மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட கோரிக்கை

நாட்டு மக்கள் வாக்குரிமையை கோரி வீதிக்கு இறங்கினால் நாட்டில் இரத்தவெள்ளம் ஓடும். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும்.தேர்தலை நடத்த மகா சங்க சபையை கூட்டி சங்க பிரகடனத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தி தேசிய பிக்கு முன்னணி அஸ்கிரி, மல்வத்து, ஆகிய பீடங்களிடம் நான்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

தேசிய பிக்கு முன்னணியினர் வியாழக்கிழமை (02) அஸ்கிரிய மற்றும் மல்வத்து ஆகிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இச்சந்திப்பு தொடர்பில் தேசிய பிக்கு முன்னணியின் செயலாளர் வக்கமுல்ல உதித தேரர் குறிப்பிட்டதாவது,

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த அரசியலமைப்புக்கு அமைய செயற்பாடுகளை முன்னெடுத்த போது ‘நாட்டில் தேர்தல் இல்லை, தேர்தலுக்கான அறிவிப்பு உத்தியோகப்பூர்வமாக இல்லை’ என குறிப்பிட்டு நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை மலினப்படுத்தியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் போது நாட்டில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாரிய விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

வரலாற்றில் பல சம்பவங்கள் அவ்வாறு பதிவாகியுள்ளன. வாக்குரிமையை கோரி மக்கள் வீதிக்கு இறங்கும் போது அரசாங்கம் மிலேட்சத்தனமான தாக்குதலை மேற்கொள்கிறது. கடந்த வாரம் இடம்பெற்ற போராட்டத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

நாட்டு மக்கள் வாக்குரிமை கோரி வீதிக்கு இறங்கினால் நாட்டில் இரத்த வெள்ளம் ஓடும். ஆகவே நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும்.

இந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஏற்கெனவே ஒரு வருடம் பிற்போடப்பட்டது. இந்த தேர்தலை மீண்டும் பிற்போட இடமளிக்க முடியாது.

உள்ளுராட்சின்றத் தேர்தலை விரைவாக நடத்த ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்குமாறு வலியுறுத்தி மகாநாயக்க தேரர்களிடம் நான்கு பிரதான கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் சகல பௌத்த மத பீடங்களையும் ஒன்றிணைத்து மத்திய செயற்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும், இரண்டாவது மாகாண மற்றும் உள்ளுராட்சிமன்ற அடிப்படையில் பௌத்த தேரர்களை ஒன்றிணைத்து விசேட கூட்டத்தை நடத்த வேண்டும் மூன்றாவது, செயற்குழு கூட்டத்தின் தீர்மானத்தை சங்க பிரகடனமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

உள்ளுராட்சிமனற்த் தேர்தலை நடத்துமாறு ஆட்சியாளர்களுக்கு வழங்கும் யோசனைகள் செயற்படுத்தப்படாவிடின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு மகாநாயக்க தேரர்கள் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை உடன் நடத்த அமெரிக்க செனட்டின் வௌியுறவு குழு வலியுறுத்தல்

இலங்கை அரசாங்கம் சுதந்திரமான நியாயமான உள்ளுராட்சி தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார உறவுகளிற்கான குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

டுவிட்டர் செய்தியொன்றில் அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இலங்கை மக்களின் குரல்கள் ஒலிக்காமலிருப்பதற்காக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் மறுக்க முடியாதபடி ஜனநாயக விரோதமானது இலங்கையர்களின் உரிமைகளை நேரடியாக மீறும் செயல் என அமெரிக்க செனெட் குழு தெரிவித்துள்ளது.

வாக்குச்சீட்டு அச்சிடும் பணி காலவரையறையின்றி ஒத்திவைப்பு

வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன.

தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை மற்றும் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான வசதிகள் கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சம் குறிப்பிட்டுள்ளது.

தேர்லுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பு கிடைக்காமை, வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்காமை போன்ற காரணிகளால், அண்மை நாட்களில் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளுக்கு பாரிய தடை ஏற்பட்டிருந்தது.

தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்குமாயின் 25 முதல் 30 நாட்களுக்குள் அனைத்து வாக்குச்சீட்டுகளையும் அச்சடிக்கும் இயலுமை தமது நிறுவனத்திற்கு உள்ளதாக அரச அச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும்: தேர்தல் ஆணைக்குழு

2023ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி, எதிர்வரும் மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, திட்டமிட்டபடி மார்ச் 09ம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய நிலையில், இந்த தகவல் வந்துள்ளது.

 

சட்ட ரீதியாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது – தேர்தல் ஆணைக்குழு தலைவர்

அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்திற்கு அமைய சட்ட ரீதியாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் இணக்கப்பாட்டுடன் தான் தேர்தல் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி வழங்கப்படாத பின்புலத்தில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (24) கூடவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் கூறியுள்ளார்.

நாட்டின் தேசிய தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும், தேர்தலை நடத்த நிதி இல்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா  இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அரசாங்கத்தில் தேர்தல் தொடர்பான தீர்மானம் நியாயமற்றது – இலங்கை திருச்சபை அறிக்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியுதவியை நிறுத்தும் அரசாங்கத்தின் தீர்மானம் நியாயமற்றது எனவும் தன்னிச்சையானது எனவும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இலங்கை திருச்சபை அறிக்கை ஒன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளது.

சில தினங்களுக்கு  முன்னர் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொழுதுபோக்கு காரியங்களை நடத்திய அரசுக்கு தேர்தல் நிதியை நிறுத்த  எந்த தார்மீக உரிமையும் இல்லை என இலங்கை திருச்சபையின் தலைமை பேராயர் துஷாந்த ரொட்ரிகோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளின் கடன்களை மீள செலுத்த தவறிய பிறகும், தேர்தலுக்கு நிதியளிக்க முடியவில்லை என்று கூறும் எந்தவொரு அரசாங்கமும் பதவியில் நீடிக்க சட்டப்பூர்வமான அதிகாரம் இல்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது; தேர்தல்கள் ஆணைக்குழு

திட்டமிட்டவாறு மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இல்லையெனில் எல்லை நிர்ணயம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டால் மட்டுமே வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உள்ளூராட்சித் மன்றத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என இதுவரை குறிப்பிட்ட அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை எனவும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திகதியில் அதனை நடத்துவதில் உள்ள சிரமம் குறித்து மாத்திரமே உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலை ஒத்திவைப்பதானது நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் தள்ளும்; பேராயர் எச்சரிக்கை!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது ஆபத்தான முன்னுதாரணமாக இருக்கலாம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அது இறுதியில் நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் தள்ளும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றினை இன்று(செவ்வாய்கிழமை) வெளியிட்டுள்ள அவர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்படுவதால் இலங்கை சர்வதேச சமூகத்திடம் இருந்து பெற்ற நம்பிக்கையை இழக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாட்டு நாடுகளின் திவால் நிலை மற்றும் உதவியால் நாட்டைப் பெரிய நெருக்கடிக்கு தள்ள வேண்டாம் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேசத்தின் நலனுக்காக முன்வருவது அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்களின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் சரியான நேரத்தில் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

எதிர்மறையான நற்பெயரைப் பெறுவதைத் தவிர்க்க அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் தாங்கள் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை மார்ச் 9 நடத்த முடியாது! உயர் நீதிமன்றுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது

பல காரணங்களால் திட்டமிட்ட வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வரும் மார்ச் 09ஆம் திகதி நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு நேற்று திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்தது

நகர்த்தல் பத்திரம் ஊடாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. தவிர்க்க முடியாத பல தடைகள் காரணமாக மார்ச் 09ஆம் திகதி தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அந்தப் பத்திரத்தில் தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்தத் தேர்தலுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவது கடினம் என திறைசேரியின் செயலாளர் ஏற்கனவே ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 41 கோடியே 6 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் வரை வாக்குச் சீட்டுகளை அச்சிட்டு வழங்க முடியாது என அரச அச்சகம் அறிவித்துள்ளது. தேர்தல் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான பாதுகாப்பை அளிப்பதற்கும் பொலிஸ் மா அதிபர் தவறியுள்ளார். இதற்காக செலுத்த வேண்டிய கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தவிர, தேர்தலுக்கு தேவையான வாகன எரிபொருள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்குமாறு பொறுப்பான அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப் பட்டபோதிலும், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. திறைசேரியின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், அரச அச்சகம், பொலிஸ் மா அதிபர், இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர் தேர்தலுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்றும் ஆதாரங்கள் – ஆவணங்களுடன் தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது

பொதுமக்களின் உரிமைகளை மறுக்கும் நடவடிக்கைகளில் நிறைவேற்று அதிகாரம் – தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான அமைப்பு

மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை கடுமையாக கண்டிப்பதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையகம் திறைசேரி நிறைவேற்று அதிகாரம்  அரச அச்சகர்  மற்றும் இலங்கை பொலிஸின் சிரேஸ்ட அதிகாரிகள் ஆகியோர் பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளை கண்மூடித்தனமாக மீறியதை கடுமையாக கண்டிப்பதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த அரசாங்க அதிகாரிகள் ஒவ்வொருவரினதும் நடவடிக்கைகளை ஆராய்ந்ததில் இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உள்ளூராட்சி தேர்தலை குழப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை புலனாகியுள்ளது என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.