இந்தியா – இலங்கை இடையே படகு சேவைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் விரைவில் அனுமதிக்கும் – தமிழக அமைச்சர் எ.வ வேலு

வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளதால் இந்தியா – இலங்கை இடையே விரைவில் படகு சேவை தொடங்க நாகப்பட்டினம் துறைமுகம் தயாராகி வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் கெவடியாவில் 19-வது கடலோர மாநிலங்கள்மேம்பாட்டுக் குழுமக் கூட்டம் நேற்று நடந்தது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனவால் தலைமையில் நடந்த கூட்டத்தில் கடலோர மாநிலங்களின் துறைமுக அமைச்சர்கள், மத்திய, மாநில அரசுகளின் அலுவலர்கள், கடல்சார் வாரிய அலுவலர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தின் சார்பில் இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தமிழகம் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் நுழைவாயிலுடன் கூடிய தனித்துவமான கடற்கரையைக் கொண்டுள்ளது. அதன் கடல்சார் மற்றும் துறைமுகத் துறையைவலுப்படுத்த உறுதி பூண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சாகர்மாலாதிட்டத்தின் கீழ், மானியமாக தமிழக கடல் சார் வாரியத்துக்கு ரூ.120 கோடி நிதியுதவி அளித்த மத்திய அமைச்சர், மத்திய அரசுக்குநன்றி.

இந்தியாவை சர்வதேச அளவில்இணைக்கும் வகையில் இலங்கைக்கு தொடங்கவுள்ள முதன்மையான படகு சேவைக்கு வெளியுறவுஅமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இது நாடுகளுக்கிடையே உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வர்த்தகத்தையும் மேம்படுத் தும்.

இப்படகு சேவையை விரைவில் தொடங்குவதற்கு நாகப்பட்டினம் துறைமுகம் தயாராகி வருகிறது.ராமேசுவரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு சேவையை புதுப்பிப்பதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1980-ம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்த இந்தியா – இலங்கை இடையிலான பாரம்பரிய கடல்வழிகளை புதுப்பிக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும்.

கடலோர கடல் வளங்களை பாதுகாப்பது நமது பொறுப்பும், கடமையும் ஆகும். தமிழகத்தின் மத்தியில் உள்ள தொழிற்சாலை பகுதிகளுக்கு தேவையான சரக்குகளை கையாளக் கூடிய வகையில், கடலூர் பகுதியில் பெரும்திறன் கொண்ட பசுமைவளத் துறைமுகத்தை உருவாக்கவும், தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆண்டொன்றுக்கு 10 மில்லியன் மெட்ரிக்டன் சரக்குகளை இத்துறைமுகம்கையாளும் என எதிர்பார்க்கப்படு கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

காங்கேசன் துறை – நாகபட்டினம் இடையே கப்பல் சேவை விரைவில் ஆரம்பம் – இந்திய துணைத் தூதுவர்

இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் – இந்தியா தமிழ்நாடு நாகபட்டினத்திற்கு இடையேயான கப்பல் சேவையினை விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராகேஷ் நடராஜ் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஆரம்பத்தில் காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது கங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே குறித்த பயணப்பாதை மாற்றப்பட்டமையினாலேயே இவ் தாமதம் ஏற்பட்டது.

குறித்த கப்பல் சேவை தொடர்பில் விரைவில் ஆரம்பிப்பதற்காக தமிழ்நாடு நாகபட்டினத்தில் பயணிகள் இறங்குமிடம் , சுங்கம் போன்ற அமைக்கும் பணிகளை இடம்பெற்று வருகின்றன. அப்பணிகள் நிறைவடைந்தமையுடன் கப்பல் சேவையினை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம் . அவ் கப்பல் சேவை தொடர்பிலான நல்லதொரு செய்தியினை மக்களுக்கு விரைவில் அறிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு – காங்கேசன் துறை ரயில் சேவை அடுத்த மாதம் மீள ஆரம்பம்

அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து அடுத்த மாதம் மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணையின் அடிப்படையில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் மார்க்கம் திருத்தப்பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது.

62 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த ரயில் மார்க்கம் இந்திய கடன் உதவியின் கீழ் 33 பில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்ட ரயில் மார்க்கத்தில் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் பயணிக்க முடியுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியா – யாழ். கப்பல் சேவை தற்போது சாத்தியம் இல்லை

இந்தியா – யாழ்ப்பா ணம் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை நடத்தும் சாத்தியக்கூறு இந்த ஆண்டு இறுதிவரை இல்லை என்று விமான சேவைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகளுடன் முதல் கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை வந்தது. இந்தக் கப்பலை வரவேற்ற பின்னர் துறைமுக முனையத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காங்கேசன்துறையில் 25 கோடி ரூபாய் செலவில் பயணிகள் முனையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு மிகவும் பலமானது. இரு நாடுகளுக்கும் இடையில் கலாசார ரீதியான உறவுகள் மேலும் பலமடைய வேண்டும். இதற்கான வாய்ப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் சேவை ஆரம்பம் அமைந்துள்ளது.

எனினும், இந்தியா – காங்கேசன் துறை இடையே பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க இன்னும் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. அது இந்தஆண்டு டிசெம்பருக்கு முன்னர் பூர்த்தியாகாது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் சேவையை அடுத்த வருடத்திலாவது ஆரம்பிக்க வசதிகள் செய்யப்படும் – என்றும் கூறினார்.

சென்னை – காங்கேசன் துறை முதலாவது பயணிகள் கப்பல் நாளை மறுதினம்

இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் சனிக்கிழமை இந்த கப்பல் காங்கேசன் துறைமுகத்துக்கு வரவுள்ளது.

குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு யாழிற்கு விஜயம் மேற்கொள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காங்கேசன் துறைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இதன் முதற்கட்டமாக இந்த பரீட்சாத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை நாகப்பட்டினம் துறைக்கு மாற்றம்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் காரைக்காலுக்கும் இடையே நடத்தப்படுவதாக இருந்த பயணிகள் கப்பல் சேவை யாழ்ப்பாணத்திற்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலானதாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காகத் துறைமுகத்தைத் தயார்ப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன என்று இந்தியச் செய்திகள் கூறுகின்றன.

காரைக்கால் இந்தியாவின் புதுச்சேரி (பாண்டிச்சேரி) மாநிலத்தில் அமைந்திருக்கிறது. நாகப்பட்டினம் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்திருக்கிறது.

பயணிகள் கப்பல் சேவை முதலில் காரைக்காலில் அமைக்கத் திட்டமிடப்பட்டபோதும், அந்தத் துறைமுகம் நிலக்கரி ஏற்றுமதி இறக்குமதிக்குப் பயன்படுத்தப்படுவதால், அது பயணிகள் போக்குவரத்துக்கு ஏற்புடையதாக இருக்காது என்று பின்னர் நிராகரிக்கப்பட்டது. கரித்தூசு அங்கு பெரும் பிரச்சினையாக இருக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

அத்தோடு காரைக்காலில் இருந்து சென்னையை அல்லது தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளை அணுகுவதற்கான போக்குவரத்து வசதிகளும் மிகக் குறைவானவை என்ற காரணத்தாலும் அந்தத் துறைமுகத்தைத் தடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக நாகப்பட்டினம் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகம் பயணிகளைக் கையாள்வதற்கு ஏற்றது என்பதுடன் அங்கிருந்து சென்னைக்கு நாளாந்தம் இரு நேரடி தொடருந்து சேவைகளும் உள்ளன என்றும் தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளைஅடைவதற்கான போதிய வசதிகள் காணப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இவற்றின் அடிப்படையில் காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் இடையே பயணிகள் கப்பல் சேவையை நடத்துவது என்று தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் பயணிகள் போக்குவரத்துக்கான டெர்மினல் அமைக்குமாறும் வசதிகளை ஏற்படுத்துமாறும் இந்திய மத்திய அரசு தமிழ்நாடு ஆட்சியாளர்களிடம் கோரியது. ஆனால், இந்த ஆண்டுக்கான தமது வரவு செலவுத் திட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டதால் இனி அடுத்த ஆண்டே இதற்கான நிதியை ஒதுக்க முடியும் என்று தமிழ்நாடு அரசு கைவிரித்துவிட்டது. இதையடுத்து இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் இந்தப் பணிகளுக்கென 9 கோடி ரூபாயை (இந்திய ரூபாய்) ஒதுக்கீடு செய்து, அதனைத் தமிழ்நாடு அரசுக்கு விடுவித்துள்ளது. பயணிகள் டெர்னிமல் பகுதி தயாரானதும் யாழ்ப்பாணம் – நாகப்பட்டினம் இடையே பயணிகள் கப்பல் சேவை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

Posted in Uncategorized

33 வருடங்களாக இலங்கை இராணுவத்தால் அபகரிக்கப்பட்டிருந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளன

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மீள கையளிக்கப்படவுள்ளது.

கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக J/ 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள மாங்கொல்லை வைரவர் ஆலயமும் அதனை சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

மிக விரைவில் , அவை மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம்- காரைக்கால் பயணிகள் கப்பல் சேவைக்கு அனுமதி!

இலங்கையைச் சேர்ந்த ஹேலீஸ் நிறுவனத்துக்கு தென்னிந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் சேவையை நடத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் – கே.கே.எஸ். இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை ஆரம்பிப்பதில் இழுபறி நீடித்து வருகின்றது.

இந்தியத் தரப்பிலிருந்தே அதற்கான அனுமதிகள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை என்று அறியமுடிகின்றது.

இதற்கிடையில் பாண்டிச்சேரியிலிருந்து காங்கேசன்துறைக்கான சரக்குக் கப்பல் சேவையை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நடத்துவதற்கான அனுமதி ஹேலீஸ் நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

படகுச்சேவைக்கான அனுமதி இதுவரை இந்திய அதிகாரிகளால் வழங்கப்படவில்லை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதிகளை வழங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்த்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவைக்கு நான்கு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்றும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்குத் தேவையான அனுமதி இதுவரை இந்திய அதிகாரிகளால் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் காரைக்கால் துறைமுகத்துக்கும் இடையிலான படகு சேவையை தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்த்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் கடற்படை

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தத கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பயணிகள் படகு சேவையை தொடங்கும் வகையில் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்த நடவடிக்கை பயணிகள் போக்குவரத்துத் திட்டம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.