நாட்டின் சிறந்த எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘சுதந்திர மக்கள் கூட்டணி’ உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 90 சதவீத வெற்றியை பதிவு செய்யும். இந்தக் கூட்டணியால் நாட்டை நிச்சயம் கட்டியெழுப்ப முடியும். அதற்கு மக்கள் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
‘சுதந்திர மக்கள் கூட்டணியின்’ அங்குரார்ப்பண நிகழ்வு இன்று புதன்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
நாட்டின் எதிர்காலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்பில் கடும் நெருக்கடிகள் ஏற்பட்ட சந்தர்ப்பத்திலேயே நாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம். சிறந்த ஆட்சியொன்றை முன்னெடுப்பதற்கு நாட்டில் ஜனநாயகம் என்பது அடிப்படை அத்தியாவசிய தேவையாகும்.
இந்த கூட்டணியை ஸ்தாபிப்பதற்காக கடந்த ஓரிரு வாரங்களாக கடுமையாக பாடுபட்டோம். உள்ளுராட்சி தேர்தலை இலக்காகக் கொண்டே நாம் இந்த கூட்டணியை அமைத்துள்ளோம்.
அதற்கமைய மக்களின் முழுமையான ஆதரவுடன் நாம் முழு நாட்டிலும் வெற்றி பெறுவோம். 90 சதவீத வெற்றியை எம்மால் பதிவு செய்ய முடியும். வடக்கு , கிழக்கில் நாம் போட்டியிடுவோம். இந்த கூட்டணியால் நிச்சயம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். இதற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என்று நம்புகின்றோம்.’ என்றார்.
ஜன ஜய பெரமுனவின் தலைவர் அநுர பிரியதர்ஷன யாப்பா உரையாற்றுகையில் ,
‘இவ்வாறானதொரு பலம் மிக்க கூட்டணியை அமைப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டில் ஏற்பட்ட உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலைமைக்கான காரணம் அரசியல் முறைமைகளில் காணப்பட்ட தவறுகளாகும். ஆட்சி மாற்றத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்த்த எதுவுமே இடம்பெறவில்லை. எனவே எமது இந்த கூட்டணிக்கு சரியான பாதையில் பயணிக்க வேண்டிய அவசியம் காணப்படுகிறது.
இம்முறை இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தீர்க்கமானதாகும். தலைவர்களின் பின்னால் செல்லும் அரசியல் கலாசாரம் மாற்றம் பெற வேண்டும். எனவே தான் இந்தக் கூட்டணியை தலைவர் ஒருவரின் கீழ் வழிநடத்தாமல் , தலைமைத்துவ சபையை அமைத்துள்ளோம் என்றார்.
உத்தர லங்கா சபாகயவின் தலைவர் விமல் வீரவன்ச உரையாற்றுகையில் ,
‘சுதந்திரத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்பதற்கு புதிய அரசியல் முறைமையொன்று அத்தியாவசியமானதாகும். அந்த பொறுப்பினையே நாம் தற்போது ஏற்றுள்ளோம். இலங்கையின் நிதி நெருக்கடியின் பாரதூர தன்மை குறித்து பல்வேறு நாடுகளையும் சேர்ந்த நிபுணர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இவ்வாறான அபாயமான நிலைமையிலிருந்து நாட்டை மீட்ப்பதற்கு எந்தவொரு முடிவினையும் எடுப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம்.’ என்றார்.
சுதந்திர மக்கள் பேரவையின் தலைவர் டலஸ் அழகப்பெரும உரையாற்றுகையில் ,
‘கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான 23 கட்சிகள் நாட்டுக்கான தீர்க்கமான தீர்மானத்தை எடுத்தன. அதே போன்று ஒற்றுமையுடன் புதிய கூட்டணியில் எதிர்காலத்திலும் பயணிக்க வேண்டும். இந்தக் கூட்டணியில் 12 பிரதான கட்சிகள் உள்ளன. இவற்றில் 36 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 22 தேர்தல் மாவட்டங்களில் 17 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் உள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பழைய அரசியல் கூட்டணிகளைப் போன்றல்லாது மற்றொரு புதிய முற்போக்கான அரசியல் கூட்டணி உருவாகியுள்ளது. இந்த நாடு ஆட்சியாளருக்கு சொந்தமானதல்ல. அதே போன்று எந்தவொரு கட்சியும் அதன் தலைவருக்கு சொந்தமானதல்ல. குடும்பமொன்றை கேந்திரமாகக் கொண்ட ஆட்சிக்கு உறுதுணையாக செயற்பட்டமை நாம் இழைத்த பெருந்தவறாகும். அந்த தவறை திருத்திக் கொள்ளும் வகையிலேயே இந்த புதிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.’ என்றார்.