யாழ். விமான நிலையத்தினூடாக நாடு திரும்பினார் இந்திய நிதியமைச்சர்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை (03) யாழ் விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவிற்குப் பயணமானார்.

 

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் புதிய தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு வர்த்தக கண்காட்சியை இந்திய நிதியமைச்சர் பார்வையிட்டார்.

வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸும் இந் நிகழ்வில் கலந்துகொண்டு நிதியமைச்சரை சந்தித்தார்.

 

அதன் பின்னர் யாழ். நூலகம் மற்றும் நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் செய்த இந்திய நிதியமைச்சர் பின்னர் இந்திய ஸ்டேட் வங்கியின் (SBI) யாழ்ப்பாண கிளையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

பின்னர் யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ்,

‘அன்றிலிருந்து இன்றுவரை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நெருங்கிய உறவு இருந்ததையும், நாட்டின் தேவைக்காக அவர்கள் ஒருவரையொருவர் பல்வேறு வழிகளில் ஆதரித்ததையும் மரியாதையுடன் நினைவுகூர வேண்டும்’ என்று கூறினார்.

மேலும் ‘வடக்கிலும் இந்த நாட்டிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வீடமைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய பங்களிப்புக்காகவும் குறிப்பாக இந்த மாகாணத்தின் அபிவிருத்திக்காகவும் நன்றி தெரிவிக்க வேண்டும்’ என்றார்.

 

அத்துடன், எமது நாட்டுக்கு சர்வதேச நிதி உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கியதை நினைவுகூர்ந்த ஆளுநர், இந்திய நிதியமைச்சரின் வருகை இந்த நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நெருக்கத்தை மேலும் வளர்க்க உதவும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகளில் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர்.

பலாலி விமான நிலையத்தை விஸ்தரிக்க அரசாங்கம் தீர்மானம்

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து, புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்காக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சிறிய பயணிகள் முனையத்தில் நிலவும் இடப்பற்றாக்குறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதே இதன் நோக்கம் என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Posted in Uncategorized

யாழ். விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய ஆராய்வு

யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக விமான சேவைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆராயப்பட்டது. விமான நிலையத்தை வடக்கு பக்கமாக விரிவாக்கம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

பெரியளவிலான விமானங்கள் வந்து இறங்க வசதியாகவே இந்த விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அத்துடன், தற்போது சேவையில் அதிக ஆசனங்கள் கொண்ட விமானங்களை சேவையில் ஈடுபடுத்தவும், யாழ்ப்பாண மக்கள் இலகுவான முறையில் பயணத்தை மேற்கொள்வது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டன. இதேநேரம், மக்களின் காணிகளை மேலும் சுவீகரிக்காமல் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாணத்திற்கான விமான நிலைய உயர் அதிகாரிகள் எனப் பலர் பங்கேற்றனர்.

யாழ் – இரத்மலானை விமான சேவையை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்வு

இந்தியாவின் விமான சேவை நிறுவனமான அலையன்ஸ் ஏர் இந்தியாவுடன் இணைந்து யாழ்ப்பாணம்மற்றும் இரத்மலானை விமான நிலைய செயற்பாடுகளை அதிகரிப்பது தொடர்பான அலையன்ஸ் விமான அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை அதிகரிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணத்திற்கும் இரத்மலானைக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இதன்போது ஆரயப்பட்டன.

அலையன்ஸ் ஏர் இந்தியா குழு இந்த திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்ததுடன் மேலும் விமான நிறுவனம் பரிந்துரைகளை பரிசீலிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது.