹெட்டியாராய்ச்சி மற்றும் இந்திரஜித் ஹெட்டியாராய்ச்சி ஆகிய இருவருக்கு எதிராகவே இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பை மாசுபடுத்தியமை உள்ளிட்ட 08 குற்றச்சாட்டுகளின் கீழ், கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் உள்ளூர் முகவர் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளிட்ட பிரதிவாதிகள் 08 பேருக்கு எதிராக கடல்சார் சூழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு இன்று (சனிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்தநிலையில், இவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த பிடியாணை பிறப்பித்துள்ளார்.

கடந்த வருடத்தின் மத்திய பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்களுடன் சரக்குகளை ஏற்றிச்சென்ற போது தீப்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி – இலங்கை பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்

தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக” தூத்துக்குடி துறைமுக ஆணையகத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தெரிவித்து்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” தூத்துக்குடி-கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கப்பல் நிறுவனத்தினர் கப்பலை இயக்க விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கப்படும். தற்போது 2 நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு கப்பலை இயக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதனால் வரும் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க வாய்ப்பு உள்ளது.

தற்போது மீண்டும் கொழும்பு, கொச்சி, சென்னை ஆகிய இடங்களுக்கு தூத்துக்குடியில் இருந்து பயணிகள் கப்பல் இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. தற்போது பயணிகள் கப்பல் வந்து இருப்பது ஒரு ஆரம்பம்தான். தொடர்ந்து பல கப்பல்கள் தூத்துக்குடிக்கு வர வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.