மனிதப் புதைகுழிகள் அகழ்வின் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் அவசியம் என பிரித்தானிய எம்.பி. க்கள் வலியுறுத்தல்

இலங்கையில் மனிதப் புதைகுழிகள் அகழ்வு செய்யப்படும் போது அங்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள், காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் மற்றும் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி நிலையம் ஆகிய 4 அமைப்புக்களும் ஒன்றிணைந்து ‘இலங்கையிலுள்ள பாரிய மனிதப்புதைகுழிகளும், வெற்றியடையாத அகழ்வுப்பணிகளும்’ என்ற தலைப்பில் விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

செம்மணி, மாத்தளை, மன்னார், சூரியகந்த உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள மனித புதைகுழிகள் குறித்தும் அவற்றை அகழ்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் தடைகள் என்பன பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

குறிப்பாக மாத்தளை மனிதப்புதைகுழி அகழ்வின் போது முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் அவ்வறிக்கையை மேற்கோள்காட்டியுள்ள சியோபைன் மெக்டொனாக் மற்றும் விரேந்திர ஷர்மா ஆகியோர், இலங்கையில் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் முறையான ஆதார சேகரிப்பு இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு நாம் சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பிவைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்து பிரித்தானியா கவலை

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் இலங்கையில் பயன்படுத்துவது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.

கருத்துசுதந்திரம் ஓன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை அவை வலியுறுத்தியுள்ளன. பிரிட்டனின் மனித உரிமைக்கான இராஜதந்திரி ரிட்டா பிரென்ஞ் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நிலங்களை விடுவித்தல் நீண்டகால தடுத்துவைப்பு மற்றும் ஊழல் ஆகியவை குறித்த கரிசனைகளிற்கு தீர்வை காண்பதற்காக இலங்கையின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை வரவேற்கின்றோம் இலங்கையின் அனைத்து இன மற்றும் மத சமூகத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அடிப்படையாக அமையலாம்.

தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம் பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுவதற்கு தற்போது நடவடிக்கைகள் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்கின்றோம்,பயங்கரவாத சட்டம் சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப காணப்படவேண்டும் என இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

கருத்துசுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தை பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். நல்லிணக்கத்திற்கான தனது அர்ப்பணிப்பை நோக்கி இலங்கை தனது முதல்கட்ட நடவடிக்கையை எடுக்கின்ற நிலையில் வெளிப்படைத்தன்மை பொறுப்புக்கூறல் அனைவரையும் உள்வாங்கல் போன்றவற்றின் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

நாட்டின் தேர்தல் முறைகள் மீதான மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து தக்கவைப்பதன் மூலம் அதன் ஸ்தாபனங்கள் ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தை பேணுவதன் மூலம் இலங்கை தனது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை பேணுவது அவசியம் எனவும் அவை தெரிவித்துள்ளன.

ஐக்கிய இராச்சியத்திற்கு சென்ற இலங்கைப் பொலிஸார் ஐவர் தலைமறைவு

கஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் உள்ளிட்ட 6 பேர் நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஆறு பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலங்கைக்கு திரும்பவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பெளத்த மயமாக்கல் எனும் பெயரில் வட-கிழக்கில் திட்டமிட்ட இனவழிப்பு

பௌத்த மயமாக்கல் என்னும் பெயரில் வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்ந்தும் திட்டமிட்ட இனவழிப்பு நடைபெறுகின்றது என சிவில் உரிமை செயற்பாட்டாளரும், இந்து சமய தலைவருமான வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தடுத்து நிறுத்தக் கோரி பிரித்தானியாவில் நேற்று (14) இடம்பெற்ற சிறப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இனவழிப்பிக்கு எதிராக குரல் கொடுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர் நேரடியாகவே கைதுகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள்.

தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது மதகுருக்களோ எவராக இருந்தாலும் நீதிமன்றின் எந்தவொரு பிடியாணையும் பெறாது கைதுசெய்யப்படும் நிலமையே வடக்கு கிழக்கில் நிலவுகின்றது.

இறுதியாக பௌத்த மயமாக்கல் எனும் பெயரில் தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலையை பிரித்தானியா தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.

கனடாவை பின்பற்றி பிரித்தானியாவும் தமிழர்களுக்கு எதிராக தாயகத்தில் இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையே என்பதை அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளார்

இனவழிப்புக்கு நீதி கோரி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்

தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட வகையில், கட்டமைக்கப்பட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனவழிப்புக்கு நீதி கோரியும் அதனை தடுத்து நிறுத்த கோரியும்,  பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன், தமிழர் தரப்பினர் மாநாடு ஒன்றினை நடத்தியுள்ளனர்.

நேற்று (14.06.2023) பிரித்தானியா பாராளுமன்ற வளாகத்தில் இந்த மாநாடு இடம்பெற்றுள்ளது.

சிறப்பாக தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழிச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள், மற்றும் சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமாகிய வி.எஸ்.எஸ். தனஞ்சேயன் கலந்து கொண்டனர்.

டியாகோகார்சீயாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை குடியேற்றவாசிகள் தற்கொலை முயற்சி

டியாகோகார்சீயா தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 12 பேர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது

டியாகோ கார்சியாவில் கடந்த 20 மாதங்களாக சிக்குண்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 12 தற்கொலை செய்ய முயன்றுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

இந்துசமுத்திரத்தில் உள்ள பிரிட்டனிற்கு சொந்தமான சிறிய தீவில் இலங்கையை சேர்ந்த 89 குடியேற்றவாசிகள் சிக்குண்டுள்ளனர்  என தெரிவித்துள்ள பிபிசி சட்டவிரோத பயணங்களின் போது படகுகள் ஆபத்தில் சிக்கியவேளை காப்பாற்றப்பட்டவர்களே இவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினருக்காக முன்னர் அமைக்கப்பட்ட கொவிட் கூடாரங்களிலேயே இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என நீதிமன்ற  ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

டியாகோ கார்சியாவில் தான் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளானதாக ஒரு பெண் தெரிவித்துள்ளார் மேலும் இங்கு உண்ணாவிரதப்போராட்டங்களும் இடம்பெறுகின்றன என பிபிசி தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

58 வயதான பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காலத்தில் பிரிட்டனில் கொரோனா சட்டங்களை மீறி ஒரு விருந்து உபசார நிகழ்வை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அது குறித்து நாடாளுமன்ற குழு விசாரணை இடம்பெறுகின்றது.

இந்நிலையில் எம்.பி பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதாக நாடாளுமன்ற விசாரணைக் குழுவிடம் இருந்து கடிதம் வந்ததாகமுன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதம் தனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளதாகவும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

சட்ட அமுலாக்கல் நிறுவனங்கள் மூலம் எதிரிகளை அச்சுறுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம்

அரசியல்மயமாக்கப்பட்ட சட்ட அமைப்பு மற்றும் சட்ட அமுலாக்கல் கட்டமைப்புகளை பயன்படுத்தி தனது எதிரிகளை அச்சுறுத்தும் இலங்கை அரசாங்கத்தின் தெரிவு செய்யப்பட்ட அணுகுமுறையை பிரித்தானிய தமிழர் பேரவை கண்டித்துள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலைப்பட்டமை சம்பவம் குறித்து நாங்கள் எங்கள் கரிசiயை வெளியிட்டுள்ளோம் என குறி;பிட்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவை பௌத்தமதகுருமார் சிங்களபேரினவாதிகள் சட்டம் ஒழுங்கை மீறும்போதெல்லாம் இலங்கையின் செயலற்ற தன்மைக்கு இது முரணானது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களின் நியாயமான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரத்திற்கான உரிமைகளை ஒடுக்குவதற்கு பயங்கரவாத தடைச்சட்டம்தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதையும் இது வெளிப்படுத்தியுள்ளது என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் தற்சார்பு பொருளாதரத்தை மேம்படுத்தவே சீனித் தொழிற்சாலை – ரெலோ பிரித்தானிய கிளை தலைவர் சாம்

வவுனியா நைனாமடுவில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள சீனித்தொழிற்சாலையில் தாய்லாந்து நிறுவனத்தின் ஊடாக சீனா முதலீடுகளை மேற்கொள்ளுவதான ஐயங்கள் ஊடகங்களால் முன்வைக்கப்படும் நிலையில் இந்த ஐயங்களை ரெலோ கட்சி நிராகரித்துள்ளது.

இந்தத்திட்டம் தொடர்பாக ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு வவுனியா மாவட்ட செயலகத்தில்இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது அனைத்துல நாணய நிதியத்தின் அழுத்தங்களால் திட்டம் முன்னகர்த்தப்படுவதாக கருதப்படுகிறது.

மேலும் இத்திட்டத்தின் மூலம் 500 க்கும் மேற்ற தமிழ் குடும்பங்கள் வேலைவாய்ப்பினையும் பொருளாத உயர்வையும் பெற்றுக் கொள்வர். மேலும் தெற்கிற்கு செல்லவிருந்த முதலீட்டுத் திட்டமானது தமிழ் மக்களின் சுய சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் ரெலோவின் எண்ணக்கருவுக்கேற்ப தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் வழிகாட்டுதலில்  தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக வடக்கில் முதலீட்டினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது என ரெலோ ரெலோவின் பிரித்தானியக்கிளையின் பொறுப்பாளர் சாம் சம்பந்தன் தெளிவுபடுத்தியுள்ளார்.

சவேந்திர சில்வாவிற்கு பிரித்தானியா தடை விதிக்க கோரி கையெழுத்து சேகரிப்பு

இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைவிதிக்கவேண்டும் என கோரும் மனுவிற்கு ஆதரவாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை சர்வதேச அமைப்பொன்று ஆரம்பித்துள்ளது.

இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான சர்வதேச நிலையம் என்ற அமைப்பு கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை இணையத்தளத்தில் ஆரம்பித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கையின் மிகமோசமான யுத்த குற்றவாளியான சவேந்திரசில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும் என கோரும் இந்த மனுவை சமர்ப்பிக்கின்றோம் என இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான சர்வதேச நிலையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற நம்பகதன்மை மிக்க மனித உரிமை அமைப்பு ஜெனரல்சவேந்திரசில்வா குறித்த 50 பக்க ஆவணமொன்றை தயாரித்து 2020 ஜூலை மாதம் பிரிட்டிஸ் அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாக அறிகின்றோம் என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் குறித்த பிரிவிடம் இந்த ஆவணங்களை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சமர்ப்பித்துள்ளது இந்த ஆவணம் 2020 ஜூலை ஆறாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் தடை நிகழ்ச்சிதிட்டத்தின் கீழ் ஏன் சவேந்திரசில்வாவை தடை செய்யலாம் என தெரிவிக்கின்றது எனவும் இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான சர்வதேச நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிகாலங்களில் சவேந்திரசில்வா 58 படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றியவேளை உயிர்வாழ்வதற்கான உரிமை உட்பட மீறப்பட்டமை உட்பட இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களில் சவேந்திரசில்வாவிற்கு உள்ள தொடர்பு குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் ஆவணம் தெளிவாக தெரிவித்துள்ளது எனவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.